ஒன்னேகால்
மணியிருக்கும். வானம் சட்டென்று இருட்டிக்கொண்டு வந்தது. உலகம் அழியப் போகிறது, இன்னும்
நான்கு நாட்கள்தான் இருக்கிறது என்று பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள். அதன் அறிகுறிதான்
இது என்றார் எங்கள் டிபார்ட்மெண்ட்டின் உதவியாளர். “உலகம் அழியப்போவுதுன்னு சொல்றாங்களே
அது பத்தி உங்க கருத்து என்ன சார்?” என்றார். ”உலகமே அழியும்போது நாம உக்காந்து கருத்துச்
சொல்லிக்கிட்டிருக்க முடியுமா? வீட்டுக்குப் போய் ஜாலியா இருங்க” என்று சொல்லிவிட்டு
மழை கிழை வருவதற்குள் வீடு போய் சேர்வோம் என்று ஓடி வந்துவிட்டேன்.
ஆவின்
பால் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது ஹாலிவுட் டைப் கற்பனை ஒன்று வந்தது. அதாவது
திருச்சிக்குள் பெரிய சுனாமி ஒன்று வந்து மன்னார்புரம் பேம்பாலத்தைப் புரட்டியபடி அடியேனின்
வீட்டை நோக்கி வருகிறது. செ, என்ன இது, இந்த மாயன் காலெண்டர் செய்யும் மாய வலையில்
நாமும் சிக்கிக்கொண்டோமா என்று நினைத்துக்கொண்டு கற்பனையை உதறினேன். ஜாமியாவின்
2013-ஆம் ஆண்டிற்கான காலெண்டர் முப்பத்தைந்து ரூபாய் என்று விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது.
நான் இன்னும் வாங்கவில்லை.
வகுப்பில்
மாணவர்கள் கேட்டார்கள் ”உலகம் அழியுமா சார்?” சீரியஸான கேள்வியெல்லாம் இல்லை. வகுப்பிலே ஓப்பி அடிக்க இது ஒரு சாக்கு. “என்னமோ
தெரியலப்பா. எனக்கெல்லாம் கல்யாணமாகி இரண்டு பிள்ளைங்க பெத்துட்டேன்” என்று சொல்லி
வெறுப்பேற்றித்தான் பேச்சை ஆரம்பித்தேன். சீரியஸ் லெக்ச்சர் அல்ல. ஆனால் வித்தியாசமாக
ஏதாவது சொல்வேன் என்பது அவர்களுக்குத் தெரியும். “இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள முன்னறிவிப்புக்களின்படிப்
பார்த்தால் அதற்குள் உலகம் அழியாது தம்பி. இன்னும் நிறைய நடக்க வேண்டியிருக்கிறது.
ஒருவகையில் பாவங்கள் அதிகரிப்பதும் உலக அழிவுக்குக் காரணம். சொல்லப்பட்டுள்ள காரணங்கள்
அனைத்தும் நிறைவேறாமல் உலகம் அழியாது. உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம். ஏழு பெண்கள்
நிர்வாணமாக ஒரு ஆணைத் துரத்திக்கொண்டு ஓடுவார்கள். அவன் பதறியபடித் தன் கற்பைக் காப்பாற்றிக்
கொள்வதற்காக ஓடிக்கொண்டிருப்பான். இதுமாதிரி நீங்கள் யாராவது சத்திரம் பஸ்-ஸ்டாண்ட்
பக்கமோ அல்லது டோல்கேட் பக்கமோ பார்த்திருக்கிறீர்களா? அப்படியொரு நிலை இன்னும் பூமியில்
வரவில்லை. வருவதற்கான அறிகுறிகள் வேண்டுமானால் ஆங்காங்கே தோன்றிக் கொண்டிருக்கலாம்.
அப்படி நடக்காத வரை உலகம் அழியாது”
வண்டியைக்
கிளப்பிக்கொண்டிருந்த போதுகூட ஒருவன் இதே கேள்வியை முன் வைத்தான்: “21-ஆம் தேதி உலகம்
அழியுதாமே சார்?”
“தம்பி
நான் அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். 22-ஆம் தேதி அதைப்பத்திப் பேசிக்கலாம்.
வர்ட்டா” என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனேன்.
உலகம்
அப்படி உண்மையாகவே அழியும் என்று சொன்னால் ஒருவகையில் அது நமக்கெல்லாம் பெரிய கொடுப்பினை
அல்லவா? இந்தப் பூமி தோன்றிய ஞான்று நாம் இங்கே இருக்கவில்லை. ஆனால் அழியும்போதாவது
இங்கே இருந்திருக்கிறோம் என்னும் பெருமைக்கு உரியவர்களாக இருப்போமே! சென்ற முறை பூமியில்
பேரழிவு ஏற்பட்ட போது டைனோசர்களின் இனம் அற்றுப்போனது என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன.
நாம் அப்படி அற்றுப் போவோமோ?
வகுப்பிற்கு
ஒரு சுற்றறிக்கை வந்தது. உலகம் அழியப்போவதை ஒட்டி மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கிறார்களா
என்ற நினைப்புடன் வாங்கிப் பார்த்தால் இது வேறு விஷயமாக இருந்தது. இரண்டு நாட்கள் கல்லூரியில்
திரைப்படம் காட்டப் போகிறார்கள் என்று போட்டிருந்தது. படத்தின் பெயர் “கர்மவீரர் காமராஜர்”
என்றிருந்தது. ஞானராஜசேகரன் இ.ஆ.ப இயக்கிய படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு
மாணவனும் இதற்காகப் பத்து ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமாம். க்ளாஸ் லீடர் என்று நேந்துவிடப்பட்டுள்ள
ஒரு மாணவன் ரோல் நம்பர் லிஸ்ட்டை வைத்துக்கொண்டு ரயில்வே நடைப்பாதை இரவலன் போல் கெஞ்சிக்
கொண்டிருந்தான். ஒரு பயலும் தருவதாகத் தெரியவில்லை. “கும்கி போட்டால் நல்லாயிருக்கும்”
என்று ஒரு மாணவக் கண்மணி கருத்துக் கூறியது. எப்படி இருக்கிறது பாருங்கள்.
சில தினங்களுக்கு
முன் பாரதியாரின் பிறந்த நாள் வந்துபோனது. “பாரதி” என்ற திரைப்படம் போட்டிருக்கலாம்.
ஏன் செய்யவில்லை என்று எண்ணினேன். அந்தப் படமும் டைரக்டட் பை ஞானராஜசேகரன் இ.ஆ.ப-தான்.
அவரேதான் பெரியாரின் சரிதத்தையும் திரைக்காவியமாக எடுத்தார். சாயாஜி ஷிண்டேவின் அநாயசமான
நடிப்பில் நான் பரவசமானேன். பாரதிப் பிரியரான என் நண்பர் ஒருவருக்கோ மிகுந்த எரிச்சல்.
“இந்த ஆள் பாரதிக்குப் பொருந்தவே இல்லை. அச்சு அசலா பாரதிய ஒரு சைக்கோ மாதிரி ஆக்கிட்டான்”
என்று பொருமிக் கொண்டிருந்தார். (நான் சிந்து நதியின் மிசை நிலவினிலே வரும் சிவாஜி
கணேசனை நினைத்துக் கொண்டேன். கண்களை உருட்டுவார் பாருங்கள். சாயாஜி ஷிண்டேவெல்லாம்
பிச்சை வாங்க வேண்டும்!) ஆனால் சாயாஜி ஷிண்டேவின் உடல்மொழி பாரதிக்குப் பொருந்தவே இல்லை
என்பது உண்மைதான். அவருக்கு கஸ்ரத் ஏறிய ஜிம் பாடி. பாரதிக்கோ அபின் அடித்துத் தேய்ந்த
பூஞ்சை உடல். எப்படிப் பொருந்தும்? அந்தப் படத்தைப் பார்த்த பிறகு வேறு சில படங்களில்
சாயாஜி ஷிண்டே வில்லனாக வருவதைப் பார்த்தபோதெல்லாம் பாரதியாரே வில்லனாக வருகிறார் என்ற
பிரம்மைக்கு ஆளானேன்.
பெரியாராக
சத்யராஜே ஆத்ம திருப்தியோடு நடித்துவிட்டார். பொருந்தவும் செய்தது. மணியம்மையாகக் குஷ்பூவும்
நல்ல பொருத்தம். நாகம்மையாராக யார் நடித்தார் என்று நினைவில்லை. ஆக மூன்று தலைவர்களின்
சரிதையைப் படமாக்கியிருக்கிறார் ஞானராஜசேகரன் இ.ஆ.ப.
எனக்கென்னவோ
’மோக முள்’-தான் உருப்படியாக எடுத்தார் என்று பட்டது. ரங்கண்ணாவாக நெடுமுடி வேணுவின்
தோற்றம் அப்படியே மனத்தில் பதிந்து போனது. ஆனால் பாபுவும் குறிப்பாக யமுனாவும் சோபிக்கவில்லை
என்று பட்டது. சௌராஷ்டிராப் பெண்ணின் கேரக்டர் சரியாக வரவேண்டும் என்று அர்ச்சனா ஜோகேல்கரைப்
போட்டிருந்தார்கள் போலும். ஆனால் யமுனா கேரக்டருக்கு இன்னும் வலுவான நடிப்புத் தேவை
என்று பட்டது. “சோகை புடிச்சாப்ல இருக்கிறாள்” என்று அலுத்துக்கொண்டார் மேற்படி நண்பர்.
”மோக முள்” என்னும் கிளாஸ்ஸிக் நாவலில் தி.ஜானகிராமன் அந்தக் கதாபாத்திரத்தை ஒரு தேவதையாகவா
சித்தரித்திருக்கிறார்? பாபுவின் பார்வையில்தான் அவள் அப்படித் தெரிகிறாள். அவனுடைய
உளவியல் சிக்கலே அதில்தான் ஆரம்பமாகிறது. நாமும் பாபுஜீக்களாக இருந்தால் எப்படி? யமுனா
முதிர்கன்னியாகி முன்கையில் நரம்பு நெளியும் முப்பத்தைந்து வயதுப் பெண். சோகை தட்டியது
போன்ற தேகம் சரிதான்.
கல்விக்
கண் திறந்த காமராசரின் படத்திற்குப் பத்து ரூபாய் தருவதற்கு யாரும் தயாராக இல்லை.
“கேட்டோமா சார்?” என்றான் ஒரு மாணவன். முன்னோர்கள் மூத்தோர்கள் மீது இளம் தலைமுறைக்கு
மதிப்பை உண்டாக்க அரசின் சார்பிலான பிரயத்தனம் போலும் இது. சினிமாவில் காட்டினால் போதும்,
இளம் தலைமுறையின் மனத்தில் வரலாறுகள் பதிந்துவிடும் என்று நினைக்கிறார்கள் போலும்.
எனக்குப் பெரிய அவநம்பிக்கைதான் தோன்றுகிறது. முன்பு ஒருமுறை தூர்தர்ஷனிலோ அதனை ஒத்த
ஏதோவொரு சேனலிலோ காமராஜர் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்ததை சில நிமிடங்கள் மட்டும் பார்த்தேன்.
சத்துணவுத் திட்டம் அவரின் மனத்தில் உருவாகும் காட்சி அது. நெகிழ்ந்து கண்களில் கோர்த்துக்
கொண்டது எனக்கு. ஆனால் இதை உணர்வதற்கு வரலாற்றுப் பின்னணி அறிவும் சமூகப் பிரக்ஞையும்
கொண்ட மனநிலை தேவை. இன்றைய மாணவப் பட்டாளத்திடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா
என்பது பெருத்த சந்தேகம்தான். அவர்களுக்கு இது போன்ற காட்சிகள் நிச்சயமாக அலுப்பையே
உண்டாக்கிக் கொண்டிருக்கும். கும்கியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு டாக்குமெண்ட்ரி
தரத்திலான திரைப்படத்தைக் காட்டினால் அதை அவர்கள் எப்படி வரவேற்பார்கள்? நிச்சயமாக
கர்மவீரர் படம் போட்டதுமே கல்லூரி அரங்கில் விசில்களின் சத்தம் தூள் பறக்கும் என்று
நினைக்கிறேன். ரஜினிகாந்த் படத்திற்கோ தளபதி தல இத்தியாதிகளின் படத்தில் உள்ள ஓப்பனிங்
சீனிலோ இருப்பதைப் போல் பத்து மடங்கு விசில்கள் கிழிந்தாலும் ஆச்சரியமில்லை. அதை வைத்து
“மாணவர்கள் மத்தியில் காமராஜர் படத்திற்கு அமோக வரவேற்பு. சூப்பர் ஸ்டாரை விஞ்சினார்
கர்மவீரர்” என்று பத்திரிகைச் செய்தி வந்தாலும் வரக்கூடும். ஆனால் அந்த விசில்களின்
உண்மையான பொருள் உங்களுக்குத் தெரிந்ததுதான். மேடையில் சிலர் துரு பிடித்த ப்ளேடு போட்டுக்
கொண்டிருந்தால் பலத்த கரகோஷம் எழுந்து அடங்கவே அடங்காமல் ஒலிக்குமே, அதேதான்!
ஞானராஜசேகரன்
அவருக்குக் கிடைக்கும் லோ பட்ஜெட்டை வைத்து முடிந்தவரை நன்றாக எடுத்தப் படங்கள்தான்
பாரதி, பெரியார் மற்றும் காமராஜர். தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைத் திரைப்படமாக எடுப்பதில்
அவர் எக்ஸ்பெர்ட் ஆகிவிட்டபடியால் இன்னும் யார் யாரெல்லாம் தலைவர்கள் இருக்கிறார்களோ
அவர்களின் சரிதங்களை எல்லாம் திரைப்படங்களாக இயக்க அரசு சார்பில் ஒரு பட்ஜெட் ஒதுக்கி
அவரிடம் ப்ராஜக்டுகளை ஒப்படைக்கலாம். அப்படங்களைத் தமிழகமெங்கும் கல்லூரிகளில் (பொறியியல்
மற்றும் மருத்துவக் கல்லூரிகள் உட்பட) இலவசமாக (அல்லது பத்து ரூபாய் டிக்கெட் வைத்து)
ரிலீஸ் செய்யலாம். (கமல் என்னவோ விஸ்வரூபத்தை டிடிஹெச்சில் ரிலீச் செய்கிறாராமே, அதைவிட
இது அதிரடிப் புரட்சியாக இருக்கும்).
ஆனால்
இயக்குநர் இ.ஆ.ப அவர்களுக்கு ஒதுக்கித் தரப்படும் பட்ஜெட் பாக்கெட் மணி போல் இருக்கக்கூடாது.
அட்லீஸ்ட் கும்கி படத்துக்கான பட்ஜெட்டாகவாவது இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான்
தேர்ந்த கலைஞர்களையும் டெக்னீஷியன்களையும் பணியாற்ற வைத்து கலக்கலாக எடுத்து மாணவ சமுதாயம்
விரும்பும் நவீன தரத்தில் கொடுக்க முடியும். மனோகரா பராசக்தி பாலும் பழமும் காலமெல்லாம்
மலையேறிவிட்டது என்பதை உணரவேண்டும். இப்போது சவுண்ட் மிக்ஸிங்க் சினிமாட்டோகிராஃபி
என்று எல்லாவற்றையும் ஐந்து வயதுச் சிறார்கள்கூட அவதானிக்கிறார்கள். டொக்கு விழுந்த
தொழில்நுட்பத்தை நிராகரித்து விடுவார்கள். செலவு செய்வதிலும் ஒரு இண்டெல்லிஜன்ஸ் இருக்க
வேண்டும். தசாவதாரம் மேக்கம் மாதிரியான கோமாளித்தனங்கள் எனில் ஹாலிவுட் லேபிளையே காட்டினாலும்
எள்ளி நகையாடி விடுவார்கள்.
இதையெல்லாம்
கருத்தில் கொண்டு படமெடுக்க வேண்டும். அப்போதும்கூட
தலைவர்களின் சரித்திரத்தை எல்லாம் பார்ப்பார்களா என்று கியாரண்டி கொடுக்க முடியாது.
தலைவர்களின் சரிதையெல்லாம் மறுவாசிப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்
நாம் வாழ்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. யாராக இருந்தாலும் சரி, இன்றைய அரசியல்
தலைவர்களின் ஸ்டண்ட்டுகளைப் பார்த்துப் பார்த்துப் பழைய தலைவர்களையும் அப்படித்தான்
நினைக்கிறார்கள். காந்திஜி தன் பேத்திகளுடன் நடாத்திய சத்திய சோதனைகள் அவர்களுக்குத்
தெரிந்திருக்கிறது. நேருஜிக்கு மிஸஸ் மவுண்ட்பேட்டனுடன் தொடர்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறதே?
என்று கேள்வி எழுப்புகிறார்கள். இன்றைய சாதீய அமைப்புக்கள் தலைவர்களின் ஐக்கான்களை
உரிமை கொண்டாடுவதால் ரிவர்சல் எஃப்பெக்டாக தலைவர்களிடம் சாதீய நோக்கங்கள் இருந்தது
பற்றி அலசுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி எந்தப் படமும் தலைவர்களை ஓர் ஐடியல் இமேஜாக
மாணவர்களிடம் முன்னிறுத்த முடியாத சூழல் உள்ளது.
இது ஒருபுறமிருக்க
திரைப்படங்களே சில ஐடியல் இமேஜுகளைத் உடைத்துவிடும் என்பதும் நடக்கலாம். ”பாரதி” திரைப்படம்
பார்ப்பதற்கு முன்பு வரை என் சகதர்மினிக்கு அவர் மீது மகாகவி என்னும் மதிப்பாவது இருந்தது.
தேவயானியின் நடிப்புத்திறன் செய்த விளைவு – அதில் அவர் எப்போது பார்த்தாலும் கண்ணீரும்
கம்பளையுமாக் புலம்புகிறாரா, ஓரிடத்தில் பாரதி அவரை (தேவயானியை அல்ல செல்லம்மாவை.)
ஓங்கி அறைகிறாரா, அவ்வளவுதான், அதுமுதல் பாரதி என்றாலே என்ன ஒரு மட்டமான ஹஸ்பெண்ட்
என்றுதான் சகதர்மினி நினைக்கிறாள். இது இப்படி இருக்க, நம் சரித்திரப் புரட்டுகளும்
திரிபுகளும் வேறு சரித்திரப் புகழ் பெற்றவையாக இருக்கின்றன. எனவே திரைப்பிரதி மீது
ஆழ்ந்த அவநம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது. பாரதியைக்கூட அவனின் பலவீனங்களுடன் காட்டவில்லை.
“பாஸ்வெல் ஆஃப் பாரதி” என்று போற்றப்படுபவர் வ.ராமசுவாமி. அதாவது, பாரதியாரின் வாழ்வை
முதன்முதலில் நூற்பிரதி ஆக்கியவர். அதில் அவர் கூறும் சில தகவல்களைப் படமாக்கினால்
போதும் – பாரதி அபின் வாங்கி வரச் சொல்லும் காட்சி போல் – பாரதியின் இமேஜ் தூள் தூளாகிவிடும்.
ஆனால் இதையெல்லாம் தாண்டித்தான் நான் பாரதியை மகாகவி என்று புரிந்து கொண்டிருப்பது.
அது போல் வரவேண்டும். ஆனால் மாணவக் கும்பலிடம் அது சாத்தியமில்லை. உதிரியாக சில மாணவர்கள்
அத்தகைய புரிதலுக்கு வருவது மட்டுமே நிகழலாம்.
தொழில்நுட்பமும்
தரமும் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கதையை Bose:
The Forgotten Hero என்று இந்தியில் எடுத்தார்கள். அதற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். மங்கள்
பாண்டேவின் கதையைப் படமாக்கினார்கள். அதற்கும் இசை ஏ.ஆர்.ஆர்தான். ஆனால் படங்கள் இளம்
தலைமுறைக்கு எந்த அளவு ரீச் ஆனது? ஷ்யாம் பெனகலின் “The Making of the Mahatma” எந்த
அளவுக்கு ரீச் ஆனது? அம்பேத்கராகவும் பழஸ்ஸி ராஜாவாகவும் மம்மூட்டி நடித்த படங்கள்
எந்த அளவுக்கு வெற்றி அடைந்தன? மெகா படம் அளவிற்குத் தொழில்நுட்பம் இருந்தாலும்கூட
தலைவர்களின் தியாக வரலாறுகளை எல்லாம் பார்க்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்றுதான்
சொல்லவேண்டும்.
அதற்கென்ன
செய்வது? குட்டையும் குண்டுமான மகாசக்கரவர்த்தி அக்பராக நெடுநெடுவென்றிருக்கும் ஹ்ருத்திக்
ரோஷனை நடிக்க வைத்தார்களே அது போல் மாஸ் ஹீரோவை வைத்துத்தான் படமெடுக்க வேண்டும் போலும்.
நினைத்துக் கொண்டேன், இன்னும் மிச்சமிருக்கும் தலைவர்கள் யார் யார் என்று. அறிஞர் அண்ணா
நியாபகம் வந்தார். யாரை நடிக்க வைப்பது? இதிலென்ன சந்தேகம், கட்டாயமாக இளைய தளபதி விஜய்தான்.
தீபாவளி ரிலீஸ் என்று சொல்லிவிட்டால் போதும். “தென்னாட்டு பெர்னாட்ஷாவாக நடித்த எங்கள்
பன்னாட்டு பெர்னாட்ஷாவே” என்று அறுபதடிக்கு பேனர் கட்டுவார்கள். படம் சூப்பர் டூப்பர்
ஹிட். வாழும் காலத்திலேயே தானைத் தலைவருக்கும் ஒரு திரைக்காவியம், அவருடைய வசனத்திலேயே,
எடுத்துவிடலாம். அவரையே காட்டி விடலாம். இளமைக்காலக் கலைஞராக ஒருவர் நடிக்க வேண்டும்.
இதற்கும் இளைய தளபதியையே போட்டுவிடலாம். பின்னால் பொதுவாழ்வில் எண்ட்ரி கொடுக்க இப்படங்கள்
செமத்தியாகக் கைகொடுக்கும் என்னும் சூட்சமத்தை ‘அப்பா’வின் காதில் ஊதிவிட்டால் ஆச்சு!
இதில் காமராசர் படத்தை இயக்கியது ராஜசேகரன் இல்லை...ஆனா அவரு இந்த மாதிரி படங்களை மோசமா எடுக்கிறதில்லை..என்பது உண்மை...நம்ம்ம்பி கொடுக்கலாம் காசை...
ReplyDeleteமாஸ் ஹீரோவைத்துதான் படம் எடுக்கவேண்டும் படம் எப்படியெல்லாம் மாறும் என்றும் யோசிக்கணும். பாரதியைப் பார்த்து அழுதவர்களும் இருக்கிறார்கள்.என்ன செய்ய நமக்கு மஹாகவிதான் வேண்டும்.அபினை விட்டுடலாம்.
ReplyDeleteபெரியார் படம் உண்மையிலியே சிறந்த படம்.
இன்னும் மிச்சமிருக்கும் தலைவர்கள் யார் யார் என்று. அறிஞர் அண்ணா நியாபகம் வந்தார். யாரை நடிக்க வைப்பது? இதிலென்ன சந்தேகம், கட்டாயமாக இளைய தளபதி விஜய்தான்//
ReplyDeleteநல்லாதாய்யா இருக்கு ;-) ராணி அம்மையார் கேரக்டருக்கு காஜலா சமந்தாவா:-)))
பாரதி ஓர் பார்ப்பனக் கவிஞன் என்ற காலக்கட்டத்தில் பட்டி தொட்டிகளில் எல்லாம் பாரதியைப் பரப்பியவரும், தமிழ்நாடு என்று பெயர் வைத்திட சட்டமன்றத்தில் முதற்குரல் எழுப்பியவரும், கம்பரசத்தைப் பரப்பியவர்களுக்கு மத்தியில் கம்பரின் இலக்கியச் செழுமைக்குக் குரல் கொடுத்தவரும், இன்னும் பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரருமான ஜீவாவை ஏன் விட்டு விட்டீர்கள், ஐயா ?
ReplyDelete