Friday, May 24, 2013

ஈர மை




’கரையில் நின்ற
காதலை
அழித்துப் போனது
அலை’
என்றேன்

‘அழைத்துப் போனது
அலை’
என்றாள்
*

சிகிச்சை பலனின்றி
மீண்டும் மீண்டும்
பிழைத்துக் கொள்கிறது
மனம்
*

‘எதற்காகக் கொண்டுவந்தாய்
என்னை?’ என்றேன்

‘நீ இல்லாதிருந்ததை
நினைப்பதற்காக’
என்றாய்
*

காதலின் யாத்திரையில்
உன்னிடம் வரும் பாதையும்
உன்னிடம் வரும் பயணி
*

உன் வேதனைப் புலம்பல்கள்
தெய்வீக கீதமல்ல...
குழலாகும் மூங்கில்
சப்தமிடுவதில்லை
துளை செய்யும்போது
*

கண்கள் போதிக்கும்
காதல் ரகசியங்கள்
புத்தகங்களில்
புலப்படுவதில்லை...

காகிதத்தில்
காய்ந்துபோய்விடும் மை
கண்களில் இருக்கின்றது
ஈரமாக
*

நறுமணம் உன்னில்
வார்த்தைகளாகி
வருகின்றபோது
பனித்துளிகள்
என்
கண்களின் காணிக்கை
*

விடியலுக்காகப்
பிரார்த்தனை செய்தது
விளக்கு
இரவெல்லாம்...

ஏற்றிவிட்டுப்
பிரிந்து சென்ற நீ
அணைப்பதற்காவது
வருவாய் என்று
*

உனக்கேதும்
உவமை சொன்னால்
கோபம் கொள்வாயோ?

உன்னைப் போல் இருக்கிறாய்
என்று சொல்லவும்
அஞ்சுகிறேன்

Saturday, May 11, 2013

வார்த்தை வாசல்




‘உன்னை
அறிந்ததால் காதலித்தேனா?
காதலித்ததால் அறிந்தேனா?’
என்றேன்

’உன்னிரு கண்களில்
எந்தக் கண்ணால்
என்னை முதலில் பார்த்தாய்?’
என்றாள்
*

புலம்புவதில்லை
புல்லாங்குழல்
மௌனமாய்க் கிடப்பதற்கு.

வருத்தப்படுவதில்லை
வாசிக்கப் படுகின்றபோதும்.
*
என் சிறு குடில்
உன் அரண்மனை ஆனது
நான் இறந்த போது
*

கவிதையை அழித்தாய்
பேச்சையும் அழித்தாய்
என் காதலே!
மௌனத்தையும் அழித்துவிடு
*

உன் கிளைகள்
பூக்களைத் தூவிக்கொண்டிருந்த சாலையில்
நடந்திருந்தேன்
கலங்கிய கண்களுடன்

இத்தனை நினைவூட்டல்களை
யார்தான் தாங்கிக்கொள்ள முடியும்?
*

காட்சியைப் பற்றிய உன் சிந்தனையே
திரையை நெய்து கொண்டிருக்கிறது
காதலின் தீயை
அதில் பற்ற வைத்துப் பார்
*

அறிவின்
ஐநூறு சிறகுகள்
எரிந்துபோகும்
எல்லைக்கு அப்பால்
காதலின் கால்தடம்
கண்டேன்
*

எரிவது துன்பம்
எரிவது இன்பம்
விட்டிலுக்கு...

விளக்கின்றி முன்னது
விளக்கில் பின்னது
*

வார்த்தைச் சாளரம்
வழியே
பொருள்
எத்தனை தொலைவில்?

அர்த்தங்களின் சோலைக்கு
வெளியேறிச் செல்ல
வார்த்தைகளில் எங்கே
வாசல்?
*

Monday, May 6, 2013

முதல் நேசம்



நான் உங்களின் ரட்சகன் அல்லவா?”
(அலஸ்து பி றப்பிகும் – 7:172)

ஆத்மாக்களைப் படைத்த இறைவன் அவற்றின் முன் தோன்றி அவற்றிடம் கேட்ட முதல் கேள்வி இது.

