Wednesday, November 21, 2012

வீட்டாமை தீர்ப்புகள்இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் எவை என்று எதிர்பாராக் கேள்வியை முன்வைத்தால் இல்லத்தரசிகள் சொல்லும் பதில் இப்படியாக இருக்கக்கூடும்:
1.  நாதஸ்வரம் 
2.  தென்றல்

தொலைக்காட்சி மெகா சீரியல்கள் இதிகாசங்கள் போல் இழுத்துக் கொண்டே செல்வதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. தாய்க்குலம் அவற்றை மாஞ்சு மாஞ்சு மூக்கைச் சிந்திக்கொண்டே பார்ப்பதைப் பார்க்கும் போது ஆற்றொணா வேதனைக்கு ஆளாகிறேன். இதாவது பரவாயில்லை. நிச்சயதார்த்தம் அல்லது திருமணத்திற்குச் சென்று வந்தது, விடுமுறை சுற்றுலா போய் வந்தது போன்ற காரணங்களால் பார்க்கத் தவறிப்போன எபிஸோடுகளை ஐபேட், லேப்டாப் ஏதாவதொன்றில் இணையத்திற்குள் புகுந்து அவர்கள் காண்கிறார்கள் என்பதை அறிந்தபோது நொந்தே போனேன். பெண்கள் இயல்பாகவே மாஸோச்சிஸ்டுகள் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் சுய சித்ரவதை என்பது இந்த அளவுக்குப் போகும் என்று நான் கனவிலும் கண்டதில்லை. எத்தனை நுட்பமான ஆனால் எத்தனைக் காத்திரமான வன்முறையை இந்தப் பெண்கள் தம் ஆன்மாவின் மீது பிரயோகிக்கிறார்கள் என்று பாருங்கள்!

அதிலும் சில சீரியல்களை இந்தியிலும் தமிழிலும் பைலிங்குவலாக வேறு தொடர்ந்து பார்த்து ஒப்பாய்வெல்லாம் செய்கிறார்கள். ஏ ரிஷ்தா க்யா கெஹ்லாதா ஹே? என்று ஒரு பாடாவதித் தொடர். பெயரிலேயே தெரிகிறதே, எழுதுபவர்களுக்கே கதை என்ன என்பது தெரியாமல்தான் இத்தனை நாள் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது. தாய்க்குலத்திற்கும் மெகா சீரியல்களுக்கும் இடையிலான உறவு பற்றியும் இதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் பால்கவி.

பால்கவியை இப்போதுதான் முதன்முதலில் கேள்விப் படுகிறீர்கள் அல்லவா? பால்கவி ஒரு வேலையில்லாப் பட்டதாரி. அதிலும் ரொம்பநாள் வேலை கிடைக்காமல் சும்மாவே இருப்பதால் வே.இ.பட்டதாரி என்னும் டெஸிக்னேஷனையும் தாண்டி இப்போது நாதாரி என்று அவனின் தந்தை பாராட்டும் அளவுக்கு வந்திருக்கிறான். ”ஏன்ப்பா இப்படிச் சும்மாவே இருக்க?” என்று ஒருமுறை அவனைக் கேட்டேன், எனக்கெல்லாம் ஒரு வேலை இருக்கிறது என்ற திமிரில். சித்தனைப் போல் சிரித்துவிட்டு “சும்மனாச்சிக்கும்தான் சும்மா இருக்கிறேன்” என்றான். அதற்கு மேல் நான் ஒன்றும் கேட்கவில்லை. கேட்டால் முந்நூற்றி எழுபத்தெட்டு பக்கங்கள் வரும் அளவுக்கு ஆய்வுரை நிகழ்த்துவான். அவன் ஒரு தத்துவவாதி. ஆனால் அவன் தன்னை ஒரு கவிஞனாகத்தான் முன்னிறுத்த விரும்புகிறான். பால்கவி என்னும் புனைபெயர் அதன் விளைவே. அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் ஆகியவை தந்த முப்பால்கவி என்று வள்ளுவரை விள்ளலாம். அவரைபோல் தானோ இவனும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இப்பெயரின் பின்னணி வேறு. வேலை வெட்டி இல்லாதவன்லாம் இனிமேட்டு இந்த வீட்ல சாப்பிட வேண்டாம் என்று குடும்பத் தலைவரான அப்பா சொல்லிவிட்டதால் ரோஷக்கார வே.இ.ப ஆன இவன் கடந்த ஐந்து வருடங்களாகப் பெரும்பாலும் நண்பனொருவன் வைத்திருக்கும் ஆவின் பாலகத்தில் பாலும் பன்னும் பிஸ்கோத்தும் மட்டுமே உட்கொண்டு ஜீவித்து வருகிறான் என்ற அடிப்படையில் பால்கவி என்னும் புனைபெயரைச் சூட்டிக்கொண்டான். தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை தினங்களிலும் கூட வீட்டில் பட்சண பலகாரம் எதுவுமே எடுத்துக்கொள்வது கிடையாதாம். அந்நாட்களில் நண்பர்கள் அவனை அழைத்துச் சென்று இம்பாலாவில் வாங்கித்தரும் வான்கோழி பிரியாணி ஒரு ஹாஃபும் தந்தூரி லெக் பீஸ் ஒன்றும் மிகவும் ருசித்துச் சாப்பிடுவான்.

