Friday, October 6, 2017

மடியில் விழுந்த ஆப்பிள்



 Image result for dh lawrence paintings
   
    ஆங்கில இலக்கியவாதி டி.எச்.லாரன்ஸ் ஒரு சிறுவனுடன் தோட்டத்தில் நடந்திருந்தார். அந்தச் சிறுவன் நிமிடத்திற்கு ஐந்தாறு கேள்விகள் கேட்டுக்கொண்டே வந்தான். தனக்குத் தெரிந்த பதில்களை அவர் சொல்லிக்கொண்டே வந்தார்.

      ”மரங்கள் ஏன் பச்சை நிறமாக இருக்கின்றன?” என்று அச்சிறுவன் கேட்டான்.

      லாரன்ஸ் யோசித்தார். “நியாயமான கேள்விதான். ஆமாம், மரங்கள் ஏன் பச்சையாக இருக்கின்றன?” லாரன்ஸ் தன் கண்களை மூடி யோசித்தார், சில நொடிகள்.

      லாரன்ஸ் கண்களைத் திறந்து அந்தச் சிறுவனைப் பார்த்தார். “மரங்கள் பச்சையாக இருக்கின்றன. அதனால் அவை பச்சையாக இருக்கின்றன” என்று பதில் சொன்னார்.

      சிறுவன் மகிழ்ந்தான். “சரிதான். இதையேதான் நானும் நினைத்தேன்” என்றான். இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள்.

      டி.எச்.லாரன்ஸ் ஏன் அப்படிச் சொன்னார்? அவர் சொன்ன விடை எந்த வகையில் முக்கியத்துவம் உள்ளதாகிறது? அது ஓர் அறிவார்ந்த விடையாக இல்லையே? என்றெல்லாம் நாம் நினைக்கலாம்.
      
     இந்த நிகழ்வை ஓஷோ தனது பல உரைகளில் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். லாரன்ஸின் விடையைப் பல கோணங்களில் அவர் விளக்குவதைப் படிக்கும்போது நாம் வியந்து போகிறோம். இதோ, அவற்றில் சில.

 Related image
    
     ”டி.எச்.லாரன்ஸ் தனது நாட்குறிப்பில் எழுதினார், ‘எனக்கு அது ஒரு மகத்தான அனுபவமாக இருந்தது. என்னுடைய அப்பட்டமான நேர்மைக்கு அந்தக் குழந்தை என்னிடம் காட்டிய அன்பும் நம்பிக்கையும்... என் விடை ஒரு விடையே அல்ல; தர்க்கவாதிகளுக்கு அது ஓர் அபத்தம், கூறியது கூறல். ’அவை பச்சையாக உள்ளன, அதனால் பச்சையாக உள்ளன’. என்ன விதமான பதில் இது?’

      ’உண்மையில், இந்த விடையின் மூலம் டி.எச்.லாரன்ஸ் ஓர் உண்மையை ஏற்கிறார். ’என் குழந்தாய், நானும் உன்னைப் போல் அறியாதவனே. நமக்கிடையில் வயது வேறுபாடு இருப்பதால் மட்டுமே எனக்குத் தெரியும் உனக்குத் தெரியாது என்பதில்லை. வயது வித்தியாசம் என்பது அறிவுக்கும் அறியாமைக்கும் உள்ள வேறுபாடு அல்ல’” (நூல்: Beyond Ignorance)

      ”அந்தச் சிறு பிள்ளை டி.எச்.லாரன்ஸிடம் வினோதமான கேள்வியைக் கேட்டது, ‘மரங்கள் ஏன் பச்சையாக இருக்கின்றன?’. அறிவியல் ஓர் தற்காலிக விடையைத் தரலாம். தற்காலிகம் என்கிறேன், ஏனெனில் அது அந்த வினாவை இன்னும் கொஞ்சம் ஒத்திப் போடுகிறது அவ்வளவே. விஞ்ஞானிகள் சொல்வர், ‘மரங்களில் க்ளோரோஃபில் என்னுமொரு வேதிப்பொருள் இருக்கிறது. க்ளோரோஃபில்லின் காரணமாக அவை பச்சையாக இருக்கின்றன.’ ஆனால் இது விடை அல்ல. இப்போது வினா, ‘மரங்களில் ஏன் க்ளோரோஃபில் இருக்கிறது?’ என்று மாறிவிட்டது.

