Saturday, January 26, 2013

ஒரு ரகசிய நூல்



ஒரு மாத காலம் கடந்துவிட்டது இந்தக் கட்டுரையை எழுத வேண்டும் என்று திட்டமிட்டு. விடுமுறைக்காகக் கம்பம் சென்று சேர்ந்தபோது இம்முறை அங்கே தோழர் ஃகாலித் இருந்தார். (யார் இந்தத் தோழர் ஃகாலித் என்று கட்டுரையின் முடிவில் சொல்கிறேன்.) இரண்டே நாட்கள் அவகாசத்தில் அவரைச் சந்திக்க வேண்டிய நிலை. அவரிடமிருந்த ஒரு நூல் என் கண்ணையும் கருத்தையும் கவர வேலைகளை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு அந்த நூலை அவரிடம் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருந்ததால் நூறு பக்கங்கள் வரை படித்துவிட்டுக் கொடுத்துவிட்டேன். அவரும் அபுதாபிக்குப் புறப்பட்டுவிட்டார்.

“THE SECRET HISTORY OF THE WORLD” என்னும் அந்த நூலை மார்க் பூத் என்பவர் எழுதியிருக்கிறார். இதே நூல் ” THE SECRET HISTORY OF THE WORLD : As Laid Down By The Secret Socities” என்று அவருடைய புனைபெயரான ஜொனாதன் ப்ளாக் என்னும் பெயரில் வெளிவந்திருக்கிறது. லண்டனில் வசிக்கும் மார்க் பூத், ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள ஓரியல் கல்லூரியில் தத்துவமும் இறையியலும் சொல்லித்தந்தவர். இப்போது நூற்பதிப்புப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இதுவரை நமக்குச் சொல்லப்பட்டு வரும் வரலாறு தவறான மனிதர்களால் எழுதப்பட்ட பிரதியாக இருக்கும் பட்சத்தில் ’உண்மையான’ வரலாறு என்பது என்ன? என்னும் ஆர்வத் தேடலில் இந்த நூலாக்கம் தொடங்கியதாகச் சொல்கிறார் பூத். சமயங்களுக்குள்ளாகவே இயங்கிவரும் ரகசிய இயக்கங்கள் எவ்வாறு உலக வரலாற்றுப் போக்கை வடிவமைத்தன என்று சொல்வது அவரின் நோக்கமாக இருக்கிறது. இத்ரீஸ் ஷா எழுதிய THE SUFIS என்னும் நூலின் ஜானரில் இது அமையும்போல் உள்ளுக்குள் ஒரு குரல் கேட்கவே ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினேன். டாவின்சி கோட் நாவலின் அசுர வெற்றிக்குப் பிறகும், டான் ப்ரவ்னின் இதர நாவல்களான ’ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்’ ’தி லாஸ்ட் கீ’ ஆகியவற்றிற்குப் பிறகும் ப்ரயார் டி சியான்ஸ், ஃப்ரீமேசன்ஸ், தி நைட்ஸ் டெம்ப்ளர்ஸ், இல்லுமினாட்டி, ரோஸிக்ரூசியன்ஸ் போன்ற ரகசிய இயக்கங்கள் பற்றிய ஆர்வம் உலகில் – மக்களின் பொது நினைவில் – குபீரென்று எகிரியிருப்பதாக இந்நூலின் முன்னுரையில் சொல்கிறார் பூத்.

படித்த வரையில் நூலில் இருந்து சில புள்ளிகளைக் குறித்து வைத்துக் கொண்டேன். அந்தப் புள்ளிகளுக்கு மார்க் பூத் சொல்லாத விளக்கங்கள் என் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்தன. சிந்தனையைத் தூண்டுமொரு கருத்துரையாடலாக இந்நூலின் வாசிப்பை அது ஆக்கியது.

முதல் அத்தியாயத்தின் தலைப்பு: “In The Beginning God Peers at His Reflection. The Looking-Glass Universe”. பிரபஞ்சம் இறைவன் தன்னைத்தானே கண்டுகொள்ளுமொரு கண்ணாடி என்னுமிந்தக் கருத்து சூஃபி இலக்கியங்களில் காணக்கிடைக்கும் ஒன்றுதான். “நான் மறைந்த பொக்கிஷமாக இருந்தேன். அறியப்பட விரும்பினேன். படைப்புக்களைப் படைத்தேன்” என்னும் ஹதீஸ் குத்ஸியை விளக்க சூஃபிகள் கையாளும் குறியீடுகளில் ஒன்று முகம் பார்க்கும் கண்ணாடி. (அடடே, மூன்று தினங்களுக்கு முன்புதான் வீரவநல்லூர் பீர் முஹய்யிதீன் புலவரின் ‘மெய்ஞ்ஞானச் சிந்து’ பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பாடலில் ‘தர்ப்பணத்துள்ளும் சலத்துள்ளும் ஒளிபோல’ என்று நறுக்காக உவமை சொல்லியிருந்தார். தர்ப்பணம் என்றால் Looking-Glass!)

முதல் அத்தியாயத்தின் ஆரம்பமே மிகவும் கவித்துவமான ஒரு வரியுடன் தொடங்கியது: ONCE UPON A TIME THERE WAS NO TIME AT ALL. (முன்னொரு காலத்தில், காலம் என்பதே இல்லாதிருந்தது!)

இதனைத் தொடர்ந்து மார்க் பூத் எழுதுகிறார்: “காலம் என்பது ’வெளி’யில் உள்ள பொருட்களின் அசைவிற்கான அளவீடே அன்றி வேறில்லை. ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் மெய்ஞ்ஞானிக்கும் கிறுக்கனுக்கும் தெரிந்ததுதான், ஆதியில் ’வெளி’ (space)-ல் எப்பொருளும் இல்லை.”

பொறி#1:  ஆதியில் வெளி என்பதுமே இல்லை! இது சூஃபிகளின் கொள்கை. ஏனெனில் வெளி என்பதும் காலம் போலவே ஒரு படைப்புத்தான். ஆதியில் படைப்புக்கள் எதுவுமே இல்லை, பரம்பொருள் மட்டுமே இருந்தது என்பதுதான் சூஃபிகளின் புரிதல். “அல்லாஹ் இருந்தான். அவனுடன் எப்பொருளும் ஆகியிருக்கவில்லை” (கானல்லாஹ வலம் யகுன் மஅஹு ஷைஅன்) என்கிறார்கள் நபிகள் நாயகம் (நூல்: புகாரி ஷரீஃப்).

பொறி#2: பூத்தின் இந்தக் கருத்து குறிப்பிடுவது தொடர்நிலைக் காலம் (Serial Time) பற்றி. அதாவது இறந்தகாலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்னும் தொடர்நிலையும் மணி நிமிடம் நொடி மைக்ரோ நொடி, நேனோ நொடி என்று பகுக்கக்கூடிய நிலைகளும் கொண்டது. இதனை அரபியில் ’ஸமான்’ என்று சொல்வர். படைக்கப்பட்ட காலம் என்பது அதுதான். ஆனால் ஆதியில் அதுவும் இல்லாதிருந்த நிலையை ஆன்மிகம் Timelessness என்றும் Eternity என்றும் சொல்வர். இதனை அரபியில் கிதம் (பூர்வீகம்) என்றும் தஹ்ரு என்றும் சொல்வர். திருக்குர்ஆனின் 76-வது அத்தியாயத்தின் தலைப்பு ’தஹ்ரு’ ஆகும். (இதனைத் தமிழில் ”காலம்” என்றே மொழிபெயர்க்கிறார்கள். ஆங்கிலத்தில் Time என்று கேப்பிட்டல் ’டீ’யுடன் எழுதி வேறுபடுத்துகிறார்கள். எனினும் காலாதீதம் என்று புரிந்துகொள்வதே சரி.) இந்த அத்தியாயத்திற்கு இன்னொரு தலைப்புமுண்டு: அல்-இன்சான் (மனிதன். The Man). இதன் முதல் திருவசனம்: “திட்டமாக நினைத்தற்குரிய பொருளாக இல்லாதிருந்த நிலையொன்று காலத்திலிருந்து மனிதன் மீது இருக்கவில்லையா?”

தஹ்ரு என்னும் காலாதீதத்திற்குள் ’காட்டப்படும்’ நிலைகளாகவே படைக்கப்பட்ட தொடர்நிலைக் காலத்தைப் பார்க்க முடியும். தஹ்ரு என்பது தொடர்நிலைக் காலம் அல்ல என்பதற்கும் ஸமான் என்னும் தொடர்நிலைக் காலம் அதனுட்பட்ட ஒன்று என்பதற்கும் பின்வரும் ஹதீஸ் குத்ஸி (இறைவாக்கு) சான்று:
“அல்லாஹ் சொன்னான்: ‘ஆதமின் மகன் காலத்தைத் திட்டுகிறான். நானே காலம். இரவும் பகலும் என் கையில்’” (”காலல்லாஹு யசுப்பு பனூ ஆதமத் தஹ்ர, வ அனத் தஹ்ரு, பியதில் லைலு வந்நஹாரு” நூல்கள்: புகாரி, முஸ்லிம்).

மேற்காட்டிய கருத்தைத் தொடர்ந்து மார்க் பூத் எழுதுகிறார்: “உதாரணமாக, ஓர் ஆண்டு என்பது சூரியனை பூமி ஒருமுறை சுற்றிவரும் காலம்; ஒரு நாள் என்பது பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்ளும் கால அளவு. ஆரம்பத்தில் சூரியனோ பூமியோ இல்லை என்பதால் உலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டது என்று பைபிளின் ஆசிரியர்கள் எழுதியது நாள் என்பதன் இப்போதைய கணக்கில் அல்ல.

பருப்பொருளும் வெளியும் காலமும் இல்லாதிருந்த நிலையையும் தாண்டி இவை அனைத்தும் உண்டாகும் வண்ணம் அப்போது ஏதேனும் நடந்திருக்க வேண்டும். வேறு வகையில் சொல்வதெனில் எதுவும் இல்லாதிருந்த போது எதாவது நடந்திருக்க வேண்டும்.
அந்த ஏதோவொன்று நடந்த போது எப்பொருளும் இல்லை ஆதலால் அந்த நிகழ்வு இப்போது நாம் கண்டுகொண்டிருக்கும் நிகழ்வுகளிலிருந்து மாறுபட்ட தன்மையில், இப்போதுள்ள பௌதிக விதிகளுக்கு உட்படாததாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

அந்த நிகழ்வு ஒரு பௌதிக நிகழ்வாக இல்லாது ஒருவகையான மனோ நிகழ்வாக இருந்திருக்கும் என்று சொல்வது சாலப் பொருத்தம் அல்லவா?

மனோ நிகழ்வுகள் பௌதிக விளைவுகளை உண்டாக்குவது என்னும் கருத்து முதலில் உங்களுக்கு விந்தையாக இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட நிகழ்வுகள் அன்றாடம் நம்மைச் சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன.”

இது கருத்துமுதல்வாதக் கோட்பாட்டினை முன்வைக்கும் சமயமரபுகள் அனைத்திற்கும் உடன்பாடான கருத்துதான். பிரபஞ்சம் முழுமையும் இறைவனின் ஞானத்தில் இருக்கின்றது என்பதான பார்வை சூஃபித்துவத்தில் அடிப்படையான ஒன்று.

