Friday, October 28, 2016

ரூமியின் தோட்டம் - 5

Image result for illumination of heart
    
  ”இறைவனின் வண்ணத்தில் தோய்ந்திரு” (சிப்கதல்லாஹ்) என்கிறது குர்ஆன். இறையுணர்வில் லயித்திரு என்று பொருள். உணர்வின் ஊற்றுக்கண் வேறில்லை என்றறி. நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் வெற்றுத் தாள். ஒவ்வொரு கணமும் அந்த தெய்வீக ஓவியன் தன் வண்ணங்கள் குழைத்து நம்மை வரைகிறான். நாமவன் ஓவியம்.

உன்னுள் மறைந்திருக்கும் ஜம்ஜம் கிணற்றை மறந்த கணம் முதல் திருகு குழாய்களின் உபாசகன் ஆனாய். குழந்தை இஸ்மாயிலின் பாதம் பட்டு மூடியிருந்த ஜம்ஜம் கிணறு திறந்தது. மீண்டும் குழந்தை போல் ஆகிவிட்ட மனிதப் புனிதர் மட்டுமே உதவ முடியும் உனக்கு. சற்குருவின் பாத ஸ்பரிசத்தில் நின் உட்கிணறு திற. மீண்டும் மீண்டும் மண் சரிந்து மூடிக்கொள்ள தோண்ட வேண்டியிருக்கும் மணற்கேணிக்கு கைகள் சலித்துத் துவளாதா? வெளியிலிருந்து திறக்க நினைக்கும் கலைகள் எல்லாம். ஆன்மிகமோ நீரின் விசையில் உள்ளிருந்து திறக்கும் தருணத்திற்கான தவம்.

நாம ரூபங்களின் அலைகளில் கரையொதுங்கவும் மாட்டாது கடலுள் செல்லவும் முடியாது கிடந்துழலும் ஒரு செத்த மீன். அது, மூசா நபியின் கை தொட்டால் உயிர் பெறும். கடலுக்குள் சென்று ஜீவிக்கும். இறைவனே தன் கை என ஆகிவிட்ட ஞானியின் தீண்டலில் நீ சுறா ஆகிவிடு.

உன் பயமும் மகிழ்ச்சியும் வெறுப்பும் சினமும் என எல்லாம் நிழல்களின் அசைவுகள் கண்டு. நிஜத்தின் தரிசனம் கிடைத்துவிடின் நிழல்களின் பாதிப்பு இல்லை.

”சேவலை ஏசேல்” என்பது நபிவாக்கு. எந்த வகையில் அது இறைநேசர் ஆயிற்று? வைகறையின் முதற்கீற்றில் அது கொண்டை சிலுப்பி எழுகிறது, இறைவனின் மகத்துவத்தை வாழ்த்தியபடி. அது, பறவை இனத்தின் பிலால். ’சூஃபி என்பவன் தருணத்தின் பிள்ளை’ (சூஃபி இப்னி வக்தஸ்த்) என்பர். ’தொழுகையின் வக்த் (தருணம்) வந்தால் தொழுது விடு’. சரிதான். எப்போதும் தொழுகையில் தரித்திருக்கும் சூஃபிக்கு தருணம் என்பது என்ன? திரை விலகிய இறைக் காட்சி. மவ்லானா ரூமி சொல்கிறார்:

வண்ணங்களைப் படைத்தவனுக்காக
வெளிறிப் போ!

நிழல்களின் நிமித்தம்
முகத்தில் குங்குமம் பூசற்க

சேவலாய் இரு,
நேரத்தின்மேல் கவனமாய், தலைவனாய்
உன் சேவலைக் கோழி ஆக்கிவிடாதே

***

      ”மெய்ஞ்ஞானிகளுடன் இருங்கள்” (கூனூ ம அஸ் ஸாதிகீன்) என்கிறது குர்ஆன். இதனை சூஃபிகள் ’சுஹ்பத்’ என்பர். உடனிருத்தல் என்பதொரு ரசவாதம். இறைவனின் வற்றாக் கருணை என்னும் பெருநதிக்கும் சிருஷ்டிகள் என்னும் தோட்டத்திற்கும் இடையில் சுழலும் நீர்ச்சரங்களே சூஃபிகள். மவ்லானா ரூமி சொல்கிறார்:

