Thursday, December 27, 2012

துளிக்கதைகள்



ஒரு கதை எந்த அளவு இருக்கவேண்டும்? காவியம் என்று எழுதப்பட்டதெல்லாம் ஆயிரக்கணக்கான பக்கங்களில் இருந்தன. சிறுகதை என்று ஒன்று வந்தபின் சில பக்கங்களில் இருந்து நாற்பது ஐம்பது பக்கங்கள் வரை கதைகள் சொல்லப்பட்டன. குழந்தைகளுக்கான கதைகள் இன்னும் சுருக்கமாக இருந்தன. ஈசாப்பின் நீதிக்கதைகள் ஒவ்வொன்றும் அரை பக்கம் அல்லது ஒரு பக்கம் அளவில்தான் இருந்தது. அந்த அளவில் உள்ளதைக் குறுங்கதை என்று அழைக்கலாம்.

சுருக்கம் என்பது சுவாரஸ்யத்தின் அடையாளம் ஆன நவீன உலகில் இன்னும் சிறிய கதைகளைச் சொல்லிப் பார்க்க ஆர்வம் உண்டானபோது ஒற்றை வரியில் கதை சொல்லமுடியுமா? என்று முயன்று பார்த்திருக்கிறார்கள். இது பற்றித் தமிழில் முதலில் அறிமுகம் செய்தவர் சுஜாதா. மேற்கில் எழுதப்பட்ட மிகச் சுருக்கமான அறிவியல் புனைகதைகளில் தனக்குப் பிடித்தவை என்று பின்வரும் இரண்டு கதைகளை அவர் சொல்லியிருந்தார்:

விண்வெளியின் எல்லை வரை சென்றபோது அங்கே எழுதப்பட்டிருந்தது, “பிரபஞ்சம் இங்கே முடிவடைகிறது” என்று, தலைகீழாக!

அந்த அறையில் உலகின் கடைசி மனிதன் அமர்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது.

இவ்வகையில் எழுதப்படும் கதைகளை மைக்ரோ ஃபிக்‌ஷன் (நுண் புனைவு?), ஃப்ளாஷ் ஃபிக்‌ஷன் (மின்னல் புனைவு), போஸ்ட்கார்ட் ஸ்டோரி (அஞ்சலட்டைக் கதை) முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள்.

கவிதைகளில் ஆகச் சிறிய வடிவமான ’ஹைகூ’வைத் தமிழில் வாமனக் கவிதை, துளிப்பா என்றெல்லாம் அழைப்பது போல் இவ்வகைக் கதையை வாமனக் கதை என்றும் துளிக்கதை என்றும் அழைக்கலாம்.

ஒருபக்கம் முதல் ஒருவரி வரை சுருக்கமாக எழுதப்படுபவை இந்த வகையில் சேரும் என்று வைத்திருக்கிறார்கள். ஆயிரம் சொற்கள் மிகாமல், ஐநூறு சொற்கள் மிகாமல், இருநூறு சொற்கள் மிகாமல், நூறு சொற்கள் மிகாமல் என்று இப்படியே தேர்வில் விடை எழுதச் சொல்வது போல் குறுகிய எல்லைகள் கொடுத்து எழுதிப் பார்க்கிறார்கள். ஆறு சொற்களில் ஒரு கதை என்றெல்லாம்கூட சோதனை செய்து பார்க்கிறார்கள்.

இந்த மாதிரி எழுதுவதற்கு மிகவும் இலகுவான களமாக அறிவியல் புனைவு திகழ்கிறது. க்ரைம் என்னும் களத்திலும் ஓரளவு இலகுவாக எழுத முடியும். காதல் கதையை இத்தனைச் சுருக்கமாக எழுத முனைந்தால் அது கவிதை ஆகிவிடும், கதையாக இருக்காது. கவிதை போல் தொனிக்கக்கூடாது என்பது முக்கியம்.

மேஜிக்கல் ரியலிசம் என்ற எழுத்துமுறை கைவந்தால் துளிக்கதை எழுதுவது மிக எளிது. ஒரு உதாரணம்:
“பாட்டிலின் விளிம்பிலிருந்து சொட்டிய துளியில் மூழ்கித் தத்தளித்தான்.”

குழந்தைகளுக்கான கதைகளில் ஃபேண்ட்டஸி நிறைய இருக்கும் என்பதால் அந்த முறையிலும் இவ்வகைக் கதைகளைச் சொல்லிப் பார்க்கலாம். கதைகள் எழுதுவது எப்படி என்று எங்களுக்கு வகுப்பெடுத்த பேராசிரியர்.யூனுஸ் ஒருமுறை சொன்னார், “பழமொழிகளை அப்படியே கதையாக மாற்றினால்கூட அற்புதமாக வரும். ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்’ என்னும் பழமொழியை அப்படியே எதார்த்தமாக எடுத்துக் கொண்டு ‘பறக்கும் அம்மி’ என்று ஒரு கதை எழுதினால் குழந்தைகள் மிக வியப்பாகக் கேட்பார்கள்.”

பிள்ளைகள் விளையாட்டாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு-வரிக் கதைகளில்கூட சுவாரஸ்யத்திற்கான ஆரம்பப் புள்ளி இருப்பதைக் காணலாம். உதாரணமாக, “ஒரு ஊர்ல ஒரு நரியாம், அத்தோட கதை சரியாம்” என்று சொல்லிச் சிரிப்பார்கள். இது ஒரு பயங்கரமான முடிவு! ஏன் அத்துடன் சரியாம் என்னும் கேள்வியை எழுப்பக்கூடியது. ஆனால் அதை பற்றிச் சிறுவர்களுக்கு என்ன கவலை?

இதே கதையைச் சற்று மாற்றிச் சொன்னான் என் மகன்: “ஒரு ஊர்ல ஒரு நரியாம், அது உடம்பெல்லாம் ஒரே சொரியாம்.” இதிலும் ஒரு திகில் இருக்கிறது. ஏன் அப்படி என்னும் கேள்வியை எழுப்புகிறது. இதே கதையை நான் வேறு வடிவத்திற்கு மாற்றி அமைத்துப் பார்த்தேன்: “ஒரு ஊர்ல ஒரு நரியாம். இன்னொரு ஊர்ல இன்னொரு நரியாம். இப்படியே, ஒவ்வொரு ஊர்லயும் ஒரு நரி மட்டும் இருந்ததாம்!” கதை அவ்வளவுதான் என்றாலும் ஒரு மர்ம சூழலை உருவாக்கிக் கேள்விகளை எழுப்பிவிடுகிறது. ஏன் அப்படி என்னுக் கேள்விக்குக் கதையில் விடைகள் இல்லை. அது நம் கற்பனை முன்னகர்வதற்கான பாதையை விரிக்கின்றது.

ஹெமிங்க்வே ஒரு முறை ஆறே சொற்களில் கதை ஒன்று எழுதி அதுவே தன் சிறந்த படைப்பு என்று சொன்னார் என்பதாக இலக்கிய உலகில் ஒரு கிசுகிசு உண்டு. அந்தக் கதை: "For sale: baby shoes, never worn."

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் பலராலும் தங்களின் ஆதர்ச எழுத்தாளர் என்று கொண்டாடப்பட்ட ஆர்தர்.சி.க்ளார்க் எழுதிய மிகச் சிறிய அறிவியல் புனைகதை இது: “God said, 'Cancel Program GENESIS.' The universe ceased to exist."

குய்தமாலா தேசத்தின் எழுத்தாளரான அகஸ்தோ மாண்டெர்ராசோ 1959-ல் எழுதிய “எல் டைனொசாரியோ” என்னும் தலைப்பில் அமைந்த கதைதான் உலகின் மிகச்சிறிய கதை என்று கருதுகின்றவர்களும் உண்டு. “குவாந்தோ தெஸ்பர்ட்டோ, எல் டைனொசாரியோ டொதாவியா எஸ்தபா அல்லி” என்னும் அந்தத் துளிக்கதையின் பொருள்: “அவன் கண்விழித்தபோது, அந்த டைனொசர் இன்னமும் அங்கே இருந்தது.”

ஒரு-வரிக் கதைகள் என்னும் பெயரில் எழுதப்படும் பல கதைகள் உண்மையில் சிறுகதைகான ஆரம்பம் போலவே தெரிகின்றன. ஒரு தீப்பொறி போல். அவ்வளவுதான். வாசகன் அதை ஊதி வளர்த்தெடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். இப்படி எழுதலாம் என்னும் பட்சத்தில் குப்பைகள் அதிகமாகக் குவியத்தொடங்குவதில் ஆச்சரியம் இல்லை. ஹைகூ என்ற மகத்தான கவிதை வடிவத்திற்கு நேர்ந்த கதி அதுதான். ஹைகூ எழுதுவது மிகவும் கடினம் என்பது உண்மையாக இருக்க இங்கே என்னடா என்றால் ஹைகூ எழுதுவது மிகவும் எளிது என்னும் பார்வையிலிருந்தே புற்றீசல்கள் போல் ஹைகூக்கள் புறப்பட்டன. துளிக்கதைகளுக்கும் இது பொருந்தும். சுவாரஸ்யமான சில துளிக்கதைகள்:

குட்-பை சொல்கிறேன், இரத்தம் வழியும் கைகளால்
(ஃப்ரான்க் மில்லர்)

கல்லறை வாசகம்: மட மானிடர்கள், பூமியிலிருந்து தப்பிக்கவே இல்லை.
(வென்ரார் விஞ்ச்)

குழந்தையின் குருதி-வகை? மனிதம், பெரும்பாலும்.
(ஆர்சன் ஸ்காட் கார்ட்)

”கிர்பி இதற்கு முன் விரல்கள் சாப்பிட்டதில்லை”
(கெவின் ஸ்மித்)

மழை பெய்தது, பெய்தது… நிற்கவே இல்லை
(ஹொவர்ட் வால்ட்ராப்)

மனிதகுலத்தைக் காப்பாற்ற அவன் மீண்டும் இறந்தான்
(பென் போவா)

கால எந்திரம் எதிர்காலத்திற்குச் சென்றது. யாருமே இல்லை.
(ஹாரி ஹாரிசன்)

வானம் விழுந்தது. விவரம் பதினோரு மணிக்கு.
(ரொபர்ட் ஜோர்தான்)

ஹைட்ரஜன் குண்டுகள் வீசப்பட்டன. நாங்கள் அனைவரும் இறந்தோம்.
(ஹொவர்ட் வால்ட்ராப்)

அவன் மிகவும் குழப்பத்துடன் படித்தான், தன் இறப்புச் செய்தியை.
(ஸ்டீவன் மெரட்ஸ்கி)

அடடே இது நல்லாயிருக்கே என்று தோன்ற கற்பனையை முடுக்கிவிட்டதில் சில துளிக்கதைகள் தோன்றின. மேஜிக்கல் ரியலிசம், சைஃபை போன்ற வகைகளின் சாயல் உள்ள துளிகளாக அவை தெரிகின்றன. ஒவ்வொன்றுக்கும் தலைப்பும் கொடுத்துவிட்டேன் (இங்கே ஹைகூ கவிதைக்குத் தலைப்புக் கொடுப்பது போல.)

