Sunday, October 22, 2017

ஞானி என்னும் தேனீ



Image result for rose in a sufi turban

     ஞானி ஒரு தேனீ. இந்த உருவகம் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. இது தரும் அர்த்த அலைகளை அவர் பல இடங்களில் விரித்து எழுதியிருக்கிறார்.

      ”பூக்களில் எத்தனையோ வகை. ஆனால் தேன் ஒன்றுதான். இது தேனீக்குத்தான் தெரியும். தேனீயாகிறவன் ஞானியாகிறான்” என்கிறார் அவர் (”பூவாலயம்” நூல்: பூப்படைந்த சப்தம்)

      ‘பித்தன்’ என்னும் தனது அற்புதமான சிறு மா நூலில் அவர் சொல்கிறார்,

      அவன் தேனீ
      அதனால்
எல்லாப் பூக்களிலும்
வித்தியாசம் பார்க்காமல்
தேன் எடுப்பவன்

இதே நூலின் உள்ளே “அறிக்கை” என்னும் கவிதையில் இந்த உருவகத்தை மேலும் விரிவாகச் சொல்கிறார்.

மதவாதி
’என் தோட்டத்துப்
பூவில் மட்டும்தான்
தேன் இருக்கிறது’
என்கிறான்

என்று அப்துல் ரகுமான் சொல்கிறார். வரட்டு மதவாதத்தின் மடமையைத் தெளிவாகக் காட்டும் வரிகள் இவை. ஏனெனில், பூ என்றாலே அதில் தேன் இருக்கத்தான் செய்யும்.

“என் தோட்டத்தில் மட்டும்தான் பூக்கள் இருக்கின்றன” என்று ஒருவன் வாதாடினால்கூட அதில் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கலாம். பிற தோட்டங்களில் ஏன் பூக்கள் விளையவில்லை என்று சிந்திக்கலாம். அப்படி வாதாடுவதைக் காட்டிலும், “என் தோட்டத்துப் பூவில் மட்டும்தான் தேன் இருக்கிறது. பிறர் தோட்டத்துப் பூக்களில் தேன் இல்லை” என்று சொல்வது கடைந்தெடுத்த மடமைதான் அல்லவா?

நானோ தேனீயாக இருக்கிறேன்

பூக்களின் வேறுபாடுகளைத்
தேனீ
லட்சியம் செய்வதில்லை

தோட்டத்து வேலிகள்
அதைத் தடுப்பதில்லை

எல்லாப் பூக்களிலும்
தேன் உண்டு
என்பதும்
தேன் என்பது ஒன்றுதான்
என்பதும்
தேனீக்கு மட்டுமே
தெரிகிறது

என்கிறார் அப்துல் ரகுமான். பூக்களின் வேறுபாடுகள் தேனீக்கு முக்கியமில்லை. பூக்கள் நிறத்தாலும் அளவாலும் வடிவத்தாலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அவற்றில் சுரக்கும் தேன் ஒன்றுதான் என்றும் அதன் சுவை ஒன்றுதான் என்றும் தேனீக்குத் தெரியும். 

Related image
       
     தோட்டத்து வேலிகள் தேனீயைத் தடுப்பதில்லை. ஏனெனில் தோட்டத்து வேலிகள் அதனைத் தடுப்பதற்காகப் போடப்பட்டவை அல்ல. அவை கால்நடைகளையும் நாய் பூனை இத்தியாதி (சித்த) சேட்டை புரியும் துட்ட விலங்குகளையும் கவனத்தில் வைத்து வேயப்பட்டவை. எனவே, தேனீ வேலி தாண்டிவிட்டது என்று குற்றஞ் சுமத்த முடியாது. அனைத்துப் பூவிலும் ஞானத் தேனைச் சுவைக்கும் தேனீயாக இருக்கும் ஞானிக்குச் சமய எல்லைகள் தடையாக இரா.

      ஒரு பூவின் தேன்
      தேனீக்குப் போதாது

என்கிறார் கவிக்கோ. அவர் எழுதிய நூற்கள் அவர் கட்டிய தேனடை. அதில் நாம் பல்வேறு பூக்களில் இருந்து திரட்டப்பட்ட தேன் துளிகளைக் காண்கிறோம். எல்லாம் ஒரே சுவையில் பிறங்குகின்றன. அவற்றின் அடையாளங்களைக் குறிப்பிடாமல் அழித்துவிட்டால் ஒரே பூவின் தேன் என்பதாகத்தான் நினைப்போம்.

