Monday, October 18, 2010

பகுத்தறிவின் விளிம்பில்

"கண்ணாடிக் கடைக்குள்
கையில் தடியுடன் நுழைந்துவிட்ட
பித்தனாக அவன் இருந்தான்!
அதீத வெறியில்
ஒவ்வொரு கண்ணாடியையும் நொறுக்கிவிட்டான்.
இறைவனிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொண்ட அதே கணத்தில்
தன் சுயத்தை விட்டும் அவன் பிரிந்து விட்டான்!"
                                                   -மகாகவி இக்பால் (தத்துவஞானி பிரெட்ரிக் நீஷே பற்றி)
தமிழ் முஸ்லிம்களின் இன்றைய சூழலில் 'முஸ்லிம் நீஷே' என்று ஒருவரைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்றால் அவர் நிச்சயமாக 'ஹெச்.ஜி.ரசூல்'-தான்! பல விஷயங்களில் அவர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் என்பது ஒரு புறமிருக்க பல விஷயங்களை அவர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் என்பதால் இப்படிக் கூறுகிறேன்.



அவருடைய "மைலாஞ்சி" என்னும் நவீன கவிதைத் தொகுதி வெளிவந்தபோது தமிழக முஸ்லிம் சமூகத்தில் அது ஏற்படுத்திய விவாத அலைகள் இதைத்தான் காட்டின. 'சிந்தனைச் சரம்' இதழில் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் சில கடிதங்கள் வெளியானதோடு விஷயம் மறக்கப்பட்டுவிட்டது. இரத்தத் துளியில் இப்ராஹீம் நபியின் முகம் தெரிவதாக அவர் குறியீடாக எழுதியிருந்த கவிதை வரியைக் கூட விளங்காமல், ஹெஜ்.ஜி.ரசூல் இறைவனுக்கு இணை வைப்பதாக ஒருவர் குமுறியிருந்தார். நவீன கவிதையின் இயங்கியலைப் புரிந்துகொள்ளாமல் இவ்வாறெல்லாம் எதிர்க்கிறார்கள் என்று ஹெச்.ஜி.ரசூலின் ஆதரவாளர் ஒருவர் அதற்குப் பதில் கூறினார். உண்மைதான்.

தமிழ் முஸ்லிம்களின் கவிதைப் புரிதல் என்பது இன்னும் அரிச்சுவடி நிலையில்தான் இருக்கிறது. மரபுக்கவிதையின் புலப்பாட்டு முறையைத் தாண்டித் தமிழர்களே பொதுவாக இன்னும் வளரவில்லை எனும்போது தமிழ் முஸ்லிம்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். உண்மையான நவீன கவிதை பொதுமக்களுக்கு எட்டவே இல்லை. புதுக்கவிதைகளைக் கூட பாரதிதாசன் பாணியிலேயே எழுதுபவர்கள்தான் பிரபலமாகியிருக்கிறார்கள். ஐம்பதுகளிலிருந்து பிரபலமாகி வந்த முஸ்லிம் கவிஞர்கள் தங்களைப் பாரதிதாசன் பரம்பரையில் வந்தவர்களாகவே இனம் காட்டினார்கள். சாரண பாஸ்கரனின் கவிதைகளைப் படித்தால் அவரை 'முஸ்லிம் பாரதிதாசன்' என்றே சொல்லிவிடலாம்! பாரதிதாசனை முஸ்லிம் கவிஞர்கள் பின்பற்றியதன் பின்னணி என்ன?
பாரதிதாசன் இந்து மதத்தை எதிர்த்துப் பாடினார். "சீரங்க நாதரையும் தில்லை நடராசரையும் / பீரங்கி வைத்துப் பெயர்க்கும் நாள் எந்நாளோ?" என்று அவர் பாடுவதைக் கேட்கும்போது ஒரு முஸ்லிம் ஈகோவிற்கு கிளுகிளுப்பாகத்தானே இருக்கும்? எனவே, அப்போதைய முஸ்லிம் கவிஞர்களிடையே பாரதிதாசன் ஒரு இன்ஸ்டன்ட் ஹிட்! மேலும் திராவிட இயக்கத்  தலைவர்களும் "இஸ்லாம் ஒரு பகுத்தறிவுச் சமயம், அதில் மூட நம்பிக்கைகளே இல்லை. அறிவால் உரசிப்பார்த்து எதையும் ஏற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் போதித்தார்கள்" என்னும் ரீதியில் மீலாது மேடைகளில் பேசி முஸ்லிம் தன்முனைப்பை 'பட்ரஸ்' செய்துகொண்டிருந்தார்கள். (இதன் SUBTEXT - ஆழ் பிரதி என்னவென்றால் பெரியாரின் வழியும் நபிகள் நாயகத்தின் வழியும் ஏறத்தாழ ஒன்றுதான் என்பதாகும். இக்கருத்தை முஸ்லிம்களின் கூட்டு நினைவிலியில் விதைத்துவிட்டார்கள்.) விளைவு? சைவ மடங்களில் உரையாற்றிய சதாவதானி செய்குதம்பிப் பாவலர், கம்பன் கழகத் தலைவராக இருந்த நீதிபதி.மு.மு.இஸ்மாயில் போன்றோரை "காபிர்"களாகப் பார்த்துவந்த முஸ்லிம் மனம் திராவிடத் தலைவர்களை "அமீருல் மூமினீன்"களைப் போல் கொண்டாடியது.  