பால்கவி சும்மா இருக்கிறான் என்று சொல்லப்படுவது தவறான கருத்து. அவனின் மூளை நாளொன்றுக்கு இருபத்தியேழு மணிநேரமும் தீவிரமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது என்பதை அவனின் அணுக்கத் தோழர்கள் அறிவர். வள்ளுவர் சொன்ன முப்பாலிலும் அவன் டீ காஃபி பூஸ்ட் எல்லாம் போட்டுவிட்டான். குறிப்பாக, கடைப்பாலைச் சுண்டக் காய்ச்சிக் கோவா ஆக்கியிருக்கிறான். அப்படியொரு நவீன உளவியல் ஆய்வாளனாகவும் பால்கவி திகழ்கிறான். அவனுடைய திறனாய்வு மேதைமைக்கு ஒரு சான்று, “ஃபிராய்டிய நோக்கில் கவிக்கோ அப்துல் ரகுமானின் படைப்புக்கள்” என்னும் தலைப்பில் அவன் செய்த எம்.ஃபில் ஆய்வு. பின்னால் இது ‘கழு-தை’ என்னும் சிற்றிலக்கிய மாத இதழில் தொடராக வெளிவந்து நாலு பேரால் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. தமிழிலக்கிய சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த அந்த ஆய்வின் முதல் அத்தியாயத்திலேயே, ‘உறங்கும் அழகி, அவளுக்கு நிலா என்று பேர், சலவை மொட்டு, முத்தங்கள் ஓய்வதில்லை, ரகசியப் பூ, பால்வீதி போன்று கவிக்கோவின் நூற்தலைப்புக்கள் எல்லாம் குறியீடாகப் பாலியல் பொருள் தருவனவாக இருக்கின்றன’ என்னும் விஷயத்தை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தான். (கவிக்கோ எழுதிய கவிதையொன்றின் தலைப்பான ‘காடாலிங்கனக் குறிகள்’ என்பதை அவன் ஒருமுறை சொன்னபோது ‘அடடே மலையாளப் பெயராட்டம் இருக்கே?’ என்று கேட்டான் கு.குசலா.) இப்படியாக, குறுக்கு வெட்டுத் தோற்றப் பகுப்பாய்வு என்று சொல்லிக் கத்திரிக்காயை வெட்டுவது போல் கவிக்கோவின் படைப்பாளுமையை பிரித்து மேய்ந்திருந்தான். அந்தப் படுபாவிதான் இந்தப் பால்கவி.   

டி.வி சீரியல்களைப் பற்றி இரண்டு மணிநேரம் சிந்தித்து மண்டை காய்ந்த காரணத்தால் ஆவின் பாலகத்திற்குச் சென்று வரலாம் என்று எண்ணி சப்பலை மாட்டிக் கொண்டு கிளம்பினான். வழியில் அவன் நண்பர்களில் ஒருவனான அருள்மிகு. கடபோச்சே எதிர்ப்பட்டான். அவனையும் அழைத்துக் கொண்டு பூங்காவில் போய் அரச மரத்தின் குளிர்நீழல் பரவியதும், பட்சிகளின் பாடல்கள் பரவசப் படுத்துவதுமான ஒரு ரம்யமான சூழலில் சிமெண்டுப் பலகையில் அமர்ந்து காலை முதல் தன் கபாலத்தைக் காய்ச்சிக் கொண்டிருக்கும் பிரச்சனையைச் சொன்னான். நிச்சயமாக இதற்கு மிக அருமையானதொரு விளக்கத்தை அருள்மிகு. கடபோச்சே சொல்வான் என்பது பால்கவிக்குத் தெரியும்.