இணைந்திருங்கள் தோழர்களே!
சிதறிவிட வேண்டாம்

நமது நட்பென்பது
விழித்திருப்பதால் ஆகிறது

நீர்ச்சக்கரம்
நீர் ஏற்றபடிச் சுழன்று
கொடுத்துவிடுகிறது அழுதபடி

அவ்வாறு அது தங்கியிருக்கும்
தோட்டத்தில்

***
Image result for sufi ecstasy
     
இறை தியானம் பற்றி சூஃபிகள் சொல்வதென்ன? முதலில் மூன்று சொற்களை நினைவில் வை. திக்ரு, தாக்கிர், மத்கூர் – தியானம், தியானிப்பவன்  மற்றும் தியானிக்கப்படுவோன். ’மன ஒளி’ (ஜியாவுல் குலூப்) என்றொரு சூஃபி நூல். ஹாஜி இம்தாதுல்லாஹ் (ரஹ்) என்னும் ஞானி எழுதியது. ஆரணி பாவா அவர்கள் தமிழாக்கித் தந்த சிறு மா நூல். அதில் வரும் ஆழிய வரிகளைக் கவனி:

      ”திக்ரின் நோக்கம் திக்ருக்கு உரியவனை அடையவேண்டும் என்பதுதான்”

      ”’தகல்லகூ பி அக்லாகில்லாஹ்!’ அல்லாஹ்வின் நற்குணங்களை உன்னுள் கொண்டுவா. உன்னை அழித்துவிடு. உன்னையே மறந்து விடு. திக்ரும், திக்ருச் செய்பவனும் அழிந்து திக்ரே திக்ருச் செய்யப்படும் பொருளாக மாறிவிட வேண்டும்”

      ”உன்னுடைய திக்ரை ‘மத்கூர்’ ஆக (திக்ருச் செய்யப்படுபவனாக) ஆக்கிவிட வேண்டும்”

      ”திக்ரு தானே திக்ரு செய்யப் படுபவனாக மத்கூராக ஆகிவிடுகிறது. இத்தகைய திக்ரு அல்லாஹ்வின் திக்ராகும்”

      இவ்வாறு தியானத்தில் தன்னை இழந்து மூழ்கி இருக்கும் நிலையை சூஃபிகளின் பரிபாஷையில் ”இஸ்திக்ராக்” என்பர்.

      மக்களில் பெரும்பாலோர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்றே தியானத்தில் ஈடுபடுகின்றனர். மேலோட்டமான தியானங்களால் மேல் நிலைகள் சித்திப்பதில்லை. வேர்கள் ஆழப்படாமல் கிளைகள் உயருவதில்லை. எனினும், எல்லாக் காலங்களிலும் ஒரு சில மகான்கள் மேற்சொன்ன நிலைகளில் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

அவர்களில் ஒருவர் சலாவுதீன் ஸர்கூபி. இவர், மவ்லானா ரூமியின் குருமார்களில் ஒருவர். ஸர்கூபி என்றால் பொற்கொல்லர் என்று பொருள். எவரின் பார்வை கேள்வி கைகள் கால்களாக இறைவனே ஆகிவிடுகிறானோ அந்த மகானின் அசைவுகள் எப்படி இருக்கும்? சலாவுதீன் தனது கடையில் ஆபரணத் தங்கத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறார். அவ்வழியே சென்ற ரூமியின் செவிகளின் சுத்தியின் ஒலி விழுந்தது. அதன் நாதம் ‘அல்லாஹு அல்லாஹ்’ என்று கேட்டது. ரூமிக்கு மட்டும் அது கேட்டது எப்படி? லைலாவின் அழகைக் காண மஜ்னூனின் கண்கள் வேண்டும். சலாவுதீனின் சுத்தி எழுப்பும் நாதம் கேட்க ’அந்தரங்க சுத்தி’ வேண்டும்! மவ்லானா ரூமி சொல்கிறார்:
ஈருலகும்

பெருஞ்சேவல் ஒன்றின் முன்
ஒற்றைத் தானிய மணி

நேசிப்போனும்
நேசிக்கப் படுவோனும்
ஒன்றுதான்

இறைவனை யாரறிவார்?
’இல்லை’ என்பதன்
வழிப் போன ஒருவன்

உடைந்த காதலன் அறிவான்
நான் சொல்லும் இது
”இந்த ஆடைக்குள் யாருமில்லை
இறைவனைத் தவிர”

நின் நிஜ உருவில் தோன்றுக
சலாவுத்தீன்!
நீ எனது ஆன்மா
கடவுளை நோக்கும் கண்!