இன்னும் தண்ணன் மூசாவின் கவிதைகளையே தாண்டி வராத ஒரு சமூகத்தில் ஹெச்.ஜி.ரசூலின் நவீன கவிதைகள் எதிர்ப்பைச் சம்பாதித்ததில் வியப்பில்லை. ஆச்சர்யம் என்னவென்றால் ஹெஜ்.ஜி.ரசூலின் கவிதைகளில் முழுக்க முழுக்கச் செயல்படுவது பகுத்தறிவுதான். ஆனால் அது திராவிடப் பாணி பகுத்தறிவல்ல. அப்படி இருந்தால் நான் அவரை 'முஸ்லிம் பெரியார்' என்று கூறியிருப்பேன். அவரும் இந்நேரம் பி.ஜெயினுலாபிதீன் அல்லது ஜவாகிருல்லாஹ் அணியில் இருந்திருப்பார். ஹெஜ்.ஜி.ரசூலின் பகுத்தறிவு மேற்கத்திய பாணியிலானதுதான்.

"மைலாஞ்சி" ஏற்படுத்திய விவாதங்களின்போது எதிர்வினையாக அவர் எழுதிய கட்டுரை மகாகவி இக்பாலைப் பற்றியதாக இருந்தது தற்செயலானதல்ல. அவர் தன்னை இக்பாலுடன் இனம் காட்ட முயற்சிப்பதாகவே எனக்குப் பட்டது. ஆனால் அது இக்பாலையும் அவர் எந்த அளவு தவறாக விளங்கியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. அதில் அவர் "சிறிய சிட்டுக் குருவிக்கும் வல்லூறின் சிறகுகளைக் கொடு" என்று இக்பால் பாடிய ஒரு கவிதை வரியை மேற்கோள் காட்டியிருந்தார். இது ஹெஜ்.ஜி.ரசூலின் ஆசையாக இருக்கலாம். அனால் அது நிறைவேற வேண்டுமானால் அவர் தன் பகுத்தறிவுச் சிறையைத் தகர்த்துக்கொண்டு வெளிவர வேண்டும்!



மகாகவி இக்பாலின் ஆளுமையில் தாக்கம் செலுத்திய முக்கியமான இரண்டு பேர், ஜெர்மன் நாட்டின் தத்துவவாதி பிரெட்ரிக் நீஷே மற்றும் சூபி ஞானி மௌலானா ரூமி ஆகியோர். நீஷே = பகுத்தறிவு என்றும் ரூமி = உள்ளுணர்வு என்றும் நாம் சமன்படுத்திக் கொள்ளலாம். பகுத்தறிவின் எல்லையைக் கண்டு அதற்கும் அப்பால் சென்றால்தான் உண்மையை அடைய முடியும் என்பதை உணர்ந்து, அதற்குள்ள வழி அகவுணர்வுதான் என்று கண்டுகொண்டவர் மகாகவி இக்பால். நீஷேவின் தத்துவப் போக்கு தவறு என்று தள்ளி ரூமியின் சூபித்துவத்திற்கு வந்தடைந்தார். ஆனால் ஹெஜ்.ஜி.ரசூல் இன்னமும் பகுத்தறிவு என்னும் குண்டுச் சட்டிக்குள்தான் குதிரை ஓட்டிக் கொண்டுள்ளார்!

உமய்யா பின் அபி சல்த் என்னும் அரபிக் கவிஞனைப் பற்றி நபிகள் நாயகம் கூறினார்கள்: "அவனுடைய நாவு ஏற்கிறது, ஆனால் உள்ளம் நிராகரிக்கிறது" (ஆமன லிசானுஹு வா கபர கல்புஹு) இதேபோல் நீஷேவைப் பற்றி இக்பால் கூறினார்: "அவனுடைய அறிவு நிராகரிப்பாளனாக உள்ளது, அனால் அவனுடைய இதயம் ஏற்பாளனாக இருக்கிறது."