இந்நூலில் சமயவாதிகள் சொல்லி வந்திருக்கும் கோட்பாடுகளை எல்லாம் கவிழ்த்துப் பார்க்கும் வேலையைச் செய்கிறார் பூத். உதாரணமாக, பொருள்முதல்வாதக் கொள்கை கொண்டுள்ள விஞ்ஞானிகள் கடவுட் கோட்பாடு என்பது சிறுபிள்ளைகளின் கற்பனை போன்றதே என்றும், மனிதனைப் போலவே இறைவனைப் பார்க்கும் ஒரு பிழை (Anthropomorphic Fallacy) என்றும் சொல்கின்றனர். ”கடவுள் இருக்கிறார் என்பதை ஒரு வாதத்துக்கு ஒப்புக்கொண்டாலும் அவர் ஏன் நம்மைப் போல் இருக்க வேண்டும்? அவரின் மனம் ஏன் நம்முடையதைப் போல் இருக்கிறது?” என்று அவர்கள் கேட்பதை இவ்வாறு அணுகுகிறார் மார்க் பூத்: “அவர்கள் சொல்வது சரிதான். இதற்கு எந்தக் காரணமும் இல்லைதான்... விஷயம் தலைகீழாக இருக்கும்வரை. அதாவது, கடவுளின் மனம் நம்முடைய மனத்தைப் போல் இருப்பதற்கு ஒரே காரணம் நம்முடைய மனம் அவருடையதைப் போல் படைக்கப்பட்டிருப்பதுதான் – இறைவன் நம்மை அவனின் தோற்றத்தில் படைத்திருக்கிறான்.”

இந்தப் புள்ளி மனிதனுக்கும் இறைவனுக்குமான விசேஷ உறவைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. மனிதனை இறைவன் தன் தோற்றத்தில் படைத்தான் என்னும் கருத்து பைபிளை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ளது. வெளிப்படையாக நோக்கும்போது இக்கருத்து இறைவனுக்கு உருவமிருக்கிறது என்று அனுமானிப்பதாக உள்ளது. அப்படித்தான் காலகாலமாகப் பெரும்பான்மை மக்கள் இதனை விளங்கி வந்திருக்கிறார்கள். பைபிளில் பல இடங்களில் இந்தக் கருத்து இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டில் காணலாகும் வசனங்கள்:

”So God created man in his own image, in the image of God created he him; male and female created he them” (ஜெனெசிஸ் 1:27, கிங் ஜேம்ஸ் பிரதி. வெவ்வேறு பைபிள் பிரதிகளில் சொற்களின் வேறுபாடுகள் காணப்படுகின்றன.)

இவ்வசனம் இரண்டு செயல்பாடுகளைச் சொல்கிறது என்று பைபிள் விரிவுரையாளர்கள் கருதுகின்றனர். இறைவன் மனிதனைத் தன் சுயரூபத்தில் படைத்தான் என்பது முதல் செயல்பாடு (primary act). இறைவன் மனிதர்களை ஆணும் பெண்ணுமாய்ப் படைத்தான் என்பது இரண்டாம் செயல்பாடு (secondary act). இறைவன் முதலில் ஆதாம் என்னும் ஆணைப் படைத்துப் பின் ஆணின் விலா எலும்பை எடுத்து அதிலிருந்து ஏவாள் என்னும் பெண்ணைப் படைத்தான் என்னும் கருத்திற்கு இவ்வசனம் தெளிவான சான்றாக இருப்பதாகக் கிறித்துவ அறிஞர்கள் சொல்கின்றனர். ஏனெனில், இறைவன் முதலில் ஆண்-பெண் கலவையான ஒட்டிய இரண்டு உடல்களைப் படைத்துப் பின்னர் ஆண் என்றும் பெண் என்றும் இரண்டாக அரிந்துவிட்டான் என்று யூதர்கள் சொல்கின்றனர். அதனை இவ்வசனம் மறுப்பதாக அமைகிறது.

எனினும் “இமேஜ்” (உருவம்) என்று இதில் சொல்லப்பட்டுள்ளதன் விளக்கம் இன்னமும் பூடகமாகவே இருக்கிறது. பின்வரும் பைபிள் வசனங்களைக் கவனிப்போம்:
”For a man indeed ought not to cover his head, forasmuch as he is the image and glory of God: but the woman is the glory of the man.” (1 Corinthians 11:7)
“And that ye put on the new man, which after God is created in righteousness and true holiness.” (Ephesians 4:24)
“And have put on the new man, which is renewed in knowledge after the image of him that created him.” ( Colossians 3:10)
“This is the book of the generations of Adam. In the day that God created man, in the likeness of God made he him.” (Genesis 5:1)
“Whoso sheddeth man's blood, by man shall his blood be shed: for in the image of God made he man.” (Genesis 9:6)
“For ask now of the days that are past, which were before thee, since the day that God created man upon the earth, and ask from the one side of heaven unto the other, whether there hath been any such thing as this great thing is, or hath been heard like it?” (Deuteronomy 4:32)
“Lo, this only have I found, that God hath made man upright; but they have sought out many inventions.” (Ecclesiastes 7:29)

இவ்வசனங்களில் இருந்து பெறப்படும் கருத்துக்கள்: இறைவனின் தோற்றமும் மகிமையுமாக மனிதன் (ஆண்) இருக்கிறான். நீதியிலும் மகிமையிலும் மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான். இறைவனின் ஞானத்தில் விசேஷமானவனாகப் படைக்கப்பட்டுள்ளான். மனிதனைப் படைத்ததைப் போன்ற மகத்தான நிகழ்வு வேறு எதுவும் இல்லை.

மேலே கடைசியாகக் காட்டப்பட்டுள்ள வசனம் சொல்லும் செய்தி மிக முக்கியமானது என்று படுகிறது. மனிதனை நேராக நிற்பவனாக இறைவன் படைத்திருக்கிறான். ஆனால் மனிதர்கள் இவ்விஷயத்தில் பல புதிய கருத்துக்களை உண்டாக்கி விட்டார்கள் என்கிறது அது. இறைவனுக்கு உருவம் கற்பித்ததும் அத்தகைய ஒரு பிறழ்வின் விளைவு என்றே கருத வேண்டும்.

”in the likeness of God” – இறைவனின் மாதிரியில் மனிதன் படைக்கப்பட்டான் என்று சொல்வதை நேரடியாகப் பொருள் கொண்டால் அதை இஸ்லாம் திட்டவட்டமாக மறுப்பதைக் காணலாம். திருக்குர்ஆனில் இறைவனுக்குள்ள பெயர்களில் அவனின் படைப்பாற்றல் தொடர்பான பின்வரும் பெயர்களின் அர்த்தங்களைக் கவனிக்கவும்:
அல்-ஃகாலிக்: படைப்பாளன். இல்லாமையில் இருந்து படைப்புக்களை உள்ளமையில் கொண்டு வருபவன்.

அல்-பாரிஉ: படைப்புக்களை மாற்றி அமைக்கும் வல்லமை உடையவன்.
அல்-முஸவ்விர்: படைப்புக்களுக்குத் தோற்றங்களையும் அமைப்புக்களையும் வழங்குபவன்.
அல்-முப்திஉ: தோற்றுவிப்பவன். படைப்புக்களை ஆரம்பித்து வைப்பவன்.
அல்-ஃபாத்திர்: இயற்கையமைப்பில் ஆக்கிவைப்பவன்.
அல்-பதீஉ: படைப்புக்களை அவற்றுக்கு முன்மாதிரி எதுவுமின்றிப் படைத்தவன்.

இப்பெயர்களில் கடைசியாகச் சொல்லப்பட்டுள்ள திருப்பெயர் மிகவும் முக்கியமானது. மனிதன் உட்பட எந்தப் படைப்புக்கும் இறைவன் முன்மாதிரி எதுவும் இல்லாமலேயே படைத்திருக்கிறான் என்று இஸ்லாம் சொல்கிறது. மேலும் “அவனைப் போல் எதுவும் இல்லை” (லைச கமித்லிஹி ஷைஉன் 42:11) என்னும் திருவசனக் கருத்து அவனைப்போல் எதுவும் இல்லை என்பதை வலியுறுத்துகிறது. எனவேதான் இறைவனைப் படைப்புக்களைவிட்டும் பிரித்து அறிவதில் மிஸ்லிய்யத் முமாஸிலத் மற்றும் முஷாபஹத் (போலாதல் பங்காதல் ஒப்பாதல்) என்னும் மூன்று நிலைகளை விட்டும் இறைவன் பரிசுத்தமானவன் என்று சூஃபிகள் விளக்குகின்றனர்.

“Lo, this only have I found, that God hath made man upright; but they have sought out many inventions.” (Ecclesiastes 7:29) என்னும் பைபிள் வசனத்தில் உள்ள நேர்நிலை (upright) என்னும் சொல் மிக முக்கியமானதாகப் படுகிறது. குரங்காக இருந்த மனிதன் மெள்ள மெள்ள எழுந்து நடக்கத் தொடங்கி இரண்டு கால்களால் நிற்க ஆரம்பித்தான் என்று சொல்லும் டார்வினிசம் நவீன மனிதனை “ஹோமோ எரக்டஸ்” (நேராக நிற்பவன்) என்று பெயரிட்டு அழைக்கிறது. ஆனால், இறைவன் ஆதியில் மனிதனை படைத்த நிலையே அதுதான் என்று பைபிள் கூறுகிறது. திருக்குர்ஆனின் கருத்தும் அதுதான். ஆனால் பிற விஷயங்களை மனிதர்கள் புதிதாகச் சேர்த்துவிட்டார்கள் என்று பைபிளே குறிப்பிடுவது கவனிக்கவேண்டிய ஒன்று! பைபிளின் இந்த வாசகத்துக்கு திருக்குர்ஆனில் உள்ள வசனமொன்றின் கருத்து ஒத்துப்போகிறது:
“நிச்சயமாக நாம் மனிதனை அழகிய அமைப்பில் படைத்தோம்” (லகத் ஃகலக்னல் இன்சான ஃபீ அஹ்சனித் தக்வீம் 95:4)

இவ்வசனத்தில் உள்ள தக்வீம் என்னும் சொல்லைத் தமிழில் ’அமைப்பு’ என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் stature என்றே பெரும்பான்மை மொழிபெயர்ப்பாளர்கள் தந்திருக்கிறார்கள். எனினும் proportion என்னும் அர்த்தமும் இச்சொல்லுக்கு வழங்கப்படுகிறது. உடலமைப்பைக் கவனித்து இச்சொல் கூறப்படும் எனில் மனிதனின் உடலமைப்பில் proportion-இல் என்ன விஷேசத் தன்மை இருக்கிறது என்று ஆராய வேண்டும். மிகச் சுருக்கமாக ஒன்றைச் சொல்கிறேன். பிரபஞ்சமே மனித ரூபத்தில், உடலமைப்பில் பிரதிபலித்துக் கிடக்கிறது என்று ஒரு பார்வை உண்டு. மேலும் உலகெங்கும் காணப்படும் அற்புத விகிதமான (golden proportion, golden mean) phi – ஃபை எனப்ப்படும் 1.618 மனித உடலமைப்பில் ஒவ்வொரு அங்க அமைப்பிலும் காணப்படுகிறது என்பதும் அதுவே இயற்கையில் உள்ள பல பொருட்களில் அமைந்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது.

தக்வீம் என்பது மனிதனின் ஆன்மிக அமைப்பைக் கவனித்துச் சொல்லப்பட்டதாக இருக்கும் என்று நோக்கினால் அதன் அர்த்தகனம் இன்னும் அதிகமாகிறது. இறைவனின் சுயத்தின் தெய்வீகப் பண்புகளான அறிவு, ஜீவன், சக்தி, நாட்டம், கேள்வி, பார்வை மற்றும் பேச்சு ஆகியன மனிதனில் பிரதிபலிக்கும் அளவு வேறு எந்தப் படைப்பிலும் பிரதிபலிக்கவில்லை. அவற்றை உச்சகட்டமாகப் பிரதிபலிக்கும் வண்ணம் மனிதனை இறைவன் படைத்திருக்கிறான். எனவே மனிதன் ஒருவகையில் இறைவனைக் காட்டும் நேர்த்தியான கண்ணாடியாக இருக்கிறான் என்று சூஃபிகள் இதற்கு விளக்கம் தருகின்றனர்.