***
Image result for bamboo
      
பிரபலமான ஹைகூ கவிதை: “இந்தக் காட்டில் /  எந்த மூங்கில் / புல்லாங்குழல்?”. பிள்ளைக் கூட்டம் காண நேரின் இக்கவிதை நினைவு வரும். பால் வடியும் இம்முகங்கள் வளர்ந்த பின் எவ்வுருக் கொள்ளும்? எல்லா மூங்கிலும் புல்லாங்குழல் ஆகிவிடுவதில்லை. தெய்வீக இசைஞனின் கைச் சுவைக்கும் வாய்ச் சுவைக்கும் மருகியிருப்போரே புல்லாங்குழல் ஆவர்.

      இம்மையிலேயே சொல்லிவிடவும் ஏலாது, மரணித்த பின் யாரின் நிலை யாதாய் இருக்குமென்று. மவ்லானா ரூமி ஓரிடத்தில் சொல்கிறார், “சுவர்க்கத்தில் முள் உண்டா? என்று கேட்பவனே, உன்னைப் பார்!”. மலராத வரை நீயே முள். மலர்ந்து விடின் நீ சொர்க்கத்தில் இருப்பதைக் கண்டு கொள்வாய்.

      அலைகளோட நிற்கும் பசிய வயல் இவ்வுலகு. எல்லோரும் ஓர் நிறை. நாற்றாங்கால் முற்றிய பின் அறுவடை நேர்கையில் கதிரும் பதரும் தனித்தனி ஆகும். மறுமையில் ஒரு குரல் கேட்கும், “வம்தாஸுல் யவ்ம அய்யுஹல் முஜ்ரிமூன்” – ‘இந்நாளில், பிரிந்து நில்லுங்கள் குற்றவாளிகளே!’ (குர் ஆன்:36:59). மவ்லானா ரூமி இசைப்பது கேள்:

சொல்கிறார்கள் சிலர்
மானுடப் பிறவியென்பது
மண்ணிலிருந்து மண்ணுக்கு

சாலைப் புழுதியில்கூட நேர்வழி திறந்துவிடும்
மனிதப் புனிதருக்குப் பொருந்துமா இது?

இன்னும் முற்றாப் பருவத்தே களத்தில்
வேறொன்றாய்த் தெரியும் பயிர்

அறுவடைக் காலம் வருகையில் காண்கிறோம்

அதன் பாதி பதர், அதன் பாதி நெல்

***

Wednesday, October 26, 2016

ரூமியின் தோட்டம் - 4

 Image result for sufi bird    
 சூஃபிகளிடம் சொலவடை ஒன்றுண்டு, “குல்லுன்ய் யர்ஜிஉ இலா அஸ்லிஹி” – ஒவ்வொன்றும் அதன் மூலத்திடம் திரும்புகிறது. இறைவனை மனிதன் அடையத் தவிப்பது பெண் ஆணை அடையத் தவித்தல் போன்றது. இப்பிரபஞ்சத்தின் மூலம் யாதெனக் கண்டோர் ஞானியர். ஆதியில் மூலமான அந்த ஜோதியில் நிற்பார் அனைத்திற்கும் ஈர்ப்புக் காந்தம் ஆவர். வெளிப்பட்ட ஒவ்வொன்றும் அவரில் தம் அந்தரங்கம் காண்கிறது. ஆனபடியால், அவரின் பக்கம் சாய்கின்றது. சூஃபிகள் பற்றி மவ்லானா ரூமி சொல்கிறார்:

இடையறாக் குளிர்காலத்தில்
இதமான கதகதப்பு நாம்

ஒளிவகை பலவுடன்
சூரியன் நாம்

வீசு தென்றல் நாம்

எங்கே எனும்படிக்
கூவென்று கூவும் குயில்கள்
தேடுகின்றன நம்மை

மைனாக்கள் கிளிகள்
இங்கும் அங்கும் இடம் மாறும்
நம் அருகாமை நயந்து

நம் சேதி கேட்டு
கருவாடு மீண்டும்
மீனாகித் துள்ளிற்று

அந்தத் துடிப்பின் அலைகள்
இப்போதும் வந்தபடி உள்ளன

புத்திக்குப் புரியாத விஷயங்களுண்டு
கேட்டுக் கேட்டுக் களிப்புற

அதற்கேயான செவிகளுண்டு
ஆன்மாவிற்கு

***
Image result for upanishad guru and disciple 

ஒரு சாதகன் தனக்கான குருநாதரைக் கண்டடைவது எப்படி? மவ்லானா ரூமி சொல்கிறார், “சீடன் ஆயத்தம் ஆகிவிட்டால் அங்கே குரு வந்துவிடுவார்”. ஸ்தூலமாக அல்ல. கதவு தட்டியபடி வாசலில் வந்து நிற்பார் எனும்படி அல்ல. ஆனால் அவரின் முகவரிக் குறிப்புக்கள் இவனை வந்தடைகின்றன. ’நறுமணம்’ என்று அதனை ரூமி குறிப்பிடுகிறார். ‘நறுமணத்தை நுகர்ந்து செல்லும் சீடன் குருவைக் கண்டடைகிறான்’ என்கிறார். அது ஆன்மாவின் நறுமணம்.