நீஷேவைப் பற்றிய தன் முடிவுகளை விளக்கும்போது மகாகவி இக்பால் எழுதினார்: "ஐரோப்பாவில் நீஷேயின் பார்வையும் தத்துவமும் சமயத் துறையில் புதிய சிக்கல்களை உருவாக்குவதாக இருக்கலாம். ஆனால் கிழக்கத்திய சமயங்களுக்கு அவை புதியனவல்ல. சூபித்துவத்தில் நீஷேவிற்கு ஒப்பான மாதிரிகள் இல்லாமல் இல்லை. மனிதனில் இறைவனைக் காணும் அகதரிசனம் அவனுக்கு வந்தது என்பதை நாம் மறுக்கமுடியாது. அதை நான் ஏன் அகதரிசனம் என்று கூறுகிறேன் என்றால் அதனை ஒரு நிரந்தர வாழ்க்கைத் தத்துவமாக மாற்றக்கூடிய ஒரு தீர்க்க தரிசன போதத்தை அவனுக்கு அது தந்துள்ளது. இருந்தும், நீஷே ஒரு தோல்வி. அவனது தோல்விக்கு முக்கியமான காரணம் அவனுடைய பகுத்தறிவு முன்னோடிகளான ஸ்காபன்ஹார், டார்வின் மற்றும் லான்ஜ் ஆகியோரின் தாக்கமே. அது அவனைத் தன் அகதரிசனத்தை விளங்கவிடாமல் குருடாக்கிவிட்டது! சாதாரண மனிதனுக்குள்ளும் இறைமையை மலரச் செய்யும் ஆன்மிக விதியைக் கண்டறிந்து தன்முன் எல்லையற்ற எதிர்காலத்தைத் திறப்பதற்கு மாறாக நீஷே தன் அகதரிசனத்தின் அர்த்தத்தை ஒருவித இனக்குழுச் சர்வாதிகாரத்தில் தேடுமாறு பகுத்தறிவு அவனை விரட்டியது.

அவன் தேடும் "நான் இருக்கிறேன்" என்னும் சுயம்
தத்துவத்திற்கு அப்பால், பகுத்தறிவுக்கு அப்பால் உள்ளது.
மனித மனத்தின் மறைந்த மண்ணில்
மட்டுமே வளரும் அந்தச் செடி
மண்ணாங்கட்டியில் முளைக்காது!"


ஹெஜ்.ஜி.ரசூல் உணர்ந்துகொள்ள வேண்டியதும் இதுதான். பகுத்தறிவை எல்லா விஷயங்களுக்குமான ஒரு பொது DENOMINATOR - ஆக அவர் காண்கிறார். உள்ளுணர்வின் உலகிற்குள் அவர் இன்னும் காலடி எடுத்து வைக்கவில்லை. வஹாபிசத்துக்கும் சூபித்துவத்துக்கும் இடையில் அல்லாடிக்கொண்டிருக்கிறார். அவருடைய பல கேள்விகள் உண்மையிலேயே 'பொடன்ட்' ஆனவைதான். ஆனால் அவற்றுக்கான பதில்களைப் பகுத்தறிவின் பொட்டைக் கண்ணால் பார்க்க முடியாது.

