”இறைவன் மிகப் பெரியவன்”. இந்தப் பொருள் அமைந்த அரபி
மொழி வாசகம் “அல்லாஹு அக்பர்“ என்பது.
ஒவ்வொரு
நாளும் ஐந்து வேளை தொழுகை என்னும் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்பது இஸ்லாம் வகுத்துள்ள
முறை. வைகறை நண்பகல், பிற்பகல், அந்தி மற்றும் இரவு என்னும் ஐவேளைக்கும் தொழுகைக்கு
வருமாறு பள்ளிவாசலிலிருந்து பக்தர்களுக்கு அழைப்பு ஒலிக்கப்படுகிறது. அதன் ஆரம்ப வாசகமாக
”அல்லாஹு அக்பர்” என்பதே அமைந்திருக்கிறது. தொழுகையின் ஆரம்ப வாசகமும் அதுவே.
வைகறைத்
தொழுகைக்கான அழைப்பில் மட்டும் இடையே ஒரு வாசகம் அதிகமாகச் சேர்த்துச் சொல்லப்படுகிறது.
“தூக்கத்தை விடத் தொழுகை மேலானது” (அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்) என்பது அந்த வாசகம்.
வைகறையில் மக்கள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பதால் அவர்களை எழுப்புவதற்காக இந்த
வாசகம் ஒலிக்கப்படுகிறது. பள்ளியறையை விட்டுப் பள்ளிவாசலுக்கு வருமாறு பக்தர்களுக்குப்
பரமனே பாடுகின்ற பள்ளியெழுச்சி இது!
இறைவன்
மிகப் பெரியவன் என்று சொல்வது மற்றதெல்லாம் சிறியவை என்னும் கருத்தையும் உணர்த்தி நிற்கின்றது.
இறைவன் எவ்வளவுப் பெரியவன்? என்னும் வினாவையும் அது எழுப்புகின்றது.
கடுகை
விடவும் பாறை ஒன்று பெரியதாக இருக்கிறது. ஆனால் இரண்டுக்குமே அளவு இருக்கிறது. கடுகை
விடவும் பாறை பத்தாயிரம் மடங்கு பெரியதாக இருக்கலாம். அப்படி வைத்துக்கொண்டால், அந்தப்
பாறையை விட ஒரு மலைக்குன்று லட்சம் மடங்கு பெரியதாக இருக்கும். எனவே, கடுகை விட அந்த
மலைக்குன்று பத்தாயிரலட்சம் மடங்கு பெரியது என்றாகிறது. அந்த மலைக்குன்றை விட இப்பூமி
பத்து கோடி மடங்கு பெரிதென்று சொன்னால் அந்தக் கடுகை விட இப்பூமி நூறாயிரலட்சங்கோடி
மடங்கு பெரிதென்று ஆகிறது. எப்படியோ, பூமி மிகப் பெரிது என்றபோதும் கடுகுக்கும் ஓர்
அளவு இருக்கிறது. பூமிக்கும் ஓர் அளவு இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டு உரைக்க முடிகிறது.
அதுபோல்
இறைவனைப் படைப்புக்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது அவனது தகுதிக்கும் இறைப்பண்புக்கும்
அழகல்ல. இறைவன் மனிதனை விட இத்தனை மடங்கு பெரியவன் என்று ஒப்பிட்டுரைக்க ஒல்லுமா? மனிதனுக்கு
அளவு உண்டு. இறைவனுக்கும் ஓர் அளவு இருக்கும் எனில் ஒப்பிட்டுப் பார்த்து இவ்வளவு மடங்கு
பெரியவன் என்று சொல்லலாம்.
இறைவன்
மிகப் பெரியவன் என்று ஒப்பீட்டு ரீதியாக ஏற்றுயர்படியில் (superlative) சொல்லப்பட்டுள்ளது.
எனினும், இறைவனுக்கு ஓர் அளவு மட்டுக் கிடையாது. அவன் எல்லையற்றவன், அளவற்றவன். எனினும்,
பாமரர்க்கும் இறைச் செய்தி சேர வேண்டும் என்னும் கருணையால்தான் இப்படி ஒப்பீட்டுயர்வாகச்
சொல்லப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி அவனது அலகிலா அருளும் அளவிலா அன்பும்தான்.
இறைவனைப்
பெரியன் என்றும் பெரியோன் என்றும் வருணிப்பதைத் தமிழில் சைவ மற்றும் வைணவச் சமய நூற்களில்
காண்கிறோம்.
