Monday, July 31, 2017

ஒரு சூஃபியின் டைரி - 3

தீட்சையின் முதல் தரிசனங்கள் (#14-40)    

Image result for sufi initiation
Pir vilayath khan and pir zia inayath khan.

#14 இறைவனின் நண்பன்
      எனக்கு நினைவு வருபவற்றுள் ஒன்று, ஆற்றல் வல்லமை மற்றும் சாஸ்வதம் ஆகிய பண்புகள் கொண்டவனாக மேலான இறைவனை நான் எனது வீட்டின் கூரை மீது கண்டேன். அவ்விடமே முழு உலகம் என்பது போல் பிரகாசமான ஒளியாக, எண்ணிலடங்காத பேருருவாகத் தோன்றிற்று. அவ்வொளியின் நடுவிலிருந்து அவன் என்னை பாரசீக மொழியில் எழுபது முறை அழைத்தான், “ரூஸ்பிஹான், நான் உன்னை எனது ஞான நேச (விலாயத்)த்திற்குத் தேர்ந்துள்ளேன். காதலுக்கு உன்னை எடுத்துள்ளேன். நீ எனது நண்பனும் (வலீ) காதலனும் ஆவாய். துயர் பற்றி அஞ்சற்க, ஏனெனில் நான் உனது இறைவன். உனது ஒவ்வொரு லட்சியத்திலும் நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.” நான் மண்டியிட்டிருந்தேன். மீண்டும் மீண்டும் மண்டியிட்டேன். பிறகு பரவசங்களின் பெருங்கடல்கள் என்னை மூழ்கடித்தன. தேம்புதலும் குறையாத அழுகையும் என்னை ஆட்கொண்டன. அதிலிருந்து மிக அதிகமான அருள்களை அடைந்தேன்.

#15 புனிதத்தின் கோட்டை
      எனது இளமைப் பருவத்திலிருந்து நான் நினைவுகொள்ளும் ஒன்று. ஏழு வானங்களுக்கு மேலுள்ள மறைவான பாலைவனங்களில் எனக்கொரு பெருங்கடல் காட்டப்பட்டது. அதன் நடுவில் தீவு ஒன்றினைக் கண்டேன். அத்தீவின் நடுவில் அளக்கவியலா உயரம் கொண்டதொரு மாபெரும் கோட்டையைக் கண்டேன். அதன் அடிவாரத்திலிருந்து என் பார்வை எட்ட முடிந்த உயரம் வரை எண்ணற்ற சாளரங்கள் இருந்தன. ஒவ்வொரு ஜன்னலில் இருந்தும் எனக்கு இறைவன் தரிசனமானான். “இறைவா! இது என்ன கடல்?” என்று கேட்டேன். “இது புனிதத்துவத்தின் பெருங்கடல்” என்று அவன் சொன்னான். “இது என்ன தீவு?” என்றேன். “புனிதத்துவத்தின் தீவு” என்றான். “இது என்ன கோட்டை?” என்றேன். “புனிதத்துவத்தின் கோட்டை” என்றான். ஆனால், மேலான இறைவன் இடப் பரிமாணத்தைக் கடந்தவன்.  

Related image

#16 கிள்ருவின் ஆப்பிள்
      நான் அப்போது அகமிய எதார்த்தங்களின் அறிவுகள் இல்லாத மூடனாய் இருந்தேன். ஒருநாள், நீடூழி வாழ்வு பெற்ற நபியான கிள்ரு (அவர் மீது அமைதி நிலவட்டும்) அவர்களைக் கண்டேன். அவர் எனக்கொரு ஆப்பிள் தந்தார். அதில் ஒரு கடி தின்றேன். பிறகு அவர் சொன்னார், “அதை முழுமையாகச் சாப்பிடு. நான் அந்த அளவுதான் சாப்பிட்டேன்.” இறைவிதானம் முதல் பூமி வரை ஒரு பெருங்கடல் போன்று இருப்பதாகக் கண்டேன். அதை அன்றி வேறொன்றும் கண்ணில் படவில்லை. அது சூரியனைப் போல் பிரகாசித்தது. என் வாய் அனிச்சையாகத் திறந்துகொண்டது. அது முழுவதும் என் வாயினுள் நுழைந்தது. அதில் ஒரு சொட்டும் மீதம் இல்லாது நான் குடித்துவிட்டேன்.

#17 ஹள்ரத் அலீயைப் போல் கடலில் நீந்துதல்
      ஒரு நாள், கிழக்கில் ஒரு மலைமீது நான் இருப்பதைப் போல் கண்டேன். வானவர்க் குழாம் ஒன்றையும். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வது போன்றதொரு பெருங்கடல் இருந்தது. அதற்கப்பால் எதையும் நான் காணவில்லை. அவர்கள் என்னிடம் சொன்னார்கள், “இக்கடல் நுழைந்து மேற்கிற்கு நீந்து.” எனவே நான் அக்கடலுள் நுழைந்து அதில் நீந்தினேன். மாலையில் நான் சூரியனின் இடத்தை அடைந்தபோது கிழக்கு மற்றும் மேற்கின் பெருமலைகள் சிறு குன்றுகள் போலிருக்கக் கண்டேன். மேற்கு மலையின் மீது ஒரு வானவர்க் குழு இருந்தது. அவர்கள் சூரியனின் ஒளியால் பிரகாசித்தனர். அவர்கள் கூவி என்னிடம் சொன்னார்கள், “நீ யாராக இருப்பினும், நீந்து, அஞ்சாதே!” எனவே, நான் மலையை அடைந்ததும் அவர்கள் சொல்லினர், “நான்காம் கலீஃபா அலீ இப்னு அபீதாலிப் (இறைவன் அவர்களின் முகத்தைக் கண்ணியம் செய்வானாக) அவர்களைத் தவிர வேறு எவரும் இதுகாறும் இக்கடலினைக் கடந்ததில்லை. அவருக்குப் பின் நீயே அதைச் செய்திருக்கிறாய்.”

#18 சமய அறிவுக்கப்பால் சமய அனுபவம்
      அதன் பின், இறையுள்ளமையின் அறிவுகளுக்கான கதவுகள் எனக்குத் திறக்கப்பட்டன. அவை, சமய அறிஞர்களின் புரிதல்கள் திகைப்படையக்கூடிய அந்தரங்க எதார்த்தங்களும் நுட்பங்களும் அறியாக் கல்விகளும் ஆகும். பிறகு எனது சில வேண்டுதல்கல் ஏற்கப்பட்டன. அற்புதமான அருள்கள் நேர்ந்தன. எனது பிரக்ஞை எதார்த்தங்களில் வேர் பிடித்தது. எனினும், உயர்தலுக்கு மேல் உயர்தல்கள் எனக்குத் தோன்றின. படித்தரங்கள், அகநிலைகள், திரைநீக்கங்கள், ஆன்மிக மறைஞானம், தெய்வீக ஒருமை மற்றும் வியப்புமிகு உள்ளத்தில் மறைவின் எண்ணற்ற திரைநீக்கங்கள் ஆகியவற்றை நான் அடைந்தேன்.

Image result for little bear constellation

#19 கரடிக் குட்டியின் தைலம்
      மனிதகுலம் முழுதும் ஒரு வீட்டில் விருந்து நடத்துவதாகக் கண்டேன். அது ஒரு பகல் எனலாய் பற்பல விளக்குகள் எரிந்தன. நான் அவர்களை அடைய முடியவில்லை. எனவே நான் அவ்வீட்டின் கூரைக்குச் சென்றேன். அங்கே, என்னைப் போலவே தோன்றிய, சூஃபி ஆடை அணிந்த அழகிய குருமார்கள் இருவரைக் கண்டேன். கெண்டி ஒன்று அந்தரத்தில் மிதக்கக் கண்டேன். அவ்விரு குருமார்களின் விறகுகள் புகையின்றி மிக நுட்பமாக எரிந்துகொண்டிருந்தன. அவர்களின் கூடாரத்திலிருந்து உணவு விரிப்பொன்று தொங்கியது. நான் அவர்களுக்கு முகமன் உரைத்தேன். அவர்கள் என்னை நோக்கிப் புன்னகைத்தனர். அவர்கள் நல்விதமாய்த் தோன்றிய ஷைகுகள். அவர்களில் ஒருவர் தனது உணவு விரிப்பை எடுத்துத் திறந்தார். அதில் ஓர் அழகிய கிண்ணமும் தூய வெண்ணிற ரொட்டிகளும் இருந்தன. அந்த ரொட்டிகளைப் பிய்த்துக் கிண்ணத்தில் போட்டுவிட்டு, கெண்டியை அதில் கவிழ்த்தார். எடையற்ற மங்கிய தைலம் போன்ற நுட்பமான ஆன்மிகப் பொருளொன்று அதில் வழிந்தது. நான் அதனை உண்ணவேண்டும் என்பது போல் அவர் என்னிடம் குறிப்புக் காட்டினார். நான் கொஞ்சம் உண்டேன். நான் அவை அனைத்தையும் தின்று முடிக்கும் வரை அவர்களும் என்னுடன் கொஞ்சம் உண்டனர். ’அந்தக் கெண்டியில் என்ன இருந்தது என்று உனக்குத் தெரியுமா?’ என்று அவர்களில் ஒருவர் கேட்டார். “எனக்குத் தெரியாது” என்றேன். “இது கரடிக்குட்டியின் (விண்மீன் மண்டலத்தின்) தைலம். உனக்காக அதை நாங்கள் எடுத்து வந்தோம்” என்று அவர் சொன்னார். நான் எழுந்த போது அதைப் பற்றிச் சிந்தித்தேன். அது, வானவருலகின் ஏழு அச்சாணிகளுக்கு (அக்தாப்) நேர்ப்பட்ட ஏழு படித்தரங்களில் இப்பூமியில் அமைந்த இறைநேசர்கள் எழுவர்  பற்றிய குறியீடு என்பதும் அவற்றின் படித்தரங்களின் தூய சாராம்சத்திற்காக மேலான இறைவன் என்னைத் தேர்ந்திருக்கிறான் என்பதும் சில நிமிடங்கள் கழித்தே எனக்குப் புரிந்தது. பிற்கு நான் கரடிக்குட்டி விண்மீன் மண்டலம் நோக்கித் திரும்பினேன். அவ்விண்மீன்கள் ஏழு ஜன்னல்கள் எனக் கண்டேன். அவை அனைத்திலும், மேலான இறைவன் என்னிடம் தோன்றினான். ”என் இறைவா! என்ன இது?” என்று கேட்டேன். கற்பனைகள் அனைத்தையும் கடந்த மேலான இறைவன் சொன்னான், “இவை ஏழும் எனது விதானத்தின் ஜன்னல்கள்.”

#20 விண்ணின் சாளரங்கள்
      காலம் கடந்தது. ஒவ்வோர் இரவும் நான் அதைப் பற்றிச் சிந்தித்திருந்தேன். அவற்றின் மீதான காதலால் ஏங்கினேன். ஒரு நாள் இரவு, அவை திறந்திருக்கக் கண்டேன். மகத்தானவனும் நிராமயமும் ஆன சத்தியப் பரம்பொருள் அவற்றிலிருந்து வெளிப்பட்டு என்னிடம் சொன்னான், “நான் இந்த ஜன்னல்களில் உன்னிடம் தோன்றினேன். இவை வானவரது பேருலகின் எழுபதினாயிரம் கதவுகளாகும். அவை அனைத்தின் வழியாகவும் உன்னிடம் நான் தோன்றினேன். இதைப் புரிந்துகொள்.” நான் என் பிரக்ஞையால் படைப்புக்களின் வசிப்பிடங்களைக் கடந்தேன். என் உயிர் வானங்களுக்கு மேல் உயர்ந்தது. மேலான இறைவனின் வானவர்களை நான் ஒவ்வொரு வானத்திலும் கண்டேன். ஆனால் இறைவனின் பிரசன்னத்தை அடையும் வரை அவர்களை எல்லாம் கடந்து போனேன். அவனின் வானவர்கள் பூமியில் உள்ள அவனது படைப்புக்களை விடவும் மாபெரிய படைப்புக்களாக இருக்கக் கண்டேன். அவர்கள் தொழுதுகொண்டும், இறை நெருக்கத்தின் சாட்சியத்தில் திளைத்துக்கொண்டும், அவனது புகழினை முழங்கிக்கொண்டும் இருந்தனர். பிறகு நானோர் ஒளிரும் உலகிற்குள் புகுந்தேன். அது என்ன என்று உசாவினேன். அவ்வுலகே அர்ஷ் எனப்படும் இறை விதானம் எனப்பட்டது. பரிமாணங்கள் அற்றதொரு வெளியிடை ஏகி நித்தியத்தின் கதவுகளை அடைந்தேன். அங்கே நான் பாலைகளையும் பேராழிக் கடல்களையும் பார்த்தேன். நான் அழிந்துகொண்டிருந்தேன். நான் மருண்டிருந்தேன், மறைந்துகொண்டிருந்தேன். சத்தியப் பரம்பொருள் எங்கிருந்து வந்தான் என்று வியந்திருந்தேன். ஏனெனில், எங்கு என்பதோ எப்போது என்பதோ இல்லவே இல்லை.