நடை
அந்த எட்டு வயதுச் சிறுவன்
வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தான்,
கடலின் ஆழத்தில்.

மிர்ரர்
கண்ணாடியின் முன் வந்து நின்ற ஜாக் சிரித்தான். பிம்பம் சிரிக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

தேகம்
அறைக்குள் வந்து கதவை மூடித் தாளிட்டவள் புழுக்கம் தாங்காமல் ஆடைகளைக் களைந்தாள். ஃபேன் காற்று வெண்ணிறமாய் மின்னிய எலும்புகளைத் தழுவியது.

அவள்
முகத்தைச் சேலையால் மூடி மறைத்தபடி சாலையில் விரைந்தவளைச் சுட்டிக் காட்டிக் கிசுகிசுத்தார்கள் எல்லோரும் “மனித இனத்தைச் சேர்ந்தவள்!”

மீட்டிங்
தலைவர் எதிர்பார்த்தபடியே கூட்டத்திற்கு அறுபது பேர்தான் வந்திருந்தார்கள், ஐந்து மனிதர்களையும் சேர்த்து.

வகுப்பு
போர்டில் எழுதுவதற்கு டீச்சர் திரும்பியவுடன் கடைசி பென்ச்சில் இருந்த சிறுவர்கள் அவசரமாக மாற்றிக் கொண்டார்கள், தலைகளை.

இவ்வளவு சுருக்கமாக இருப்பதில் ஒரு சிக்கல் என்ன என்றால், கதை ’படித்த’ உணர்வே ஏற்படுவதில்லை என்பதுதான். குறைந்தது ஐந்து நிமிடங்களாவது படிப்பது போல் இருக்க வேண்டாமா? இவை இருக்கும் அளவுக்கு “நொடிக் கதைகள்” என்று ஒரு பெயரும் சூட்டிவிடலாம் போலிருக்கிறது. அதாவது ஒரு நிமிட நேரத்திற்குள் படித்து முடிக்கக்கூடிய கதைகள் இவை. மைக்ரோ கதைகள் என்னும் வகையில் சற்றே பெரிய கதைகளும் உண்டு. “உள்ளங்கைக் கதைகள்” என்று அவற்றை அழைக்கிறார்கள். உள்ளங்கை ஸைசில் உள்ள அந்தக் கதைகள் நம் உள்ளத்தின் உணர்வுகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்திக் காட்ட வல்லவை. இதற்கு ஒரு சாம்பிள், மானுவல் கொன்ஸாலஸ் என்பவரின் “Miniature Wife and other stories” என்னும் நூலிலிருந்து ”FIVE THINGS” என்னும் துளிக்கதை:

ஐந்து விஷயங்கள்
அவள் பிரிந்து செல்லும் முன், அவள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்களை அவளிடம் சொல்லிவிட விரும்புகிறேன். ஆனால் நாங்கள் காலையிலிருந்தே பேசிக்கொள்ளவில்லை.

கேட்கப்படாமலே நான் காஃபி போட்டுக் கொடுத்தேன். அவளும் அப்படியே அதை எடுத்துக் கொண்டாள்.

ஐந்து விஷயங்கள் என்கிறேன். ஆனால் அதிகமாகவும் இருக்கலாம்.

நிச்சயம் அதிக விஷயங்கள் உள்ளன. ஆனால் ஐந்து என்பது ஒரு நல்ல எண் என்று நினைக்கிறேன், சரிதானே? போதுமானது ஆனால் அதிகமானது அல்ல. அவள் அதிகமாகச் சுமந்து செல்ல வேண்டாம். ஐந்துக்கு மேல் அவள் கேட்கவும் மாட்டாள்.

அவள் மீது ஒரு மௌனம் கவிந்துள்ளது. நான் ஐந்து விஷயங்கள் என்கிறேன், ஆனால் உண்மையில் ஒரே ஒரு விஷயம்தான் இருக்கிறது, அவளிடம் சொல்வதற்கான ஒரே ஒரு விஷயம், ‘போகாதே’.
ஃ ஃ ஃ

வாசகர்களுக்கான ஒரு பயிற்சியும் வைத்திருக்கிறார்கள். மேலே உள்ள துளிக்கதை ஏதோ ஒரு நாவலின் இடையே வரும் பீஸ் மாதிரி தொனிக்கிறது அல்லவா? ஆனாலும் இது தன்னளவில் முழுமையான ஒரு துளிக்கதைதான் என்றும் சொல்ல முடிகிறது. இப்படியாக, நாம் வாசிக்கும் நாவல்களில் இருந்து துளிக்கதை எனத்தக்க பகுதிகளைக் கட் செய்து சேகரித்து வைத்து நூலாக வெளியிடலாம் என்கிறார்கள். (அந்தந்தக் கதைக்குரிய ஆசிரியரின் பெயரைச் சுட்டிவிட வேண்டும். நம் பெயரில் சுட்டுவிடக் கூடாது. ஆனால், தொகுப்பாசிரியர் என்று நம் பெயரைப் போட்டுக் கொள்ளலாம்.)

ஒரு பக்க அளவில் கதை எழுதுகிறார்கள் என்று சொன்னேன் அல்லவா? அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று முயன்றபோது, அடியேனின் மனத்தில் நடுச்சாமத்தில் பின்வரும் கதை உதித்தது:

தர்பார்
இரவெல்லாம் ராணியுடன் ஊடல். பிறகு வைகறைப் பொழுதில் ஒரு கூடல். எனவே, அக்பரால் அன்று அரசவையில் சுரத்தாக அமர்ந்திருக்க முடியவில்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. சமாளித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை சொக்கித் தலையை உதறி விழித்துப் பார்த்தபோது கம்பம் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்தார். அருகே தேநீர்க் கடையிலிருந்த ரேடியோவில் “ராசாவே உன்னை விட மாட்டேன்…” என்று குயில் குரலில் ஒரு பெண் பாடிக் கொண்டிருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தார். அப்பக்கமாக வந்த கண்டக்டர் ஒருவர் இவரின் ராஜ உடைகளைப் பார்த்துவிட்டு, “அடடே இப்பவும் ராஜா நாடகம்லாம் போடுறீங்களா? எந்த ஊரு? மதுரையா?” என்று கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போய்விட்டார். இதற்குள் அக்பருக்குக் கை காலெல்லாம் லேசாக நடுக்கம் கண்டுவிட்டது. தூக்கத்தின் பிரம்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவராகக் கண்களை இடுக்கி முகத்தை உதறி உதறி மீண்டும் மீண்டும் திறந்து பார்த்தார். உத்தி பலன் தரவில்லை. அதே பஸ் ஸ்டாண்டில்தான் அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த ஒருவன் “சர்தான், இது கோட்டி புடிச்ச கேஸ்ப்பா” என்று டீக்கடைக்காரரிடம் சொன்னான். பேருந்துகள் அவருக்குள் அநியாயத்துக்குப் பீதியைக் கிளப்பின. சுற்றி இருக்கும் உயிரினங்கள் பார்ப்பதற்குத் தன்னைப்போல் மனிதர்களாகத் தெரிந்தாலும் உடைகளெல்லாம் வேறு மாதிரியும் பாஷை அந்நியமாகவும் இருப்பது கண்டு ஏதோ துஷ்ட ஜின்களின் உலகம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். உள்ளூற மரணபயம் திரளத் தொடங்கியிருந்தது. டவுசரிலிருந்து புகையிலைப் பாக்கெட்டை எடுத்தபடி ஒருத்தர் அக்பரின் அருகில் வந்து அமர்ந்தார். “ஃபாரின் செண்ட்டா, இப்படித் தூக்குதுங்களே?” என்றார். அவருடைய கண்களில் இருந்த ஒருவித கனிவு சற்று ஆசுவாசம் தரவே அவரிடம் கேட்டுப்பார்க்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிற்று. நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வரளும் நாவை அசைத்து, அழுகை வரும் தருணத்தில் சிறு குழந்தையின் கீழுதடு நெளிவது போன்ற பாவனையை மறைக்க முடியாதவராய், சன்னமான குரலில் அக்பர் அவரிடம் கேட்டார், “முரா தர்பார் குஜாஸ்த்?” (என் அரசவை எங்கே இருக்கிறது?). ஃபார்சி அந்த ஆளுக்கு ஏதோ சூனிய மந்திரம் போல் தோன்றவே எழுந்து கொண்டு எதிரே நின்ற பஸ்ஸைக் காட்டினார், “இந்த பஸ் தேனீ வரய்க்கும் போவுது. ஏறிக்கங்க. அங்கிருந்து மாறிக்கலாம்.”


Wednesday, December 26, 2012

பெண்மை இனி-தடா



செய்தித்தாளைப் படிக்கவே பெரும் பீதியாக இருக்கிறது. கடந்த பத்து நாட்களில் பத்துக் கற்பழிப்புச் சம்பவங்களாவது நிகழ்ந்திருக்கின்றன. இந்திய நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்னும் கேள்வியை மிக வலுவாக எழுப்புகின்ற சூழல் அவ்வப்போது சில காலகட்டங்களில் உருவாகும். இப்போது அச்சூழல் வந்துள்ளது.