உதாரணமாக, 'மொழி அரசியல்' என்னும் தலைப்பில் ஹெஜ்.ஜி.ரசூல் சில கருத்துக்களை முன்வைக்கிறார். "தமிழுக்கும் இஸ்லாத்திற்குமான தொடர்பு நீண்ட பாரம்பர்யமிக்கது. தமிழ் வழியாக இஸ்லாத்தை சொல்லித் தந்தவர்கள் சூபி ஞானக் கவிஞர்கள். எனினும் இன்றைய மனோபாவங்கள் ஆங்கிலம் உயர்ந்தது X தமிழ் தாழ்ந்தது, அரபு உயர்ந்தது X தமிழ் தாழ்ந்தது என்பதாகவே உருவாகி இருக்கிறது. முஸ்லிம் பெயரொன்றை எழுதுகையில் ஜனாப் என்பதாக முன் அடையாளம் எழுதப்படுகிறது. 'திரு' என்றெழுத தயக்கம் வருகிறது. ஆனால் இஸ்லாமிய தமிழ் முன்னோடிகள் இறைவேதம் குர்ஆனை திருக்குர்ஆன் என்றும் அண்ணல் முகம்மது நபியை திருநபி / திருத்தூதர் என்றுமே சொல்லி அடையாளப்படுத்தி உள்ளனர்." (இஸ்லாமியப் பெண்ணியம், பக்கம்.26 )
எந்த ஒரு மொழியையும் எல்லாத் துறையிலும் உயர்ந்தது என்று கூறிவிட முடியாது. கணிப்பொறி அறிவியல் படித்த ஒருவரிடம் "உங்களுக்கு மொழிப்பற்று உண்டா?" என்று கேட்டுப்பாருங்கள். "ஆமாம், ஐந்து வருடங்களாக ஜாவாவில்தான் சிந்தித்து வருகிறேன். அதற்கு முன்பு சி++ மீது பற்று கொண்டிருந்தேன்" என்று பதில் கூறுவார். மொழியின் கோட்பாடுகளே இப்படி மாறிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 
"எல்லா மொழிகளும் நன்று 
கோபித்துக்கொள்ளதீர் புலவர்களே 
அதில் தமிழ் மொழியும் ஒன்று"
என்று ஞானக்கூத்தன் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது.
இருந்தாலும், மதம் என்று வரும்போதுதான் இந்த மொழிச் சிக்கல் வருகிறது. தம் மதத்தின் வேதமும் மந்திரங்களும் அமைந்துள்ள மூல மொழியை உயர்வானதாகக் கருதுவது எல்லா மதத்தினரிடமும் காணப்படுகிறது. தமிழுக்கு உள்ள சிக்கல் அது எந்த மதத்தின் வேதத்திற்கும் மூலமாக இல்லை என்பதுதான். "திருக்குறள் உலகப் பொதுமறை" என்றெல்லாம் சொல்லிப்பார்த்தாகிவிட்டது. அக்கருத்து மேடையில் சொல்வதற்குப் பயன்படும் ஒரு கிம்மிக்காகிவிட்டது. திருக்குறளை ஒரு மறை என்றெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
தமிழர்களின் ஞான மரபு எது? என்று கேட்டால் என்ன பதில் கூறுவது. சாங்கியம் என்பதா? வைசேஷிகம் என்பதா? யோகம்? மீமாம்சம்? ஞாயம்? வேதாந்தம்? எதைச் சொல்வது? சமஸ்க்ருதம், ப்ராக்ருதம் ஆகியவற்றில் இந்த ஞான மரபுகளுக்கான சொற்களஞ்சியம் கிடைப்பதுபோல் தமிழில் உள்ள சொற்களைக் கொண்டு ஒரு ஞான மரபைத் திட்டவட்டமாக அடையாளப் படுத்தமுடியவில்லை. அப்படியே சங்க காலத்தில் ஒரு ஞான மரபு இருந்திருந்தாலும் அதன் தொடர்ச்சியைத் தமிழ்ச் சமூகம் எப்போதோ இழந்துவிட்டது. வடமொழியைக் கருவியாகக் கொண்ட வேதாந்தமே தமிழர்களிடமும் வேரூன்றி விட்டது. சித்தாந்தம் மட்டும் திருமுறைகளை வேதத்தின் நிலையில் வைத்ததுப் பார்க்கிறது.
"ஸ்ரீ" என்பதற்கு எல்லா இடங்களிலும் "திரு" என்று மாற்றிவிட முடியாது என்பதாக சுஜாதா ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். அது ஒரு வைணவக் கலைச்சொல். சமயக் கலைச்சொற்கள் அறிவியல் கலைச்சொற்களைப் போன்றவையே. "COPPER SULPHATE ( CuSO4)" -ஐ 'மயில் துத்தம்' என்றும், "SODIUM BICARBONATE (NaHCO3 )"-ஐ 'ஆப்ப சோடா' என்றும் தமிழில் புழங்கினாலும் முழங்கினாலும் அந்தப் பெயர்களை வேதியல் சமன்பாடுகளுக்கோ மூலக்கூறு வரைபடங்களுக்கோ பயன்படுத்தமுடியாது. இந்த எதார்த்தத்தை நாம் சமயத் துறையிலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
"சூபிகளின் பாடல் தொகுப்புகள் கூட திருநெறிநீதம், திருமெய் ஞானசரநூல் என 'திரு'வையே முன்மொழிகிறது. தமிழ்மொழிவழிச் சிந்தனை, வழிபாடு என்பது இவ்வகையில் முக்கியமாகப் படுகிறது. அண்ணல் நபியின் இறுதிப் பேருரை இன, மொழி, குல பேதங்களை உடைத்து அனைத்தையும் சமமாக காணவே சொல்லித்தருகிறது" (இஸ்லாமியப் பெண்ணியம், பக்கம்.26 ) என்கிறார் ஹெஜ்.ஜி.ரசூல்.
 நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரை என்று சொல்லப்படுவது ஹிஜ்ரி.10 -ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதம் 9 -ஆம் நாள் அரபாத் மலையில் நபிகள் நாயகம் தன் தோழர்களுக்குக் கூறிய போதனையாகும். "பேருரை" என்று அது கூறப்படுவது அளவின் காரணமாக அல்ல. ஐந்து நிமிடங்களில் படித்துவிடக் கூடிய உரைதான் அது. சமய வரலாற்று முக்கியத்துவம் காரணமாக அப்படி அழைக்கப்படுகிறது. அதில், "மனிதர்கள் அனைவரும் ஆதம்-ஏவாள் ஆகியோரிடமிருந்து தோன்றிவந்தவர்களே. எனவே, ஒரு அஜமியை விட அரபி உயர்ந்தவன் அல்லன் (அஜமி என்பது அரபி அல்லாதவர்களைக் குறிக்கும்), ஒரு அரபியைவிட அஜமி உயர்ந்தவன் அல்லன். ஒரு வெள்ளையனைவிடக் கருப்பன் உயர்ந்தவன் அல்லன், ஒரு கருப்பனைவிட வெள்ளையன் உயர்ந்தவன் அல்லன், இறையச்சத்தால் மட்டுமே தவிர." என்று நபிகள் நாயகம் கூறும் பகுதியைத்தான் ஹெஜ்.ஜி.ரசூல் தன் வாதத்தின் அடிப்படையாக்குகிறார். ஆனால், இந்த வாதத்தின் வழியே முன்னகர்ந்து அவர் அடுத்துச் செல்லுகின்ற இடம் மிகவும் அபத்தமானதாகும்.