#21 இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன்
       ஆதியின் விடியல்களில் இருந்து அவன் என் முன் நித்தியத்தின் வடிவில் தோன்றி என்னிடம் சொன்னான், “மறைவின் மறைவிலிருந்தும் மேலும் மறைவின் மறைவிலிருந்தும் நான் உன்னிடம் வந்திருக்கிறேன்; உனக்கும் எனக்கும் இடையில் எழுநூறாயிரம் ஆண்டுகள் பயணத்தொலைவு இருந்தது.” அவன் என்னிடம் பேரன்புடன் பேசினான். என்னைப் பிரியமுடன் நடத்தினான். கருணையாக இருந்தான். அவன் சொன்னான், “அனைத்துப் படைப்புக்களிலும், உனது காலத்தில் இந்தப் படித்தரத்திற்கு உன்னையே நான் தேர்ந்திருக்கிறேன்.” புனிதமான விழுப்பங்களையும் முன்னூழியின் சிறந்த தன்மைகளையும் அவன் எனக்குத் திரைநீக்கினான். அழகில் ஒரு வல்லமையையும், வல்லமையில் ஓர் அழகையும் நான் கண்டேன். அதை ஒருபோதும் என்னால் விவரிக்க இயலாது. தூய காதலும் விசேஷ ஞானமும் அவன் எனக்கு வழங்கிய அன்பளிப்புக்களில் உள்ளவையாகும். என்னை அவன் தன் முன் வைத்தான். பிறகு, ஒவ்வொரு நொடியும் அவன் ஆயிரம் வகையிலான மாட்சி பிரகாசம் ஒளிர்வு மற்றும் மேன்மைகளில் காட்சியளித்தான்.

Related image
Persian king shah tahmasp I

#22 பாரசீகத்தின் அரசன்
 எனது இளமைக் காலத்தில் நள்ளிரவில் தியானிக்கும் வழக்கம் கொண்டிருந்தேன். ஓர் இரவில் நான் தொழும்போது சத்தியப் பரம்பொருள் “மிக அழகான தோற்றத்தில்” என்னிடம் வந்தான். அவன் என் முகத்தில் சிரித்து ஒரு கஸ்தூரி முடிப்பை என்னிடம் வீசினான். “இன்னும் அதிகமாகக் கொடு” என்று நான் கேட்டேன். அவன் சொன்னான், ”அவ்விரண்டும் அரசர்கள். ஆனால் நீயோ பாரசீகத்தின் அரசன்.”

#23 இறைவன் என்னும் பெருவள்ளல் (அல்-வஹ்ஹாப்)
      ஓரிரவு யாமத்தில் விழித்திருந்தேன். உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் அரை சுதாரிப்பில் இருந்தேன். எனது நிலைமாற்றத்தில் “யா வஹ்ஹாப் (வள்ளலே!)” என்றழைத்தேன். ஒளியின் நகைகள் அணிந்த தோற்றத்தில் தனது வல்லமை மற்றும் அழகின் திருப்பண்புகளுடன் சத்திய இறைவன் என்னிடம் தோன்றியான். மாபெரும் நிதியத்தை என்னிடம் பொழிந்தான். அஃது அவனது சாஸ்வதமான திருமுகத்திலிருந்து பொழியப்பட்ட நிதியமாகும். அவன் சொன்னான், “வள்ளலே என்றெனை நீ அழைத்ததால் வள்ளலிடமிருந்து இதனை நீ எடுத்துக்கொள். ஏனெனில், நான் மிகவும் தாராளமான வள்ளல்தான்.”

Image result for houris in paradise

#24 சக்தியிரவில் சொர்க்கம்

      சக்தியின் இரவை (லைலத்துல் கத்ரு) இறைவன் எனக்குத் திரைநீக்கி, மனிதவுருவில் வானவர்களை, சிரித்தவர்களாகவும் ஒருவரை ஒருவர் வாழ்த்தியவர்களாகவும் இருப்பதைக் காண்பிக்காமல் ஒரு வருடமும் சென்றதில்லை. அவர்களில் ஜிப்ரீலும் ஒருவர். வானவருள் அவரே அதி அழகர். வானவர்களுக்குப் பெண்களது போன்ற கூந்தலுண்டு. அவர்களின் முகங்கள் செந்நிற ரோஜாக்களைப் போலிருக்கும். சிலரின் தலைகளில் ஒளியாலான திரை இருக்கும். சிலரின் சிரங்களிலோ நவமணிகள் பதித்த தொப்பிகள். சிலரோ முத்துக்களால் ஆன ஆடைகள் அணிந்திருப்பர். நான் அடிக்கடி அவர்களைத் துருக்கியரின் தோற்றத்தில் கண்டேன். நான் ரிள்வானையும் சொர்க்கத் தோட்டத்தையும் கண்டு அதனுள் நுழைந்தேன். குர்ஆனில் இறைவன் வருணித்திருப்பது போன்றே நானங்கு சுவன அழகிகளையும் சிறார்களையும் கண்டேன். நான் கோட்டைகளுக்குள் நுழைந்து ஓடைகளில் பருகினேன். சொர்க்கத் தோட்டத்தில் நான் கனிகளை ருசித்தேன். மேலும் அங்கே தர்பூஸ் பழமும் உண்டேன். இறைவிதானத்தையும் பாதபீடத்தையும் (அர்ஷ் வ குர்ஸி) நான் அடிக்கடிக் கண்டேன். தெய்வீக ஆடைகட்டிய மேலான இறைவனைப் பார்த்தேன். அங்கியணிந்ததொரு எஜமானன் போலிருந்தான். அவனது வல்லமை மற்றும் மாட்சிமையில் நான் உருகினேன்.

#25 வல்லமையின் அங்கி
      வானங்களை ஏதோவொன்று சுற்றி வளைத்திருப்பதை ஓரிரவு கண்டேன். செந்நிற முத்தினைப் போல் அது ஒளிர்ந்தது. “இது என்ன?” என்று நான் கேட்டேன். “இதுதான் வல்லமையின் அங்கி” என்று சொன்னார்கள். படைப்புக்களுக்கு அப்பாலான சத்திய இறைவன் என்னைத் தனது விதானத்திற்கும் பாதபீடத்திற்கும் இடையில் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்றான். அவனது கால்கள், ஆடையால் மூடப்படாது வெளிப்பட்டிருந்தன. 


Friday, July 28, 2017

ஒரு சூஃபியின் டைரி - 2

ஆரம்ப நாட்கள் (#7-13)

Image result for dargah boy
photo by manyak jindal.

#7 கடந்த கால அனுபவத்தை விவரித்தல்
      இந்த ரகசியங்களின் ஆரம்பங்கள் என் இதயத்தில் நேர்ந்த போது எனக்குப் பதினைந்து வயது.  இப்போது நான் ஐம்பத்தைந்து. எனது திரைநீக்கங்கள் மற்றும் எனது நுட்பமான தரிசனங்கள் ஆகியவற்றின் ரகசியங்களை, உனக்கு நிகழாது தப்பியவற்றை எப்படி உனக்கு நான் விளக்குவேன்? ஆனால், கடந்த காலத்தில் எனக்குத் திரைநீக்கப்பட்ட சில விஷயங்களை உனக்கு நான் விளக்குவேன், அதன் பின்னர் என்ன நடந்தது என்றும் சொல்வேன், மேலான இறைவன் நாடினால்.

Image result for sufi orders of west
#8 மிக ஆரம்பக் காலத்து நிமித்தங்கள்
      புரிந்துகொள். உன் புரிதலை இறைவன் ஆசீர்வதிப்பானாக. நான் வழிதவறிய குடிகார முட்டாள்களின் மத்தியில் பிறந்தேன். மூன்று வயது வரை சந்தையின் பொதுமக்களால் வளர்க்கப்பட்டேன்.  ”வெருண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கின்றனர்; சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்)” (74:50-51). என் இதயத்தில் ஒரு கேள்வி எழுந்தது, “படைப்புக்களின் கடவுளான உன் இறைவன் எங்கே?” எனது இல்லத்தின் முற்றத்தில் எமக்கொரு பள்ளிவாசல் இருந்தது. நான் சில சிறார்களைச் சந்தித்து “உமது இறைவனை நீங்கள் அறிவீரா?” என்று கேட்டேன். “அவனுக்குக் கைகளோ கால்களோ இல்லை என்று சொல்கிறார்கள்” என்று அவர்கள் பதில் அளித்தனர். மேலான இறைவன் உறுப்புக்கள் மற்றும் பாகங்களை விட்டும் தூய்மையானவன் என்று அவர்கள் தமது பெற்றோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அக்கேள்வியை நான் அவர்களிடம் கேட்ட தருணத்தில் எனது இதயத்தில் மட்டற்ற ஆனந்தம் நிறைந்தது. இறைவனின் திருப்பெயர்களை உச்சாடனம் (திக்ரு) செய்யும்போதும் தியானத்தின் ஆழ் நிலைகளிலும் ஏற்படும் ஒளியேற்றங்களைப் போன்றதொரு அனுபவம் அப்போது எனக்கு நேர்ந்தது. ஆனால் அதன் எதார்த்தம் என்னவென்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

Image result for sufi love
#9 காதலின் கண்விழிப்பு
      நான் ஏழு வயதை அடைந்தேன். அவனை நினைப்பதும் அடிபணிவதுமான ஒரு நேசம் என் நெஞ்சில் உண்டாயிற்று. நான் எனது பிரக்ஞையில் தேடி அது என்னவென்று அறிந்துகொண்டேன். பிறகு என் இதயத்தில் தீவிரக் காதல் எழுந்தது. உக்கிரமான காதலில் என் உள்ளம் உருகிற்று. அக்காலத்தில் நான் காதலின் பித்தேறிக் கிடந்தேன். முன்னூழியின் நினைவெனும் ஆழியிலும் புனிதத்துவத்தின் நறுமணக் காற்றினிலும் பாய்ந்து மூழ்குபவனாக இருந்தேன். பின்னர், எவ்வொரு சிரமமமும் இன்றி பரவசங்களின் தொடரலைகள் என்னில் எழுந்தன. ஒரு மெல்லுணர்வு என் இதயத்தை அதிர்வித்தது. என் கண்கள் நீரால் நிரம்பின. அந்நிலை இறைவனின் திருநாம தியானமே அன்றி வேறில்லை என்பதை நான் அப்போது அறியவில்லை. அக்காலத்தில் முழு இருத்தலையும், அழகிய முகங்களால் அது நிறைந்திருப்பது போன்று கண்டிருந்தேன். அப்பருவத்தில் தனிமைகள், தொழுகைகள், தியானங்கள் மற்றும் மாபெரும் குருமார்களைச் சந்தித்தல் ஆகியவற்றின் மீது எனக்குப் பேரார்வம் வளர்ந்து வந்தது.


#10 ஆன்மிகப் பாதையில் நுழைதல்
      எனக்குப் பதினைந்து வயது ஆனபோது மறைவுலகிலிருந்து விளிக்கப்பட்டது போல் நேர்ந்தது. என்னிடம் சொல்லப்பட்டது, “நீ ஓர் இறைத்தூதர்.” நான் என் மனதினுள், “என் பெற்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள், முஹம்மதுக்குப் பிறகு வேறு இறைத்தூதர் கிடையாது என்று. நான் புசித்தும் பருகியும், இயற்கை உபாதைகளுக்குச் சென்றுகொண்டும், அந்தரங்க உறுப்புக் கொண்டவனாகவும் இருக்கையில் நான் எப்படி ஓர் இறைத்தூதனாக இருக்க முடியும்?” என்று சொல்லிக்கொண்டேன். ஏனெனில், இறைத்தூதர்களுக்கு இத்தகைய விஷயங்கள் கிடையாது என்று கருதினேன். காலம் சென்றது, நான் தீவிரக் காதலில் தொலைந்து போனேன். மதியத் தொழுகைக்காக என் கடையிலிருந்து எழுந்து அங்க சுத்திக்கான நீர் தேடிப் பாலைவனத்திற்குச் சென்றேன். ஓர் இனிய குரலைக் கேட்டேன். எனது பிரக்ஞையும் இதயமும் துடித்தன. நான் சொன்னேன், “பேசுபவரே, என்னுடன் இரும்!” அருகிலிருந்த ஒரு மலையின் மீது ஏறினேன். குருமார்களின் உடையணிந்த ஓர் அழகிய நபரைக் கண்டேன். என்னால் பேச இயலவில்லை. இறைவனின் ஏகத்துவம் பற்றி அவர் ஏதோ சொன்னார். ஆனால் அதைப்பற்றி நான் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. ஒரு பிதற்றலும் திகைப்பும் என்னைப் பீடித்தன.

Related image
#11 பாலைவனத்திற்கு ஓடுதல்
      நான் அஞ்சினேன். மக்கள் என்னைச் சுற்றிலும் உலவினர். ஒரு பாழ் மண்டபத்தில் இருந்தேன். இரவு வரை அங்கேயே தங்கினேன். பிறகு அவ்விடம் நீங்கி எனது கடைக்குத் திரும்பினேன். விடியும் வரை அங்கேயே பரவத்திலும் சிரமத்திலும் பெருமூச்சுக்களும் கண்ணீரும் கொண்டிருந்தேன். நான் மருண்டு திகைத்தேன். அனிச்சையாக எனது நாவில் சொற்கள் எழுந்து வந்தன, “என் ரட்சகனே! உனது மன்னிப்பு! என் ரட்சகனே! உனது மன்னிப்பு!” (குர்ஆன்:2:285). எனது நா அசைவு அற்றது. ஏதோ பல நாட்களாக அமர்ந்திருப்பது போல் அப்படி இருந்தது. மேலும் ஒரு மணி நேரம் அப்படி அமர்ந்திருந்தேன். பிறகு என்னைப் பரவசம் ஆட்கொண்டது. பணப்பெட்டியையும் கடையிலிருந்த சரக்குகளையும் தட்டுப்பாட்டிற்கான சேமிப்புக்களையும் சாலையில் வீசியெறிந்தேன்.  என் ஆடைகளைக் கிழித்தபடி பாலைக்கு ஓடினேன். ஒன்றரை வருடங்கள் அந்நிலையில் இருந்தேன், பிதற்றலும் திகைப்பும் மிகைத்தவனாக, அழுகையிலும் பரவசத்திலும். பெரும் களிப்புக்களும் மறைவான காட்சிகளும் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்தன. அப்பரவசங்களில் நான் வானங்கள பூமி மலைகள் பாலைகள் மற்றும் ஒளியாலானவை போன்ற மரங்கள் ஆகியவற்றைக் கண்டேன். பிறகு அக்கொந்தளிப்பு மெல்ல அடங்கி அமைதியானேன்.