மேலே நாம் கண்ட பைபிள் வாசகமான “God created man in his own image” (ஜெனெசிஸ் 1:27) என்பதன் கருத்து நபி (ஸல்) அவர்கள் அருளியுள்ள ஹதீஸ் ஒன்றிலும் காணக்கிடைக்கிறது. அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்த அந்த ஹதீஸில் “நிச்சயமாக அல்லாஹ் ஆதமை அவனின் உருவத்தில் படைத்தான்” (இன்னல்லாஹ ஃகலக ஆதம அலா ஸூரத்திஹி, நூல்:முஸ்லிம் ஷரீஃப், அத்தியாயம் 40, ஹதீஸ் எண்: 6809).
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வாதாடும் கூட்டத்தினர் தங்களின் புரிதலுக்கு ஆதாரமாக இந்தவொரு ஹதீசையும் காட்டுகின்றனர்.

இந்த நபிமொழியின் மூலத்தில் வரும் ஸூரத்திஹி (அவனின் உருவத்தில்) என்பதில் உள்ள ’ஹி’ ஆண்பால் ஒருமை விகுதி அல்லாஹ்வின் பக்கமும் சேர்க்கப்பட முடியும், ஆதமின் பக்கமும் சேர்க்கப்பட முடியும். ஆதமின் பக்கம் அதனை மீட்டும் போது “அல்லாஹ் ஆதமை ஆதமின் உருவத்தில் படைத்தான்” என்று பொருள் தரும். இந்த அர்த்தத்தை “நிச்சயமாக மனிதனை நாம் அழகிய அமைப்பில் படைத்தோம்” (95:4) என்னும் திருவசனத்துடன் பொருத்திக் காண ஏதுவாகிறது. இவ்வாறு மார்க்க அறிஞர்களில் ஒரு சாரார் அர்த்தம் கொடுக்கின்றனர்.

ஆனால் சூஃபிகள், குறிப்பாக இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் பக்கம் மீட்டி “அல்லாஹ் ஆதமைத் தன் தோற்றத்தில் படைத்தான்” என்று பொருள் கொள்கின்றனர். அந்நிலையில் “அவனின் தோற்றம்” (ஸூரத்திஹி) என்பதன் பொருள் என்ன என்று ஆராய வேண்டிய நிலை உண்டாகிறது. அல்லாஹ்வின் தெய்வீகப் பண்புகள் நிறைவாகப் பிரதிபலிக்கும் நிலையே அது என்னும் விளக்கத்தை அவர்கள் தருகின்றனர்.
“ஸூரத்திஹி” – ’அவனின் உருவம்’ என்பதில் உள்ள அவன் (ஹி) என்னும் விகுதியை அல்லாஹ் மற்றும் ஆதம் ஆகிய இருவரின் பக்கமும் சார்த்திப் பொருள் கொண்ட போதும் இறைவனுக்கு உருவம் இல்லை என்பது பாதிக்காத முறையில் அந்தப் பொருள் அமைய முடியும் என்று காட்டினார் ஒருவர்.

(தொடரும்) 

Sunday, January 13, 2013

சும்மா இரு



”சும்மா இருப்பதே சுகம்” - மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஆன்மிக வாசகங்களுள் ஒன்று.

சோம்பேறிகளின் பொன்மொழி என்றும் திண்ணைத் தீவிட்டிகளின் சித்தாந்தம் என்றும் உழைக்காமல் வயிறு வளர்க்க நினைக்கும் சோற்றுத் தடியர்கள் ஆன்மிகம் என்னும் போர்வையில் கண்டுபிடித்து வைத்த குறுக்கு வழிகளின் இதுவும் ஒன்று என்றும் விமரிசனம் செய்யப்பட்ட வாசகம் இது.

உண்மையில் இந்த வாசகம் சோம்பேறிகளின் அரிப்புக்குச் சொறிந்து கொடுத்து சொகுசு நல்கும் நோக்கில் கூறப்பட்ட ஒன்றல்ல.

இது சோம்பேறி குரு ஒருவர் சோம்பேறிச் சீடனுக்கு உபதேசித்த ஒன்றல்ல.
இவ்வாசகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேறு கோணத்தில் இருந்து அணுகுவோம். “சும்மா இரு” என்று சொல்வது “ஓய்வு கொள்” என்று சொல்வது போன்ற அறிவுரை ஆகும்.
யார் ஓய்வெடுக்க முடியும்? களைப்பாக இருப்பவர்தான். களைப்பு எவருக்கு வரவில்லையோ அவர் ஓய்வெடுப்பது போல் நடிக்கலாமே அல்லாது உண்மையில் ஓய்வெடுக்க முடியாது.

களைப்படைய வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? உழைக்க வேண்டும். காலை முதல் மாலை வரை வியர்வை பிழியப் பிழிய உழைக்கும் உழைப்பாளியே இரவில் ஆழ்ந்த ஓய்வுடன் உறங்குவான். ”துஞ்சுவது போலும் சாக்காடு” என்கிறார் வள்ளுவர். அவன் செத்தது போல் உறங்குவான்.

எனவே உழைப்பு இல்லை எனில் களைப்பு இல்லை. களைப்பு இல்லை எனில் ஓய்வு இல்லை. ஆதலால், ”ஓய்வெடு” என்று சொல்வது சோம்பேறியைப் பார்த்துச் சொல்லப்பட்டதல்ல, உழைப்பவனைப் பார்த்துச் சொல்லப்பட்டது. உழைக்காத சோம்பேறிப் பயல்கள் அந்த வாசகத்தைப் பின்பற்றுவதற்கு எடுத்துக் கொண்டால் அது அந்த அறிவுரையைச் சொன்னவரின் குற்றம் கிடையாது.

அதுபோல், “சும்மா இரு” என்பது சோம்பேறியைப் பார்த்துச் சொல்லப்பட்ட வாசகம் அல்ல. அது மூளையைக் கசக்கிச் சிந்திப்பவனைப் பார்த்துச் சொல்லப்பட்டது. சிந்திக்கவே மறுக்கின்ற மூளைச் சோம்பேறிகள் இதனை மேற்கோள்காட்டினால் அதற்கு ஆன்மிகம் என்ன பண்ணும்?

இந்தச் சித்த வாக்கினை முழுமையாகச் சொன்னால் “சும்மா இரு சொல் அற” என்றாகும். என்வே மனத்தை சொற்கள் அற்ற நிலையில் வைப்பதையே இது குறிக்கிறது. எனவே இது சிந்தனை செய்வதில் உச்ச நிலைக்குச் செல்லும் சீடனை –சாதகனை நோக்கிச் சொல்லப்பட்டது என்பது தெளிவு.

மனதின் இயற்கை நிலை என்ன? சிந்தனைகளை உற்பத்தி செய்வது. மனம் என்பது எண்ணங்களின் அமுத சுரபியாக இருக்கிறது. சராசரி மனிதனின் மனத்தில் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ அறுபதாயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன என்று உளவியல் கூறுகிறது. அதில் ஒரு சதவிகிதம்தான் அவனுடைய அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதாக இருக்கிறதாம். 99% எண்ணங்கள் மனோசக்தியை விரயம் செய்வதாகவே முடிகின்றன. இந்த விரயத்தைத் தடுத்து உள்முகமாக ஆற்றலைத் திரட்டச் செய்யும் விரதம்தான் தியானம் என்று சொல்கிறோம்.

தேவையற்ற எண்ணங்கள் மனத்தில் உற்பத்தி ஆவதைத் தடுத்து நிறுத்துவதையே பதஞ்சலி முனிவர் யோகம் என்கிறார்: “யோகம் சித்த வ்ருத்தி நிரோத்த”.

நவீன குருமார்களின் முன்னோடிகள் என்று இந்தியாவிலிருந்து உதித்த முக்கியமான இருவர் – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும்கூட தியானம் என்பதை சிந்தனை இல்லாத மனநிலை என்றே முன்வைத்தார்கள். எண்ணம் என்பது இல்லாத நிலையில் மனம் என்பதே இல்லை என்பதால் தியானம் என்பது மனமற்ற நிலை என்று ஓஷோ விளக்கினார்.

நடக்கின்றபோது நமக்குக் கால்களின் இயக்கம் அவசியமாகிறது. ஆனால் சேர வேண்டிய இடத்தை அடைந்து நாற்காலியில் அமர்ந்த பின்னரும் கால்கள் அசைந்துகொண்டே இருந்தால், அதுவும் உங்கள் கட்டுப்பாட்டை மீறி!, நீங்கள் இயல்பான நிலையில் இல்லை என்று பொருள். மனம் அதேபோல் தன்னிச்சையாக சிந்தித்துக் கொண்டே இருந்தால் அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம். இந்த நிலையில் மனம் ஒன்றாக நிற்காது. தசாவதாரம் என்ன, சதாவதாரம் எடுத்துவிடும். இந்த நிலையைத்தான் ஜார்ஜ் குருஜீஃப் சொன்னார்: Man is polypsychic (மனிதன் பலமனவியல் கொண்டவன்). இன்னொரு உதாரணமும் சொன்னார்: எஜமான் இல்லாத வீட்டில் நூறு வேலைக்காரர்கள் ஒவ்வொருவரும் தானே எஜமான் என்று சொல்லிக்கொண்டு அதிகாரம் செய்வது போல் இருக்கிறது சராசரி மனிதனின் மனம்.

உலக வாழ்வும் தியானமும் எப்படி சமனமாவது என்னும் கேள்விக்கு ஒரு ஜென் கதை அற்புதமாக விடை சொல்கிறது:

“ஜோஷு என்னும் ஜென் குருவிடம் புதிய சீடன் ஒருவன் கேட்டான், ‘நான் இப்போதுதான் மடத்தில் சேர்ந்திருக்கிறேன். எனக்கு தியானம் கற்றுத் தாருங்கள்’
‘நீ உன் அரிசிக் கஞ்சியைக் குடித்துவிட்டாயா?’ என்று கேட்டார் ஜோஷு.
’ஆமாம், குடித்துவிட்டேன்’ என்றான் அவன்.
’கிண்ணத்தைக் கழுவிக் கவிழ்த்து வை’ என்று சொன்னார் ஜோஷு. இதைக் கேட்ட கணத்தில் அந்தச் சீடன் ஞானம் அடைந்தான்.”

(ஜென் கதைகளில் இப்படித்தான் சீடர்கள் சட்டென்று ஞானம் அடைந்தார்கள் என்று சொல்லப்படும். இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஒரு புரிதல் உங்கள் வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிடலாம் அல்லவா? அதைத்தான் இங்கே ஞானம் என்று சொல்லப்படுவதாக விளங்கிக்கொள்ளலாம். ஞானம் என்பது சட்டென்று நிகழ்வது என்பதாகவே ஜென் நெறி சொல்கிறது. ஜென் தத்துவத்தை விளக்கும் ஓஷோவின் ஒரு நூலின் பெயர் (The Sudden Clash of Thunder”)

தியானத்தன்மை நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதை அனைத்து ஆன்மிக நெறிகளும் அழுத்திச் சொல்கின்றன. இல்லையேல் ஆன்மிகம் என்பது வாழ்க்கைக்கு எதிரானது என்றே சொல்ல வேண்டியிருக்கும்.
ஆனால், ஒரு வேலையைச் செய்து முடித்த பின்னும் மனம் அதை முடிக்காமல் தொடர்ந்து சிந்தனையில் அதைத் தொடரும்போது மனதின் நலம் பாதிக்கப்படுகிறது. “கஞ்சியைக் குடித்தபின் கிண்ணத்தைக் கழுவிக் கவிழ்த்து வை” என்று ஜோஷு சொல்வது ஒரு வேலையை முடித்துவிட்டால் மனத்தை அதன் சிந்தனைகளை விட்டும் சுத்தமாக்கி வை என்பதைத்தான்.