      ”இது அதே கேள்விதான். தொழில்நுட்பக் கலைச்சொல்லுடன் இருக்கிறது. அந்தப் பிள்ளை கலைச்சொல் ஏதுமற்ற எளிய கேள்வியைக் கேட்கிறது ’மரங்கள் ஏன் பச்சையாக இருக்கின்றன?’. க்ளோரோஃபில்தான் காரணம் என்று சொல்வதன் மூலம் அவ்வினாவுக்கு விடை சொல்லிவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அவற்றில் ஏன் க்ளோரோஃபில் இருக்க வேண்டும்? ஏன் வேறு ஏதேனும் அல்ல?’

      ”மர்மம் விடுபடவில்லை. வெறுமனே பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அறிவியல் முழுவதும் இதையே செய்துள்ளது. அதாவது, மர்மத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. மர்மத்தை விடுவிக்க அதனால் இயலவில்லை.” (நூல்: The Rebel).

      “லாரன்ஸ் சொன்னார், ‘எனக்குத் தெரியாது. நான் எப்போதுமே அவை பச்சையாக இருப்பதையே பார்த்திருக்கிறேன். நீ வேண்டுமெனில் மரங்கிளிடெமே கேட்டுப்பார்’

      ”லாரன்ஸ் தனது அறியாமையை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கிறார். ஒரு ஞானியின் அடையாளங்களில் அது முக்கியமான ஒன்று. அவர் சொன்னார், ‘எனக்குத் தெரியாது. அவை பச்சையாக இருக்கின்றன என்பதே எனக்குத் தெரிந்ததெல்லாம்’.

      ”ஆனால், தத்துவவாதிகள், மத போதகர்கள், சிந்தனையாளர்கள் – இவர்களால் லாரன்ஸின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அவை ஏன் பச்சையாக இருக்கின்றன என்று கண்டுபிடித்தாக வேண்டும் அவர்களுக்கு. எந்த மரமும் அலட்டிக் கொள்வதில்லை. ‘நான் ஏன் பச்சையாக இருக்கிறேன்?’ என்று எந்த மரமும் கேட்பதில்லை.

      ”இருத்தலில் கேள்விகள் இல்லை. அது எதுவோ அதுவாகவே இருக்கிறது.” (நூல்: From Death to Deathlessness).

      ”ஒரு குழந்தையால் மட்டுமே அத்தகைய கேள்வியைக் கேட்க முடியும். ஒரு குழந்தையால் மட்டுமே அத்தகைய விடையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

”ஒரு தத்துவவாதிக்கும் ஆன்மிகவாதிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். தத்துவவாதி உங்கள் கேள்விக்கு விடை சொல்ல முயல்கிறார். ஆன்மிகவாதி உங்கள் கேள்வியை நீங்கள் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுகிறார்.” (நூல்: Come, Come, Yet Again Come).

“லாரன்ஸ் சொல்ல வருவது என்னவெனில், வாழ்க்கை என்பது வாழப்பட வேண்டியதொரு மர்மம், அனுபவிக்கப்பட வேண்டியதொரு உண்மை. பதில் சொல்லப்பட வேண்டியதொரு கேள்வி அல்ல; தீர்க்கப்பட வேண்டியதொரு சிக்கல் அல்ல.” (நூல்: The Dhammapada – The Way of the Buddha : Volume:4).

ஒஷோ அறிவியலுக்கு எதிரானவர் அல்ல. ஆனால், அறிவியலின் எல்லையை, அதன் போதாமையைச் சுட்டிக் காட்டுகிறார். அறிவியல் தரும் விடைகள் மேம்போக்கானவை. அவை ஒருபோதும் அகமலர்ச்சியை, அக நிறைவைத் தாரா.

டி.எச்.லாரன்ஸ் போன்ற ஒருவரை நீங்கள் ஆசிரியர் வேலைக்கு உகந்தவர் என்று கருதுவீர்களா? நிச்சயமாக மாட்டோம். ஒரு குழந்தையின் கேள்விக்கு ’சரியான’ விடையை, விஞ்ஞானத் தகவலை விடையாகச் சொல்லித் தருபவரையே ஆசிரியர் பணிக்கு ஏற்றவர் என்று நாம் சொல்லுவோம்.

கிழக்கின், குறிப்பாக இந்தியாவின் கல்விக் கண்ணோட்டத்தை இழந்து போனதால்தான் நாம் இப்படிச் சிந்திக்கிறோம். கல்வி பற்றிய நமது கண்ணோட்டம் மாறவேண்டும். கிழக்கின் ஒளி அதில் மீண்டும் ஏற வேண்டும்.


