Wednesday, November 1, 2017

இதய ஆலயம்




Image result for inner world

                இடமும் காலமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நியதிகளாக இருக்கின்றன. அவை இரண்டையும் தமது கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் சிலருக்குக் கிடைக்கின்றது. 

      ”மனிதர்கள் மீது கோளங்களும் விண்மீன்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் இறை பக்தர்களோ அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்கிறார் சூஃபி ஞானி மவ்லானா ரூமி.

      பூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் பிற இடங்களை விடவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், பாவக் கறைகளைக் கழுவித் தூய்மை அடையவும் புண்ணியத் தலங்களை நாடிச் செல்கிறார்கள்.

      அதேபோல், காலத்தில் சில குறிப்பிட்ட மாதங்களும் நாட்களும் நேரங்களும் புனிதத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அந்தப் புனிதக் காலங்களில் நிகழவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.

      ஆனால், மனிதப் புனிதர்கள் என்னும் நிலையை அடைந்த ஞானிகளின் நிலையோ வேறாக இருக்கின்றது. அவர்களால் காலமும் இடமும் புனிதமடைகின்றன.

Related image

      ராமனின் அகமியத்தை அறியாத கைகேயி அவன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டபோது “பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி” அவன் தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டாள். ஆனால், ராமன் இன்னின்ன இடங்களுக்கு வந்தான் என்று குறிப்பிடப்படும் இடங்கள் எல்லாம் இன்று புண்ணியத் தலங்களாகிவிட்டன.

      நபிகள் நாயகம் பற்றிக் கவிஞர் மு.மேத்தா எழுதும் வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்:

      ”எந்தச் சிம்மாசனத்திலும்
      அவர் அமர்ந்ததில்லை
      அவர் அமர்ந்த இடமெல்ல்லாம்
      சிம்மாசனம் ஆனது”

      காலத்தின் சங்கதியும் இதுவேதான். பிறப்பு இறப்பு உட்பட, எந்தெந்த நாட்களில் ஞானியர் வாழ்வில் பெருநிகழ்வுகள் நிகழ்ந்தனவோ அந்தந்த நாட்கள் புனிதமாகிவிடுகின்றன

      ஞானிகள் எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கின்றார்கள், எல்லா நேரங்களிலும் இறையுணர்வுடன் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு முழு உலகமும் ஆலயம் ஆகிவிடுகிறது, அவர்களின் முழுவாழ்வும் வழிபாடு ஆகிவிடுகிறது.

      ”பூமி முழுவதும் எனக்குத் தூய்மையாகவும் ஆலயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது” என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.

      அனைத்தும் புனிதமாக்கப்பட்டுள்ளன.
      வன விலங்குகள் இதனை அறியும்.

      பூமியும் கடலும் மேகங்களும் கூட,
      அன்பு நிறைந்ததொரு இதயம்
      இதனை அறிவது போல்.

      மிகவும் வினோதமாக இருக்கிறது
      நம்மிடமிருந்து
இந்த அறிவைப் பறித்துக்கொண்டு
ஏற்கனவே புனிதமாய் இருப்பவற்றை
ஜெபித்துப் புனிதமாக்கும் ஆற்றலை
மதகுரு தனக்கெனப்
பறைசாற்றிக்கொள்வது
                          
என்கிறார் கிறித்துவ பெண் ஞானி சியனாவின் கேத்தரீன். உலகெங்கும் இறைமை நிறைந்திருப்பதை இதயத்தால் உணர்ந்த அவர்,

நான் மண்டியிட்டு வழிபட இயலாத,
அவனது பிரசன்னத்தால்
புனிதமாகாத
இடம்தான் ஏது?

என்று கேட்கிறார்.


      ஞானிகளால் எப்படி எல்லா இடத்திலும் இறைமையை உணர முடிகின்றது? என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். அதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் இறைவனைத் தமக்குள் ’கண்டு’ விட்டார்கள்.

