Tuesday, March 25, 2014

அவனின் அழகிய பெயரால்...


                பஞ்சாப் தந்த சூஃபி ஞானிகளுள் ஒருவரான ஷாஹ் வாரிஸ் (ரஹ்) எழுதிய காவியம் “ஹீர்-ராஞ்சா”. பஞ்சாபி மொழியில் அமைந்த லைலா-மஜ்னூன் போன்றது. லைலாவின் மீதான காதலில் தன்னை இழந்துவிட்ட மஜ்னூன் போல் ராஞ்சாவின் மீது கொள்ளும் காதலில் தன்னை இழக்கிறான் ஹீர்.

      ஆரம்பத்தில் நாட்டுப்புறக் கதையாக வாய்மொழி வடிவில் உலவி வந்த இக்கதை ஷாஹ் வாரிஸ் (ரஹ்) அவர்களின் கைவண்ணத்தில் ஆன்மிகக் குறியீட்டுக் காவியமாக மலர்ந்த பின் அதனை அடியொற்றி சூஃபி ஞானிகள் மெய்ஞ்ஞானக் கருத்துக்களைப் பாடுவது பஞ்சாபி மொழியில் ஒரு மரபாக உருவாகிவிட்டது.

அவ்வகையில் பாபா புல்லே ஷாஹ் (ரஹ்) அவர்கள் எழுதிய ‘ராஞ்சா ராஞ்சா கர்தீ நீ மெய்ன்” என்னும் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன், நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகானின் குரலில் கவ்வாலியாகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் டெக்னோ மெல்லிசையாகவும்.

      நாயக நாயகி பாவிப்பில் எழுதப்பட்ட அந்தக் காதற் காவிய வரிகள் உட்பொருளாக உணர்த்தும் இறைக்காதல் என் இதயத்தில் அலைகள் வீசத் தொடங்கிற்று.

      ”ராஞ்சா ராஞ்சா என்று சொல்லி
ராஞ்சாவாகவே ஆகிவிட்டேன் நான்

இனி என்னை ராஞ்சா என்றே அழையுங்கள்
ஹீர் என்னும் பெயரால் அல்ல

ராஞ்சாவில் நான், என்னில் ராஞ்சா
வேறு சிந்தனை ஏதும் இல்லை

நானில்லை, அவனே இருக்கிறான்    
அவனே அவனுடன் விளையாடுகிறான்
இந்த இதயத்தின் விளையாடல்கள்!”
(பஞ்சாபி மூலம்:
”ராஞ்சா ராஞ்சா கர்தீநீ மெய்ன் ஆப்பே ராஞ்சா ஹோயீ
சத்தோ மெய்னூ தீதோ ராஞ்சா ஹீர் ந ஆக்கோ கோயீ
ராஞ்சே மெய்ன் விச் மெய்ன் ராஞ்சே விச் கைர் ஃகயால் ந கோயீ
மெய்ன் நஹீன் வொ ஆப் ஹே அப்னீ ஆப் கரே தில்ஜூயீ”)
      
இப்பாடலின் கருத்து மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் தமது குருநாதர் ஷம்ஸெ தப்ரீஸ் (ரஹ்) அவர்கள் மீது எழுதிய வரிகளை நினைவூட்டுகின்றன:

      ”நீயாகி விட்டேன் நான் நானாகி விட்டாய் நீ
       உடலாகி விட்டேன் நான் உயிராகி விட்டாய் நீ
       நீ வேறு நான் வேறு என்றெவரும்
இதன்பின் கூறவே இயலாது என்னும்படி!”
(மன் தூ ஷுதம் தூ மன் ஷுதீ
மன் தன் ஷுதம் தூ ஜான் ஷுதீ
தா கஸ் ந கோயத் பஃதஸீன்
மன் தீகரம் தூ தீகரீ)

      பாபா புல்லே ஷாஹ் எழுதிய பாடல் ”மகாமெ ஃபனா” (காதலனில் அழிதல்) என்னும் நிலையின் வெளிப்பாடாக உள்ளது. மௌலானா ரூமி எழுதிய வரிகள் “மகாமெ பகா” (காதலனில் தரிப்படுதல்) என்னும் நிலையின் வெளிப்பாடாக உள்ளது.

      ”ராஞ்சா ராஞ்சா என்று சொல்லி
ராஞ்சாவாகவே ஆகிவிட்டேன் நான்
இனி என்னை ராஞ்சா என்றே அழையுங்கள்
ஹீர் என்னும் பெயரால் அல்ல”
என்று பாபா புல்லே ஷாஹ் எழுதியுள்ள இவ்வரிகள் என்ன ஆன்மிகச் சிந்தனையைச் சொல்கின்றன? இவ்வரிகளை எப்படிப் புரிந்துகொள்வது?

      என் சிந்தனைப் பரப்பில் மஜ்னூனின் நினைவுகள். பாலைப் பாதையில் நடந்து போய்க்கொண்டிருக்கும் அவனை அவனது இயற்பெயர் சொல்லி “கயஸ் கயஸ்” என்று அழைக்கிறார் ஒருவர். அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை. விஷயம் அறிந்த இன்னொருவர் அவனை நோக்கி “லைலா” என்று அழைக்கிறார். சட்டென்று அவன் திரும்பிப் பார்த்து “என்ன?” என்று கேட்கிறான்.

      இந்தக் கதையெல்லாம் சரி, இதில் ஆன்மிகச் சிந்தனை என்ன இருக்கிறது?

      என்னை யாரெல்லாம் கவனித்தார்களோ அவர்களைக் கவர்ந்தவை என் சுயப் பண்புகள் அல்ல, இறைவனின் சுயப் பண்புகளே என்னில் வெளிப்பட்டு அவர்களை என் பக்கம் திரும்ப வைத்தன.

      ”பனியில் நனைந்த மலரைப் போல், துடைத்து வைத்தது போல், எப்போதும் இவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்கிறீர்களே” என்று ஒருவர் இன்னொருவரை வியக்கிறார். எதார்த்தத்தில் நாமோ பிணங்களே (மய்யித்). ஹுவல் ஹய்யுல் கய்யூம் – அவனே நித்திய ஜீவன். வெளிப்பட்டதோ அவனது “ஜீவன்” என்னும் பண்பின் சுடர் (தஜல்லியே சிஃபத்தெ ஹயாத்).

      ”என்ன அற்புதமான விளக்கங்கள்! உங்கள் அறிவு எவ்வளவு ஆழமானது! எத்தனை விசாலமானது!” என்று ஒருவர் இன்னொருவரை வியக்கிறார். எதார்த்தத்தில் நாம் முட்டாள்களே (ஜாஹில்). வெளிப்பட்டதோ அவனின் “அறிவு” என்னும் பண்பின் சுடர் (தஜல்லியே சிஃபத்தெ இல்ம்).

      ”நீங்கள் யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க. நீங்க சரின்னா எந்தத் தடையும் இல்லை. நீங்க இஷ்டம்னு சொன்னாத்தான், இல்லைன்னா இல்ல” என்று ஒருவர் இன்னொருவரிடம் நயந்து சொல்கிறார். உண்மை நிலை என்ன? நாம் அனைவரும் எதார்த்தத்தில் நாட்டமில்லாதவர்களே (முள்திர்). வெளிப்பட்டதோ அவனின் “நாட்டம்” என்னும் பண்பின் சுடர் (தஜல்லியே சிஃபத்தெ இராதத்)

      “பத்து ஆள் சேர்ந்தாலும் இந்தக் கதவை நகர்த்தவே முடியாதேங்க? நீங்க ஒத்த ஆளா நகர்த்திப்புட்டீங்களே! உங்கள மாதிரியான பலசாலி இந்த ஊர்லயே கிடையாதுங்க” என்று ஒருவர் இன்னொருவரைப் புகழ்கிறார். உண்மை நிலை என்ன? எதார்த்தத்தில் படைப்புக்கள் அனைத்தும் சக்தியற்றவையே (ஆஜிஸ்). வெளிப்பட்டதோ அவனது “சக்தி” என்னும் பண்பின் சுடர் (தஜல்லியே சிஃபத்தெ குத்ரத்)

      ”ரொம்பக் கூர்மையான காது ஐயா உங்களுக்கு! அந்தப் பய இருபதடிக்கு அப்பால குசுகுசுன்னு பேசுனத அப்படியே சொல்லிப்புட்டீங்களே!” என்று ஒருவரின் கேள்விப் புலனை வியக்கிறார் இன்னொருவர். எதார்த்தத்தில் நாம் அனைவரும் செவிடர்களே (அஸம்மு). வெளிப்பட்டதோ இறைவனின் “கேள்வி” (கேட்டல்) என்னும் பண்பின் சுடர் (தஜல்லியே சிஃபத்தெ சமாஅத்)

      ”ஒரு பார்வை பார்த்தீர்களே! அடடா என்ன பார்வை அது?” என்று ஒருவர் இன்னொருவரைப் புகழ்கிறார். உண்மையில் இந்தப் புகழ்ச்சி யாருக்கு? நாம் எதார்த்தத்தில் குருடர்களே (அஃமா). கண்ணில் வெளிப்படுவதோ இறைவனின் “பார்வை” என்னும் பண்பின் சுடர் (தஜல்லியே சிஃபத்தெ பஸாரத்).

”மிக அருமையாகப் பேசினீர்கள்! என்ன கணீர் குரல்!” என்றும் ”ஆகா என்ன இனிமையான குரல் வளம் உங்களுக்கு, நீங்க பாடும்போது மனசெல்லாம் உருகிப்போயிடுதுங்க” என்றும் ஒருவரை இன்னொருவர் பாராட்டுகிறார். நாமோ எதார்த்தத்தில் ஊமைகள் (அப்கம்). வெளிப்பட்டதோ அவனது ”பேச்சு” என்னும் பண்பின் சுடர் (தஜல்லியே சிஃபத்தெ கலாம்).

      கவனித்தவர்கள் எல்லாம் உண்மையில் என்னில் வெளிப்படும் அவனின் பண்புகளையே கவனித்தார்கள். என்னில் அவர்கள் கண்டது அவனையே என்பதால் எல்லாப் புகழும் அவனுக்கு மட்டுமே!
      
”சிப்கத்தல்லாஹ்” – ”அல்லாஹ்வின் வண்ணம்” – “மன் அஹ்சனு மினல்லாஹி சிப்கா” – “வண்ணமூட்டுவதில் அல்லாஹ்வினும் பேரழகன் யார்?” (2:138)

      அல்லாஹ்வின் வண்ணங்கள் என்பவை அல்லாஹ்வின் பண்புகளே.

      தஃகல்லகூ பிஅஃக்லாக்கில்லாஹ் – “அல்லாஹ்வின் பண்புகளால் உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்பது நபிமொழி.

      என்னுடைய நிலை என்னவாக இருக்கிறது என்று நான் ஆராய்ந்து பார்க்கிறேன்.

      ”உயிருள்ளவன்” என்று என்னைப் பார்க்கிறார்கள். உண்மையில் இறைவனே உயிருள்ளவன். (ஹுவல் ஹய்யுல் கய்யூம்)

      ”அறிஞன்” என்று என்னைச் சொல்கிறார்கள். உண்மையில் இறைவனே அறிஞன். (ஹுவல் அலீம்)

      ”நாடுபவன்” என்று என்னைக் காண்கிறார்கள். உண்மையில் இறைவனே நாடுபவன் (ஹுவல் முரீத்)

      ”சக்தன்” என்று என்னைப் பார்க்கிறார்கள். உண்மையில் இறைவனே சக்தன் (ஹுவல் காதிர்)

      ”கேட்பவன்” என்று என்னைச் சொல்கிறார்கள். உண்மையில் இறைவனே கேட்பவன் (ஹுவஸ் சமீஉ)

      ”பார்ப்பவன்” என்று என்னைச் சொல்கிறார்கள். உண்மையில் இறைவனே பார்ப்பவன் (ஹுவல் பஸீரு)

      ”பேசுபவன்” என்று என்னைச் சொல்கிறார்கள். உண்மையில் இறைவனே பேசுபவன் (ஹுவல் கலீமு)

     
ஒருவன் ஒரு பொருளைப் பார்த்து “இலையே” என்றும் “கிளையே” என்றும் ”பூவே” என்றும் “காயே” என்றும் “கனியே” “தளிரே” என்றும் “கொப்பே” என்றும் “வேரே” என்றும் “பசுமையே” என்றும் அழைத்தால் என்ன பொருள்? அதை அவன் மரமே என்று அழைக்கவில்லை என்று அர்த்தமாகுமா? அல்லது ஒவ்வொரு முறை அவன் அழைத்ததன் உட்பொருள் அதை அவன் ‘மரமே’ என்று அழைத்தான் என்பதுதான் என்றாகுமா? சிந்தியுங்கள்.

      ஜீவனாக அறிஞனாக நாடுபவனாக சக்தனாக கேட்பவனாக பார்ப்பவனாக பேசுபவனாக எதார்த்தத்தில் இருப்பவன் இறைவன் ஒருவனே.

      எனில், என்னை இப்பண்புகளைக் கொண்டு அழைத்தவர்கள் மொத்தத்தில் என்னை என்னவாக அழைத்தார்கள்? அவனது ஒவ்வொரு பெயரையும் சொல்லி என்னை ஏன் 
அழைத்தார்கள்?

      சிருஷ்டிகளுடன் அவனிருந்து தனது பண்புகளை சிருஷ்டிகளில் வெளிப்படுத்தித் தருகிறான். அவனை அறியாதவர்கள் அந்தப் பண்புகளை சிருஷ்டிகளின் மீதே சாற்றிவிடுகிறார்கள். இந்தத் தவற்றை விட்டும் மக்களைப் பாதுகாக்கும் மெய்ஞ்ஞானத்தைப் புகட்டவே இறைத்தூதர்கள் வந்தார்கள்.

      இறைவனை அறிந்தவர்கள், அவனின் பண்பு தன்னில் வெளிப்படுவதைப் புரிந்துகொண்டவர்கள், அந்தப் பண்புகளின் நிமித்தம் தாம் புகழப்படும்போது அந்தப் புகழை இறைவனின் பக்கமே சாற்றிவிடுவார்கள். தங்கள் மீது சாற்றிக்கொண்டு கர்வம் அடைய மாட்டார்கள். அதே நிலையில்தான் சர்வ சிருஷ்டிகளையும் பார்ப்பார்கள்.

      நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை எத்தனை முறை அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று சொல்லியிருப்பார்கள் என்பதைச் சிந்தியுங்கள்.

      கண்ணாடி தெளிவாக இருக்கும்போது தன்மீது பாயும் ஒளியை அணுவளவும் அது தடுத்து வைத்துக் கொள்வதில்லை. அந்த வேலையை மண்ணாங்கட்டிகள் செய்கின்றன. 

இறைஞானிகள் சிருஷ்டிகளின் பண்புகளை சிருஷ்டிகள் மீதே சாற்றுவார்கள். சிருஷ்டிகளில் வெளிப்படும் இறைப் பண்புகளை இறைவனின் மீதே சாற்றுவார்கள். சிருஷ்டிகளின் பண்புகளை இறைவனுடையதாகவோ இறைவனின் பண்புகளை சிருஷ்டிகளுடையதாகவோ மாற்றிச் சாற்றி இணை கற்பிக்க மாட்டார்கள்.
      
தினம் தினம் வெவ்வேறு வண்ணங்களில் ஆடைகள் அணிந்தாலும் அவற்றை அணிபவன் அந்தகன் என்றால் அவன் அவற்றைக் கண்டு களிக்க முடியுமா? இறைவனை அறியாத அகக் குருடர்களின் நிலை இவ்வாறுதான் இருக்கிறது!

      அகப்பார்வை அருளப் பெற்றவர்களோ தம்மிலேயே தம் இறைவனை அடைந்து ஆனந்த நிலையில் திளைத்திருக்கிறார்கள்!

”உன்னைக் காதலிக்கும் முன்புவரை
வெறும் கோட்டோவியமாய் இருந்தேன்
      நீயே வண்ணங்களாய்
நிரம்பிவிட்டாய் என்னில்!”



கஸல் துளிகள்


மீனுக்குள் விழுந்த
யூனுஸ் நபியைப் போல்
உன்
கண்ணுக்குள் விழுந்தேன்

கரையற்ற கடலின்
மீனான உன் கண்ணில்
காலத்தின் எல்லை வரை
கரையாமல் இருப்பேன்!
*

திரும்பும் திசையெல்லாம்
நிறைந்திருக்கும் முகம்
தென்பட்டது
உன் முகத்தில்

உச்சி முதல் பாதம் வரை
கண்ணாடி ஆகிவிட்டேன்
காதலின் சுகத்தில்!
*

உன் காதலில்
புன்னகைகள் விற்றுக்
கண்ணீர் வாங்கினேன்

ரோஜாக்கள்
மண்ணில் உதிர்கின்றன
பனித்துளிகள்
விண்ணில் எழுகின்றன
*

என்னில்
உன்னைக் காட்டி
உன்னில் நீ
என்னை ஒளித்தபோது...

மறைந்த பொக்கிஷம்
ஆகிவிட்டேன்
*

உன்னைக் காதலிக்கும் முன்புவரை
வெறும் கோட்டோவியமாய் இருந்தேன்

நீயே வண்ணங்களாய்
நிரம்பிவிட்டாய் என்னில்!