Thursday, January 23, 2020

பறவைகளின் பரிபாஷை - 1



பறவைகளின் பரிபாஷை
(சூஃபி காவியம் ‘மன்திக்குத் தைர்’)


ஃபார்சி மூலம்
ஃபரீதுத்தீன் அத்தார்

உர்தூ வழித்துணை
ஹகீம் மதீவுர் ரஹ்மான் நக்‌ஷ்பந்தீ

ஆங்கில வழித்துணை
அஃப்கம் தர்பந்தீ & டிக் டேவிஸ்

தமிழில்
ரமீஸ் பிலாலி


இறைப் புகழ்ச்சி

உயிர் அருளும் மேலோனை வியந்து புகழ்கிறேன்.
கைப்பிடி மண்ணுக்கு நம்பிக்கை நல்கினான்.
நீரின்மேல் அர்ஷினை நிர்மாணம் செய்தனன்.
ஆதமின் சந்ததி அழியாது காத்தனன்.
விதானக் கூரையாய் விண்ணை உயர்த்தினன்; ---5
திசைகள் நான்கிலும் பூமியை விரித்தனன்.
ஒன்றை எப்போதும் இயங்கிடத் தூண்டி
மற்றதை நிலைத்த அமைதியில் ஆக்கினன்.
நாளாறில் எழுமீனுடன் வானங்கள் செய்தான்;
ஆகெனும் ஈரெழுத்து ஆணையைக் கொண்டு        ---10
இல்பொருள் யாவையும் உள்ளவை ஆக்கினான்;
பொற்பேழை போன்று விண்மீன்கள் வைத்து
இரவில் விண்ணுக்கு வெளிச்சம் ஊட்டினான்;
உணர்வுகள் உழலும் உடலெனும் கூண்டினுள்
உயிரெனும் பறவையை அடைத்து வைத்தனன்;     ---15
ஆழியின் நீரைத் தன் ஆணையில் அடக்கினான்,
மலைகள் தன் அச்சத்தில் உறைந்திருக்க வைத்தான்.
தாகத்தில் பாலையை வாயுலறச் செய்தான்,
கற்களைச் செம்மணிகள் ஆக்கி வைத்தான்,
ரத்தத்தில் மணமேற்றிக் கஸ்தூரி செய்தான்.         ---20
மலைகள் அவன் நிறுத்திய காவலர் ஆகும்,
முகடுகள் வாட்களென வளைந்து தோன்றும்.
ரோஜா மலருக்குத் தழல் நிறம் தீட்டினான்,
நதியின் குறுக்கிலொரு பாலத்தை நீட்டினான்.
நம்ரூதின் நாசிக்குள் நுழைவித்த கொசுவினால்      ---25
நானூறு ஆண்டுகள் குடைச்சல் கொடுத்தனன்;
சிலந்தியின் சிந்தையில் ஓர் ஆணை இட்டனன்
குகையின் வாயிலை வலையால் அடைத்தது,
குவலய நெஞ்சத்திற்கு அமைதி கிடைத்தது!


மொழிபெயர்ப்பாளன் குறிப்புக்கள்

வரி-3 அர்ஷ் – அரியாசனம் என்று தமிழாக்கம் செய்யப்படுவதுண்டு. அரசனின் வீற்றிருக்கை. ஆங்கிலத்தில் the Throne என்று மொழிபெயர்க்கப்படும். அதனினும் சமயவியற் சார்ந்து the Empyrean என்று சுட்டப்படுவதும் உண்டு. இறைவனின் அட்சியதிகாரக் குவி மையம் என்று இதனை விளக்கப்படுவதுண்டு. இறை விதானம் என்று நரியம்பட்டு எம்.ஏ.சலாம் ”மஸ்னவி ஷரீஃப்” தமிழாக்கத்தில் இதனைக் குறிப்பிடுகிறார். 

வரி-4 ஆதமின் சந்ததி – ஃபார்சி மூலத்தில் “ஃகாக்கியான்” என்னும் சொல்லினை அத்தார் வழங்கியுள்ளார். மண்ணின் மைந்தர்கள் என்று பொருட்படும். மண்ணால் படைக்கப்பட்ட ஆதமின் சந்ததிகள் என்பது விளக்கம்.

வரி-12 பொற்பேழை – சோனே கீ டப்யா என்று உருது மொழிபெயர்ப்பில் உள்ளது. டப்பா என்பது பெட்டியைக் குறிக்கும். டப்யா என்பது சிறு பெட்டி (small box or casket). எனவே தமிழில் அதனைப் பேழை என்று பெயர்த்துள்ளேன். பொற்பேழை – pyxis of gold.

      பொன் (தங்கம், ஸ்வர்ணம்) என்பது ஒளியுடன் ஒப்புரைக்கப்படுவது உலக ஆன்மிக மரபுகளில் உள்ளதே. ”ஹிரண்மயேன பாத்ரேன சத்யஸ்யாபிஹிதம் முகம்” – “சத்தியத்தின் முகம் பொன் மூடியால் மறைக்கப்பட்டுள்ளது” (15) என்று ஈசா உபநிஷதம் உரைக்கிறது.

      சூரியனின் கதிர்களைப் பொன் என்று உவமிப்பர். அதிகாலையில் சூரியப் பொற்கதிர்களை வரவேற்றுக் கூவும் சேவலைப் “பொற்கோழி கூவிற்று” என்று வருணிக்கிறார் வடலூர் வள்ளலார்.

