”உலகத்தைச்
சொற்களால் மாற்றுங்கள்.
ஆம்,
சொற்கள் உண்மையில்
அவ்வளவு சக்தி வாய்ந்தவை”
இப்படிச்
சொல்லும் மார்கரீட்டா எங்க்லே’யின் கவிதைகளைப் படித்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
அவை அத்தனை எளிமையான சொற்களுடனும், குழந்தைகளின் கற்பனை அழகுடனும் இருக்கின்றன.
மென்மையான
விதைகளில் இருந்துதானே வலிய காடு எழுகிறது? இளம் உள்ளங்களில் உயர்ந்த கருத்துக்களை
விதைப்பதே தனது கவிதைப்பணி என்று அவர் உணர்ந்திருக்கிறார்.
கவிஞர்,
புதின எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என்று தனது எழுத்துப் பணிக்கு மூன்று பரிமாணங்கள்
கொண்டவர் மார்கரீட்டா. கலிஃபோர்னியாவில் வசிக்கின்றார். தாவரவியலில் முனைவர் பட்டம்
பெற்றவர். வேளாண் தொழில்நுட்பம் கற்பிக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியை. ”இளைஞர்களுக்கான
கவிஞர்” என்று சிறப்பிக்கப்படுபவர்.
மார்கரீட்டா
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் பிறந்தவர். அவரின் தந்தை அமெரிக்கர்; தாய் க்யூபா நாட்டவர்.
தாய் பிறந்த நாடே தனது தாய்நாடு என்னும் உணர்வு அவரின் உள்ளத்தில் ஆழ வேரோடியிருக்கிறது.
அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்ற அவர் விடுமுறைகளில் எல்லாம் க்யூபாவுக்குச் சென்று
தனது தாயின் பெற்றோருடன் தங்கி வருவார்.
1962-இல்
அரசியல் சூழல் மாறியது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நடந்து வந்த பனிப்போரில் ஒரு
தீவிர நிகழ்வு அது. தங்கள் நாட்டைத் தாக்குவதற்காக க்யூபாவில் ரஷ்யா ஏவுகணைகளைப் பொருத்தி
வருவதை அமெரிக்கா ‘கண்டுபிடித்தது’. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 1962-இல் பதின்மூன்று
நாட்கள் நடந்த போர்த் தாக்குதல்களை வரலாறு “க்யூபன் ஏவுகணை நெருக்கடி” (Cuban
Missile Crisis) என்று அழைக்கிறது.
அந்த
நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் க்யூபர்கள் தமது ‘தாய்’நாட்டிற்குச்
செல்லத் தடை விதிக்கப்பட்டது. அற்புதக் கனவுகளில் மிதக்கும் மனம் கொண்ட பத்து வயதுச்
சிறுமியான மார்கரீட்டாவுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அமெரிக்காவில் க்யூபர்கள்
திடீரென்று தாம் அகதிகள் ஆகிவிட்டதாக உணர்ந்தனர். ”தமது செயற்பாடுகள் மக்களின் தனிப்பட்ட
வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதைப் பற்றிச் சிந்திக்காத அரசியல்வாதிகளால்
நாங்கள் அகதிகளாக்கப்பட்டோம்” என்று மார்கரீட்டா சொல்கிறார்.
நெருக்கடிக்குப்
பின் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் க்யூபா மக்கள் மேலும் மேலும் தனிமையிலும் வறுமையிலும்
ஆழ்ந்து போனதாகவும், குடும்பங்கள் சிதறிப் போயின என்றும் சொல்லும் மார்கரீட்டா அந்தக்
காலக் கட்டத்தில் நூற்களுக்குள் தஞ்சம் புகுந்தார். கவிதை அவருக்கு ஓர் அக விடுதலைக்கான
வழி ஆயிற்று. அப்படித்தான் அவர் கவிஞராக மலர்ந்தார்.