இறைவன்
எவ்வளவு பெரியவன் என்னும் கேள்வி கடைந்நிலை பக்தர்களின் மனங்களில் எழுகையில் அதற்கு
அவர்களின் அறிவு எவ்வளவுக்குக் கற்பனை செய்து வியக்க ஏலுமோ அவ்வளவு என்று ஞானிகள் உரைக்கின்றனர்.
எப்படியோ இறைவனின் மேன்மையை, மகத்துவத்தை மக்கள் உணர்வதுதான் நோக்கம் என்பதால் குழந்தைக்குத்
தாய் சொல்வது போல் அப்படிச் சொல்கின்றனர்.
இறைவன்
எவ்வளவு பெரியவன் என்பதற்கு மாணிக்கவாசகர் ஒரு மனச்சித்திரம் தருகிறார். இந்தப் பிரபஞ்சத்தின்
விரிவை முதலில் நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். உருண்டை வடிவுள்ளதாகக்
கோளங்களும் கிரகங்களும் விண்மீன்களும் அன்ன பிறவும் விரவிக் கிடக்கின்றன. அவை நூற்றொரு
கோடிக்கும் மேலே இருக்கும் என்று சொல்கிறார். அந்த அண்டசராசரங்கள் எல்லாம் இறைவன் முன்
தூசு துகள்கள் போல் சிறியவையாம். எதைப்போல என்பதற்கும் உவமை ஒன்று உரைக்கிறார்:
”நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல் நுழை கதிரின் துன் அணுப் புரையச்
சிறியவாகப்
பெரியோன்”.
வீட்டின்
ஜன்னலில் உள்ள விரிசலின் வழியே சூரியச் சுடர் உள்ளே வந்து விழுகிறது. அந்த வெய்யிற்
கதிரில் பார்த்தால் சிறு சிறு தூசித் துகள்கள் அலைவது தெரியும். இறைவனுக்கு முன் முழுப்பிரபஞ்சமும்
அப்படிப்பட்ட ஒரு துகள் போல் சிறியதாகிவிடும். அவ்வளவு பெரியவன் இறைவன் என்று அவர்
சொல்கிறார்.
இத்தாலி
நாட்டில் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்துவப் பெண் ஞானியான சியனாவின் புனித
கேத்தரீன் சொல்வதையும் பார்ப்போம்:
”இறைவனின் பாதம்
மிகவும்
பரந்து விரிந்தது
இப்படிச் சொல்லலாம்,
இப்பூமி முழுதுமே
அவனது
விரலொன்றின் பகுதி
இப்பூமியின் காடுகள் எல்லாம்
அவனது ஒற்றை முடியின்
வேரிலிருந்து
வருவன
அப்படியிருக்க
எதுதான்
சன்னிதி இல்லை?
நான் மண்டியிட்டு வழிபட இயலாத,
அவனது பிரசன்னத்தால்
புனிதமாகாத
இடம்தான் ஏது?”
இயற்கையை
ஆழ்ந்து அவதானிக்கும் எவரும் இறைவனின் மகத்துவத்தை உணராமல் இருக்க முடியாது போலும்.
மாணிக்கவாசகர் சொன்னது போலவும், கேத்தரீன் சொன்னது போலவும் டார்ஜீலிங் மலைகளின் அழகை
ஆழ்ந்து அவதானித்த ரஸ்கின் பாண்ட் “மழைத்துளி” என்னும் அழகான அற்புதமான கவிதையில் இறைவன்
பெரியோன் என்னும் தனது வியப்பை நமக்குப் பறிமாறுகிறார்:
தன்னில் முழுமையான இந்த இலை
மரமொன்றின்
ஒரு பகுதி மட்டுமே
தன்னில் முழுமையான இம்மரம்
கானகத்தின்
ஒரு பகுதி மட்டுமே
அந்தக் காடோ
இந்த மலையில் தொடங்கிக்
கடல்
வரை ஓடிக்கிடக்கிறது
தன்னில் முழுமையான அக்கடல்
ஒரு மழைத்துளியைப் போல்
ஓய்ந்துகிடக்கிறது
இறைவனின்
உள்ளங்கையில்.
இந்த மேற்கோள்களில் எல்லாம் இறைவனின் கை என்றும் பாதம் என்றும் பேசப்படுபவை
குறியீடுகளாக அமைவன. அவை இறைவனின் அலகிலா அருளையும் அளவிலா அன்பையும் சுட்டுகின்றன.
இறைவனின் உள்ளங்கை அளவற்று விரிவது. அதில் இப்பூமியில் உள்ள கடல்களைப் போல் கோடானு
கோடி கடல்கள் சேர்ந்தாலும் ஒரு மழைத்துளி போன்றே தெரியும். ஏனெனில் அவனது அருளுக்கு
எல்லை இல்லை.
arumai.. arumai
ReplyDelete