நபிகள் நாயகம் சென்ற தெருவில் அவரின் நறுமணம் நெடு நேரம் இலங்கிக் கொண்டிருக்கும் என்றொரு சேதி உண்டு. அவர் சென்றது இவ்வழியா? அவ்வழியா? நறுமணத்தை முகர்ந்து கொண்ட மூக்கு இவ்விஷயத்தில் குருடுதான். காதலே அந்தத் திசையைக் காட்டித் தரும். ரூமி சொல்கிறார்:

சாலச் சிறந்தது
நீயாக நுகர்ந்து கொண்டதொரு நறுமணத்தைத்
தனியே நீ தொடர்ந்து போதல்

அது உன்னை இட்டுச் செல்லட்டும்
கூஜாக் கோப்பைகள் விட்டு
விடுதலையான ஒருவரிடம்

பழங்குடிகாரர் சொல்லும்
பழமொழி ஒன்றுண்டு:
‘நான் கூஜாவின் ராஜா’

அதுபோல் ஒருவரைத் தேடி
அவர் அருகில் அமர்

***

      பருப்பொருட் தன்மையை கவனிக்க மனிதன் எத்தனைச் சிறியன்! இப்பிரபஞ்சப் பரப்பில் நம் பூமியொரு அணு. நாமெல்லாம் எங்கே? ஆழ்பெருங்கடலில் அயிரைக் குஞ்சின் விகிதம் என்ன? அக்கடலின் ஓரலையோ நீலத்திமிங்கலத்தைப் புரட்டி நகும் எனும்போது. பேரருள் பொங்கிய தன் உள்ளமையில் இறைவனின் சித்தம் நம்மைச் சமைத்தது. உச்சி முதல் பாதம் வரை நாம் அவனின் ஸ்தலம். அலையில் கடலன்றி வேறில்லை எனும்படி. ’அப்து’ (அடிமை) எனும் சொல்லின் உட்பொருள் இதுவே. ஒவ்வொரு மூச்சிலும் அப்பரம்பொருளின் நினைவு குடித்துத் திளைக்கும் பரமக்குடிகாரர்கள் நாம்! மவ்லானா ரூமி சொல்வது கேள்:

கடலினைக் குடிக்கின்றது மீன்
எனினும், சிறிதாவதில்லை கடல்

மேகமும் மாலை ஒளியும்
உண்கிறோம் நாம்

ராஜ மது பருகும்
அடிமைகள் நாம்

***
 Image result for inside flower  
   நான் எனும் உணர்வு நல்கி அதன் ரகசியம் ஆனான் இறைவன். சுயாதீனத்தின் கடல் மூழ்கியோர் அவனைக் கண்டார். தியானத்தில் விரல் நுனி தன்னையே சுட்டிக் கொள்கிறது. அவனது பித்தர்கள் ’நான்’ எனும் ஆடை கிழிப்பர். உறையும் காகிதம், கடிதமும் காகிதம். எனினும், உரை கிழித்தால் அன்றி கடிதம் படித்தல் ஏது? முறை கற்றுக் கிழி. இக்கடிதம் உறையின் உட்புறம் எழுதப்பட்டுள்ளது! மவ்லானா ரூமி சொல்கிறார்:

சுய அடையாளமொரு தொலி
அதன் கர்த்தனொரு கூர்வாள்

வாள்
உரைக்குள் நழுவிப் பொருந்திக் கொள்கிறது

மின்னும் எஃகின் மேலொரு நைந்த உரை

காதலைத் துலக்குமொரு காதல்

Thursday, October 20, 2016

ரூமியின் தோட்டம் - 3

 Image result for sufi heart  

   அறிவியல் பருவுலகைச் சார்ந்து இயங்குகிறது. அதன் கருவிகள் பருப்பொருட்களையே அளக்கின்றன. தொலைநோக்கிகள் எவ்வளவு தூரத்தை அளந்து காண்பித்தாலும், நுண்ணோக்கிகள் எத்தனைச் சிறியதை அளந்து காண்பித்தாலும் அவை பருவுலகின் பொருட்களே. ஆன்மிக அல்லது உயிருலகின் அனுபவங்களை அந்தக் கருவிகள் எப்படி அளக்க முடியும்? தேகத்திற்கும் உயிருக்கும் நடுவே இதயம் இருக்கிறது. இவ்வுலகும் அவ்வுலகும் சந்திக்கும் புள்ளி அது. தேகத்தின் அனுபவங்களையும் அது கிரகிக்கிறது, உயிரின் அனுபவங்களையும் அது உணர்கிறது. எனவே மவ்லானா ரூமி சொல்கிறார்: 

ஆன்மிக அனுபவத்திற்கும்
அறிவிற்கும் இடையில்
இதயமே மொழிபெயர்ப்பாளனாய்
இருக்கிறது.

***
Image result for sufi flute
      

’பசித்திரு’ என்பது ஞானியர் வாக்கு. ஊனை உருக்கி உள்ளொளி பெருக்க பசியொரு நியதி. பசித்தீ அணையா அளவு மட்டும் உண்ணல் ஒரு நெறிமுறை. நோன்பிருத்தல் ஆன்மிக நோய்க்கொரு மருந்து. பசி மிகின் கண்ணைக் கட்டும்; செவி அடைக்கும் என்பர். ஆனால், நோன்பில் அகக்கண்ணும் அகச்செவியும் திறக்கும். விரதம் தரும் புரதம் பற்றி மவ்லானா ரூமி சொல்கிறார்:

வயிற்றின் வெறுமையில் ஓர் இனிமை உள்ளது

நல்ல வீணைகள் நாம்
அதிகம் இல்லை குறைவு இல்லை

தம்பத்தை ஏதேனும் அடைத்திருந்தால்
ஏது இசை?

மூளையும் வயிறும் நோன்பில் எரிகையில்
தீயிலிருந்து கணந்தோறும்
ஒரு புதிய கானம்

பனிமூட்டம் விலக
பரவசம் பொங்கிப்
படிக்கட்டுக்களில் ஓடுவாய் நீ

வெறுமையாய் இரு
புல்லாங்குழலாய் அழு

வெறுமையாய்
நாணற் பேனாவாய் எழுது

***

      கவிதை, எதைப் பற்றிப் பேசுகிறதோ அதற்கான முன்சுவை நல்கும். கண்டோர் தரும் குறிப்புக்கள் கொண்டு கள்வனின் சித்திரம் தீட்டப்படுதல் போல் ஞானியர் அனுபவித்துக் கண்ட பேருண்மையைச் சொல்லிவிட கவிதை யத்தனிக்கிறது. மவ்லானா ரூமி சொல்கிறார்:

காதலே சத்தியம்
கவிதையோ
அதனிடம் அழைக்கும்
முழவின் ஓசை

***

      படச்சுருளில் எதிர்மமாய் இருக்கும் உருவம் ஒளியின் பாய்ச்சலில் நேர்ம பிம்பமாய் விழுகிறது திரையில். அல்லது, கழுவி எடுக்கப்படும் பிரதியில். இறைவனின் பேரொளி நம்மை வெளிப்படுத்த அவனது திருப்பண்புகளால் அலங்கரிக்கப்பட்டு நாமும் நேர்ம பிம்பங்களாய்த் தோற்றம் கொண்டோம். எதிர்மப் பண்புகளாய்க் கண்ட நம் மூலப் படிவங்கள் அவனது பேரறிவில் அனாதியாய் அனந்தமாய் உள்ளன. ஆனந்தமாயும்! அவற்றை சூஃபிகள் “அஃயானெ ஸாபிதா” (ஊர்ஜிதப் படிவங்கள், Established Archetypes) என்பர். இறைப்பேரறிவே நம் நிஜ முகவரி. வீட்டை விட்டு நான் வெளியேறவே இல்லை என்னும் உணர்தல் உண்டாகும் கணத்தில் அலைதல் எனும் கனா கலைகிறது. அத்தருணமே வீடுபேறு. மவ்லானா ரூமி சொல்கிறார்:

உருக்கொண்ட ஒவ்வொன்றுக்கும்
அதன் அருவப் படிவம் உளது

தோற்றங்கள் இற்று மடிகின்றன
எப்படி ஆயினும்

முதலும் மூலமும் அழிவதில்லை

ஒவ்வொரு மெல்லிய அழகும்
ஒவ்வொரு மறந்த சுடர் சிந்தனையும்
போய்விட்டதென துக்கம் கொள்கிறாய்

ஆனால் அது அப்படி அல்ல

எவ்விடமிருந்து அவை வந்தனவோ
அவ்விடம் உலர்வதில்லை ஒருபோதும்

என்றைக்குமாய் அஃதொரு
நித்திய நீரூற்று!

ஆன்மா ஒரு நீருற்றெனில்
இவ் உருவெளிக் கோலங்கள் எல்லாம்
முடிவற்ற நீரின் தேக்கத்தினின்றும்
வழியும் நதிகள்

இங்கிருக்க நீ வந்த அக்கணமே
தப்பித்திட ஓர் ஏணி
வைக்கப்பட்டுவிட்டது

தாதாகித் தாவரமாய்ப்
பின்னுமொரு விலங்கானாய்
இது மட்டும் திண்ணம்

மேலும் செல்க

உள்ளுணர்வும் பேரொளியும் கொண்ட
உண்மை மனிதன் ஆகு

நின் தேகம் நோக்கு
இந்தக் குப்பை எங்ஙனம் ஆயிற்று
இப்படியொரு நுண்ணழகு?

இன்னும் உள்ளது பயணம்

மண்வாசம் மறைந்துவிடும்
உயிரின் உலகினுள்

உன்னொரு துளி
நூறாயிரம் இந்தியப் பெருங்கடல் ஆகும்
சமுத்திரம் ஒன்றுண்டு




Monday, October 17, 2016

ரூமியின் தோட்டம்-2

     Image result for sufi dervish painting 

நாம் பேசினால் வார்த்தைகள் ஆகும். தன்னை இறைவன் பேச யாதும் ஆனது. பொருள்படப் பேசுவதே கடினமாக உள்ளது நமக்கு. அவனோ பொருள்களையே பேசுகிறான். நாம் வாய் மூடிக்கொண்டால் அவன் பேசுவான். எதன் வழி? எப்போதும், இதயத்தின் வாசல் கண்களே. வாய் அல்ல. ஏனெனில், கண்கள்தான் ஒளியைப் பேசும். உதடுகள் அல்ல. மவ்லானா ரூமி சொல்கிறார்:

உதடுகள் மூடு
வாய்களைச் செய்வோன் பேசட்டும்
வஸ்துக்களை அது அதுவாய்ச்
சொல்லும் அவன்!
***

      இறைவனிடம் இட்டுச் செல்லும் பாதைகள் எத்தனை? சூஃபிகள் சொல்கின்றனர், அத்தூரூக்கு இலல்லாஹி க நுஃபூஸி பனீ ஆதம் – இறைவனை அடையும் பாதைகள் மனிதர்களின் மூச்சுக்கள் அளவு! எனில், ஒவ்வொரு மூச்சும் இறைவனை அடைவதற்கான ஒரு வாய்ப்பு! எத்தனை வாய்ப்புக்கள் தவறிப் போய்விட்டன! ஏன்? நமக்கு மூச்சுவிடத் தெரியவில்லை! நம் ஒவ்வொரு மூச்சும் வாயு வடிவ எண்ணமாக இருக்கிறது. தேவையற்ற சிந்தனைகளால் நம் மூச்சுக்கள் நஞ்சாகின்றன. நம் தலையே நம் முச்சுக்குத் தளையாக இருக்கிறது. நேர்வழி நடக்க, அது காலுக்குச் செருப்பாக வேண்டும். மவ்லானா ரூமி சொல்கிறார்:

இன்று காண்கிறேன் நபியின் விண்ணேற்றம்
எங்கும் அந்தத் தோழன்,
ஒவ்வொரு செயலிலும்.

காதல் ஒரு மூங்கில் திரை
தேகம் ஒரு தீ

”நேர்வழி காட்டு” என்கிறேன்
நீ சொல்கிறாய்,
“உன் தலையை
உன் பாதத்தின் கீழ் இடு!
என்னுடன் இருப்பதற்கு
நூறு நூறு வழிகளைக் காண்பாய்.

வைகறைத் தொழுகையின்
பாதைகளின் மேலாய்
நூறாயிரம் பாதைகள் உண்டு
***
  Image result for mystic rose virgin mary 

   மனிதன் இருபரிமாணப் படைப்பு. விலங்கும் வானவரும் இணையும் புள்ளி. அவனின் உடல் விலங்கினை ஒத்ததாகவும் அவனின் ஆன்மா வானவரை ஒத்ததாகவும் உள்ளன. அவனது உடல் சமவெளியாகவும் அவனது ஆன்மா மலைச் சிகரமாகவும் இருக்கின்றன. பலரும் சமவெளி வாசிகள்தான். ஒரு சிலரே மலையின் உச்சியில் வாழ்கின்றனர். சமவெளியிலிருந்து மலை உச்சியைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கழுத்து வலிதான் வரும். ஆன்மிகச் சாதகம் என்பது மலையேறுதல். மலைச் சிகரத்திலேயே வளர்க்கப்பட்ட பறவைகளும் உண்டு. ஏசுநாதரின் தாயைப் போல. அதனால்தான், இறைவனின் ஆன்மாவை அவரின் கருவறை சுமந்தது. மவ்லானா ரூமி சொல்கிறார்:

இங்கே நாம் ஊதாரிகளைப் போல்,
முகவாய் தீவனத்துள் மூழ்கிய
மூன்று ஒட்டகங்கள்

இதர ஒட்டகங்கள் கொந்தளிக்கின்றன
தொங்கும் நாவும் வாயில் நுரையுமாய்
ஆனால், அவை மிகவும் கீழே, சமவெளியில்

காற்றடிக்கும் இந்த ஒற்றையடி மலைப்பாதை நமது.
அது போஷிக்கிறது
அது பாதுகாக்கிறது

கழுத்து வலிக்க மலையைப் பார்ப்பதால் மட்டும்
இங்கே வந்துவிட முடியாது நீ

வெளியேறி நடக்க வேண்டும்,
பணமும் பதவியும் பற்றிக் கவல்வோரின் இடம்விட்டு,
நாய்கள் குரைத்துப்
பின் அங்கேயே தங்கிவிடும் இடம்விட்டு

மேலே இங்கே
இசையும் கவிதையும்
தெய்வீகக் காற்றும்

கன்னி மர்யமுக்குப் பேரீத்தம் தந்த
மரமாக இரு,
அவரது இதயத்தின் ‘ஆமீன்’ ஆகு.

(குறிப்பு: கன்னி மர்யம்: கன்னி மேரி மாதா)
***
     
 மதவாதிகளின் உரைகள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அவர்களும் வேதத்தை வைத்துத்தான் பேசுகிறார்கள். ஆனால் ஞானிகள் பேசுவது போல் அதில் உள்ளொளி இருப்பதில்லை. சமய அறிஞர்கள் இருவகை. உலமாயே ழாஹிர் (வெளிரங்க அறிஞர்கள்) மற்றும் உலமாயே பாத்தின் (உள்ரங்க அறிஞர்கள்). சூஃபிகள் இரண்டாம் வகையினர். மதவாதியிடம் படிப்பறிவு உள்ளது. ஞானியிடம் இருப்பது பட்டறிவு. உலமாயே ழாஹிர் informative; உலமாயே பாத்தின் transformative. தகவல்கள் அதிகமாகும்போது அது அர்த்தத்தை மறைத்து விடுவதுண்டு, விளக்கினை மறைத்துவிடும் புகை போல. மவ்லானா ரூமி சொல்கிறார்:

சில தீபங்கள்,
ஜீவன் கொண்டு அவை எரிந்த போதும்,
ஒளியை விடவும்
புகையே கக்குகின்றன.

***
  

    கரையில் நின்று அலைகள் எண்ணுவோர் கடலறிஞர் ஆகலாம், ஆனால் ஒருபோதும் அவர் கடலின் காதலர் அல்லர். எண்ணிக்கொண்டிருக்க என்ன இருக்கிறது? ஒரு மணிநேரம் படித்துறையிலேயே தயங்கி நிற்கிறான் படித்தவன். நதிமூலமும் ரிஷிமூலமும் தெரியுமாம் அவனுக்கு. நீச்சல் தெரியாது! மாடு மேய்க்கும் சிறுவன் வந்து சரேலென்று பாய்கிறான் ஆற்றில். பின்னால் வந்து நீருக்குள் இறங்குகிறது, அவன் மேய்க்கும் மாடும்! நல்ல நேரம் பார்த்து வருவதல்ல காதல். அது வரும் நேரத்தினும் வேறு நல்ல நேரம் எது? மவ்லானா ரூமி சொல்கிறார்:

காதல் வருவதெல்லாம்
கையில் கத்தியுடன்!
தயங்கும் வினாக்களுடன் அல்ல,
நற்பெயர் குறித்த அச்சங்களுடன் அல்ல

***

ரூமியின் தோட்டம்-1

Image result for rumi books

சூஃபி மகாகவி மௌலானா ரூமி அவர்களின் கவிதைகள் கருணை மழை என்பது மீண்டும் ஒருமுறை எனக்குக் காட்டப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் அவரது கவிதைகளை வாசிக்கத் தொடங்கியபோது வெளியிலும் பருவகாலம் மாறி மழை பொழிந்தது. அது, அகவுலகின் பருவகாலத்திற்கு ஒத்திசைவாய் ஆனது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில், துருக்கி நாட்டின் கோன்யா என்னும் ஊரில், திராட்சை தோட்டங்களும் பூவனங்களும் வயல்களுமான நிலப்பகுதியில், வசந்த ருதுவில் அந்த மகான் தனது அணுக்கச் சீடர்களுடன் நடந்தபடி உரையாடிய ஞானக் கருத்துக்களே அவரின் கவிதைகள் என்பதால் அவற்றில் செடிகளும் தருக்களும் பூக்களும் கனிகளும் பறவைகளும் விலங்குகளும் ஆறும் ஓடையும் கடலும் புல்வெளியும் மலையும் இடம் பெற்றிருப்பதில் வியப்பென்ன?  

தோட்டம் என்பது ஆன்மிக உலகின் குறியீடாகவே அவரின் கவிதைகளில் பொருள் படுகிறது. சொல்லப்போனால், புறவுலகில் நாம் காணும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ஆன்மிக உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் அகல் விளக்குகளாக ஏற்றி வைத்த கவித்துவம் ரூமியின் தனித்தன்மை எனலாம். அந்த அகல் விளக்குகளில் அவர் ஏற்றிய சுடர்கள் எல்லாம் அவரின் இதயத்தில் இருந்த ஞானச் சூரியனாம் ஷம்சுத்தீன் தப்ரேஸ் அவர்களின் கொடை என்றே ரூமி சொல்கிறார். ஆம், ஷம்ஸ், ரூமியின் குருநாதர்.

இறந்த நிலம் மழை நீர் பட்டு உயிர் பெறுவது போல் நம் உள்ளங்களும் ரூமியின் கவிமழையில் நனைந்து உயிர் பெறட்டும். அவரின் கவிதைகள் வழி அவருடன் ஆன்மிகத் தோட்டத்தில் கொஞ்ச காலம் உலவி வருவோம் வாருங்கள் என்றழைத்து, வசந்தத்தின் வருகையைச் சொல்லுமொரு ’ரூமிக் கவிதை’ தந்து உங்களை வரவேற்கிறேன்.

மீண்டும், கழுநீர் சாய்கிறது ஆம்பலிடம்
மீண்டும், ரோஜா தன் ஆடை களைகிறது

வேறொரு உலகத்தில் இருந்து வந்துள்ளனர்
பச்சைக்காரர்கள்!
இலக்கற்ற தென்றலினும் போதையாய்

மீண்டும், மலைச்சாரல் எங்கும்
குறிஞ்சியின் அழகு விரிகின்றது

முல்லை மலர் சொல்கிறது மல்லிகைக்கு:
அஸ்ஸலாமு அலைக்கும்
உன் மீது சாந்தி உண்டாகட்டும்

உன் மீதும் பையா,
என்னுடன் இந்தப் புல்வெளியில் நட

மீண்டும், எங்கும் சூஃபிகள்

வெட்கப்படுகிறது மொட்டு
காற்று திறக்கிறது சட்டென்று
என் நண்பனே!

நண்பன் இருக்கிறான் இங்கே
ஓடையில் நீர் போல
நீரில் பூப்போல

நர்கிஸின் சமிக்ஞை: நீ சொல்லும் போது

தேக்கிடம் சொல்கிறது கிராம்புக் கொடி
நீயே எனது நம்பிக்கை

தேக்கின் பதில்:
நான் உனது சொந்த வீடு
நல்வரவு

ஆரஞ்சிடம் கேட்கிறது ஆப்பிள்
ஏனிந்த முகச்சுளிப்பு?

”தீயோர் என் அழகினைக் காணாதிருக்க!”

பறந்து வருகிறது மணிப்புறா எங்கே? நண்பன் எங்கே?
குயிலின் ஸ்வரம் சுட்டுகின்றது ரோஜாவை

மீண்டும், வசந்த காலம் வந்துள்ளது
ஒவ்வொன்றின் உள்ளும் வசந்த மூலம் எழுகின்றது
நிழல்களின் ஊடாக நகரும் நிலா

பலவும் சொல்லாமல் விடப்பட வேண்டும்
மிகவும் தாமதமாகி விட்டபடியால்

இன்றிரவு பேசாத சங்கதிகள் எல்லாம்
நாளைக்கு வச்சுக்குவோம்