Wednesday, October 13, 2010

தலைகளின் சிலைகள்

டான் பிரவ்ன் எழுதிய லேட்டஸ்ட் நாவலான "THE LOST SYMBOL" (தொலைந்த குறியீடு) படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்காவின் அடையாளங்களாக உள்ள முக்கியமான கட்டிடங்களின் வடிவமைப்பின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களை விளக்கிக் கொண்டு செல்கிறது இந்த நாவல். U .S CAPITOL  கட்டிடத்தின் வரலாற்றைக் கூறும் பகுதியில் அதன் உட்பகுதியான ROTUNDA -ரொடுண்டாவில் முதன் முதலாக நிறுவப்பட்ட ஜார்ஜ் வாஷிங்க்டன் சிலையைப் பற்றிய அற்புதமான செய்தி ஒன்று. ஒரேஷியோ க்ரீனோ (ORATIO GREENOUGH ) என்பவர் உருவாக்கிய அந்தச் சிலை அமெரிக்காவின் தேசத் தந்தையான ஜார்ஜ் வாஷிங்க்டன்-ஐ  "ஜியூஸ்" (ZEUS ) என்னும் கிரேக்கப் புராண தெய்வமாக உருவகிக்கிறது! திறந்த மார்புடன் இருக்கும் அந்தச் சிலை பின்னாளில் எழுந்த சமய எதிர்ப்பின் காரணமாக வேறு ஒரு அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.


இந்தச் செய்தியைப் படித்துவிட்டு நூலை மூடிவைத்தேன். நம் ஊர்களில் கண்ணில் படும் தலைவர்களின் சிலைகள் பற்றிய எண்ணங்கள் மூளையில் தோன்றின. வாஷிங்க்டன் சிலையைப் போன்ற தொன்மப் பின்னணி எதுவும் நம் தலைவர்களின் சிலைகளில் இல்லாததால் அவற்றின் மீது "அங்கதம்" என்னும் உத்தியைத்தான் நம்மால் எளிதாக ஏற்றிப் பார்க்க முடிகிறது. என்றாலும், என்னால் முடிந்த அளவு சில தொன்மங்களையும் ஏற்றிப் பார்த்தேன். அதன் அவுட்புட் எதிர்பாராத தரிசனங்களைத் தந்தது!

தந்தை பெரியாரின் சிலையை எண்ணிப்பார்த்தேன். சாக்ரடீஸ் சிலையை மாடலாக வைத்துச் செய்யப்பட்டது போல் தெரிகிறது. திராவிட இயக்கத்தில் தந்தை பெரியாரை சாக்ரடீசுடன் ஒப்பிட்டுப் பலரும் பேசியுள்ளார்கள், எழுதியுள்ளார்கள். முதல் பார்வைக்கு எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் திருச்சி பஸ் ஸ்டாண்டு பகுதியின் பின்னணியில் பெரியார் சிலையை அவதானித்தபோது அதன் காட்சித் தளம் மாறிவிட்டது. இதனை உளவியலில் "கெஸ்டால்ட்" என்று கூறுவார்கள். பாவமான ஒரு முதியவர் ஒரு மேடையில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் பரிதவித்தபடி, "யப்பா....., யாராவது இறக்கி விடுங்களேம்ப்பா" என்று கெஞ்சிக்கொண்டு நிற்பதுபோல் தோன்றியது.