Image result for young monk scriptures

அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கின்ற சாராம்சம் என்ன என்பதை அறிவதையே கல்வியின் நோக்கமாக, அறிவின் பயனாகக் கிழக்கு நோக்கிற்று. ’சாந்தோக்ய உபநிஷத்’தில் ஒரு சுவையான ஆழமான உரையாடல். ஸ்வேதகேது என்னும் சீடனிடம் அவனது குரு கேட்கிறார்:

“எதை அறிவதால்
அனைத்தையும் அறியலாகுமோ
அதை நீ அறிவாயா?
எதனால்
கேளாதது கேட்கப்பட்டதாகிறதோ
எண்ணாதது எண்ணப்பட்டதாகிறதோ
புரியாதது புரியப்பட்டதாகிறதோ
அதனை நீ அறிவாயா?”

கல்வி என்பது அறிந்தவன் அறியாதானுக்குத் தகவல் தெரிவிக்கும் செயல்முறை அல்ல. மேலும் மேலும் நூற்களிலிருந்து அள்ளிக் கொட்டுவதல்ல. மனனம் செய்ய வைப்பது அல்ல. கல்வி என்பது சீடனுக்கு ஒரு குரு போதிப்பதாக மட்டும் இங்கே பார்க்கப்படவில்லை. குருவும் சீடனும் சேர்ந்து நிகழ்த்தும் தேடலாக அது பார்க்கப்பட்டது. அதிகாலையில், பாடம் தொடங்கும் வேளையில், குருவும் சீடனும் இணைந்து ஓதும் பிரார்த்தனை ஒன்றை “தைத்திரீய உபநிஷத்” சொல்கிறது:

“ஓம்.
இறைவன் நம் இருவரையும் காப்பானாக
இறைவன் நம் இருவரையும் ரட்சிப்பானாக
நாம் இருவரும்
வீரியமும் ஆற்றலும் கொண்டு உழைப்போமாக
நம் படிப்பு
ஒளியேற்றுவதாக இருக்கட்டும்
பகைமை விளையாததாக இருக்கட்டும்
ஓம். அமைதி அமைதி அமைதி”

நாம் தற்போது காணும் கல்வி முறைமை இப்படியா இருக்கிறது? அது நகலெடுக்கும் கருவிகளாக நம் பிள்ளைகளை மாற்றி வருகின்றது.

ஆங்கிலக் கல்வியே உயர்ந்தது என்னும் அடிமை மனப்பான்மை நமது ரத்தத்தில் ஊறிப்போய்விட்டது. ஆனால் அந்த ஆங்கிலக் கல்வியில் நாம் கடந்து வரும் சிந்தனையாளர்கள், கவிஞர்கள், விஞ்ஞான மேதைகள் எவருமே வகுப்பறைக் கல்வியிலிருந்து உருவாகி வந்த ஆளுமைகள் அல்லர்.

கற்பனை என்பது பொய் என்றும், அறிவியலே உண்மை என்றும் நாம் நினைக்கிறோம். ஆனால், “தகவல் அறிவை விடவும் கற்பனை மிகவும் முக்கியமானது” என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானி அவர்.

”சிறுபிள்ளைத்தனமாக நடக்காதே; பக்குவமாக நடந்துகொள்” என்று நாம் குழந்தைகளைத் திட்டித் திட்டி வளர்க்கிறோம். அவர்களை வல்லவர்களாக ஆக்குவதாக எண்ணுகிறோம். “ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன். பிரச்சனை என்னவென்றால், வளர்ந்த பிறகும் எப்படிக் கலைஞனாக இருப்பது என்பதுதான்” என்கிறார் பாப்லோ பிக்காசோ. இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ஓவியர் அவர்.

’ஆ, நமது இவ்வாழ்வு
மக்கட் திரளை விட்டும் தனித்து
மரங்களில் நாவுகளும்
பாயும் ஓடைகளில் நூற்களும்
கற்களில் அருளுரைகளும்
அனைத்திலும் நன்மையும் காண்கிறது”

என்று எழுதினார் ’ஆங்கிலக் கம்பர்’ என்று அழைக்கத் தகுந்த வில்லியம் ஷேக்ஸ்பியர். (As You Like It : 561-564).

இயற்கையை அவதானித்து இறைஞானம் அடைந்தோம் என இயம்பினோர் பலர். அவர்களுள், கிறித்துவ மறைஞானி புனித பெர்னார்டு சொல்வதைக் கேளீர்:

“நான் சொல்வதை நம்பு. நூற்களில் காண்பதினும் கானகத்தில் அதிகப் பாடங்களைக் காண்பாய். குருமார்களிடம் நீ கற்க முடியாதன எல்லாம் மரங்களும் கற்களும் உனக்கு போதிக்கும்.” (’எபிஸ்டோலா’ 106:2).

Image result for boy with apple on lap

நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தான் என்று கால காலமாகக் கற்பிக்கப் படுகிறது. அதை அவன் கண்டறிந்தது தோட்டத்தில் ஓர் ஆப்பிள் மரத்தின் அடியில் அமர்ந்தபோதுதானே அன்றி ஆய்வுக்கூடத்தில் அல்ல என்பதை ஏனோ எவரும் கவனிப்பதில்லை.

நியூட்டன்...
தன் மடியில்
விழுந்த ஆப்பிளால்
அறிவில் எழுந்தான்
அவன்

உண்மையான கல்வி எது என்பது பற்றிச் சிந்திப்பவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். ஓர் உண்மையான ஆசிரியனுக்கு இது என்றும் தீராத ஆறாத கேள்வியாகவே இருக்கும். இக்கேள்விக்கு விடை கண்டுவிட்டதாக ஒருவர் கருதினால் ஓர் ஆசிரியராக அவர் அப்போதே செத்துவிட்டார் என்று பொருள்!

”கற்பனவும் இனி அமையும்” என்று மாணிக்கவாசகர் சொன்னது, ஆசிரியன் மாணவன் இருவரையும் இணைத்தே சொன்ன இலக்கணம்.

Image result for howard nemerov

அன்னனம், தன் மாணவர்களால் கற்கும் ஆசிரியர்களுள் ஒருவரான, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய அமெரிக்கக் கவிஞர் ஹொவார்டு நிமிரோவ் தனது மாணவன் டேவிட் என்பவனைப் பற்றிய நினைவில் எழுதிய ”டேவிடுக்கு, அவனது கல்வி பற்றி” என்னும் கவிதை இது:

உலகம் பெரும்பாலும்
அரூபப் பொருட்களால் நிரம்பியுள்ளது

நூல்களில்
மனதின் விழியை
அல்லது அதன் மூக்கை
வைத்துக் கண்டறிவதன்றி
வேறு வழியில்லை

எவரெஸ்ட்டின் வர்க்க மூலம்
அல்லது
பாரதி காசிக்கு எத்தனை முறை போகிறார்
அல்லது
விதிவிலக்கான மையத்தின் விதி
மலைகளுக்கு மேற்கே ஒத்துவருமா?
என்பதை எல்லாம்.

இவற்றுக்காகவும்
இவை போன்றவற்றுக்காகவும்
நீங்கள் பள்ளிக்குச் சென்றாக வேண்டும்
நூற்களைப் படித்தாக வேண்டும்
சொன்னபடிக் கேட்டாக வேண்டும்
சில நேரங்களில்
நியாபகப் படுத்திக்கொள்ளவும் வேண்டும்

கம்பனின் ஊரில்
ஆண்டின் சராசரி மழையளவு
என்ன என்பதையோ
அல்லது
புழுக்களின் உணவில்
புரதச் சத்து எவ்வளவு என்பதையோ
வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்வீர்களோ
எனக்குத் தெரியாதபோதும்
அத்தகைய தகவல்கள் எல்லாம்
உங்களுக்கு நல்லவை என்றே சொல்கிறார்கள்

பெரியவர்களில் ஒருவராக
நீங்கள் ஆவதற்கு
நீங்கள் அவற்றைக் கற்றாக வேண்டும்

அந்தப் பெரியவர்கள் எல்லாம் யாரெனில்
அரூபப் பொருட்களை
நிலையாகவோ முழுமையாகவோ
பார்க்காதவர்களே என்றபோதும்
இவ்வுலகின் பெருங்குழப்பங்களை எல்லாம்
தமது தொப்பிக்குள் வைத்திருப்பவர்கள்
(அவ்விடமே அவற்றிற்குத் தோதான இடம்)
எனினும்
சிறு பிள்ளைகளுக்கு
அவர்கள் எப்படி வளரவேண்டும் என்று
சொல்லித் தருபவர்கள்.

(குறிப்பு: இது தழுவல் மொழிபெயர்ப்பு. ஆங்கில மூலத்தில் ”Or how many times Byron goes into Texas” என்றுள்ளது. அதையே நான் ’பாரதி…. காசிக்கு…’ என்று எழுதியிருக்கிறேன். ”mean annual rainfall on Plato’s republic” என்னும் வரியை ”கம்பனின் ஊரில்...” என்று பெயர்த்துள்ளேன்.)

No comments:

Post a Comment