Image result for kurinji flower in munnar
      
      குறிஞ்சிப் பூ அளவால் மிகவும் சிறியது. ஊதா நிறம் உள்ளது. அது பூக்கும் செடியும் குட்டையானது. பன்னிரு ஆண்டுகட்கு ஒருமுறை அபூர்வமாகப் பூப்பது. யாரும் எளிதில் அணுக இயலாத ஆழ் மலைச் சரிவுகளில் பூத்துக் கிடப்பது. அங்கே தேனீ மட்டுமே மீண்டும் மீண்டும் செல்கிறது. சிறு சிறு துளியாகத் தேனெடுத்து வந்து ஒரு பெரிய தேனடைக்குள் நிரப்பி வைக்கிறது. இந்த உவமையைச் சங்க காலத்துத் தமிழ்ப் பெண் ஒருத்தி தானும் தனது தலைவனும் கொண்ட காதலுக்கு உவமையாகச் சொல்கிறாள்.

      சாரல்
      கருங்கோல் குறிஞ்சிப்
      பூக்கொண்டு
      பெருந்தேன் இழைக்கும்

என்று அவள் சொல்வதாக தேவகுலத்தார் பாடுகிறார் (குறுந்தொகை:3). கவிக்கோவின் நூல் ஒவ்வொன்றும் அத்தகைய தேனடைதான். உலகின் சிறந்த நூற்களுள் அரிதின் தேடித் திரட்டி வைத்த ஞானத் தேனடை.

      ‘ஞானி ஒரு தேனீ’ என்னும் உருவகத்தில் இன்னொரு ஆழமான கருத்தும் தொனிக்கிறது, எண்ண எண்ண இனிக்கிறது.

      பூக்களில் தேன் எடுக்கும் சிற்றுயிர்கள் பல உள்ளன. வண்ணத்துப்பூச்சி, வண்டு, தட்டான், குளவி, ஈ ஆகியன அதில் அடங்கும். தேன்சிட்டு போன்ற சிறு பறவைகளும் பூக்களில் தேன் குடிக்கின்றன. எனினும் தேனீ இவை எல்லாவற்றையும் விட வேறானது. அது மட்டுமே பூவின் அமிழ்தத்தை (nectar) மருத்துவ குணமும் இனிமையும் கொண்ட தேனாக (honey) மாற்றுகிறது.

      இதையே நாம் ஞானிக்கும் பொருத்திப் பார்க்கலாம். சமய நூற்கள் என்னும் பூக்களை பல வகைப்பட்ட நபர்கள் வாசிக்கின்றனர். ஆனால் அந்நூற்கள் நுவலும் தத்துவங்கள் யாரிடம் ஞானமாக மாறுகிறதோ அவர்களே ஞானிகள்.

      மலரின் மார்பில் சுரந்த அமிழ்தம் தேனீயிடம் மட்டும் தேனாக மாறுவது எப்படி? இதைப் புரிந்து கொண்டால் அந்த உருவகமே ஞானியைப் பற்றியும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

Image result for honey bee 
 
      தேனீயின் வயிற்றுக்குள் இரண்டு பைகள் இருக்கின்றன. ஒன்று எல்லா உயிரினங்களுக்கும் இருப்பது போன்ற இரைப்பை. மற்றது, தேன் பை. அந்தத் தேன் பையில்தான் மலரில் அது மாந்தும் அமிழ்தம் வைக்கப்படுகிறது.

      பிற உயிரிகள் தன் உணவுக்காக மட்டுமே மலரில் தேன் உண்ணுகின்றன. ஆனால் தேனீ அதனைத் தன்னுள்ளே தனியிடத்தில் தேக்கி வைக்கிறது. அதுபோல், ’வயிறு வளர்ப்பதற்காக’ மத நூற்களின் தத்துவங்களை வாசிப்பவர்களிடம் அந்தத் தத்துவங்களே ‘மலம்’ ஆகிவிடுகின்றன. 

      ஆனால், ஞானியோ சமய நூற்கள் தரும் செய்திகளைத் தனது உள்ளத்தில் வைத்து உணர்கிறார். அவரது இதயம்தான் அவரின் தேன் பை.

      தேனீயின் வயிற்றுக்குள் உள்ள தேன் பை ஒரு வேலையைச் செய்கிறது. அதாவது, மலரில் எடுத்த அமிழ்தம் (nectar) கடினமான சிக்கலான அமைப்புக் கொண்ட சர்க்கரையாக (complex sugar) உள்ளது. தேனீயின் தேன்-பையில் சுரக்கும் நொதியம் (enzyme) அதனை எளிய சர்க்கரைகளாக உடைக்கிறது. அதுவே தேன். இந்த செயற்பாட்டை அறிவியல் ”உள்மாற்றம்” (inversion) என்று அழைக்கிறது.

      அதுபோல், ஞானி சமய நூற்களில் இருந்து உள்வாங்கும் சிக்கலான தத்துவங்கள் அவரின் அகத்தில் பொங்கும் உள்ளுணர்வால் ஞானமாக மாறுகின்றன. உள்ளுணர்வு அல்லது உள்ளுதிப்பு என்பதே ஞானியில் நிகழும் ’உள்மாற்றம்’ (inner transformation) ஆகும்.

      அந்த உள்ளுணர்வின் உதிப்பினை சூஃபி ஞானிகள் ”இல்ஹாம்” என்னும் கலைச்சொல்லால் அழைக்கின்றனர்.

      ஞானிகள் தரும் ஞானத் தேன் நம் அகத்திற்கு இன்சுவை நல்கிச் சுகம் தருவது மட்டுமல்லாது அறியாமை என்னும் அகப்பிணியை நீக்கும் அருமருந்தாகி நலமும் நல்குகின்றது.

      இங்கேதான் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. அதாவது, சில ஈக்கள் தாமும் தேனீதான் என்று வாதாடுகின்றன. அதில் இன்னும் சில ஈக்கள் தேனீயாக வேடமிட்டு உலவுகின்றன. அவை சமயக் கிரந்தங்கள் என்னும் பூக்களில் உள்ள அமிழ்தத்தைத் தாமும் உட்கொள்கின்றன. ஆனால் தேனீயின் ”அக அமைப்பு” அவற்றுக்கு இருப்பதில்லை. எனினும் அவை தாமும் தேன் தருவதாகப் பீற்றிக்கொண்டு வாந்தி எடுக்கின்றன. அதுவே தேன் என்றும் விளம்பரப் படுத்துகின்றன. அவற்றை உண்போர்க்கு அகப்பிணி இன்னும் பெருகி முற்றுகிறது.

      இத்தகைய ஈக்களை மனிதர்களிலும் காண்கிறோம். அவற்றிடம் ’நான்’ என்னும் ஆணவ மலத்தின் துர்நாற்றம் ஓங்கியிருக்கும். அவை ’ஞானி’ அல்ல, ’நான்-ஈ’. அந்த ஈக்கள் ஞானப் பிரசங்கம் புரிகின்றபோது அந்த வாந்தியின் நாற்றத்தால் நமக்குக் குமட்டுகின்றது. 

      எனவே, தோற்றத்தை வைத்துத் தேனீயா அல்லது ஈயா என்று முடிவு செய்ய வேண்டாம். ஒருவேளை அது தேனீ வேடமிட்ட ஈயாக இருக்கக் கூடும். அது தருவது தேனா அல்லது வாந்தியா என்பதை வைத்து அது தேனீயா அல்லது ஈயா என்று முடிவு செய்க. ஏனெனில் தேனீயாக வேடமிட்டிருந்தாலும் ஈயால் தேன் தர இயலாது.

      ”ஞானி என்று சொல்லிக்கொள்ளும் எல்லாரிடமும் கையைக் கொடுத்துவிடாதே. ஞானியராக வேடமிட்ட பல சாத்தான்கள் உலவுகின்றன” என்று எச்சரிக்கின்றார் சூஃபி மகான் மவ்லானா ரூமி. 

No comments:

Post a Comment