ஆத்மாக்கள் பதில் கூறின ‘ஆம், நாங்கள் சாட்சியாகிறோம்’ (காலூ பலா ஷஹித்னா). இதுவே மனித அத்மாக்களின் முதல் பேச்சு.

மனித ஆத்மாக்கள் முதன் முதலில் பார்த்தது இறைவனைத்தான். முதன் முதலில் கேட்டது அவனின் பேச்சைத்தான். முதன் முதலில் பேசியது அவனிடம்தான்.

எத்தகைய காட்சி! எத்தகைய கேள்வி! எத்தகைய உரையாடல்!

அவனே பார்ப்பவன் (ஹுவல் பஸீரு)
அவனே கேட்பவன் (ஹுவஸ் சமீஉ)
அவனே பேசுபவன் (ஹுவல் கலீமு)

அவனே ஆத்மாக்களுக்குப் பார்வையையும் கேள்வியையும் பேச்சையும் தந்தான்.

அவனின் பார்வையைக் கொண்டு அவை அவனைப் பார்த்தன; அவனின் கேள்வியைக் கொண்டு அவை அவனின் பேச்சைக் கேட்டன; அவனின் பேச்சைக் கொண்டு அவை அவனுடன் உரையாடின.

அவனது காட்சியின் பேரழகு. அவனது பேச்சின் இனிமை. அவனுடன் உரையாடும் இன்பம். அவன் மீது காதலாகாமல் எப்படி இருக்க முடியும்?

ஆத்மாக்கள் முதன் முதலில் அவனையே நேசித்தன. அந்த நேசமே அத்தனை நேசங்களுக்கும் ஆதாரம் ஆனது.

இறைக்காதல் என்னும் கடலுள் மூழ்கி மஸ்னவி என்னும் ஒளி முத்தைக் கொண்டு வந்த மவ்லானா ரூமி (ரஹ்) சொல்கிறார்கள், இறைவனின் அந்தப் பேச்சுதான் ஆத்மாக்கள் கேட்ட முதல் இசை. இறைநேசர்கள் இசை (ஸமா) கேட்கும்போது அவர்களின் ஆத்மாக்கள் அந்த ஆதி இசையின் நினைவில் மூழ்கித் திளைக்கின்றன.

ஆத்மாக்கள் சொன்ன பதில் அந்த ஆதி இசையின் முதல் எதிரொலிதான். ஒருவகையில் அவற்றைக் கருவியாக்கி அவனே மீட்டிய இசைதான் அது. அவனின் பேச்சைக் கொண்டுதான் (சிஃபத்தெ கலாம்) அவை பதில் அளித்தன.

‘புல்லாங்குழல் காத்துக் கிடப்பதெல்லாம்
உன் உதடுகள் தொடுவதற்கே
உன் மூச்சு இல்லை எனில்
அதன் இசை ஏது?’
என்கிறார் மவ்லானா ரூமி (ரஹ்)

நான் உங்களின் ரட்சகன் அல்லவா?”
(அலஸ்து பி றப்பிகும் – 7:172)

இந்தத் திருவசனத்திற்கு சூஃபி ஞானி ஒருவரின் அற்புதமான விளக்கத்தை அலீ அக்பருல் கலாபாதி (ரஹ்) அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள் (நூல்: கிதாபுத் தஅர்ருஃப் லி மத்ஹபி அஹ்லுத் தஸவ்வுஃப்):

“வெளிப்படுத்தப்பட்ட பருப்பொருட்கள் (முகவ்வனாத்) பகுத்தறிவின் வீச்சால் அறியப்பட முடியும். இறைவனோ பகுத்தறிவின் வீச்சு அவன்மீது படுவதை விட்டும் மேலானவன். அவனே நமது ரட்சகன் என்பதை அவனே நமக்குக் கற்றுத் தந்தான். அதாவது ‘நான் உங்களின் ரட்சகன் அல்லவா?’ (அலஸ்து பி றப்பிகும் – 7:172) என்று சொன்னானே அன்றி, பகுத்தறிவின் சிந்தனைக்கு வாய்ப்புக் கொடுக்கும் வண்ணம் ‘நான் யார்?’ என்று கேட்கவில்லை. இதுவே படைப்புக்களின் ஆசிரியனாக அவன் முதன் முதலில் வெளிப்பட்ட நிலையாகும். எனவே அவன் பகுத்தறிவைச் சாராதவனாகவும் அனுமானங்களுக்கு அப்பாற்பட்டவனாகவும் இருக்கின்றான்.”