வரி-14-15: உடலைக் கூண்டென்றும் உயிரைப் பறவை என்றும் சொல்வது அனைத்துலகக் கவி மரபு.

      ”வணிகனும் கிளியும்” என்னும் புகழ்பெற்ற கதையில் மௌலானா ரூமி சொல்கிறார்: “தன் கஃபஸ் ஷக்லஸ்த்” – “உடல் என்பது கூண்டின் வடிவம்” (மஸ்னவி #1849). அக்கதையில் கிளி என்பது ஆன்மாவின் குறியீடு.

      சூஃபி ஞானி இமாம் சாஅதி (ரஹ்) அவர்கள் பாடிய வரிகள் இதோ: “சாஅதியே! உன் உடல் ஒரு கூண்டு மாதிரி, உயிரோ பறவையைப் போல் / கூண்டினைப் பறவை உடைத்துவிட்டது! அந்தப் பறவை அதோ பறந்து விட்டது!” (சாஅதி, தனெ தூ சூன் கஃபஸ், ஊ ரூஹ் ஹம்ச்சூ முர்க் / ரூஹ் அஸ் கஃபஸ் ஷிகஸ்தா ஊ முர்கஷ் பரீதா கீர்)

இந்தச் சுவனத்துப் பறவை இவ் ஒசியும் கூண்டினுள் இடப்பட்ட போது…”  (”When that this Bird of Paradise put in / This Wicker Cage (my Corps)…) என்கிறார் ஆங்கிலக் கவி எட்வர்டு டைலர் (’I am the Living Bread: Meditation Eight: John 6:51)

      “களிமிகு வானம்பாடி கூண்டினில் அடைபட்டாங்கு / மனிதனின் மேலுயர் ஆன்மா என்புதோல் வீட்டில் வாழும்” (As a dare-gale skylark scanted in a dull cage, / Man's mounting spirit in his bone-house, mean house, dwells) என்கிறார் ஆங்கிலக் கவி ஜெரார்டு மேன்லி ஹாப்கின்ஸ்.

      இம்மை வாழ்வில் ஆன்மா அடைபட்ட உடல்தான் கூண்டாக இருக்கிறது. ஆனால், மறுமை வாழ்வில் சொர்க்கத்தில் அது மேலானதொரு உடலைப் பெறும். அவ்வுடல் கூண்டு அன்று, கூடு என்று ஹாப்கின்ஸ் கூறுகிறார். “அஃதவன் சொந்தக் கூடு, கானகக் கூடு, சிறையன்று. // சிறந்த நிலையில் மனிதனின் ஆன்மா ஊனுள் பொதிந்தே காணப்படும்.” (“But his own nest, wild nest, no prison. // Man's spirit will be flesh-bound, when found at best”).

      ஒப்பு நோக்குக: ”பகுத்தறிவு என்பது உடலைக் கொண்டே நிலை பெற்றுள்ளது என்று நீங்கள் பாசாங்கு செய்கிறீர்கள். ஆனால் உண்மையில் உடல்தான் பகுத்தறிவைக் கொண்டு நிலை பெற்றுள்ளது” என்கிறார் மௌலானா ரூமி (”ஃபீஹி மா ஃபீஹி” – உரை எண்:2)

”ஆன்மாவே உடலைக் காக்கிறது. சிலசமயம், அதனை உயர்த்தவும் செய்கிறது. தனது கூண்டினைப் பாதுகாக்கும் ஒரே பறவை அதுவே!” என்கிறார் விக்டர் ஹ்யூகோ.

வரி - 25-26: நம்ரூது (Nimrod) என்பான் இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஓர் அரசன். ஷினார் (சுமேரியா / மெசப்பொட்டோமியா) பகுதியை ஆட்சி செய்தவன் என்று பைபிள் குறிப்பிடுகிறது. பாபெல் கோபுரத்தைக் கட்டியவன் என்றும் பதிவுகள் உண்டு. இப்றாஹீம் நபி கொண்டு வந்த இறைச் செய்தியை மறுத்ததுடன் அவர்களை நெருப்பினுள் இட்டுக் கொலை செய்யவும் முனைந்தவன். ஆணவத்தின் உருவமாய் வாழ்ந்தவன். மூக்கின் வழியே உள் நுழைந்த கொசு ஒன்று மூளையைக் குடைந்தமையால் இவன் இறந்தான் என்று குர்ஆன் விளக்கவுரைகள் பகர்கின்றன.

      ”வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்று தமிழிலொரு சொலவடை உண்டு. அஃதொரு ஞான வாசகம். அதே கருத்தில், “எல்லாம் வல்ல இறைவனுக்குக் கொசுவும் ஒரு ஆயுதம்” என்று காட்டுவதாக இந்நிகழ்வை மெய்ஞ்ஞானியர் பார்க்கின்றனர். ”நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதனினும் அற்பமானதையோ உவமை உரைக்க நாணுவதில்லை” (குர்ஆன்:2:26) என்பதையும் ஓர்க.

      மௌலானா ரூமி சொல்கிறார்: “’ஞானியின் பார்வையில் செப்புக் காசும் தங்கக்காசும் சமமே, பூனையும் சிங்கமும் சமமே.’ ஏனெனில், இறைவன் அருளிவிட்டால் ஆயிரம் பொற்காசுகள் செய்யும் வேலையை ஒரு செப்புக் காசு நிறைவேற்றிவிடும். இறைவன் தடுத்துவிட்டால் ஆயிரம் பொற்காசுகள் சேர்ந்தாலும் ஒரு செப்புக் காசின் வேலையைச் செய்யாது. இறைவன் அனுப்பி வைத்தால் பூனை ஒன்று சிங்கத்தைக் கொன்றுவிடும், நம்ரூதைக் கொசு ஒன்று கொன்றதைப் போல்” (’ஃபீஹி மா ஃபீஹி’ –உரை #12).

      ”ஜாவீத் நாமா” என்னும் காவியத்தில் மகாகவி இக்பால் சொல்கிறார்:

      ”காதலின் சக்தி காற்று மண் மற்றும் நீரால் ஆனதன்று;
      தசைகளின் இறுக்கத்தால் வருவதன்று அதன் வலிமை;
      ஒரு ரொட்டித் துண்டால் காதல் ஃகைபரைக் கைப்பற்றியது;
      காதல் நிலவின் உடலை இரண்டாய்ப் பிளந்தது;
      அடியேதும் இன்றி நம்ரூதின் கபாலத்தை உடைத்தது;
      போர்க்களமே காணாமல் ஃபிர்அவ்னின் படைகளைச் சாய்த்தது.”

      (”ஸோரெ இஷ்க் அஸ் பாதோ ஃகாகோ ஆப் நீஸ்த் / குவ்வத்தஷ் அஸ் சஃக்தியே அஃஸாப் நீஸ்த் // இஷ்க் பா நானே ஜவீன் ஃகைபர் குஷாத் / இஷ்க் தர் அந்தாமெ மஹ் ச்சாகே நிஹாத் // கல்மாயெ நம்ரூத் பே ளர்பே ஷிகஸ்த் / லஷ்கரே ஃபிர்அவ்ன் பே ஹர்பே ஷிகஸ்த்” – நூல் ’ஜாவீத் நாமா’ : 329-334)

வரி-29 குவலய நெஞ்சம் – இது நபிகள் நாயகத்தைக் குறிக்கும் வருணிப்பு. நபிகள் நாயகம் தனது அணுக்கத் தோழரும் தொண்டருமான அபூபக்கருடன் மக்கா நகரைத் துறந்து மதீனா நகரை நோக்கிப் பயணமானபோது அவர்களைக் கொல்லும் திட்டத்துடன் எதிரிகள் பின் தொடர்ந்தனர். இடையில், சவ்ர் என்னும் குகையினுள் அவ்விருவரும் தங்கியிருந்தபோது சிலந்தி ஒன்று மிக விரைந்து வலையால அம்முழையின் வாயிலை அடைத்தது. பன்னாட்களாக அதனுள் யாரும் சென்றிருக்கவில்லை என்று கருதி எதிரிகள் அப்பால் அகன்றனர். 

      நபியைக் குறிக்க ”ஸத்ரே ஆலம்” என்னும் சொற்றொடரைக் கையாள்கிறார் அத்தார். பிரபஞ்சத்தின் நெஞ்சம் – Soul of the Universe என்று பொருட்படும். மோனைத் தொடை கருதி ‘குவலய நெஞ்சம்’ என்று குறிப்பிட்டுள்ளேன்.

(to be continued...)

Tuesday, January 21, 2020

எழுமையும் பெற்றேன்



      இது ஒரு சிறு நாட்குறிப்பு. நேற்று (20-01-2020, திங்கட் கிழமை) திருமண நிகழ்வு ஒன்றின் நிமித்தம் சென்னைப் பயணம். நள்ளிரவில் திருச்சி மீள்கை. 

      மாலை நந்தனம் மைதானத்தில் நடைபெற்று வந்த புத்தகப் பெருவிழாவிற்குச் சென்றோம். உள்ளே நுழைகையில் பொதுக்கூட்ட அரங்கில் எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றிக் கொண்டிருந்தார். மார்க்ஸ்-எங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிச அறிக்கையின் மறுபதிப்புக் குறித்த நிகழ்வு அது. “மதம் ஒருபோதும் மனிதனுக்கு விடுதலை நல்காது. அது தனது கோட்பாடுகளின் பிடியில் அவனைச் சிறை வைத்திருக்குமே அன்றி விடுவிக்காது” என்று பேசிக் கொண்டிருந்தார். நுழைவுச் சீட்டு வாங்க நாங்கள் கவனப் பட்டிருந்ததால் வேறு என்ன பேசினார் என்று நினைவில்லை.

      அறுநூறு கடைகள். பல நூறாயிரம் நூற்கள். ஒவ்வொரு கடையாக மேய்ந்து செல்வதற்கே ஒரு நாள் முழுவதும் வேண்டும். எங்களுக்கு அவகாசம் இல்லாததால் என்ன நூற்களைக் கருதி வந்தோமோ அவற்றை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டோம்.

        தி இந்து தமிழ் திசை நாளிதழ் 21-01-2020

      ரஹ்மத் பதிப்பகக் கடையில் ”மஸ்னவி” காவியத் தமிழாக்கத்தின் பாகங்கள் இருந்தன. ஏற்கனவே ஐந்து பாகங்கள் என்னிடம் உண்டு. ஆறாம் மற்றும் ஏழாம் பாகங்களை நாடியே வந்திருந்தேன். அவற்றை வாங்கிக் கொண்டேன். 

      மௌலானா ரூமி (ரஹ்) ஃபார்சி மொழியில் ஆறு நூற்களாகத்தான் மஸ்னவியைப் பாடினார்கள். நரியம்பட்டு எம்.ஏ.சலாம் அவர்களின் தமிழாக்கம் ஏழு பாகங்களாக வந்திருக்கிறது. (ஆறாம் பாகம் அளவிற் பெரிது. எனவே இரண்டாகப் பகுத்து வெளியிடப்பட்டுள்ளது).
ஐந்தே முக்கால் மணியளவில் அரங்கை விட்டு வெளியே வந்தபோது அங்கே தமிழக அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வில் கிடைத்த சங்க காலத்துப் பழம் பொருட்களில் சிலவற்றைப் பார்வைக்கு வைத்திருந்த கூடம் இருக்கக் கண்டு அதனுள் நுழைந்தோம். துறையினர் அங்கே “’கீழடி’ – வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்” என்னும் கையேடு ஒன்றினை விற்றுக் கொண்டிருந்தனர். தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரதிகள் இருந்தன. இருபத்து நான்கு மொழிகளில் அந்நூலின் பிரதி கிடைப்பதாக விளம்பரமும் செய்திருந்தனர். நான் மேசையருகே சென்று நின்றபோது “என்ன சார் அறபியில் வேணுமா? உருதுவில் வேணுமா?” என்று விற்பனையாளர் கேட்டார். (அறபியும் உருதுவும் இருவேறு மொழிகள் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்ற அளவில் அந்த அன்பரைப் பாராட்டத்தான் வேண்டும்.) “தமிழே தாருங்கள்” என்றபடி நான் சிரித்தேன். “இல்ல, அறபி உருதுவுலயும் வெளியிட்டிருக்கோம். அதுவும் கிடைக்கும். அதுக்குத்தான் சொன்னேன்” என்றார். (என்ன பாய், நீங்களே அறபி உருதுப் பிரதிகளை வாங்காட்டி வேற யாருதான் வாங்குவாங்க? என்பது அவரின் தர்க்கமாக இருக்கக் கூடும்.)


வெளியேறி நடந்தோம். கல்கோனா விற்கும் தாத்தா கூவி அழைத்தார். கண்டுகொள்ளாமல் நடந்தோம். ஜூட் பை, செல்பேசி உறை, பன்னிறங்களில் குளிர் பானம், பார்த்தே பல்லாண்டுகள் ஆகிவிட்ட பருவட்டான நாட்டு எலந்தைப் பழம் மற்றும் கூறிடப்பட்டு விசிறி போல் விரித்து வைக்கப்பட்ட மாங்காய், இன்ன பிற பண்டக் கடைகளை எல்லாம் கடந்து வெளியேறிய இடத்தில் காவல் துறை நிறுத்தியிருந்த ’நமது நண்பர்’ ஒருவர் என் கையில் இருந்த நூற்களைப் பார்த்தார். “மஸ்னவி ஷரீஃப்” என்று தமிழில் எழுதியிருந்ததைப் படித்தவர், “அட, நீங்களும் தமிழ் ’புக்’லாம் வாங்குவீங்களா?” என்று கேட்டார்.

“நாங்கள் தமிழ்ப் பேராசிரியர்கள்” என்றேன்.

“எங்க?”

“திருச்சி. ஜமால் முகம்மது கல்லூரி”

“திருச்சிலேர்ந்தா இதுக்கு வந்தீங்க?”

“இல்லீங்க. ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்தோம். அப்படியே ஊருக்குத் திரும்புறப்ப இங்கயும் வந்துட்டுப் போறோம். வரட்டுங்களாய்யா.” என்று சொன்னேன். அவரும் இன்முகத்துடன் தலையாட்டினார்.

அடியேன் வெண்ணிற ஜிப்பாவும் சாம்பல் நிற பைஜாமாவும் அணிந்திருந்தேன். உடன் வந்த பேராசிரியர் இம்தாதுல்லாவும் அவரது மூத்த மகனும்கூட அதே மாதிரி ஆடைதான் அணிந்திருந்தனர். அத்துடன் தொப்பி, தாடி என்று எங்களைப் பார்த்த அவர்கள் எங்களை மார்க்க அறிஞர்கள் (ஹஜ்ரத்துகள்) என்று எண்ணியிருக்க வேண்டும். தப்பில்லை.

என்ன, ”அறபி, உருது பிரதிகளும் இருக்குங்க. அதுவும் வேணுமா?” என்று அந்த தொல்லியல் அலுவலர் கேட்டிருந்தால் அது சரியான புரிதலில் கேட்டதாக இருந்திருக்கும்.

(’ஹஜ்ரத்’ என்று அடையாளப் படுத்தப்பட்ட தோற்றத்தில் இருந்த) என் கையில் தமிழ் நூற்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு அந்தக் காவலர் எவ்வித உணர்வு மாற்றமும் இன்றி இயல்பாக இருந்திருந்தால் அது அவருக்குச் சரியான புரிதல் இருப்பதைக் காட்டியிருக்கும்.

அத்தகைய நிலையை நோக்கிச் சமுதாயம் நகர்ந்தாக வேண்டும் நண்பர்களே!

Monday, January 13, 2020

யாதும் ரோஜாவின் பெயரும் - Part4


(”யாதும் ரோஜாவின் பெயரும்” என்னும் இக்கட்டுரை மூன்று பகுதிகளாக ஏற்கனவே பதிவிடப்பட்டது. Part-1 3-மே-2014 சனி, Part-2 22-மே-2014 வியாழன், Part-3 10-செப்டர்ம்பர்-2014 புதன் ஆகிய தேதிகளில் பதிவேறின. அதன் இறுதிப் பகுதி இது.)


ஜிப்ரானிலிருந்து மீண்டும் இப்னுல் அரபியின் பக்கம் திரும்புவோம். நைஸாம் பற்றி இப்னுல் அரபி தரும் உருவகங்களின் உட்பொருளை ஆராய்ந்து ரால்ஃப் ஆஸ்டின் என்பார் ”The Lady Nizam – an image of Love and Knowledge” என்றோரு கட்டுரை வரைந்துள்ளார். அதில் அவர் வெளிப்படுத்தும் சில சுவையான புள்ளிகளை கவனிப்போம். தேவை என்று தோன்றிய இடங்களில் அடைப்புக்குறிக்குள் அடியேன் கருத்துரைக்கிறேன்.
”நைஸாம் காதல் மற்றும் அறிவின் தோற்றமாக இருக்கிறாள். ஏனெனில் அவள் ஈரான் மற்றும் கிரேக்கத்தின் தன்மைகளை ஒருங்கே கொண்டு அரபு தேசத்தில் வாழ்கிறாள். (கிரேக்கர்களிடம் கூர்மையான தத்துவ சிந்தனை இருந்தது. ஆனால் காதல் மேம்படவில்லை. ஈரானியர்களிடம் உள்ளுணர்வின் எழுச்சியான காதல் இருந்தது. ஆனால் தத்துவம் மேம்பட்டிருக்கவில்லை. அரபு மண்ணில் தோன்றிய நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இவ்விரு தன்மைகளையும் ஒருங்கே சிறப்பாக இணைத்து வெளிப்படுத்தினார்கள்.) இவ்வாறு, நைஸாமின் உருவகம் துருவங்களின் இணைவாகவும், மூன்றான பன்மையின் ஒருமையாகவும் இருக்கிறது. 
 *நைஸாமின் உருவக அடிப்படையை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனில் இப்னுல் அரபி (ரஹ்) அவர்களின் மாபெரும் நூற்களில் ஒன்றான “ஃபுசூசுல் ஹிகம்” என்பதன் 27ம் ஃபஸ்ஸை (அத்தியாயத்தை) நோக்க வேண்டும். அதில் அன்னார் மிகவும் துணிச்சலாகக் கூறியிருக்கும் விளக்கங்களில் ஒன்று, ’இறைவனை தரிசிப்பதற்கான சிறந்த ஊடகம் பெண்’ என்பதாகும். ஏனெனில் பெண்ணில் இறைவனின் படைப்புச் செயலும் படைப்பின் உடன்பாட்டுத் தன்மையும் இலகுவாகக் கலந்திருக்கின்றன.”
இக்கருத்து இப்னுல் அறபி (ரஹ்) பாடியுள்ள பின்வரும் கண்ணியில் பிரதிபலிக்கிறது: “திண்ணமாக அவளோ அறபிப் பெண்தான், எனினும், பாரசீகப் புதல்வியரின் தோன்றல்” (“இன்னஹா மின் ஃபதயாத்தின் உருபின் / மின் நபாத்தில் ஃபுர்ஸி அஸ்லன் இன்னஹா” நூல்: தர்ஜுமானுல் அஷ்வாக்:42:4) இவ்வரிகளை, “Verily, she is an Arab girl, belonging by origin to daughters of Persia, yea, verily.” என்று ரெனால்டு நிக்கல்சன் ஆங்கிலப் படுத்தியுள்ளார். “She is both Arab and foreign” என்று சுருக்கித் தருகிறார் ரால்ஃப் ஆஸ்டின்.  
மௌலானா ரூமி அவர்களும் பெண் குறித்து இதே கருத்தினைப் பேசியுள்ளார்:
“பெண் இறைவனின் ஒளிச்சுடர்; அறிக,
மண்ணுலகக் காதலி மட்டுமே அல்லள்!
படைத்தல் என்னும் பண்பின் பாத்திரம்,
படைப்பு அல்லள் என்றும் பகரலாம்!”
(”ஆன் பர்த்தவெ ஹக்கஸ்த் மஃஷூக் நீஸ்த்; ஃகாலிக்கஸ்த் கூயீ யா மஃக்லூக் நீஸ்த்” - மஸ்னவி:பாகம்-1: 2436)
ரால்ஃப் ஆஸ்டின் தரும் அற்புதமான கருத்துப் புள்ளிகளை மேலும் காண்போம்:
*நைஸாமைக் காதலின் தோற்றமாகக் காணும் உருவகத்தின் ரகசியம் இறைவன் மறைந்த பொக்கிஷமான தன்னை தனக்கே வெளிப்படுத்துவதற்கு, தனது தனித்தன்மையான தனிமை நிலையிலிருந்து வெளிப்பட்டுத் தனது அனந்த வாய்ப்புக்களில் தன்னைக் காண்பதன் ஆனந்தத்தை அடைவதற்கு, தனது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்குக் கொண்ட பூர்வீக ஏக்கத்தில், நேசத்தில் (ஹுப்) இருக்கிறது. தன்னை வெளிப்படுத்த காதலுக்கு இரு பொருள் தேவை, காதலனும் காதலியும். காதல் என்பதே இரண்டிற்கு இடையிலான ஆசையும் புகழ்தலும், அவை ஒன்றில் ஒன்று கலக்கத் துடிப்பதும், ஒன்றில் ஒன்று இருக்கத் துடிப்பதும் ஆகும்.”