தாய்
வழியிலும் தந்தை வழியிலும் அரசியல் பாதிப்புக்கள் கொண்ட குடும்பம் அவருடையது. பிள்ளைப்பருவத்திலேயே
அதை அவர் தெளிவாகத் தெரிந்து கொண்டதை “சொந்த பந்தம்” என்னும் கவிதையில் சொல்கிறார்:
இரண்டு
குடும்பக் கதைகள்,
ஒன்று விரிவான நீள்கதை,
இத்தீவின் மூதாதையரின்
பல நூற்றாண்டுகள் பற்றியது,
அவர்கள் அனைவரும் வாழ்கிறார்கள்
அதே வெப்பமண்டலத்
தோட்டங்களில்
குடும்பத்தின் மற்றொரு தரப்பு
சுருக்கமான பூடகமான கதைகளைச் சொல்கிறது,
உக்ரைன் வன்முறை பற்றி,
அன்பனான தமியர் அனைவரையும் விட்டு
அப்பாவின் பெற்றோர்
அங்கிருந்தே தப்பி வந்தனர்
என்றைக்குமாக
என்று
யாரேனும் எஞ்சினார்களா என்று
இப்பவும்
அவர்களுக்குத் தெரியாது
பாட்டி
கியூபாவைப் பற்றித் தனது
ரசமான கதைகளைச் சொல்லும்போது
சொற்களால்
தன் உறவினர்களைத் தீட்டுகிறாள்
ஆனால் நான் எனது
உக்ரைனிய யூத அமெரிக்கப் பாட்டியிடம்
பனி படர்ந்த கீவ் கிராமத்திலான
அவளது பிள்ளைப்பருவத்தைப் பற்றிக்
கேட்கும்போது
அவள் வெளிப்படுத்துவதெல்லாம்
உறைந்த குளமொன்றில்
பனிச்சறுக்கு ஆடிய
ஒற்றை
நினைவையே
நன்றாகத் தெரிகிறது,
வளர்ந்தவர்கள் சொல்லும்
‘வளர்பருவ’க் கதைகளின் நீளம்
குடியேற்றத்திற்கும்
தப்பித்தலுக்குமான
வித்தியாசத்தால்
தீர்மானிக்கப்படுகிறது
மார்கரீட்டா
அமெரிக்காவில் வளர்ந்தாலும் அவரின் உள்ளம் க்யூபாவின் இயற்கை எழில் மிக்க, அவரின் தாய்
பிறந்த கிராமத்தையே தனது அகநிலமாக வரித்துக் கொண்டது. அது அவரின் கலையில் வெளிப்படத்
தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே ”அமெரிக்கப் பார்வை” அதற்குத் தடை போட முனைந்ததை “ஆமை என்னைப்
பார்க்க வந்தது” (Turtle came to see me) என்னும் கவிதையில் சொல்கிறார். குழந்தைகளின்
வகுப்பறைகளுக்குள்ளும் அரசியல் நுண்ணிய முறையில் நுழைவதை அக்கவிதை உணர்த்துகிறது.
நான் எழுதிய முதல் கதை
ஓர் ஒளிரும்
தீட்டுக்கோல் படம்
தீவுக் காற்றில்
கிளைகள் கலைந்தாடும்
மரம்
ஒன்று.
அந்த மரத்தின் அருகில்
நான்
நிற்பதாய் வரைந்தேன்
எனக்கு மேலேயொரு பச்சைக் கிளி
என் கையிலொரு
மந்திர ஆமை
க்யூப ரும்பா கூத்தரின்
நூதன ஆடை அணிந்த
என் பெருமிதத் தோள்களில்
ஒரு ஜோடி மஞ்சள் சிறகுகள்
படபடத்திருந்தன
எனது கலிஃபோர்னிய பாலர் வகுப்பில்
வாத்திச்சி என்னைக் கண்டிக்கிறார்:
உண்மையான
மரங்கள்
இப்படி இருக்காது.
ஆசிரியர்களும் தவறாகக்கூடும்
என்று நான் கற்கத் தொடங்கிய
முதல்
கணம் அது.
க்யூபாவின் ஆடும் மரங்களை
அவர்கள்
கண்டதேயில்லை.
மார்கரீட்டாவின்
எழுதுகோல் தொடர்ந்து க்யூபா பற்றி அமெரிக்காவில் வாழும் க்யூபச் சிறார்களுக்குச் சொல்லிக்கொண்டே
இருக்கிறது. பெண்ணியவாதி கொமேஸ் தெ அவெல்லாநதா மற்றும் கறுப்பின அடிமைத்தளை ஒழியப்
போராடிய யுவான் ஃப்ரான்சிசோ மன்ஸானோ ஆகியோரைப் பற்றிய நூற்கள் இரண்டும், க்யூப விடுதலைப்
போரின் கவிதைகள் பற்றிய நூலொன்றும், க்யூபா பற்றிய இரண்டு நாவல்களும் என்று அவரின்
எழுத்துப் பணி இதனைச் சாதித்துள்ளது.
“The Lightning Dreamer: Cuba’s Greatest
Abolitionist” என்னும் அவரது புதினம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் க்யூபாவில் அடிமை
முறையை ஒழிப்பதற்கு எழுத்தையே ஆயுதமாக்கிப் போராடிய கொமேஸ் தெ அவெல்லாநதா என்னும் பெண்
புரட்சியாளரைப் பற்றியது. மக்கள் அவரை லா திவினா டூலா (புனித வெண்குருகு) என்று அழைத்தார்கள்.
கொமேஸ் தனது எழுத்துலக வாழ்வைச் சொல்வது போல் ஒரு கவிதை தருகிறார் மார்கரீட்டா:
“நகர வாழ்க்கை
கவிதை வாசிப்பின்,
தடைசெய்யப்பட்ட
இலக்கியக்கூட்டங்களின்
பெருஞ்சுழல்.
அங்கே
இளையரும் முதியரும்
செல்வரும் வறியரும்
ஆணும் பெண்ணும்
கறுப்பரும் வெள்ளையரும்
தப்பியோடிய அடிமைகளும்
விடுதலை பெற்றவரும்
முன்னாள் எஜமானர்களும்
முன்னாள் அடிமைகளும்
அவரவர் சுற்றில் வாய்ப்புப் பெறுகிறார்
அதிர்ச்சியான புதிய சிந்தனைகளில்
வேர்கொண்ட ரகசியக் கவிதைகளைப்
பகிர்ந்துகொள்ள.
ஒவ்வொரு மாலையும்
நான் வீடு திரும்புகிறேன்
தழல் போல் எழுந்தாடும்
சொற்களின் ஒளியால்
பிரகாசிக்குமொரு
உள்ளத்துடன்.
கொமேஸ்
நூற்களை மிகவும் நேசித்தாள். அவை காலத்தில் பயணிக்க வாய்த்த கதவுகள் என்று கண்டாள்.
பிள்ளைப் பருவம் தொட்டே அவளின் உள்ளத்தில் ஊறிய நூற்காதலை மார்கரீட்டா ஒரு மந்திரக்
கவிதையாக வடித்திருக்கிறார்:
நூல்கள்
கதவின்
வடிவம் கொண்டவை
என் தனிமை குறைத்து
கடல்களுக்கும்
நூற்றாண்டுகளுக்கும்
அப்பால் என்னை
அழைத்துச்
செல்பவை
ஆனால் என்
அன்னை நினைக்கிறார்
நிறைய படிக்கும் பெண்பிள்ளைகள்
பெண்மையற்று
அசிங்கமானவர்கள்
என்று
எனவே என் தந்தையின் நூற்கள்
தெளிந்த கண்ணாடி அலமாறியில்
பூட்டப்பட்டுள்ளன.
கவர்ந்திழுக்கும் நூற்களின் முதுகை
அவற்றின் புதிரான தலைப்புகளை
நான்
பார்க்கிறேன்.
ஆனால்,
வார்த்தைகளின்
வசீகரத்தைத் தீண்ட
அரிதாகவே நான்
அனுமதிக்கப்படுகிறேன்.
கவிதைகள்
கதைகள்
நாடகங்கள்
எல்லாமே
விலக்கப்பட்டவை
சிறுமிகள் சிந்திப்பவர்கள் அல்லர்
ஆனால்
என் ஆர்வ மனம் கிளம்பியதுமே
அடைபட்ட எண்ணங்களின் இடத்தில்
கட்டற்ற
எண்ணங்கள் மண்டுகின்றன
தூரத்துக் காலங்களை
தொலைவான இடங்களை
பேய்களை
அணங்குகளை
பழங்கால வீரர்களை
நான்
கற்பனை செய்கிறேன்
தனிமைக் குழப்பத்தின்
புதிரான வழிகளில்
மாயக் கற்பனை
நகர்கிறது
ரகசியமாக
என் உள்ளத்தில்
அரூப நூலொன்றைத்
திறக்கிறேன்.
அதன்
மாயக் கதவு வடிவின் வழியே
அபாயத் தீயர்களும்
அற்புத நாயகர்களும்
வாழுமொரு பிரபஞ்சத்தினுள்
நுழைகிறேன்.
அந்த நாயகருள் பலரும்
ஆண்களும் பையன்களும்தான்
எனினும்
சிலர் யுவதிகள்
மிகவும் உயரமான
வலிமையான
தந்திரம் மிக்க
யுவதிகள்
அவர்கள்தாம் மீட்கிறார்கள்
அசுரர்களிடமிருந்து
பிள்ளைகளை
எல்லாம்.
கல்வியைப்
பற்றி நாம் கொண்டிருக்கும் தவறான பார்வைகளை மார்கரீட்டா சாடுகிறார். இலக்கியங்கள் செழித்துத்
தோன்றிய நாடு இது. ஆனால் இலக்கியக் கல்வி வீண் என்பதே தேசிய மனநிலையாகி இருக்கிறது.
என்ன ஒரு முரண்? அறிவியற் கல்வி அல்லது பயன்பாட்டுக் கல்வி என்பது வலியுறுத்தப்படும்
இடங்களில் எல்லாம் இலக்கியக் கல்வி இழிவாகப் பார்க்கப்படும் நிலை தலை தூக்குகிறது.
இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கன்று. பல்கலையில் பேராசிரியராக இருக்கும் மார்கரீட்டா
இந்த அறியாமை பற்றி நோகிறார்:
“எத்தனை
தடவை என்னிடம் ஆசிரியர்களும் நூலகர்களும் வந்து ‘எனக்குக் கவிதை புரிவதே இல்லை’ என்று
சொன்னார்கள் என்று என்னால் எண்ண முடியவில்லை. அது மிகவும் அராஜகமும் அகம்பாவமும் தொனிப்பது.
ஒரு அலமாறியை எப்படி செய்வது என்றோ அல்லது வைலின் வாசிப்பது எப்படி என்றோ எனக்குத்
தெரியாது. ஆனால் நான் தச்சர்களையும் இசைக் கலைஞர்களையும் போற்றுகிறேன். குழந்தைகள்
உள்ளுணர்வாகவே சந்தங்களை விரும்புகிறார்கள், தமது உணர்ச்சிகள் தாளக்கட்டுடன் வெளிப்படுவதையே
வாலிபர்கள் ஆசிக்கிறார்கள் என்பதைப் பெரியவர்கள் புரிந்துகொண்டால் போதும்”
Margarita Engle
பள்ளிகளில்,
கல்லூரிகளில், இல்லங்களில், பொதுவிடங்களில் நாம் உடனே செய்யவேண்டிய ஒரு கடமையாக மார்கரீட்டா
சொல்கிறார்: “கவிதை படித்தல் மற்றும் எழுதுதல் என்னும் செயல்பாட்டை எந்தத் தடையுமின்றி
அனுபவிக்க நீங்கள் இளம் வயதினரை அனுமதித்தால் அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் கொண்டாடக்கூடிய
அன்பளிப்பு ஒன்றை அவர்களுக்கு நீங்கள் தருகின்றீர்கள். தொலைவான காலத்தில் அதனை அவர்கள்
தம் பேரப்பிள்ளைகளுடன் பகிர்ந்து மகிழவும் முடியும்.”
