Saturday, October 30, 2010

உருவெளிக் களங்கள் - 4

'மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான்' என்று சார்ல்ஸ் டார்வின் கூறினார். இந்தப் பரிணாமக் கோட்பாடு உண்மையா பொய்யா என்னும் விவாதங்கள் விஞ்ஞானிகள் மத்தியிலேயே இன்னும் முடிந்தபாடில்லை. மனிதர்களின் முகங்களைப் பார்க்கும்பொது அதில் குரங்கு மட்டுமல்லாது வேறு பல விலங்குகளின் ஜாடைகளும் தெரிவதைக் காணலாம்.



தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலக அருங்காட்சியகத்தில் மன்னர் சரபோஜி திரட்டிய நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வித்தியாசமான மன்னர் அவர். இலக்கியம், மருத்துவம், வரலாறு, சோதிடம் இப்படி என்னென்ன துறைகள் உள்ளதோ அனைத்திலும் பல அரிய நூல்களைத் திரட்டியுள்ளார். ஆங்கிலம், சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, பிரெஞ்சு போன்ற பல மொழிகளின் நூல்கள் அவை. அதில் ஒரு வரைபடம் என் மனதை எப்போதும் கவர்கின்றது. நாய், பன்றி, செம்மறி ஆடு, ஒட்டகம், குதிரை, சிங்கம், குரங்கு, கிளி ஆகியவற்றின் சாயல்கள் உள்ள மனித முகங்களை ஓவியன் ஒருவன் வரைந்திருக்கிறான். அதைப்பார்த்த பின்னர் பல முகங்களை நான் பல்வேறு விலங்குகளின் சாயலில் காண ஆரம்பித்தேன். டைனாசர் சாயலில்கூட சிலர் தென்பட்டார்கள்!





கழுதையின் முகம் மிகவும் சீரியஸான ஒன்று. தத்துவவாதியின் முகத்தைப் போன்றது என்பார் ஓஷோ. தத்துவவாதிகளும் பல நூல்களைத் தங்கள் மண்டைக்குள் சுமப்பவர்கள்தானே? கழுதை பொதி சுமப்பதைப்போல்! ஒரு மனிதன் சோகமாக இருந்தால் 'முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறான்' என்று நாம் கூறுவது உண்டு. ஆங்கிலத்திலும் "He put a long face" என்று கூறுவார்கள். அது கழுதையின் முகத்திற்கு எவ்வளவு நன்றாகப் பொருந்துகிறது. எங்கள் வீட்டருகில் ஒருவர் அப்படிப்பட்ட முகத்துடன் இருக்கிறார். தெருவில் நடந்துசெல்லும் போதெல்லாம் முகத்தைத் தொங்கவிட்டபடி மெதுவாகத்தான் நடந்துசெல்வார், ஒரு கழுதையைப் போல!

இந்த அடிப்படையில், 'சிங்கத்திற்குப் பிறந்த ஒட்டகத்தைப் பூனை ஒன்று திருமணம் செய்து கொண்ட கதை' என்று நான் சொன்னால் அது முன்னாள் உலக அழகியின் கல்யாணக் கதை என்று நீங்கள் ஊகித்துவிடுவீர்கள்!


நான் அவதானித்த வகையில் என்னுடைய கணக்கெடுப்பு தருகின்ற ரிசல்ட் என்னவென்றால் பிற விலங்குகளின் சாயலைவிட குரங்கின் சாயல்தான் மனித முகங்களில் அதிகமாகத் தென்படுகிறது! (இந்தக் கருத்து சார்ல்ஸ் டார்வினின் ஆன்மாவுக்கு ஆறுதலாக இருக்கலாம்.) அதிலும் குறிப்பாக அரசியல், கலை, விஞ்ஞானம், விளையாட்டு  போன்ற துறைகளில் பிரபலமடைந்த பலரின் முகங்கள் குரங்கின் சாயலில்தான் உள்ளன! இது ஏன் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.






உதாரணமாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் முகம் குரங்கின் சாயல் கொண்டிருப்பதைக் காணலாம். ஏதோ எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் தோன்றித் தொலைக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் உலகெங்கும் உள்ள கலா ரசிகர்கள் பலருக்கு இப்படித் தோன்றத்தான் செய்கிறது. புஷ்ஷின் முக பாவனைகள் குரங்கின் முக பாவனைகள் பலவற்றுடன் ஒத்துப்போகின்றன என்பதைக் கண்டுள்ளார்கள்!



புஷ்ஷைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாக வந்துள்ள பாரக் ஒபாமாவிலும் குரங்கின் சாயல் இருப்பதாக முகவியல் அறிவு கூறுகிறது. இதனையும் பலர் தங்கள் மனதில் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.


இப்படிப் பல பேர் டார்வின் தியரிக்கான சிறந்த ஆதாரங்களைப் போல் தோன்றினாலும் என் மனதில் மாணவப் பருவத்திலேயே இந்த வகையில் பதிந்துபோன ஆளுமை வைலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்தான்!



திருவையாற்றில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தியாகராஜர் மகோத்ஸவத்தில் அவருடைய கச்சேரியைக் கேட்டிருக்கிறேன். ஆட்டோகிராப்பும்  வாங்கியிருக்கிறேன். வைலின் படம்போல் கிறுக்கி அதற்குக் கீழே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். தன் கலையில் அசுர சாதனைகள் செய்தவர் என்று அவரைப்பற்றிக் கூறுவார்கள். நான் வைலின் இசையை ரசிப்பது எல்.சுப்பிரமணியம் வாசிக்கும்போதுதான். எல்.ஷங்கர், லால்குடி ஜெயராமன், சந்திரசேகர் மற்றும் வடக்கத்தி இசையில் என்.ராஜம், ஷோபா ஷங்கர் ஆகியோரின் இசையையும் ரசித்துள்ளேன். ஆனால் குன்னக்குடி வைத்தியநாதனை நான் ரசித்தது அவருடைய இசைக்காக அல்ல. அவருடைய முகத்திற்காகத்தான். கள் குடித்த குரங்கின் அத்தனை சேஷ்டைகளும் குணஷ்டைகளும் பொங்கிக் கூத்தாடும் முகம் அது! இன்னும் விசேஷம் என்னவென்றால் அத்தனை சேஷ்டைகளையும் தன் இசையில் அவர் கொண்டுவந்து ரகளை செய்துவிடுவார் என்பதுதான்! இதை ரசிப்பதற்காகவே முதல் வரிசையில் மேடைக்கு அருகில் இடம்பிடித்து அமர்ந்து விடுவோம்.



ஐந்து நாட்கள் நடைபெறும் உத்ஸவத்தில் திருவையாறு மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களின் பாமர மக்கள் திரண்டு வந்து இசை கேட்பது அவருக்கு மட்டும்தான் என்பதைப் பதினைந்து வருஷங்கள் பார்த்திருக்கிறேன். ஜேசுதாசுக்கு வரும் கூட்டத்தைவிட அதிகமாக வருவார்கள்.செவ்வியல் கீர்த்தனைகள் மட்டும் வாசிக்காமல் விளையாட்டு வித்தைகள் காட்டுகிறார் என்னும் விமரிசனம் அவர்மீது எழுந்தது. அதைப் பற்றியெல்லாம் மனுஷன் சட்டை செய்யாமல் பாமர மனம் மகிழும்படி வாசித்துக் கொண்டுதான் இருந்தார். அதற்காகவே உத்ஸவத்தின் கடைசி நாளன்று நள்ளிரவில் இறுதி நிகழ்ச்சியாக வாசிப்பார். ஒரு முறை தொலைக்காட்சியில் அவர் திரைப்பாடல்களை வாசித்ததையும் பார்த்திருக்கிறேன். அவருடைய அந்த முக பாவனைகளை வேறு யாரும் செய்துவிட முடியாது. No one can ape him out!



இப்படிப்பட்ட முக அவதானங்கள் எல்லா நேரத்திலும் வெறும் கிண்டலும் கேலியுமாகத்தான் இருக்கும் என்று கூற முடியாது. சோமாலியா, சூடான் போன்ற ஆப்ரிக்க நாடுகளில் பஞ்சத்தால் வாடி வதங்கித் துவண்டு கிடக்கும் குழந்தைகளைக் காணும்போது தேவாங்குகளைப் போல் இருக்கிறார்கள். அந்தக் காட்சி நெஞ்சைப் பிழிகிறது. ஏனெனில் அந்தத் தோற்றம் கொடிய வறுமையின் விளைவு. அங்கு தாண்டவமாடும் வறுமை சில நாடுகளின் அரசியல் திமிரின் விளைவு. ஒரு சில மனங்களில் ஏறியுள்ள அதிகாரக் கொழுப்பின் காரணமாகத்தான் இந்த நாடுகளின் பிள்ளைகள் எலும்பும் தோலுமாக இருக்கிறார்கள். சில நாடுகள் கடல்களில் கொண்டுபோய்க் கொட்டும் உபரி தானியங்களும் பாலும் இவர்களுக்கு வழங்கப்பட்டால் பூமியின் பரப்பில் இப்படிப்பட்ட உருவெளிக் களங்கள் இருக்காது!

(தொடரும்...)

Thursday, October 28, 2010

உருவெளிக் களங்கள் - 3

ஸ்ரீ அரவிந்தர், பரமஹம்ச யோகானந்தா போன்றவர்கள் நீளமான கூந்தல் வளர்த்து அதை நேர்வகிடு எடுத்துத் தலையின் இரண்டு பக்கமும் வழிய விட்டிருப்பார்கள். அது முகத்திற்கு ஒரு சமச்சீர் தன்மையை (SYMMETRY )அளிக்கிறது. சமச்சீர் தன்மை கொண்ட சிம்மெற்றி முகங்கள்தான் மனங்களை அதிகமாகக் கவர்கின்றன என்பது உளவியல் ஆய்வுகளால் நிரூபிக்கப் பட்டுள்ளது.

மக்களின் மனங்களைக் கவர்ந்த ஆளுமைகளின் முகங்களை ஆராய்ந்தபோது அவை சராசரி முகங்களைவிட அதிகமான சமச்சீர்த்தன்மை கொண்டவையாக இருந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் செயற்கையாக அந்த அளவு சமச்சீர்மை கொண்ட முகத்தை வரைந்தால், பாதி முகத்தை வரைந்து அதைக் கண்ணாடியில் பிரதிபலித்துச் சமமான மறுபாதியை ஏற்படுத்திப் பார்த்தால் அது காணச் சகிக்கமுடியாததாக இருப்பதையும் கண்டறிந்தார்கள். வேண்டுமானால் உங்கள் புகைப்படம் ஒன்றைப் பாதியாக வெட்டி அதைக் கண்ணாடியில் 'பெர்பெண்டிகுளர்'-ஆக வைத்துப் பாருங்கள்.



ஒரு வயது நிரம்பிய குழந்தைகளின் முன் இரண்டு திரைகளை வைத்து அதில் அக்குழந்தையின் தாயின் முகத்தை அரிதாரம் இன்றி ஒரு திரையிலும், அரிதாரம் பூசி மெருகேற்றி அதன்மூலம் கொஞ்சம் கூடுதலான சமச்சீர்மை தந்து மறு திரையிலும் காட்டினார்கள். குழந்தைகள் தங்கள் தாயின் அரிதாரமிட்ட முகத்தைத்தான் ரசித்தார்கள்! அடுத்த கட்ட சோதனையாக குழந்தையின் தாயின் முகத்தை ஒரு திரையிலும், நடிகை 'சிண்டி கிராபோர்ட்'-ன் முகத்தை மறு திரையிலும் காட்டினார்கள். குழந்தை அந்த நடிகையின் முகத்தைத்தான் ரசித்தது! உலக அழகி, உலக அழகன் போன்ற போட்டிகளில் முகத்தைமட்டுமல்ல, உடலையே சமச்சீர்மை கொண்டதாக உருவாக்கிக் காட்டவேண்டிய நியதியும் உள்ளது!  



சமய வரலாற்று ஓவியங்களில் பெண்மையின் மென்மையும் ஆண்மையின் வன்மையும் கலந்த சிம்மெற்றி முகங்களை அதிகமாகக் காணலாம். நீளமான முடியை நடுவகிடு எடுத்து இருபுறமும் வழியவிட்டவராகவே ஏசுநாதர் வரையப்படுகிறார். நபிகள் நாயகமும் அவ்வாறு தலை சீவிக்கொள்வார்கள் என்று ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

ஏசுநாதரின் இந்த உருவத் தன்மை கலீல் ஜிப்ரானை வெகு ஆழமாகப் பாதித்திருக்க வேண்டும். "JESUS THE SON OF MAN " என்னும் நூல் அவர் எந்த அளவு ஏசுவின் ஆளுமையில் கரைந்து போயிருந்தார் என்பதைக் காட்டும். அவருடைய "THE PROPHET " என்னும் நூல் பைபிளின் எதிரொலியாகவே கருதப்படுகிறது. ஏசுவின் ஆளுமையில் தன்னை இனம்காண்பதில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதற்கு அவருடைய எழுத்துக்களில் நிறையவே ஆதாரங்கள் உள்ளன. அதே சமயம் கிருத்துவ மத நிறுவனத்தின் போலித்தன்மையை எதிர்க்கும் கலகக் காரராகவும் அவர் இருந்தார்! எனவே தன் கதைகளில் வரும் கலகப் பாத்திரங்களை அவர் ஏசுநாதரின் சாயலிலேயே உருவாக்கினார்.




 "கலீல் என்னும் கலகக்காரன்" (KAHLIL THE HERETIC ) என்னும் கதை அவருடைய மிக முக்கியமான கதை. அதில் வரும் கதாப்பாத்திரத்திற்கு அவர் தன் பெயரையே கொடுத்திருக்கிறார். கலீல் உறங்கிக் கொண்டிருக்கும்போது மிரியம் என்ற பெண்ணும் அவளுடைய தாயும் அவனைப் பற்றிப் பேசும் வரிகள் மிகவும் முக்கியமானவை:

"மிரியமும் சேர்ந்துகொண்டு சொன்னாள், 'அம்மா, இவருடைய கைகள் தேவாலயத்தில் உள்ள கிறிஸ்துவின் கைகளைப்போல் உள்ளன.' அவளின் அம்மா கூறினாள், 'இவர் முகம் ஒரே சமயத்தில் பெண்ணின் மென்மையையும் ஆணின் வன்மையையும் கொண்டுள்ளது!" (And Miriam rejoined, "His hands Mother, are like those of Christ in the Church." The mother replied, "His face possesses at the same time a woman's tenderness and a man's boldness." )




கீழை மரபில் ஞானிகளின் உருவங்கள் வரையப்படுவதன் பின்னணியில் உள்ள உளவியல் மிகவும் ஆழமானது. மனிதனின் அகத்திற்குள் பரந்து விரிந்திருக்கும் உருவெளிக் களங்களில் மிகத் தொலைவு வரை சென்று வந்து வரைந்திருக்கிறார்கள்! சிவன்,கிருஷ்ணா, ராமா, புத்தர் போன்றோரது முகங்கள் இளமையாக வரையப்படுகின்றன. அதில் பெண்மையின் சாயலும் உள்ளது. வட்டமாக, சமச்சீர்த் தன்மையின் சாத்தியமான எல்லையில் அந்த முகங்கள் வரையப்பட்டுள்ளன. கண்கள் நீளமாகவும், புருவங்கள் வில்லைப் போல் வளைந்தும், உதடுகள் சிறியதாகவும் சிவந்தும் ( 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும் பனித்த சடையும்...' என்று அப்பர் பாடிச் செல்வதைப்போல்) அவை வரையப்பட்டுள்ளன. ஆனால் அவை விகாரமாகத் தெரிவதில்லை. மாறாக அவற்றில் ஒரு அமானுஷ்யமான பேரழகு தெரிகிறது!

இந்திய ஓவியங்களில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம், சிவன் கிருஷ்ணன் ராமன் போன்ற ஆன்மிக ஆளுமைகளை நீல நிறத்தில் (சில சமயம் பச்சை நிறத்தில்) வரைகிறார்கள் என்பது. ஒரு விதத்தில் நீலம் என்பது பிரபஞ்சத்தின் நிறம். அதாவது பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசத்தின் (ETHER ) நிறம். பூமியைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் ஒளியின் பிரிகை (REFRACTION OF LIGHT ) பூமியில் நீல நிறத்தின் அதிர்வலையில்தான் விழுகிறது. எனவே பூமியிலிருந்து வானம் நீல நிறமாகத் தெரிகிறது. முக்கால் பாகம் பரந்துள்ள கடலும் நீல நிறமாகத் தெரிகிறது. நம் பூமியே ஒரு நீல கிரகம் (BLUE PLANET ). எனவே நீல நிறம் என்பது ஒளி பூமிக்கு வந்ததை உணர்த்தும் ஒரு குறியீடு ஆகிறது. கிருஷ்ணன், சிவன், ராமன் போன்றோரின் தேகங்களை நீல நிறமாக வரையும்போது அது ஒரே சமயத்தில் பிரபஞ்சத்தன்மை (UNIVERSALITY ) கொண்டதாகவும் பூமித்தன்மை ( EARTHLINESS ) கொண்டதாகவும் அமைந்துவிடுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் இந்தக் குறியீடு நிச்சயமாக விளங்கப்படுகிறது என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் இந்த ஓவியங்கள் நம் ரசனையில் இனிக்கின்றன.


  இந்திய ஆன்மிகக் கலை மரபில், குறிப்பாக வைணவ சமய மரபில் காணப்படும் இந்த நீல நிறக் குறியீட்டை ஜேம்ஸ் கேமரான் (JAMES CAMERON )  அள்ளிக்கொண்டு போய் தன் "அவதார்" என்னும் திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் படத்தின் பெயரைக் கேட்டவுடனே நீல நிற உருவங்கள்தான் மனதில் தோன்றுகின்றன. வைணவ மரபின் பல விஷயங்கள் பெயர் மாற்றத்துடன் இப்படத்தில் இடம் பெறுவதைக் காண்கிறேன். அத்துடன் யூத மரபின் சில குறியீடுகளையும் இணைத்திருக்கிறார். "அவதார்" என்ற பெயரே வைணவக் கலைச்சொல்தான். நீல நிறத்தில் தோன்றும் வேற்றுகிரக வாசிகளின் நெற்றியில் நீர்க்கோடு போல் 'நாமம்' போடப்பட்டுள்ளதையும் காணலாம். 

  

  இவர்கள் வாழும் கிரகம் நம் சூரியனிலிருந்து 4 .37 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆல்ஃபா சென்டாரி (ALPHA CENTAURI ) என்னும் விண்மீன் திரளுக்குள் உள்ளது. அதற்கு 'பண்டோரா' (PANDORA )என்று பெயர் கொடுத்துள்ளார் கேமரான். இந்தப் பெயர் 'பண்டாரம்' என்பதுபோல் ஒலிக்கிறது. 'வைகுண்டம்' என்று சொல்லப்படுகின்ற கான்சப்ட் இதில் தெரிகிறது. அந்தப் பண்டோரா கிரகத்தில் வாழுபவர்களை "நஃவி" என்று கேமரான் அழைக்கிறார். ஹீப்ரு மொழியில் 'நஃவி' என்றால் இறைத்தூதர் என்று அர்த்தமாம்! இச்சொல் அரபி மொழியில் 'நபி' என்று உள்ளது.  


'பண்டோரா' கிரகத்தில் புனித மரம் ஒன்றுள்ளது. ஆன்மாக்களின் மரம் (TREE OF SOULS ) என்று அது கூறப்படுகிறது. இதனைக் 'கற்பகத் தரு' என்று காணலாம்.


படத்தில் இடம்பெறும் இன்னொரு முக்கியமான பாத்திரம் 'டோருக்' என்னும் மாமிச உண்ணிப்  பறவை. இதனைக் 'கருடாழ்வார்' தொன்மத்தின் மறு ஆக்கம் என்று கூறலாம். அமெரிக்காவில் இப்படிப் படமெடுக்கிறார்கள். நம் ஊரில் 'தசாவதாரம்' என்று பெயர் வைத்து 'அவதாரங்கள்' என்ற பெயரில் ஏழெட்டு 'ஏலியன்'களைக் காட்டிப் பயமுறுத்துகிறார்கள்!

(தொடரும்...)  

உருவெளிக் களங்கள் - 2

சிறு வயதிலிருந்தே அடர்ந்த, நீண்ட தாடி வைத்திருப்பவர்கள் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. ஒரு கிழவனின் நீண்ட தாடியில் பறவைகள் கூடு கட்டிய கதையைப் புத்தகத்தில் படங்களாகவே பார்த்த பால்ய வயதில் அந்தக் கிழவன் என் கனவுகளில் அசையும் பிம்பமாகத் தோன்றியிருக்கிறார். அப்போது தாடியின்மீது தோன்றிய ஈர்ப்பு சாமியார்கள் வரை கொண்டு வந்து விட்டிருக்கவேண்டும். நீண்ட தாடிக்காரர்களைப் பார்ப்பது இப்போதும் பரவசமான ஒரு விஷயம்தான். அதிலும் அந்த தாடி நரைத்துப்போயிருந்தால் அதில் ஒரு கூடுதல் எஃபெக்ட் இருக்கும். நீர்வீழ்ச்சி என்பதைப்போல் அதை 'மயிர்வீழ்ச்சி'... செ! வேண்டாம், 'முடிவீழ்ச்சி' என்று சொல்லலாம்!



ஆன்மீகவாதிகள் எல்லோரும் ஏன் தாடி வைத்திருக்கிறார்கள்? என்று பல பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஆன்மீகவாதிகள் மட்டுமல்ல, நாத்திகர்களான கார்ல் மார்க்சும், எங்கல்சும், தந்தை பெரியாரும்கூட நீளமான தாடி வைத்திருந்தார்கள். பொதுவாக சிந்தனையாளர்கள் பல பேர் தாடி வைத்துள்ளார்கள். சோம்பேறிகளும் தாடி வைத்திருப்பார்கள். சோம்பேறித்தனம் எது நிஷ்டை நிலை எது என்று கண்டுபிடிப்பதுதான் சிரமமான காரியமாயிற்றே!

தாடி என்பது ஏதோ ஒரு விதத்தில் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாகவே மக்களின் மனதில் பதிந்துவிட்டது. தாடி வைக்காத ஞானிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். உதாரணமாக ஜே.கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்தர் போன்றவர்கள். ஆனால் தாடியோ மீசையோ இல்லாமல் மொழு மொழுவென்று இருப்பவர்களைக் கண்டால் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அப்புறம் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னதான் வித்தியாசம்? (அதாவது வெளித் தோற்றத்தில்!).எனவே,  குறைந்தபட்சம் ஒரு மீசையாவது இருக்கவேண்டும் என்று தோன்றும். அதனாலேயே சில பாலிவுட் ஹாலிவுட் நடிகர்களைப் பார்க்கும்போது அர்த்தநாரீஸ்வர  முகங்களாகத் தெரியும். அதிலும் சில சாமியார்கள் நீண்ட கூந்தலை வேறு வளர்த்துக் கொள்கிறார்கள்! 



ஒரு ஆண் நீண்ட கூந்தல் வைத்திருப்பதை முதன் முதலில் அரவிந்தரிடம்தான் ரசித்தேன். ஆனால் மீசையோ தாடியோ வைக்காத ஆண் ஒருவன் கூந்தல் மட்டும் வளர்த்தால் அதை என்னால் ரசிக்கவே முடியவில்லை.



சுவாமி பரமஹம்ச யோகானந்தாவின் புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவர் ஒரு பெண்ணாகவே எனக்குக் காட்சி தருகிறார்!


சுவாமி நித்யானந்தாவை நான் யோகானந்தாவின் சாயல் உடையவராகவே காண்கிறேன். அவர் பிரபலமாகி வந்துகொண்டிருந்த காலத்திலேயே அவரை நான் 'சுவாமி ஃபெமினானந்தா' (SWAMI FEMINANANDA ) என்றுதான் அழைத்தேன். அவருடைய உருவத்தை வைத்துத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். வேறு விதத்திலும் அந்தப் பெயர் அவருக்குப் பொருந்திப் போகும் என்று நான் அப்போது நினைத்துப்பார்க்கவில்லை!



தாடி வைப்பது இஸ்லாத்தில் இரண்டாம் நிலைக் கடமையாக, 'சுன்னத்' என்னும் நபிவழியாக உள்ளது. அதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் தாடி வைக்கிறார்கள்.  ஃபிரெஞ்சு தாடி, ரமண மகரிஷி டைப் தாடி என்று தொடங்கி ஓஷோ வகை தாடி வரை பல விதங்களில் வைக்கிறார்கள். ரப்பானி தரீக்கா என்னும் சூபி வழியைச் சேர்ந்தவர்கள் கூந்தலும் வளர்த்துக் கொள்கிறார்கள். உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் தாடி வைத்திருந்தார்கள் என்று நபிகள் நாயகம் கூறியிருப்பதும், அவர்களே தாடி வைத்திருந்ததும் தானும் தாடி வைப்பதற்கு ஒரு முஸ்லிமைத் தூண்டப் போதுமானது. தாடி பற்றிய வேறு நபிமொழிகளும் உள்ளன. தாடியில்தான் சொர்க்கக் கன்னிகள் ஊஞ்சலாடுகிறார்கள் என்று ஒரு ஹதீஸ் கருத்தை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நூற்களில் இன்னும் இதை நான் பார்க்கவில்லை. இது ஒரு குறியீடான கருத்துத்தான். என் மகள் என் தாடியைப் பிடித்து இழுத்தாலே வலி தாங்கமுடியவில்லை. கன்னிகள் பிடித்துத் தொங்கினால் என்னாவது? இதன் உட்கருத்து என்ன என்பதைச் சிந்தித்துப் பார்த்தேன். தாடியைப் பிடித்துத் தொங்கினாலும் நமக்குத் தெரியாத அளவுக்குச் சொர்க்கக் கன்னிகள் 'லைட்'டானவர்கள் என்பதை அது உணர்த்துவதாக இருக்கலாம். (சிலேடையை கவனிக்க: சொர்க்கக் கன்னிகள் தேஜோமயமானவர்கள் என்பதும் தொனிக்கிறது!) 



பள்ளிவாசல்களில் நடைபெறும் பிரசங்கங்களுக்கு நண்பர்களுடன் நான் எப்போதாவது போவதுண்டு. சில பேர் தாடியைக் காட்டமாகக்  கோதிக் கொண்டிருப்பார்கள். உள்ளே சிக்கிக் கொண்ட சொர்க்கக் கன்னிகளை உருவி வெளியே வீசுகிறார்கள் என்பது போல் இருக்கும். அழகிய பெண்களை இப்படியா வெறுப்பது? சிலபேர் தங்கள் தாடியை மெதுவாகத் தடவியபடி மெய்மறந்து அமர்ந்திருப்பார்கள். ஒரு முறை என் நண்பன் ஒருவன் சொன்னான், "அவர் சொர்க்கக் கன்னிகளைத் தடவுகிறார்!" என்று. இதற்கு இப்படி ஒரு உளவியல் கோணம் இருக்கும் என்று அதுவரை நான் சிந்தித்ததில்லை! சங்கத் தமிழிடம் வார்த்தையைக் கடன் வாங்கி  இதை நாம் 'தாடி தைவரல் SYNDROME' என்று கூறலாம்.    

(தொடரும்...)
  

Wednesday, October 27, 2010

உருவெளிக் களங்கள் -1

"உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்னும் அறிவுரையை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் என்ன செய்வது, பாழாப் போன மனசு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குது. சில உருவங்கள் அநியாயத்துக்கு கிச்சு கிச்சு மூட்டும்போது ரெண்டு வார்த்தை சொல்லாமல் இருக்க முடிவதில்லை! "இப்படியெல்லாம் ஒருத்தவங்க உருவத்தப் பாத்து கிண்டலடிக்கிறது தப்புமா... ஆண்டவன் படச்ச உருவமில்லையா அது... கண்ணியமா பாக்கணும்." என்று மனதிற்கு ஆயிரத்தெட்டு தடவை படிச்சு படிச்சு சொல்லியாச்சு. கேக்குற பாடில்லை.

"காணும் பொருள் யாவிலுமே கர்த்தன் தோற்றமே!" என்று என் குருநாதரும் பாடியிருக்கிறார்கள். "அவனே அனைத்து வஸ்துக்களிலும் பிரசன்னமாகியிருக்கிறான்" (34 :47 ) என்னும் திருக்குர்ஆன் வசனமும் என் ஞாபகத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சில நேரங்களில் நிலைமை இதையெல்லாம் மீறிப் போய்விடுகிறது. இப்படி வேதாந்தம் பேசினால் மனம் அதற்கு எதிர் வேதாந்தம் பேசி ஜெயித்துவிடுகிறது!

அதாவது, காணும் பொருள் யாவிலும் இறைவனை 'நோட்டமிடுவது' ஒரு சூபித்துவப் பயிற்சி என்றால், காணும் பொருள் யாவிலும் அவனது வல்லமையைக் காண்பது இன்னொரு விதமான பயிற்சி. இந்தப் பயிற்சியை அப்பியாசம் செய்யும்போதுதான் சில நேரங்களில் மனம் குறளி குதி போடுகிறது. "ஒரு சிறந்த ஓவியன் அழகான ஓவியம் வரைந்தால் பாராட்டுகிறோம், கொடூரமான உருவம் ஒன்றை அவன் வரைந்தால் அதைப் பார்த்து அருவருக்கிறோம் அல்லது பயப்படுகிறோம். இரண்டுமே அவனது ஓவியத்திறமைக்குச் சான்று. சத்தானும்கூட இறைவன் வரைந்த கோரமான ஓவியம்தான். எனவே அவனும் இறைவனின் வல்லமைக்குச் சான்று!" என்று மவ்லானா ரூமி கூறியுள்ளார். என் மனம் இத்தத்துவத்தைக் கொஞ்சம் நீட்டித்துக் கொண்டது. "அதே ஓவியன் ஒரு கார்டூன் சித்திரம் போட்டால் அதைப் பார்த்து நாம் சிரித்து ரசிப்பதில்லையா? இறைவனுக்கு அந்த வல்லமை இல்லை என்று சொன்னால் 'எல்லாம் வல்லவன்' என்று எப்படிக் கூற முடியும்? கார்டூனைப் பார்த்து சிரிப்பது என்பது அதை வரைந்தவனின் திறமையைப் புகழ்வதுதானே? டா வின்சியின் திறமையும் மரியோ மிராண்டாவின் திறமையும் ஒரே ஆளிடம் இருந்தால் அவன் அந்த இருவரைவிடவும் சிறந்த ஓவியன் என்றுதானே சொல்வோம்?" என்ற ரீதியில் என் மனம் வாதங்களை அடுக்கிக் கொண்டே செல்லும்போது என்னால் ஒன்றுமே பேசமுடிவதில்லை.



 மூத்த தமிழறிஞர் ஒருவர் எங்கள் கல்லூரிக்கு வருகை தந்தார். அவரைப் பார்த்ததும் ஏற்பட்ட முதல் இம்ப்ரஷன், "அடடே! மூக்குப் பொடி விக்கிறவன மாதிரி இருக்கார்!" என்பதுதான். First impression is the best impression என்று வேறு கூறுவார்கள். அவர் எத்தனை சீரியசாகப் பேசினாலும் எனக்குச் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. 

"ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது" என்பார்கள். பேசிய வாயும் அப்படித்தான். என் நண்பர் ஒருவர் அதை 'நாப் பொழப்பு' என்று அழகான சிலேடையில் கூறுவார். 'பட்டி மன்றம்' என்பதைக் கூட நான் சில நேரங்களில் அப்படி அவதானிப்பேன். இரு அணிகளாகப் பட்டிகள் மாறி மாறிக் குரைக்க கடைசியாக ஒரு பட்டி ஊளையிட்டுத் தீர்ப்பு கூறும் நிகழ்ச்சி! பேசிய வாய்கள் பல ஒய்வு பெற மறுத்து இறுதி மூச்சு வரை இலக்கிய சேவை செய்வேன் என்று மைக்கைக் கைப்பற்றுவதுண்டு. அப்படிப் பற்றிய ஒருவர் மைக்கைப் பிடித்துப் புளிய மரக் கிளையை உலுக்குவது போல் உலுக்கிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சி என்னை மிகவும் பரவசப் படுத்த, 'சொற்பொழிவு ஆட்டுகிறார்!" என்று சொன்னேன்.



இந்த உளவியல் எப்போது என்னுள் உருவானது என்பதைச் சிந்தித்துப் பார்த்தபோது, எல்லாக் குழந்தைகளுமே தமாஷான உருவங்களைத்தான் முதலில் ரசிக்கப் பழகுகின்றன என்பதைக் கண்டேன். 'தொந்தி மாமா', 'மூக்கு மாமா' என்பன போன்ற பட்டப்பெயர்களைத்தான் குழந்தைகள் மிகவும் எளிதாக நினைவில் வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களின் முதல் நண்பர்களான பொம்மைகள்கூட கேலித்தனமான உருவங்கள் கொண்டிருக்கின்றன.டெட்டி  பேர் (TEDDY BEAR ) என்பதே அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் உருவத்தைக் கரடியாக சித்தரித்ததில் இருந்து பிறந்ததே. அந்த உளவியல் கூறுதான் கார்டூன்களை நாம் ரசிப்பதிலும் செயல்படுகிறது. அதுதான் உருவு கண்டும் எள்ளுகிறது! 



சமீபத்தில் ஒரு போஸ்டரில் நடிகர் திலகம் சிவாஜியின் ஒரு படத்தைப் பார்த்தேன். தேங்காய்க் குடுமியைக் கவிழ்த்தது போன்ற தாடியும் கோழி இறகுகளைச் சாய்த்து வைத்தது போன்ற மீசையுடனும் இருந்தார். அதைப் பார்த்த கணத்தில் சிவாஜி, DON QUIXOTE DE LA MANCHA வேடம் போட்டிருக்கிறார் என்று தோன்றியது! அவ்வளவு கச்சிதமாக இருந்தது.  


சில மனிதர்களைப் பார்க்கும்போது அவர்கள் வேற்று கிரகவாசிகளாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது. வேற்று கிரக மனிதர்கள் நம் பூமிக்கு வந்து அவர்களின் வாரிசுகளை உருவாக்கி வளர்த்து ஆட்டு மந்தை போன்ற நம்மை ஆட்டிவைத்து ஆள்கிறார்கள் என்று ஒரு கோட்பாடு உள்ளது. இக்கோட்பாட்டை உலகப் புகழ் பெறச் செய்தவர் ஜெர்மன் நாட்டு நாத்திக அறிஞர் எரிக் வான் டானிகன் (ERIC VON DANIKEN ) என்பவர்.


பிரமிடுகள், CROP CIRCLES என்னும் பயிர் வட்டங்கள், புராணக் குறியீடுகள், தொன்மங்கள், சிலைகள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் தன் கருத்துக்களை நிறுவ முயன்றுள்ளார். அவருடைய "THE CHARIOTS OF THE GODS " என்னும் நூல் வெளியானபோது பல சர்ச்சைகளை உருவாக்கியது. ஏசு நாதர் வேற்று கிரக ஆணுக்கும் யூதப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். வானவர்கள், தேவர்கள் என்றெல்லாம் மதங்கள் குறிப்பிடுபவை வேற்றுகிரக 'மனிதர்'களைத்தான் என்பது அவர் வாதம். இக்கருத்து கிருத்துவ மற்றும் இஸ்லாமிய வட்டங்களில் காட்டமான எதிர்ப்புகளைப் பெற்றது. இந்து மதத்தின் அவதாரங்கள்கூட செமி-ஏலியன்கள் என்பது அவர் பார்வை. ரிஷி கற்றுத்தந்த மந்திரத்தைக் குந்திதேவி ஓதியவுடன் வானிலிருந்து தேரில் இறங்கி வந்த சூரியதேவன் ஒரு வேற்றுகிரக வாசியே என்று அவர் கூறினார். அவனுடைய ஜீன் வேறுமாதிரி இருந்ததால்தான் கர்ணன் உபரி ஸ்கெலிடன் - கவசத்துடன் பிறந்தான் என்று கூறினார்!

வேற்று கிரக வாசிகள் - ஆண்கள் - பூமிக்கு வந்து தனிமையில் இருக்கும் அழகான இளம்பெண்களை வசியம் செய்து அவர்களிடம் தங்கள் பீஜங்களை விதைத்துவிட்டுப் போகும் கதைகள் உலகின் எல்லா இனங்களிலும் காணப்படுவதாக டானிகன் சொல்கிறார். அப்படிப்பட்ட ஒரு கதை மணிமேகலையில் வருகிறது. 'மலர்வனம் புக்க காதை' என்பதற்குள் உள்ள உபகதை அது. சுதமதி என்னும் கன்னி ஒருத்தி அடர்ந்த காட்டுப்பகுதியில் தனியாகச் சென்றுகொண்டிருந்தாள். அது இந்திர விழா காலம். தானிகனின் பாஷையில் சொல்வதென்றால் வேற்று கிரகவாசிகள் அதிகமாக வந்துபோகும் காலம். சுதமதியைக் கண்டு மையல் கொண்ட 'விஞ்சையன்' ஒருவன் விண்கலம் ஒன்றில் விண்ணைத் தாண்டி வருகிறான்! அலேக்! அப்படியே அவளை அள்ளிச் சென்று அந்தரத்தில் வைத்துக் கலவியபின் மீண்டும் மண்ணில் இறக்கிவிட்டுச் சென்று மறைகிறான்.(என்ன கொடும சார் இது?) இந்தக் கதையை வைத்துக்கூட சாத்தனார் 'மலர்வனம் புக்க காதை' என்று தலைப்பிட்டிருப்பார் என்று மறுவாசிப்பு செய்யலாம்.

இப்படி வேற்று கிரக ஆண்கள் வந்து பூமியின் பெண்களுடன் உறவாடுவதுபோல், வேற்று கிரகப் பெண்கள் வந்து பூமியின் ஆண்களுடன் உறவாடுவது உண்டா? என்ற ஐயம் இங்கே எழலாம். அப்படி வருவதாகத் தெரியவில்லை. முதலில் வேற்றுகிரக வாசிகள் என்று இருந்தால் அவர்களில் ஆண் - பெண் பகுப்பு உள்ளதா என்பதே தெரியவில்லை. மேலும் அவர்களின் வாரிசு இங்கே உருவாக வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். நம் வாரிசு 'அங்கே' வேண்டும் என்பதல்ல. ஆனால் வேற்றுகிரக வாசிகள் நம் ஆண்களின் பீஜங்களை எடுத்துக் கொண்ட பதிவுகள் அமெரிக்காவில் நிறைய உண்டு. ஆனால் அது முழுக்க முழுக்க அறிவியல் ஆய்வு போல நடந்துள்ளது. பசுமாட்டில் பால் கறக்கும் கருவியைப்போல் ஒன்றை வைத்துச் சேகரித்துக் கொண்டார்களாம்! ஆறுதலுக்காக வேண்டுமானால் இந்த மோகினிப் பிசாசு போன்ற விஷயங்களை வேற்றுகிரக யுவதிகள் வந்து நம் யுவன்களை மாயம் செய்வதாக எண்ணிக்கொள்ளலாம். பௌர்ணமி அல்லது அமாவாசை இரவு, தென்றல், அடர்ந்த காடு, தனிமை, பூக்களின் மணம் என்று அதற்கென்று தனிச் சூழலும் இருக்கிறது!  



'கறுப்பாடை மனிதர்கள்' என்று ஒரு ஆங்கிலப் படம். MEN IN BLACK . பூமியில் மனித வேடத்தில் திரியும் வேற்றுகிரக வாசிகளைக் கண்டுபிடித்து இரண்டு ரகசிய போலீஸ்காரர்கள் போட்டுத்தள்ளுவதுதான் படத்தின் கதை. அந்தப் போலீச்காரகளின் அலுவலகத்தில் ஒரு நவீன கணிப்பொறியின் திரையில் மனித உருக்கொண்டு உலவும் ஏலியன்களின் வான்டட் லிஸ்ட் இருக்கும். அதில் ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலனும் இருப்பார்!



இதையெல்லாம் படித்தும் பார்த்தும் சில  மனிதர்கள் என் கண்களில் ஏலியன்களாகவே  தெரிகிறார்கள். உதாரணமாக, தி.மு.க பேச்சாளர் வெற்றிகொண்டானின் முகத்தை க்ளோஸ்-அப்பில் கண்டபோது அவர் இந்த பூமியில் பிறந்தவர் என்று நம்பவே முடியவில்லை. மென் இன் ப்ளாக்கில் வரும் ஒரு வேற்று கிரகக் குழந்தையைப் போல் தெரிந்தார்! அல்லது, ஆலிஸின் அற்புத உலகத்தில் வரும் பாதாளத்திலிருந்து வெளிவந்துவிட்டவரைப்போல! ஆள் உருவம்தான் அப்படியே தவிர, மனுஷன் பேசுவதற்கு வாயைத் திறந்துவிட்டால் அவர் ஒரு 'பச்சை'த் தமிழர் என்பது தெரிந்துவிடும்!

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் தமிழ்ப்பணி மீது எனக்கு எவ்வளவோ மரியாதை இருந்தாலும் புகைப்படத்தில் அவரைக் காணும்போதெல்லாம் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய E.T. THE EXTRA TERRESTRIAL என்னும் படத்தில் வரும் ஏலியன்தான் ஞாபகம் வருகிறது!


(தொடரும்...)



  

Monday, October 25, 2010

லைலா பிறந்த கதை

அமர காதல், தெய்வீகக் காதல் என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கு உதாரணமாக சில காதலர்களை நாம் இலக்கியங்களில் கண்டு வருகிறோம். காதலின் முழுப் பரிமாணங்களையும் தொட்டுணர்த்திவிட வேண்டும் என்னும் லட்சியம் பல மகாகவிகளிடம் இருந்துள்ளது. ரோமியோ-ஜூலியட்,
ஹீர்-ராஞ்ஜா, ஷீரீன்-ஃபரஹாத், சலீம்-அனார்கலி, அம்பிகாபதி-அமராவதி என்று நீளும் பட்டியலில் உண்மையில் முதலிடம் கொடுக்கவேண்டும் என்றால் அது லைலா-மஜ்னூன் ஜோடிக்குத்தான்! அந்த அளவு மீண்டும் மீண்டும் எடுத்துப் பேசப்படுகின்ற ARCHETYPE LOVERS இந்த இணை. 



இவர்களில் பல ஜோடிகள் கவிஞர்களின் கற்பனைதான். சில ஜோடிகள் பாதி கற்பனைகள். சலீம் என்னும் முகலாய இளவரசன் மாமன்னர் அக்பரின் மகன்தான். ஆனால் அனார்கலி என்ற பாத்திரம் கவிஞன் ஒருவனின் கற்பனையில் உருவானதே. இடுகாட்டில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த உருதுக் கவிஞன் ஒருவன் 'அனார்கலி - நடன மாது' என்று பெயர் வெட்டப்பட்ட ஒரு கல்லறையைக் கண்டு கற்பனையில் ஆழ்ந்ததாகவும், முகலாய இளவரசன் சலீமையும்  (பட்டப் பெயர் ஜெஹாங்கீர்) வைத்து ஒரு காதல் கதையை உருவாக்கி விட்டதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மக்களின் கூட்டு நினைவில் ஆழமாக வேரூன்றிவிட்ட இந்தக்  காதல் கதை, அவர்களின் கனவுக்காவியம், பல முறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது. இனிய கனவென்றால் மீண்டும் மீண்டும் காண யார்தான் மறுப்பார்கள்! குறிப்பாக, கே.ஆசிஃப் இந்தக் கதையை "முகலே அஃஸம்" - 'மாபெரிய முகல் மன்னன்' என்னும் தலைப்பில் 1960 -ல் படமாக எடுத்தார். அப்போதே இரண்டு மில்லியன் டாலர் செலவில் ஒன்பது ஆண்டுகள் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. எழுபது காப்பிகள் போடப்பட்ட சாதனை வேறு. ஒரு சில காட்சிகள் மட்டும் வண்ணத்தில் எடுக்கப்பட்டன. இன்றைய பணக் கணக்கிற்கு அட்ஜஸ்ட் செய்து பார்த்தால் அதன் வசூல் 308 மில்லியன் டாலர்கள் வருகிறது என்கிறார்கள். 2004 -ல் முழுவதும் வண்ணப் படமாக வெளியிடப்பட்டு இருபத்தைந்து வாரங்கள் ஓடியது! தமிழில் டப்பிங் செய்யப்பட்டும் வெளிவந்தது.



ஆனால், இஸ்லாமிய உலகம் முழுவதிலும் உன்னதக் காதலின் குறியீடாக நிறுவப்பட்டுள்ள ஜோடி லைலா-மஜ்னூன்தான். அரபு நாட்டின் பெதோயின் இனத்தில் உருவான ஒரு நாடோடிக் கதை இது. சிலர் இது உண்மைக் கதை என்றும் நம்புகிறார்கள். இருக்கலாம். உன்னதப்படுத்தப்பட்ட உண்மைச் சம்பவமாக இருக்கக் கூடும். கி.பி.7 -ஆம் நூற்றாண்டில் அரேபியாவின் நஜ்த் பகுதியில் வாழ்ந்த 'கைஸ் இப்னுல் முலவ்வா' என்பவனைப் பற்றிய கதை இது. தன் பால்ய பருவத்திலிருந்தே லைலா என்னும் தன் தோழியின்மீது ஆழமான அன்புகொண்டு வளர்கிறான் அவன். அன்பு முற்றிக் காதலாகிறது. தன் காதலைக் கவிதைகளாக வெளிப்படுத்துகிறான். இப்படிச் சொல்வதைவிட, அவளின் பெயரைக் கவிதைகளாலும் இசையாலும் அலங்கரிக்கிறான் என்று சொல்லலாம்! காதலின் சக்திக்குத் தன்னை முழுவதுமாகக் கொடுத்துவிட்ட கைஸ் அலங்கோலமாக ஒரு பக்கிரியைப்  போல் ஆகிவிட்டான். மக்கள் அவனை "மஜ்னூன்" என்று அழைக்க ஆரம்பித்து அதுவே அவனுக்குப் பெயராகிவிடுகிறது. ஜுனூன் என்னும் அரபிச் சொல் "வெறி கொண்ட பித்து நிலை"யைக் குறிக்கும். மஜ்னூன் என்றால் பித்தன் என்று பொருள். மஜ்னூனின் தந்தை தன் மகனுக்கு லைலாவை மனம் முடித்து வைக்க அவளின் தந்தையிடம் பெண் கேட்கிறார். ஒரு கிறுக்கனுக்கு என் மகளைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி லைலாவின் தந்தை மறுத்துவிடுகிறார். அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார். இதனால் மனமுடைந்த மஜ்னூன் வனாந்தரங்களில் திரிகிறான். இராக் நாட்டிற்குத் தன் கணவனுடன் அனுப்பப்பட்ட லைலா அவனுடன் இணைய மறுத்துவிடுகிறாள். மஜ்னூனின் நினைவில் நோய்ப்பட்டு இறந்துபோகிறாள். இந்தச் செய்தியை அறிந்த மஜ்னூன் பாலைவனத்தில் உயிர் துறக்கிறான்.



இந்த நாடோடி அரபுக் கதையைப் பாரசீக மொழியில் கற்பனை கலந்து எழுதிய கவிஞர் நிஜாமி அதை உலகப் புகழ் பெற்ற இலக்கியமாக ஆக்கிவிட்டார். பதினாறாம் நூற்றாண்டில் அதை ஃபுஜூலி என்னும் கவிஞர் துருக்கிமொழியில் காவியமாக்கினார். அதனைத் தொடர்ந்து பலரும் பல்வேறு மொழிகளில் 'லைலா-மஜ்னூன்' காவியம் எழுதியிருக்கிறார்கள். நிஜாமி,  ஃபுஜூலி ஆகியோரின் காவியங்களில் பல இடைச்செருகல்கள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ரீமிக்ஸ் 'லாலா-மஜ்னூன்'கள் தோன்றினார்கள். 

நிஜாமியும் ஃபுஜூலியும் சூபி மரபில் இருந்தவர்கள் என்பதால் 'லைலா-மஜ்னூன்' கதைக்கு ஆன்மிகக் குறியீட்டுத் தன்மையை வழங்கிவிட்டார்கள். மனிதக் காதலைக் கருவியாகக் கொண்டு இறைக் காதலை மிக எளிதாகப் பேசிவிடமுடியும் என்பதை உலகின் எல்லா ஆன்மிக மரபுகளும் கண்டுள்ளன. இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் ஆன்மிக உணர்வுகளை மனிதத் தளத்தில் பிரதிபலித்துக் காட்டுவதற்கு காதலை விடவும் சிறந்த கருவி வேறு இல்லை! எனவே சூபிகள் லைலா-மஜ்னூன் குறியீட்டைத் தங்களின் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்கள்.

லைலாவின் தெருவில் அலைந்துகொண்டிருந்த மஜ்னூன், அவள் வீட்டின் சுவர்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்களின் காதுகளில் விழுமாறு ஒரு கவிதை படிக்கிறான்:

"லைலாவின் தெருவில்
அவள் வீட்டின் சுவர்களை
முத்தமிடுகிறேன் நான்.
இந்தச் சுவற்றின் மீதோ 
அல்லது அந்தச் சுவற்றின் மீதோ 
காதல் கொண்டவனல்ல நான்.
என் மனதில் பொங்கி வழிவது
அந்த வீட்டுக்குள் இருப்பவளின் காதலே!"   

உலகெங்கும் உள்ள முஸ்லிம்களிடம் பரவியுள்ள "தப்லீக்" இயக்கத்தின் பாட நூலான "அமல்களின் சிறப்புக்கள்" என்னும் நூலில்கூட இந்தக் கவிதை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது! இறைவனின் நினைவில் சதா மூழ்கியிருத்தல் என்னும் நிலையை விளக்குவதற்கு இந்தக் கவிதையை மவ்லவி ஜகரிய்யா எடுத்தாண்டுள்ளார் என்பது மனிதக் காதலை வைத்து இறைக் காதலை விளக்கும் உத்தியைக் காட்டுகிறது. இறைவனைக் காதலியாகக் குறிப்பிடும் சூபி "நாயகி-நாயக" பாவனையின் சாயை இது.



இறைவனை அடையும் வழிகளைக் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் என்று நான்காக வகுத்த சுவாமி விவேகானந்தர், பக்தி யோகத்தை விளக்கும்போது இந்த நாயக நாயகி முறையைத்தான் மனித சுபாவத்திற்கு மிகவும் நெருங்கி வருவதாகவும், நான்கில் மிக விரைவில் பயன்தரக் கூடியதாகவும், அதிக இனிமையானது என்றும் குறிப்பிட்டு அதனை 'மதுர யோகம்' என்று சிலாகித்தார்.



வைணவ மரபில் "ராதா-கிருஷ்ணன்" ஜோடி உன்னதக் காதலுக்கு இலக்கணமாகக் கூறப்படுகிறது. ராதை என்னும் பாத்திரம் ஒரு பக்தனின் ஆன்மாவுக்குக் குறியீடாகக் காணப்படும்போது இறைக்காதலின் தளத்தில் விளக்கங்கள் மலர்வதைக் காணலாம்.அவ்வாறு ஜெயதேவரின் "கீத கோவிந்தம்" விளக்கப்படுகிறது.

அதைப்போலவே லைலா-மஜ்னூன் கதையை இறைக்காதலை விளக்குவதற்கான ஒரு குறியீடாக சூபிகள் பயன்படுத்துகின்றார்கள். நிஜாமியின் இந்தக் காவியத்தை உரைநடையில் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் காலின் டர்னர் (COLIN TURNER ). இஸ்லாமிய வரலாற்றில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் தர்ஹம் பல்கலைக்கழகத்தில் பாரசீக மொழியும் இஸ்லாமியமும் பயிற்றுவிக்கிறார். திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றும் வெளியிட்டுள்ளார். "லைலா மஜ்னூன்" நூலின் முன்னுரையில் அவர் சொல்கிறார்: "மர்மமான காதல் உலகத்தை, அதன் எந்தப் பகுதியையும் விட்டுவிடாமல், முழுமையாக நிஜாமி வரைந்துகாட்டிவிட்டார்" (Nizami maps the whole of the mysterious world of love, leaving no region uncharted.)



"தேவையற்ற ஒன்று தன்னிடம் இருப்பதன் வலியையும்
தேவையான ஒன்று தன்னிடம் இல்லாததன் வலியையும்
மனிதன் மட்டுமே உணர முடியும்!"

என்று தொடங்குகிறது லைலா-மஜ்னூன் கதை. இந்த நிலையில் உள்ள எந்த ஓர் ஆணும் அல்லது பெண்ணும் தன்னை லைலாவாக அல்லது மஜ்னூனாக இனம் கண்டுகொள்ள முடியும். இவ்வாறு மனம் முழுவதும், உயிர் முழுவதும் புகுந்து நிறைந்து ஆட்கொண்டு பைத்தியமாய் ஆட்டிவைக்கின்ற ஒன்றை "ழாஹிர்" (ZAHIR ) என்று குறிப்பிடுகிறார் போர்த்துகீசிய எழுத்தாளர் பாலோ கோயல்லோ (PAULO COELHO ). இஸ்லாமிய மரபிலிருந்து தான் அறிந்துகொண்டதாக அவர் கூறும் இந்தக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து "ழாஹிர்" என்னும் பெயரில் ஒரு நாவலே எழுதியிருக்கிறார். அதன் கதாநாயகன் லைலாவைத் தேடி அலையும் மஜ்னூனைப் போலவே தன் மனைவியைத் தேடி அலைகிறான்!

மேற்கத்திய இசை உலகில் 'லைலா' என்னும் பெயரைப் பல கோடி உதடுகள் முனுமுனுக்கும்படிச் செய்தவர் ராக் பாடகர் எரிக் க்ளாப்டன் (ERIC CLAPTON ). புகழ் பெற்ற "பீட்டில்ஸ்" இசைக்குழுவில் இருந்த ஜார்ஜ் ஹாரிசனுடன் (GEORGE HARRISON ) 1960 -ல் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் எரிக் க்ளாப்டன். 1966 -ல் பட்டி பாய்ட் (PATTIE BOYD ) என்னும் 'மாடலை' ஹாரிசன் மணந்தார். சிக்கல் அதிலிருந்து தொடங்கியது. தன் நண்பனின் மனைவியின் மீது தான் காதல் வயப்படுவதை எரிக் க்ளாப்டன் உணர்ந்தார். மறக்க முயன்றால் இன்னும் அதிகமாக மனம் பைத்தியமானது. உதறித்தள்ள முடியாத அந்த அதீத சக்திக்குத் தன்னை இழந்துகொண்டிருந்த குழப்பமான நிலையில் நிஜாமி எழுதிய "லைலா-மஜ்னூன்" கதையைத் தன் நண்பரும் நாடக ஆசிரியருமான இயான் தல்லாஸ் (IAN DALLAAS ) என்பவரிடமிருந்து கேட்டறிந்தார்.



இயான் தல்லாஸ் 1930 -ல் ஸ்காட்லாந்தில் பிறந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பின்னர் பல மேடை நாடகங்களையும் தொலைக்காட்சி தொடர்களையும் இயற்றினார். 1967 -ல் மொரோக்கோ நாட்டின் ஃபேஸ் (FES ) நகரில் ஷைக் அப்துல் கரீம் தாவூதி என்பவற்றின் முன்னிலையில் இஸ்லாத்தில் இணைந்தார். பின்னர், ஷைக் முஹம்மது இப்னுல் ஹபீப் என்பவரிடம் சூபி ஆன்மிக தீட்சை பெற்று "அப்துல் காதிர் அஸ்-சூபி" என்று அழைக்கப்படலானார். அவர் சார்ந்த சூபி வழி "தர்காவி-ஷாதிலி-காதிரி தரீக்கா" என்று அழைக்கப்படுகிறது. 1980 -ல் 'முராபிதூன் அகில உலக இயக்கம்' என்னும் சூபிஞான இயக்கத்தையும், 2004 -ல் தென்னாப்பிரிக்காவின் கேப் டவ்ன் நகரில் 'தல்லாஸ் கல்லூரி'யையும் துவங்கினார். எரிக் க்ளாப்டனுடன் நட்பு கொண்டிருந்த காலகட்டத்தில், அதாவது அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே, இயான் தல்லாஸ் என்னும் பெயரில் அவரது "THE TIME OF THE BEDOUIN 'THE BOOK OF AMAL' - ON THE POLITICS OF POWER " என்ற நூல் வெளியானது. அரபுப் பழங்குடியான பெதோயின் இனத்தைப் பற்றி ஆய்வு செய்த அவர் நிஜாமியின் லைலா-மஜ்னூன் கதையை நன்றாக அறிந்திருந்தார்.



எரிக்கின் நிலையை அவதானித்த தல்லாஸ்,"நீ என்னடா  இப்படி மஜ்னூன் ஆயிட்ட?" என்று அவரிடம் சொல்லியிருக்க வேண்டும். மஜ்நூனாகத் தன்னைக் கண்ட எரிக் க்ளாப்டன் தன் 'காதலி' பட்டி பாய்டை லைலாவாக உருவகித்துக் கொண்டார். தன் உணர்வுகளை ஒரு பாடலாக எழுதி இசையமைத்தார். 1970 -ல் 'DEREK AND THE DOMINOS ' என்னும் ஆல்பத்தில் அந்தப் பாடல் வெளியானது. ஏழு நிமிடங்களுக்கு மேல் நீண்ட பாடலாக இருந்ததால் முதலில் அது 'ஹிட்' ஆகவில்லை. பின்னர் மெல்ல மெல்ல ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்து எரிக் கிளாப்டனின் மாஸ்டர் பீஸாக ஆகிவிட்டது. இருபது வருடங்கள் கழித்து அப்பாடலின் 'அகோஸ்டிக்' பிரதி வெளியிடப்பட்டு 1993 -ல் சிறந்த ராக் பாடலுக்கான கிராமி விருதைப் பெற்றது.



தன் காதலியை லைலாவாக வைத்து எரிக் க்ளாப்டன் பாடிய வரிகள் இவை:

"உன் அருகில் யாரும் காத்திருக்காமல்
நீ தனிமையில் தவிக்கும்போது என்ன செய்வாய்?
நீண்ட காலம் ஓடிக்கொண்டும் ஒளிந்துகொண்டும்
இருந்துவிட்டாய் நீ
அது உன் வெற்றுப் பெருமிதம் என்று தெரியும் உனக்கு!

லைலா! என்னை மண்டியிட வைத்தாய்.
லைலா! கெஞ்சுகிறேன் நான், என் அன்பே!
லைலா! என் இனிய காதலி,
நோகும் மனதிற்கு ஆறுதல் தா!

உனக்கொரு ஆறுதல் தருவதாய் எண்ணி
முதியவன் உன்னை மூழ்கடித்தான்!
ஒரு முட்டாளைப் போல
நான் உன்மேல் காதலானேன்!
நீ என் உலகைத் தலைகீழாக்கினாய்!
லைலா...

முற்றும் நான் பித்தனாய் முடியுமுன்
நிலைமையைச் சீராக்கு.
வழியேதும் நமக்கில்லை என்று சொல்லாதே!
என் காதல் வீண் என்று சொல்லாதே!
லைலா..."




   
   
    

Saturday, October 23, 2010

பறவை-பாஷை.

ப்ளாக் உருவாக்கி எழுத ஆரம்பித்தவுடன் 'கையோடு அப்படியே ட்வீட்டரும் போட்டுடுங்க' என்று சிலர் சொன்னதைக் கேட்டு ஜோதியில் ஐக்கியமாகலாம் என்று நினைத்தேன். இது தகவல் தொடர்பில் ஒரு மாயாஜாலக் காலம். ஆர்குட், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற GROUP COMMUNICATION வலைகளில் உலகின் இளைஞர்கள் அனைவருமே, லிட்டரலி அனைவருமே சிக்கியிருக்கிறார்கள். நானும் முக நூலில் (FACE BOOK) ஒரு பக்கத்தைப் பட்டா போட்டேன். எங்கள் வீட்டுப் பசங்க மணிக்கணக்கில் அதில் மொக்கை போடுவதுபோல் என்னால் முடியாது என்பதைச் சீக்கிரமே தெரிந்து கொண்டேன். சாரு நிவேதிதா வெப்சைட்டையே பேஸ்புக் போலத்தான் நடத்தி வருகிறார். கொஞ்சம் இழுவையாக மொக்கை போடுபவர்களுக்கு இந்த ஏரியா சுத்தமாக ஒத்துவராது. ஜெயமோகன் மாதிரி ஆள் என்றால் லாகின் செய்வதே பாபம்! ஏற்கனவே LECTURER என்பதற்கு 'மொக்கையன்' என்று ஒரு குறியீட்டு மொழிபெயர்ப்பு உள்ளது. எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுத்துக்கிட்டு என்று ஜகா வாங்கிக்கொண்டேன். (அடடே! "ஜகா வாங்கிக்கொண்டேன்" என்னும் டைட்டிலை யாராவது துணை இயக்குநர்கள் கவனிக்கலாமே?)



இந்த வலைமனைகள் (வலை டீ கடைகள்? WEBCAFE !) விடலைகளின் ராஜ்ஜியம். இதில் ஒரு வரி வீச்சுகள்தான் அதிகம். என் மச்சான் ஒருவன் பரீட்சைக்குப் படித்துக்கொண்டே சாட்டடிக்கிறான். "F for ?" என்று கேட்டால் ஒரு பத்து வார்த்தைகளாவது சொல்வார்கள். FASHION ,FUN , F FOR 4X இப்படி. (FATHER , FUND என்றெல்லாம் எதிர்பார்த்தால் நீங்கள் ஒரு ஏலியன்!) அந்தப் பத்து வார்த்தைகளில் நிச்சயம் FACEBOOK என்பதும் இருக்கும். BOOKREADING ஒரு நல்ல பழக்கம். அதனால்தான் பலமணிநேரம் FACEBOOK படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஒரு ஹிந்தித் திரைப்பாடல் உண்டு. சோடா-புட்டிக் கண்ணாடி போட்ட தன் காதலனைப் பார்த்துக் காதலி பாடுவாள்: "ஏராளமான நூல்கள் படித்திருக்கலாம் நீ / கொஞ்சம் இந்த முகத்தையும் படித்துப் பார்!" இந்த வரிகளை நான் சூபித்துவப் பின்னணியில் அர்த்தம் எடுத்து / கொடுத்து ரசித்திருக்கிறேன். இப்போது அதை "FACEBOOK " என்றும் மறுவாசிப்பு செய்ய முடிகிறது.



அக்கவ்ன்ட் திறந்த சில நிமிடங்களிலேயே பல ஈ-மெயில்கள் வந்து மொய்க்கத் தொடங்கிவிட்டன. ஜங்க் மெயில்கள் மொய்ப்பதை ஈ மொயப்பதைப் போல் அருவருப்பவன் நான். எல்லாமே அழைப்பு அஞ்சல்கள், தன்னை என் நண்பன் / நண்பி என்று அறிவித்துக்கொண்டு வந்தவை. திடீரென்று உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒன்னேமுக்கால் டஜன் நண்பர்கள் எனக்குக் கிடைத்துவிட்டார்கள்! அடப்பாவிகளா, நான் காலேஜில் படித்தபோது எனக்கு நான்கு நண்பர்கள்தான் இருந்தார்கள். நாங்கள் நாடோடிகளைப் போல் திரிந்துகொண்டிருப்போம். 



அட்ரஸ் என்பதைத் தமிழில் முகவரி என்றுதான் சொல்கிறோம். அதாவது முகம்தான் ஒருவரின் முதல் அடையாளம். மற்றதெல்லாம் பிறகுதான். இந்த பேஸ்புக்கை ஒரு டைனமிக் அட்ரஸ் புத்தகம் என்று சொல்லலாம். முகமே முகவரியாக உள்ள புத்தகம். அது தொடர்ந்து நம்முடன் அரட்டை அடிக்கும் புத்தகம். ஆனால் சில பேர் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டாமால் வேறு படங்களைப் போட்டுவைத்திருப்பார்கள். பள்ளி மாணவன்  ஒருவன் சிம்பு படத்தைப்போட்டு "நான் 99 % கெட்டவன்" என்று எழுதியிருந்தான். "அப்போ நீ 1 % நல்லவனா? இதெல்லாம் ரொம்ப ஓவர்டா மாப்ள" என்று அதற்கு எதிர்வினை அனுப்பினோம்.

என் உறவினர்களில் யாருமே தமிழில் டைப் செய்வதில்லை. நான் மட்டும் தமிழில் மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருக்கிறேன். பேஸ்புக்கில் தமிழை ஆங்கிலத்திலேயே அடிக்கிறார்கள். இவர்கள் ஒலிபெயர்ப்பெல்லாம் படித்தவர்கள் அல்ல. ஒரு மாதிரி அடிப்பார்கள். ஒரு மாதிரி நாமாகப் புரிந்துகொள்ள வேண்டும். என் மச்சான் எடுத்த ஒரு புகைப்படத்திற்கு ஒருவன் இப்படி காமென்ட் அடித்திருந்தான்: POTTO ATUKKUMPOTHU POWER KATAYITUCHUNNU NINAKKIREN ...
இதை நான் முதலில் 'போட்டு எடுக்கும்போது கரண்ட் கட்டாயிடுச்சு....' என்று வாசிக்கத் தொடங்கிக் குழம்பினேன். வாசிக்க வாசிக்கப் பழகிவிடும் என்றார்கள். நெட் தமிழும் நாப்பழக்கம்தான் அவ்வையாரே!

சில அச்சுப் பிழைகளும் குழப்பக்கூடும். "SHE IS FINE ..." என்று இருக்கவேண்டியது "SHE IS FIRE ..." என்று இருந்தது. தட்டியதில் ஏற்பட்ட தவறு!

"UNION IS STRENGTH " என்று வந்த சீரியஸான மெஸ்ஸேஜுக்கு "ONION IS STRENGTH " என்று ஒரு நக்கலான பதிலும் கீழே இருந்தது. யூனியனுக்கான சக்தியை ஆனியன் தரவல்லது என்னும் சூட்சுமம் அறிந்தவன்தான் இதை அனுப்பியிருக்க வேண்டும்! வெங்காயம்...!    

'சாட்டிங்' வட்டாரத்தின் உள்மொழி (JARGON ) என்று சில வார்த்தைகள் உள்ளன. அந்தக் கலைச்சொற்கள் மிகவும் கலக்கலாக இருப்பதைக் காணலாம். கூலிங்கிளாசும் பாதி திறந்த சட்டையுமாக ஒருவன் தன் படத்தைப் போட்டு "THALA ROCKS ..." என்று டைப் அடித்திருந்தான். ராக்ஸ் என்னும் சொல்லின் அர்த்தபாவங்களை யோசித்தேன். இது ROCK MUSIC பின்னணியில் உருவான சொல்லாடல் என்று நினைக்கிறேன். இன்னொன்றும் தோன்றியது. தல பார்வையாலேயே பாறை உடைக்கிறாராம்! 
 "வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா - அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி ஆனது வேலவா!"
என்று முருகனைப் பற்றிப் பாடியிருக்கிறார். இதை "MURUGAN ROCKS ... " என்று கூறலாம் போலும். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் "THALA ROCKS ..." என்று போட்ட மேற்படித் தருதல தினமும் ஏழு மணிக்கு மேல் கடலைதான் உடைக்கிறது. எனவே "THALA NUTS ..." என்று பதில் அனுப்பினேன்!



"buddy ur cool!", "what's up there buddy?", "buddy reelly wanna stop the thing..." என்பன போன்ற உரையாடல்களை அடிக்கடி காணலாம். BUDDY என்றால் FRIEND . இப்படிப் பல 'பட்டி'கள் சாட்டடித்துக் கொண்டே இருக்கிறார்கள். 'பட்டி'களுக்கென்று வலைமனைகள் தனியாகவும் உள்ளன. 'பட்டி' மன்றங்கள்! "BUD "  என்றால் மலர் மொக்கு என்று பொருள். மொக்கை போடுபவனை BUDDY என்று கூறுவது அப்படிப்பார்த்தாலும் சரிதான்! இதற்கு இணையாக dude , crone , cobber , chum போன்ற சொற்களும் உள்ளன.
ஆனால் இந்தச் சொற்களையெல்லாம் அலேக்காக அள்ளிக் கடாசிவிடுகிறது ஒரு சொல். "baby !" ஆண் பெண் பேதமில்லாமல் ஒருவரை ஒருவர் இப்படி அழைத்துக்கொள்கிறார்கள். காதலர்கள், நண்பர்கள்... ஏன், எதிரியைக் கூட இப்படி அன்பொழுக அழைக்கிறார்கள்! பாப் பாடல்களில் இந்தச் சொல்லாடல் ஏறத்தாழ எல்லாப் பாடல்களிலும் வருகிறது.

"So baby, be mine.." - மைக்கேல் ஜாக்சன்
"This is not a love song, bye bye baby.." - மடோனா
"Baby hold me and never leave me
This love is my oxygen" - ஸ்பைஸ் கேள்ஸ் (காரப்பொடிச் சிறுமிகள்)
"Baby that's why you captured my heart" - பாக் ஸ்ட்ரீட் பாய்ஸ் (பின்தெரு பசங்க) 
"Hit me, baby, one more time" - பிரிட்னி ஸ்பியர்ஸ்

சட்டி சூடேறியவுடன் பொரிந்து தத்திக் குதிக்கும் சோளப்பொரி போன்று தகிக்கும் இசையைக் கேட்டபடி ரசிகர்கள் துள்ளிக் குத்தித்தாடுவதால் அது 'பாப்' இசை எனப்படுகிறது. It makes you pop out of yourself! இதுதான் ECSTASY - பேரின்பம் என்னும் சொல்லின் அர்த்தம்! தமிழில் சங்க காலத்திலேயே பாப் இசை வந்துவிட்டது. கலிப்பாவின் ஓசை "துள்ளல்" ஓசைதான்! இந்த "பேபி" என்னும் சொல்லாடல் தமிழ் நாட்டுப்புற இசையில் இருக்கிறது. காதலியை "புள்ள" என்று அழைப்பது "பேபி" என்று சொல்வதுதானே? எருமைக் கடா போல் வளர்ந்த ஒருவனை "பேபி" என்று கொஞ்சுவதெல்லாம் பார்க்க சகிக்கல என்று தோன்றுவது வாஸ்தவம்தான். ஆனால் உளவியல் அறிஞர்களைக் கேட்டால் சொல்லுவார்கள், குழந்தையாக அரவணைக்கப்பட வேண்டும் என்னும் ஏக்கம் வளர்ந்தவர்களின் ஆழ்மனதில் இருக்கிறது. அதனால்தானே "என்னைத் தாலாட்ட வருவாளா?" என்பது போன்ற பாடல்கள் இன்ஸ்டன்ட் ஹிட் ஆகின்றன! "குழந்தைகளைப் போல் ஆகாதவரை சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது" என்று ஏசு நாதரும் சொல்லிக்கீறாரு.

அமெரிக்க ஸ்லாங்குகளைத்  தமிழில் மிக இலகுவாக மாற்றிப் பார்க்க முடிவதும் வியப்பாகத்தான் இருக்கிறது.
 "buddy im bit a sort of hang over from d stuff ynite" என்று புதுயார்க்கில் ஒருவன் டைப் செய்வதை "நேத்து அட்ச்ச சரக்கோட மப்பே இன்னம் எறங்கல மச்சி" என்று நியூசேரியில் ஒருவன் பேசுவதாக மொழிபெயர்க்கலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர்!
"Hi buddy, gonna u come 2 play? v gonna rock d harvard dudes"
"nope, i'm stuck o d party all nite, bad stuff u c"
என்னும் CHAT உரையாடலை,
"வாராயோ என்றனள் தோழீ ஆடுகளம் 
பாறை உடைப்பதொரு பூமுகை யன்ன  
அதனெதிர் வாரேன் என்றனன் யானே 
நெருநல் மடுத்த தேறலின் 
ஆகம் கடுப்ப ஆற்றா தேனே"
என்று சங்க இலக்கிய ஸ்டைலிலும் கூறலாம்!

இதெல்லாம் லைட்டான சொல்லாடல்கள்தான். இனிமேல்தான் வெய்ட்டான வார்த்தைகளைப் பார்க்கப்போகிறோம். நெட்டரட்டையின் (NET CHAT ) தத்துவப் பின்னணி இதில்தான் நமக்கு விளங்கப் போகிறது. பெருவியப்பின் விளிம்பு வரை அக எழுச்சி கொள்ளும் ஒரு 'பட்டி' அந்த அதீத நிலையில் உதிர்க்கும் மந்திரம் "HOLY COW !" என்பதாகும். "புனிதப் பசு" என்று தமிழில் கூறலாம். பசு இந்துக்களுக்குப் புனிதமானது. "கோமாதா எங்கள் குலமாதா" என்று புகழப்படுவது. பால் அமிர்தம் எனில் கோமியம் தீர்த்தம்! ஆனால், அமெரிக்க - ஐரோப்பிய 'பட்டி'களுக்கு பசு எப்படிப் புனிதம் ஆனது? 



கிருத்துவர்களின் புனித நூலான பைபிளின் பழைய ஏற்பாட்டில் 'BOOK OF NUMBERS " என்னும் பகுதியில் 'புனிதப்  பசு' பற்றிய செய்தி வருகிறது. இந்தப் பகுதி யூதர்களின் புனித நூலான "தோரா"விழும் உள்ளது. "கடவுள் யூதர்களைப் பார்த்துக் கட்டளையிட்டார், வடுவோ குறையோ இல்லாத, நுகத்தடி பட்டிராத ஒரு செந்நிறப் பசுவை அவர்கள் உம்மிடம் கொண்டு வரவேண்டும்." என்பதே அந்த முன்னறிவிப்பு. அப்படியொரு அதிசயப் பசுவுக்காக யூதர்கள் 2500 வருடங்களாகக் காத்திருக்கிறார்கள்! இதுவே "HOLY COW !" என்பதன் பின்னணி.

சொதப்பலின் விளிம்புக்குத் தள்ளப்படும் ஒரு 'பட்டி' உதிர்க்கும் மந்திரச் சொல் "HOLY SHIT " என்பதாகும். இதை முன்பெல்லாம் "BULL SHIT " என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். புனிதப் பசுவின் சாணம் என்பதால் இப்போது அதை "HOLY SHIT " என்று சொல்கிறார்கள் எனலாம். "HOLY CRAP " என்னும் மாற்றுச் சொல்லும் உண்டு. இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றுதான்: "புனித மலம்!" மலத்தில் என்ன புனிதத் தன்மை என்கிறீர்களா? இந்த சொல்லாடல்களின் சமயப் பின்னணி புரிந்தால் இப்படிக் கேட்கமாட்டீர்கள். எகிப்திய புராண மரபில் தலைமைக் கடவுளாகக் கருதப்பட்ட சூரியக் கடவுள் "ரா"வின் நேரடிப் பிரதிநிதி என்று எகிப்தியர்கள் மலவண்டைத்தான் கருதினார்கள். மலத்தில் தன் முட்டைகளை இட்டு உருட்டிக்கொண்டு ஓடும் மலவண்டினை (SCARAB BEETLE / DUNG BEETLE ) 'ரா'வின் ஒரு வடிவமான 'கெபரா' என்னும் தெய்வத்தின் குறியீடாகக் கண்டார்கள். 'கெபரா' (KHEPERA ) என்றால் "வெளிப்பாடு" என்று பொருள். பொந்திலிருந்து வெளிப்படுவாதல் இந்தப் பெயர். எனவே மலவண்டுகளை "ரா"வின் புனித வெளிப்பாடு என்று எகிப்தியர்கள் வணங்கினார்கள்! 'கெபரா' சூரியனை வானில் உருட்டிச் சென்று மேற்கில் சாய்க்கிறான் என்பது தொன்மம். அதே போல் மலவண்டு மலப்பந்துகளை உருட்டிச் செல்வதால் அதை 'அழகியல்' பார்வையுடன் இப்படியொரு குறியீடு ஆக்கிவிட்டார்கள்! அதைத்தான் "HOLY SHIT !" என்னும் மந்திரம் குறிக்கிறது!

கிழக்கில் நாம் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் கண்டுபிடித்துள்ளோம். மேற்கில் அவர்கள் HOLY CRAP , HOLY SHIT என்று இரண்டு மந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள்!

சாட்டிங் வலைமனைகளில் ஒரு மணி நேரம் உரையாடிக்கொண்டிருந்தால் அது ஒரு மாயச் சுழல் என்பதை உணர்ந்துகொள்ளலாம். உள்ளே இழுக்கப்பட்டால் கொஞ்சம் PSYCHEDELIC FEELING தட்டுகிறது. பெங்களூரு வணிகச் சாலையில் இரவில் நடந்து செல்வதுபோல. மங்கோலியர்கள், அமெரிக்கர்கள், நீக்ரோக்கள், ஐரோப்பியர்கள், வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் என்று உலகின் அனைத்து இன அடையாளங்களும் தென்படும் ஒருவித 'ராஸ லீலை' அது. கண்ணன் இல்லாத ராஸ லீலை!

மில்லியன்த் எண்ணிக்கையில் மனங்கள் உறவாடிக்கொண்டிருக்கும் இந்த வலைத்தளங்கள் என்னதான் செய்கின்றன? உலகளாவிய பொது உளவியல் ஒன்றை உருவாக்க அவை எத்தனிக்கின்றன என்கிறார் டான் பிரவ்ன். அவருடைய "THE LOST SYMBOL " நாவலில் ஒரு காட்சியில், 'நோயடிக்ஸ்' அறிவியலில் பரிசோதனைகள் செய்த கேத்தரின், பேராசிரியர் ரொபர்ட் லங்க்டனிடம் கூறுவார்,"பிரபஞ்சப் பிரக்ஞை என்னும் கருத்து ஏதோ புதிய கால அப்பாலைத் தத்துவம் அல்ல. அது ஒரு பச்சை அறிவியல் எதார்த்தம். அதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் இந்த உலகையே மாற்றும் சாத்தியம் உள்ளது. நோயடிக் அறிவியலின் அடிக்கருத்து இதுதான். இன்னும் என்ன, அது இப்போதே நடந்துகொண்டுள்ளது. உன்னைச் சுற்றி அதை நீ உணர முடியும். சாத்தியம் என்று நாம் கற்பனை செய்திராத வழிகளில் தொழில்நுட்பம் நம்மை இணைத்துக்கொண்டு வருகிறது: ட்வீட்டர், கூகிள், விக்கிபீடியா மற்றும் பிற - எல்லாமே சேர்ந்து பின்னிப் பிணைந்த மனங்களின் ஒரு வலையை உருவாக்குகின்றன. நான் உனக்கு உறுதியளிக்கிறேன், நான் என் சோதனை முடிவுகளைப் பதிப்பித்தவுடன், டிவிட்டராட்டிகள் 'நோயடிக்ஸ் படிக்கலாம்..' என்று சொல்லும் ட்வீட்டுகளை அனுப்புவார்கள். உடனே இந்தத் துறை மீதான ஆர்வம் அதீதமாக வளர்ந்துவிடும்."   

உண்மையில், இலக்கிய வாதிகள் இப்போது பேசுகின்ற கட்டுடைப்பு, பின்-நவீனத்துவம் போன்றவற்றை இவற்றில் காணமுடியும். ஒரு மையமும் இன்றி விளிம்புகளும் இன்றி இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு ANONYMOUS இயக்கம் இது. அதனால்தான் "கண்ணன் இல்லாத ராசலீலை" என்று சொன்னேன். டான் பிரவ்ன் சொல்வதுபோல் ஒரு "பிரபஞ்சப் பொதுப் பிரக்ஞை" இதன் மூலம் உருவாகிவரும் என்றால் ராசலீலையின் கண்ணன் அந்தப் பிரக்ஞைதான். இப்போது அதற்கான BASE WORK இந்த வலைமனைகளில் நடந்து வருவதாகக் கூறலாம். ஆனால், பேருண்மைகளை உள்வாங்கக் கூடிய பக்குவத்தில்  ஒரு கூட்டுப் பிரக்ஞையை (COLLECTIVE CONSCIOUSNESS ) அது உருவாக்குமா என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. அது கிருஷ்ணன் போன்ற ஆளுமையின் பிரக்ஞை நிலையின் ஒரு பரிமாணத்தை மட்டுமே எட்டக்கூடியதாக இருக்க முடியும். இப்போதே, சாட்டிங் பட்டிகளின் உலகில் காணலாகும் அம்சங்களுக்கு, சாரு சொல்வது போல், கலகம்-காதல்-இசை போன்ற அம்சங்களுக்கு, ஒரு ஆன்மிக ஆளுமையைக் கூற வேண்டுமென்றால் கிருஷ்ணனைத்தான் சொல்லமுடியும். எதிர்மறை அம்சங்கள் கச்சிதமாக இணையும் ஒரு ஆளுமை அவர்.(ஓஷோவின் "KRISHNA  - THE MAN AND HIS PHILOSOPHY " என்னும் நூலைப் படித்துப்பார்த்தால் தெரியும். இந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா' நாவல் கிருஷ்ணனின் ஆளுமையை நவீன காலச் சூழலில் பொருத்திக் காட்டுகிறது.)

'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் ஒரு காட்சி. பெயர் தெரியாத ஒரு 'சராசரி மனிதன்' ஐ.ஜி.பி-யின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறான். அவன் யார் என்று கண்டுபிடிக்க ஐ.ஜி.பி அலுவலகத்தின் கணிப்பொறி மண்டைகள் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. HACKING EXPERT - ஐ அழைக்க வேண்டும் என்று சொன்னவுடன், "டாக் டு ஐ.ஐ.டி" என்கிறார் ஐ.ஜி.பி. சிறிது நேரத்தில் ஐ.ஐ.டி-யில் பயிலும் ஒரு மாணவன் வருகிறான். அவன் ஒரு HACKER. விஞ்ஞானி போன்ற தோற்றத்தில் ஒருவரை எதிர்பார்த்த ஐ.ஜி.பி-க்கு ஜீன்சும் டி-ஷர்ட்டும் ஸ்பைக் முடியுமாக பதினெட்டு வயதில் ஒரு முள்ளம்பன்றித் தலையணைப் பார்த்ததும் கொஞ்சம் வியப்பாக இருக்கும். உண்மைதான், நாற்பதைக் கடந்த பேராசிரியர்களுக்கெல்லாம் HACKING தியரிகூடத் தெரியாது. HACKING என்றால் கணிப்பொறி உலகில் கன்னம் வைத்துத் திருடுவது என்று சொல்லலாம். அல்லது, என்னவாவது செய்து தடைகளை மீறி உள்ளே நுழைந்து விலக்கப்பட்ட கனியைப் புசிப்பது. ஆதித்தகப்பன் ஆதாம் செய்த வேலைதான். அந்த உளவியல் பிள்ளைகளிடமும் இருக்கும் அல்லவா? HACKERS அந்த விஷயத்தில் பழம் தின்று கொட்டை போடுபவர்கள்! தீராத விளையாட்டுப் பிள்ளைகள்!



சாட்டிங் வலைமனைகளில் எனக்கு மிகவும் பிடித்த பெயர் "TWITTER " - ட்வீட்டர். "TWEET " - ட்வீட் என்றால் பறவையின் சத்தம் என்று அர்த்தம். சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவைகளின் சிக்னல் சத்தங்கள். அப்படிப் பல கோடி சிட்டுக்குருவிகள் ட்வீட்டிக் கொண்டிருக்கும் ஒரு 'சிம்பொனி' இது. ஆன்மிகத்தில் சங்கேத பாஷையைப் 'பறவையின் குரல்' என்று கூறுவார்கள். சூபி ஞானி அத்தார் "பறவைகளின் பரிபாஷை" (MANTIQ ul -TAYR ) என்று ஒரு காவியமே எழுதியிருக்கிறார். முப்பது பறவைகள் தங்களின் ராஜ பறவையைத் தேடிக்கொண்டு ஏழு பள்ளத்தாக்குகள் கடந்து ஒரு சிகரத்திற்குச் செல்கின்றன. எங்கு தமது கூட்டுப் பிரக்ஞையாகவே அந்த ராஜ பறவையைக் கண்டுகொள்கின்றன என்பது அதன் சாரம்.



மவ்லானா ரூமி எழுதிய ஒரு சூபிக் கதை ஞானிகள் பறவைகளைப் போல் இருப்பார்கள் என்று கூறுகிறது: "அரபிகளின் அரசன் இம்ரவுல் கைஸ்
அழகன், காதல் பாடல்கள்  நிரம்பிய கவிஞன். பெண்கள் அவனை ஏக்கத்துடன் காதலித்தார்கள். எல்லோரும் அவனை விரும்பினார்கள். ஆனால் ஓர் இரவு அவனுக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்று அவனை முழுமையாக மாற்றிவிட்டது. அரசையும் தன் குடும்பத்தையும் துறந்தான்.சூபித் துறவிகளின் கம்பளி ஆடையை அணிந்துகொண்டு ஒரு நிலத்திலிருந்து இன்னொன்றுக்கு, ஒரு பருவ காலத்திலிருந்து இன்னொன்றுக்கு என்று அலைந்துகொண்டிருந்தான். அவனது அரச சுயத்தைக் காதல் கரைத்துவிட்டது! தபூக் நாட்டிற்குச் சென்று செங்கல் சூளையில் வேளை  செய்தான். தபூக் நாட்டின் மன்னனிடம் இம்ரவுல் கைஸ் பற்றிக் கூறப்பட்டது. அவனைச் சந்திக்க அன்றிரவே அவர் சென்றார்.
'அரபிகளின் அரசரே! இக்காலத்தின் அழகிய யூசுப் நீங்களே! இரண்டு ராஜியங்களின் மன்னர் நீங்கள். தேசங்களால் ஆனது ஒன்று. பெண்களின் அழகால் ஆனது மற்றொன்று. என்னுடன் நீங்கள் தங்கியிருக்கச் சம்மதித்தால் அது எனக்குக் கண்ணியமாகும். நீங்கள் ராஜியங்களைத் துறக்கிறீர்கள், ஏனென்றால், அவற்றைவிட மேலானதை ஆசிக்கிறீர்கள்!'
இவ்வாறு அந்த மன்னன் இம்ரவுல் கையசைப் புகழ்ந்துகொண்டும் இறைவனைப் பற்றிய தத்துவங்களை உளறிக்கொண்டும் இருந்தான். ஒன்றுமே பேசாமல் இருந்த இம்ரவுல் கைஸ் சட்டென்று அவன் பக்கம் சிந்து அவன் காதில் ஏதோ சொன்னான். அந்தக் கணத்தில் அந்த இரண்டாம் அரசனும் ஒரு சித்தனாகி விட்டான்! கையோடு கை கோர்த்தபடி அவர்கள் அந்த நாட்டைவிட்டுச் சென்றார்கள். ராஜ உடைகள் இல்லை. கோடடை இல்லை, கொடியும் இல்லை!
காதல் இதைத்தான் செய்கிறது, தொடர்ந்து செய்கிறது.       
பெரியவர்களுக்குப் பாலைப் போன்றும், சிறியவர்களுக்குத் தேனைப் போன்றும் அது சுவைக்கிறது.
காதலே கடைசி முப்பது எடை. அதை வைத்தவுடன் படகு கவிழ்ந்துபோகும்.
அவ்விருவரும் தானியங்களைக் கொத்தித் தின்னும் பறவைகளாகச் சீன நாட்டில் திரிந்தார்கள். தாம் அறிந்த ரகசியத்தின் அபாயத்தால் அரிதாகவே பேசினார்கள்.
மகிழ்ச்சியிலோ அல்லது எரிச்சலாகவோ
அந்தக் காதல் ரகசியம் பேசப்படுமானால்
நூறாயிரம் தலைகளை ஒரே வீச்சில் வெட்டும்.
இந்த ரகசியத்தின் வாள் தோன்றும்போது 
உயிரின் புல்வெளியில் காதலின் சிங்கம் நடக்கிறது.
உலக அதிகாரம் உண்மையில் வேண்டுவதெல்லாம் 
இந்த பலகீனத்தைதான்!
எனவே அந்த அரசர்கள் கிசுகிசு என்று பேசிக்கொண்டார்கள், எச்சரிக்கையாக.
என்ன பேசினார்கள் என்பதை இறைவன்தான் அறிவான்.
சொல்ல முடியாத சொற்கள் அவை.
பறவை-பாஷை.
ஆனால் சிலர் அதை பாவனை செய்தார்கள்,
சில பறவைச் சத்தங்களைக் கற்றுக்கொண்டார்கள்,
மதிப்புடையவர்கள் ஆனார்கள்."