நான் உங்களின் ரட்சகன் அல்லவா?”
(அலஸ்து பி றப்பிகும் – 7:172)

அதாவது, வினாவிலேயே விடையும் இருக்கிறது.

வினா தொடுத்தது, சிந்திப்பதற்காக.

வினாவிலேயே விடையை வைத்தது, சிந்தனையால் அவனை அறிய முடியாது என்பதற்காக!

அதவாவது, அவனை அறிவது அல்லது அவனைப் பற்றிய அறிவை அடைவது நம் சிந்தனையின் விளைவு அல்ல. மாறாக, சிந்திப்பவர்களுக்கு அவன் தன்னைப் பற்றிய அறிவை அருட்கொடையாக வழங்குகிறான்.

எனவே, சிந்திக்காதவர்கள் அவனை அறிய மாட்டார்கள். சிந்திப்பவர்கள் மட்டுமே அவனை அறிகின்றார்கள். ஆனால், சிந்தனையால் அவனை அறிகின்றார்கள் என்பதல்ல. ஏனேனில், அறியாத ஒன்றை ஒருவன் எப்படிச் சிந்திக்க முடியும்?

இதையே ஒரு சூஃபி மகான் ’தேடல்’ (சுலூக்) என்பதை வைத்து இப்படிச் சொல்கிறார்: “தேடுவதால் இறைவனை அடைய முடியாது. எனினும் தேடுபவர்கள் மட்டுமே அவனை அடைகிறார்கள்.”

இதை விளக்க ஓர் உதாரணம் (மிஸால்) என் உள்ளத்தில் உதிக்கிறது:
“குழந்தை அழுகின்றது. தாய் விரைந்து சென்று அதற்குப் பால் ஊட்டுகிறாள். அதன் வயிறு நிறைகின்றது. அது நிம்மதி அடைகின்றது. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்பது முதுமொழி.”

பால் என்பது இறைஞானத்திற்குக் குறியீடாக நபிமொழி ஒன்றில் வந்துள்ளது. அப்படியே இந்த உதாரணத்திலும் காண்போம்.

அழுகையே பால் ஆகிவிடாது. சிந்தனையே இறைஞானம் ஆகிவிடாது.

கண்ணீர் பால் அல்ல. ஆனால் கண்ணீர் பாலுக்காக.
சிந்தனையே இறைஞானம் அல்ல. ஆனால் சிந்தனை இறைஞானத்திற்காக.

கண்ணீர் வெளியேறுவது பால் உள்ளே வரவேண்டும் என்பதற்காக.
சிந்தனை வெளியேற வேண்டும், இறைஞானம் உள்ளே வருவதற்காக.
கண்ணீரின் சுவை வேறு, பாலின் சுவை வேறு.
சிந்தனையின் சுவை வேறு, இறைஞானத்தின் சுவை வேறு.

கண்ணீர் துன்பம், பால் இன்பம்.
சிந்தனை துன்பம், இறைஞானம் இன்பம்.

திரவ வடிவத்தில் இருப்பதால் கண்ணீரும் பாலும் ஒன்று என்று சொல்ல முடியுமா?
வார்த்தை வடிவத்தில் இருப்பதால் சிந்தனையும் இறைஞானமும் ஒன்று என்று சொல்ல முடியுமா?

அழுகையே பசியை நீக்கி விடாது. பால் புகட்டப்பட வேண்டும்.
ஆன்மாவின் பசியை சிந்தனை திருப்தி செய்யாது. இறைஞானம் புகட்டப்பட வேண்டும்.

“காட்சியைப் பற்றிய உன் சிந்தனையே
திரையை நெய்து கொண்டிருக்கிறது
காதலின் தீயை
அதில் பற்ற வைத்துப் பார்”