அருள்மிகு கடபோச்சே அவர்களையும் இப்போதுதான் முதன்முதலில் காண்கிறோம் ஆதலால் அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்: இயற்பெயர் சுந்தர வடிவேலு. அது இப்போது அவருக்கே நினைவிருக்குமா என்று தெரியவில்லை. எல்லோரும் அவரை அழைப்பது அருள்மிகு. கடபோச்சே என்றுதான். அவர் என்னும் இந்த மரியாதைக்கும் அடைமொழி மற்றும் பட்டப்பெயருக்கும் ஒரு பின்னணி உளது. அதைப் புரிந்து கொள்ள இரண்டு கீவோர்டுகளை அதாவது கலைச்சொற்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்: ரிம்போச்சே மற்றும் வடபோச்சே.

ரிம்போச்சே என்பது திபெத்திய பௌத்தத்தில் ஒரு கௌரவப் பட்டம். ரிம்போச்சே என்பதன் பொருள் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் என்பதாகும். திபெத்தியர்கள் கைலாச மலையை “காங் ரிம்போச்சே” – விலைமதிக்க முடியாத பனிமலை என்று அழைக்கிறார்கள். புத்த பிட்சுக்களுக்கு இப்பட்டம் இருநிலைகளில் வழங்கப் படுகிறது. ஒன்று அவர்களின் மறுபிறப்புக் கோட்பாடு சார்ந்தது. புத்த குருமார்கள் மறுபிறப்பெடுத்து வந்துகொண்டே இருப்பார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. அப்படிப் பிறந்தவர்களுக்கு ரிம்போச்சே என்னும் பட்டம் தானாகவே உண்டாகிவிடும். அப்படி அல்லாதவர்களுக்கு அவர்களின் ஆன்மிக முன்னேற்றத்தைச் சோதித்தறிந்து இப்பட்டம் வழங்கப்படுகிறது. தாந்திரீக பௌத்தத்தை திபெத்திற்குக் கொண்டு வந்த இரண்டாம் புத்தரான பத்மசம்பவரை ’குரு ரிம்போச்சே’ என்று அழைக்கிறார்கள். மறுபிறப்பாளராகக் கருதப்படுபவரை அவர்கள் துல்கு என்று அழைக்கிறார்கள். நமக்கெல்லாம் வம்சா வழி / பரம்பரைத் தொடர் இருப்பதைப் போல் துல்குக்களுக்கு மறுபிறப்பு வழித்தொடர் பதிவு செய்யப்பட்டுள்ளது. திபெத்திய பௌத்த குருமார்களில் முக்கியமான பதவிகள் தலாய் லாமா, பன்ச்சென் லாமா மற்றும் கர்மாபா. இவர்கள் மூவருமே துல்குக்களாக இருப்பர். பதினான்காம் தலாய் லாமா அவருக்கு முந்திய பதின்மூன்று தலாய் லாமாக்களின் மறுபிறப்பாக வந்தவர் என்று கருதப்படுகிறது. அந்த வம்சத் தொடரின் மூலமாக அவலகிடோஷ்வரர் என்னும் போதிசத்துவர் இருக்கிறார். மறுபிறப்பெடுக்கும் துல்குக்களில் பெண்களும் உண்டு. சில துல்குக்கள் என்ன காரணத்தினாலோ ஐரோப்பா அமெரிக்காவிலெல்லாம் இந்தக் கலிகாலத்தில் பிறந்து தொலைத்துத் தாங்கள் ரிம்போச்சேக்கள்தான் என்பதை நிரூபிக்க ரொம்பவும் நொம்பலப் படுகிறார்களாம்.

ரிம்போச்சே பற்றி “The Reincarnation of Khensur Rimpoche”, “The Unmistaken Child”, “Tulku”, “My Reincarnation”  போன்ற ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 1992-ல் சங்கீத் சிவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘யோதா’ என்னும் மலையாளப் படத்தில் ரிம்போச்சே கதாப்பாத்திரம் வருகிறது. 1986-ல் வெளிவந்த அமெரிக்கப் படமான “The Golden Child”-ஐத் தழுவி எழுதப்பட்டது யோதா.

லாமாவின் மறுபிறப்பாக அடையாளம் காணப்பட்ட ஒரு சிறுவனுக்கு எதிர்ப்படும் சூரிய கிரகணத்திற்கு முன் ரிம்போச்சேவாக முடிசூட்ட நாள் குறிக்கிறது பௌத்த மடாலயம். அப்பகுதியில் உள்ள மாந்திரீகக் குழு ஒன்று தாங்கள் அமானுஷ்ய சக்திகளை அடையும் பொருட்டு முடிசூட்டலுக்கு முன் ரிம்போச்சேவை பலி கொடுக்க வேண்டும் என்று அவனைக் கடத்திக் கொண்டு போய்விடுகிறார்கள். அவன் அவர்களின் பிடியிலிருந்து தப்பி காத்மண்டூ நகரில் தலைமறைவாகி விடுகிறான். இதே காலக்கட்டத்தில் கேரள கிராமம் ஒன்றில் தைப்பிரம்பிள் அசோகன் என்னும் வேலையில்லா இளைஞனுக்கும் அதே ஊரில் உள்ள அரசுமுட்டில் அப்புக்குட்டன் என்பவனுக்கும் பகை முற்றுகிறது. அசோகன் அங்கிருந்தால் நிச்சயமாக ஒரு கொலை செய்வான் என்று கணிகன் கூற, அவனை நேபாளத்தில் இருக்கும் மாமனான கிருஷ்ணக் குட்டி மேனனின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறாள் அவனின் அம்மா. அசோகன் அங்கு செல்வதை அறிந்த அப்புக்குட்டன் அவனுக்கு முன்பே அங்கு சென்று தான்தான் அசோகன் என்று சொல்லித் தங்குகிறான். அசோகன் வந்து சேரும்போது அவனை ஆள்மாறட்டக்காரன் என்று சொல்லித் துரத்தியடிக்கிறார்கள். அவன் காத்மண்டூவின் தெருக்களில் அலையும்போது ரிம்போச்சேவுடன் நட்பு உண்டாகிறது.

கிருஷ்ணக் குட்டி மேனனுக்கு அஷ்வதி என்று ஒரு மகள். காத்மண்டூ பல்கலக்கழகத்தில் நேபாள சமயவியல் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறாள். அவளை மணந்து கொள்ள அப்புக்குட்டன் திட்டம் தீட்டுகிறான். ரிம்போச்சேவின் உதவி கொண்டு அதை அசோகன் முறியடிக்கிறான். உண்மையான அசோகன் யார் என்பதும் தெரிய வருகிறது. அசோகனுக்கும் அஷ்வதிக்கும் உள்ளம் இரண்டும் செம்புலப் பெயல் நீர் போல தாம் கலக்கின்றன. அதாவது காதல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரு டூயட் பாடலில் அவர்கள் லயித்திருக்கும் போது மாந்திரீகக் கும்பல் வந்து ரிம்போச்சேவைப் பிடித்துச் செல்கிறது. தடுக்க முயலும் அசோகன் கண் பார்வயை இழக்கிறான்; அஷ்வதிக்கு அடிதடியில் பலத்த காயங்கள். அவர்களை நேபாளின் ஆதிவாசிகள் அரவணைத்துக் காக்கிறார்கள். அந்த ஆதிவாசிகள்தான் ரிம்போச்சேவின் மடாலயத்தைக் காலந்தோறும் பாதுகாத்து வருபவர்கள். அவர்களின் தலைவன் சில குறிப்புக்களை வைத்து அசோகன்தான் ரிம்போச்சேவை மீட்பதற்குப் போதிசத்துவரால் தேர்ந்தெடுக்கப் பட்டவன் என்று கூறுகிறான். கண்பார்வை இல்லாத நிலையிலும் அபாரமாக குங்க்ஃபூ போடும் அளவுக்கு அசோகனுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவன் ரிம்போச்சேவை மீட்டு வருகிறான். சூரிய கிரகணத்திற்கு முன்னாள் இரவில் ரிம்போச்சேவுக்கு முடி சூட்டப்படுகிறது. அப்போது அங்கு வரும் மாந்திரீகவாதிகளின் தலைவனுடன் கடுமையாக மோதி அவனைக் கொல்கிறான் அசோகன். அதன் பின் அவனுடன் பொருத வரும் அப்புக்குட்டனையும் நையப் புடைத்து அனுப்பிவிட்டு அஷ்வதியை மணந்து கொள்கிறான். (மோகன்லால், மதூ, புனீத் இஸ்ஸார், ஜகதி ஸ்ரீகுமார், ஊர்வசி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன் முதலியோர் நடித்துள்ள இப்படத்தில் ரிம்போச்சேவாக நடித்திருக்கும் சிறுவனின் பெயர் சித்தார்த்தா!)

அடுத்த கலைச்சொல் வடபோச்சே. இது வடை போச்சே என்பதன் பேச்சுவழக்கு வடிவம் என்பதையும் வைகைப் புயல் என்று புலவர் புகழ்ந்தேத்தும் வடிவேலு ‘போக்கிரியில்’ பேசிய ஒரு கையறுநிலை வசனம் என்பதையும் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியுமாதலால் மேல் விளக்கம் வேண்டற்பாலதன்று.

இனி நார்த்தாமலை சுந்தர வடிவேலு அவர்களுக்கு பெற்றோரிட்ட அந்நாமகரணம் மறைந்து அருள்மிகு. கடபோச்சே என்னும் பட்டப்பெயர் உருவான வரலாற்றைக் காண்போம். நார்த்தாமலையிலிருந்து திருச்சி மன்னார்புரம் புறம்போக்குக் குடிசைப் பகுதிக்கு அவர் வந்து செட்டில் ஆன போது அவரின் அகவை பதினொன்று. பத்து வருடங்கள் கழித்து ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து அனாதை ஆனார். அதே குடிசைப் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்னும் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இது நடந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. ஆர்.பி.எஃப்புக்குச் சொந்தமான இடம் என்று சொல்லப்பட்டாலும் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அந்தக் குடிசைப் பகுதி மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் இருந்தது. எனவே பசை உள்ளவர்கள் பெரிய பெரிய பில்டிங்குகளெல்லாம் கட்டி கடைகள் என்ன, லாட்ஜ் என்ன, கம்ப்யூட்டர் மையங்கள்கூட அதில் வந்துவிட்டன. அப்போதுதான் விதியில் ஒரு திருப்பம் வந்தது. சிங்கார சென்னையைத் தொடர்ந்து திருச்சியையும் சிங்காரமாக்கும் பொருட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. முதல் வேலையாக இடையூறாய் நிற்கும் கட்டிடங்கள் எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. மன்னார்புரம் நால்ரோட்டிலும் மதுரைக்குச் செல்லும் ரிங் டோடு அமைப்பதற்காக ஒரு 4வே மேம்பாலம் திட்டமிட்டிருந்ததால், ஒரு சுபதினத்தின் காலையில், ஆடவர்கள் நெட்டி முறித்தபடியே டீக்கடை முன் ஆஜராகும் சுபயோக வேளையில் ராட்சத புல்டோசர்கள் சகிதமாக அதிகாரிகளும் போலீசும் வந்து நின்றார்கள். வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் விளக்கப் படவே, ‘ஐயோ நம்ம ஊட்ட இடிக்கப் போறாங்களே” என்று தலையில் இடி விழுந்தது போல் ஜனங்கள் கூடி ஒரே ஆர்ப்பாட்டம். அன்று வேலை எதுவும் ஓடவில்லை. இப்படியே ஒருவார காலம் போயிற்று. கமிஷ்னரிடம் பேச்சுவார்த்தை அது இது என்று என்னென்னவோக்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சுபயோக சுபதினத்தில் சுப்ரபாதத்தில் என்க்றோச்மெண்ட் வேலைகள் ஆரம்பமாயின. மக்கள் குழுமி இதைக் காணச் சகியாமல் ஹிட்டடித்த காக்றோச்களைப் போல் ரோட்டில் மல்லாந்து விழுந்து நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறினார்கள். இன்றைய தேதிக்கு  எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். சமீபத்தில் கூட இளைய தளபதி விஜய் அதிரடியாகக் கலக்கும் ‘துப்பாக்கி’க்கு ரசிகர் மன்றத்தின் சார்பில் ஒரு ப்ளாட் சைஸில் ஃப்ளெக்ஸ் போர்டு வைத்து தல ரசிகர்களைச் சீண்டியிருந்தார்கள். அவர்கள் எவ்வளவு பரவசமான வாழ்க்கை நிலை கொண்டுள்ளார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று!

அந்த என்க்றோச்மெண்ட்டில்தான் சுந்தர வடிவேலு வைத்திருந்த கடையும் இடிக்கப்பட்டது. தவிட்டு பிஸ்கெட்டுகள், கடலைமிட்டாய் சூடமிட்டாய் புளிப்பு மிட்டாய் வகையறாக்கள், பீடி சிகரெட் பான்பராக் புகையிலை அன்ன பிற வஸ்துக்கள் ஆகியவை விற்ற சிறிய கடை அது. ஆனால் அதுதான் அவருக்கு வாழ்வின் ஆதாரமாய் இருந்தது. கண்முன் கடை இடிவதைப் பார்த்துக்கொண்டே மிகவும் சாந்தமாக நின்றிருந்தார் அவர். என்னடா இப்படி நிக்கிறான், அதிர்ச்சியில் மரை கழண்டு விட்டதா என்று பயந்து தோளைப் பற்றி உலுக்கியபோது, ஒரு லேசான சலிப்புடன் ‘கட போச்சே’ என்றார். அவ்வளவுதான். அதற்கு மேல் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. மகான்களுக்கே உரிய மனோதிடமா இல்லையா சொல்லுங்கள். தன் விஞ்ஞான ஆராய்ச்சித் தாள்கள் எல்லாம் டைமண்ட் என்ற செல்ல நாய்க்குட்டி தட்டிவிட்ட மெழுகுவத்தியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைச் சாந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தாராம் தாமல் ஆல்வா எடிசன். கேட்டதற்கு ‘என் தவறுகள் எல்லாம் எரிந்துவிட்டன. இனி புதிதாய்த் தொடங்கலாம்’ என்றாராம். அதுபோல் நின்றார் சுந்தர வடிவேல். அவர் மனைவி தேன்மொழியும் ஒருவாரம் கழித்துப் புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்கிக் கொண்டார். மெக்கானிக் ஏகாம்பரத்துடன் ஓடிவிட்டதாகவும் தஞ்சாவூர் பக்கம் எங்கோ இருப்பதாகவும் பேச்சு. அதையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார், ‘கல்யாணமாகி பத்து வருஷமாச்சுங்க. புள்ள பூச்சி எதுவும் உண்டாகல்ல. இனியாச்சும் வாய்க்கட்டுமே. பாவம் ஒரு பொண்ணு தாயாகாம இருக்கிறது நல்லாவா இருக்கு?’ என்று மட்டும் சொன்னார். எப்பேர்பட்ட மனுஷன். பவ்லோ கோய்லோவின் நாவலில் இடம் பெற வேண்டிய பாத்திரம் என்று நினைத்துக் கொண்டேன். சிறு பிள்ளையிலிருந்தே இப்படியொரு அசாத்திய பக்குவத்துடன் அவர் இருப்பதாகக் கூறுகிறார்கள். ‘அதோட சுபாவமே அப்படித்தாம்ப்பா’ என்றார் காமாட்சிக் கிழவி. இதெல்லாம் சேர்ந்துதான் அவருக்கு அருள்மிகு. கடபோச்சே என்னும் பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.

செ, அறிமுகமே இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்டது. ஆக, பால்கவியும் அருள்மிகு கடபோச்சேவும் ரம்யமான சூழலில் பூங்காவில் அமர்ந்திருந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் மெகா சீரியல்கள் பார்ப்பதை முன்னிட்டு அவர்களின் உளவியலைத் தன்னால் புரிந்து கொள்ள முடியாத சிக்கலை பால்கவி முன்வைத்தான். அருள்மிகு கடபோச்சே சிரித்துக் கொண்டே, ”கேணப்பயலே, இதெல்லாம் ஒரு விஷயமா? பெண்ணுக்கு இயல்பாகவே ஒரு நார்சிசஸ் சிண்ட்ரோம் உண்டு. தன் அழகைக் கண்ணாடியில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க நினைப்பாள். அதேதான் இது. மெகா சீரியல் அவுங்களுக்கு ஒரு mirror, அவ்வளவுதான்” என்றார்.
அவரின் கையில் ஒரு இத்துப்போன மஞ்சள் நிறப் பையில் ஏதோ சாணித்தாள் கட்டொன்று இருப்பதைக் கண்டு அது என்னவென்று கேட்டான் பால்கவி.

