"Muezzin" by Nobert Schwontkowski
1:110-111
சுகத்திற்கான அழைப்பு
மினாராவிலிருந்து தொழுகைக்கான அழைப்பு நம்மிடம் வருகின்றது. அது புறத்திலிருந்து
உள் வருதலாகும். இதர அழைப்புக்கள் நமக்குள்ளிருந்து வருகின்றன. மிருக உணர்ச்சிகள்,
பல்வேறு ஆசைகள், வானவர்களின் தூய்மையிடம் நாம் கொள்ளும் ஈர்ப்பும்கூட. எனது உடல் மற்றும்
எனது பிரக்ஞையின் ஒவ்வொரு பகுதியும் இந்தத் தேட்டங்கள் ஒவ்வொன்றையும் ஏற்கத் தயாராக
இருப்பதை நான் அவதானிக்கிறேன். பலரினும் இவை எனக்கு அதிகமுள்ளன, ஏனெனில் நான் அதிகம்
கேட்கிறேன். அவை அன்பளிப்புக்களாய் வருகின்றன. எனது காம விழைவு திருப்தியுறும்போது
எனது முழு உடலும் சந்தோஷப்பட்டு அமைதி கொள்கிறது. அழகிய பெண்களைக் காண்பது என்னைப்
பெரிதும் உவக்கச் செய்கிறது. இருத்தலின் காதலில் வாழ்வதே அவர்கள் செய்ய வேண்டிய அனைத்துமாய்
இருக்க, இம்மக்கள் ஏன் இவ்விஷயங்கள் பற்றி மிகவும் கொந்தளிக்கின்றார்கள்? நான் அதற்கு
உண்மையாய் இருக்கின்றேன். சுகம் மற்றும் திருப்தியின் வழி எனக்குத் திறந்தருளப்பட்டுள்ளது.
வேறுபட்ட பல வழிகள் உள்ளன. சிலவற்றுக்கு ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லை.
எனது எனக்கேயானது. அதை நான் மிகவும் அனுபவிக்கிறேன். பொதுவாக நாம் ஏற்றுக்கொள்வதை விடவும்
நான் காணும் உலகம் மிகவும் அழகானதும் சுகமானதுமாகும். என்னைப் போலிருக்கப் பலருக்கும்
ஆசையுண்டு. ஆனால் நான் அவர்களைப் போலிருக்க ஆசைப்படவில்லை. அவர்கள் வாழ்வதினும் அதிகமான
சுவையுள்ள வாழ்க்கை எனக்கு அருளப்பட்டிருக்கிறது என்பதை இது நிரூபிக்கின்றது. இறைவனே
நன்கறிவான்.
1:116
வெட்கமறியா விகடங்கள்
யாருடனேனும் நான் நட்பில் மிக நெருங்கிவிட்டேன் என்றால் அவருடன் எனக்குக்
கூச்சமில்லாமல் ஆகிவிடுகிறது என்பதை உணர்ந்து வருகிறேன். வினயம், இங்கிதம் என்பதெல்லாம்
அன்னியரிடையே இருக்கலாம். ஆனால், நண்பரிடையே தயக்கம் என்பதில்லை, அடக்கத்திற்கேதும்
அர்த்தம் இல்லை.
இதைக் கொஞ்சம் கவனியுங்கள். இறைவனெனும் அப்பெருந்தோழனினும் நெருக்கமான
நண்பன் வேறு எவருமில்லை. மறியாதையற்ற நடத்தைகளை எல்லாம் தாங்கிக்கொள்வோன் அவனினும்
வேறு யாருமில்லை. அந்நிலையிலும் நம்மை ஏற்போன் அவனினும் வேறிலர். படித்தரங்களை எல்லாம்
சொதப்பிக் கேலி செய்யும் நமக்கு அந்நிலையிலும் உடன்பாடாக பதிலளிப்போன் வேறு யார்? அனிச்சமான
ஆன்மிக விகடங்கள் ஓர் நெருப்புப்பொறி ஆனபோதும், அல்லது சூடேறிக் கங்காகிக் கனன்றபோதும்,
அப்போதும் அது இறைநட்பின் எல்லைகளுக்குள்ளேயே தக்கவைக்கப்படும்.
1:128-129
ஒவ்வொன்றிலும்
தன்னில் தெய்வீகத்தின் ஓர் அம்சமேனும் இல்லாமல் எவ்வொரு உயிரினமும்
எப்படி இறைவனுடன் பரிச்சயமாக இருக்க முடியும் என்று வியந்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
படைப்பினங்கள் எப்படி ஓய்வெடுத்துத் தமது இன்பத்தை அடைகின்றன?
விடை ஒன்று வந்தது: ஒவ்வொன்றும் என்னிலிருந்தே வருகின்றது. ஒவ்வொரு
கருணையிலும், கூட்டாளியிலும், ஒவ்வொரு இடரிலும், இச்சையிலும், நண்பர்களின் எந்த உரையாடலிலும்,
ரகசியக் கிசுகிசுப்பிலும், பன்னீர்த் தூரலிலும், லட்சியத்திலும், உன் விருப்பங்களின்
மாறும் இயல்பிலும், தொழுகையிலும், காதலிலும் நானே இருக்கிறேன். ஒவ்வொன்றும் இங்கிருந்தே
பாய்ந்து சென்று இங்கேயே மீள்கிறது. இலை, கொப்பு, புல்லி, எவ்வொரு காரண காரியமும்,
விழிப்பிற்கு மீளும் எவ்வொரு உறக்கமும்.
1:129-130
இதோ இப்போது நான் எழுதியது
கருணையைப் பெறவும் ஊழியின் ரஸத்தினைச் சுவைக்கவும், கபடறிந்து தம்மை
அதனின்றும் அன்பினை அழிக்கும் வேறு பல தூறுகளை விட்டும் தூய்மையாக்கவுமான இயல்புகள்
மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் ரூபங்களில், இந்தப் படைக்கப்பட்ட
தோற்றங்களில் போகப் போகச் சலிப்படைந்து மூலத்திற்கான ஏக்கம் கொள்கின்றனர்.
அத்தகு மனிதர் ஒருவர் இவ்வுலகில் எதற்கும் அஞ்சுவதில்லை. மேலும் அவர்
இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி பெறுவது பற்றியோ அல்லது தண்டிப்புக்களைத் தவிர்ப்பது
பற்றியோ அக்கறை கொள்வதில்லை. இருவழியிலும் எதன்மீதும் அவருக்கு எவ்விதத் தீர்ப்பும்
இல்லை. இறைவனெனும் நண்பனின் இருத்தலும் அந்த நெருக்கத்தை உணர்தலும் நினைதலுமே அவருக்கான
ஊட்டம். அவனோ அல்லது அவளோ இறந்துபோனால் அங்கங்கள் அவற்றின் இயற்கைப் பணியை முடிக்கின்றன.
உண்மையான ஆன்மா காதலால் நிரம்பி, இறைவனில் வாழ்வதற்காய் மனிதத்தில் இறக்கிறது.
இப்போது நான் எழுதியிருப்பது எனக்கும் உண்மையாக வேண்டும் என்பதே எனது
பிரார்த்தனை. எனது இதயத்தில், இங்கே காதலனும் காதலியும் ஒரே இடத்தில் வசிக்கட்டும்.
இவ்வரிகளை நான் வரைந்திடும்பொழுது பெருந்தோழனைக் காண்பது போல் உணர்கிறேன். கடுங்காதலின்
மற்றும் கனிவின் ஒளி நிரம்பிய நகைகள் அணிந்த மணப்பெண்ணைப் போல் இவ்வெழுத்துக்கள் என்னுள்
நுழைகின்றன.
1:130
சிறையும் பிரசன்னமும்
பிரசன்னத்தின் இன்பத்தை ஒருவரால் சிறைக்கூடத்தில் அடையவியலுமா? என்று
கேட்கின்றனர். நான் சொல்கிறேன், யாகூப் நபியின் மகன் யூசுஃப் நபி அவ்வனுபவத்தை அடைந்தார்.
ஏனெனில், நிலைமை எதுவானாலும் அவர் தன்வழியே பேருண்மை பாய்ந்திருக்கச் செய்தார். ஒரு
நல்ல மனிதன் தனது இயற்கைக்கு மாறான ஒன்றினைச் செய்தால் அவன் ஆழமாக துக்கமடைகிறார்.
அவன் தனது பச்சாதாபத்திற்கும், தனக்கும் பிறருக்கும் அவன் விளைத்த துயரத்திற்கும்,
தனது பிழையை எப்படி ஏற்பது என்பதில் அவன் கொள்ளும் குழப்பத்திலும்கூட அவனுக்கொரு இன்பம்
இருக்கும். தூய்மையாக்கப்படவேண்டும் என்று அவன் அழுகிறான். அந்தக் கண்ணீரும் இறைநேசமும்
போதுமானதாகட்டும்.
சிரிப்புக்கும் கண்ணீருக்கும் இடையே எப்போதுமே இருவழிப்பாதை உண்டு.
அழுகை நேரும்போது ஒருவர் பிரிவை உணர்கிறார். பிறகு சிரிப்பு நேர்கிறது, நாம் மீண்டும்
பிரசன்னத்தினுள் இருப்பதை உணர்கிறோம். நாம் ஒருபோதும் பிரியவே இல்லை. ஒரு குழந்தை கருணைக்குள்
மிக மகிழ்ச்சியாக வளர்கிறது. பிறகு அவனோ அவளோ பேச்சிழந்து துயர் நிறைகிறார். பிரசன்னத்தால்
போர்த்தப்பட்டுள்ளதான உணர்வு தேய்கிறது. இடையே அறுந்து போகாமல் திக்ரு என்னும் தியானத்தை
சுவாசிக்கும் ஒருவரே இன்பத்தை ஒருபோதும் இழப்பதில்லை: நீ அன்றி சத்தியம் வேறில்லை
(உள்மூச்சு) – நீ மட்டுமே இருக்கின்றாய் (வெளிமூச்சு). அத்தகைய நபர்கள் மிகவும் அரியர்.
Painting by Elmund Dulac for Omar Khayyam.
1:131
சந்தேகித்தல்
”மறுமையைப் பற்றிய அவர்களுடைய
அறிவோ மிகவும் சூன்யமாகிவிட்டது. அவர்கள் அவ்விஷயத்தில் சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
அது மட்டுமா? அதைப் பற்றி அவர்கள் குருடர்களாக இருக்கின்றனர்” (27:66)
பிறப்பிலிருந்தே சுத்தக் குருடாக இருக்கும் ஒரு
மனிதனிடம் நீங்கள் இவ்வுலகைப் பற்றி விவரிக்கலாம். ஆனால் அவன் குழப்பத்திலேயே இருப்பான்.
இவ்வுலகின் அழகிய முகத்தைக் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் அவனது அறியாமைக்கு இல்லை. அழகோ
அதன் மாட்சியில் அது அதுவாகவே இருக்கும். எனவே, ஆன்மாவைப் பற்றியும் மறுமையைப் பற்றியும்
சொல்லப்பட்டு நீங்கள் தெளிவின்றி இருப்பீர்கள் எனில் உங்களின் சந்தேகித்தல் மாறாது,
அதேபோல் ஆன்மா மற்றும் உயிரின் பண்புகளோ அவற்றின் எதார்த்தமோ மாறாமல்தான் இருக்கும்.