அவ்வாறு உலக வேலைகளை விட்டும் திரும்பிய நிலையில் உள்முகமாக கவனத்தை நிறுத்துவதும் நம்முடன் நீங்காமல் நம்மைத் தாங்கி நிற்கும் பரம்பொருளுடன் லயித்திருப்பதும் தியானத்தின் தூய நிலையாகிறது. இந்த விஷயம் திருக்குர்ஆனில் பின்வரும் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது:
“எனவே நீர் ஓய்ந்ததும் முயல்வீராக
மேலும் உம் இறைவனிடம் சார்ந்துவிடுவீராக”
(94:7,8)

”சும்மா இருப்பது” என்று சொன்னால் வேலைகள் ஏதுமின்றிச் சோம்பேறியாக காலம் கடத்துவது என்று புரிந்து வைத்திருப்பது எவ்வளவு தூரம் தவறானது என்பதை இந்நேரம் நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஓய்வு என்பது மிக அற்புதமானதொரு வாய்ப்பு. அது இறைவனின் பக்கம் சார்ந்துகொள்வதற்காக நமக்கு அளிக்கப்படும் ஒரு வரம் என்னும் கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள், ஓய்வு எத்தனைப் பெரிய விஷயம் என்பது புரியும். ஆனால் நாம் உழைப்பு என்பதை எப்படி வீணாக்கிக் கொண்டிருக்கிறோமோ அதைவிட அதிகமாகவே ஓய்வை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

”சும்மா இருப்பது” என்பது பற்றி இன்னொரு குறிப்பு. இந்தச் ’சும்மா’ என்னும் சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று அகராதியில் காணாத ஒன்றைக் கேட்டு தமிழாசிரியரை ‘ஓட்ட’ வேண்டும் என்னும் நோக்கில் சிலர் அகராதித்தனமாகக் கேட்பது உண்டு. அவர்களுக்கு நான் சொல்லும் பதில் ஒன்றுண்டு. அது எத்தனை தூரம் வேர்ச்சொல்லியல் – மொழியியல் ரீதியாகச் சரியானது என்று எனக்குத் தெரியாது, ஆனால் அந்தப் பதில் மிகவும் பொருத்தமானது. “சும்மா என்பது தமிழ் அல்ல. அது அரபி மொழிச் சொல். சும்மா / சும்மத் என்றால் செவிட்டுத்தனம் என்று பொருள். சும்மா இரு என்றால் உங்களை எதிர்வினை ஆற்றத் தூண்டும் பேச்சுக்களைக் கேட்டாலும்கூட எதிர்வினை ஆற்றாமல் இருப்பது. அதாவது ஏச்சுப் பேச்சுக்களைக் கேட்டும் கேளாதது போல் இருந்துவிடுவது. அதாவது பதில் பேசாமல் மௌனமாக இருப்பது என்று பொருள் வந்துவிடுகிறது. இதையே இன்னும் நீட்சி செய்து பார்த்தால் மனத்தில் ஒரு எண்ணம் வந்ததும் அதற்கு ஒரு தொடர்ச்சியைத் தரவேண்டும் என்னும் நமைச்சல் / தூண்டுதல் மனத்திற்கு வருகிறது. அதை வேண்டுமென்றே நிறுத்தி வைத்து மனத்தின் எண்ணம் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து பாருங்கள். எண்ணங்களின் உற்பத்தி கணிசமாகக் குறைந்து கொண்டே வந்து எண்ணமற்ற மௌன நிலை ஒருநாள் நிச்சயம் வாய்க்கும். அதன்பின் நாம் விரும்பிய போது எண்ணவும் விரும்பிய போது எண்ணமற்று இருக்கவும் கைக்கூடும்.

சும்மா இருப்பது என்பது அத்தனை எளிது அல்ல. ஏதோ ஒரு திரைப்படத்தில் வடிவேலு ’சும்மா இருக்கிறேன்’ என்று சொல்ல அதை ஒருவன் இளக்காரமாகப் பேசுவான். ஒரு நாள் முழுவதும் சும்மா இருக்க முடியுமா? என்று அவனிடம் பந்தயம் கட்டி அவனை ஒரு அரசமரத்தடியில் உட்கார வைத்துப் பாடாய்ப் படுத்துவானே, உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதுதான் எல்லோரிடமும் பொதுவாக இருக்கும் பார்வை, அதாவது சும்மா இருப்பது என்றால் வேலை செய்யாமல் இயங்காமல் இருப்பது என்பது.

இந்த நிலையிலிருந்து இன்னும் சற்றே ஆழமானது, சும்மா இருப்பது என்றால் பேசாமல் இருப்பது என்பது. இதையே பலர் மௌனமாக இருப்பது என்று சொல்லிக் கொள்கிறார்கள். ‘ஒரு நிமிட மௌன அஞ்சலி’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு எழுந்து பேசாமல் நிற்கும் காமெடி ஒன்று செய்கிறார்களே, அது இந்தப் புரிதலின் அடிப்படையில்தான்.

இன்னும் ஆழமான ஒரு பார்வை என்னவெனில், சிந்தனை இன்றி இருப்பது. மனமற்ற நிலை என்று சொல்லப்படுவது. இதுவே உண்மையில் மௌனம் என்பது. இந்த நிலையே தியானம் என்றும் சொல்லப்படுகிறது. வெறும் விழிப்புணர்வு மட்டும் இருக்கும் நிலை. அதாவது ஒளி / வெளிச்சம் மட்டும் இருக்கிறது. அது வெளிச்சமிட்டுக் காட்டும் ‘பொருள்’ எதுவுமில்லை. ஒளியை மட்டும் காணும் நிலை இது.

விண்ணேற்றம் சென்று வந்த நபிகள் நாயகத்திடம் அவர்களின் தோழர்கள் மிக ஆர்வமாக ஒரு கேள்வி கேட்டார்கள், ‘அல்லாஹ்வைக் கண்டீர்களா?” என்று. அதற்கு மிகவும் அருமையானதும் தத்துவ ரீதியாகப் பூடகமானதுமான (எனவே பலர் அவரவர் மதிநிலைக்கேற்ப இப்படியும் அப்படியும் அர்த்தம் கொண்டு கருத்து வேறுபாடுகளை உண்டாக்கிக்கொள்ள வாய்ப்பளிப்பதுமான) ஒரு பதிலை நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “ஒளியைக் கண்டேன்.”

இறைவன் ஒளிமயமானவன். ஒளி என்பது அவனின் திருப்பண்புகளில் ஒன்று. எனவே நபி(ஸல்) இறைவனின் சுயத்தைக் காணவில்லை அவனின் திருப்பண்பைத்தான் கண்டு வந்தார்கள் என்று ஒரு பார்வை இருக்கிறது.

இன்னும் ஆழமான ஓர் அர்த்தமும் தொனிக்கிறது. ஒளி (நூர்) என்பதற்கு இலக்கணம் என்னவெனில் எது தன்னையும் காட்டிக்கொண்டு தான் அல்லாத பிறவற்றையும் காட்டி நிற்கிறதோ அதுவே ஒளி. அவ்வகையில் இறைவன் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கிறான். அதாவது சிருஷ்டி முழுவதையும் அவனே காட்டி நிற்கிறான். அவனை அவனைக் கொண்டேதான் காணமுடியும். அவனல்லாத வற்றையும் அவனைக் கொண்டேதான் காணமுடியும். எனவே, நபி(ஸல்) அவர்கள் மிஃறாஜ் என்னும் விண்ணேற்றத்தில் எந்தப் படைப்பும் இடையீடு அற்ற நிலையில் இறைவனைக் கண்டார்கள், அதாவது இறைவனால் காட்டப்படும் பொருள் ஒன்றுமற்ற நிலையில் அவன் தன்னையே காட்டித் தரக் கண்டார்கள்!

மனமற்ற நிலை, சிந்தனை அற்ற நிலை, இறையொளியில் மனம் லயித்து நிற்கும் நிலை, இறைவன்பால் சார்ந்திருக்கும் நிலை இதுதான். எனினும், இறைவனில் இருக்கிறேன் என்னும் உணர்வு இருக்கத்தான் செய்யும். அந்த உணர்வே ஒருவகை சிந்தனைதான் என்று ஞானிகள் சொல்கின்றனர். “சிந்தனையே இல்லாத நிலையிலும் சிந்தனையே இல்லை என்னும் சிந்தனை மட்டும் இருக்கும்” என்று ஃபைஜி ஷாஹ் (ரஹ்) அவர்கள் சொல்வது என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

Wednesday, January 9, 2013

வெயில் விழும் முற்றம்


”பாண்டிய மன்னனின் டைனோசர்” கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் சொர்ணமித்ரன் பின்வருமாறு கேட்டிருந்தார்: “மனிதர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று எப்போதும் தியானத்தில் இருந்ததால் வெளிப்பட்ட ஆழ்மனப் படிவம்தான் திருக்குர்ஆன் ஆக இருக்குமோ?”
இதற்கு உடனடியாக இரண்டு வரிகளில் பதில் எழுதிவிடலாம் என்று எண்ணியபோது மேலும் மேலும் தொடர்ந்து வந்த சிந்தனைகள் ஒரு தனி பதிவே எழுதிவிடத் தூண்டியது. உடனடியாக என் மனத்தில் இதே மாதிரி இரண்டு பேர் ஏற்கனவே சொன்ன பளிச்சிட்டன.

அந்த இருவரில் ஒருவர் கவிஞர் பழமலய். என் மாணவன் (பழனிச்சாமி) ஒருவனின் கவிதை நூல் ஒன்றினை (’பல காதல் கடிதங்களும் ஒரு கல்யாணப் பத்திரிகையும்’) வெளியிடுவதற்காக எங்கள் கல்லூரிக்கு வந்திருந்தார். அப்போது மேடையில் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார், “நபிகள் நாயகம் ஹிரா என்னும் குகையில் தனிமையில் இருந்து சிந்தித்தார்கள். அப்போது மனித குலத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகளை அவர்கள் தந்தார்கள். அதுதான் திருக்குர்ஆன் என்று நாங்கள் பார்க்கிறோம். ஆமாம், எங்களைப் போன்ற பகுத்தறிவாளர்கள் அப்படித்தான் பார்க்கிறோம். ஒரு நல்ல மனிதரின் சிந்தனையின் வெளிப்பாடுதான் திருக்குர்ஆன் என்பதுதான் எங்களின் பார்வை.”

இன்னொருவர் ஓஷோ. அவர் ஓரிடத்தில் இவ்வாறு சொல்கிறார்: “நபியின் மனத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் பேசியது. அதுதான் இறைவெளிப்பாடு என்று அவரால் புரிந்துகொள்ளப்பட்டு வேதம் என்று முன்வைக்கப்பட்டது.”