குடுமியான்மலையில் இருந்து ராஜா கனி என்னும் நண்பர் அனுப்பியுள்ள ’கத்திக்கப்பல்’ என்னும் பத்திரிகை அது என்றும் தமிழ்ப்படத்தில் பதிவாகியுள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்டிருக்கும் முக்கியமான மாற்றத்தைப் பற்றி அதில் சுவாரஸ்யமான ஒரு கட்டுரையை ராஜா கனி எழுதியிருப்பதாகவும் அருள்மிகு கடபோச்சே சொன்னார். ஆர்வம் எழ அப்போதே அதை வாங்கிக் கொண்டான் பால்கவி. அவன் பத்துமுறை படித்து மெய்சிலிர்த்த அந்தக் கட்டுரையின் சாராம்சம் பின்வருமாறு:

தமிழ்ப்பட கிராமம் என்று பிரபலமாக அழைக்கப்படும் Xபட்டி என்னும் அந்தச் சிற்றூரில் இன்னமும் தமிழ்ப் பாரம்பரியத்திற்கு மரியாதை கொடுத்து நாட்டாமை முறை அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சேட்டலைட் சேனல்கள், இண்டர்நெட் வழங்கும் ஃபேஸ்புக் ஆர்க்குட் யூட்யூப் கூகிள் யாஹூ போன்ற சேவைகள், எல்லோர் கையிலும் செல்பேசிகள், பொங்கலை முன்னிட்டுப் பதினெட்டுப் பட்டிகளுக்கிடையிலான 20-20 டோர்னமெண்ட், அதிமேதாவிகள் அரை டஜன் பேரை உறுப்பினர்களாகக் கொண்ட இலக்கியச் சதுரம் என்று என்னதான் நவீன அம்சங்கள்
பெற்றுத் திகழ்ந்த போதும் பழமரபைப் பேணுபவர்களாக இவ்வூர் மக்கள் இருக்கிறார்கள்.

நாட்டாமை பொறுப்பு வகிக்கும் பானா சூனா மணியக்கவுண்டரை நான் சந்திக்கச் சென்றபோது அவர் மரத்தடிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன என்றும் வீட்டிலேயே பஞ்சாயத்து வைத்துத் தீர்ப்புக் கூறுகிறார் என்றும் கேள்விப்பட்டு வீட்டுக்குப் போய் அவரைச் சந்திதேன். அம்மணியை அழைத்து தாகசாந்திக்கு வெண்கலச் சொம்பு நிரம்ப மோர் தந்து உபசரித்தார். அறுபது வயது இருக்கும். ஆனால் கருங்கல் சிலை போல் கட்டுமஸ்தாக இருந்தார். நாட்டாமை என்றால் அணில் வால் போல் இருபக்கமும் நீண்ட மீசை இருக்க வேண்டும் எனபதுதானே மரபு. ஆனால் அந்த அணில் வால் இரண்டையும் இவர் பக்கவாட்டில் side burns-களாக வைத்திருந்தார். மீசை இருக்கவேண்டிய இடத்தில் தீக்காயத்தின் தழும்புகளும் கரப்பான் பூச்சி மீசை போல் மையால் போட்ட கோடும்தான் இருந்தன. இதற்கு ஏதேனுமொரு ஃப்ளேஷ் பேக் நிச்சயமாக இருக்க வேண்டும். நமக்கெதுக்கு வம்பு, நாட்டாமையாச் சொன்னால் சொல்லட்டும் என்று அதை நான் கேட்கவே இல்லை. அவரும் சொல்லவில்லை. ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன் ஊரில் ஏற்பட்ட ஏதோ கலவரத்தில் தீக்காயம் ஆனதிலிருந்துதான் கரிகாலனுக்கு ஒரு கால் கரிந்து விட்டதாகச் சொல்லப்படுவது போல் புட்டமெல்லாம் எரிந்து கரிந்து போய் – அதற்குப் பெருமையாக ஒரு பெயர்கூட வைத்து அழைக்கப்பட முடியாத நிலையில் – வீட்டிலிருந்த படியே தீர்ப்பு வழங்கி வருகிறாராம். “நாட்டாமையாக இருந்த நான் இப்ப வீட்டாமை ஆகிவிட்டேன்” என்று சொல்லிச் சிரித்தார்.