நவீன
இசை வடிவங்களின் கொண்டாட்டக் களம் அமெரிக்கா என்னும் பார்வை உலகெங்கும் பரவியுள்ள ஒன்று.
எனினும், லத்தீன் அமெரிக்க நாடுகளின் இசையில் உள்ள வரலாற்றுப் பரிமாணம் அதற்குக் கிடையாது.
ஸ்பானிஷ் இசை மரபில் அது இனங்காணப்படுகிறது. அந்த ஸ்பானிஷ் இசையின் மூலமே அரபு இசைமரபிலிருது
உருவாகி வந்தது. அரபு இசை மரபும்கூட இந்திய தொல்லிசையுடன் தொடர்புடையது என்று கூறுவர்.
இப்படியொரு கொடிவழித் தன்மையில் மலர்ச்சி கொண்ட லத்தீன் அமெரிக்க இசை க்யூபர்களின்
பண்பாட்டில் இரண்டறக் கலந்துள்ளது. மார்கரீட்டாவின் மனம் க்யூபாவின் தாளக்கட்டு துள்ளும்
இசையையே தன்னுள் நிரப்பிக்கொண்டுள்ளது. “ருதம்” (Ritmo / Rhythm) என்னும் கவிதையில்
இதனை அவர் பேசுகிறார்:
மதி ஒரு கழுகைப் பிடிப்பதென
முடிவு செய்திருக்கிறாள்,
அவளால் காண முடிந்ததில்
ஆகப்
பெரிய பறவையை
அவள் அத்தனைப் பிடிவாதமாகவும்
யுக்தி கொண்டவளாயும் இருக்கிறாள்,
கயிறுகளையும் குச்சிகளையும் இணைத்து
ஒருவிதக் கூண்டுப்பொறி அமைக்கிறாள்,
இரவில் மிஞ்சிய
இறைச்சியை வைத்தால்
பறவையை ஏமாற்றிப் பிடிக்கப்
போதுமானதாக.
மதியும் நானும்
எதையும் ஒன்றாகவே செய்திருப்போம்,
ஆனால் இப்போதெனக்கு
சொந்த
சாகசங்கள் தேவைப்படுகிறது.
எனவே நான்
எலும்புகள் தேடி
பசிய
வயல்களில் அலைகிறேன்
காட்டுப் பன்றி ஒன்றின் கபாலம்
கோவேறு
கழுதை ஒன்றின் தாடை
வளர்ந்த அண்ணன்மார்கள்
சொல்லித் தருகிறார்கள்
கழுதையின் தாடையை அசைத்து
அதன் தேய்ந்த பற்களைத்
தாளமிடச்
செய்ய
கிதார்கள்
மத்தளங்கள்
குடுவைகள்
குச்சிகள்
ஒரு மாட்டு மணி
ஒரு பலகை
விரைவில் உருவாயிற்று
ஒரு முழு
இசைக்குழு
க்யூபாவின் தோட்டங்களில்
மரணம் கூட
இசையாக
முடியும்.
மார்கரீட்டா
எழுதிய உலகப் புகழ் பெற்ற சிறுவர் நூல் “Drum Dream Girl” என்பதாகும். மில்லோ காஸ்ட்ரோ
ஸல்தர்ரியாகா என்னும் பெண் மத்தளக் கலைஞரின் இளம்பருவ வாழ்வை வைத்து அந்நூல் எழுதப்பட்டுள்ளது.
1930-கள் வரை க்யூபாவில் பெண்கள் தாள வாத்தியங்கள் வாசிக்கக் கூடாது என்னும் மரபான
தடை இருந்தது. ராகம் பெண்மையானது, தாளம் ஆண்மையானது என்பது ஒரு பொதுச் சிந்தனைதான்.
அஃது இந்திய இசை மரபிலும் இருக்கின்றது. அதனாற்றான் வாய்ப்பாட்டுக்கு அதிகம் பெண்களைக்
காணும் இந்திய செவ்வியலிசையில் மிருதங்கம் கஞ்சிரா தவில் பக்வாஜ் தபலா போன்ற தாளக்
கருவிகளின் வாசிப்பில் பெண்கள் அரிதினும் அரிதாகவே உள்ளனர். மில்லோவுக்குத் தானொரு
தாளக்கருவிக் கலைஞராக வேண்டும் என்பதே ஆன்மாவில் முகிழ்த்த ஆசையாக இருந்தது. தந்தையின்
தடையைத் தாண்டி அவர் தன் லட்சியத்தை அடைந்ததை, போங்கோ ட்ரம்ஸ் கலைஞராக உலகப் புகழ்
பெற்றதை மார்கரீட்டா சிறுவர்களுக்குச் சொல்வதாக இந்நூல் அமைந்திருக்கிறது. அந்தக் கவிதை
இது:
இசையினொரு தீவில்
மத்தளத் தாளங்களின் நகரில்
மத்தளக் கனவுச் சிறுமி
கனவு
கண்டாள்...
நெடிய கோங்கா மத்தளங்களை
அறைந்து வாசிப்பது போலவும்
சிறிய போங்கோ மத்தளங்களைத்
தட்டுவது போலவும்
நீள குச்சிகளை வைத்து
நிலா வெளிச்சம் போன்று
வெள்ளி நிறம் கொண்ட வட்டமான
டிம்பேல்ஸ் மேளத்தை
அடித்து
முழக்குவது போலவும்.
ஆனால்
இசைத்தீவில்
தாள நகரில்
உள்ள ஒவ்வொருவரும்
பையன்கள் மட்டுமே
கொட்டு வாசிக்கவேண்டும்
என்று
நம்பினார்கள்
எனவே
மத்தளக் கனவுச் சிறுமி
மௌனமாகவும்
ரகசியமாகவும்
மத்தளக் கனவுகளைக்
கண்டிருக்க
வேண்டியதாயிற்று
பூங்காக்கள் போல் தோன்றிய
வெளியிடத்துத் தேநீர்க் கடைகளில்
ஆண்கள் மத்தளங்கொட்டுவதை
அவள்
கேட்டாள்
ஆனால் அவள் தன்
கண்களை மூடியபோது
தனது சுயத்தின் கற்பனை இசையையும்
அவளால்
கேட்க முடிந்தது
பூக்கள் ஒளிரும் பூவனத்தில்
காற்றில் அசையும் பனைமரங்களின் கீழே
அவள் நடந்திருந்தபோது
கிளிகளின் சிறகுப் படபடப்பையும்
மரங்கொத்தியின் அலகு
மரங்கொத்தும் ஓசையையும்
தனது சொந்தக் காலடிகளின்
நடனச் சத்தத்தையும்
தனது இருதயமே
தன்னைத் தட்டிக்கொடுக்கும்
ஓசையையும்
அவள்
கேட்டாள்
திருவிழாக்களில்
நெடிதுயர்ந்த
பொய்க்கால் ஆட்டக்காரரின்
கால்களிடும் தாளங்களையும்
ராட்சத டிராகன் வேடமிட்டோர்
வாசிக்கும் மத்தளங்களையும்
கவனித்தாள்
வீட்டில்
அவளின் விரல்கள்
மேசையிலும் நாற்காலியிலும்
தம் கற்பனை மேளத்தின்மீது
தாளமிட்டன
இசைத் தீவில் சிறுமிகள்
மத்தளம் வாசித்ததில்லை என்று
ஒவ்வொருவரும் அவளிடம்
நினைவூட்டியபோதும்
துணிச்சலான அந்த
மத்தளக் கனவுச் சிறுமி
நெடிய கோங்கா மத்தளங்களையும்
சிறிய போங்கோ மத்தளங்களையும்
நிலா போல் ஒளிரும்
வெள்ளி நிற டிம்பேல்களையும்
வாசித்தாள்
கனவு மத்தளங்களில்
தாளமெழுப்பும்
அவளின் கைகள்
அறைந்தும் உறழ்ந்தும் வருடியும்
வாசிக்கும்போது
பறப்பது
போல் தோன்றின
பரவசப்பட்ட
அவளின் அக்காள்மார்கள்
மகளிர் மட்டுமேயான
தமது புதிய இசைக்குழுவில்
இணைய
அழைத்தனர் அவளை
ஆனால்,
பையன்கள் மட்டுமே
மத்தளம் வாசிக்க வேண்டும்
என்றார்
அவளின் தந்தை
எனவே
மத்தளக் கனவுச் சிறுமி
தனிமையாகவே தாளமிட்டாள்
தன் கனவுகளில்
மட்டும்
பிறகு
ஒரு நாள்...
அவளின் தாளத்திறன் உண்மையானதா?
மக்கள் கேட்பதற்குரியதா?
என்றறிய
ஆசிரியர் ஒருவரை
அப்பா
அழைத்து வந்தார்
மத்தளக் கனவுச் சிறுமியின்
ஆசிரியர்
அதிசயித்தார்
அவள்
அதிகமதிகம்
அறிந்திருந்தாள்
அவர்
மேலும் மேலும்
சொல்லித்தந்தார்
அவள்
பயிற்சி செய்தாள்
மீண்டும்
மீண்டும் மீண்டும்
ஒருநாள்...
நட்சத்திர இரவின் கீழ்
பூங்காவைப் போன்ற அந்த
தேநீர்க் கடையில்
அவள்
தனது சிறிய போங்கோவை
வாசிக்கலாம் என்று
வாத்தியார்
ஒப்பினார்
அங்கே அவளின்
கனவு மின்னும்
இசையைக் கேட்ட
ஒவ்வொருவரும்
பாடினார்கள்
ஆடினார்கள்
அன்றே
அவர்களொரு
முடிவுக்கு
வந்தார்கள்
தாளக்கருவிகள் இசைக்க
பெண்களும்
அனுமதிக்கப்படவேண்டும்
கனவு காண
பெண்ணுக்கும் ஆணுக்கும்
தடையிருக்கக்
கூடாது.
மார்கரீட்டா
எங்க்லேயின் கவிதைகள் வளர் பருவத்தினருக்கு ஏற்ற எளிய சொற்கள் கொண்டு அவர்களிடம் உரையாடுகின்றன.
பதின் வயதினரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக அவை இருக்கின்றன. அவற்றைப்
படிக்கும்போது நாம் நமது பால்ய பருவத்தின் முகத்தை அதில் காண்கிறோம்.
“நான்
எனது கவிதைகளில் முழுமையான விடைகளை வழங்குவதாகப் பாசாங்கு செய்வதில்லை. கவிதை என்பது
கேள்வி கேட்கும் இயங்குமுறை” என்று சொல்கிறார் மார்கரீட்டா. அந்தக் கேள்விகள் மெத்தப்
படித்த சிந்தனையாளர்களின் கேள்விகள் அல்ல. பள்ளிப் பருவத்து விளையாட்டுப் பிள்ளைகளின்
மனங்களில் உதிக்கும் கேள்விகள். ஆனால், அவையே நாளைய உலகின் கதவுகளைத் திறக்கின்ற சாவிகளாய்
இருக்கின்றன.
மார்கரீட்டா
தனது கவிதைகள் மீது உடைமை முத்திரையை அழுத்தமாகப் பதிக்கவும் தயங்குகிறார். அவர் சொல்கிறார்,
“கவிதை அதை எழுதிய கவிஞருக்கு எந்த அளவு உரியதோ அதே அளவு வாசகருக்கும் உரியது.”
No comments:
Post a Comment