இவ்விரு கருத்துக்களைத்தான் சொர்ணமித்ரனின் கருத்தும் பிரதிபலிக்கிறது என்று காண்கிறேன். மனவியல் பற்றி ஆழமாகச் சென்றால்தான் இதனைப் பற்றிய உரையாடல் சாத்தியம். பழமலய் அவர்களின் கருத்து மேம்போக்கான மனத்தளத்தை (தர்க ரீதியான பகுத்தறிவு) மட்டுமே ஏற்கும் ஒருவரின் கருத்தாகும். அந்த வகையில் சொர்ணமித்ரனின் கருத்து அதைவிட ஆழமானது என்று நான் காண்கிறேன். ஏனெனில் அவர் ஆழ்மனம் என்னும் தளத்தை ஏற்றுப் பேசுகிறார். ஓஷோவின் இக்கருத்து அவருடைய ஆயிரம் முரண்களில் ஒன்று. (I consistently contradict myself – ”நான் வேண்டுமென்றே எனக்கே முரண்படுகிறேன்” என்று சொன்னவர் அவர். அது ஏன் என்பதை அவரின் ஒவ்வொரு நூலின் தனிப்போக்கையும் அவதானித்தால்தான் தெரியும். கிருஷ்ணாவைப் பற்றிப் பேசுகையில் புத்தரும் ஏசுவும் முழுமையல்ல என்பார். புத்தரைப் பற்றிப் பேசுகையில் அவரே ஆன்மிகத்தின் சிகரம் என்பார். ஏசுவைப் பற்றிப் பேசுகையில் அவரே உச்சம் என்பார்.) அவர் பேசிய பல உரைகளில் இருந்தே அவரின் இக்கருத்தை உடைப்பதற்கான அல்லது தாண்டுவதற்கான பார்வைகளை எடுத்துக் கொள்ள முடியும். ஏனெனில், மனத்தின் பல அடுக்குகளைப் பற்றி உளவியல் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் அவர் மிக விரிவாகப் பேசியிருக்கிறார்.

சிக்மண்ட் ஃப்ராய்ட் மனித மனத்தைப் பகுத்தாய்ந்து பிரதானமாக மூன்று அடுக்குகளைப் பற்றியே பேசினார். நினைவு, உபநினைவு மற்றும் நினைவிலி (consciuous, sub-conscious and un-conscious). இவற்றிலும் அவர் அதிக அழுத்தம் கொடுத்துப் பேசியது நினைவிலி மன அடுக்கு பற்றித்தான். அதன் செயல்பாடாக அவர் கனவு என்பதை ஆராய்ந்தார். ”கனவுகளில்தான் மனிதன் உண்மையாளனாக இருக்கிறான்” என்று அவர் சொன்னார்.

அவரின் மாணவரான கார்ல் குஸ்தாவ் யுங் தன் ஆசிரியரின் மன-அடுக்குகளுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தார். ஆசிரியரின் பார்வை மனித மனம் தனியே இருப்பதாக பாவித்தது என்றால் யுங் அதனை மறுத்து மனித மனம் தனியே இல்லை, அது ஒரு கூட்டமைப்பின் பாகம்தான் என்று சொன்னார். ஒவ்வொரு மனமும் கூட்டு நினைவு மற்றும் கூட்டு நினைவிலி (collective consciousness and collective unconsciousness) ஆகிய தன்மைகளைப் பின்னணியில் கொண்டு இயங்குகிறது என்று அவர் சொன்னார். கீழைத்தேய ஞான மரபுகளில் (இந்துமதம் மற்றும் பௌத்தம்) ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் யுங் என்பது முக்கியமானது.

இருபதாம் நூற்றாண்டில் உளவியலை ஒரு மருத்துவமாக வடிவமைத்து மனித வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இவ்விருவரும் மனித மனம் பற்றி முன்வைத்த சிந்தனைகளை விடவும் இன்னும் ஆழமாகச் செல்கிறது கீழைத்தேய ஞான மரபு. மனிதப் பிரக்ஞையின் மூன்று நிலைகளாக மண்டூக்ய உபநிஷத் குறிப்பிடுவன: ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு) மற்றும் சுஷுப்தி (கனவற்ற உறக்கம்). இம்மூன்றும் முறையே சிக்மண்ட் ஃப்ராய்டு குறிப்பிட்ட நினைவு, உபநினைவு மற்றும் நினைவிலி ஆகிய மூன்று நிலைகளைக் குறிபபதாகச் சொல்பவர்கள் உண்டு.

இந்த மூன்று நிலைகளும் சராசரியான எல்லா மனிதர்களிடமும் இருப்பதுதான் என்றும் யோகிகள் இம்மூன்று நிலைகளுக்கு அப்பால் தங்கள் பிரக்ஞையைக் கொண்டு சென்று அதில் நிலைத்திருப்பவர்கள் என்றும் மேடம் ப்ளவாட்ஸ்கி கூறுகிறார். “நான் சாதாரண மனிதர்களைப் பற்றிப் பேசுகிறேன். மேதை, குரு, யோகி, புத்தன் – இவர்கள் ஒவ்வொருவரும் இந்த மண்ணில் வாழும்போதே இந்த மூன்று நிலைகளுக்கும் மேலான நிலையில் அதே சமயம் இம்மூன்று நிலைகளையும் குறித்த முழுமையான சுதாரிப்புடன் வாழ்கின்றார்கள். ஆனால் சாதாரண மனிதனுக்கு முதல் நிலையில் (ஜாக்ரத்) மட்டுமே சுதாரிப்பு இருக்கின்றது. இம்மூன்று நிலைகளையும் முழுமையாக அறிவதன் முக்கியத்தை உணர்ந்த ஆத்ம சாதகன் ஒவ்வொருவனும் ஸ்வப்ன நிலையில் சுஷுப்தியின் அனுபவத்தையும் ஜாக்ரத் நிலையில் ஸ்வப்னத்தின் அனுபவத்தையும் (இவற்றிற்கு எதிர்திசையிலும்) இழக்காமல் இருப்பது எப்படி என்றும் அறிவது அவசியம்.” (THE THREE PLANES OF HUMAN LIFE: JAGRATA, SWAPNA, SUSHUPTI: WAKING, DREAMING, DREAMLESS SLEEP.)

இந்த மூன்று நிலைகளிலும் சத்தியம் (மெய்ம்மை) அறியப்படுவது இல்லை என்றும் இம்மூன்று நிலைகளில் ஏற்படுவது என்னவெனில் சத்தியத்தை அறியாமையும் சத்தியத்தை மாற்றி அறியும் தவறுமே ஆகும் என்று ”மண்டூக்ய காரிகை”யில் கௌடபாதர் சொல்கிறார்.
இம்மூன்று நிலைகளையும் கடந்தவையான இரண்டு நிலைகளைப் பற்றி இரண்டாம் நிலையிலான உபநிஷத்கள் பேசுகின்றன. அவை: துரியம் மற்றும் துரியாதீதம். துரியம் என்னும் நிலையே விளக்க மிகவும் கடினமானது என்பதை அதன் பெயரே காட்டுகின்றது. துரியம் என்றால் ‘நான்காவது’ என்று மட்டுமே பொருள். விழிப்பு கனவு உறக்கம் என்பதைப் போல் இதற்கு அனுபவத்தைக் குறிக்கும் பெயர் இல்லை. துரியாதீதம் என்பது ’நான்காவதைக் கடந்தது’ என்று அர்த்தமாகிறது.

இவ்வைந்து நிலைகளும் ’மண்டல ப்ராஹ்மண உபநிஷத்’ என்னும் சிறு உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளன. இவை ஆத்மாவின் அவஸ்தைகள் (நிலைகள்) என்று கூறப்படுகின்றன.
“ஐந்து அவஸ்தைகள் உள்ளன: ஜாக்ரத், ஸ்வப்னா, சுஷுப்தி, துரியம், துரியாதீதம். துரியத்தைக் கடந்து முழுமையாய் இருக்கும் பிரம்மத்தை அறிந்தவனே யோகி.” (2:4,5)

இந்த ஐந்து நிலைகளையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் ரமண மகரிஷி விளக்கிப் பேசியுள்ளார். முதல் மூன்று நிலைகளும் தற்காலிகமானவை என்றும் அடுத்த இரண்டு நிலைகளும் இம்மூன்றுக்கும் அடித்தளமாக இருப்பதோடு நிரந்தரமான சத்திய நிலைகள் என்றும் சொல்லியிருக்கிறார். துரியமும் துரியாதீதமும் அவ்வளவாக வேறுபடுத்திக் காணவியலாத நிலைகள் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

“ஆத்மா என்றும் இதயத்தில் உள்ளது. ஜாக்ரத் (விழிப்பு) நிலையில் இதயம் சலனமுறாதபோது எண்ணங்கள் நிற்கின்றன. அந்நிலையே துரியம். ஆத்மா பரம்பொருளில் மூழ்கும் நிலையே துரியாதீதம். தாவர இனம் எப்போதும் சுஷுப்தி நிலையில் உள்ளது. விலங்கினத்துக்கு சுஷுப்தியும் ஸ்வப்னமும் உண்டு. தேவர்கள் எப்போதும் ஜாக்ரத் என்னும் நிலையிலேயே இருக்கின்றனர். மனிதனுக்கு மூன்று நிலைகளும் உண்டு. ஆனால், விழிப்படைந்த யோகி எப்போதும் துரிய நிலையில் இருக்கிறார். மேலான யோகியோ துரியாதீத நிலையில் உறைபவராகிறார். முதல் மூன்று நிலைகல் சராசரி மனிதனில் மாறி மாறி அனிச்சையாகவே உண்டாகின்றன. ஆனால் துரியமும் துரியாதீதமும் பயிற்சிகளால் வருவனவாகவும் விடுதலைக்கான வழிகளாகவும் உள்ளன. முதல் மூன்று நிலைகளில் ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து வேறுபட்டதாகவும் கால-இடப் பரிமாணங்களால் கட்டுண்டதாகவும் உள்ளன. எனவே அவை பொய்யானவை.” (Talks with Ramana Maharishi, talk #617, 23rd-28th January, 1938.)

இந்த ஐந்து நிலைகளையும் தமிழகச் சூழலில் வள்ளலாரிடம் காணலாம். அவருக்கும் முன்பே தாயுமானவரிடம் காணலாம். அவருக்கும் முன்னரே திருமூலரிடம் காணலாம். சித்தர்களின் பாடல்களிலும் குணங்குடி மஸ்தான் சாகிபு உள்ளிட்ட தமிழக சூஃபிகளிடமும் இந்தக் கருத்தாக்கங்களைக் காணமுடிகிறது.

சூஃபித்துவத்தில் பேசப்படும் பிரக்ஞை நிலைளான முராக்கபா, முஷாஹதா, ஃபனா, பகா போன்றவற்றுடன் இவற்றை ஒப்பிட்டுப் பேச இடமுள்ளது. உதாரணமாக, மேலே ரமண மகரிஷி சொன்னதில் ஒரு கருத்தை அவதானிப்போம்: “தேவர்கள் எப்போதும் ஜாக்ரத் நிலையிலேயே இருக்கிறார்கள்”. சூஃபித்துவ ஜார்கனில் தேவர்கள் என்றால் மலாஇக் (வானவர்கள்) என்று கொள்ளலாம். வானவர்களுக்கு உறக்கமில்லை என்றாகிறது. அதாவது, உறங்கா நிலை என்பது மலக்கானியத் என்னும் நிலை. இன்னொரு கருத்து “ஆத்மா எப்போதும் இதயத்தில் உறைகிறது”. இதை சூஃபி வெர்ஷன் ஆக்கினால், “ரூஹ் எப்போதும் கல்பில் உறைகிறது” என்றாகும். சரி, இப்போது நபிகள் நாயகம் (ஸல்) தன்னுடைய நிலையைப் பற்றிச் சொன்ன ஒரு நபிமொழி வாசகத்தைக் கவனிப்போம்: “என்னுடைய கண்கள்தான் உறங்குகின்றன, ஆனால் என்னுடைய இதயம் உறங்குவது இல்லை”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி ஷரீஃப், கிதாபுத் தராவீஹ்.)

ஆனால் நான் இந்த நிலைகளை எல்லாம் சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டிருப்பதன் நோக்கம் – நாம் இந்நிலைகளில் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

சட்டென்று ஒரு நூல் இங்கே நியாபகத்தில் குறுக்கிடுகிறது. ஸ்காட் ஆடம்ஸ் எழுதிய “God’s Debris”. அதில் அவர் விழிப்புணர்வின் ஐந்து நிலைகளைக் குறிப்பிடுகிறார். அதில் வரும் ஒரு முதியவர் ஐந்தாம் நிலை விழிப்புணர்வில் வாழ்பவர். தனக்கு அடுத்ததாக அந்த நிலைக்கு ஒரு மனிதனைத் தூக்கிவிட அவர் செயல்படுகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் ஒருவன் கூரியர்காரன்! நாவலின் கடைசி அத்தியாயத்தின் தலைப்பு ”Fifth Level” (ஐந்தாம் நிலை). அதில் அந்த முதியவரை நோக்கி அவர் மனிதர்தானா என்னும் கேள்வியை அந்தக் கூரியர்மேன் கேட்கிறான். பின்வரும் உரையாடல் பகுதி அப்போது நிகழ்வது:
“எனக்குப் புரிகிறது. ஆம், நான் மனிதன்தான். நானொரு ஐந்தாம் நிலை மனிதன். அவதார்”
“ஐந்தாம் நிலைன்னா?”
“மக்கள் வெவ்வேறு விழிப்புணர்வு நிலைகளில் வாழ்கின்றனர். அவதார் என்பவர் அதன் ஐந்தாம் நிலையில் வாழ்பவர்.”
“விழிப்புணர்வு என்பது நுண்ணறிவு மாதிரியா?” – நான் கேட்டேன். (Is awareness like intelligence? I asked.)
“இல்லை. நுண்ணறிவு என்பது ஒருவர் தனது விழிப்புணர்வு நிலையில் எந்த அளவு திறமையாக இயங்குகிறார் என்பதற்கான மதிப்பீடு. உன் வாழ்நாளில் உன் நுண்ணறிவு என்பது அதே நிலையில்தான் பெரும்பாலும் இருந்துவிடும். ஆனால் விழிப்புணர்வு என்பது நுண்ணறிவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. விழிப்புணர்வு என்பது உன்னுடைய மயக்கங்களை நீ அடையாளம் காண்பது சம்பந்தப்பட்டது. பெரும்பாலும் மனிதர்களின் விழிப்புணர்வு அவர்களின் ஒரு வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு நிலைகள் மேலுயரக் கூடும்.”

இதையும் மேற்சொன்ன நோக்கத்துடன் சேர்த்துக்கொள்ளவும். அதாவது நாம் எந்தப் படியில் நின்றுகொண்டிருக்கிறோம் என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

கனவு நிலை என்பதை சுஷுப்தி என்னும் ஒற்றை நிலையாகக் குறிப்பிட்டுப் பேசினோம். ஆனால் அதிலும் உள்நிலைகள் பலவுண்டு என்பதை அவதானிக்கும் போது விஷயம் இன்னும் சிக்கலாகிறது.

கனவு ஐந்து வகைப்படும் என்று பிரித்து விளக்குகிறார் சிக்மண்டு ஃப்ராய்டு:
1.Displacement, 2. Projection, 3. Symbolization, 4. Condensation and 5. Rationalization.

இந்த ஐந்து வகைக் கனவுகளுக்குமே அடிப்படையாக அவர் கொண்டது நிறைவேறாத ஆசைகளையும் பாலியலையும் மட்டுமே. இந்த ஐந்து வகைக்கனவுகள் சராசரி மனிதர்கள் அனைவருக்கும் உண்டாகுபவை. சிக்மண்டு ஃப்ராய்டின் உளவியல் பகுப்பாய்வின் மிகப்பெரிய குறைபாடு என்னவெனில் அவர் சராசரி நிலையை விட்டும் கீழ்நிலைக்கு வீழ்ந்த (பிறழ்ந்த) மனிதர்களையே ஆய்வுக்கு உட்படுத்திச் சோதனை செய்தார் என்பதுதான் என்கிறார் ஓஷோ. அவருடைய நினைவு, உபநினைவு மற்றும் நினைவிலி என்னும் மூன்று மன அடுக்குகளும் மேலிருந்து கீழே இறங்குபவையாக உள்ளதைச் சுட்டிக் காட்டி அதிநினைவு (super- consciousness) என்னும் நிலை பற்றி அவர் கண்டுகொள்ளாதது அவருடைய உளவியல் ஆய்வு முழுமையற்றது என்பதைக் காட்டுவதாகச் சொன்னார். ஃப்ராய்டுக்குத் தெரிந்ததெல்லாம் மனப்பிறழ்வு நிலை கொண்ட அ-இயல்பான (abnormal) மனிதனைத்தான். அந்நிலையிலிருந்துதான் அதற்கு எதிரானதான இயல்பான (normal) மனிதனை அவர் வரையறுக்க முனைந்தார். ஆனால் சராசரி மனித நிலைக்கு மேலே செல்லக்கூடிய ஆன்மிக நிலையிலான அதிமனிதனை (super normal; அரவிந்தரின் மொழியில் சொன்னால் super-human) அவர் பேசவே இல்லை.

”நமக்கு ஏழுவகை உடல்கள் உள்ளன. ஒவ்வொரு உடலுக்கும் ஒருவகைக் கனவு உண்டு” என்று சொல்கிறார் ஓஷோ. We have seven bodies – the physical, the etheric, the astral, the mental, the spiritual, the cosmic and the nirvanic – so there is the possibility of seven types of dreams என்று அவர் சொல்லி மேலும் அவற்றை விளக்கிச் செல்லும்போது ஃப்ராய்டின் அணுகுமுறை எவ்வளவு மேம்போக்கானது என்பதை நாம் உணர முடிகிறது. ஃப்ராய்டின் உழைப்பு சாதாரணமானதா? என்ன இப்படிச் சொல்கிறீர்கள் என்று கோபிக்க வேண்டாம். தலையணை சைஸ்களில் அவர் எழுதிக் குவித்திருந்தாலும் அவரின் பணி மேம்போக்கானதுதான். இதை அவரின் முதன்மை மாணவரான கார்ல் குஸ்தாவ் யுங்கே உணர்ந்திருந்த காரணத்தால்தான் அவர் தன் ஆசானைப் பிரிந்து கிழக்கத்திய ஆன்மிகத்தின் பக்கம் வந்தார். ஃப்ராய்டின் பணியை இப்படிச் சொல்லலாம்: ஒருவர் சாணி பற்றி பி.எச்டி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம். ஆனால் அது பசுவைப் பற்றிய உண்மைகளை முழுமையாக வெளிப்படுத்த முடியாது! முடியவே முடியாது! ஏனெனில், சாணி என்பது பசுவிலிருந்து வந்ததாக இருந்தாலும் அதுவே பசு அல்ல! அதுபோல் ஃப்ராய்டு ஆராய்ந்த மனிதமனம் சராசரிகளின் மனம்தான். அதி மனிதர்களின் பிரக்ஞை நிலைகள் பற்றிய பகுப்பாய்வை அவர் நிகழ்த்தவில்லை.

”தேடாதே” என்று ஒரு நூல். உளவியல் மருத்துவர் டாக்டர் ருத்ரன் எழுதியது. அந்நூலின் பிற்பகுதியில் நோயசிஸ் மற்றும் யூனியோ மிஸ்டிகா என்னும் இரண்டு விழிப்புணர்வு நிலைகள் பற்றி அவர் அலசுகிறார். அந்த நிலைகளை விளக்க இப்போது மேற்குலகம் உருவாக்கி வைத்திருக்கும் உளவியல் கோட்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதை அவர் அழுத்தமாகச் சொல்கிறார்.

கனவு பற்றிச் சொல்கையில் இன்னொரு விஷயம் நியாபகம் வந்தது. இறைத்தூதர்களின் கனவும் இறைவெளிப்பாடுதான் என்னும் கோட்பாடு, நம்பிக்கை இஸ்லாத்தில் உண்டு. நபி (ஸல்) தனக்கு ஆரம்பகால இறைவெளிப்பாடுகள் பெருமாலும் கனவுகளாகவே வெளிப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல வண்டின் ரீங்காரம் போன்றும் மணி ஓசை போன்றும் இறைவெளிப்பாடுகள் (வேதத்தின் வசனங்கள்) வந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு சராசரி மனிதனுக்குக் கேட்பது வேறு; இறைத்தூதர்களுக்குக் கேட்பது வேறு என்றுதான் நானும் நம்புகிறேன். ஃப்ராய்டிய உளவியல் அளவுகோலைப் பயன்படுத்தி அலசினால் இவை மனநோய்க்கூறுகள் என்றுதான் அது சொல்லும். ஆனால் அந்த அளவுகோல்கள் தயாரிக்கப்பட்டதே அ-இயல்பு மனிதர்களை வைத்துத்தான் என்பதைக் கவனிக்க அந்த அளவுகோல்களின் நம்பகத்தன்மையே அடிபட்டுப் போய்விடுகிறது!

இப்றாஹீம் நபிக்குக் கனவில் வந்த இறைக்கட்டளைதான் அவர் தன் மகனான இஸ்மாயீல் நபியை அறுத்துப் பலியிட வேண்டும் என்பது. அவர்கள் அதனைச் செயல்படுத்த முனைந்தார்கள். கனவாயிற்றே என்று தயங்கவில்லை. ஏனெனில், சராசரி மனிதர்களின் கனவுகள் ஆழ்மனப் படிவங்களின் வெளிப்பாடாக இருக்கலாம்; ஆனால் இறைத்தூதர்களின் கனவுகளின் மூலம் அந்த நிலையைத் தாண்டியது, அது பரம்பொருளிடமிருந்து வருகிறது என்பது ஓர் இறைத்தூதருக்கு மிகத் தெளிவாகவே தெரியும். ஆனால் அவர்களின் விழிப்புணர்வு நிலையில் இல்லாத நாம் அதை அளவிடவே முடியாது.

மேனிலைகள் இன்னும் பூடகமாகவே இருக்கின்றன என்பது உண்மைதான். அதனால்தான் அவற்றை விளக்க குறியீடுகளையும் படிமங்களையும் கையாண்டு பேசியிருக்கிறார்கள். வேறு வழி இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆழ்மனப் படிவங்கள் என்று பேசும்போது நம்முடைய ஆழ்மனம் பற்றியும் படிம பாஷையில் ஒரு விளக்கத்தைத் தர நாடுகிறேன்.

ஆழ்மனம் என்பது படிமங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு இடம். அதாவது ஆழ்மனத்தில் படிமங்கள் திரையாகத் தொங்குகின்றன. ஆனால் அந்தத் திரைகளை அசைத்தபடி உள்ளே பாயும் காற்று அந்தத் திரைகளுக்கு அப்பால் இருந்து வருகிறது. காற்று அந்தத் திரைகளில் உற்பத்தி ஆகி வருகிறது என்று சொல்வது மடத்தனம். இறைத்தூதருக்கு அருளப்பட்ட வேத வெளிப்பாடுகள் ஆழ்மனப் பதிவுகளின் வெளிப்பாடாக இருக்கலாமல்லவா என்று கேட்பதும் வீசும் இக்காற்று திரையில் பிறந்ததாக இருக்கலாம் அல்லவா என்று கேட்பதும் ஒன்றுதான்!

ஒரு மலைத்தொடரைக் கற்பனை செய்யுங்கள். அடுக்கடுக்காக மலைகள். ஒன்றை விடவும் அடுத்தது இன்னும் உயரமானது என்னும்படியாக அமைந்த ஏழு மலைகள். முதல் ஆறு மலைகளுக்குப் பாதைகளும் படிகளும் இருக்கின்றன. ஏழாவது மலைக்குச் செல்ல படிகள் இல்லை. சிலர் முதல் மலையிலேயே வசித்து வருகிறார்கள். அவர்களில் சிலர் இரண்டாம் மலைக்கு அவ்வப்போது சென்று வருவது உண்டு. இரண்டாம் மலையிலேயே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அவ்வப்போது முதலாம் மலைக்கு வந்துவிட்டுப் போவார்கள்.
இப்படியாக முதல் மலையில் உள்ளவர்களுக்கு இரண்டாம் மலையைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இரண்டாம் மலையில் உள்ள சிலர் அவ்வப்போது மூன்றாம் மலைக்குச் சென்று வருவதுண்டு. மூன்றாம் மலையிலும் வசிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அவ்வப்போது இரண்டாம் மலைக்கும் முதலாம் மலைக்கும் வந்து செல்வதுண்டு. இவ்வாறு மூன்றாம் மலையைப் பற்றிய செய்தி இரண்டாம் மலையினருக்கும் முதலாம் மலையினருக்கும் கிடைக்கிறது. இதே போல் ஆறு மலைகளிலும் வசிப்பவர்கள் இருக்கிறார்கள், வந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஏழாம் மலையில் வசிப்பவர்கள் தனி வகையினர். ஆறாம் மலையிலிருந்து ஏழாம் மலைக்குச் செல்ல பாதைகள் ஏதுமில்லை. போகத் தடையும் இருக்கிறது. ஏழாம் மலைவாழ் நபர்கள் சிலர் கீழுள்ள மலைகளுக்கு வந்து செல்வது உண்டு. அப்படியாக ஏழாம் மலையைப் பற்றிய செய்திகள் பிற மலைவாழ் மக்களுக்குக் கிடைக்கின்றன. எனினும் ஏழாம் மலையைப் பற்றிய செய்திகளை ஆறாவது மலையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுக்குக் கீழே உள்ளவர்களால் விளங்கிக்கொள்ள இயலாது என்பது தெளிவு. ஏழாம் மலையின் வாசமும் தட்பவெப்பமும் ஆறாம் மலையினருக்கு உணரலாகும் வகையில் முதலாம் மலையினருக்குக் கிடைக்குமா சொல்லுங்கள்?

இந்த குறியீட்டுச் சித்திரம் இஸ்லாம் முன்வைக்கும் பிரக்ஞை நிலைகளை விளக்குவதற்காகச் சொல்லப்பட்டது. முஸ்லிம் முஃமின் முஹ்ஸின் முத்தகீ முவஹ்ஹித் என்னும் நிலைகளாகட்டும், அல்லது சாலீஹீன்கள், ஷுஹதாக்கள், சித்தீக்கீன்கள், அன்பியாக்கள் என்னும் நிலைகளாகட்டும் – இந்த உவமை அதற்கு விளக்கமாகும். இறைநேசர்கள் ஆறாம் மலையில் வாழ்பவர்கள் என்றும் இறைத்தூதர்கள் ஏழாம் மலையில் வாழ்பவர்கள் என்றும் புரிந்துகொள்ளுங்கள். முதல் மலையிலிருந்து ஆறாம் மலை வரை பாதைகள் உண்டு. அணுகல் (Access) இருவழியில் உண்டு. ஆனால் ஏழாம் மலைக்குப் போக கீழிருந்து அணுகல் இல்லை. மேலிருந்து கீழாக உண்டு. ஒரு மனிதன் இறைநேசர் என்னும் நிலை வரை முன்னேற ஆன்மிகத்தில் பயிற்சிகளும் முயற்சிகளும் இடமளிக்கின்றன. ஆனால் எவ்வளவு பயிற்சியும் முயற்சியும் ஒருவரை இறைத்தூதராக்க முடியாது என்பதே இஸ்லாமியக் கொள்கை. இறைத்தூதர் என்னும் ஸ்தானம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கு வழங்கப் படுவது.

இந்துமதத்தில் உள்ள வேறுபாடு என்னவெனில் ஆறாம் மலையிலிருந்து ஏழாம் மலைக்கும் பாதைகள் உள்ளன என்பதாகும். மட்டுமல்ல அதற்கு அப்பாலும் போய்க் கரைந்துவிடலாம் என்பதும் ஏற்கப்படுகிறது. ஆனால் படைப்பு ஒருபோதும் பரம்பொருளாக முடியாது என்பதே இஸ்லாத்தின் பார்வை. மனிதர்களிலும், இறைத்தூதர்களாவது நம் முயற்சியில் அல்ல என்பதும், எந்த மனிதரும் இறைநேசர் என்னும் நிலை வரை எட்ட வாய்ப்புள்ளது என்பதும் மட்டுமே ஏற்கப்படுகிறது.

இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். புலன்களுக்கு அப்பாற்பட்ட ஞானம், பகுத்தறிவு – தர்க்கம் இவற்றுக்கு அப்பாலான உள்ளுணர்வு என்றெல்லாம் பேசுகின்றபோது இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுவது என்னவெனில் இருவகையான உதிப்புக்கள் உள்ளன என்பதாகும். அவை, வஹீ என்னும் இறைவெளிப்பாடும் இல்ஹாம் என்னும் அகவுதிப்புமாகும். வஹீ என்னும் இறைச்செய்தி இறைத்தூதர்களுக்கு மட்டுமே வருவது. ஆனால் இல்ஹாம் என்னும் அகஉதிப்பு மட்டுமே ஏனைய மனிதர்களில் இறைநேசம் (விலாயத்) என்னும் நிலையை அடைந்தவர்களுக்கு உண்டாவதாகும். இறைத்தூதர்களை அன்றி வேறு எவருக்கும் இறைச்செய்தி வெளிப்பாடு என்னும் வஹீ அருளப்படுவதில்லை. (எனினும் அல்லாஹ் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் அகவுதிப்பை வஹீ என்னும் சொல்லால் கண்ணியம் கருதிப் பயன்படுத்தியிருக்கிறான்: தேனீக்கும் மூசா நபியின் தாய்க்கும்.)

”ஏழாம் மலையின் வாசமும் தட்பவெப்பமும் ஆறாம் மலையினருக்கு உணரலாகும் வகையில் முதலாம் மலையினருக்குக் கிடைக்குமா சொல்லுங்கள்?” என்று கேட்டேனல்லவா? அக்கருத்து இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களுடைய கருத்தின் பிரதிபலிப்பு. “அல்முன்கித் மினழ் ழலால்” (பிழையில் இருந்து விடுதலை) என்னும் நூலில் பல்வேறு அறிவுத் துறைகளை அலசி ஆராய்ந்து விளக்கியும் விலக்கியும் முடித்த பின்னர் இறுதியாகத் தான் சூஃபித்துவப் பாதைக்கு வந்தது ஏன் என்பதை அவர்கள் விளக்குகின்றார்கள். அதில் ஒரு புள்ளி இது: ”அகவுதிப்பின் (இல்ஹாம்) அனுபவத்தை அறிந்த ஒருவருக்குத்தான் இறைவெளிப்பாட்டின் (வஹீ) அனுபவம் எத்தகையதாக இருக்கும் என்பதை விளங்க முடியும்.” அதாவது, இல்ஹாம் என்பதை அனுபவித்த இறைநேசருக்கு வஹீ என்பதன் தாத்பரியத்தை விளங்கிக்கொள்வது எளிது. ஆனால் சிந்திப்பதே சிரமமாய் இருக்கும் சராசரி மண்டைக்கு வஹி என்பது நம்பிக்கை என்னும் அளவில் ஒரு கருத்துருவமாய் இருக்குமே அன்றி அதை விளங்குவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. எனவேதான் அகவிழிப்புணர்வு நிலைகளில் முன்னேறுவதற்கான பயிற்சிகளில் கவனம் செலுத்தி முயலுமாறு சூஃபித்துவம் கூறுகிறது.

நாம் முதல் மலையில் டீக்கடை பெஞ்ச்சில் அமர்ந்தபடி ஏழாம் மலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்!

ஆனால் ஆறாவது மலையில் வசிப்பவர்களான இறைநேசர்கள் ஏழாம் மலையான நபித்துவம் பற்றி மிக கண்ணியமாகவும் பூடகமாகவும் பேசுகின்றார்கள்.

எந்த சூஃபி ஞானியும் தன்னை நபி என்று சொல்லிக் கொள்ளவில்லை. மாறாக அனைவருமே தங்களை நபி (ஸல்) அவர்களின் காலடித் தூசு என்றே சொல்லிக் கொண்டார்கள்!

நீங்களே எங்கள் இறைத்தூதர் என்று மௌலானா ரூமியிடம் சில பாமர ஜனங்கள் சொன்னபோது அதை அவர்கள் முற்றாக மறுத்து அவர்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். “மன் ஃகாக்கே ராஹே முஹம்மது முஃக்தாரம்” – ‘தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களுடைய பாதையில் ஒரு தூசு நான்’ என்று குறிப்பிட்டார்கள்.

இன்னொரு படிமமும் தோன்றிற்று:
தலைக்குக் குளித்துவிட்டுத் துவட்டியபடி வந்த நான் கட்டிலின் மீதே துவாலையை விரித்துப் போட்டேன். அதைக் காயப்போடுங்கள் என்றாள் என் சகதர்மினி. எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் இருந்த நாற்காலிமீது போட்டேன். ’வெளியே வெயில் அடிக்கிறதே அங்கே போடுங்கள்’ என்றாள். சரிதான் என்று எடுத்துக் கொண்டுபோய் முற்றத்தில் இருந்த ஸ்டாண்டில் துவாலையைத் தொங்கவிட்டேன். வெயில் அதன்மீது படர்ந்து விழுந்தது.

இறைத்தூதரின் ஆழ்மனம் என்பதும் பரம்பொருள் என்னும் சூரியனின் ஞான வெயில் பாயும் முற்றம்தான்.

வெயில் என்பது முற்றத்திற்கு உரியது அல்ல; அது சூரியனுக்கு உரியது. ஆனால் அது அந்த வேளையில் முற்றத்தில் பாய்ச்சப் பட்டிருந்தது.

இறைத்தூதரின் மனமென்னும் முற்றத்தில் பாய்ந்தாலும் அந்த ஞானவெயில் இறைவனின் வாக்குதான்.

மட்டுமல்ல, ஒரு கண்ணாடியை வைத்து அந்த வெயிலை உள்ளே பாய்ச்சினால் அது உள்ளறைக்கும் வருமல்லவா? அப்போதும் அது சூரியனின் வெயில்தான். ஆனால் கண்ணாடியிலிருந்து பிரதிபலிப்பது.

சொல்லப்போனால், இறைத்தூதர் என்பவர் கண்ணாடி மாளிகையாக இருக்கிறார். அவரின் அனைத்து அம்சங்களிலும் சூரியனின் ஒளி ஊடுறுவிப் பாய்கின்றது.








Saturday, January 5, 2013

மீண்டும் துளிக்கதைகள்


இன்று (4.1.2013) காலை பேராசிரியர்.வ.மு.யூனுஸ் துளிக்கதைகள் பற்றிய பதிவு பற்றி அடியேனுடன் பேசினார். ‘நீ சொல்லாமல் விட்டுவிட்ட ஒரு கதை இருக்கிறது, அதையும் சேர்த்துக்கொள்’ என்றார். சுஜாதாவின் ஒரு துளிக்கதை அது. தலைப்பையும் கதையையும் நீங்களே பாருங்கள்:
கரடி வேடமிட்ட மனிதனின் கடைசி வார்த்தைகள்:
“ஐயோ, சுட்டுடாத!”

கேட்டுவிட்டு எக்ஸெல்லெண்ட் என்று சொன்னேன். இதுபோல் கச்சிதமாக எல்லா நேரங்களிலும் எழுத முடியுமா என்பது ஐயம்தான். இதைக்காண சற்றே பெரிய துளி ஒன்று தோன்றியது எனக்கு
:
அதிர்ச்சி
போஸ்ட் மார்ட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தது உடல். அமுதன், வயது 8. ஊமை. தாய் கதறினாள். தந்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.  சக மாணவர்கள் கசிந்து அழுதார்கள். “பஸ் மோதப் போறப்ப அம்மான்னு கத்தினான் மாமா” என்றான் ஒரு பையன்.