      புற ஆலயங்களுக்குப் பயணம் செய்வது எளிது. அகத்தையே ஆலயமாக மாற்றுவதுதான் ஆன்மிகம். உண்மையான பக்தர்கள் தம்மையே ஆலயமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

      சூஃபிகளுக்கு “தர்வேஷ்” என்று இன்னொரு பெயர் உண்டு. அச்சொல்லுக்கு ‘வாசல்’ என்று பொருள். அதாவது, அவரே பள்ளிவாசல் ஆகிவிட்டார் என்று பொருள்.

      துருக்கி நாட்டில் ஒரு காலத்தில் சூஃபிகளின் தியான மடங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை “தைக்கா” என்று அழைப்பார்கள். ஆன்மிகத்தை எதிர்க்கின்ற ஆட்சி அங்கே அமைந்தபோது தைக்காக்கள் இடிக்கப்பட்டன. அப்போது சூஃபி ஞானிகளிடையே துருக்கி மொழியில் ஞான வாசகம் உருவானது. அது பிறகு ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது. “தைக்கா இடிக்கப்பட்டால் தர்வேஷே தைக்கா ஆவார்” என்பதுதான் அந்த ஞான வாசகம்.

      ”நெஞ்சகமே கோயில்” என்கிறார் தாயுமானவர்.

      ”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார் திருமூலர். அவர்தான் பக்தர்களை ”நடமாடும் கோயில்” என்று ஞானத்தால் சிறப்பித்துப் பேசினார்.

      இறைவன் நமக்கு உள்ளே இருப்பதை உணராமல் அவனை வெளியே தேடுவது வெட்டி வேலை. தன்னுள்ளே இறைவனை உணராதவர்களுக்கு அவன் வெளியே எங்கும் எதிலும் தெரியமாட்டான் என்னும் கருத்துப்பட,

      ”நட்ட கல்லும் பேசுமோ
      நாதன் உள்ளிருக்கையில்?”

என்று கேட்டார் சித்தர் கனங்களில் சிறப்புப் பெற்ற சிவவாக்கியார்.

      ’ஆமாம், நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தால்தான் நட்ட கல்லும் பேசும்’ என்று சொல்வது போல்,

      ”உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்
      உள்ளேயும் காண்பாயடி”

என்று பாடுகின்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

      செல்வர்கள் சிவனுக்குக்
      கோயில்கள் சமைப்பர்

      ஏழை நான்
      என்ன செய்வேன்?

      என் கால்களே தூண்கள்
      ஊனுடம்பு ஆலயம்

      தலையே
      தங்க விதானம்

என்று பாடுகிறார் கன்னட பக்திக் கவி பசவண்ணா.

      உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்கள் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.

Image result for inner light 
 
      தமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல். 

      அகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.

      இல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அனைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.

      கணவனை வீட்டுக்காரன் என்பதும் அகத்துக்காரர் என்பதும் தமிழ் மரபு. ஆன்மாக்கள் எல்லாம் பெண்கள். அவற்றின் ஒரே கணவன் இறைவன் மட்டுமே என்று நாயக நாயகி உத்தி கொண்டு ஞான உறவின் உண்மை உரைக்கப்படும். அகத்துக்காரன் என்றால் அகம் ஆகிய இதயத்தில் இருப்பவன் என்றும் பொருள்படும். எனவே, இறைவனே அகத்துக்காரன் என்றாகிறது.

      வீடு என்றால் சொர்க்கம் என்றும் அர்த்தமுண்டு. ’வீடுபேறு’ என்று சொர்க்கத்தை அடைதல் குறிக்கப்படும். எனவே அகம் என்பது சொர்க்கம் என்றாகிறது. இறைவன் இருக்கும் இதயம் ஆலயம் மட்டுமா என்ன? அது சொர்க்கமும்தானே?

      அகம் புறம் என்னும் இரு பிரிவும்கூட அறிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கே. ஏகத்துவ ஞானம் அருளப்பட்டோர்க்கு அகம் புறம் என இரண்டில்லை. அகமே புறம், புறமே அகம்.

      அகத்திலும் புறத்திலும் ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று உய்க இவ்வுலகு.

No comments:

Post a Comment