நாட்டின் தலைநகரில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் மூன்று நபர்களால் வன்கலவி செய்யப்பட்டு சிறுகுடல் சிதைந்து போய் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு இப்பிரச்சனையை எப்படிக் கையாள்கிறது என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இக்கொடுஞ் செயலை நிகழ்த்தியவர்களைப் பத்திரிகைகள் தொடர்ந்து ‘மர்ம நபர்கள்’ என்றே எழுதி வருவதில் உள்ள அசட்டுத் தனம் உறுத்துகிறது. (விபச்சாரிகளை அழகிகள் என்று எழுதுவார்களே அது இன்னொரு அசட்டுத் தனம்.) அவர்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களின் முகம் இன்னும் வெளியுலகிற்குத் தெரியவில்லை. அவர்களின் விவரங்கள் வெளிப்படுத்தப் படவில்லை. ‘பெரிய இடத்துப் பிள்ளைகளாக இருக்கலாம்’ என்னும் யூகம் உண்மையக இருக்கக் கூடும். அரசு அந்தக் கிரிமினல்களைக் காப்பாற்ற முயல்கிறதா என்னும் சந்தேகம் எழுவதற்கு அரசின் இப்படியான மெத்தனப் போக்கே காரணமாகிறது.

இந்த நிலை பைபிளில் வரும் ஒரு சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. விபச்சாரம் செய்துவிட்டாள் என்று ஒரு பெண்ணை யூதர்களின் கும்பல் துரத்திக் கொண்டு வருகிறது, கல்லால் அடித்துக் கொல்வதற்காக. விபச்சாரத்திற்கான் இந்த வகை மரணதண்டனை மூசா நபியின் ஷரீஅத் சட்டத்தில் இருந்தது. அவள் ஓடி வந்து இயேசு நாதரின் காலில் விழுந்து காப்பாற்றுமாறு கதறுகிறாள். கையில் எடைக்கல் போன்ற கற்களுடன் மூர்க்கமாக ஓடிவரும் கும்பல் எளிமையே உருவான இயேசுவைக் கண்டு அப்படியே நிற்கிறது. இயேசு ஒருவகையான் ரெபல் என்பதற்கு இந்த இடமொரு சான்று. அவரின் பார்வையில் கருணை மட்டுமே நிரம்பி வழிவதாகவே சித்திரங்கள் நமக்குக் காட்டுகின்றன. இறைஞானியின் கண்களில் ஞானக்கருணை மட்டுமல்ல தேவைப்படும் இடங்களில் ஞானக்கோபமும் (அறச்சீற்றம்/ ரௌத்திரம்) வெளிப்படும். இந்நிகழ்வில் இயேசுவிடம் அப்படியான பார்வைதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் உடனே எதுவும் பேசவில்லை. அந்த மௌனம் இங்கே ஒரு சிங்கத்தின் மௌனத்தைப் போல. “உங்களில் யார் பாவமே செய்யவில்லையோ அவர்கள் முதலில் கல்லெறியட்டும்” என்னும் வாசகம் சிங்கத்தின் கர்ஜனை போல் அங்கே ஒலித்திருக்க வேண்டும். அருள் கொஞ்சும் தொனியில் அல்ல. பைபிளில் வரும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சில கேள்விகளை எழுப்புகிறார் ஓஷோ. அவர் சொல்கிறார், “ஒரு பெண் தனியாளாக விபச்சாரம் செய்ய முடியாது. அவளுடன் ஈடுபட்டிருந்த அந்த ஆண் எங்கே? அவளைத் துரத்தி வரும் அந்தக் கும்பல் அவனை எங்கே தப்பிக்க விட்டது? ஒருவேளை அவன் யாராவது மந்திரியின் மகனாக இருந்திருப்பான் அல்லது பணமுதலையின் மகனாக இருந்திருப்பான். எனவே வசதியாக அவனைத் தப்பிக்க விட்டுவிட்டார்கள்”

நாடெங்கும் தொடர்ந்து கண்டனப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தியா கேட் முன் பல நாட்கள் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் திரண்டு போராடி வரும் நிலையில் 144 தடையுத்தரவு விதிக்கப்பட்டு இன்னும் தீவிரமடைந்துள்ளது. ஏதோ ஒரு கல்வி நிலையத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய மதிப்பிற்குரிய குடியரசுத்தலைவர் சொல்லியிருக்கிறார்: “மாணவர்களின் கோபம் நியாயமானது”. கேட்டதும் அடேங்கப்பா என்றிருந்தது. என்ன செய்வது, பன்முகத்தன்மை கொண்ட இத்தனைப் பெரிய குடியரசு நாட்டில் ஜனாதிபதி என்னும் பொறுப்பு மிகுந்த பதவியிலிருக்கும் ஒருவர் சொல்ல முடியுமான உட்சபட்ச புரட்சி வாசகம் இதுவாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதைத் தொடர்ந்து அவர் மாணவர்களுக்கு ஓர் அறிவுரையும் சொல்லியிருக்கிறார்: “மாணவர்கள் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்”. நினைத்துக் கொண்டேன், வன்கலவி செய்பவர்கள் தங்களின் உடல் வெறியைக் கட்டுப்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏன்? மேலும், இந்தியர்கள் பல விஷயங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏற்கனவே நாட்டின் ஜனத்தொகை எகிறிக்கொண்டு போகிறது. இப்போது கற்பழிப்புக் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ”இந்தியர்கள் தங்களின் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றுதான் அறிவுரை அருள முடியும்.
குடியரசுத் தலைவரின் இந்த இரண்டு வரிகளும் என் காதில் ஒரு ஞான வாசகமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அதில் உள்ள முரணழகை அப்படியே நீட்டிச் சிந்தித்தபோது சீன மகாஞானி லாவ்சூவின் தாவ்-டே-ச்சிங் பாணியில் தத்துவ வரிகள் உருவாகி வந்தன:

”உங்கள் கோபம் நியாயமானது
கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்
கோபத்தை வெளிப்படுத்துவது அநியாயம்

பாடல் திறன் இருப்பது நியாயம்
பாடுவது அநியாயம்
பாடாதிருப்பதே நலம்

ஆடல் திறன் இருப்பது நியாயம்
ஆடுவது அநியாயம்
ஆடாதிருப்பதே நலம்

எழுத்துத் திறன் இருப்பது நியாயம்
எழுதுவது அநியாயம்
எழுதாதிருப்பதே நலம்

எதுவும்
இருப்பது நியாயம்
வெளிப்படுவது அநியாயம்
மறைந்திருப்பதே நலம்”

இந்த ரீதியில் சிந்தனைகள் கிளம்பி என்னை பயமுறுத்திக் கொண்டிருந்ததால் மனதை திசைத்திருப்பி ஜனாதிபதி அவர்கள் சொன்ன அடுத்த கருத்தைக் கவனித்தேன். “கொடுமைக்கு உள்ளான மாணவி விரைவில் நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்”. மணியான வாசகம். இதை மாணவர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். மத்திய அரசே முன்வந்து இலவசமாக ஆளுக்கொரு சப்ளாக்கட்டை கொடுத்துவிட்டால் இந்தியா கேட் பகுதியில் மாணவர்கள் அமைதியான முறையில் அமர்ந்து பஜனை பாடிப் பிரார்த்தனையில் ஈடுபடலாம். தள்ளு முள்ளு, தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு என்று இந்தக் கருமத்துக்கெல்லாம் வேலையே இல்லை. இப்படியாக இந்தியாவெங்கும் பஜன் மூலம் போராட்டங்கள் நிகழ்த்தப்படும் போது பாவாத்மாக்கள் எல்லாம் புண்யாத்மாக்களாக ட்ரான்ஸ்ம்யூட் ஆக நல்ல வாய்ப்புள்ளது. அப்புறம் வன்கலவி என்ன, மென்கலவிக்குக் கூட முனைய மாட்டார்கள். 

மாணவர்கள் என்றால் மட்டும் என்ன சும்மாவா? போலீசையே திருப்பி அடிக்கிறார்கள். அதில் ஒரு காவலர் செத்தே போய்விட்டார். இப்போது அவரின் குடும்பம் ஆதரவற்ற நிலையில் கதறிக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் சக்தி என்பது எந்த அளவுக்குத் தீவிரமானதோ அந்த அளவுக்குச் சட்டென்று நிதானம் இழந்து போகக்கூடியதும் ஆகும். நல்ல நோக்கத்தில்தான் போராடுவதற்கு அவர்கள் அங்கே கூடினார்கள் என்றாலும் அவர்களுக்கென்று ஒரு மைய அச்சு இல்லை. ஒருவித ஹைப் தன்மையில் அங்கே கூடியவர்கள் அவர்கள். எத்தகைய இளைஞர்கள்? இன்றைய இந்தியாவின் சராசரி இளைஞர் கூட்டம்தான் அது. ஃபோட்டோக்களில் பார்த்த போது அதில் சிலர் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு ரீலீசன்று சினிமா தியேட்டர் முன் நிற்கும் முக பாவனை அவர்களிடத்தில் இருந்தது. ஆழமான சமூகப் பிரக்ஞை உள்ளவர்களாகத் தெரியவில்லை. குப்பைத்தனமான திரைப்படங்கள் காட்டும் சமூகப் பிம்பத்தையும் அரைவேக்காட்டு சித்தாந்தங்களையுமே வரித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். ஆயிரக்கணக்கான அந்த மாணவர்களில் உண்மையான சமூக அக்கரையுடன், இந்த நிகழ்வை ஒற்றை நிகழ்வாகக் கருதாமல் இதன் பின்னணியில் கால தேசப் பரிமானங்களில் விரியும் சிக்கல்களின் ஒட்டுமொத்தத் தோற்றத்தை மனத்தில் அவதானித்துத் தீவிரமான மன அதிர்ச்சிக்கு ஆட்பட்டு முக்கியத்துவத்தை உணர்ந்து போராடுபவர்கள் என்று ஒரு டஜன் பேர் இருந்திருக்கலாம். அதுவே பெரிய எண்ணிக்கை. நல்ல வேளையாக இந்தப் போராட்டத்திலிருந்து இன்னும் எந்தத் தம்பி ஹஜாரேவும் புறப்பட்டு வரவில்லை.

சில மாதங்களுக்கு முன் செய்தித்தாள்களில் வந்து அதிர்ச்சி அளித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. க்ரூப் ஸ்டடிக்காக சக மாணவியின் வீட்டிற்குச் செல்லும் நான்கு மாணவர்கள் அவள் வீட்டில் வைத்தே அவளைக் கற்பழித்தார்கள். இத்தனைக்கும் அந்த மாணவியின் அன்னையை வாயார ‘அம்மா அம்மா’ என்று அழைத்து அவரும் இவர்களைத் தன் பிள்ளைகளைப் போல் பாவித்து வாஞ்சையுடன் சமைத்துப் பரிமாறியதை மூக்குப் பிடிக்க மொக்கியவர்கள்தான் அவர்கள். அப்படிப்பட்ட மாணவர்கள் இந்தப் போராட்டக் கூட்டத்திலும் இருப்பார்கள். இல்லை என்று மறுக்க என்ன முகாந்திரம் இருக்கிறது?

டெல்லியில் நடந்த சம்பவத்துக்கு இத்தனை தீவிரமான எதிர்ப்புக்கள் நாடெங்கும் வெடித்திருப்பது விழிப்புணர்விற்கான அடையாளமாக இருக்கலாம் என்றாலும் அதே நேரம் இங்கே தமிழகத்தில் நடந்த பாலியல் கொடுமைகள் அந்த அளவுக்குக் கண்டுகொள்ளப் படவில்லை என்பது ஏன்? எத்தனைக் குரூரமான சம்பவங்கள் அவை!

ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று கற்பழித்தார்.
ஸ்கூல் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பதின்பருவ மாணவியை ஒரு கும்பல் ஊருக்கு வெளியே வைத்து வன்கலவி செய்தபின் கொலை செய்து பிணத்தைப் புதரில் வீசிவிட்டுப் போனது.

மருத்துவ மனையில் அட்மிட் ஆகியிருக்கும் தங்கையைப் பார்த்துவிட்டுத் தனியே வீடு திரும்பிய பதின்மூன்று வயது மாணவி ஒருத்தி வீட்டுக்கு வழி தெரியாமல் தவிக்க, இரவு அடைகலம் கொடுக்கப்பட்ட ஒரு வீட்டில் அவரின் கற்பு சூறையாடப்படுகிறது (மும்பையில் நடந்தது)

மணிமுத்தாறில் ஆற்றங்கரையில் ஒரு காதல் இணை அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாம். அவ்வழி வந்த மூன்று பேர் அப்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு செல்ஃபோனையும் நானூறு ரூபாய் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டார்கள் என்கிறது செய்தி. (அந்தக் காதல் மன்னனை முதலில் கட்டிப் போட்டு விட்டார்களாம்.)

இப்படி நாளும் வந்து குவியும் செய்திகளை வெட்டி வைத்தால் வாரத்துக்கு ஒரு சிறுகதை நூல் அளவு தேரும் போலிருக்கிறது. வருடம் முழுதும் தொகுத்தால் ஒரு பெரிய வால்யூமே வரும். பத்தாண்டுகளில் பத்து வால்யூம்களில் Modern Encyclopedia Indiana உருவாக்கிவிடலாம்.

இது இன்று நேற்று உருவாகி நடந்து வரும் கதை அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படியான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்பதற்குப் பழைய இலக்கியங்களில் சான்றுகள் உண்டு. உதாரணமாக மணிமேகலையில் ஒரு பெண் தரும் வாக்குமூலம் சீத்தலைச் சாத்தனாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவலன் கண்ணகியை அழைத்துக் கொண்டு பிழைப்பதற்காக மதுரை போய்விட்ட பிறகு மாதவி தன் மகள் மணிமேகலையுடன் புத்த மடாலயம் ஒன்றில் அடைக்கலம் ஆகி ஆன்மிக வாழ்க்கை மேற்கொள்கிறாள். அங்கே அவளுக்குச் சுதமதி என்ற பெண் ஒருத்தி தோழியாக வாய்க்கிறாள். அப்படியாக பூஜை தியானம் நட்பு என்று சாந்தமாக நாட்கள் கழிந்து கொண்டிருக்கையில் ஒருநாள், கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியும் மதுரையை எரித்துவிட்டுக் கண்ணகி விண்ணேகிய செய்தியும் கிடைக்கிறது. அதைக் கேள்விப்பட்டு மணிமேகலை அழுகிறாள். புத்தரின் சிலைக்குச் சாற்றுவதற்காக அவள் கோர்த்துக் கொண்டிருந்த மாலையில் அவளின் கண்ணீர்த் துளிகள் விழுகின்றன. மாலை தீட்டாகிவிட்டது என்று சொல்லும் மாதவி ஊருக்கு வெளியே உள்ள மலர்வனத்திற்குப் போய்ப் புதிய பூக்களைப் பறித்து வருமாறு அவளிடம் சொல்கிறாள். அப்போது மாதவியின் தோழி சுதமதி அதை மறுத்து, மணிமேகலை அழகிய பெண் என்பதால் அவள் தனியே காட்டுப்பகுதிக்குச் செல்வது ஆபத்து என்று சொல்கிறாள். (ஆண் தனியே காட்டுக்குச் சென்றால் உயிருக்குத்தான் ஆபத்து. பெண் எனில் கற்புக்கும் சேர்த்து என்னும் நிலை, அப்போதும் இப்போதும் மாறவே இல்லை.) எத்தகைய ஆபத்து என்பதற்குத் தன் வரலாற்றைக் கூறுகிறாள். சுதமதி ஒரு பிராமணப் பெண். அந்தணர் ஒருவரின் மகள். வெளியுலகம் தெரியாமல் செல்லமாக வளர்ந்த பிள்ளை. சின்னத்தம்பி படத்தின் குஷ்பூ போல வெளியுலகைக் காண ஊர்கோலம் போக வேண்டும் என்று அவளுக்கு ஆசை. அந்த ஆசை ஒருநாள் மிகைக்கவே சின்னத்தம்பி பெரியதம்பி என்று எந்தத் தம்பியையும் துணைக்கு அழைத்துக் கொள்ளாமல் தானாகவே கிளம்பிப் போகிறாள். இந்த இடத்தில் பூம்புகார் நகரைச் சுற்றி ஐந்து வகைக் காடுகள் இருந்ததைச் சாத்தனார் குறிப்பிடுகிறார். பயங்கராமான நிலக்காட்சிகள். அது இந்திர விழாக் காலம். மேலுலகில் இருந்து தேவர்கள் விஞ்சையர்கள் என்று பல வகையானவர்கள் வந்து செல்லும் டூரிஸ்ட் சீசன். கானகத்தில் தனியே நின்ற காரிகையான சுதமதியை, வானவூர்தியில் வந்து கொண்டிருந்த விஞ்சையன் ஒருவன் கண்டு காமம் மிகவே அப்படியே அவளை அள்ளியெடுத்து வானவூர்தியில் சாய்த்து அந்தரத்தில் பறந்தபடி பலாத்காரம் செய்தபின் மீண்டும் கீழே இறக்கி விட்டுவிட்டுப் போய்விடுகிறான். யார் அந்த விஞ்சையன் என்று அடையாளம் காட்டிக் கைது செய்வதெல்லாம் பூம்புகார் போலீசால் முடிகிற காரியமா? சுதமதி என்னும் பிராமணப் பெண் (வயது 16) ஒரு மர்ம நபரால்… என்கிற போக்கில் பெட்டிச் செய்தி போட்டிருப்பார்கள், அவ்வளவுதான்.

இவ்வகையான அநாகரிகச் செயல்கள் ஏன் நிகழ்கின்றன என்று பல கோணங்களில் ஆராய இடமுண்டு. உளவியல் அடிப்படையில் சிந்தனையை இயக்கினால் கிடைக்கும் பார்வைகளில் பல் நிச்சயம் கச்ப்பானவையாக இருக்கும். பெண்ணின் உடலை போகப் பொருளாக பாவிப்பதும் உடைமையாக பாவிப்பதும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று. எதுவரை இந்த இரண்டும் தொடர்ந்து கொண்டிருக்குமோ அதுவரை பெண்ணின் மீதான வன்முறைகள் மறைய முடியாது. பெண்ணைச் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் விழுமியங்கள் அதிகம். ஒரு குடும்பத்தின், சாதியின், மதத்தின், மண்ணின் நற்பெயர் என்பது அதனைச் சார்ந்த பெண்ணின் மீது ஏற்றிப் பார்க்கப்படுகிறது. எனவே அவளுக்குச் செய்யும் வன்முறையான பாதிப்பு என்பது அவள் சார்ந்துள்ள அமைப்பின் வீழ்ச்சியாகப் பார்க்கப் படுகிறது. சூதாட்டத்தில் தோற்று அவமானப்பட்ட ஒருவன் ஜெயித்தவன் மீது வன்மம் வைத்து சமயம் பார்த்திருந்து அவனுடைய மகளைக் கடத்திச் சென்று சந்தையில் விற்க அவள் தொலை தூரமான ஓர் ஊரில் விலைமகள் ஆக்கப்படுகிறாள். இது உருதுவின் முதல் நாவலான ’உம்ராவோ ஜான் அதா’ என்பதன் கதையின் ஆரம்பம். (கமலின் ‘மகாநதி’ நியாபகம் வருகிறதா?)

பள்ளிக்கூடச் சிறுவர்களிடம் உள்ள ஓர் உளவியலை இங்கே கவனிக்க வேண்டும். தன்னிடம் இல்லாத ஒரு பொருளை இன்னொருவன் வைத்திருப்பதைப் பார்த்தால் அவனுக்கு எழும் மனத்தூண்டல். அதே போல் தனக்கும் ஒன்று வேண்டும். கிடைக்காது என்னும் பட்சத்தில் அவனிடம் இருப்பதை அபகரிக்க வேண்டும் அல்லது அவனுக்கும் இல்லாமல் அழித்துவிட வேண்டும். இதே மனநிலை ‘வளர்ந்த’ பேர்களிடையே பிணக்குகள் ஏற்படும்போது பெண்ணை அந்த உடைமைப் பொருளாக வைத்துப் பார்க்கிறது, செயல்படுகிறது.

இதுவும் இன்று நேற்று உருவான கதை அல்ல. எனக்கு ஆதிபிதா ஆதம் நபியின் பிள்ளைகளின் கதை நினைவுக்கு வருகிறது. ஆதாம் ஏவாள் என்று இரண்டே பேர்தானே அப்போது. அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் வளர்ந்து ஆளான போது அவர்களுக்குத் திருமணம் முடிக்க வேண்டிய நிலை வருகிறது. ஆதமின் பிள்ளைகளில் மூத்த மகன் ஆபில். அவனின் தம்பி காபில். அவர்களைத் தொடர்ந்து பிறந்தவர்களில் இரு பெண்களை (சகோதரிகளைத்தான்! வேறு வழி?) இருவருக்கும் நிச்சயம் செய்கிறார் தந்தை ஆதம். அண்ணனுக்குப் பேசிய பெண் தனக்குப் பேசிய பெண்ணைவிட அழகியாக இருப்பதாகத் தம்பி காபில் அபிப்ராயப் படுகிறான். அவளைத் தனக்குக் கட்டிவைக்குமாறு தந்தையிடம் கேட்கிறான். இறைவனின் ஏற்பாடு அது என்றும் அதில் தான் மாற்றம் செய்ய முடியாது என்றும் அவர் கூறிவிடுகிறார். மாற்றிக்கொள்ளலாம் என்று அண்ணனிடம் கேட்கிறான். தந்தை ஒரு நபி. அவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பது நம் கடமை என்கிற ரீதியில் அவன் லெக்ச்சர் அடிக்கவே தம்பி மிகக் கடுப்பாகிப் போகிறான். (பேசுவடா நீ, ஏன் பேச மாட்ட, அழகான புள்ளைய ஒனக்குக் கொடுத்திட்டாங்கள்ல, பேசுவ நீ). அவன் நெஞ்சில் அது வன்மமாக வளர்கிறது. அதன் விளைவு? இன்றைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பின்வரும் ஆப்ஷன்கள் தருகிறேன்:

a) தற்கொலை செய்து கொள்கிறான்
b) தந்தையைக் கொலை செய்கிறான்
c) அண்ணனைக் கொலை செய்கிறான்
d) அந்த அழகிய பெண்ணைக் கொலை செய்கிறான்
e) தனக்குப் பேசிய பெண்ணைக் கொலை செய்கிறான் (லாஜிக்கே இல்லை என்றாலும்      இவ்விசயமெல்லாம் விவஸ்த்தைக்கு அப்பாற்பட்டதாகத்தானே இருக்கின்றது)
f) பேசியபடித் திருமணம் செய்து கொண்டு விரக்தியில் வாழ்க்கையைக் கழிக்கிறான்
g) பேசியபடித் திருமணம் செய்து கொண்ட பின் ஒருநாள் அண்ணனையும் தன் மனைவியையும் கொலை செய்கிறான்.

ச்செ, இப்படியே எழுதிக்கொண்டிருந்தால் ஏதோ புதுப்பேட்டை படத்தின் நிழலுலகக் கதை போல் தொனிக்கிறது. வேறு சாத்தியங்கள் உங்களுக்குத் தோன்றினால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

விடை பலரும் அறிந்ததுதான். அண்ணனைக் கொலை செய்துவிட்டான். உலகில் நடந்த முதல் கொலை. Arranged Marriage-க்கு எதிரான கலகம். அழகிய பெண் தனது உடைமையாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை. தனக்கு அவள் கிடைப்பதற்கான சூழலை உருவாக்க எண்ணி தற்போதைய உடைமையாளனைத் தீர்த்துக்கட்டும் திட்டம். மனிதன் மகா பொல்லாதவன் ஐயா.


Monday, December 24, 2012

பாண்டிய மன்னனின் டைனோசர் -part 3


இனி “யாளி” நாவல் யாளியைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களுக்கு வருவோம். தும்பிக்கை வைத்த யாளி, நாக்கு நீண்ட யாளி, இறக்கை வைத்த யாளி, நீரில் வாழும் யாளி (மீன் போன்றது) ஆகிய நான்கு வகை யாளிகளின் சிற்பங்கள் கோயில்களில் காணப்படுகின்றன. அவை நான்குமே பலகோடி ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உண்மையில் வாழ்ந்தவையே என்னும் கருத்தினடியாக எழுதப்பட்டுள்ள இந்நாவலில் கதாநாயகர்கள் அந்த யாளிகளில் முதல் இரு வகை யாளிகளை இன்றைய குற்றாலத்திற்கும் களக்காட்டுக்கும் இடையில் உள்ள திருஅழகர்குடி என்னும் ஊரில் உள்ள கோவிலின் பின்புறமுள்ள காட்டிற்குள் நேரில் காண்கிறார்கள்! (இப்படி ஓர் ஊர் உண்மையில் இருக்கிறதா? இருப்பின் அறுபது அடி உயர சுவர் கொண்ட கோயில் உண்மையில் இருக்கிறதா?)

யாளியின் சிலைகள் எல்லாம் கீழே ஒரு யானையை வைத்தே காட்டப் பட்டிருக்கின்றன என்பதை அவதானிக்கும் பெக்மன் அதற்கான காரணத்தைச் சொல்கிறான்: யாளியின் அளவை யானையின் அளவுடன் ஒப்பிட்டுக் காட்டி நாம் அனுமானித்துக் கொள்ளுமாறு விட்டிருக்கிறார்கள். யானையின் உயரம் பத்து அடிகள் எனில் யாளியின் உயரம் நாற்பது அடிகள். (சில கோயில்களில் உள்ள சிலைகளில் யாளி யானைக்குப் பக்கத்தில் நிற்காமல் அதன் முதுகின் மீது ஏறி நிற்கிறது. அதன் பாரத்தைத் தாங்காமல் யானை பின்னங்கால்களை மடித்து அமர்ந்திருக்கிறது.) இங்கே எனக்கொரு சந்தேகம்: யாளி உண்மையிலேயே இருந்தது, அதன் சைஸ் என்ன என்று காட்டுவதற்காகத்தான் இந்தச் சிற்பம் யானைக்கு அருகில் வைத்துச் செதுக்கப்பட்டுள்ளது எனில் தர்க்கத்தை வேறு சிற்பங்களுக்கும் பயன்படுத்தலாகுமா? உதாரணமாக, சில கோயில்களில் குதிரைகள் நிற்பது போன்றும் அவற்றுக்குக் கீழே மனிதர்கள் நிற்பது போன்றும் சிலைகள் உண்டு. அதாவது குதிரையுடைய வயிற்றின் அடிபாகம் மனிதனின் தலைக்கு மேலே இருக்கிறது. எனில், அத்தனை உயராமான குதிரைகள் அந்தக்காலத்தில் இருந்தன என்று சொல்லி அதன் தொல்படிவங்கள் எங்காவது சிக்குகிறதா என்று தேடலாமா?

சிலைகள் எல்லாமே எதார்த்தமாக இருந்தவைதான் என்று சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ம.த.குமாருக்கு ஏற்பட்டுவிட்டதால், மனிதனும் யாளியும் இணைந்த வடிவிலான சிற்பமும் நிஜமாகவே வாழ்ந்த யாளி-மனிதன் என்னும் வகையினரின் சிற்பமே என்று சொல்கிறார். அவர்கள் ஒருவகைச் சித்தர்கள் என்றும் குறிப்பிடுகிறார். திருஅழகர்குடியின் கோயிலுக்குப் பின்னால் உள்ள யாளிகள் சரணாலயத்திற்குள் ரகசியமாக நுழைந்து சரவணனும் பெக்மனும் சுற்றி வரும்போது ஒரு பழைய கோயில் மண்டபத்திற்குள்ளிருந்து பிரணவ நாதம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் அங்கே ஆள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அங்கே செல்லும் பெக்மன் அந்த மண்டபத்திற்குள் கால்பந்து சைஸில் முட்டைகள் வைக்கப் பட்டிருப்பதைக் காண்கிறான். அப்போது அவன் காணும் ஒரு காட்சி அவன் முதுகெலும்பில் மின்சாரம் பாய்ந்தது போல் உணரச்செய்கிறது: யாளி-மனிதர்! அரைக்கு மேலே மனித உடல், கீழே யாளியுடல். அவர்தான் ப்ரணவ நாதம் எழுப்பி தியானம் செய்தபடி இருக்கிறார். தான் கண்ட காட்சியை பெக்மன் அந்தக் கோயிலின் அறங்காவலர்களிடம் சொல்லும்போது அவர்கள் அதிசயிக்கிறார்கள். அவர்களே அந்த சித்தரைப் பார்த்ததில்லை என்றும் ப்ராப்தமுள்ள ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்புக் கிடைக்க்மென்றும் சொல்கிறார்கள். யாளியைப் பாதுகாத்து வரும் தலைமுறையினருக்குக் கிடைக்காத பேறு, வெளிநாட்டுக்காரனுக்குக் கிடைத்திருப்பது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆனால் கதை கச்சிதமாக அமைந்துவிட்டது. மித்தாலஜிக்கலான – தொன்மமான உருவங்களெல்லாம் ப்ராப்தம் உள்ளவர்களின் கண்களுக்கு மட்டுமே காட்சி தரும் என்று அறிவாளால் கோடு போட்டுவிட்ட பின் வாயைத் திறக்க இடமே இல்லை!

சரி, அந்த முட்டைகள். ஜுராஸ்ஸிக் பார்க்கில் வரும் முட்டை போல இது ஏகப்பட்ட முட்டைகள். பறவை போன்ற யாளி ஒன்று உண்டல்லவா? அவற்றின் முட்டைகள். ஆனால் அந்த இனத்தில் இப்போது ஒன்றுகூட உயிருடன் இல்லை.

ஆரம்பத்திலிருந்தே யாளியின் உடலமைப்பை பெக்மன் அலசிக்கொண்டே வருகிறான். யாளிக்கு முன்னிரு கால்களும் / கைகளும் சின்னதாக இருக்கின்றன. எனவே அது எலி அணிலெல்லாம் நிற்பது போல் நிற்கிறது. ஆனால் அதன் பின்னங்கால்கள் நீளமாக உள்ளன. டைனோசர்களுக்கும் இப்படித்தான் இருக்கும். யாளிகள் டைனோசர் இனத்தைச் சேர்ந்தவை என்று நாவலின் பிற்பகுதியில் ஒரு கோட்பாட்டுக்கு வந்து சேர இந்த அவதானிப்புக்கள் உதவுகின்றன. ஆனால் அந்த அவதானிப்புக்கள் போதுமான அறிவியல் பார்வை இன்றி ஒரே தாவாக யூகமாகி முடிகின்றபோது நாவலின் தோல்வியாகிவிடுகிறது. அந்த இடைவெளியை அறிவியல் தரவுகளைத் திரட்டி ஆராய்ந்து பயன்படுத்தி எழுதியிருப்பாரேயானால் அருமையானதொரு நாவலாகியிருக்கும். இதனால்தான் இக்கதை டான் ப்ரவ்னின் நாவலைப் போல் உருவாகியிருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்னேன்.

யாளியை முன்வைத்துப் பேசும் ம.த.குமார் இன்று டைனோசர் பற்றி அறிவியல் ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கும் கருத்துக்களுக்கு எதிராக இரண்டு பட்டாசுகளை டமார் டமார் என்று வெடிக்கிறார். அந்த இரண்டு கருத்துக்களை டைனோசர் ஆய்வாளர்கள் கவனிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பட்டாசு நெ.1: டைனோசரின் உருவமாக மேற்கத்திய அறிவியலாளர்கள் வரைந்து தந்திருப்பது தவறானது. டைனோசரின் உண்மையான உருவம் நம் கோயில் சிற்பங்களில் காணப்படும் தும்பிக்கை வைத்த யாளியின் உருவமே.

இதற்கு அவர் சொல்லும் ருஜு என்னவெனில், யானை இறந்த பின் புதைந்து போனால் அதன் துதிக்கையில் எலும்புகள் இல்லாத காரணத்தால் முற்றிலுமாக மக்கிவிடும். எனவே யானையையே பார்த்திராத ஒருவன் பின்னாளில் தோண்டியெடுக்கப்படும் அதன் எலும்புக்கூடுகளை மட்டும் வைத்துக்கொண்டு அதன் உருவத்தைத் தீர்மானிப்பான் எனில் யானையைத் தும்பிக்கை இல்லாத ஒரு விலங்காகத்தான் வரைவான். அப்படித்தான் டைனொசரையும் தும்பிக்கை இல்லாததாக மேற்கின் அறிவியலாளர்கள் என்னும் கேணைகள் ‘தவறாக’ வரைந்திருக்கிறார்கள். அவர்கள் நம் ஊர் யாளிச் சிற்பங்களைப் பார்த்திருப்பார்கள் எனில் இந்தத் தவறைச் செய்திருக்க மாட்டார்கள்!

அது சரி, இன்று பசுமாடு அல்லது எருமை மாட்டின் எலும்புக்கூடு கிடைத்தால், அந்த விலங்கை முன்னர் பார்த்தேயிராத ஒருவன் அதற்கு proboscis என்னும் தும்பிக்கை இருப்பதாகக் கற்பனை செய்தால்தான் சரியா? ஏனெனில் அப்போது நம் யாளியின் உருவம் சார்ந்து சரியாகக் (?) கற்பனை செய்த அறிவாளிகள் ஆகிவிடுவோம் அல்லவா?

பட்டாசு நெ.2: டைனோசர்கள் “reptiles” என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் சொல்வதும் தவறு. டைனோசர்கள் எல்லாம் குட்டி ஈன்று பால் புகட்டும் பாலூட்டிகள் (mammals).

இதற்கு அவர் சொல்லும் ருஜு என்னவெனில், அத்தனை உயரமாக இருக்கும் டைனோசர் முட்டை போட்டால் அவ்வளவு உயரத்தில் இருந்து தரையில் விழும் முட்டை ஒடிந்து விடாதா? (தர்க்க நீட்சி: இப்படி எல்லா முட்டைகளும் உடைந்துவிட்டால் டைனோசர் இனமே அழிந்துவிடாதா?)

இந்த வாதத்தைப் பார்த்தவுடன் என்னையும் அறியாமல் “என்னைப் படைத்த றப்பே, நான் என்ன பாவம் செய்தேன்?” என்று அலறிவிட்டேன். ஒரு வாதத்துக்காக ம.த.குமார் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும் நின்றபடியே முட்டை போட டைனோசர்கள் என்ன கூமுட்டைகளா? நாமும்தான் ஓரளவு உயரமாக இருக்கிறோம். என்ன நின்றுகொண்டேவா… சரி வேண்டாம். கோழி கூட அதன் உயரத்திற்கு அப்படியே முட்டையிட்டால் உடைந்துதான் போகும். அது அமர்ந்து முட்டை ‘இடுவது’ போல் டைனோசர்கள் செய்யாதா என்ன? மேலும் அத்தனை எடையுள்ள டைனோசர் அடை காக்க அமர்ந்தாலும் முட்டை புட்டுக்குமாம். என்னே ஓர் அறிவியல் பார்வை! இதற்குச் சப்பைக்கட்டாக யானையை வேறு இழுக்கிறார். (யாளியுடன் சேர்த்து அதைத்தானே செதுக்கி வைத்திருக்கிறார்கள்.) இந்தக் காரணத்திற்காகத்தான் யானை முட்டை போடாமல் குட்டி போடுகிறதாம்! எனவே, ம.த.குமாரின் லாஜிக்படி இரண்டடிக்கு மேல் உயரம் கொண்ட எந்த உயிரினமும் முட்டை போடாது, குட்டிதான் போடும்!

ஆனால் யாளியில் அவர் இரண்டு வகை இருப்பதாகச் சொல்கிறார். சிறகுகள் வைத்திருக்கும் யாளிகள் பறவை இனத்தின்பாற் பட்டவை. அவை முட்டைதான் போடும். (பறந்துகொண்டே அவசரத்தில் போட்டுவிட்டால் முட்டை உடைந்துவிடுமே ஐயா?) துதிக்கை வைத்த யாளியும் நாக்கு நீண்ட யாளியும் குட்டிதான் போடும்.

உயிரினப் பாகுபாடுகள் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாததால் இப்படிப்பட்ட காமெடி ட்ராக்குகளை அறிவியல் ஆய்வுகள் போல் சொல்லி அதற்கெல்லாம் அத்தாரிட்டி நாங்கள்தான் என்றொரு ’பித்ருக்கள் பஜனை’ பாடியிருக்கிறார் ஆசிரியர். வெளிக்கோலத்தை வைத்து மட்டுமே இவ்விலங்கு இந்த வகையைச் சேர்ந்தது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. தும்பிக்கை வைத்த யாளி என்பது யானை வகையைச் சேர்ந்தது எனில் யானை பன்றி எலி சுண்டெலி போன்றவை எல்லாம் ஒரே வகுப்பைச் சேர்ந்தவை. நாக்கு நீண்ட யாளி என்பது சிங்கம் வகையைச் சேர்ந்தது எனில் சிங்கம் என்பது நாய் வகுப்பைச் சேர்ந்தது. (புலி சிறுத்தை போன்றவை எல்லாம் பூனை வகுப்பைச் சேர்ந்தவை) எனவே யாளி என்பது ஒரு வகையே அல்ல. சிங்கத்திற்குத் துதிக்கை இருந்தது போன்ற ஒரு கற்பனை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. நாக்கு நீண்டு அதை வைத்து இரையை (எருமை மாடுகள்!) சுழற்றியெடுத்து வாய்க்குள் போடும் யாளிகள் எனில் அவற்றை நாம் பச்சோந்தி வகுப்பில் வைத்துத்தான் பார்க்க முடியும். ஆனால், பல்லி பச்சோந்தியெல்லாம் முட்டை போடும் இனம் என்பது இங்கே ம.த.குமாரின் கோட்பாட்டில் இடிக்கும்.

டைனோசர்கள் எல்லாமே பல்லி இனத்தைச் சேர்ந்தவை என்று விஞ்ஞானிகள் முடிவு செய்திருப்பது எந்தெந்த அளவுகோல்களை வைத்து என்று அறிந்துகொள்ளாமல் அவர்கள் ஏதோ அம்புலிமாமா யூகங்களை வைத்துச் சொல்கிறார்கள் என்பது போல் நாமும் நம் பங்குக்கு ஜீபூம்பா யூகங்களை அவிழ்த்து விடக்கூடாது. டைனோசர்களின் முட்டைகள் பல இடங்களில் கிடைத்திருக்கின்றன என்பது அவை ஊர்வன வகையைச் சேர்ந்தவை என்னும் பார்வைக்கு ஒரு வலுவான ஆதாரமாகிறது. இது போல் பல விஷயங்களை மெள்ள மெள்ள அலசிப் பார்த்துத்தான் டைனோசரின் உருவத்தை யூகித்திருக்கிறார்கள். டைனோசர்களுக்குத் தும்பிக்கை இருப்பதாக யூகிக்கக்கூடாது என்பது அறிவியலில் ‘ஹராம்’ ஆக்கப்பட்ட விஷயம் அல்ல. சரியான முகாந்திரம் இருந்தால் அப்படியும் சிந்திப்பார்கள், ஏற்றுக் கொள்வார்கள்.

விலங்குகளின் வெளியுருவத்தை வைத்து மட்டுமே அது இன்ன வகையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியாது என்றபோது இன்னொரு பாய்ண்ட் ஞாபகம் வந்தது. டைனோசரின் உருவத்தை ஒட்டகச்சிவிங்கி மற்றும் கங்காரூ ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அலசுவார்கள் பெக்மனும் சரவணனும். கங்காரூவிற்கு பின்னங்கால் மட்டும் மிகவும் நீண்டது. அது தாவவும் அமரவும் குனியவும் இடமளிப்பது. ஆனால் யாளிக்கு அப்படியான பின்னங்கால்கள் இல்லை. எனவே அது குனிந்தால் குப்புற வீழ்ந்து மூஞ்சியில் சிராய்த்துக் கொள்ளும். (ஏனெனில் அதன் முன்னங்கால்கள் சிறியவை.) ஆனால் ஒட்டகச்சிவிங்கி அத்தனை உயரம் இருந்தாலும் அதன் நான்கு கால்களும் சம உயரமுடையவை ப்ளஸ் அதன் கழுத்து நீண்டது. எனவேதான் அவ்வளவு உயரமானதும் முன்னங்கால்கள் சிறிதானதும் கங்காரூவின் பின்னங்கால்கள் போல் அமைப்பற்றதுமான யாளிக்கு தும்பிக்கை இருக்கிறது அல்லது பல அடிகள் நீளமான நாக்கு இருக்கிறது. ஆனால் டைனோசர்களுக்கு நீண்ட கழுத்தும் கிடையாது, கங்காரூவினது போன்ற பின்னங்கால்களும் கிடையாது, முன்னங்கால்களும் சிறியன என்னும் போது அவை குப்புற விழாமல் இரை தின்னவும் நீரருந்தவும் ஒரே வழி அவற்றுக்குத் தும்பிக்கையோ நீண்ட நாவோ இருக்க வேண்டும் என்பதுதான். இவை ம.த.குமார் வைக்கும் பார்வைகள். இதனடியாகத்தான் யாளிகள் என்பவை டைனோசர்களே என்றும், அவை பாலூட்டிகள் என்றும் டைனோசர் பற்றி இன்றைய அறிவியலாளர்கள் அளிக்கும் சித்திரங்கள் தவறானவை என்றும் அவர் முடிவுக்கு வருகிறார்.

இந்தக் கங்காரூ ஒப்பீட்டைப் பார்க்கும் போது எனக்குச் சிறிய விலங்கு ஒன்று மனக்கண்ணில் தோன்றியது. அதன் பெயர் கங்காரூ எலி (kangaroo rat). வட அமெரிக்கப் பாலைவனங்களில் இவை வாழ்கின்றன. உண்மையில் இந்த எலிக்கும் கங்காரூவுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இது எலியில் ஒரு வகைதான். ஆனால் இதன் பின்னங்கால்கள் கங்காரூவின் கால்களைப் போலவே வடிவம் கொண்டுள்ளன. அதனால் இந்த எலியால் அநாயசமாகத் தாவிச் செல்ல முடிகிறது. அனிமல் ப்ளானட்டின் கவுண்ட் டவுனில் தாவும் மிருகங்களில் இதற்கு ஐந்தாவது இடம் கிடைத்தது. தன் உடலின் அளவை விடவும் நாற்பது மடங்கு நீளத்தை ஒரே தாவில் தாவிவிடும். துரத்தும் எதிரிக்கு டிமிக்கி கொடுப்பதற்கு இதனிடம் உள்ள இன்னொரு திறன் என்னவெனில் தாவியபின் தன் வாலை அசைப்பதன்மூலம் அந்தரத்திலேயே திசையை மாற்றிக்கொண்டு வேறு இடத்தில் போய் லேண்டிங் ஆகி அங்கிருந்து மீண்டும் ஒரு தவ்வு தவ்விப் பாய்ந்துவிடும். இதன் இரண்டு கன்னங்களும் இரண்டு பைகளாக (pouches) இருக்கின்றன. பாலைவனச் செடிகளைப் பீறாய்ந்து சேகரிக்கும் ஐநூறு கதிர்மணிகள் வரை இப்பைகளில் குதப்பிக்கொண்டு போய் தன் பொந்தினுள் துப்பி மண் போட்டு மூடி வைத்துக் கொண்டு பசிக்கும் போது சாவகாசமாக எடுத்து எடுத்துச் சாப்பிடுகிறது. ஆனால் கங்காரூ போல் இதற்கு வயிற்றிலே பை கிடையாது. இதற்கு இருப்பது போல் கங்காரூவுக்கு வாயில் பை கிடையாது. இது ஒரு எலி, அவ்வளவே. வேறு வகையைச் சேர்ந்த ஏதாவது விலங்குக்கு இதற்கு இருப்பது போல் வாயில் பை இருக்கக்கூடும். பெலிக்கன் பறவைக்கு அப்படி இருக்கிறது. அதற்காக பெலிக்கன் என்பது பறவையே அல்ல, பொந்தில் வாழும் ஒருவகைப் பாலூட்டி என்று சொல்ல முடியுமா என்ன?

யாளிகள் என்பவை அந்தக் காலத்தில் வாழ்ந்த டைனோசர்கள்தான் என்று முடிவு செய்த பின் இன்னுமொரு ஜிலீர் தகவலை ஊகிக்கிறார் ம.த.குமார். அந்த டைனோசர்களான யாளிகள் லெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்தவை! அப்போது  தமிழரின் ஆதித் தாய்நிலமான லெமூரியாக் கண்டம் என்பது கீழே அண்டார்டிகா வரையும் கிழக்கே அவுஸ்திரேலியா (Australia) வரையிலும் மேற்கே மடாகாஸ்கர் (Madagascar) வரையிலும் பரந்து விரிந்து கிடந்தது. அந்நிலத்தைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். (நாவலில் இதற்கு ஒரு வரைபடமே தந்திருக்கிறார். அந்நிலம் பச்சை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளதன் பொருள் அத்தனை வளமானது என்று காட்டத்தான். லெமூரியா முஸ்லிம் நாடாக இருந்தது என்று யாராவது இஸ்லாமிய ஆய்வாளர் கண்டறியாமல் இருப்பாராக!) அப்போது பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்தைக் கடல்கோள் (சுனாமி) மூழ்கடித்தபோது தன் மக்களுடன் தப்பித்து வந்த பாண்டிய மன்னன் சில யாளிகளைத் தன்னுடன் கொண்டு வந்து திருஅழகர்குடியில் சரணாலயமும் கோயிலும் கட்டி ரகசியமாக வைத்து, அவன் கட்டிய பல கோயில்களில் அதன் சிலைகளையும் செதுக்கச் செய்தான் என்று கதையை அளந்திருக்கிறார் ம.த.குமார்.

சங்க காலத்தில் இருந்த சேர சோழ பாண்டியர்களின் கட்டடக் கலை வேறு பிற்காலச் சேர சோழ பாண்டியரின் கட்டடக் கலை வேறு என்பதை வசதியாக மறந்துவிட்டு யாளிக் கனவில் மிதந்திருக்கிறார் அவர். குமரிக்கண்டம் மூழ்கிய காலத்தில் கட்டப்பட்ட எந்தக் கோயில் இந்த மண்ணில் இருக்கிறது? அப்படி ஏதேனும் இருந்து அதில் யாளி சிற்பமும் இருந்தால் அவரின் அனுமானத்திற்கு அர்த்தம் இருக்கலாம். அப்படி இல்லை என்பதால் பாண்டிய மன்னனின் டைனோசர் என்பது என் இனிய தமிழன் ஒருவன் எனக்குச் சொல்லிய நல்ல ஜோக்காகவே எஞ்சுகிறது!


ம.த.குமார் தொடாத இன்னொரு கோணமும் இருக்கிறது. சமயவியலை அடிப்படையாகக் கொண்ட நாவல் என்று சொல்லி எழுதும் அவர் அதை அவசியம் தொட்டிருக்க்க வேண்டும். தொடாமல் விட்டது பெரிய குறை என்று சொன்னால் தப்பில்லை. அந்தக் கோணம் ஆன்மிகக் கோணம்! தொன்மம் மட்டுமே ஆன்மிகம் ஆகிவிடாது. யாளி என்னும் தொன்மம் கற்பனை அல்ல வரலாறு என்று நிறுவுவதிலேயே அவரின் முழுக்கவனமும் சென்று விட்டபடியால் ஆன்மிகக் கோணத்தை அவர் தொடவே இல்லை. யாளி என்பது தியானத்தில் கண்டறியப்பட்ட ஓர் ஆழ்மனப் படிமம் என்பதாகப் பார்க்க இடம் இருக்கிறது. சமயப்பிரதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆழ்மனப் படிமங்களை உளவியல் ரீதியாக ஆய்வதிலேயே கார்ல் குஸ்தவ் யுங் தன் வாழ்வின் செம்பாகத்தைக் கழித்தார். எனினும் அவரின் உளவியல் பார்வையில் ஆழ்மனப் படிமங்கள் எல்லாம் மனிதகுலத்தின் தொகுப்பு நினைவிலியில் (collective unconsciousness) பதியப்பட்டுள்ள கற்பனையே ஆகும். தியானத்தில் ஒருவரின் பிரக்ஞை அந்தத் தொகுப்பு நினைவிலியைத் தீண்டியறியும்போது அவரின் நினைவு-மனப் பரப்பிற்கு எழுந்து வரும் ஏதேனும் ஒரு படிமத்தை அவர் காண்கிறார். அதுபோல் காணப்பட்ட ஓர் ஆழ்மனப் படிமமே யாளி என்று கொள்ளலாம்.

இவ்வாறு சொல்லும்போது ஒரு கேள்வி எழக்கூடும். யாளிச் சிலை நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றை நூற்றுக்கணக்கான சிற்பிகள் செதுக்கியிருப்பார்கள். அவர்கள் அனைவருமேவா தியானத்தில் அதனைக் கண்டிருப்பார்கள்? அதற்கு அவசியமில்லை. ஆன்மிக ஆளுமையாக மக்களால் நம்பப்படும் ஒருவர் தியானத்தில் தான் தரிசித்ததாக ஓர் உருவத்தை முன்வைப்பார் எனில் அதை மனிதர்களின் பொது நினைவு மனம் அட்டியின்றி ஏற்றுக்கொண்டுவிடும். உதாரணமாக, ஸ்வாமிஜி நித்தி தான் தியானத்தில் கண்டதாக ஓர் உருவத்தை அவரே வரைந்து காட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை அவர் ட்ராயிங்கில் வீக்காக இருந்து அது ஹம்ப்டி டம்ப்டி போன்ற கேலியான உருவமாக இருந்தாலும்கூட பக்தகோடிகள் அதனைப் புல்லரிப்புடன் ஏற்று லட்சக்கணக்கான பிரதிகள் போட்டுப் பாரெங்கும் பரப்பிவிடுவார்கள். ஆன்மிக மறைவுலகங்கள் என்பவை சிலருக்கே அன்றி ஏறத்தாழ அனைவருக்குமே uncharted territory என்பதால் அதை ஐயுறவோ அல்லது நிராகரிக்கவோ இயலாது. அந்தப் படிமத்தைப் பொய் என்று நிராகரிப்பது அந்த ஆன்மிக ஆளுமையையே நிராகரிப்பதாக ஆகிவிடும். எனவே அந்தப் படிமம் ஒரு mass craze-உடன் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகிவிடும். அப்படித்தான் யாளியும் ஆன்மிக குருமார்கள் தங்கள் ஆழ்மனத்தில் கண்டடைந்த படிமகாக, அவர்களிடமிருந்து ஸ்தபதிகளும் மக்களும் ஏற்றுக்கொண்ட படிமமாக இருக்கக்கூடும்.

கார்ல் குஸ்தவ் யுங்கின் உளவியல் கோணம் ஆன்மிக மற்றும் புராண நூல்களில் இருந்தும் தியான ஆய்வுகளில் இருந்தும் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் ஆழ்மனப் படிமங்கள் எல்லாம் தமக்கென்று reality (மெய்ம்மை / ஹகீக்கத்) அற்றவை என்று அவர் கருதுகிறார். அவை வெறும் கற்பனைகளே. ஆன்மிக ரீதியாக இந்தக் கோணத்தை இன்னும் முன்னகர்த்திச் சென்றால் வேறொரு பார்வை கிடைக்கிறது. தியானத்தில் ஆழும் பிரக்ஞை இந்தப் படிமங்களைக் கண்டடையும் ’இடம்’, ஆழ்மனப் பரப்பு என்று சொல்லப்படும் அந்த இடம் தன்னளவில் ரியாலிட்டி கொண்ட வேறொரு உலகம் என்று பார்த்தால் எப்படியிருக்கும்? அதாவது மனிதனின் பிரக்ஞை தியானம் என்னும் முறைமையின் வழியே வேறொரு பரிமாணத்தில் உள்ள வேறொரு உலகிற்குச் செல்கிறது. அங்கு காணும் உருவங்கள் அந்த உலகின் பிரஜைகள். அவற்றுக்கு இந்த உலகில் காணும் உயிரினங்களின் உருவங்களுடன் தொடர்பு இருக்கலாம். சற்றே மாறியிருக்கலாம். சில சமயங்களில் இங்குள்ள மாதிரியேவும் இருக்கலாம். இப்படிச் சாத்தியக்கூறுகள் விரியும். ஆக, அந்தப் படிமங்கள் மெய்ம்மை அற்ற வெறும் கற்பனை உருவங்கள் அல்ல.

இந்தக் கோணம் ஏறத்தாழ எல்லா மதங்களிலும் உள்ளது. மேலோகம் கீழுலகம் என்றும் இம்மை மறுமை திரையுலகம் என்றும் அன்ன பிற ரீதியிலும் பேசப்படுபவை இப்போதே இவ்வுலகிற்கு அப்பாலான வேறு பரிமாணத்தில் உள்ள வேறு உலகங்களைத்தான். அவ்வுலகின் பிரஜைகள் இங்கும் இவ்வுலகின் பிரஜைகள் அங்கும் சென்று வர இயலும் என்று மதங்கள் சொல்கின்றன. தேவர்கள் என்பவர்கள் அப்படியானவர்கள்தான். இந்து மதத்தில் ஏறத்தாழ இப்பூமியில் காணலாகும் எல்லா உயிரினத்திற்குமே அப்படியான ஆழ்மனப் படிமம் (archetypes) வரைந்து வைக்கப்பட்டுள்ளன அல்லது வருணிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் யாளியும் ஒன்று.

இதே ரீதியில், இராமன் கிருஷ்ணன் போன்ற ஆன்மிக ஆளுமைகள் இங்கே இவ்வுலகில் மற்ற மனிதர்களைப் போன்ற உருவத்தில்தான் இருந்திருப்பார்கள். ஆனால் தியானத்தின் ஆழத்தில் வேறொரு பரிமாணத்திலான உலகில் அவர்களைக் கண்டவர்கள் அவ்வுலகில் அவர்களுக்குரிய நீல நிறமுடையவர்களாகக் கண்டிருக்கக் கூடும். கிருஷ்ணனுக்குமே கூட ஒற்றை நிறம் சொல்லப்படவில்லை. சில சமயம் நீலம், சில சமயம் பச்சை, சில சமயம் கறுப்பு. இந்நிறங்களின் கலவையும் கூட அவனுக்கு உரியது. ஒருவர் தன் ஆழ்நிலை தியானத்தில் கிருஷ்ணனை மஞ்சள் நிறத்தவனாகவோ ரோஸ் நிறத்தவனாகவோ கண்டதாக அறிவித்தால் இந்து மதம் அவரின் கூற்றை நிராகரிக்காது. அதற்கான சாத்தியக்கூறு உண்டுதான் என்று ஏற்கவே செய்யும்!

இதே கோணத்தில் சிந்தித்துச் செல்லும்போது, பூமிக்கு வரும் வேற்று கிரக வாசிகள் என்று சொல்லப்படுபவர்கள் (சூரிய பகவான் குந்தி தேவியிடம் வந்தது) அவ்வாறு நாம் தியானத்தின் வழி (சில நேரங்களில் நோய்ப்பட்ட நிலையிலான மனப்பிசகு, போதையில் ஏற்படும் மனப்பிசகு – altered states of mind –களில்) எட்டும் அக உலகங்களில் இருந்து இவ்வுலகிற்கு வந்தவர்களாய் இருக்கக்கூடும். சூஃபித்துவத்தில் திரையுலகம் என்று பேசப்படும் வானவர் உலகத்தில் (ஆலமுல் மலக்கூத்) இருந்து இவ்வுலகில் வானவர்கள் தோன்றுவதுண்டு. அப்படி அவர்கள் வரும்போது இவ்வுலகிற்குரிய தோற்றம் கொண்டோ அவர்களின் உலகிற்கு உரிய தோற்றத்திலோ வருவார்கள். நபிமார்களின் முன் ஆஜராகும் ஜிப்ரயீல் இவ்வுலக மனித வடிவத்தில் வந்து சென்றுள்ளார்கள். ஏசுவின் அன்னையான மரியம் (அலை) அவர்களின் முன் ஓர் இளைஞனாகத் தோன்றினார்கள்.

இன்று அறிவியலில் parallel universes என்று ஒரு கோட்பாடு பேசப்படுவதும் கவனத்திற்குரியது. இந்த உலகம் மட்டும்தான் இருக்கிறது என்று சொல்வது மூடநம்பிக்கை. இதே கணத்தில் வேறு பரிமாணங்களில் வேறு பல உலகங்கள் இருக்கின்றன என்று சொல்ல இடமுள்ளது என்று விஞ்ஞானிகள் சிந்திக்கின்றனர். அவர்கள் அறிவியல் பேசுவதெல்லாம் ஏதோ சித்தர்கள் பேசுவது போல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது!

யாளியை இப்படியான ஓர் விலங்காகக் காணலாம். அதாவது யாளி இந்த பூமிக்கு உரிய விலங்கல்ல. அது வேறு பரிமாணத்தில் உள்ள உலகின் விலங்கு. அது இந்த உலகுக்கு அவ்வப்போது வந்து சென்றிருக்கக் கூடும். அதனை ஞானியர்கள் தம் தியான நிலைகளில் அவ்வுலகின் பரிமாணத்திற்கான திறப்பின் மூலம் அணுகிக் கண்டிருக்கவும் கூடும்.

இவ்வாறு நான் இந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்த போது என் மனத்தில் இந்த இலக்கணங்களின் படியான வேறொரு விலங்கு வந்து நின்றது. அவ்விலங்கிற்குச் சிறகுகள் உண்டு. அதிவேகமாகச் செல்லும் அந்த விலங்கு நபிகள் நாயகத்தைச் சுமந்து இரவுப் பயணத்தில் மக்காவிலிருந்து பறந்து சென்று பாலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸ் என்னும் இடத்தில் இறக்கிவிட்டது. அவ்விலங்கு இந்த உலகைச் சேர்ந்தது இல்லை. வேறு உலகிலிருந்து அந்த இரவில் இவ்வுலகிற்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பெயர் ’புராக்’. வேறொரு தருணத்தில் புராக் பற்றிப் பேசுவோம்.

4 கவிதைகள்



களிறு

நைந்து பிரி விடும்
வார்த்தைத் தாம்பு
கொண்டு வருகிறாய்

கட்டிப் போட
இதுதானா கிடைத்ததுனக்கு?

உன்மத்தம் கொண்டு
ஊன்காடு மேயும்
ஜென்மத்தின் களிறு

பிளிறற் பேரோசையில்
மூழ்கி மறையும்
உன் மந்திர முணுமுணுப்பு

a
  


உயிர்ப்பு

கிளையமர் பறவையினும்
சிறகடிக்கும் பறவைதான்
அதிக உயிராமோ?

கூழாங்கல் என்பது
அமர்ந்திருக்கும் பறவை

a



மழைச் சுடர்

மழை பெய்தது
மண்வாசம் கமழ்ந்தது
மனம்
மௌனம் ஆனது

உள்ளுக்குள்
சட்டென்று விழித்துக்கொண்டு
நிறைந்திருந்தது
இக்கவித்துவத்தை
எந்த மொழியிலும்
கவிதை ஆக்கலாகாது
என்னும் பிரக்ஞை

a



வரைதல்

வட்டம் வரைகிறேன்
சதுரமாகின்றது

சதுரமெனில்
வட்டம் அல்லது
வேறெதுவும்

முக்கோணம்
பல கோணமாகும்

பறவையை நினைப்பேன்
புல்லாகும்

விருட்சத்தைக் கற்பனிப்பேன்
விரலின் அசைவில்
சிலந்தியின் வலை
விரிந்து வரும்

வைத்த புள்ளி
கோடு கொள்ளும்

நீளும் கோடு
நிற்குமொரு புள்ளியாய்

இப்படியாய்
நான் வரைய நாடும் எதுவும்
நாடியபடி வருவதில்லை என்பதில்
வரைந்து கொண்டே இருக்கிறேன்
என்றபோதும்
எதையுமே வரைந்ததில்லை நான்.

a