மைக்ரோ ஃபிக்‌ஷன் / ஃப்ளாஷ் ஃபிக்‌ஷன் எழுதுவது ஒரு கலை. அரிசியில் சிற்பம் செதுக்குகிறார்களே அது மாதிரி. என்னதான் வெண் மார்பிளில் மாஸ்டர் பீசஸ் செதுக்கிய மைக்கேல் ஏஞ்சலோ போல் மேதைமைச் சிற்பி என்று சொல்ல முடியாவிட்டாலும் அரிசிச் சிற்பம் செய்பவனின் விரலிலும் கலைத்திறன் இருக்கத்தானே செய்கிறது?
துளிக்கதைகளைக் கொண்டாட ஒரு நாளே குறித்துவிட்டார்கள். மே16 “flash fiction day” என்று அறிவித்திருக்கிறார்கள். ஐ.நா சபையோ ஏதேனும் நாட்டின் அரசோ அல்ல, இவ்வகை இலக்கியத்தின்மீது தீரா மோகம் கொண்ட ரசிகர்கள் பலர் சேர்ந்துதான். கொண்டாட்டம் என்றால் எல்லோரும் சேர்ந்து இணையத்தின் வழி ஃப்ளாஷ் கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு இணைய கார்னிவல். அந்தக் கொண்டாட்டத்திற்கு வடிவம் கொடுத்த துளிக்கதை வல்லுநரான டேவிட் கஃப்னே எழுதிய ஒரு கதை:
“ஒருமுறை நான் என் கதை ஒன்றின் கடைசி இரண்டு வரிகளை நீக்கிவிட்டு அனுப்பினேன், வெற்றுத் தாள்!”

அருமையான துளிக்கதைகள் எழுதுவதற்கு அவர் நமக்குச் சில டிப்ஸ் சொல்லித் தருகிறார்:
1.   கதையை நடுவில் ஆரம்பிக்கவும்.
(இந்தப் பாய்ண்ட்டைக் கேட்டபோது எனக்கு ஒரு பேட்டி நியாபகம் வந்தது. இயக்குநர் அமீர் எடுத்த ”ராம்” திரைப்படம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. மக்களுக்கு அதன் பல அம்சங்கள் புரியவே இல்லை என்றாலும் ஏதோ ஓர் ஈர்ப்பினால் பார்த்தார்கள். “அவன் ஏன் அப்படி சைக்கோவாக இருக்கிறான்? உங்கள் படத்தின் கதை பாதியில் ஆரம்பிப்பதைப் போல் இருக்கிறதே?” என்று ஒரு பேட்டியில் கேட்டிருந்தார்கள். அதாவது ஃப்ளாஷ் ஃபிக்‌ஷன் போல் அவர் கையாண்டிருந்த கதையில் ஃப்ளாஷ் பேக் இருந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். என்னத்த சொல்றது?)
2.   அதிகமான கதாபாத்திரங்களைப் பயன்படுத்தாதீர்கள்.
(அதாவது, துளிக்கதை என்பது ஒரு கோப்பைத் தேநீர் போல. தேநீர் போடுவதற்கு பிரியாணி தயாரிப்பது போன்ற சாமான்கள், முஸ்தீபுகள் தேவை இல்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது போல் ஃப்ளாஷ் கதைகள் நடுவில் ஆரம்பிக்குமாதலால் அதற்கு அதற்கு அதிக பட்சம் நாலு பேர் இருந்தாலே போதும்.)
3.   முடிவு கதையின் கடைசியில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
(லொல்லுதானே இதெல்லாம்? கதையை நடுவுல ஆரம்பிக்கணுமாம், இதுல முடிவு கடைசியில் இருக்கக்கூடாதாம். இந்த ஆளு வீடு கட்டுணா எப்படிக் கட்டுவாரு? ’வாசல் வீட்டுக்கு நடுவுல இருக்கணுமுங்க. கொல்லப்பக்கம் அடுப்பங்கறைக்கு முன்னாடியே இருக்கணும்’ அப்படீன்னு சொல்லுவாரோ?)
4.   உயிரோட்டமுள்ள தலைப்பை வைக்கவும்
(தப்பாகப் புரிந்து கொண்டு சினிமா பாணியில் “இதயம்” என்றோ ”உயிரே” என்றோ வைத்துவிடாதீர்கள். அதே சமயம், for your eyes only என்னும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்கு “உங்கள் கண்களுக்கு விருந்து” என்று விளம்பரம் செய்தது போலவோ, 36 Chambers of Shaolin என்னும் படத்தை ’முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்’ என்று சொன்னது போலவோ வைப்பதும் சரியாக இருக்காது. இதுக்கெல்லாம் சட்டத்தை விளக்க முடியாது. நாம பாத்து நல்ல பேரா வச்சிக்க வேண்டியதுதான்.)
5.   கதையின் கடைசி வரியில் படிப்பவர் மனத்தில் ஒரு மின்னல் வீச வேண்டும். (அல்லது பல்பு எரிய வேண்டும்).
(அதாவது, கதையின் நடுவில் – என்னங்கய்யா இது, தண்ணீர்த் துளியில் தலை எது? வால் எது? என்று மௌலானா ரூமி கேட்பது போல், நாலு வரி கதைக்கு இப்படியெல்லாம் அனாட்டமி பேசினால் நியாயமா? – சொல்லப்பட்ட கதை முடிவு வாசகனுக்குப் புலப்படாமல் மர்மமாக இருந்து அதைக் கடைசி வரி வெளிச்சமிட்டுக் காட்டுவதாக இருக்க வேண்டும்.)
6.   முதலில் கதையைப் பெரிதாக எழுதிக் கொண்டு பிறகு வேண்டாத பகுதிகளை நீக்கி நீக்கி அதைச் சின்னதாக்கவும். கல்லைச் செதுக்கிச் சிற்பம் ஆக்குவது போல்.
(அதற்காக கம்பராமாயணம் அளவுக்கு எழுதி அதை ஹைகூவாக மாற்றுகிறேன் என்று சில எழுத்தாளர்கள் முனையக் கூடும். சிலரிடம் நேரம் ரொம்ப ஓவராகவே இருக்கிறது ஐயா)

சற்றே பெரிய துளிகளை கவனிப்போம். டோ லாங் என்பவர் உள்ளங்கை அளவு கதைகள் எழுதித் தொகுத்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். “The fool who invented kissing” (முத்தத்தைக் கண்டறிந்த முட்டாள்) என்பது அந்நூலின் தலைப்பு! அதிலிருந்து ஒரு சாம்ப்பிள்:

பண்ணை வீடு
முன்பு ஒரு பெரிய குடும்பத்தின் ஐந்து தலைமுறையினர் வாழ்ந்து மறைந்த பண்ணை வீடு அது. அவர்களின் கல்லறைகள் அந்தப் பண்ணையில் உள்ள குளக்கரையில்தான் இருக்கின்றன.
வாங்கிய பின் நானும் மேரியும் அந்தப் பண்ணை வீட்டின் சமையலறையை மராமத்துச் செய்துகொண்டிருந்தோம். மூன்று ஆவி உருவங்கள் மிதந்து வந்து முன்னால் நின்றன. “வரவேற்கிறோம். வேலையைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டு மிதந்து சென்று சுவரின் வழியே மறைந்தன.
பயத்தில் படபடத்து என் கைகளை இறுகப் பற்றியிருந்த மேரி என்னிடம் கேட்டாள், “செய்யவில்லைன்னா?”

ஸ்க்விட்ரிச் எழுதிய கதை:
மீளிணைவு
அவள் தன் கடைசி மூச்சை வெளியேற்றினாள். புதிய வாழ்க்கை தொடங்கியது.
அவளின் கண்கள் மெள்ள திறந்தன. ஒருகணம் வெளிச்சம் கூசிற்று. கண்களை இடுக்கித் திறந்தாள். குழப்பத்துடன் பார்த்தாள். அஃது அவளின் உடல் அல்ல. வலியும் இல்லை.
சற்றுத் தொலைவில் சிலர் வந்து கொண்டிருந்தனர். முகங்கள் அடையாளம் தெரிந்தது. அவளின் தந்தை, தாய், சகோதரன்... முன்னோர்கள்!

ஆலிஸ் ஆட்ரே என்பவர் எழுதியுள்ள ஃப்ளாஷ் கதைகள் பலவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். நான்கு கதைகள் வெகுவாக என்னைக் கவர்ந்தன. தமிழுக்கு இட்டாந்துட்டேன்:

கூழாங்கல்
ஆற்றங்கரையில் கிடந்த கூழாங்கற்களில் ஒன்றை மெரிடித் தன் கையில் எடுத்தாள்.
”இது நமக்குப் பரிச்சயமான ஒன்றாகத் தெரிகிறது. இந்தக் கல் ஆற்றின் போக்கில் உருண்டு உருண்டு இப்படி வழவழப்பாக மாறியிருக்கிறது. கார்பன் டேட்டிங் செய்தால் இதன் வயதை அறியலாம். இதை மாதிரியான வேறு கற்களுடன் ஒப்பிட்டு இது எங்கிருந்து இங்கே வந்தது என்றும் கண்டுபிடிக்கலாம்” என்றாள் அவள்.
அருகிலிருந்த அவளின் சின்ன மகன் சட்டென்று சொன்னான், “எனக்குத் தெரியும் அம்மா, இது என் பெர்ரூமிலிருந்துதான் இங்கே வந்தது. நான்தான் இன்னிக்குக் காலைல இதை இங்க வீசி எறிந்தேன்!”

கட்டிலுக்கு அடியில்
அவனுக்குத் தூக்கம் வரவில்லை. சிறுவனாக இருக்கும்போது, கட்டிலுக்கு அடியில் ஒரு பேய் இருப்பதாகவும், தூக்கத்தில் அவனின் கையோ காலோ கட்டிலின் விளிம்பில் தொங்குவதற்காக அது காத்திருப்பதாகவும் அவன் கற்பனை செய்து பயந்தபடித் தூங்காமல் கிடப்பான். அப்படியும் சில நிமிடங்களில் தூக்கம் மிகைத்துவிடும். இப்போதோ, அவனைத் தூங்கவிடாமல் அலைகழிக்கும் பேய்கள் இன்னும் அதி பயங்கரமானவை: வியாபார நஷ்டம், வங்கிக்கடன், விவாகரத்து.
.
பூனைக்குட்டியின் சிறை
”பெட் ரெஸ்ட்” என்று சொன்னார் கால்நடை மருத்துவர்.
உடைந்த எலும்புகள் சேரும்வரை பூனைக்குட்டி அந்தக் கூண்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றார். ஆறு வாரங்கள் அசையாமல் படுத்திருக்க வேண்டுமாம். இதற்கு முன் தூங்கியதே இல்லை என்பது போல் கிடந்தது அது.
அதற்கான விடுதலை நாள் வந்து சேர்ந்தது. கூண்டின் கதவுகளைத் திறந்துவிட்டேன். ஆனால், நடப்பதையே மறந்துவிட்டது போல் அசைய மறுத்துப் படுத்துக்கிடந்தது என் பூனைக்குட்டி.

வலிமையாய் இரு

சிகிச்சைக்காக என்னிடம் வந்தான் அவன். சில நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும், அவன் மகிழ்ச்சியாகவும் சகஜமாகவும் இன்னும் நன்றாகவும் இருப்பான் என்று நண்பர்கள் சொல்லியிருந்ததால் வந்திருந்தான்.
வினாப் படிவத்தை அவனிடம் தந்து குறிக்கச் சொன்னேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று காட்டியது. வேறு சில பயிற்சிகளும் அப்படியே தெரிவித்தன.
கை குலுக்கினேன். நன்றாகத்தான் இருக்கிறான். இருவரும் கேன்ட்டீனுக்கு வந்து அமர்ந்தோம். பேசத் தொடங்கியபோது உடைந்து அழ ஆரம்பித்தான்.