#12 முதல் திரைநீக்கம்
      எனது வாழ்வின் ஆரம்பக் காலத்துத் திரைமூடலை விட்டும் நான் மீண்டுவிட்டேன். சூஃபிகளுக்குத் தொண்டு செய்ய ஏங்கினேன். மிக அழகிய கேசம் இருந்தபோதும் என் தலையை மழித்துக்கொண்டேன். சூஃபிகளிடம் சேர்ந்தேன். அவர்களின் பணிகளில் ஊழியம் செய்தேன். கடுமுயற்சிகளும் ஆன்மிகப் பயிற்சிகளும் மேற்கொண்டேன். குர்ஆனைப் பயின்று மனனமும் செய்து முடித்தேன். எனது பொழுதுகள் பெரிதும் சூஃபிகளுடன் பரவசத்திலும் ஆன்மிக நிலைகளிலும் கழிந்தன. ஆனால், ஒரு குறிப்பிட்ட நாள் வரை மறைவின் திரைநீக்கம் எனத் தக்க எதுவும் எனக்கு நிகழாதிருந்தது. அந்த நாள் வந்தபோது, மறைவுலகை தியானித்தபடி நான் கூரை மீது அமர்ந்திருந்தேன். அப்போது நான் இறைத்தூதர் (ஸல்...) அவர்களை, அபூபக்கர், உமர், உதுமான் மற்றும் அலீ (இறைவன் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) ஆகியோருடன் என் முன் வரக் கண்டேன். அதுவே எனது முதல் திரைநீக்கம்.

Related image
#13 குருவைத் தேடல்

      ஆனால் அப்போது எனக்கொரு குரு இருக்கவில்லை. நான், பாசாவில் இருந்த எனது வீட்டிற்குத் திரும்பினேன். ஈடேற்றம் அடைந்துவிட்ட ஒரு குருவை, வழிகாட்டியைத் தேடினேன். மேலான இறைவன் என்னை ஷைகு ஜமாலுத்தீன் அபில் வஃபா இப்னு ஃகலீல் அல்-ஃபசாயீ (இறைவன் அவர் மீது கருணை புரிவானாக) அவர்களிடம் கொண்டு சேர்த்தான். அவருமே ஆரம்ப நிலையில்தான் இருந்தார். அவரின் சகவாசத்தில் இறைவன் எனக்கு வானவருலகின் கதவுகளைத் திறந்ததுடன் தடங்கலற்ற திரைநீக்கங்களையும் தந்தான். அவரது சகவாசத்தில் ஆன்மிக நிலைகள் மறைஞானங்கள் மற்றும் சமய ரகசியங்களுடன் பாய்ந்திருந்தன, எண்ணற்ற பரவசங்களும் திரைநீக்கங்களும் நிகழ்ந்து முடிக்கும் வரை.


Wednesday, July 26, 2017

மூன்று கவிதைகள் (26.07.2017)

Image result for zen nature bamboo bridge
அவகாசம்

எஃகாலானதன்று இத்தேகம்
மூங்கிற்பாலம்

எனினும்,
அந்தியிருளுதற்குச் சற்று முன்வரை
அவகாசமுண்டு

கீழோடும் நீரோடை தனில் லயிக்க
ஓடைக்குள் நீந்துகின்ற மீன்கள் ரஸிக்க

Image result for small black bird 
தோற்றம் 5:30 – மறைவு 5:35

நூற்பிடித்த நேர்த்தியான கோடுகளின்
வரைவுகள் கொண்டொரு கச்சிதமான
கனச்சதுரமாய்
மனிதன் கட்டிய அந்தப் பெரிய வீட்டின்
மேல் முனை விளிம்பில் வந்தமர்ந்தது
அங்கை அளவே ஆன கரிய குருவி ஒன்று

வெண்ணிறச் சாயமடித்த அக்கட்டடத்தில்
அதன் உருத்தோற்றம்
ஏதுமே எழுதப்படாத தாளில்
எழுதுதற்கு ஒன்றுமே இலாது வைக்கப்பட்ட
முற்றுப்புள்ளி போல் இருந்தது

மேலும் கீழுமாய்த் தனது வாலாட்டிக்கொண்டு
இரண்டு மூன்று முறை கூவிற்று

கிளைகளும் கொப்புகளும்
இலைகளும் மொக்குகளும்
இல்லாத அக்கட்டடம் விட்டு
எவ்விப் பாய்ந்து போயொரு
மரச்செறிவினுள் மறைந்தது

Related image
ஓர் உதிர் மலர் போல்

அந்தி நெருங்கும் வேளையில்
எப்படித்தான்
என் வீட்டைத் தன் இலக்காக்கி
வந்து சேர்ந்ததோ
தன் வாழ்வின் இறுதிக் கணங்களில்
அந்த வண்ணத்துப் பூச்சி

காற்றின் போக்கில்தான்
வந்து விழுந்திருக்க வேண்டும்

இச்சைகள் சலித்த ஒருவன்
முதுமையில் துறவு கொண்டது போல்
பூக்களேதுமற்ற
புற்களும் கற்களுமேயான
எனது ஜென் தோட்டத்தில்
ஓர் உதிர் மலர் போல்
வீழ்ந்துவிட்டது அது

அடிபட்டிருக்கிறதோ?
என்றாள் அவள்

அதன் சிறகுகள் பிய்ந்திருக்கவில்லை
விரிந்தும் குவிந்தும்
மீண்டும் மீண்டும்
மெதுவாக அசைந்திருந்தன

மரணத்தைச் சுவைக்கும் அத்தருணத்திலும்
தேனுண்ட நினைவுகளில்
லயித்திருந்தது போலும்

அதன் உயிர் அல்லது ஆன்மா
வெளியேறியதை யாமொருவரும்
கண்டிருக்கவில்லை

அப்படியே கிடந்த அது
அப்படியே கிடந்தது

லாசருஸை உயிர்த்தெழச் செய்த
ஏசுநாதரைப் போலவோ
காற்றுக் கிழித்த பறவையை
மீண்டும் உயிர்ப்பித்த
முகைதீன் ஜீலானீயைப் போலவோ
ஆற்றல் பெற்றவன் அல்லன் நான்

என்னால் முடிந்ததெல்லாம்
செத்துக்கொண்டிருந்த அதனுடன்
சேர்ந்து கொஞ்சம்
நானும் செத்தது மட்டுமே.




Tuesday, July 25, 2017

ஒரு சூஃபியின் டைரி - 1

பகுதி ஒன்று
நினைவுகள்

Image result for spiritual opening


திறப்பு (#1-6)
#1. இறைமேன்மைப் புகழ்ச்சி

       பேரருளாளனும் அருங்கருணையாளனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால். இறைவனுக்கே புகழ் உரியது.
அவனது இருப்பின் மீது யாதொரு ஐயமும் விமரிசனமும் எழ இயலாது. மாறும் காலங்களாலும் யுகங்களாலும் அவனது சுயத்திலும் பண்புகளிலும் எந்த மாற்றமும் நேராது.
அவனது சாஸ்வதம் அளக்கப்படக்கூடிய ஆரம்பம் உடையதன்று. அவனது சுயமும் அதன் விளைவுகளுக்கு ஆட்படுவதன்று. அவனது முன்னூழிகள் எல்லாம் கால இடைவெளிகளுக்கு அப்பால் புனிதமுள்ளவை. அவனது பின்னூழிகள் எல்லாம் தற்கணம் மற்றும் தற்பொழுது ஆகியவற்றை விட்டும் தூயவை.
அவனது சுயத்திலும் திருப்பண்புகளிலும் அவன் ஆதாரங்களுக்கும் அத்தாட்சிகளுக்கும் அப்பால் ஆனவன் என்றபோதும் அவனை சாட்சியாகப் பார்த்திருப்போரால் அவனது சுயத்தாலும் திருப்பண்புகளாலும் அறியப்படுகிறான்.
 அவனது ஏகத்துவத்தின் களங்களில் நியதிகளும் நிகழ்வுகளும் மறைந்துபோகின்றன. அவனது ஆட்சியின் மகிமையில் உணர்வுகளும் அறிவுகளும் அழிந்துபோகின்றன. அவன் தன் சுயத்தால் கற்பனை ஒப்புவமைகளை விட்டும் மேலானவன். அறிவுகளும் கற்பனைகளும் கிரபிப்பதை விட்டும் அவனது திருப்பண்புகள் மேலானவை.
இருக்கும் பொருள் யாவினுக்கும் முன் தனது தெய்வீகத்தால் அவன் இருந்தான். அனைத்து நிலைகளும் கடந்து போன பின்னும் அவன் தனது ஆற்றலால் இருப்பான்.
உயர்ந்த உணர்வழுச்சிகளும் அவனது ஆழத்தை முழுமையாய் அளப்பதில்லை. தேடும் அறிவும் அவனது திருப்பண்புகளின் வானத்தை அளப்பதில்லை. அவனது வல்லமையின் ரகசியங்களுக்குள் எதுவும் துளைத்துப் புக முடியாது. அவனது அழகின் ஒளியை உள்வாங்கிக்கொள்வது என்பதும் இல்லை.
அவனது மேன்மையின் நுட்பங்கள் பார்வையை அழித்துவிடுகின்றன. அவனது மாட்சிமையின் தாக்கம் சிந்தனையைத் துடைக்கிறது. அவனது சாஸ்வதத்தின் ஆற்றல் தற்காலிகப் புரிதல்களைத் திகைக்க வைக்கிறது. அவனது ஒருமையின் கோபம் இடவெளியின் எல்லைகள் மீது மிகைக்கிறது.
அதி தூய பண்புகளும் மிக அழகிய பெயர்களும் நனி சிறந்த குணங்களும் அவனுடையதே. அவன் தன் அறிவால் அறிகிறான், தன் சக்தியால் ஆற்றலுடன் இருக்கிறான், தன் ஜீனவால் ஜீவிக்கிறான், தன் கேள்வியால் கேட்கிறான், தன் பார்வையால் பார்க்கிறான், தன் பேச்சால் பேசுகிறான், தன் நாட்டத்தால் நாடுகிறான்.
அவன் ஊழிக்கு முந்தையனும் பிந்தையனும் ஆவான். அவன் இருப்பவன், ஆனால் காலத்திலிருந்து அல்ல; அவன் உள்ளவன், ஆனால் இல்லாமையிலிருந்து அல்ல. தனது சுயம் மற்றும் திருப்பண்புகளால் அவன் எப்பக்கமிருந்து நோக்கினும் ஒன்றேயான கண்ணாடியாக இருக்கிறான். அவனது ஒருமை என்பது இணைதல் அல்லது பிரிதல் என்பதிலிருந்து அல்ல. அவனே உலகிற்கு உள்ளமை நல்கினான், ஆனால் தனிமையிலிருந்து அல்ல.
எப்பொருளும் அவனுக்கு ஒப்புவமை அல்ல. அழியக்கூடிய படைப்புக்கள் அவனைப் போன்றன அல்ல. அவன் தனது மாட்சிமையால் ஒப்பு மற்றும் இணை ஆகியவற்றை விட்டும் மேலானவன். கற்பனைகள், கோட்பாடுகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு அப்பால் அவன் தனது சுயத்தின் பிரகாசத்தால் ஒருவனாக இருக்கிறான். வருணனைகள் அவனைத் திறந்து காட்டுவதில்லை. முயற்சிகள் எதுவும் அவனைக் கட்டுப்படுத்துவதில்லை.

Image result for salawat picture

#2 படைப்புக்களின் திறப்பும் இறைத்தூதர் மீதான வாழ்த்தும்

      அவன் மனிதர்களுக்கு பக்தியையும் ஆன்மிக ஞானத்தையும் கொணர்ந்தான். தனது ரட்சகத் தன்மையால் அவர்களை பணிவுக்கும் நம்பிக்கைக்கும் அழைத்தான். தனது ஆட்சியின் கருவூலத்திற்குள் அவன் விதானத்தையும் பாதபீடத்தையும் கொண்டு வந்தான்.
தன் அதிகாரத்தின் வெளியை இடத்தில் வைத்தான். வானவர்க்கும் உயிர்களுக்கும் ஆடுகளம் அமைத்தான். வருந்துநர்க்காக நெருப்பையும் மகிழ்நர்க்காகத் தோட்டத்தையும் படைத்தான்.
நெருக்கத்தின் கூடாரக் கயிறுகள் கொண்டு வானங்களை விரித்தான். அண்ட வெளியின் எரியும் விளக்குகளால் அவற்றை அலங்கரித்தான். புகழ்ச்சிக்காரர்க்கு விண்மீன்களைத் தொழுகை திசையாகவும் தியானத் திடலாகவும் ஆக்கினான். பக்தர்களுக்கும் அரசர்களுக்கும் பூமியை விரித்தான். கல்முளைகளின் கடினத்தால் அவற்றை ஸ்திரப்படுத்தினான். நளினமுள்ள மரங்களால் அதனை அலங்கரித்து ஊற்றுக்களும் நதிகளும் பாய்ந்தோடச் செய்தான்.
புனிதத்திற்கும் தூய்மைக்கும் ஆன்மிக ஆளுமைகளைத் தனியாக்கி வைத்தான். தனது வெளிப்பாட்டுக்காகவும் தீர்க்கதரிசனத்துக்காகவும் தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் தேர்ந்தான். பரவசங்களுக்கும் ஞானத்திற்கும் ஞானியரைத் தேர்ந்தெடுத்தான். நல்லோர்க்கு அவன் ஏக்கம், உணர்வெழுச்சி மற்றும் காதலைக் கொண்டுவந்தான்.
தீர்க்கதரிசிகளுக்கும் தூதர்களுக்கும் சாட்சிமையும் தரிசனமும் தந்து கண்ணியப்படுத்தினான். திரைநீக்கங்கள் மற்றும் தெளிவுகள் கொண்டு ஞானியரது உட்பிரக்ஞையின் கண்களைத் திறந்தான். அவற்றைப் பல்வேறு தளங்கள், உயர்வுகள் மற்றும் படித்தரங்களில் அமைத்தான்.
ஆன்மிக அறிவு, திரைநீக்கங்கள், அரிய ஞானம் மற்றும் அருள்கள் ஆகியவற்றின் பெருங்கடல்களுக்குள் மூழ்கி நீந்துபவரும், தீர்க்கதரிசிகள் மற்றும் திருத்தூதர்களின் தலைவரும், ஞானியர்க்கும் நல்லோருக்கும் தூய முன்மாதிரியும் ஆன முஹம்மது அவர்களின் மீது அல்லாஹ்வின் பேரருள் உண்டாவதாக; மேலும், அன்னாரின் தூய சந்ததியினர் மற்றும் உயர்ந்த சகாக்களின் மீதும் உண்டாவதாக.