சுவனத்தின் அழகிய யுவதிகள் மற்றும் தோட்டங்கள் பற்றி என்னினும் மூத்தவரான
அறிஞர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார், நீ இவற்றில் இங்கே மூழ்கியிருந்தால்
மறுமையிலும் இப்படியேதான் தொடர்வாய். இவற்றை விட்டும் இறைவனின் ரசகியத்திற்கு முன்னேறிச்
செல்க. அதற்கு மட்டுமே. நான் சொன்னேன், அந்த இறைவனின் வழியாகவே நான் சொர்க்கத்தின்
நதிகளைக் காண்கிறேன். எனவே அவை எப்போதும் மாறியபடிப் பல்வேறு சுகங்களைத் தந்துகொண்டிருக்கின்றன.
நீங்கள் எங்கிருந்தபோதும் அவன்
உங்களுடனே இருக்கிறான் (57:4). உனக்கு என்ன வேண்டுமென்று கேள். பிறகு பாலில் தேனைப்போல்
கரைந்துபோ. கதவுகள் திறக்கும். நீ ஏற்கனவே இறைப் பிரசன்னத்தில்தான் வாழ்கின்றாய் என்பதைக்
கண்டுகொள்வாய்.
1:137-140
இந்த ஈர்ப்புக்கள்
சுப்ஹானல்லாஹ் (இறைவனுக்கே
மகிமை) என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன். அதன் உட்பொருள் எனக்குத் திறந்தது. நீ நேர்த்தியை
ஆசித்தால் அதன் முழுமையடைதல் இறைவனின் பிரசன்னத்தில் இருக்கின்றது. செல்வம், அதிகாரம்,
கண்ணியம், இசை (சமாஃ), சுஹ்பத் (ஆன்மிக சகவாசம்) ஆகிய அனைத்திலும் உண்மையும் இதுவே.
இறை ரகசியத்திலேயே இவை ஒவ்வொன்றும் தமது முழுமையை அடைகின்றன. இப்புலனுலகில் நீ எதை
எதை நேசிப்பினும் அதன் குறைகளை நிச்சயம் கண்டுகொள்வாய்.
இந்த ஈர்ப்புக்களை எல்லாம் நாம் இறைப் பிரசன்னத்திற்குக் கொண்டு செல்லும்போதுதான்
நாம் இன்னும் உயிர்ப்பாகிறோம், இன்னும் நேர்த்தியாகிறோம். அவ்விடத்திற்கு ஈர்க்கப்பட்டதாகவே
இவை எல்லாம் நம்முள் வாழட்டும். ஒளி, நிறம், சுவை, தீண்டல், நறுமணம் மற்றும் சப்தத்தின்
ஒவ்வொரு சுகமும் நமது தியானத்தால் (திக்ரு என்னும் இறைநினைவால்) நிரம்பட்டும். நாம்
சுமையின்றியும் உயிர்ப்புடனும் செல்வோம். “நிச்சயமாக
நான் எனது ரட்சகனிடம் செல்கிறேன். நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்”
(37:99). அங்கே செல்ல நான் அஞ்சினும், நான் செல்கிறேன், அணைத்து முத்தமிடப்படுகிறேன்,
பேரொளியில் நனைக்கப்படுகிறேன்.
இப்போது நான் அல்லாஹு அக்பர்
(இறைவனே மகத்தானவன்) என்று சொல்லத் தொடங்குகிறேன். அந்த மகத்துவத்தின் புலனுருவங்களைப்
பார்க்கத் தொடங்குகிறேன்: ஸ்தூல வலிமை, பதாகைகள், உயர் சிகர முகடுகள். அதுபோல் நான்
திக்ரு செய்யும்போது அவ்வுரையாடல் இறந்த நிலத்தை ரோஜாக்களால் நிறைக்குமொரு வசந்த காற்றாகிறது,
அருகிலான நீரோடை ஆகிறது, நண்பனின் வருகையை அறிவிப்பதாகிறது. குழுவாகச் சப்தமிட்டு இறைப்புகழினை
தியானித்தல் இதயத்தைத் திறக்குமொரு சாவியைக் கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment