Thursday, January 23, 2020

பறவைகளின் பரிபாஷை - 1



பறவைகளின் பரிபாஷை
(சூஃபி காவியம் ‘மன்திக்குத் தைர்’)


ஃபார்சி மூலம்
ஃபரீதுத்தீன் அத்தார்

உர்தூ வழித்துணை
ஹகீம் மதீவுர் ரஹ்மான் நக்‌ஷ்பந்தீ

ஆங்கில வழித்துணை
அஃப்கம் தர்பந்தீ & டிக் டேவிஸ்

தமிழில்
ரமீஸ் பிலாலி


இறைப் புகழ்ச்சி

உயிர் அருளும் மேலோனை வியந்து புகழ்கிறேன்.
கைப்பிடி மண்ணுக்கு நம்பிக்கை நல்கினான்.
நீரின்மேல் அர்ஷினை நிர்மாணம் செய்தனன்.
ஆதமின் சந்ததி அழியாது காத்தனன்.
விதானக் கூரையாய் விண்ணை உயர்த்தினன்; ---5
திசைகள் நான்கிலும் பூமியை விரித்தனன்.
ஒன்றை எப்போதும் இயங்கிடத் தூண்டி
மற்றதை நிலைத்த அமைதியில் ஆக்கினன்.
நாளாறில் எழுமீனுடன் வானங்கள் செய்தான்;
ஆகெனும் ஈரெழுத்து ஆணையைக் கொண்டு        ---10
இல்பொருள் யாவையும் உள்ளவை ஆக்கினான்;
பொற்பேழை போன்று விண்மீன்கள் வைத்து
இரவில் விண்ணுக்கு வெளிச்சம் ஊட்டினான்;
உணர்வுகள் உழலும் உடலெனும் கூண்டினுள்
உயிரெனும் பறவையை அடைத்து வைத்தனன்;     ---15
ஆழியின் நீரைத் தன் ஆணையில் அடக்கினான்,
மலைகள் தன் அச்சத்தில் உறைந்திருக்க வைத்தான்.
தாகத்தில் பாலையை வாயுலறச் செய்தான்,
கற்களைச் செம்மணிகள் ஆக்கி வைத்தான்,
ரத்தத்தில் மணமேற்றிக் கஸ்தூரி செய்தான்.         ---20
மலைகள் அவன் நிறுத்திய காவலர் ஆகும்,
முகடுகள் வாட்களென வளைந்து தோன்றும்.
ரோஜா மலருக்குத் தழல் நிறம் தீட்டினான்,
நதியின் குறுக்கிலொரு பாலத்தை நீட்டினான்.
நம்ரூதின் நாசிக்குள் நுழைவித்த கொசுவினால்      ---25
நானூறு ஆண்டுகள் குடைச்சல் கொடுத்தனன்;
சிலந்தியின் சிந்தையில் ஓர் ஆணை இட்டனன்
குகையின் வாயிலை வலையால் அடைத்தது,
குவலய நெஞ்சத்திற்கு அமைதி கிடைத்தது!


மொழிபெயர்ப்பாளன் குறிப்புக்கள்

வரி-3 அர்ஷ் – அரியாசனம் என்று தமிழாக்கம் செய்யப்படுவதுண்டு. அரசனின் வீற்றிருக்கை. ஆங்கிலத்தில் the Throne என்று மொழிபெயர்க்கப்படும். அதனினும் சமயவியற் சார்ந்து the Empyrean என்று சுட்டப்படுவதும் உண்டு. இறைவனின் அட்சியதிகாரக் குவி மையம் என்று இதனை விளக்கப்படுவதுண்டு. இறை விதானம் என்று நரியம்பட்டு எம்.ஏ.சலாம் ”மஸ்னவி ஷரீஃப்” தமிழாக்கத்தில் இதனைக் குறிப்பிடுகிறார். 

வரி-4 ஆதமின் சந்ததி – ஃபார்சி மூலத்தில் “ஃகாக்கியான்” என்னும் சொல்லினை அத்தார் வழங்கியுள்ளார். மண்ணின் மைந்தர்கள் என்று பொருட்படும். மண்ணால் படைக்கப்பட்ட ஆதமின் சந்ததிகள் என்பது விளக்கம்.

வரி-12 பொற்பேழை – சோனே கீ டப்யா என்று உருது மொழிபெயர்ப்பில் உள்ளது. டப்பா என்பது பெட்டியைக் குறிக்கும். டப்யா என்பது சிறு பெட்டி (small box or casket). எனவே தமிழில் அதனைப் பேழை என்று பெயர்த்துள்ளேன். பொற்பேழை – pyxis of gold.

      பொன் (தங்கம், ஸ்வர்ணம்) என்பது ஒளியுடன் ஒப்புரைக்கப்படுவது உலக ஆன்மிக மரபுகளில் உள்ளதே. ”ஹிரண்மயேன பாத்ரேன சத்யஸ்யாபிஹிதம் முகம்” – “சத்தியத்தின் முகம் பொன் மூடியால் மறைக்கப்பட்டுள்ளது” (15) என்று ஈசா உபநிஷதம் உரைக்கிறது.

      சூரியனின் கதிர்களைப் பொன் என்று உவமிப்பர். அதிகாலையில் சூரியப் பொற்கதிர்களை வரவேற்றுக் கூவும் சேவலைப் “பொற்கோழி கூவிற்று” என்று வருணிக்கிறார் வடலூர் வள்ளலார்.

வரி-14-15: உடலைக் கூண்டென்றும் உயிரைப் பறவை என்றும் சொல்வது அனைத்துலகக் கவி மரபு.

      ”வணிகனும் கிளியும்” என்னும் புகழ்பெற்ற கதையில் மௌலானா ரூமி சொல்கிறார்: “தன் கஃபஸ் ஷக்லஸ்த்” – “உடல் என்பது கூண்டின் வடிவம்” (மஸ்னவி #1849). அக்கதையில் கிளி என்பது ஆன்மாவின் குறியீடு.

      சூஃபி ஞானி இமாம் சாஅதி (ரஹ்) அவர்கள் பாடிய வரிகள் இதோ: “சாஅதியே! உன் உடல் ஒரு கூண்டு மாதிரி, உயிரோ பறவையைப் போல் / கூண்டினைப் பறவை உடைத்துவிட்டது! அந்தப் பறவை அதோ பறந்து விட்டது!” (சாஅதி, தனெ தூ சூன் கஃபஸ், ஊ ரூஹ் ஹம்ச்சூ முர்க் / ரூஹ் அஸ் கஃபஸ் ஷிகஸ்தா ஊ முர்கஷ் பரீதா கீர்)

இந்தச் சுவனத்துப் பறவை இவ் ஒசியும் கூண்டினுள் இடப்பட்ட போது…”  (”When that this Bird of Paradise put in / This Wicker Cage (my Corps)…) என்கிறார் ஆங்கிலக் கவி எட்வர்டு டைலர் (’I am the Living Bread: Meditation Eight: John 6:51)

      “களிமிகு வானம்பாடி கூண்டினில் அடைபட்டாங்கு / மனிதனின் மேலுயர் ஆன்மா என்புதோல் வீட்டில் வாழும்” (As a dare-gale skylark scanted in a dull cage, / Man's mounting spirit in his bone-house, mean house, dwells) என்கிறார் ஆங்கிலக் கவி ஜெரார்டு மேன்லி ஹாப்கின்ஸ்.

      இம்மை வாழ்வில் ஆன்மா அடைபட்ட உடல்தான் கூண்டாக இருக்கிறது. ஆனால், மறுமை வாழ்வில் சொர்க்கத்தில் அது மேலானதொரு உடலைப் பெறும். அவ்வுடல் கூண்டு அன்று, கூடு என்று ஹாப்கின்ஸ் கூறுகிறார். “அஃதவன் சொந்தக் கூடு, கானகக் கூடு, சிறையன்று. // சிறந்த நிலையில் மனிதனின் ஆன்மா ஊனுள் பொதிந்தே காணப்படும்.” (“But his own nest, wild nest, no prison. // Man's spirit will be flesh-bound, when found at best”).

      ஒப்பு நோக்குக: ”பகுத்தறிவு என்பது உடலைக் கொண்டே நிலை பெற்றுள்ளது என்று நீங்கள் பாசாங்கு செய்கிறீர்கள். ஆனால் உண்மையில் உடல்தான் பகுத்தறிவைக் கொண்டு நிலை பெற்றுள்ளது” என்கிறார் மௌலானா ரூமி (”ஃபீஹி மா ஃபீஹி” – உரை எண்:2)

”ஆன்மாவே உடலைக் காக்கிறது. சிலசமயம், அதனை உயர்த்தவும் செய்கிறது. தனது கூண்டினைப் பாதுகாக்கும் ஒரே பறவை அதுவே!” என்கிறார் விக்டர் ஹ்யூகோ.

வரி - 25-26: நம்ரூது (Nimrod) என்பான் இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஓர் அரசன். ஷினார் (சுமேரியா / மெசப்பொட்டோமியா) பகுதியை ஆட்சி செய்தவன் என்று பைபிள் குறிப்பிடுகிறது. பாபெல் கோபுரத்தைக் கட்டியவன் என்றும் பதிவுகள் உண்டு. இப்றாஹீம் நபி கொண்டு வந்த இறைச் செய்தியை மறுத்ததுடன் அவர்களை நெருப்பினுள் இட்டுக் கொலை செய்யவும் முனைந்தவன். ஆணவத்தின் உருவமாய் வாழ்ந்தவன். மூக்கின் வழியே உள் நுழைந்த கொசு ஒன்று மூளையைக் குடைந்தமையால் இவன் இறந்தான் என்று குர்ஆன் விளக்கவுரைகள் பகர்கின்றன.

      ”வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்று தமிழிலொரு சொலவடை உண்டு. அஃதொரு ஞான வாசகம். அதே கருத்தில், “எல்லாம் வல்ல இறைவனுக்குக் கொசுவும் ஒரு ஆயுதம்” என்று காட்டுவதாக இந்நிகழ்வை மெய்ஞ்ஞானியர் பார்க்கின்றனர். ”நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதனினும் அற்பமானதையோ உவமை உரைக்க நாணுவதில்லை” (குர்ஆன்:2:26) என்பதையும் ஓர்க.

      மௌலானா ரூமி சொல்கிறார்: “’ஞானியின் பார்வையில் செப்புக் காசும் தங்கக்காசும் சமமே, பூனையும் சிங்கமும் சமமே.’ ஏனெனில், இறைவன் அருளிவிட்டால் ஆயிரம் பொற்காசுகள் செய்யும் வேலையை ஒரு செப்புக் காசு நிறைவேற்றிவிடும். இறைவன் தடுத்துவிட்டால் ஆயிரம் பொற்காசுகள் சேர்ந்தாலும் ஒரு செப்புக் காசின் வேலையைச் செய்யாது. இறைவன் அனுப்பி வைத்தால் பூனை ஒன்று சிங்கத்தைக் கொன்றுவிடும், நம்ரூதைக் கொசு ஒன்று கொன்றதைப் போல்” (’ஃபீஹி மா ஃபீஹி’ –உரை #12).

      ”ஜாவீத் நாமா” என்னும் காவியத்தில் மகாகவி இக்பால் சொல்கிறார்:

      ”காதலின் சக்தி காற்று மண் மற்றும் நீரால் ஆனதன்று;
      தசைகளின் இறுக்கத்தால் வருவதன்று அதன் வலிமை;
      ஒரு ரொட்டித் துண்டால் காதல் ஃகைபரைக் கைப்பற்றியது;
      காதல் நிலவின் உடலை இரண்டாய்ப் பிளந்தது;
      அடியேதும் இன்றி நம்ரூதின் கபாலத்தை உடைத்தது;
      போர்க்களமே காணாமல் ஃபிர்அவ்னின் படைகளைச் சாய்த்தது.”

      (”ஸோரெ இஷ்க் அஸ் பாதோ ஃகாகோ ஆப் நீஸ்த் / குவ்வத்தஷ் அஸ் சஃக்தியே அஃஸாப் நீஸ்த் // இஷ்க் பா நானே ஜவீன் ஃகைபர் குஷாத் / இஷ்க் தர் அந்தாமெ மஹ் ச்சாகே நிஹாத் // கல்மாயெ நம்ரூத் பே ளர்பே ஷிகஸ்த் / லஷ்கரே ஃபிர்அவ்ன் பே ஹர்பே ஷிகஸ்த்” – நூல் ’ஜாவீத் நாமா’ : 329-334)

வரி-29 குவலய நெஞ்சம் – இது நபிகள் நாயகத்தைக் குறிக்கும் வருணிப்பு. நபிகள் நாயகம் தனது அணுக்கத் தோழரும் தொண்டருமான அபூபக்கருடன் மக்கா நகரைத் துறந்து மதீனா நகரை நோக்கிப் பயணமானபோது அவர்களைக் கொல்லும் திட்டத்துடன் எதிரிகள் பின் தொடர்ந்தனர். இடையில், சவ்ர் என்னும் குகையினுள் அவ்விருவரும் தங்கியிருந்தபோது சிலந்தி ஒன்று மிக விரைந்து வலையால அம்முழையின் வாயிலை அடைத்தது. பன்னாட்களாக அதனுள் யாரும் சென்றிருக்கவில்லை என்று கருதி எதிரிகள் அப்பால் அகன்றனர். 

      நபியைக் குறிக்க ”ஸத்ரே ஆலம்” என்னும் சொற்றொடரைக் கையாள்கிறார் அத்தார். பிரபஞ்சத்தின் நெஞ்சம் – Soul of the Universe என்று பொருட்படும். மோனைத் தொடை கருதி ‘குவலய நெஞ்சம்’ என்று குறிப்பிட்டுள்ளேன்.

(to be continued...)

No comments:

Post a Comment