Friday, March 13, 2015

என்றார் சூஃபி - part9

36

      புத்தக அறிவு இறைஞானம் ஆகாது என்னும் கருத்தினைச் சுற்றி உரையாடல் அமைந்தது. மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் பிரபலான பைத் ஒன்றினை நண்பர் ஒருவர் கூறினார்:
      ”ஸத் கிதாபோ ஸத் வரக் தர் நார் குன்
     ஸீனா ரா அஸ் நூரெ யார் குல்ஸார் குன்”
இதன் பொருள்: “நூறு நூல்களையும் நூறு தாள்களையும் நெருப்பில் போட்டுவிடு. உன் நெஞ்சத்தை நண்பனின் ஒளியைக் கொண்டு பூஞ்சோலை ஆக்கிவிடு”
(இங்கே ‘நண்பன்’ என்று சுட்டப்படுபவன் இறைவன்).

      இன்னொரு நண்பர் இந்த பைத்தின் வேறொரு பிரதியைச் சொன்னார்:
      ”சப் கிதாபோ சப் வரக் தர் நார் குன்
    ரூயே ஃகுத் ரா ஜானிபே தில்தார் குன்”
இதன் பொருள்: “அனைத்து நூல்களையும் அனைத்துத் தாள்களையும் நெருப்பில் போட்டுவிடு. உன் முகத்தை காதலனின் திசை நோக்கி நிலையாக்கிவிடு”
(இங்கே ‘காதலன்’ என்று சுட்டப்படுபவன் இறைவன்).

அது என்ன, நூல்களும் தாள்களும் என்று சொல்லியிருப்பது?

நூல்கள் என்பவை நீ படித்தது; தாள்கள் என்பவை நீ எழுதியது! இரண்டையுமே நெருப்பில் இட்டு அழித்துவிடு என்று ரூமி (ரஹ்) சொல்கிறார்கள்.

அப்படியானால் ஞானப் பாதையில் செல்லும் ஒருவர் நூல்களைப் படிக்கவே கூடாதா? எதுவுமே எழுதக் கூடாதா? சேர்த்து வைத்திருக்கும் நூல்களையும் ஏடுகளையும் கொளுத்திப் போட்டுவிட வேண்டுமா? இது என்ன அறிவுரை? என்பது போல் தோழர்களின் சிந்தை சற்றே மயங்கியது.

“அன்பர்களே! இந்த வரிகளை நீங்கள் வெளிப்படையாக நேரடியாகப் பொருள் விளங்காதீர்கள். ரூமி (ரஹ்) அவர்கள் சொல்ல வருவதன் உட்பொருளை அறியுங்கள். ஞானப் பாதையில் சென்ற மகான்கள் எத்தனையோ நூல்களை எழுதியிருக்கிறார்கள். அவை அனைத்தும் இறைஞானக் கருவூலங்கள்! நாம் ருசித்துப் பார்க்க வேண்டிய ஞானக் கனிகள்!

மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள் அல்லவா? எப்போது அப்படிச் சொன்னார்கள் தெரியுமா? ஆயிரக்கணக்கில் நூல்களைக் கற்றறிந்த கல்வி மேதையாக இருந்த நிலையில் இதனைச் சொன்னார்கள்! இதையேதான் இன்னொரு சூஃபி மேதையான இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம். புத்தகக் கல்வியின் எல்லையை அவர்கள் அறிந்து கொண்டார்கள். நூலறிவு என்பதைக் கடந்து போய் ஆன்மிக அனுபவ அறிவு பெற வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அறிந்து அதில் செயல்பட்டார்கள்.

ஆனால், ஒரு நூலைக்கூட வாசித்துப் பார்த்திராத ஒருவர் நூல்களெல்லாம் தேவையே இல்லை என்று கூறுவதில் என்ன அர்த்தமிருக்க முடியும்?


சூஃபி மகான் சய்யிதினா அலீமி ஷாஹ் ஆமிரி அவர்கள் ஒரு பிரங்கத்தில் இப்படிச் சொல்லிச் செல்கிறார்கள்: “ஆயிரக்கணக்கான நூற்களை நான் வாசித்துப் பார்த்துவிட்டேன்...” இதன் பிறகும் அவர்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள், புத்தகக் கல்வி என்பது இறைஞானம் ஆகிவிடாது என்று! இது சூஃபிகளுக்கு இறைவன் தந்த அற்புதமான தெளிவு!

அப்படியானால் ரூமி (ரஹ்) அவர்கள் சொல்வதன் பொருள்தான் என்ன?


இதற்கான விடையின் பக்கம் ஓர் இஷாரா (குறிப்பு). இது, சூஃபி மகான் முஷ்தாக்கீ ஷாஹ் அவர்கள் சொன்னது: “நூல்கள் வாசிக்கக் கூடாது என்பதல்ல. ஆனால் வாசிப்பறிவைக் கொண்டு தாக்கம் பெற்று விடாதீர்கள். (don’t get influenced by it!)”

இதைத்தான் மௌலானா ரூமி (ரஹ்) அவர்களும் சொல்கிறார்கள். நூல்கள் என்று அவர்கள் குறிப்பிடுவது நிறைய படிப்பதால் ஏற்படும் அகந்தையை (ego). தாள்கள் என்று அவர்கள் சொல்வது நிறைய எழுதுவதால் ஏற்படும் அகந்தையை. நான் பெரிய படிப்பாளி! நான் பெரிய எழுத்தாளன்! இப்படி உள்ளுக்குள் உருவாகும் தன்முனைப்பை அழிக்கச் சொல்கிறார்கள்.

ஞானப் பாதையில் பயிற்சி பெறாத சராசரி மனிதர்களுக்கு இவ்வாறான அகந்தை உருவாகிவிடுவது இயல்புதான். அதனை ஒழிக்காமல் ஒருவன் ஞானப் பாதையில் செல்ல இயலாது.”

இவ்வாறு பேசிவிட்டு சூஃபி அவர்கள் புன்னகை தவழ எங்களின் முகங்களைப் பார்த்தார்கள். இன்னும் எதுவோ தொக்கி இருக்கிறது என்று எனக்குப் பட்டது.

“நெருப்பில் போட்டுவிடு என்று மௌலானா சொல்கிறார்கள் அல்லவா? அந்த நெருப்பு எது? இறைக் காதல்தான்!” என்றார் சூஃபி!