"உலக அளவிலான ஒருமைப்பாட்டை வலியுறுத்த தொழுகையில் அரபு மொழி பயன்படுத்தப் பட்டாலும்கூட பிராந்திய அளவில் அவரவர் தாய் மொழியில் வழிபாட்டை மேற்கொள்ளுதல் என்கிற உணர்வும் மதிக்கப்பட வேண்டியதாகும். தமிழ்வழி தொழுகை என்கிற கருத்தாக்கம் தமிழகச் சூழல் கவனிப்பிற்குரிய ஒன்றாகும்" என்று ஹெஜ்.ஜி.ரசூல் கூறுகிறார்.
தமிழ்வழி தொழுகை, அதாவது தொழுகையைத் தமிழில் நடத்த வேண்டும் என்னும் கருத்து கோயில்களில் தமிழ் வழிபாடு என்னும் கருத்திற்கு இணையாகக் (PARALLEL ) காணவேண்டிய ஒன்று. வழிபாடு தமிழில் நடக்க வேண்டியது ஏன் என்னும் கேள்விக்கு விடையாகப் பகுத்தறிவு வாதிகள் சொன்னது 'அப்போதுதான் அது மக்களுக்குப் புரியும்' என்பதாகும். இந்த சர்ச்சை நடந்தபோதே ஒரு எதிர்க்கேள்வி எழுந்தது."கோயில்களில் தமிழில்தான் அர்ச்சனை நடக்க வேண்டும் என்று கூறும் பகுத்தறிவுவாதிகள் மசூதிகளில் தமிழில்தான் தொழுகை நடக்க வேண்டும் என்று கூறமுடியுமா?" என்று கேட்கப்பட்டது. இது உண்மையான ஆதங்கத்திளிருந்து எழுந்த கேள்வி. கடவுள் இல்லை என்னும் கருத்தை ஏற்றுக்கொண்ட நாத்திகர்கள் எந்த மதத்திற்கும் சொந்தமானவர்கள் அல்ல என்னும் நிலையில் இந்து வழிபாட்டு முறைக்குள் மட்டும் மூக்கை நுழைப்பது ஏன்? என்ற ஞாயமான கேள்வியாக அது ஒலித்தது. அந்தக் கேள்விக்கான பதில்தான் ஹெஜ்.ஜி.ரசூலின் 'தமிழ்வழி தொழுகை' என்னும் கருத்து. பகுத்தறிவு வாதிகள் சொன்ன அதே காரணத்தைதான் அவரும் கூறுகிறார்: 
"எனவே தமிழ்மக்கள் இஸ்லாத்தை நன்கறிய வாழ்வு, வழிபாடு என எல்லாவற்றிலும் தமிழ்மொழி வழியாக இஸ்லாமை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. திருமறையின் அர்த்தமும் ஆழமும் பண்பாட்டியல் நெறிகளும் அப்போதுதான் கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேரும்" (இஸ்லாமியப் பெண்ணியம், பக்கம்.27 ) 
இந்தக் கருத்து மிகவும் அபத்தமானதும் மேம்போக்கானதுமாகும். அவரவர் பேசும் மொழியில் இருந்தால் ஒரு விஷயம் புரிந்து விடும் என்ற தட்டையான விளங்குதலின் அடிப்படையில் இதனை ஹெஜ்.ஜி.ரசூல் எழுதியுள்ளார். அவர் தன் "மைலாஞ்சி" என்னும் கவிதை நூலைத் தமிழில்தான்  எழுதினார். அதை யாரும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பின்பு அவரே புலம்பினார். இது ஏன் என்று அவர் எண்ணிப்பார்த்திருக்க வேண்டும்! மேலும், தன் கருத்துக்கு ஆதாரமாக,
"(அரபிகளே) நீங்கள் நன்கறிந்து கொள்ளும் பொருட்டு குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே உங்களுடைய அரபி மொழியில் இறக்கிவைத்தோம்." (12 : 2 ) என்னும் திருக்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்.
அடைப்புக் குறிக்குள் 'அரபிகளே' என்று போட்டிருப்பது ஹெஜ்.ஜி.ரசூலின் கைவண்ணம். அரபு மூலத்தில் அது இல்லை. இந்த வசனம் அரேபியர்களை முன்னிலைப் படுத்திக் கூறப்பட்டது என்று அவர் விளங்குகிறார். அதன் விளைவாக 'உங்களுடைய அரபி மொழியில்' என்று எழுதியுள்ளார். 'உங்களுடைய' என்பதும் வசன மூலத்தில் இல்லை. இவ்வாறு தன் கருத்திற்கேற்ப அடைப்புக்குறிச் சொற்களையும் இல்லாத சொற்களையும் சேர்த்து திருக்குரானை மொழிபெயர்ப்பது வழக்கமாக நடந்துவருவதுதான். இஸ்லாமிய அழைப்பாளர்கள் பெருமிதமாகப் பேசும் ஒரு விஷயம் உண்டு. அதாவது பைபிளில் பல வகை உள்ளன. இன்க்லூசிவ் பைபிள், ஜேம்ஸ் மன்னர் பிரதி, பெர்க்லி பிரதி, பிஷப்ஸ் பைபிள், கவர்டேல் பைபிள், டார்பி பைபிள், துவை-ரெய்ம்ஸ் பைபிள், ஜெனிவா பைபிள், கிரீன்ஸ் பைபிள், லம்சா பைபிள், மேத்யூஸ் பைபிள், குவேக்கர் பைபிள், டின்டேல் பைபிள் போன்ற பல பைபிள் பிரதிகள் இருப்பதுபோல் திருக்குரானில் பல பிரதிகள் இல்லை. உலகம் முழுவதற்கும் ஒரே பிரதிதான் உள்ளது. ஒரு புள்ளிகூட மாறியிருக்காது.
ஆனால் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பின் நிலை பைபிளின் நிலையைப் போன்றதுதான். அதில் ஒற்றுமையைக் காண முடியாது. தமிழில் உள்ள மொழிபெயர்ப்புக்களில்கூட இரண்டு பிரதிகள் முழுவதும் ஒன்றுபோல் இருக்காது. மொழிபெயர்ப்பு என்பதே தான் விளங்கியதை வைத்துச் செய்யப்படுவதுதான். எனவே திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புக்களில் தன் கொள்கைக்கு ஏற்ப விளக்கச் சொற்கள் அடைப்புக்குறிக்குள் இடப்பட்டிருப்பதைக் காணலாம். அப்படிப் பார்க்கும்போது சூபி மொழிபெயர்ப்புப் பிரதி, வஹ்ஹாபி மொழிபெயர்ப்புப் பிரதி, அதற்குள்ளேயே பல வெர்ஷன்கள் என்று போய்க்கொண்டிருக்கும். 