இஸ்லாமிய இறைக் கொள்கையைத் திரட்டிச் செறிவாக வெளிப்படுத்துகின்ற திருக்குர்ஆனின் 112-ஆவது அத்தியாயத்தில் இறைவனைக் குறிக்கக் கையாளப்பட்டிருக்கும் ”அஸ்-சமது” என்னும் திருநாமத்தின் பக்கம் நம் கவனத்தைக் கோருகிறார் ஆஸ்டின். பொதுவாக, அத்திருநாமம் தமிழில் ”தேவையிலான்” என்றும் ஆங்கிலத்தில் “The Eternal One” அல்லது “The Everlasting One” (’நித்தியன், நிரந்தரன்’) என்றே மொழி பெயர்க்கப்படுகிறது. அச்சொல்லின் வேர் (ஸ-ம-த), அணிகள் பூட்டி அலங்கரிக்கப்பட்ட மணப்பெண் அல்லது பிரசாதம் வைக்கப்பட்ட பாத்திரம் காட்சிப்படல் என்னும் அர்த்தங்களையும் தருகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். (”In the great  112th chapter of the Qur'an which so succinctly sums up the quintessential teachings of Islam on God, the term samad, usually translated "the Eternal One", comes from an Arabic root which also denotes the beauty of a bride in all her finery, or the exposition of the consecrated host in the monstrance.”) எனவே, பெண் ஒரு தூய பாத்திரம் என்றும், மெய்ப்பொருளின் வெளிப்பாடே அப்பாத்திரத்தில் நாம் பெறும் பிரசாதம் (தபர்ருக்) என்றும் கூறலாம்.
பெண் எப்போதும் அழகு என்னும் கோட்பாட்டின் கோணத்திலேயே பேசப்படுகிறாள். இப்னு அரபி (ரஹ்) அவர்கள் பெண்ணை அழகு மற்றும் அறிவு ஆகியவற்றின் வெளிப்பாட்டுத் தலமாகக் காண்கிறார்கள். அதாவது, இறைவனின் அழகு மற்றும் அறிவு ஆகியவை வெளிப்படும் ஊடகம் அவள். அஃது எப்படி என்பதை இப்னு அரபி அவர்கள் கையாளும் அறபிக் கலைச் சொற்களின் வழி ரால்ஃப் ஆஸ்டின் விளக்குகிறார்.
”ஹப்ப” என்னும் அறபி வேர்ச்சொல் நேசம் என்று அர்த்தப்படுவதுடன் கண்ணின் மணியயை (விழிப்பாவையை)க் குறிப்பதாகவும் உள்ளது. எனவே, “அழகு என்பது காண்பார் கண்ணில்” (”beauty lies in the eye of the beholder”) என்னும் சொலவடை. அழகு என்பது அன்பு என்பதுடன் தொடர்புடையது ஆதலால், இறைவனின் அன்பு மற்றும் அறிவு ஆகியவை வெளிப்படும் ஊடகம் என்றும் சொல்லலாம்.
”நைஸாம் காதல் மற்றும் அறிவின் தோற்றமாக இருக்கிறாள். ஏனெனில் அவள் ஈரான் மற்றும் கிரேக்கத்தின் தன்மைகளை ஒருங்கே கொண்டு அரபு தேசத்தில் வாழ்கிறாள்.” என்று இப்னு அரபி (ரஹ்) பாடுவதை ஏற்கனவே கண்டோம். கிரேக்கம் அறிவைக் குறிக்கிறது, ஈரான் (பாரசீகம்) அன்பைக் குறிக்கிறது என்றும், அரேபியா அவ்விரண்டையும் ஒன்றுபடுத்தும் இடம், “படைப்பும் உள்ளமையும் சந்திக்கும் இடம்”, ’நகரங்களின் தாய்’ (உம்முல் குராஅ) ஆகிய மக்கா அதில் உள்ளது, அந்த மக்காவில் ஆதி இறையில்லம் (கஃபத்துல்லாஹ் – அல்லாஹ்வின் வீடு) இருக்கின்றது என்றும் ஆஸ்டின் விளக்குகிறார்.
உள்ளமை மற்றும் படைப்பு ஆகிய இரண்டு துருவங்கள் சந்திக்கும் புள்ளி மட்டுமன்று, அவை ஒவ்வொன்றின் உள்ளும் மற்றதன் குறிப்பு உறைகிறது (”each pole has innate within it the hint of the other.”) என்று குறிப்பிடும் ஆஸ்டின் அதனை விளக்க இப்னு அறபி (ரஹ்) கையாளும் இரண்டு அறபிச் சொற்களைச் சுட்டிக் காட்டுகிறார்.
”ஹப்ப” என்னும் அறபி வேர்ச்சொல் நேசம் என்று பொருள் படுவதுடன் விதை என்றும் பொருட்படுகிறது. அதாவது, படைப்புக்களின் (’சர்வகோடி சிருஷ்டிகளின்’) சுயங்கள் இறைவனின் உள்ளமையில், நேசம் தம்மை வெளிப்படுத்துவதற்காகக் காத்திருக்கின்றன.
”அர்ஃப்” என்னும் அறபி வேர்ச்சொல் அறிவு, ஞானம் என்று அர்த்தமுள்ளது. அத்துடன், நறுமணம் என்றும் பொருட்படுகிறது. அழகும் நேசமும் நறுமணம் கமழ்வன.
(இத்துடன், ”இல்ம்” என்னும் கலைச்சொல்லையும் இப்பொருட்பாடுகளில் காணலாம் என்று கருதுகின்றேன். ஐன்-லாம்-மீம் என்னும் வேரிலிருந்து வரும் ’இல்ம்’ என்னும் சொல் அறிவு என்று பொருட்படும். அவ்வேர் எழுத்துக்களை லாம்-மீம்-ஐன் என்று மாற்றி அமைத்தால் ”லமஅ” என்னும் சொல் வரும். அதற்கு ‘பிரகாசம்’ என்று பொருள். அறிவு பிரகாசிப்பதே அழகு.)
”தெய்வீக ஆட்சியால் ஆன்மாவிலும் உடலிலும் அழகு நல்கப்பட்ட ஒரு பெண் சத்தியம் ஆவாள். ஏகநேரத்தில் அவள் வெளிப்பாடாகவும் ரகசியமாகவும் இருக்கிறாள். காதலால் மட்டுமே அவளை நாம் புரிந்துகொள்ள முடியும், நற்பண்பால் மட்டுமே தொட இயலும். அத்தகைய ஒரு பெண்ணை நாம் விவரிக்க முயலும் போது அவள் நீராவி போல் மறைந்து விடுகிறாள்.” என்று சல்மாவைப் பற்றி கலீல் ஜிப்ரான் கூறுவதை மீண்டும் நினைவு கூர்க. இக்கருத்துக்கள் இப்னு அரபி (ரஹ்) அவர்களது கருத்துக்களின் பிரதிபலிப்பே.
நைஸாம் குறித்து இப்னு அரபி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்:
“அவளை நாம் நினைக்க முயல்கையில்
கரைந்து காணாமல் போகிறாள்;
கண்கள் அவளைக் காண்பதற்கு அரிதாய்
மிகவும் மிகவும் நுண்மை அவள்”
(’லுஃபத்து திக்ருனா யுதவ்விபுஹா / லதுஃபத் அன் மசாரிஹிந் நழரி’ – நூல்: தர்ஜுமானுல் அஷ்வாக் 44:4)
      இறுதியாக, இப்னு அரபி (ரஹ்) அவர்கள் உருவகித்துப் பாடுகின்ற பெண்ணின் பெயரான “நைஸாம்” (Nyzam) என்பதை ”அப்ஜத்” என்னும் எழுத்து மதிப்பு முறைமையின் அடியாகப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார் ரால்ஃப் ஆஸ்டின். அந்தப் பெயரே ஒரு குறியீட்டுக் கட்டமைப்பு அமைந்தது என்று காண்கிறார். நைஸாம் (இன்னும் சரியாக, ”நைழாம்”) என்பது நூன்-யா-ழுவே-அலிஃப்-மீம் என்னும் ஐந்து எழுத்துக்களால் ஆன சொல் (NYZAM). முதல் எழுத்தான நூன் என்பதன் மதிப்பு 50. அஃது, பிறப்பு என்று அர்த்தப்படுவது. இறுதி எழுத்தான மீம் என்பதன் மதிப்பு 40. அஃது, இறப்பு என்று அர்த்தப்படுவது. இரண்டாம் எழுத்தான் ’யா’  என்பது அறபி எழுத்து வரிசையில் கடைசி எழுத்தாகும். அவ்வகையில் அது முடிவு என்னும் இறப்பைக் குறிக்கும். இப்பெயரின் இறுதிக்கு முந்திய எழுத்தான அலிஃப் என்பது அறபி எழுத்து வரிசையில் முதல் எழுத்தாகும். அவ்வகையில் அது தொடக்கம் என்னும் பிறப்பைக் குறிக்கும். எனவே, நைஸாம் / நய்ழாம் என்னும் பெயரின் முதல் பாதியான ’நய்’ (NY) என்பதன் இரண்டு எழுத்துக்கள், பிறப்பினுள் முடிவு அடங்கி இருப்பதையும், பெயரின் இரண்டாம் பாதியான ’அம்’ (AM) என்பதன் இரண்டு எழுத்துக்கள் இறப்பினுள் தொடக்கம் அடங்கியிருப்பதையும் குறிக்கின்றன.
      நைழாம் என்னும் பெயரின் ஐந்து எழுத்துக்களில் நடுவெழுத்தாக அமைந்திருப்பது ’ழுவே’ என்பது. (இதன் உச்சரிப்பு நுட்பமானது. தமிழின் ழகரத்துக்கும் ஆங்கிலத்தின் Z-க்கும் அருகில் வருவது. எனவேதன் நைஸாம் என்றும் நைழாம் என்றும் மாற்றி மாற்றி எழுத நேர்கிறது என்பதை ஓர்க). இவ்வெழுத்தின் மதிப்பு 900. ழுவே என்னும் எழுத்து மறை ரகசியங்கள் நிரம்பியது என்று தனது ஞானப் பெருநூலான “ஃபுத்தூஹாத்தெ மக்கிய்யா” (மக்காவின் திறப்புக்கள்)-இல் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை ஆஸ்டின் சுட்டிக் காட்டுகிறார். நைஸாம் என்னும் பெயரின் அர்த்தம் ஒத்திசைவு (Harmonia) என்பதாகும். பிறப்பும் இறப்பும் ஆகிய எதிர்மங்கள் ஒன்றில் ஒன்று இணைந்து ஒத்திசைவதைச் சுட்டுவதாகவே அப்பெயர் இருக்கிறது. அவ்வழி அஃது, படைப்பும் படைத்தவனும் இணைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஞானத்துடன் நோக்கும்போது பெண் என்னும் படைப்பு, இறைவனைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது.
      இறைவன் யார்? என்னும் கேள்விக்கு நுஸ்ரத் ஃபதேஹ் அலி ஃகான் பாடிய ஒரு பாடல் இப்படி விடை பகர்கிறது: “உள்ளமையின் முறைமையை அமைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஒருவன், அவனே இறைவன்” (”கோயி தொ ஹே நிஸாமெ ஹஸ்தி / ச்சலா ரஹா ஹே ஒஹி ஃகுதா ஹே”).
      ஆம். நிஸாம் (Nizam) என்றால் முறைமை என்று பொருள். இறைவன் படைத்த சர்வகோடி சிருஷ்டிகளின் தொகுப்பான முழுப் பிரபஞமும் ஓர் ஒழுங்கமைவு கொண்டுள்ளது. நைஸாம் என்றால் சிறிய நிஸாம் என்று பொருள். அதாவது, பெண் ஒரு சிறிய பிரபஞ்சமாக இருக்கிறாள். பிரபஞ்ச ஒழுங்கமைவைப் பிரதிபலிக்கின்றாள் எனலாம். மேலும், நிஸாம் என்னும் சொல் கிளைத்த வேரிலிருந்து நஸ்ம் (Nazm) என்னும் சொல்லும் வருகிறது. நஸ்ம் என்றால் செய்யுள் / கவிதை என்று பொருள். பிரபஞ்சமே இலக்கணம் வழாது இறைவனால் இயற்றப்பட்ட செய்யுளாக இருக்கிறது. அதுபோல் நைஸாமும் (அதாவது, பெண்ணும்) ஒரு கவிதையாக இருக்கிறாள் எனலாம். அகக்கண் திறப்பார் ‘ஆழ்ந்திருக்கும் கவியுளம்’ அவளில் காண்பார்.

      ”’நான் மறைந்த பொக்கிஷமாக இருந்தேன். அறியப்பட விரும்பினேன். அதனால் சிருஷ்டியைப் படைத்தேன்’ என்று அல்லாஹ் சொல்கிறான்” (குன்து கன்ஸன் மஃக்ஃயிய்யன் ஃப அஹ்பப்து அன்(ய்)யுஃரஃப ஃபஃகலக்துல் ஃகல்க் – ஹதீஸ் குத்ஸி). படைப்புக்கள் வெளிப்படுவதற்கு ஒரு சிருஷ்டித் தலமாகப் பெண் இருக்கிறாள். அன்பைக் குறிக்கும் ஹப் என்னும் வேர்ச்சொல் விதை என்பதையும் குறிப்பதன் மூலம் படைப்பின் வெளிப்பாட்டைச் சுட்டுவதையும், அறிதலைக் குறிக்கும் அர்ஃப் என்னும் வேர்ச்சொல் நறுமணத்தைக் குறிப்பதையும் முன்பே கண்டோம். இல்லறத்திற்காக ஆணும் பெண்ணும் இணையும் வதுவை முறையைப் பழந்தமிழர் ”திருமணம்” (உயர்ந்த நறுமணம்) என்று அழைத்திருப்பது எண்ணற்பாற்று. “திருமணம் எனது வழிமுறை” (அந்நிக்காஹ் மின் சுன்னத்தீ) என்று நவின்ற நபிகள் நாயகம் (ஸல்), “உங்கள் உலகிலிருந்து எனக்கு உவப்பாக்கப்பட்டுள்ளன: நறுமணம் பெண்கள் மற்றும் எனது கண்ணின் குளிர்ச்சி தொழுகையில் தேக்கப்பட்டுள்ளது” (ஹுப்பிப் அலய்ய மின் துன்யாக்கும் அத்தய்யிபு வந்நிஸாஉ வ ஜுயிலத் குர்ரத்து ஐனீ ஃபிஸ்ஸலாத்தீ) என்று அருளியிருப்பதும் இங்கே சிந்தனைக்குரியது.
      ”ஆண் பெண் ஆகியோரை நான் இப்படித்தான் ஏற்கிறேன் – போருக்குத் தகுந்தவனாக அவன், தாய்மைக்குத் தகுந்தவளாக அவள்” (“Thus would I have man and woman – fit for war, the one; fit for maternity, the other”) என்கிறார் ஃப்ரெட்ரிக் நீட்ஷே.
      வீரமே அழகைக் காதலிக்கிறது. அழகு கோழைகளை விரும்புவதில்லை. ஆன்மிகத்திலும் துணிச்சல் மிக்க உள்ளமே விவேகம் என்னும் வாளால் அஞ்ஞானத்தை வெட்டி வீழ்த்தி இருளெனும் திரைகளை விலக்கி மெய்ம்மையின் முகத்தை தரிசிக்கிறது.
      ஆண், இறைவனின் வீரன். பருவுலகில் அவனே பெண்ணின் வீரன்.
      அவன், காடு கிழாள் என்று காணப்பட்ட கொற்றவையின் வீரன்; இறைவனின் வார்த்தையைத் தனது கருவில் சுமந்த கன்னித் தாயான மர்யமின் வீரன்; வடமீன் கற்பின் திறனும் ஒளியும் இலங்கும் ஃபாத்திமாவின் வீரன்.
(--finis--)