Related image

#3 தன் காதலர்க்கு இறைவனின் சுய வெளிப்பாடு

      பரம்பொருளான மேலான இறைவன் தனது தூதர்கள் தீர்க்கதரிசிகள் வானவர்கள் மற்றும் ஞானியர் ஆகியோர்க்குத் தன்னை பற்றி விசேஷமான அடையாளங்களால் கற்பித்தான். அவ்வடையாளங்கள் விதானம் முதல் பூமி வரை உள்ளன. அவர்களுக்கு அவன் ஆதியிலேயே தனது அடையாளங்களைக் காட்டினான். அந்த அருள் மற்றும் வாத்ஸல்யத்தால் அவர்கள் அவனை நேசித்தார்கள். எனினும் அவர்களுக்குத் தான் வழங்கியது பற்றி அவனுக்குத் திருப்தி ஏற்படவில்லை. ஏனெனில் அது அவர்களது படைப்பின நிலைக்குக் காரணமாயிருந்தது. எனவே அவன் அவர்களுக்குத் தனது இருத்தலின் ஒளிகளைத் திறந்து காட்டினான், தனது வல்லமையின் அஞ்சனத்தை அவர்களின் கண்களில் தீட்டினான், தனது வானவருலகின் சூரியக் கதிர்களை அவர்களுக்குக் காண்பித்தான். இப்போது அவர்கள் அவனை ஒரு விசேஷமான காதலால் நேசித்தார்கள். ஆனால் உண்மையில் அக்காதல் முடிவு தொடங்கியதன் காதலாக இருந்தது. பின்னர் அவன் அவர்களுக்குத் தனது அழககு மற்றும் வல்லமையின் நுட்பங்களைத் திரைநீக்கினான். அதனால் அவனின் சுயம் மற்றும் திருப்பண்புகள் உருக்கொண்டன.
      அவர்கள் அவனை அறிந்து, கால ஓட்டத்தாலும் துன்பங்களாலும் சோதனைகளாலும் மாறிவிடாத மேன்மையான உண்மையான காதலால் நேசித்தார்கள். திரையற்ற உண்மையின் சாட்சிமை கொண்டு அவர்கள் அவனுக்கு சாட்சியானார்கள். பிறகு அவன் அவர்களை விளித்து, அவர்களிடம் அறிதான ஞானங்களைப் பேசினான். தனது பெயர்களின் உச்சாடனத்தை அவர்களுக்கு போதித்தான். தனது திருப்பண்புகள் மற்றும் குணாம்சங்கள் பற்றிய நுட்பங்களை அவர்களுக்கு அறிவித்தான். தனது நெருக்கத்தின் ரோஜா மற்றும், அணுக்கங்கள் மற்றும் இணைதல் ஆகியவற்றின் மூலிகைகளின் நறுங்காற்றை அவர்கள் முகரும்படிச் செய்தான்.
      தனது தாராளமான அந்தரங்கமான உரையாடல்களால் அவன் அவர்களிடம் விரிந்திருந்தான். தனது ரகசியங்களைத் திரைநீக்கினான். தன் அழகால் நெருங்கியிருந்தான். அவர்கள் தனது வல்லமையின் காதலர்களாய் இருக்கும்படிச் செய்தான். இப்படித்தரங்களால், தவப் பயிற்சிகள் மற்றும் முயற்சிகளின் சுமையை அவர்கள் முடிந்த வரை சுமந்தனர். அவர்கள் அவனது இருத்தலின் மணப்பெண்கள் ஆயினர். அவனது பேரரசு மற்றும் வானவருலகின் பிரஜைகள் ஆயினர். அவர்களில் சிலர் சீடர்கள், சிலர் ஞானியர், சிலரோ அடையாளங்களின் மக்கள், மேலும் சிலரோ உரைகள் ஆலோசனைகள் மற்றும் அந்தரங்க உரையாடல்களின் மக்கள், மேலும் சிலரோ சாட்சியுரைத்தல் மற்றும் கோட்பாடுகளின் மக்கள், மேலும் சிலரோ ஆன்மிக ஞானம் மற்றும் காருண்யத்தின் மக்கள், மேலும் சிலரோ இறையறிவு மற்றும் மெய்ஞ்ஞானத்தின் மக்கள், மேலும் சிலரோ ஏகம் ஒருமை மற்றும் தனிமை ஆகியவற்றின் மக்கள், மேலும் சிலரோ தனித்தன்மையினர், மேலும் சிலரோ இணைவினர்.
முன்னூழிகள் மற்றும் ஊழிகளின் பெருங்கடல்களைக் கடந்து அவர்கள் தம் இலக்கினை அடைந்தால் அவர்கள் பிதற்றும் களியர்கள் ஆகின்றனர். திரைநீக்கம் மற்றும் பரவசங்களால் மறைவிலிருந்து ஏற்படும் அபாயக் கொந்தளிப்புக்களின் முன் அவர்கள் அமைதி காத்து உறுதியுடன் நிற்பரேல் அவர்கள் தெளிஞர்கள் ஆகின்றனர். களியேற்றத்தின் பின்னும் அவர்கள் உறுதியுடன் நிற்பார்கள் எனில் இறைவன் அவர்களைக் காலத்தின் ஒளிவிளக்குகளாய், ஆன்மிக அறிவின் அடையாளங்களாய், சத்திய எதார்த்தத்தின் படிநிலைகளாய், சமயச் சட்டத்தின் குறிப்பலகைகளாய் ஆக்குகின்றான். இந்தப் அக்நிலைகள் மற்றும் படித்தரங்கள் ஆகியவற்றின் மக்களில் இறைவன் எம்மையும் உம்மையும் ஆக்கி வைப்பானாக.

#4 ஒரு நண்பன் வழி கேட்கிறான்

      ஒரு முறை, இறைக்காதலர் ஒருவர் (படைப்புக்களையும் காலத்தையும் முதுகின் பின் ஒதுக்கிவிட்டு, தனிமையிலிருந்து ஆத்மஞானத்தையும் இணைவையும் தேடுகின்ற நேர்மையாளர்களுள் ஒருவர்), எனக்கு நேரும் திரைநீக்கங்கள் மற்றும் தரிசனங்களின் ரகசியங்களைப் பற்றியும், வானவருலகத்து மணப்பெண்கள் பற்றியும், எனக்குத் திறக்கப்படும் சக்தியொளிகளின் அற்புதங்கள் பற்றியும், இறை வெளிப்பாட்டின் நுட்பங்கள் பற்றியும், ஒருவனுக்குத் தெய்வீக ஆடைகள் உடுத்தப்படும் படித்தரத்தின் இறங்குதல் பற்றியும், எனது பரவசங்களிலும் போதையிலும் மற்றும் எனது தெளிவிலும், இரவும் பகலும் நிகழும் இறை சுயத்தின் நுட்பங்களின் தூய திரைநீக்கம் பற்றியும், மேலான இறைவன் தனது பிரசன்னத்திலிருந்து எனக்குத் திறந்து கொடுத்த மறைவான அறிவுகளைப் பற்றியும் தனக்குச் சொல்லுமாறு மிகவும் அன்புடன் கேட்டார். அதுவே அவருக்கு அவரது பாதைக்கான பிரகடனமாகவும் மறைவுலகில் அவரது இதயத்திலும் ஆன்மாவிலும் அவருக்கான அணுக்கத் தோழனாகவும் இருக்கும் என்பதற்காக.

Image result for sufi theophany

#5 இறைநேசம் மற்றும் தூதுத்துவம் பற்றி

      இது பற்றி அவருக்கு நான் பதிலளித்தேன். அவரது கோரிக்கையை ஏற்றேன். நான் சொன்னேன், “இது எனக்கு மிகவும் கடினமானது. ஏனெனில், சராசரி அறிவுகொண்ட மக்கள் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இந்த ஆன்மிகப் படித்தரங்களை எல்லாம் வெளியிடுவது மிகவும் சிக்கலானது. அவர்கள் நம்மைத் தூற்றி இதனைக் கண்டனம் செய்கிறார்கள். அவர்கல் துயரப் பெருங்கடலில் விழுகிறார்கள். முஹம்மது (ஸல்...) அவர்களின் மக்கள் மறுப்பிலும் பகைமையிலும் விழுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் அழிவார்கள். ஏனெனில், இறைநேசர்களின் திரைநீக்கங்களை நம்பாத ஒருவன் இறைத்தூதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் அற்புதங்களை நம்பாதவனே ஆவான். ஏனெனில், இறைநேசம் மற்றும் இறைத்தூதுத்துவம் ஆகியவற்றின் கடல்கள் ஒன்றுள் ஒன்று ஊடாடுகின்றன. மேலான இறைவன் சொல்கிறான், “அவனே இரு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்” (55:19).
      இற்றை நாட்களில், சூஃபிகளின் அனுபவ வெளிப்பாடுகளில், அரிதின் அரிதான அறிவுகளின் நிகழ்வுகளும் பல்வேறு வடிவங்களிலான அற்புதமான திரைநீக்கங்களும் இருந்துள்ளன. ஏனெனில், அவன் தனது தூதர்களுக்கு தன்னை வெளிக்காட்டியது போல, ”அவர் நெருப்பின் அருகே வந்தபோது, பாக்கியம் பெற்ற அப்பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் ஒரு மரத்திலிருந்து ’மூசாவே! நிச்சயமாக நானே நான்தான் அல்லாஹ், அகிலங்களின் ரட்சகன்’ என்று கூப்பிடப்பட்டார்” (28:30) என்பதாக கலீம் (பேசுபவர்) ஆன மூசா (அலை...) அவர்களைப் பற்றி அவன் சொன்னது போல, சத்தியப் பரம்பொருள் ‘படைப்பாளன்’ என்னும் போர்வையில் தன்னையே வெளிப்படுத்தியுள்ளது. இதனைப் போன்றே, அவன் தனது காதலரான முஹம்மது (ஸல்...) அவர்களுக்குத் தனது அழகை வெளிப்படுத்தியது பற்றி ”ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இலந்தை மரத்தருகே; அதன் அருகிலேயே மஃவா என்னும் சொர்க்கம் இருக்கிறது; அப்போது அந்த மரத்தை மூடியிருந்தவை அதனை முற்றிலும் மூடிக்கொண்டன” (53:14-16) என்பதாகச் சொன்னான். மேலும், இதனைப் போன்றே, இறையாடையின் திரைநீக்கம் பற்றி முஹம்மது (ஸல்...) அவர்கள் சொன்னார்கள், “நான் எனது ரட்சகனை மிகவும் அழகிய தோற்றத்தில் கண்டேன். அப்போது இறைவன் என்னிடம் ‘முஹம்மதே கேளுங்கள்’ என்றான். எனவே நான் ‘இறைவா! நான் உன்னிடம் சொர்க்கத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் கேட்கிறேன்’ என்று சொன்னேன். அதற்கு அவன் சொன்னான், ‘முஹம்மதே! (வானவர்களின்) மிக உயர்ந்த சபை எதனைப் பற்றி விவாதிக்கிறது?’ (காண்க: 38:69). நான் சொன்னேன், ‘ ரட்சகனே! நீயே நன்கு அறிவாய்’. பின்னர் அவன் தனது கையை எனது தோளில் வைத்தான். எனது நெஞ்சிலொரு குளுந்த கூச்சத்தை உணர்ந்தேன். அப்போது நடந்தவையும் நடக்கப் போகின்றவையும் நான் அறிந்தவை ஆயின.”

# 6 கதை ஆரம்பமாகிறது


      எனவே நான் சொன்னேன், “என் நண்பனே! இந்த அரிதான படித்தரங்கள் பற்றியும் இந்த உயர்வான அகநிலைகள் பற்றியும் நீ கேட்டதற்கு விடை சொல்ல நான் மிகவும் தாமதித்துவிட்டேன். நான் எனது வாலிபத்தில், எனது போதை நாட்களில், எனது ஊதாரித்தனமான பொங்கும் பருவத்தில் இருந்தேன். எனது இதயம், ஆன்மா, பிரக்ஞை மற்றும் அறிவில் வானவருலகின் திரைநீக்கங்களும் சக்தியின்  அற்புதமான வெளிப்பாடுகளும் நிகழ்ந்தன. நான் உன்னதமான ஆதிப் பெருங்கடலில், சாஸ்வதத்தில், இறை பிரசன்னத்தில் நீந்தினேன். இறைவனின் சுயம் மற்றும் பண்புகளின் திரைநீக்கத்தைக் கண்டறிந்தேன். அதனைப் பெரும் பாறைகளும் உயரச் சிகரங்களும்கூட தாங்க முடியாது. எனது வாழ்வின் தொடக்கத்திலிருந்து இப்போது வரை எனக்கு நிகழ்ந்தவை அனைத்தையும் நான் எழுதினால் அது நூற்கள் மற்றும் பக்கங்களின் பெருஞ்சுமைப் பொதி ஆகிவிடும்.”


Saturday, July 22, 2017

ஒரு சூஃபியின் டைரி (introduction)

Image result for ruzbihan baqli

ரூஸ்பிஹான் பக்லி

ஆங்கில ஆக்கம்
கார்ல். டபிள்யூ. எர்ன்ஸ்ட்

தமிழாக்கம்
ரமீஸ் பிலாலி

Image result for javad nurbakhsh
Javad Nurbaksh.

ஹுவல் ஹக்
      பனிரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஷீராஸ் நகருக்கு அருகில் பாசா என்னுமிடத்தில் ரூஸ்பிஹான் என்றொரு ராஜாளி பிறந்தது. இறை சுயத்தின் வானில் அப்பறவை மிக மிக உயரத்திற்குப் பறந்து போய் தனது முன்னோர்களை வென்றுவிட்டது. சூஃபி வழியின் சொல்லாடலில் நாம் ஜுனைத் அவர்களை சூஃபியறிவின் பேரரசர் என்று சொன்னால், ரூஸ்பிஹானை நாம் சூஃபித்துவக் காதலின் தீர்க்கதரிசி என்றே சொல்ல வேண்டும். காதலின் அனுபவத்திற்கும் பகுத்தறிவின் இயக்கத்திற்கும் இடையில் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான வேறுபாடு இருப்பது நிதர்சனமே. ஃகுராசானின் மாபெரும் ஞானியர் சூஃபித்துவக் காதலின் விதையை நட்டு வைத்தனர். ராபியா, ஹல்லாஜ், ஷிப்லி முதலியோர் அது மரமாகும் வரை நன்னீர் வார்த்தனர். அம்மரம் ரூஸ்பிஹானின் ஆன்மிக உள்ளெழுச்சிகளின் வழியே கனிகளை அளித்தது.
      சூஃபித்துவம் பற்றி ரூஸ்பிஹான் சொன்ன வாக்குகள் எல்லாம் மிகவும் ஆழமானவை. எந்த அளவிற்கெனில், அவருக்குப் பின் சொல்லப்பட்டவை எல்லாம் அவர் சொன்னவற்றுக்கான அடிக்குறிப்புக்கள் போலவே காட்சி அளித்தன. அவரின் கூற்றுக்களைப் பெரும்பாலான சூஃபிகளாலேயே விளங்கிக்கொள்ள முடியவில்லை எனுமளவு அவை ஆழமாக இருந்தன. எனவே அவர் ”ஃபார்சிகளின் ஷத்தாஹ்” (பரவசப் பேச்சாளர்) என்று அழைக்கப்பட்டார். அவரது காட்சியின் தொலைதூர எல்லைகளையும் உயர் நிலைகளையும் ஒருவர் அடைய வேண்டும் எனில் இந்த இறைக்காதலரின் எழுத்துக்களைப் படிக்கத்தான் வேண்டும். அவரின் எழுத்துக்களைப் படிக்கின்ற ஒருவன் அனைத்து வெற்று நம்பிக்கைகளின் நூலகங்களை விட்டும் வெளியேறியவன் ஆவான்.
                                                டாக்டர் ஜவ்வாத் நூர்பக்‌ஷ்
                                                லண்டன், 3 ஜூலை 1996.

Image result for carl w ernst 
Carl W Ernst.

முகவுரை
      சூஃபித்துவம் என்னும் இஸ்லாமிய ஆன்மிகத்தைப் பற்றிய வாசிப்பு இன்னமும்கூட மேற்குலகில் மிகவும் குறைந்த அளவிலேயே அறியப்பட்டுள்ள ஒரு பொருண்மை. மாபெரும் பாரசீக சூஃபி ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் தற்போது ஆங்கில ஆக்கங்களில் மிகவும் பிரபலமாகி வருகின்றன. எனினும், சூஃபிகள் பலரின் பெயர்கள் இன்னமும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அறியப்படவில்லை. ஷீராஸ் நகரில் வாழ்ந்த ரூஸ்பிஹான் பக்லி (இறப்பு: 1209) அந்த சூஃபிகளில் ஒருவர். தனது வாழ்நாளிலும், அதன் பின் பல நூற்றாண்டுகளுக்கும், மத்தியக் கிழக்கு மற்றும் இந்தியாவில் ரூஸ்பிஹான் சூஃபி மரபின் ஆழமான ஆளுமைகளில் ஒருவராக அறியப்பட்டிருந்தார். மகாகவி ஹாஃபிஸ் (இறப்பு: 1389), ரூஸ்பிஹானின் குடும்பத்தினர் தொடங்கிய சூஃபி நெறியின் உறுப்பினர் என்பது வெளிப்படை. இருப்பினும், ரூஸ்பிஹானின் புகழ் மங்கிற்று. அவரது நூற்றாண்டின் திருப்பத்தில் அவரது சொந்த மண்ணில் அவரின் பெயரை எவரும் அறிந்திருக்கவில்லை. ஷீராஸில் அவரது அடக்கத்தலம் பாழடைந்தது.
அண்மைக் காலத்தில், ஈரான், இந்தியா, துருக்கி மற்றும் ஐரோபாவில் ஒரு சிறு அறிஞர் குழு அவரின் எழுத்துக்களை மீண்டும் கண்டடைந்தது. அதன் பின் அவரது அரபி மற்றும் பாரசீக எழுத்துக்கள் பலவும் வெளிவந்தன. 1972-இல் ஈரானிய தொல்லியல் துறை அவரது அடக்கத்தலத்தைப் புதுப்பித்துக் கட்டியது. (1996-இல் அங்கு செல்லும் பேறு பெற்றேன்). அண்மையில், ரூஸ்பிஹானின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றிய அறிமுகக் கண்ணோட்டத்தை வழங்குமொரு நூலினை நான் எழுதினேன் (”Ruzbihan Baqli: Mystical Experience and the Rhetoric of Sainthood in Sufism”, Curzon Sufi Series, London, 1996). அவருடைய ஆன்மிக நாட்குறிப்பான “கஷ்ஃபுல் அஸ்ரார்” (ரகசியங்களின் திரைநீக்கம்) மற்றும் அவரது வழிவந்தோர் எழுதிய இரு சரிதைகள் ஆகியவற்றின் மீது கவனத்தைக் குவித்து எழுதப்பட்ட நூலது. அதன் முற்பிரதிகளை வாசித்தவர்கள் “ரகசியங்களின் திரைநீக்கம்” நூலிலிருந்து தேர்ந்த பகுதிகளைப் படித்து வியந்துபோய் அந்நூலை முழுமையாக மொழிபெயர்க்குமாறு என்னை ஊக்கினார்கள். இதுவே ஆங்கிலத்தில் வெளிவரும் ரூஸ்பிஹானின் முதல் மொழிபெயர்ப்பு நூல். அவரது வாழ்வு மற்றும் எழுத்துக்கள் பற்றி மேலும் விவரம் பெற விரும்புவோர் ”ரூஸ்பிஹான் பக்லி” என்னும் அந்த நூலில் காண்க. இங்கே இனி தொடர்வன அந்நூல் தரும் விவரங்களின் போதுமான சுருக்கக் குறிப்புக்கள் மட்டுமே.
      ”ரகசியங்களின் திரைநீக்கம்” ஆன்மிக வரலாற்றின் ஆற்றல்மிகு ஆவணங்களில் ஒன்று. பெரும்பான்மை சூஃபி நூற்களைப் போலல்லாது இது தன்மைக் குரலில் எழுதப்பட்டுள்ளது. இறைவன், வானவர்கள், இறைத்தூதர்கள் மற்றும் சூஃபி ஞானியருடனான தனது சந்திப்புக்களை ரூஸ்பிஹான் பதிவு செய்திருப்பதில் இதனைக் காணலாம்.
ரூஸ்பிஹான் இந்நூலை 1181-இல் எழுதத் தொடங்கினார். அப்போது அவருக்கு ஐம்பத்தைந்து வயது. பாசா நகரில் தனது பிள்ளைப் பருவத்தில் தொடங்கித் தனது ஆன்மிக அனுபவங்களின் தன்வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டு அந்நூலினை அவர் எழுதத் தொடங்கினார். அவர் ஒரு காய்கறிக்கடை வைத்திருந்தார் (பக்லி என்றால் காய்கறி வியாபாரி என்று பொருள்). தனது பதினைந்தாம் வயதில் அவர் பெற்ற ஓர் அனுபவம் அவர் தனது காய்கறிக் கடையைத் துறந்து செல்லும்படிச் செய்தது. ஓராண்டு காலம் பாலைவனத்தில் அலைந்த பின்னர் பல வருடங்கள் தியானப் பயிற்சிகள் மேற்கொள்ள சூஃபிகளுடன் இணைந்தார். இறுதியாக ஷீராஸ் நகரில் அமைந்தார். கட்டடக்காரர்களாக இருந்த பெரும்பான்மை சீடர்கள் அவருக்கு அந்நகரில் 1165-இல் ஓர் தியானக்கூடத்தைக் கட்டித் தந்தனர்.
Related image

பெரும்பான்மை ஆன்மிக இலக்கியவாதிகளைப்போல் அல்லாது, ரூஸ்பிஹான் தனது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி அடிக்கடி எழுதுகிறார், தன்னொரு ஆசை மனைவி மரணித்ததன் வலியை வெளிப்படுத்துபவராக, ப்ளேக் நோய் பரவியபோது காய்ச்சலுக்கு ஆளான தனது மகன் நலம் பெற வேண்டி இறைவனிடம் கெஞ்சுபவராக. இல்லை எனில் ரூஸ்பிஹான் தனது புற வாழ்வின் நிகழ்வுகள் பற்றி மிகவும் சொற்பமாகவே சொல்கிறார். அக்காலத்தில் ஷீராஸை ஆண்டு வந்த துருக்கிய இளவரசர்களைப் பற்றிப் போகும் போக்கில் ஒரு குறிப்பை மட்டுமே சொல்லிச் செல்கிறார். முற்காலப் பெருஞ் சூஃபிகளின் தரிசனச் சந்திப்புக்கள் பற்றி ருஸ்பிஹான் எழுதினாலும் தனது சமகால சூஃபிகளில் ஒரே ஒரு நபரை மட்டுமே அவர் பெயர் குறிப்பிடுகிறார், உடனிருந்து ஆன்மிகப் பயிற்சிகள் நிகழ்த்திய ஒரு சக சீடர் (முரீது) அவர்.
ரூஸ்பிஹானின் மூலப் பிரதியில் எவ்விதப் பத்தியமைப்போ மேற்கோள் குறிகளோ இல்லை. எனவே, ஓரளவு தன்னிச்சையாக நான் அப்பிரதியை மொத்தம் 210 பகுதிகளாகப் பகுத்திருக்கிறேன். அப்பகுதியின் பொருண்மைக்கேற்ப ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தலைப்பையும் தந்திருக்கிறேன். முதற்பகுதியான தன்வரலாற்று நினைவு “ரகசியங்களின் திரைநீக்கம்” நூலின் ஐந்தில் ஒரு பங்காகவே அமைகிறது. அதன் தொடர்ச்சித் தன்மையால், அப்பகுதி குறிப்பிட்ட அடிக்கருத்துக் கொண்ட பல பகுதிகளாகப் பகுக்கப்பட முடியும். அப்புள்ளியில் அதன் மொழிபு முறை மாறி, இரண்டாம் பகுதி ஏதோ ஒரு நிகழ்கால நாட்குறிப்புப் போல் தொனிக்கத் தொடங்குகிறது. அது 1189 வரை எட்டு ஆண்டுகளுக்கு நீள்கிறது. அந்த நாட்குறிப்பின் உள்ளடக்கம், திகைப்பூட்டும் பற்பல பொருண்மைகளின் நிரல் கொண்டு அமைகிறது: ரமலான் மாதத்தில் நீளும் காட்சி வரிசைகளில் மட்டுமே அவதானிக்க முடிவதான புலனங்கள் (#128-159), ஷீராஸில் ப்ளேக்கின் கொள்ளை நோய்ப் பரவலைப் பேசும் அதன் இறுதிப் பக்கங்கள் (#200-209; பதிவு#206-இல் 1189 என்னும் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது).
இந்நூல் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மங்கோலியப் படையெடுப்புக்கு முன்பு அரபியே சூஃபித்துவத்தின் பிரதான மொழியாக இருந்தது. (ரூஸ்பிஹான் எழுதியதாகக் கருதப்படும் நாற்பது நூற்களுள் காற்பகுதி பாரசீக மொழியில் உள்ளன). பெயர் அறியா ஓர் அணுக்கச் சீடரின் கோரிக்கையை ஏற்று, நேரடியான தீவிர உணர்ச்சி கொண்ட உரைநடையில் இந்நூலை ரூஸ்பிஹான் எழுதினார். ஈரானிய அறிஞர் முஹம்மது முயீன் சொல்வதைப் போல், ”அவரின் மொழி, கையில் எடுத்தவுடனே பறந்து போய்விடுகின்ற ஒரு ரோஜா மலரைப் போன்றது; அல்லது, மித சூட்டிலேயே சட்டென்று ஆவியாகி மறைந்துவிடுகின்ற ஒரு ரசவாதப் பொருளைப் போன்றது. அவரது மொழி தரிசனங்களின் மொழி. அவர் அழகையும் அழகானவரையும் போற்றுகிறார். இரண்டையுமே அவர் நேசிக்கிறார்”  
      ரூஸ்பிஹானின் ஆன்மிகம் மிகவும் ஆழமாகவே, இஸ்லாமியமாகும். குர்ஆனுக்கான மிக முக்கியமான விரிவுரைகளில் ஒன்றை இயற்றியவர் அவர். எனவே, அவரின் நாட்குறிப்புக்களின் மொழி குர்ஆனின் மேற்கோள்களால் நிரம்பியிருப்பது வியப்பான ஒன்றல்ல. பல பதின் முறைகள் குர்ஆன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இறைத்தூதர் முஹம்மது நபியின் ஆன்மிக மொழிகளையும் அவர் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார். ஆன்மிக அனுபவத்திற்கான அவரது கலைநுட்ப மொழி மிகவும் வளர்ச்சியடைந்த ஒன்று. அரபிக் கலைச்சொற்களின் சக்தியையும் துல்லியத்தையும் ஓரளவேனும் தெரிவிக்கின்ற ஆங்கிலச் சொற்களைத் தேர்ந்து பயன்படுத்துவது இம்மொழிபெயர்ப்பிற்கான சவால்களில் ஒன்றாக இருந்தது.

Image result for ruzbihan baqli
      இந்த நாட்குறிப்பில் அவரின் முதன்மைப் புலனம் காட்சி என்பதே. “பிறகு நான் கண்டேன்...” என்பதாகவே பெரும்பான்மைக் குறிப்புக்கள் தொடங்குகின்றன. இறைவனின் சுயம், பண்புகள் மற்றும் செயல்களை விளக்க அவர் இஸ்லாமிய இறையியல் மொழியைப் பயன்படுத்துகிறார். (இம்மூன்றும் முறையே அரபியில் தாத், சிஃபாத் மற்றும் அஃப் ஆல் எனப்ப்படும்). இருத்தலின் படிநிலைகளை அவர் வானவருலகம், மறைவுலகம், ஆற்றலுலகம் மற்றும் ராஜியம் (ஆலமுல் மலக்கூத், ஆலமுல் ஃகயால், ஆலமுல் ஜபரூத், ஆலமுல் லாஹூத் அல்லது முல்க் என்று அரபியில் குறிப்பிடுவர்) ஆகியவையாகச் சொல்கிறார். “அல்-ஹக்” (பேருண்மை, சத்தியம்) என்று அழைக்கப்படுகின்ற கடவுள் பல நேரங்களில் ’வெளிப்படுதல்’ மற்றும் ’தோற்றம்’ ஆகிய நிலைகளிலும் (Modes), பெருமை, பிரம்மாண்டம், கீர்த்தி, மகத்துவம், ஆற்றல், அன்பு, வல்லமை மற்றும் அழகு ஆகிய தோற்றங்களிலும் ரூஸ்பிஹானுக்குத் தன்னைக் காட்டிக்கொள்கிறது.
      முன்னூழி, ஊழி மற்றும் பின்னூழி என்று அவர் அழைக்கின்ற முடிவற்ற எல்லைகளாகப் பரவசக் கணங்கள் நீள்கின்றன. சூஃபி ஆசிரியர்கள் பலரும் அறிந்த நிலைகள் மற்றும் படித்தரங்கள் (ஹால் வ மகாம்) என்பதாக விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆன்மிக அனுபவங்கள் அவரது கைவண்ணத்தில் ஒரு நுட்பமான நிகழ்வியலாகத் துலக்கப்பட்டுள்ளன. இறைவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத இந்த அரிய வெறுமைக் கணங்கள் ‘கப்ளு’ என்னும் இதயச் சுருக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனக்குப் புதிய தரிசனங்கள் தருமாறு நடுநிசித் தொழுகையில் அவர் இறைவனிடம் கெஞ்சுகிறார். கண்ணீராகவும் பெருமூச்சாகவும் அழுகைகளாகவும் கதறல்களாகவும் அப்போது அவர் உருக்கொள்கிறார். இறைவன் தனது தெய்வீகப் பண்புகளைத் திரை நீக்குகையில் ரூஸ்பிஹான் பெரு விரிவையும் (’பஸ்த்’) திகைப்பையும் ஏக்கத்தின் காதலின் நிறைவையும் உணர்கிறார். இறைவனுடன் மிகப் பரிச்சயமாகவும் நெருக்கமாகவும் அந்தரங்கமாகவும் அவர் உணரும் அந்நிலையில் அவரின் தன்முனைப்பு இறைவனில் கரைந்துவிடுகிறது, மனிதனில் இறைப்பண்புகள் வெளிப்படுகின்றன.
திரையிடல் மற்றும் திரை நீக்கம் என்னும் தொடரியக்கம் இந்த நாட்குறிப்பின் முதன்மைப் படிமமாக அமைகிறது. எது திரை நீக்கப்படுகிறது? அது உள் பிரக்ஞை, இதயத்திற்குள் இறைவனுக்கு மிக அருகில் இருக்கின்ற ரகசியம் (சிர்ரு). இறைத்தூதர் முஹம்மது (ஸல்...) சொன்னது போல், இறைவன் தன்னை ஒளியாலான எழுபதாயிரம் திரைகளால் திரையிட்டுக்கொண்டான். இறைவனுடனான இணைவு (வஸ்ல்) என்பது முதலில் அத்தகைய பேரொளிவான திரைகளின் படிப்படியான திறப்பாகவே அனுபவமாகிறது. இருந்தும், தெய்வீக சுயம் என்பது கற்பனைக்கும் கட்புலனுக்கும் எட்டாத ஒன்றாகவே இருக்கின்றது (’தன்ஸீஹ்’). இறைவனை அவனது எல்லையற்ற நிலையில் அறிதல் என்பது மனித இயற்கைக்கு இயலாத ஒன்று. எனினும், இறைவனின் கருணை மிகவும் தாராளமானது என்பதால் அவன் தனது காதலர்களுக்குத் தானே வடிவங்களைப் போர்த்திக்கொண்டு தோன்றுகிறான். அவையே தெய்வீகத்தின் வடிவங்கள் எனப்படுகின்றன. அவ்வாறுதான் ரூஸ்பிஹான் பக்லி தன்னிடம் இறைவன் மனிதக் கோலத்தில் தோன்றுவதைக் காண்கிறார், அதுவும் அன்றாடப் பழக்கமாக!
இஸ்லாமிய இறையியலின் மரபான முன்வைப்புக்களுடன் பரிச்சயம் கொண்டவர்கள் இவ்விடத்தில் கேட்கக்கூடும்: மனிதவுருவேற்றம் (Anthropomorphism) என்பதை இஸ்லாம் முற்றும் மறுக்கின்ற நிலையுடன் இந்த இறைக்காட்சிகளை எல்லாம் எவ்வாறு நாம் சமாதானப்படுத்த இயலும்? இக்கேள்விக்கு நாம் முதலில் சொல்லக்கூடிய பதில் யாதெனில், இறைவனின் ஒப்புவமையற்ற நிலை என்பது இஸ்லாமியச் சிந்தனையில் மிகவும் சிக்கலான ஒன்றாகும். ஏனெனில், முற்றும் மனிதம் போலல்லாத ஓர் இறைவனைக் கருதுதல் இயலாது. இறைவனின் கைகள், இறைவனின் முகம் முதலிய புலனங்களைக் குர்ஆன் பேசுகையில், அதனைத் தூய குறியீடாக ஏற்றல் என்பதற்கும், எப்படி என்று கேள்வி கேட்காது அப்படியே நேர்பொருளில் ஏற்றல் என்பதற்கும் இடையில் முஸ்லிம் சிந்தனையாளர்கள் ஊசாடியிருக்கிறார்கள். மனிதப் பண்புகளுடன் உவமையான நிலையில் கிரகிக்கக் கூடியதான முதன்மை இறைப்பண்புகளை (ஜீவன், அறிவு, நாட்டம், சக்தி, கேள்வி, பார்வை மற்றும் பேச்சு ஆகிய ஏழு திருப்பண்புகளை), அறியவியலாத அப்பாலான இறை சுயத்தை விட்டும் இஸ்லாமிய இறையியல் தனித்தன்மையான முறையில் வேறுபடுத்திக் காண்கிறது. தெய்வீகச் செயல்கள் (அஃப்ஆல்) என்பவை இவ்விறைப் பண்புகள் படைப்புக்களுடன் தொடர்புகொள்ள வழி கோலுகின்றன.
பொதுவாக, இறைப்பண்புகளின் முழுப் பரப்பும் குர்ஆனில் சொல்லப்படும் ‘அஸ்மாவுல் ஹுஸ்னா’ என்னும் தொண்ணூற்றொன்பது அழகிய திருநாமங்களாகக் காட்டப்படுகின்றன. அவை, பெருங்கருணைத் திருநாமங்கள் (ஜமாலி) மற்றும் வல்லமையான திருநாமங்கள் (ஜலாலி) என்று இரண்டு வகைகளாக்கப்படுகின்றன. இறைவனின் இந்தத் திருநாமங்களை மீண்டும் மீண்டும் உச்சாடனம் செய்வதும் தியானிப்பதும் சூஃபித்துவத்தின் ஆதாரப் பயிற்சிகளில் ஒன்று. படைக்கப்பட்ட ஒரு மனிதனுடன் இறைவனை ஒப்பிடுகின்ற (Anthropomorphism) விக்ரஹ நிலைக்கும் அனைத்து மனித ஒப்புமைப் பண்புகளையும் இறைவனை விட்டு நீக்கிக் காண்கின்ற அதீத சூக்கும (abstractionism) நிலைக்கும் இடையிலான இறுக்கம் (tension) பற்றி ரூஸ்பிஹான் எப்போதும் முழு விழிப்புடன் இருக்கிறார். தெய்வீக அப்பாலை நிலையின் ஆற்றல் (Transcendence) எங்ஙகனம் தெய்வீக வெளிப்பாட்டின் வடிவங்களுடன் உடனுறைகிறது என்பதை விளக்குவதற்கு ரூஸ்பிஹான் செய்யும் முயற்சிக்குப் பின்வரும் காட்சிப்பதிவு நல்லதோர் உதாரணமாகும்:
நள்ளிரவுக்குப் பின் அவனை நான் கண்டேன், ஒப்பிலா உயர் ஏகன், அழகின் ஆயிரம் வகைகளில் அவன் தோன்றிவிட்டது போல், அவற்றில் ஓர் உன்னதமான ஒப்புமையின் மேன்மையைக் கண்டேன், “வானங்களிலும் பூமியிலும் மிக உயர்வான ஒப்புவமை அவனுக்குரியதே. மேலும், அவன் வலிமை மிக்கவன், ஞானம் மிக்கவன்.” (குர்ஆன்: 30:27). அது ஓர் சிவந்த ரோஜாவின் மேன்மையைப் போல் இருந்தது. இதுவோர் ஒப்புவமையாகும். ஆனால், இறைவன் தனக்கோர் உவமை இருப்பதைத் தடை செய்திருக்கிறான்! ”அவனைப்போன்று எப்பொருளும் இல்லை” (42:11). எனினும், நானொரு வெளிப்பாட்டினால அன்றி அதனை விளக்க முடியாது. இந்த வருணிப்போ எனது கண்ணோட்டத்தின் பலஹீனம், எனது திறனின்மை, மற்றும் சாஸ்வதத்தின் பண்புகளைக் கிரகித்துக்கொள்வதில் எனது குறைப்பாடு ஆகியவற்றிலிருந்து வருகின்றது. முன்னூழியின் ஆற்றுப்படுகையில் இவையெல்லாம் ரௌத்திரத்தின் பாம்புகள் உறையும் பாலைகளும் தரிசுகளும் ஆகும். அவற்றுள் ஒன்று வாய் திறப்பினும் படைப்புக்களில் எதுவுமோ அல்லது காலமோ தப்பாது. முன்னூழி இறைவனை வருணிக்கும் ஒருவரை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள். ஏனெனில் அவனின் ஏகத்துவத்தின் பெருங்கடல்களில் அனைத்து ஆன்மாக்களும் பிரக்ஞைகளும் மூழ்கிப்போய், அவனது மேன்மை மற்றும் வல்லமையின் நுட்பங்களில் அவை மறைந்துவிடுகின்றன. (#87)

Image result for ruzbihan baqli
persian calligraphy of name RUZBIHAN BAQLI.

ரூஸ்பிஹானின் காட்சிகளை தனியதிர்வு கொண்டனவாக மாற்றுவது யாதெனில் அவற்றை சூஃபித்துவம் மற்றும் இஸ்லாமிய இறையியலின் சிக்கலான கலைச்சொற்களின் அடிப்படையில் விளக்கம் தருகின்ற அவரது திறனேயாகும். இறைவனின் கோபம் என்பது அவனது அப்பாலை நிலை மற்றும் வல்லமை, மேன்மை, தனிச்சுயத்தை அழிக்கின்ற அவனது ஆற்றல் ஆகிய பண்புகளுடனும், அவனது கருணை என்பது அழகு, அருள், மற்றும் மனிதனில் இறையிருப்பைத் துலக்கும் காதல் ஆகிய பண்புகளுடனும் தொடர்புறுத்தப்படுகின்றன. சூஃபிகளைப் பொருத்தவரை, இறைவனின் இப்பண்புகள் எல்லாம் வெற்று அறிவால் கிரகிக்கப்பட இயலாது; அவை ஆன்மிக அறிவால் மட்டுமே எய்தப்பெற முடியும்.
ரூஸ்பிஹான் தனது காட்சிகளை மிகவும் அழுத்தமான, அரிதான அழகு கொண்ட வடிவங்களில் வெளிப்படுத்துகிறார். அஃதொரு பிம்பங்களின் கிடங்காகிறது. பிற்காலக் கவிஞர்கள் அச்சுரஙத்திலிருந்து தொடர்ந்து அள்ளியபடி இருந்திருக்கிறார்கள். பிரபஞ்ச விளைவுகள் கொண்ட தீட்சானுபவங்களை அவர் பெறுகின்றார். ஒன்றில், வெண்ணிற ஆடையணிந்த இரு ஷைஃகுக்ள் அவருக்குக் கரடிக்குட்டியின் பாலைப் புகட்டுகின்றனர். (கரடிக்குட்டி என்பது துருவ வின்மிண் கூட்டம். அது அச்சு என்றும் பொருள்படும். ஞானிகளின் தலைவரை அவ்வாறு கூறுவர்). விண்மீன்களில் உள்ள சுவர்க்கத்து ஜன்னல்களின் வழியாக இறைவன் அவரைப் பார்க்கிறார். ஏகாதிபத்தியக் குறியீட்டியல் நிரம்பிய காட்சிகளில் இறைவன், ரூஸ்பிஹானை ‘பூமியில் தனது பிரதிநிதி’ (ஃகலீஃபத்துல்லஹ்) என்று பறைசாற்றுகின்றான். மரணமற்ற இறைத்தூதரான ஃகிள்ரு மற்றும் ‘பதிலிகள்’ (அப்தால்கள்) என்னும் சிறப்புத் தரத்தில் உள்ள ஞானியர்கள் முதலிய ஆளுமைகளிடமிருந்து ருஸ்பிஹான் பிரத்யேகமான தீட்சை பெற்றுக்கொள்கிறார்.
நீள் கூந்தல் கொண்ட பெண்களாகவும், அதே சமயம், வாளேந்திய துருக்கி வீரர்களாகவும் ஒரே சமயத்தில் பேரழகும் கொடூரமும் காட்டி நிற்கும் கோலங்களில் வானவர்களை அவர் காண்கிறார். அப்பாலான நிலவெளிகளின் எல்லையற்ற பாலைகளிலும் முடிவற்ற பெருங்கடல்களிலும், சிலநேரங்களில் மதுக் கடல்களிலும்கூட, ஆதம் முதல் மூசா மற்றும் முஹம்மது (ஸல்...) வரையிலான இறைத்தூதர்கள் ருஸ்பிஹானைச் சந்திக்கின்றார்கள். இறைவன் ரூஸ்பிஹானின் மீது ரோஜாக்களைத் தூவி அவரைத் தனது காதலன் என்றழைக்கும் நெருக்கமும் போதையும் ஆன காட்சிகளை முற்காலத்து இறைநேசர்கள் தரிசிக்கின்றனர். அவர் இறைத்தூதர்களுடன் மது அருந்துகிறார், சூஃபித்துவக் குறியீட்டில் இறைக்காதலின் போதையைக் குறிக்கும் சின்னமாக இருக்கின்ற மது அது. இஸ்லாமியச் சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள மண்ணகத்து மதுவன்று. ரூஸ்பிஹானின் அரபி உரைநடையின் சந்த ஆற்றலையும் பிரதியின் திடத்தையும் மொழிபெயர்ப்பில் போலச்செய்வது சாத்தியமில்லை எனினும் ஆங்கிலப் பிரதியில் அந்த மூலத்தின் அசல் சக்தியையும் உத்வேகத்தையும் ஓரளவு காட்ட முனைந்திருக்கிறேன்.  
ரூஸ்பிஹானுடைய காட்சிகளின் படிமங்கள், இறை பிரசன்னத்தின் சன்னிதானத்திற்கு உயர்தல் என்னும் வகைப்பட்ட ஆன்மிக அனுபவத்தில் அடங்குவதாகும். வானங்களில் வழியே ஆன்மா உயர்தல் என்பது மத்திய தரைக்கடல் மற்றும் மத்தியக் கிழக்கின் ஆவணங்கள் பலவற்றில் பதிவாகியுள்ள போதும், சூஃபித்துவத்தில் இந்தப் படிமத்தொகுதி, அனைத்துக்கும் மேலாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்...) அவர்களின் விண்ணேற்றத்துடனேயே சிறப்புத் தொடர்பு கொண்டுள்ளது. “ரகசியங்களின் திரைநீக்க”த்தில் அன்னாரின் பணி பல வகைகளில் முக்கியமானது எனினும் விண்ணேற்றம் என்னும் குறியீடே ரூஸ்பிஹானின் காட்சிகளுக்கோர் அடித்தளமாக அமைகிறது. இறைத்தூதரின் விண்ணேற்றம் என்பது சூஃபித்துவத்தில் ஆன்மிக அனுபவத்திற்கான ஒரு முன்மாதிரி ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக, மாபெரும் பாரசீக சூஃபி அபூயஜீதுல் பிஸ்தாமி அவர்களின் ஆளுமையில்தான் இறை சன்னிதிக்கான இறைத்தூதரின் பயணம் மிக விரிவாக அகமிய மறுநிகழ்வாக்கம் பெறக் காண்கிறோம். அபூ யஜீதின் விண்ணேற்றத்தில் உள்ள பல மையக்கருத்துக்கள் ரூஸ்பிஹானின் காட்சிகளில் மீண்டும் எதிரொலிக்கின்றன.

Related image

இந்நூல் சூஃபி மரபின் மிகவும் ஆற்றல் வாய்ந்த குரல்களில் ஒன்றை பரவலான வாசகர்களுக்கு அறிமுகஞ் செய்ய விரும்புகிறது. ருஸ்பிஹான் அவரது சொந்த நாடான பாரசீகத்திற்கு அப்பாலும் நன்கு அறியப்பட்டவர். வட ஆப்ரிக்கா, மத்திய ஆசியா மற்றும் இந்தியாவின் சூஃபிகள் அவரை “ஷைஃகுல் ஷத்தாஹ்” (பரவசப் பேச்சின் தலைவர்) என்பதாக அறிவார்கள். அவரது காதல் மற்றும் உணர்வெழுச்சி பற்றிய கதைகள் இப்னு அரபி மற்றும் இராக்கீ போன்றோரால் சொல்லப்பட்டுள்ளன என்றபோதும் ஆன்மிகக் காதல் குறித்த அவரது எழுத்துக்கள் இன்னும் அதிக வீரியம் உள்ளவை. கிறித்துவ ஆன்மிக ஞானியருள் தூய அகஸ்டின் மற்றும் பிஞ்செனின் ஹில்திகார்த் ஆகியோருடன் அவரை ஒப்பிடலாம். அகஸ்டினைப் போல் ரூஸ்பிஹான் ஒரு வேத விரிவுரையாளரும் திறன்மிகு பேச்சாளரும் ஆவார். பல்லாண்டுகள் ஷீராஸின் பள்ளிவாசலில் அவர் வாரமிருமுறை உரையாற்றியுள்ளார். ஹில்திகார்தைப் போல், இயற்கையின் கோலங்களில் பிரிகையாகி வரும் தீவிரமான இறைதரிசனங்களை ரூஸ்பிஹான் பெற்றுள்ளார். இப்பண்புகளுக்கு ருஸ்பிஹான் ஒரு கவித்துவ அழுத்தத்தையும் பிரகாசமான பரவசத்தையும் சேர்த்திருப்பது எந்த மரபிலும் ஒப்புக் காணவியலாத ஒன்றாகும். அவரே சொல்வது போல், “எனது விடலைப்பருவம் முதல் இப்போது வரை, இப்போது எனக்கு ஐம்பத்தைந்து வயதாகும் நிலையில், இறைவன் நாட்டத்தால், ஒரு பகலோ ஓர் இரவோ கடந்துபோனதில்லை, மறைவுலகின் ஒரு திரைநீக்கமாவது இல்லாமல்.” (#56).
இம்மொழிபெயர்ப்பு நன்கு அறியப்பட்ட இரண்டு முழுமையான அரபிப் பிரதிகளிலிருந்து செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று, ஈரானில் இமாம் ரஜாவின் அடக்கத்தலத்துடன் இணைந்துள்ள நூலகத்திலிருந்து பெறப்பட்டது. மற்றொன்று, பாரிசில் லூயி மாசிக்னான் அவர்களின் சேகரிப்பிலிருந்து கிடைத்தது. முனைவர் அமீர் முஅஸ்ஸி, பேராசிரியர் ஜேம்ஸ் மோரிஸ், பேராசிரியர் ஹெபர்ட் மேசன் மற்றும் முனைவர் தானியல் மாசிக்னான் ஆகியோருக்கு, இப்பிரதிகள் எனக்குக் கிடைக்க எடுத்துக்கொண்ட தாராளமான முயற்சிகளுக்காக நன்றி நவில்கிறேன். துருக்கியில் நஸீஃப் ஹோஜாவும் இராக்கில் பால் நவியாவும் பதிப்பித்துள்ள இந்நூலின் சுருக்கப் பதிப்பு அத்துனை முக்கியமானதல்ல எனினும் அவற்றையும் கலந்து நோக்கியுள்ளேன். ருஸ்பிஹான் எழுதிய மற்றும் அவர் மீதான பல பிரதிகளை இதற்கு முன் பதிப்பித்துள்ள முனைவர் ஜவ்வாது நூர்பக்‌ஷ் “ரகசியங்களின் திரைநீக்கம்” நூலின் அரபிப் பிரதியின் பாரசீக மொழிபெயர்ப்பை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். எனது மொழிபெயர்ப்பினை மறுவாசிப்புச் செய்கையில், எனது சகா முனைவர் பால் பாலன்ஃபாத் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட “ரகசியங்களின் திரைநீக்கம்” நூலின் ஃப்ரெஞ்சுப் பிரதியை வாசிக்கும் பேறு பெற்றதில் பெரிதும் பயனடைந்தேன். பிரதிகளுக்கிடையிலான சிறு சிறு வேறுபாடுகளைக் கவனிப்பதில் ஆர்வமுள்ள வாசகர்கள் பாலன்ஃபாத்தின் அற்புதமான மொழிபெயர்ப்பில் உள்ள அடிக்குறிப்புக்களைக் காணலாம்.
இங்கே முன்வைக்கப்படும் பிரதி எவ்விதத்திலும் சூஃபித்துவம் மற்றும் இஸ்லாமிய வரலாறு பற்றிய பிரத்யேக அறிவு எதனையும் கோரவில்லை. ஆன்மிக அனுபவத்திலும் அதனை வார்த்தைகளில் வடிப்பதற்கான உணர்வெழுச்சி அவஸ்தைகளிலும் நாட்டம் கொண்டுள்ள யாவரையும் நோக்கியே இந்நூல் பேசுகிறது. அடிக்குறிப்புக்களின் தேவை இல்லாமலேயே அனைவருக்கும் புரியும்படியாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவை எனும் இடங்களில் அடைப்புக் குறிகளுக்குள் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஒருவேளை, வாசகர் இன்னும் அறிந்துகொள்ள விரும்புகிறார் என்னும் இடங்களில் எல்லாம் சுட்டல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன: (1) ரூஸ்பிஹானின் இந்நூலிலிருந்து எடுக்கப்பட்டு எனது இன்னொரு நூலான “ரூஸ்பிஹான் பக்லி” என்பதில் விளக்கப்படுகின்ற பத்திகளுக்கான சுட்டல்கள், (2) ரூஸ்பிஹான் மேற்கோள் காட்டும் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களுக்கான சுட்டல்கள், (3) பெயர்கள் மற்றும் கலைச்சொற்கள் கலந்த சுட்டல்கள். தனது மொழிபில் ரூஸ்பிஹான் பின்னிச் செல்லும் அடிக்கருத்துக்களை வகைப்படுத்திக் காண்பதற்கு இந்தச் சுட்டல்கள் உதவும். சில வாசகர்கள் வெறுமனே ஆரம்பத்தில் தொடங்கி அப்படியே கடைசி வரை வாசித்துச் செல்வதை விரும்புகிறார்கள். ரூஸ்பிஹான் முன்வைக்கும் அனுபவங்கள் மற்றும் படிமங்களின் தொகுப்புப் பார்வையை இத்தகைய வாசிப்பு முறை அளிக்கக்கூடும். தேர்ந்து படிக்க விரும்புவோர் முதலில் ரூஸ்பிஹான் தனது பிள்ளைப் பருவம் பற்றிக் கூறும் சுயசரித நினைவுகளைச் சொல்லும் பகுதியை (#7-13) வாசிக்க வேண்டும். அதன் பின் அவரது ஆரம்ப ஆன்மிகக் காட்சிகளைச் சொல்லும் பகுதியை (#14-40) வாசித்தால் அவரது காட்சிகளின் சார்புலன் விளங்கும். முதற்பகுதிகளில் (#1-3) அரபி மொழியின் சந்த உரைநடையின் அணியிலக்கணக் கூறுகள் பற்றிய பொதுவான அறிமுகத்தையே ரூஸ்பிஹான் சொல்கிறார் என்பதை வாசகர் தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஒருவர் கைப்போக்கில் நூலைப் புரட்டிச் செல்லலாம், அவரின் மனதைத் தூண்டுமொரு பத்தி துருத்தும் வரை, அல்லது ருஸ்பிஹான் சொல்வது போல், ‘உருவெளிப்பாடு கொள்ளும்’ வரை.

Image result for carl w ernst
carl w ernst at jaipur festival.

நான் ரூஸ்பிஹானை முதன்முதலில் படிக்கத் தொடங்கியது இருபது வருடங்களுக்கு முன். ஆரம்பம் முதற்றே அவர் தனது செழுமையான படிமங்கள், தடையற்ற புலப்பாடு மற்றும் சந்த நடை ஆகியவற்றால் என்னைக் கவர்ந்தார். இந்நூலின் வாசகர்கள் மீது நான் பொறாமை கொள்கிறேன். முதன் முறையாக ஓர் உண்மையான பேராளுமையின் எழுத்துக்களைப் படிக்கும்போது ஒருவர் அனுபவிக்கும் பரிச்சய அதிர்வுகளை அவர்கள் பெறுவார்கள்.
மொழிபெயர்ப்பில், மூலப் பிரதியின் செய்திக்கும் ஆங்கில மொழியின் தனி மரபிற்கும் இடையில் நான் பெரிதும் போராடினேன். இலக்கிற்கு அது எத்தனை தூரம் விலகி விழுகின்றது என்பதை என்னால் உணர முடிந்தது. பொதுவாக அறிஞர்கள் மொழிபெயர்ப்பில் சொற் துல்லியத்தைக் குறிவைப்பர். அதனால், அன்னிய வார்த்தை ஒன்றைக் குறிக்க ஆங்கிலத்தில் அதற்கிணையான ஒற்றை வார்த்தையைத் தேடிப் பிடிப்பர். தோராயமான முதற்பிரதியை உருவாக்குவதற்கே இந்தச் செய்முறை உதவும். மூலப் பிரதியைப் படிக்க விரும்புவோருக்கு அது ஓர் உசாத்துணையாக இருக்கும். ஆனால் பரந்துபட்ட வாசகர் வட்டத்தை எட்ட வேண்டுமெனில் பிரதியின் அடியில் மறைந்திருக்கும் குறியீட்டுத் தர்க்கத்தைக் கண்டறிவதும் மொழிபெயர்ப்பின் வாசகருக்கு அதன் தாக்கத்தை இயன்ற அளவு மறுவுருவாக்கம் செய்வதும் மொழிபெயர்ப்பாளர் எதிர்க்கொள்ளும் உண்மையான சவாலாகும். இல்லையெனில், தொழில்நுட்பத் துல்லியம் என்பது தெளிவின்மை ஆகிவிடும் அபாயம் உள்ளது. சிலநேரம் இன்னும் மோசமாக, அது அலங்கோலமாகவும் அமைந்துவிடும். லத்தீன் மூலச் சொற்களைப் பெய்து எழுத முனையும் கல்விப் புலம்சார் அணுகுமுறை எப்போதுமே உரைநடையின் அளவீடுகளின்படி மிக மோசமான விளைவுகளையே தந்திருக்கிறது.
மேலும், செவ்வியல் அரபியின் சொற்தொகுதிப் பரப்பு நவீன ஆங்கிலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. உதாரணம் காட்டுதும். ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கின்ற அரபி வேரிலிருந்து கிளைத்து வருகின்ற சொற்கள் பலவற்றைப் பொதுவாக நாம் ஆன்மிகப் பிரதிகளில் காணலாம். மொழிபெயர்ப்பில் அவற்றை அடையாளம் காண்பது மிகக் கடினம். வஹ்தத் என்னும் சொல் எண்ணியல் ஒருமையைக் குறிக்கும். தவ்ஹீத் என்பது இறைவனின் ஏகத்துவத்தைக் குறிக்கும். வஹ்தானிய்யத் என்பது மெய்யியல் ஒருமையைக் குறிக்கும். இத்திஹாத் என்பது இறைவனுடன் ஒன்றுவதைக் குறிக்கும். “unity” மற்றும் “oneness” ஆகிய ஆங்கிலச் சொற்களில் அத்தகைய துல்லியமான அர்த்த விகிதங்கள் இல்லை. எனவே அத்தகயை மூலச் சொற்களின் அர்த்தங்களை மொழிபெயர்ப்பில் எய்த சில நேரங்களில் சார்புலன் விளக்கத்தையோ அல்லது பெரும் பத்தியையோ எழுத வேண்டிய அவசியம் நேர்கிறது. சிக்கல் தந்த இன்னொரு சொல் ”ப(க்)கா”. நிலைத்தல் அல்லது இருத்தல் என்னும் தோராயமான சொற்களால் அது மொழிபெயர்க்கப்படுகிறது. பெரும்பாலும் அச்சொல் ஃபனா (முற்றழிவு) என்னும் சொல்லுடன் ஜோடி சேர்க்கப்படுகிறது. வரம்புற்றதும் படைக்கப்பட்டதும் மறைந்தொழிகையில் துலங்கும் தெய்வீக சாஸ்வத இருப்பைச் சுட்டுவதற்கு அச்சொற்கள் பயன்படுகின்றன. தன்முனைப்பு அல்லது வரம்புற்ற தனி சுயம் அழிந்த பின் எஞ்சுவது யார்? என்னும் கேள்விக்கு இச்சொற்களில் தெளிவான விடை இல்லை என்பது வாஸ்தவம்தான். இதிலும்கூட நான் இறைவனின் இருத்தலைச் சொல்வதற்கு ஒற்றைச் சொல்லைத் தேராமல் பத்தியாக விளக்கி எழுதுவதையே கைக்கொண்டேன்.

Image result for sufi cloth
green is the color of investiture in qadiriyyah sufi order.

இவற்றையெல்லாம் விடவும் ஆகக் கடினமான சவாலை முன்வைத்த சொல் “இல்திபாஸ்” என்பதாகும். ரூஸ்பிஹானிடம் இது ஒரு தனித்தன்மை கொண்ட ஆன்மிகக் காலைச்சொல்லாக இருக்கிறது. அவரது ஞானத்தின் மையக் கருத்தாக இருக்கின்ற ”திரையிடல் மற்றும் திரைநீக்கம்” என்பதற்கான குறிப்புச்சொல்லாக அது இயங்குகிறது. அதன் நேரடி அர்த்தம் “ஆடையணிதல்” அல்லது “போர்த்துதல்”. எனவே, அரசின் பிரதிநிதிகள் மற்றும் இளவரசர்களால் தமது அரசவை மாந்தருக்கு வழங்கப்படும் பதிவியேற்பு ஆடைகள், மற்றும் சூஃபி குருமார்களால் தீட்சை நிகழ்வில் தமது சீடர்களுக்கு வழங்கப்படும் துணி ஆகியவற்றை அது நினைவுறுத்துகிறது. அத்தகைய சடங்குகள் இல்லாத சமூகங்களில் அதன் அர்த்த விகிதங்களை வெளிப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. திருச்சபை குருமார்களின் சடங்குகளில் ஆடை போர்த்துதலைக் குறிப்பதற்கு மத்திய நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட சொல்லான “investiture” என்னுஞ் சொல்லோ அரதப் பழசாக இருக்கிறது. ”இல்திபாஸ்” என்பதற்கு “shrouding” (துணிச் சுற்றுதல்) என்னும் பொருளுமுண்டு. மறைத்தல் அல்லது மூடுதல் என்னும் அர்த்த விகிதங்களை அது தருகின்றது. ரூஸ்பிஹானிடத்தில் இச்சொல் கொள்ளும் இன்னும் மேம்பட்ட ஆன்மிக அர்த்தங்கள் அற்புதமானவை. இறைவன் தன்னைத் தோற்றப்படுத்திக்கொள்ள முன்வைக்கும் ஒருவித ஒளித்திரையை அது குறிக்கிறது. அல்லது, இறைவன் தன் அருளால் ஒரு மனிதனைத் தனது திருப்பண்புகளைக் கொண்டு அலங்கரிப்பதை அது குறிக்கின்றது. இவ்வாறு அச்சொல் ஏககாலத்தில் சக்தி, மறைத்தல், தெய்வீகப் பண்புகளின் ஒளிமயமான வெளிப்பாடு ஆகியவற்றைக் குறிக்கின்றது. சார்புலத்திற்கு ஏற்ப அதனை நான் பல்விதங்களில் மொழிபெயர்த்துள்ளேன். அவை அனைத்திலும் போர்த்துதல் மற்றும் நிரல்படுத்தல் என்னும் குறியீட்டு அர்த்தங்கள் தொனிக்குமாறு கவனம் எடுத்திருக்கிறேன்.
இந்நூல் பரந்த வாசகர் வட்டத்தை நோக்கி எழுதப்படுவதால், இந்த அக்கறைகளை மனதில் நிறுத்தி எனது முந்தைய நூலான “ரூஸ்பிஹான் பக்லி: பாரசீக சூஃபித்துவத்தில் ஆன்மிக அனுபவமும் இறைநேசத்தின் அணியியலும்” என்பதில் உள்ள பல பத்திகளை சுவையான வாசிப்பிற்கேற்ப மறு மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறேன். அந்நூலில் இருந்த பத்திகளைப் போலல்லாது இந்நூலில் பிரார்த்தனை/ வாழ்த்து மொழிகள் எல்லாம் அடைப்புக்குறிகளுக்குள் முழுமையாகத் தரப்பட்டுள்ளன, முழுமைத் தன்மை கருதி. இறைவனின் பெயரை குறிப்பிடும் போதெல்லாம் அரபிப் பிரதிகள் சில குறிப்பிட்ட வருணிப்புக்களை இணைத்துச் சொல்கின்றன. அவை இங்கே “மிக்க மேலான இறைவன்” என்பதாகவோ ”இறைவன் (அவனுக்கே மகிமை)” என்பதாகவோ குறிப்பிடப்பட்டுள்ளன. இறைவனைக் குறிப்பதில் அல்லாஹ் என்னும் பெயரையும் அல்-ஹக்கு என்னும் பெயரையும் ரூஸ்பிஹான் மாற்றி மாற்றிப் பயன்படுத்துகிறார். அந்த தனித்தன்மை அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. நபி முஹம்மது (ஸல்...) அவர்கள் மீதான வாழ்த்தும் பிற ஆளுமைகளின் மீதான வாழ்த்தும் மூலப் பிரதியில் அதன் எழுத்தர்களால் சுருக்கக் குறியீடுகள் கொண்டே அவ்வப்போது குறிப்பிடப்பட்டுள்ளதால் அவற்றை இம்மொழிபெயர்ப்பும் விரிவாகக் குறிப்பிடவில்லை. இறைவனுக்கான அடைமொழிகள் சிற்றெழுத்தாகவும் இறைவனின் திருநாமம் பேரெழுத்தாகவும் அச்சிடப்பட்டுள்ளன. அனுமானத்தால் அறிய முடிந்த ஆனால் ஸ்பஷ்டமாகக் குறிப்பிடப்படாத அர்த்தங்களும் குறிப்புக்களும் இப்பிரதியில் கூடுதலாகச் சதுர அடைப்புக்குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன.
இனி, நான் எனது நன்றிகளைக் குறிப்பாக பர்வர்திகார் பதிப்பகத்தின் வெளியீட்டாளரும் எனது மனைவியுமான ஜுடித் எர்ன்ஸ்ட் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மொழிபெயர்ப்பை நான் நிறைவு செய்ய அவரே பெரிதும் எனக்கு ஊக்கமளித்தார், இப்பிரதியின் உருவாக்கத்தை ஒவ்வொரு கட்டத்திலும் மிக நுணுக்கமாக அவதானித்தும் வந்தார். ஓர் ஆன்மிகப் பிரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்குரிய கச்சிதமான பாணி குறித்து மதிப்புமிக்க ஆலோசனைகளை எனக்கு வழங்கிய பதிப்பாசிரியர் மவ்ரா ஹை பல தத்தியான வெளிப்பாடுகளை விட்டும் என்னைக் காப்பாற்றியிருக்கிறார். எனினும், அவரது அறிவுரையை நான் எல்லா இடங்களிலும் பின்பற்றவில்லை என்பது என் தவறுதான். இந்நூலின் வடிவமைப்பை ‘காஷர்கிஸ் நூல் வடிவமைப்பு’ உரிமையாளர்கள் ஜாய்ஸ் காஷர்கிஸ் மற்றும் ஆன் தெய்ல்கார்ட் மிகவும் அழகியலுடன் செய்தளித்திருக்கிறார்கள். நிஃமதுல்லாஹி சூஃபிப் பள்ளியின் தலைவரான டாக்டர். ஜவ்வாது நூர்பக்‌ஷ் மிக அருளுடன் ரூஸ்பிஹான் பக்லி பற்றியதொரு குறிப்புரையை இந்நூலுக்கு அளித்துள்ளார். இச்செயல்திட்டத்தில் எனக்கு உறுதுணை செய்த அனைத்து நல்ல நண்பர்களுக்கும், குறிப்பாக லின் ஒட் மற்றும் ஜான் புஸ்ஸானிக் ஆகியோருக்கு, எனது நன்றிகள். இந்நூலின் முகப்புப் படம், பாரிஸ் நகரத்து தேசிய நூலகத்தின் கனிந்த அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நூல், ரூஸ்பிஹான் பக்லி என்னும் மாபெரும் சூஃபியை மேற்குலகிற்கு முதன்முதலாக அறிமுகஞ் செய்த இரு பெரும் ஃப்ரெஞ்சு அறிஞர்களின் நினைவிற்குச் சமர்ப்பணம்: லூயி மாசிக்னான் மற்றும் ஹென்ரி கார்பின்.

சேப்பல் ஹில், நார்த் கரோலினா.
நவம்பர், 1996.