சரி, ஹெஜ்.ஜி.ரசூல் கூறுவதுபோல் அரபிகள் அனைவரும் விளங்கிக் கொள்ளத்தான் திருக்குர்ஆன் அரபியில் இறக்கப்பட்டதென்றால் அதை நபிகள் நாயகத்தின் எதிரிகள் ஏன் விளங்கவில்லை? அவர்களின் தாய்மொழியும் அரபிதானே? 

இந்து மதமாகட்டும், இஸ்லாம் ஆகட்டும், வேதங்களின் மூலமொழியில்தான் வழிபாடுகள் நடைபெறவேண்டும். "தமிழ்மொழி வழிபாடு வேண்டும்" என்று இந்து மாதத்தில் குரல் கொடுப்பவர்கள் அதற்கான தீர்வாக தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திவ்ய பிரபந்தம் ஆகியவற்றை மாற்றாக முன்வைக்கிறார்கள். அதுபோல் இஸ்லாத்தில் நீங்கள் ஒரு மாற்று வழியை முன்வைக்க முடியாது. இந்து மதத்திற்குப் பல நூல்கள் உள்ளன. ஆனால் இஸ்லாத்தில் ஒரே புனித நூல்தான். இதற்கு ஹெஜ்.ஜி.ரசூல் என்ன கூறுவார்? "ஏன், தொழுகையில் சீறாப்புராணம் ஓதலாமே!" என்று சொன்னாலும் சொல்வார்.

ஹெஜ்.ஜி.ரசூலின் வாதம் மேம்போக்கானது என்று நான் கூறுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது திருமறையின் கருத்து என்னும் ஒரு பரிமாணத்தை மட்டுமே முன்னிறுத்திப் பேசுகிறார். அதன் ஓசை என்னும் அதி முக்கியமான பரிமாணத்தை அவர் கவனத்தில் எடுக்கவே இல்லை. தொழுகையில் திருக்குர்ஆன் ஓதப்படுவதற்கு "கிராஅத்" என்று பெயர். அதற்கென்று இலக்கணங்களும் (தஜ்வீது) எழுவகை ஓதல் முறைகளும் (சபஅ கிராஅத்). அவற்றை முறையாகப் பயில்பவர்களே ஓதுவார் மூர்த்திகளாக - 'ஹாபிழ்'களாக விளங்குகிறார்கள். இந்து மதத்திலும் வேந்தங்களை ஓதுவதற்கு தனிப்பட்ட ஓதும் முறைகள் உள்ளன.



தொழுகையில் நீங்கள் தர்ஜமா வாசிக்க முடியாது. திருமறையை ஓதத்தான் வேண்டும். எனவே கருத்தை விட அங்கே ஒசைக்குத்தான் முதன்மை நிலை. ஒலிகள் அகவுணர்வில், பிரக்ஞையில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் நன்கு அறிவார்கள். கருத்திற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. இந்து மாதத்தில் பிரணவ மந்திரமான "ஓம்" என்பதற்கு அர்த்தம் எதுவும் கிடையாது. இருந்தும் கோடிக்கணக்கானவர்கள் பல கோடி முறை அதனை தியானம் செய்கிறார்கள். அது ஓசையின் இயங்கு முறை அறிவியல். அர்த்தமே இல்லாத அந்த ஓசையை எப்படி மொழிபெயர்ப்பீர்கள்? ஓம் என்பதற்கு இணையான ஒரு ஓசையைத் 'தமிழில்' கண்டுபிடிக்க பாரதி முயன்றான். கடைசி வரை தோல்விதான். அது ஒரு தனித்தன்மையான ஓசை. மத பேதங்களுக்கு அப்பாற்பட்டது.

ஹெஜ்.ஜி.ரசூல் மேற்கோள் காட்டும் திருக்குர்ஆன் வசனத்திற்கு முந்திய வசனமே அவரது வாதத்தை உடைத்துவிடும்! 
"அலிப் லாம் ரா. இவை தெளிவான வேதத்தின் அடையாளங்களாகும்" (12 : 1 )
என்பது அந்த வசனம். இதில் "அலிப் லாம் ரா" என்பவை அட்சர ஓசைகள். இதனை ஒரு மந்திரத் தொனியாகத்தான் ஒலிக்கமுடியும். இதை எப்படித் தமிழில் மொழிபெயர்ப்பீர்கள்?

"திருக்குரானை அழகான குரலால் அலங்கரிப்பீராக" என்று நபிகள் நாயகம் சொன்னதும் அதன் ஓசை என்னும் பரிமாணத்தை வலியுறுத்தும். திருக்குர்ஆன் ஓதப்படும்போது அது ஏற்படுத்தும் அகமாற்றங்களைப் பலரும் வியந்து பேசியுள்ளார்கள். நபிகள் நாயகம் திருக்குர்ஆன் ஓதும்போது, அந்த ஓசை தங்கள் மனதை மாற்றிவிடக் கூடாது என்பதற்காக அவரின் எதிரிகள் காதுகளை அடித்துக்கொண்டார்கள் என்பதும் வரலாற்றுச் செய்தி.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் திருக்குர்ஆன் ஓதப்படும்போது அரபி தெரியாத ஒருவருக்குத்தான் அதன் ஒசைமீது முழுமையாக லயிப்பது இலகுவாகக் கைக்கூடும். ஏனெனில், அவருடைய மனம் அதன் அர்த்தத்தின் பக்கம் சாய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. அரபி தெரிந்த ஒருவருக்கு அவரது மனம், ஓதப்படும் வசனத்தின் கருத்தைத் துருவிக்கொண்டு இருக்கும். இதை பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூபி ஞானி கஸ்ஸாலி தன் "கீமியாயே சஆதத்" என்னும் நூலில் விளக்கியுள்ளார். "பெண்களின் மாதவிடாய் பற்றி விளக்குகின்ற திருக்குர்ஆன் வசனங்கள் ஓதப்படுவதைக் கேட்கும் ஒருவருக்குப் பரவச நிலைகள் உண்டாக முடியாது. அதன் அர்த்தத்தைக் கவனிக்காமல் ஓசை நயத்தில் லயிக்கும் பக்குவம் உள்ள ஒருவருக்கு வேண்டுமானால் அப்போது பரவசம் ஏற்படக்கூடும்" என்று அவர் எழுதியுள்ளார்.

வேதத்தின் மூல மொழிப் பயன்பாடுகளை நன்கறிந்திருந்த காரணத்தால்தான் வழிபாட்டில் அது அப்படியேதான் இருக்கவேண்டும் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. "இறைவனுக்கு எல்லா மொழியும் புரியாதா? ஏன் அவனை நான் தமிழில் வழிபடக் கூடாது?" என்று கேட்பவர்கள் இதனை உணராமல் கேட்கிறார்கள். தொழுகையில் குரானை மட்டுமே ஓத வேண்டும், அதன் மூல அரபி வடிவத்தில் மட்டுமே ஓத வேண்டும் என்று கூறும் இஸ்லாம், தொழுகைக்கு வெளியே அவரவர் தாய்மொழியில் பிரார்த்திக்கலாம் என்றும் சொல்கிறது. சல்மான் பார்சி (ரலி) என்னும் நபித்தோழருக்கு அவர் தன் தாய்மொழியான பாரசீக மொழியிலேயே பிரார்த்தனை செய்வதற்குரிய அனுமதியை நபிகள் நாயகம் வழங்கினார்கள். இது ஓர் இயல்பான விஷயம்தான். மூஸா நபியிடம் இறைவனிடம் ஹீப்ரூ மொழியில் பேசினார்கள். ஏசுநாதர் இறைவனிடம் அரமைக் மொழியில் பேசினார்கள். நபிகள் நாயகம் இறைவனிடம் அரபி மொழியில் பேசினார்கள். ஒவ்வொரு மனிதனும் இறைவனுடன் அவனுடைய தாய்மொழியிலேயே பேசலாம். ஒரு நரிக்குறவன் அவனுடைய மொழியில் இறைவனுடன் உரையாடலாம். ஆனால் ஒரு வேதத்தை அதன் மூல மொழியில் பேணுவது என்பது வேறு நிலையில் பார்க்கப்படவேண்டிய ஒன்று.

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டுச் சூத்திரம் E,M,C என்னும் மூன்று எழுத்துக்களையும் 2  என்னும் ஒரு எண்ணையும் மட்டுமே பயன்படுத்துகிறது. அவ்வளவு எளிமையான அந்தச் சூத்திரத்தின் உட்பொருளை நீங்கள் விளங்க வேண்டுமென்றால் இருபது வருடங்களாவது இயற்பிலை நீங்கள் ஆழ்ந்து பயில வேண்டும். சமயமும் அப்படிப் பயிலப்பட வேண்டிய ஒரு துறைதான். அது ஒரு வாழ்க்கைச் சாதனைதான். திருமறையின் அர்த்தத்தையும், ஆழத்தையும் பண்பாட்டியல் நெறிகளையும் அப்படித்தான் கடைக்கோடி மனிதனும் அடையமுடியும்!

6 comments:

  1. நல்ல இடுகை. விரிவான உங்கள் வாசிப்பின் பங்களிப்பும்,ஆய்வு நோக்கும் இணைந்து இனிய எழுத்தாக மலர்ந்துள்ளது. பிலாலிஷாவின் ஃபைஜானை உங்கள் எழுத்தில் அடிக்கடி தரிசிக்க இறைவனை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  2. வணக்கம் ரமிஸ்
    ‘ஓசை’ பற்றி நீங்கள் கூறியிருப்பதானது ஒரு நீண்ட ஆய்வுக்குரியது. அது மட்டுமே! வைணவக் கோயில்களில் நாயிரத்திவ்யப்பிரபந்தம் ‘ சாத்துமுறை’ செய்யும் போது எழும்பும் ஒலிப் பிரவாகத்தோடு நான் அர்த்தம் தேடாமலேயே ஒன்றியிருக்கிறேன். சைவ ‘ஓதுவார்கள்’ கேட்கும்போதும் அதேதான் பரவசம். இஸ்லாமிய வேதம் ஓதப்படும்போதும் அதையேதான் நான் உணர்ந்தேன். சொற்களை மறந்துவிட்டு (!) மறுத்துவிட்டு(?) ஒலியுடன் ஐக்கியப்படும்போது மனம் நிரம்பி வழியத்தான் செய்யும். உண்மைதான். அதாவது கல்வியறிவு இல்லாதவரும்கூட ஓசையில் இணைந்து இறைவணைக் காணலாம். ஒன்றாலாம் .
    நிற்க. குளச்சல் யூசுப் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள பர்ஸா ( கதீஜா மும்தாஜ்- மலையாள மூலம்) வாசித்தீர்களா?
    சித்தன் - யுகமாயினி இதழ்

    ReplyDelete
  3. நண்பர் அரபுதமிழன் , இந்த பதிவை எனக்கு அறிமுகப்படுத்தினார்..

    அவதூறுகள், வம்புகள் என இருக்கும் பதிவுலக விவாதத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, பல தகவல்களை தந்து அறிவு பூர்வமாக உங்கள் கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்...
    மிக்க நன்றி.. மிக மிக சிறப்பான பதிவு..

    ReplyDelete
  4. //இந்து மாதத்தில் பிரணவ மந்திரமான "ஓம்" என்பதற்கு அர்த்தம் எதுவும் கிடையாது. இருந்தும் கோடிக்கணக்கானவர்கள் பல கோடி முறை அதனை தியானம் செய்கிறார்கள். அது ஓசையின் இயங்கு முறை அறிவியல். அர்த்தமே இல்லாத அந்த ஓசையை எப்படி மொழிபெயர்ப்பீர்கள்? ஓம் என்பதற்கு இணையான ஒரு ஓசையைத் 'தமிழில்' கண்டுபிடிக்க பாரதி முயன்றான். கடைசி வரை தோல்விதான். அது ஒரு தனித்தன்மையான ஓசை. மத பேதங்களுக்கு அப்பாற்பட்டது.///

    "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவ புரத்து
    ப‌ல்லோரும் ஏற்ற.." என்பது திருவாசகம்.

    சொல்லும் வழிபாட்டு மந்திங்களின் பொருள் தெரிந்து கொள்ள‌ ஆர்வம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.மற்றவர்களுக்கு ஓசையே ம‌ன நிறைவைக் கொடுக்கும்.

    ரிக் வேதம் ஓதும் முறையிலேயே ஓதக்கூடியதாக வசனகவிதையில் முயன்று பார்த்தார் மஹாகவி பாரதியார்.அப்படி முயன்றுள்ளேன் என்று எங்கும் சொல்லவில்லை.

    ஓம் போலவே ஆமென், அமீன் ஆகியவற்றையும் தமிழுக்கு மாற்ற முடியாது.

    நல்ல ஆய்வு.

    ReplyDelete
  5. ரசூல் இன்று மறைந்தார்.

    ReplyDelete
  6. அவருடைய கட்டுரைகளை சிந்தனையில் பதிவு செய்த நாட்களும் அதையொட்டிய
    கனிந்த,கடுமையான உரையாடல்களும் ஞாபகத்தை முட்டுகின்றன.

    ReplyDelete