ஏதோ ஓர் ஊரில் பார்த்த ஞாபகம். தந்தை பெரியாரின் சிலைதான். அவர் நெற்றியில் பளிச்சென்று நாமம் போட்டிருந்தது! ஒரு கணம் ஸ்தம்பித்து, ராமசாமியை உண்மையிலேயே 'ராமசாமி' ஆக்கிவிட்டார்களா? என்று உற்றுப் பார்த்தேன். அது மேலேயிருந்து போடப்பட்ட நாமம் என்று கண்டேன். ஆமாம், திறந்த வெளியில் நிற்கும் எல்லாச் சிலைகளுக்கும் நேரும் அவலம்தான் அது. காக்கா கக்கா போய் வைத்திருந்தது. SATIRICAL CROW ! என்ன ஒரு அங்கதமான ஷிட்டிங் கோயின்சிடன்ஸ்! தந்தை பெரியாரைப் பெரிதும் மதிப்பவன் என்ற வகையில் என் உள்ளத்தில் கோபம் பொங்கியது. இது ஒரு ஆரியச் சதி என்பதைக்கூட உணரும் திராணியற்றுப் போய்விட்டோமா? ஆரியர்களின் பித்ருக்கள் இப்படி காக்கைகளாக வந்து திராவிடத் தலைவர்களின் சிலைகள் மீது, அதுவும் தலைகள் மீது இப்படிக் கழிந்து பழிவாங்குவது புரியவில்லையா? கருஞ்சட்டைக் காரர்கள் போலவே கரிய நிறம் கொண்டு வேடமிட்டு வருகின்றனவே! இது ஆரிய சதிதானே? "கரிய உடல். அதற்குள் கக்கா ஏந்திய குடல்!" என்று இந்நேரம் நாம் முழங்கியிருக்க வேண்டாமா? "மண்டைச் சுரப்பை உலகு தொழும்" என்று பாவேந்தர் பாடினாரே, அந்த மண்டைக்கா இந்த கதி?

சரி, இந்தக் கிண்டல்கள் இருக்கட்டும். சீரியசான விஷயத்திற்கு வருகிறேன். பெரியாரைத் 'திராவிட சாக்ரடீஸ்' என்று கூறுவதுகூட மேம்போக்கான பார்வைதான். சாக்ரடீசுக்கு வெகு காலத்திற்கு முன்பே உருவாகிவிட்ட எகிப்திய, கிரேக்கத் தொன்மங்களுடன் நாம் பெரியாரை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பெரியாரை நாம் 'பகுத்தறிவுப் பகலவன்' என்று அழைக்கிறோம். பகலவன் - சூரியன் என்பது கிரேக்க மற்றும் ரோம சூரியக்கடவுளான அபோலோ-வைக் குறிக்கும். அபோலோவின் தந்தையான ஜியூஸ் பார்ப்பதற்கு அசப்பில்  கொஞ்சம் பெரியாரைப் போலவே இருக்கிறார்.


 எகிப்திய மரபில் சூரியக்கடவுள்தான் முதல் மற்றும் தலைமைக் கடவுள். அவருடைய பெயர் "ரா" என்பதாகும்.இது ராமசாமி என்பதன் சுருக்கம் என்பதைக் கவனிக்கவும்! ஈ.வெ.ரா என்பது ஒரு ட்ரினிட்டி பெயர். அதில் ரா என்பது எகிப்திய சூரியக் கடவுளைக் குறிக்கிறது. மற்ற இரண்டு இனிஷியல்கள் யாரைக் குறிக்கின்றன என்பதை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். எகிப்திய மரபில் "ரா"-வை மனித உடலும் வல்லூறின் தலையும் கொண்ட ஒரு உருவமாக வரைகிறார்கள். அதன் தலை மீது சிகப்புச் சூரியன் வட்டமாக வரையப்படுகிறது. அந்தச் சூரியன்தான் பெரியாரின் கழகக் கொடியின் நடுவில் உள்ளது!

தந்தை பெரியார் - சாக்ரடீஸ் - அபோலோ - ஜியூஸ் - ரா என்னும் இந்த வாசிப்பை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சமயக் குறியீட்டியல் பேராசிரியராக இருக்கும் ரொபர்ட் லங்க்டனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். "வாவ்! இட்ஸ் ட்ரூலி ஆசம்!" என்று பதில் அனுப்பினார். பிரதிகளில் மறைந்திருக்கும் சரடுகளை உருவியெடுத்து முடிச்சுப்போட்டு இவ்வாறு மறுவாசிப்பு செய்வதை நாம் 'சரடு வாசிப்பு' (STRING READING ) என்று அழைக்கலாம்.இது இயற்பியலில் உள்ள ஸ்ட்ரிங் தியரி போன்றதுதான்!     
அறிஞர் அண்ணாவின் இரண்டு வகையான சிலைகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. ஒன்றில் அவர் அமர்ந்து ஒரு நூலைப் படித்துக்கொண்டிருப்பார். இன்னொன்றில் நின்றபடி கை நீட்டி ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டுவார். அண்ணா அவ்வளவு ஆழ்ந்துபோய் அப்படி என்ன நூலை வாசிக்கிறார் என்று நான் யோசிப்பதுண்டு. கல்லூரி மாணவர்கள் இடையே அதற்கு ஒரு கிண்டலான பதில் உள்ளது. அதாவது, அண்ணா காமசூத்திரம் படிக்கிறார் என்பார்கள்.அண்ணாவே தான் முற்றும் துறந்த ஒரு முனிவனல்ல என்று கூறியிருப்பதால் இப்படி யோசிக்க இடமுள்ளது எனலாம்.இந்த யூகத்தின் மீது பிராய்டிய உளப்பகுப்பாய்வின் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். ஜாதி மத பேதமின்றி - ஏன், ஆத்திக நாத்திக பேதமுமின்றி- அந்த சப்ஜெக்டைதான் பொது நினைவு மனம் சுவாரஸ்யம் என்று கருதுகிறது.( 'One of  the secondary manifestations of the great yearning ' என்பார் இத்ரீஸ் ஷா)

 ஆனால் மாணவர்களின் இந்தக் கருத்து தவறென்றே நான் சொல்வேன். ஏனெனில், காமசூத்திரத்தை ஒருவர் இவ்வளவு நாட்கள் படித்தபடி உட்கார்ந்துகொண்டே இருப்பார் என்று தோன்றவில்லை. அவர் படிப்பது திருக்குறளாகத்தான் இருக்க வேண்டும்.(திருக்குறளில் எந்தப் பால் ? என்று கேட்கிறீர்களா?) திருக்குறள் என்றவுடன் குமரிமுனையில் உள்ள விசுவரூப திருவள்ளுவர் சிலை நினைவுக்கு வருகிறது. அமெரிக்காவுக்குச் சுதந்திர தேவி சிலை போல தமிழ் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பது அய்யன் திருவள்ளுவர் சிலை. அது திறக்கப்பட்டபோதே நண்பர் ஒருவர் கூறினார், வள்ளுவர் கொஞ்சம் நொடித்துக்கொண்டு நிற்பதைப்போல் தெரிகிறது என்று. எனக்கும் அது என்னவோ அர்த்தநாரீஸ்வரர் சிலை போல் பட்டது. லேசாக இடை ஒசிந்து நிற்கிறார். அதற்கு ஒரு பிசியாலஜிக்கல் காரணம் இருக்கிறது என்று ஒருவர் சொன்னார். அதாவது, இரண்டாயிரம் வருடங்களாகக் கையில் எழுத்தாணியும் ஓலைச்சுவடியுமாய்ப் பலகையில் உட்கார்ந்தே இருந்துவிட்டார் அல்லவா? அதனால் இவ்வளவு காலம் சென்று எழுந்திரிக்கும்போது ஸ்டெடியாக நிற்கமுடியாமல் அப்படி நொடித்துக்கொண்டு நிற்கிறாராம்.

திருவள்ளுவரின் ஒசிந்த இடையைப் பற்றிப் பேசியதால் ஏ.கே.வில்வம் எழுதிய ஒரு வரி மனதில் மின்னுகிறது. "தச்சன் உளி பட்ட தையல் இடை போல் உன் கையெழுத்து!" என்று வருணித்திருந்தார். யாருடைய கையெழுத்தை? கலைஞரின் கையெழுத்தைத்தான்! எப்பூடீ? கலைஞரின் கையெழுத்தை சில நூல்களில் பார்த்திருக்கிறேன் என்பதால் இதைப்படித்தவுடன் தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் என்றுதான் தோன்றியது. அவரின் கையெழுத்து எழுத்துக்களைக் கூர்ப்பாக எழுதும் பாணியாகும். 'ண'-வை இயற்பியலில் எழுதப்படும் ரெசிஸ்டன்ஸ் குறியீடு போல எழுதுவார். அவருடைய கையெழுத்துப் படியைப் பார்த்தால் சிக்கலான ஒரு சர்க்யுட்டைப் பார்ப்பதுபோல் இருக்கும். என் நண்பர் ஒருவர் "தலைவரின் எழுத்தில் ஒரு பவர் இருக்கும்" என்று அடிக்கடி கூறுவதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது!

சரி, அறிஞர் அண்ணாவின் சிலையைப் பார்ப்போம். சுட்டு விரல் நீட்டியபடி நிற்கும் அண்ணாவின் சிலையைப் பல ஊர்களில் கண்டிருக்கிறேன். அந்தக் கையை ஒரு குறியீடாக வைத்து யோசித்திருக்கிறேன். "ANGELS and DEMONS " என்று ஒரு திரைப்படம். (இதுவும் டான் பிரவ்னின் நாவல்தான்) வாட்டிகன் நகரிலேயே முழுப்படத்தையும் எடுத்திருந்தார்கள். சமயக் குறியீடுகளை டீகோட் செய்து "இல்லுமிநாட்டி" என்னும் இயக்கத்தின் சதியைப் பேராசிரியர் ஒருவர் முறியடிப்பதுதான் கதை. தேவாலயங்களில் உள்ள தேவதைகளின் கைகளை அவர் கவனிப்பார். ஒவ்வொன்றும் ஒரு திசையில் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். அவை சுட்டும் திசைகளைத் தொடர்ந்து சென்று ஒரு ரகசிய அறையைக் கண்டுபிடிப்பார். அதே போல் நானும் அண்ணாவின் கை எங்கு சுட்டிக்காட்டுகிறது என்று சில ஊர்களில் அவதானித்தேன். டாஸ்மாக் கடை, பொதுக் கழிப்பறை, சினிமா தியேட்டர்.... இப்படி வயிற்றைப் பிரட்டும் சமாச்சாரங்களாக வந்தன. ரிசர்ச்சைக் கைவிட்டுவிட்டேன்.

ஒரு சூபிக் கதை உண்டு. சூபி ஞானி துன்னூன் மிஸ்ரி, எகிப்தின் புராதனப் பகுதிகளில் திரிந்துகொண்டிருந்தார். கை நீட்டி சுட்டுவிரலால் எதையோ சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிலை இருந்தது. அதன் பீடத்தில் "சுட்டும் இடத்தில் பொக்கிஷத்தைத் தேடு" என்று எழுதப்பட்டிருந்தது. அது சுட்டும் திசையில் வெகு தொலைவில் பிரமிடுகள் இருந்தன. பல பேர்கள் அந்தப் பிரமிடுகளில் பல காலமாகக் குடைந்துகொண்டிருந்தார்கள். பொக்கிஷம் கிடைத்தபாடில்லை. துன்னூன் மிஸ்ரி அந்தச் சிலையை ஓர்ந்து கவனித்தார். அது சூரிய தேவனின் சிலை. அதன் தலை மீது சூரியன் இருக்க வேண்டும். எனவே சூரியன் உச்சிக்கு வரும் நேரம்வரை காத்திருந்தார். சூரியன் உச்சியில் நின்றபோது அந்தச் சிலையின் கையின் நிழல் நேராகக் கீழே விழுந்தது. (மெய்ம்மையும் அதன் குறியீடும் நேர்ப்ப்படும்போது மனவெளியில் விழும் நிழல்! அது மெய்ம்மையின் நிழலா? குறியீட்டின் நிழலா?) துன்னூன் மிஸ்ரி அந்த நிழல் கையைக் கவனித்தார்கள். இப்போதுதான் அந்த நிழல் சிலையின் அளவிலேயே நேர்த்தியாக இருக்கிறது, நீட்டப்பட்டோ குறுக்கப்பட்டோ இல்லாமல். அந்த நிழலின் சுட்டுவிரல் முனை ஒரு சதுரக் கல்லைத் தொட்டுக்காட்டியது. துன்னூன் மிஸ்ரி அந்தக் கல்லைப் புரட்டியபோது அது ஒரு ரகசியப் பாதையின் வாசலாக இருப்பதைக் கண்டார். அதற்குள் சென்று பொக்கிஷத்தை அடைந்தார்.
இது ஓர் அரிய சூபிக் கதை. பொதுவாக சூபிக் கதைகள் இப்படி இன்டியானா ஜோன்ஸ் பாணியில் இருக்காது.இந்தக் கதையில் வந்தது போல் நாம் ஏன் அண்ணாவின் சிலையை வைத்தோ அம்பேத்கரின் சிலையை வைத்தோ பொக்கிஷத்திற்குத் தோண்டக்கூடாது? என்று எண்ணினேன். வேண்டாம். பாதாளச் சாக்கடையில் விழ நேரலாம். அல்லது கேபிள்களை அறுத்தோம் என்று உள்ளே தள்ளப்படலாம். ரிஸ்க் எடுக்க நான் தயாராக இல்லை.

எங்கள் கிராமத்தில் நதிக்கரையில் ஒரு வாழை மண்டி இருந்தது. மண்டியின் முன் காந்தியடிகள் சிலை ஒன்று இருக்கும். அதற்கு எதிரே பல காலமாக வாழைத்தோப்பு இருந்தது. அந்த வாளைத் தோப்பு அழிக்கப்பட்டு அந்த இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. அதை காந்தி பார்த்து சிரித்து மகிழ்வதுபோல் ஆகிவிட்டது. என்னதான் குடிமக்களாக இருந்தாலும் தேசத்தந்தையின் கண்முன்னால் குடித்து ரகளை செய்ய மனசு வருமா? எனவே, காந்தி அண்ணலின்   கண்ணாடியைக் கழற்றிவிட்டார்கள்! அவரும் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.வின்ஸ்டன் சர்ச்சிலின் புகழ் பெற்ற விக்டரி சின்னத்தை எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் காட்டி வெற்றிபெற்றது வரலாறு. சர்ச்சிலின் இன்னொரு அடையாளம் பெரிய சுருட்டு. அந்த அடையாளம் நம் எம்.ஜி.ஆரிடம் இல்லையே என்று எவனோ ஒரு தொண்டன் நினைத்திருக்க வேண்டும். பெரியகுளம் போகும் வழியில் ஓர் ஊரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையின் கையில் விரல் கவட்டையில் சுருட்டு ஒன்று செருகப்பட்டிருந்ததைப் பார்த்தேன். "புரட்சித் தலைவர்"  மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டிருந்தார். "புரட்சி - சுருட்டு" என்பது ஒரு நல்ல காம்பினேஷன்தான். 'புரட்சியால் ஆட்சியைப் பிடித்து பணத்தைச் சுருட்டுவது' என்னும் பொருளில் நான் சொல்லவில்லை. உலகெங்கும் புரட்சியின் நம்பர்.1  ஐகானகப் புகழ் பெற்றிருக்கும் சே குவாரா-வின் அடையாளங்களில் ஒன்று அவர் வாயை அலங்கரிக்கும் சுருட்டு அல்லவா? ஆனால் தமிழ் நாட்டைப் பொருத்தவரை புரட்சியின் ஒரே ஐகான் எம்.ஜி.ஆர்தான்!வெளிநாடுகளில் சிலைகளை வெங்கலத்திலோ அல்லது சலவைக் கற்களிலோதான் செய்கிறார்கள். நம் நாட்டு அரசியலில் சிலைகள் ஒரு முக்கிய அங்கம் என்பதால் மாஸ் ப்ரொடக்ஷன் செய்யவேண்டியுள்ளது. எனவே சிமிண்ட் சிலைகள் செய்யப்படுகின்றன. என்ன சிமிண்ட்டில் செய்தார்களோ?, ராஜீவ் காந்தி சிலை ஒன்றைப் பார்த்தேன். மூளையில் TEMPORAL LOBE EPILEPSI தாக்கியதைப் போல் கோணல் மாணலாக நின்றுகொண்டிருந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூளையியல் துறையின் தலைவராக இருக்கும் டாக்டர்.வி.எஸ்.ராமச்சந்திரன் "PHANTOMS IN THE BRAIN " என்று அற்புதமான நூல் ஒன்று எழுதியுள்ளார். டெம்பொரல் லோப் எபிலெப்சி என்னும் மூளைக் கோளாறு உள்ளவர்களுக்குச்  சமயவியல் சார்ந்த அமானுஷ்ய தரிசனங்கள் கிடைப்பது ஏன் என்பதை அதில் விளக்கியுள்ளார். நான் நினைக்கிறேன், "ராஜீவ் காந்தி இந்தியாவின் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தார்" என்னும் கருத்தைத்தான் அந்த ஸ்தபதி ஒரு கலாபூர்வமான சிலையாக அப்படி வடித்துவிட்டான் போலும்!  

ஒரு கருத்தை இவ்வாறு குறியீட்டுக் கலையாக மாற்றுவதைத்தான் மேலை நாடுகளில் சர்ரியலிசம், க்யூபிசம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பிகாசோ, டாலி போன்றவர்கள் செய்துவந்தார்கள். இப்படிப்பட்ட சிலைகளைச் செய்யும் சிற்பிகளுக்கு லலித் கலா அகாதமி ஏன் விருது வழங்கி கௌரவிக்கக் கூடாது?

மைசூர் அரண்மனையில் சலவைச் சிலை ஒன்று உள்ளது. ஒரு பக்கம் பார்க்கும்போது நெஞ்சு நிமிர்த்திய போர் வீரனாகத் தெரியும். மறுபக்கம் பார்த்தால் பெண் ஒருத்தி நாணத்துடன் குனிந்து நிற்பதாகத் தெரியும். இது ஒரு அதிசயம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதை விஞ்சி விட்டது ஒரு இந்திரா காந்தி சிலை. எந்த ஊரில் பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை. இந்திரா காந்தியின் சிகை அலங்காரம் பாய்-கட் போன்றதுதானே. அந்தச் சிலையில் முகமே ஒரு பாய்-கட்டாக இருந்தது. எங்கள் துறையின் முன்னால் பேராசிரியர் ஷாஜகான் அவர்களின் சாயலில் இந்திரா காந்தியைப் பார்த்து ஒரு கணம் திகைத்துவிட்டேன். இப்படி ஒரே பார்வைக்கு ஆணைப் போலவும் பெண்ணைப்போலவும் தெரியும் சிலையை வடிக்க ஒரு சிற்பிக்கு எவ்வளவு திறமை வேண்டும்!

சிற்பக்கலையில் ஒரு முறை உண்டு. சிற்பத்தை முழுமையாகச் செதுக்கிவிட்டுக் கடைசியில்தான் விழிகளைச் செதுக்குவார்கள். அந்தக் கணம் மிகவும் நுட்பமானது. சிலையின் பூரணத்துவக் கணம் அது. "விழி திறத்தல்" என்று அதற்குப் பெயர். சிமிண்ட் சிற்பிகள் சில நேரங்களில் சிலைகளின் விழிகளை பயங்கரமாகத் திறந்து விடுகிறார்கள். கலைவாணர் சிலை ஒன்றில் துவாரபாலகரின் கண்கள் உருட்டி விழிப்பத்தைக் கண்டால் எப்படியிருக்கும்? இதில் கலைவாணர் அகலமாகச் சிரித்துக் கொண்டு வேறு நின்றார். "பெருந்தீனி தின்னும் பேழ்வாய் பிசாசு" என்று கவிஞர் வாலி எழுதிய வரிதான் முதலில் பளிச்சிட்டது. மெல்ல யோசித்தபோது இந்தக் கலைவாணர் சிலை ஒரு மாஸ்டர்பீஸ் என்று புரிந்தது. கிராமத்து அய்யனாரின் விழிகளையும், பெருவுடையார் கோயிலின் துவாரபாலக விழிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு தளத்தில் இந்தச் சிலையை அவன் செய்திருக்கிறான்! இது ஒரு கலை சாதனை அல்லவா?

பாரதியாரின் சிலை ஒன்றைக் கண்டேன். அவருக்கெல்லாம் சிலை வைப்பது அபூர்வம் என்றாலும் சில இடங்களில் காணமுடிகிறது. பாரதியைப் போல் அபின் அடித்துக்கொண்டே சிலையைச் செய்திருப்பான் போலும். "சிந்து நதியின் மிசை.." பாடும் சிவாஜியை மாடலாகக் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதில் அவர் உருட்டி விழிப்பதே கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும். அதைத் 3D -ல் பார்ப்பதுபோல் இருந்தது இந்தச் சிலை. அதாவது பரவாயில்லை. உதடுகள் வேறு பூதாகரமாக இருந்தது.அதற்கு லிப்ஸ்டிக் போட்டது போல் பெய்ண்ட் அடித்திருந்தார்கள். பளீரென்று வெள்ளையாக வேறு இருந்தார். இவர் சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதியே அல்ல! ஏதோ வெள்ளைக்காரனும் நீக்ரோ பெண்ணும் கூடிப் பெற்ற ஹைப்ரிட் பிள்ளைபோல் இருந்தார்! இதை நாம் சிற்பக் கலையின் மேஜிக் ரியலிசம் என்று கூறலாம்!

"கோயில் சிலைகளை இப்படிக் கிண்டல் செய்வீர்களா?" என்றகிறார் ஒரு பகுத்தறிவு நண்பர். மாட்டேன். பழைய கோயில்களின்  சிற்பங்களாகட்டும், ஐரோப்பிய தேவாலயங்களின் சிற்பங்களாகட்டும், அவை சிற்ப மொழியின் லிபி வடிவங்களாக நிற்கும் சமய ரகசியங்கள். கணித சூத்திரங்கள் மற்றும் அறிவியல் சமன்பாடுகளுக்கு நிகரானவை! மொழி புரியாவிட்டாலும் நல்ல இசையை ரசிப்பதுபோல் அவற்றைக் காண்கிறேன்.

அரசியல் சிலைகளின் நிலையே வேறு. இன்றைய சூழலில் அவை கொள்கைகள் உறைந்து நிற்பதன் குறியீடுகள் எனலாம். சுதேசம் பேசியவர்களின் சிலைகள், திராவிடம் பேசியவர்களின் சிலைகள், தமிழியம் பேசியவர்களின் சிலைகள், கம்யூனிசம் பேசியவர்களின் சிலைகள் எல்லாம், தம் கண்முன் விஸ்வரூபம் கொண்டு எழும் உலகமயமாக்கலின் முன் செய்வதறியாது திகைத்து நிற்பதுபோல் தோன்றுகின்றன!

2 comments:

  1. அற்புதம். டேன் பிரவுனில் தொடங்கி கன்னியாகுமரி வரை போய், சிலைகளையெல்லாம் சீவி சிணுக்கெடுத்த பதிவு. சிந்திக்க தூண்டிய நல்ல பதிவு. ஆழமான கருத்து. மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
    http://padukali.blogspot.com/

    ReplyDelete
  2. வின்ஸ்டன் சர்ச்சிலின் புகழ் பெற்ற விக்டரி சின்னத்தை எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் காட்டி வெற்றிபெற்றது வரலாறு. சர்ச்சிலின் இன்னொரு அடையாளம் பெரிய சுருட்டு. அந்த அடையாளம் நம் எம்.ஜி.ஆரிடம் இல்லையே என்று எவனோ ஒரு தொண்டன் நினைத்திருக்க வேண்டும். பெரியகுளம் போகும் வழியில் ஓர் ஊரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையின் கையில் விரல் கவட்டையில் சுருட்டு ஒன்று செருகப்பட்டிருந்ததைப் பார்த்தேன். "புரட்சித் தலைவர்" மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டிருந்தார். "புரட்சி - சுருட்டு" என்பது ஒரு நல்ல காம்பினேஷன்தான். 'புரட்சியால் ஆட்சியைப் பிடித்து பணத்தைச் சுருட்டுவது' என்னும் பொருளில் நான் சொல்லவில்லை.//

    ஒரு செய்தி தெரியுமோ? சர்ச்சில் குடித்த சுருட்டு நமது திண்டுக்கல்லில் இருந்து போகுமாம்.

    ReplyDelete