கிராமப் பஞ்சாயத்து முறையில் வீட்டாமை பானா சூனா மானா அவர்கள் செய்திருக்கும் புதுமை என்னவெனில் நாட்டாமை / வீட்டாமை நினைத்தால் வீ.பி.கோ செக்‌ஷன்களைப் புத்தாக்கம் செய்து சட்டத் திருத்தங்களை இயற்றி அமுல் படுத்துவதுதான். அதற்கான காரணம் என்னவென்று வினவியபோது அவர சொன்னதாவது: “பயலுக பழைய தண்டனைகளுக்குப் பரம்பரைப் பரம்பரையாப் பழகிப் போடுறானுங்க. அதுனால ஜீன்லயே ஒரு இம்யூனிட்டி வந்துடுதுங்க தம்பி. காலத்துக்குத் தகுந்தாப்ல தண்டனைய மாத்தணுங்கற திட்டம் அதுக்குத்தான்.” என்ன மாதிரியான புதுத்திட்டங்கள் வைத்திருக்கிறார் என்று கேட்டபோது லேட்டஸ்ட்டாக இயற்றப்பட்ட வீட்டாமை வீக்ளியை எடுத்துத் தந்து குறிப்பெடுத்துக் கொள்ளும்படிக் கூறிவிட்டு அம்மணி முதுகு தேய்த்துவிட நீராடும் ஆனந்தத்தை நோக்கி வீட்டின் பின்புறம் போய்விட்டார். என் நெஞ்சை நக்கிய சில தண்டனைகளை மட்டும் நான் குறித்துக் கொண்டேன்.

வீ.பி.கோ #12: குற்றவாளி ஆண் என்னும் பட்சத்தில் ஒரு மாத காலம் அனைத்து மொழிகளின் அனைத்து மெகா சீரியல்களையும் ஒன்றுவிடாமல் அல்லும் பகலும் தொடர்ந்து பார்க்க வேண்டும். குற்றவாளி பெண் என்னும் பட்சத்தில் ஒரு மாத காலம் எந்த மெகா சீரியலையும் பார்க்காமல் அதற்குப் பதிலாக BBC, CNN மற்றும் நரி வரலாறு ஆகிய சேனல்களை மட்டுமே பார்க்க வேண்டும். தண்டனை காலத்தில் குற்றவாளிகளுக்குப் பைத்தியம் பிடித்தால் அதற்கு வீட்டாமை பொறுப்பல்ல.

வீ.பி.கோ #18: கோணங்கியின் பிதிரா, பாழி ஆகிய நாவல்களை முழுமையாக மனனம் செய்து சொற் பிறழாமல் எழுதிக் காட்ட வேண்டும்.

மேற்கண்ட சட்டத்தின் மீது உள்ளூர் பிரமுகர்களில் ஒருவரான ஜவுளிக்கடை சேனா கானா மூனா தாவூத் பாட்சா ராவுத்தர் அவர்கள் ஆட்சேபனை தெரிவித்து முஸ்லிம்களுக்கான தனிச்சட்டம் வேண்டும் என்று ஜமாத் கேட்டுக்கொண்டதன் பேரில் பின்வரும் உபச்சட்டம் இயற்றப்பட்டது.

வீ.பி.கோ #18(A): முஸ்லிம் முரசு மாத இதழின் இரண்டாண்டு தொகுப்புக்களை முழுமையாக மனனம் செய்து சொற் பிறழாமல் எழுதிக் காட்ட வேண்டும்.

வீ.பி.கோ #27: பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த திரைப்படத்தைத் தனி ஆளாக அமர்ந்து தியேட்டரில் தொடர்ச்சியாக மூன்று காட்சிகள் காண வேண்டும். (டிக்கட் செலவை பஞ்சாயத்து ஏற்கும். ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் ஆள் இருக்கிறானா பூட்டானா என்று சோதிக்கப்படும்)

வீ.பி.கோ #30: நாய்க்குட்டியைத் துரத்திக் கொண்டு ஓடும் யுவதியைத் தன் சட்டையைச் சாட்டைபோல் முறுக்கி வீசி, ரோட்டில் விரைந்து வரும் லாரியில் அடிபடாமல் சரத்குமார் காப்பாற்றும் விளம்பரத்தை இருநூறு முறை தொடர்ந்து பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment