Wednesday, October 20, 2010

மொழிகளின் விளிம்பில்...

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது ஒருமுறை என் தந்தை என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள், "உலகிலேயே சிறந்த மொழி எது?"
"தமிழ்தான். அதுதானே நம் தாய்மொழி!" என்றேன் நான்.
"இல்லை" என்றார்கள்.
"அரபி. அதில்தானே குரான் இருக்கிறது!" என்றேன்.
"இல்லை" என்றார்கள்.
"ஆங்கிலம். அதுதான் உலகம் முழுவதும் பரவியுள்ளது" என்றேன்.
அதற்கும் உதட்டைப் பிதுக்கி இல்லை என்று தலையாட்டினார்கள்.
"எனக்குத் தெரியவில்லை, நீங்களே சொல்லுங்கள்" என்றேன்.
"மழலை மொழிதான்!" என்று சொன்னார்கள், "ஏனென்றால் எவர் மனதையும் புண்படுத்தாத மொழி அது!"

"மொழி உங்களுக்கு வெளியே இருக்கிறது" என்றார் தெரிதா. மொழி சமூகத்தால் வழங்கப்படுகின்ற ஒன்று. தாய் மொழி என்னும் கோட்பாட்டை தெரிதாவின் உளவியல் கேள்விக்குறியாக்கியது. தாய் மொழி என்பதும்கூட தாயால் மட்டுமே கொடுக்கப்படுவதில்லை. தந்தை, மாமா, அத்தை, பாட்டி, அண்ணன், அக்காள் போன்ற உறவுகளுக்கும் அதிலே பங்கு உண்டு. டி.வி-யில் ஓடும் நிகழ்ச்சிகளுக்கும் பங்கு உண்டு.



முகலாய மன்னர் அக்பரைப் பற்றி ஒரு சுவையான செய்தி உள்ளது. "மொழியைத் தாய்தான் கற்றுத் தருகிறார். ஒரு குழந்தைக்கு யாருமே எந்த மொழியையும் கற்றுத் தராவிட்டால், எந்த மொழியையும் கேட்காமல் அது சில ஆண்டுகள் வளர்ந்தால், அது எந்த மொழியைப் பேசும். அதுதான் இறைவனின் மொழியாகவும் இருக்கவேண்டும்." என்று அவருக்கு ஒரு விபரீத எண்ணம் மனதில் உதித்தது. அனாதையாகப் பிறந்த மூன்று குழந்தைகளைக் கொண்டுவடச் சொன்னார். அவற்றை ஒரு தனி அறையில் பூட்டி வளர்த்துவந்தார். எவரும் அக்குழந்தைகளுடன் பேசக்கூடாது என்ற கட்டளையின்படி அவை வளர்ந்து வந்தன. ஐந்து ஆண்டுகள் கழித்து அவர்களை அரசவைக்கு அழைத்துவந்தார். என்ன மொழியில் அவர்கள் பேசப்போகிறார்கள் என்று காணும் ஆர்வத்தில் நெஞ்சு படபடத்தது. பார்சி? அரபி? சமஸ்க்ருதம்? ராஜஸ்தானி? டோங்க்ரி? எந்த மொழி  இறைவனின் மொழி? இதற்கான விடை மட்டும் இந்தச் சோதனையில் கிடைத்துவிட்டால் அது ஒரு மகத்தான சாதனை. அந்தக் காலத்தில் 'நோபல் பரிசு' இருந்திருந்தால் அதை அக்பர் பெற்றிருக்கக் கூடும். அப்படிப்பட்ட சோதனை அல்லவா? அக்பர் அந்தச் சிறுவர்களைப் பார்த்து, "ம்ம்... பேசுங்கள், நீங்கள் யார்? எங்கிருந்து வந்தீர்கள்?" என்றார். அவர்கள் மலங்க மலங்க விழித்தார்கள். வாயைத் திறந்து "பே பே..." என்றார்கள். 'அக்பருக்கும் பே பே, அவர் சோதனைக்கும் பே பே' என்று கூறுவதுபோல் இருந்தது அது. அக்பரின் சோதனை சக்சஸ் ஆகவில்லை. மூன்று பிள்ளைகள் ஊமையானதுதான் மிச்சம். (இதே போன்ற ஒரு சோதனையை டாக்டர்.வி.எஸ்.ராமச்சந்திரன் எழுதியுள்ள "PHANTOMS IN THE BRAIN" என்னும் நூலில் கண்டபோது எனக்கு வியப்பாக இருந்தாது. பிறந்த குழந்தை ஒன்றை ஒளியே புக முடியாத அறைக்குள் சில வருடங்கள் வளர்த்து வந்தால் பின்பு அது பார்க்குமா? இல்லை அதன் மூளை பார்வைப் புலனை வளர்த்துக்கொள்ளாமல் குருடாகிவிடுமா? என்று கேட்பார்!)

தன் வேதம் எந்த மொழியில் அமைந்துள்ளதோ அதுதான் இறைவனின் மொழி என்று மதவாதிகள் பிடிவாதம் செய்கிறார்கள். "அரபியில் உள்ள பல வார்த்தைகளை நீங்கள் வேறு எந்த மொழியிலும் பெயர்க்க முடியாது. அப்படிப்பட்ட உயர்ந்த மொழி அரபி" என்று ஒரு திருமணக் கூட்டத்தில் புகழ் பெற்ற மவ்லவி ஒருவர் பேசினார். அது போன்ற தனித்துவமான வார்த்தைகள் - UNTRANSLATABLE WORDS - செவ்வியல் மொழிகளில் மட்டுமல்ல, ஆதிவாசிகளின் மொழிகளில்கூட இருக்கும்!

இறைவனைச் சுட்டுவதற்கான பொதுச் சொற்கள் அனைத்து மொழிகளிலும் உண்டு. "THE ESSENTIAL SUFISM " என்னும் நூல் ஒன்றை என் நண்பருக்கு இரவலாகக் கொடுத்தேன். அவர் அப்போது ஒரு மதரசாவில் சமயக் கல்வி பயின்றுகொண்டிருந்தார். பத்து நாட்கள் கழித்து அந்த நூலைத் திருப்பிக்கொடுத்தார். அதில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு "GOD " என்றிருந்தது. அதன்மீது பேனாவால் அடித்து மறைத்திருந்தார்.என் நூல்களில் பிறர் ஒரு பென்சில் குறி போடுவதைக்கூட தாங்கிக்கொள்ள முடியாதவன் நான். "என்ன இது?" என்று அவரிடம் கேட்டேன். அல்லாஹ்வை 'GOD ' என்று கூறுவது தவறு என்றார். GOD என்பதை அரபியைப் போல் வலமிருந்து இடமாகப் படித்தால் DOG என்று வருகிறதாம். எனவே இப்பெயர் இறைவனைக் கேவலப்படுத்துகிறது என்றார். "அது சரி, ஒரு மொழியை அதற்குரிய முறையில் படிக்காமல் ரிவர்சாக ஏன் படிக்கிறீர்கள்? அப்படிப் பார்த்தால் 'அல்லாஹ்' என்னும் அரபிச் சொல்லை ரிவர்சாகப் படித்தால் "ஹல்லா" - 'அப்படியல்ல' என்றல்லவா வருகிறது?" என்றேன்.

இதே போன்ற கிறுக்குத்தனத்தைதான் ஹெஜ்.ஜி.ரசூலின் 'மொழி அரசியல்' என்னும் கட்டுரையில் காண முடிகிறது. அவர் எழுதுகிறார்: "அல்லாஹ் ஆணுமில்லை, பெண்ணுமில்லை; அவன் யாரையும் பெறவுமில்லை அவனை யாரும் பெறவுமில்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படையான முழுமுதற் கொள்கையான கலிமாவாகும்" (இஸ்லாமியப் பெண்ணியம், பக்கம்.27 )
கலிமா என்றால் 'வாக்கியம்' அல்லது 'வாசகம்' என்று பொருள். இஸ்லாத்தில் முழுமுதற் கலிமா என்பது "லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்பதாகும்.ஹெஜ்.ஜி.ரசூலுக்கு கலிமா எது என்றே தெரியவில்லை. திருக்குரானின் 112 -வது அத்தியாயத்தின் வசனங்களை எடுத்து முழுமுதற் கலிமா என்று காட்டியுள்ளார். மேலும் தொடர்ந்து எழுதுகிறார்: "ஆனால் அல்லாஹ்வை தமிழில் சொல்லும்போது இறைவன் பார்க்கிறான் / அருள் புரிகிறான் என ஆண் தன்மை சார்ந்து சொல்கிற வழக்கமே உள்ளது. இறையை ஒரு ஆணுக்கு இணையாக சொல்வதேன்? மொழிரீதியாக இணை(ஷிர்க்) வைக்காத வேறு சொல்லை ஏன் இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் இன்னும் தேடவில்லை என்பது ஒரு ஏக்கமாகவும் விவாதமாகவுமே வெளிப்படுகிறது.
"இன்று இணைவைத்தல் ('ஷிர்க்') பற்றிய கருத்தாக்கமே உள்வட்ட விவாதங்களில் முதன்மை பெறுகிறது. வகாபிகள் இந்த இணைவைத்தலை மிக எளிமையாக எந்தவித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் தர்கா சியாரத்திற்கு இணையாக்கிவிடுகிரார்கள். வழிபாட்டு ரீதியான ஷிர்க்கென தவறாக புரிந்துகொண்டு விவாதம் செய்பவர்கள் 'மொழி ரீதியான ஷிர்க்'-கிற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கே அல்லாஹ் செய்கிறான் / பாதுகாக்கிறான் எனச் சொல்லுகையில் அல்லாஹ்வை மொழி ரீதியாக ஒரு ஆணுக்கு இணைவைத்துவிடுதல் நிகழ்ந்துவிடுகிறது. இணை வைக்காமல் தமிழில் எப்படி அழைப்பது என்பதுதான் தமிழ் மொழி சார்ந்த பிரச்சனையாகவும் உள்ளது."

இதுதான் ஹெஜ்.ஜி.ரசூல் முன்வைக்கும் வாதம். ஆள் முழுக்க முழுக்க நெத்து மண்டையாகத்தான் இருக்கிறார்! அனால் அடிப்படையான பல விஷயங்களை அவர் இன்னும் புரிந்துகொள்ளவே இல்லை. அவர் கூறுவது போல் இது இணைவைப்பே கிடையாது! மேலும் இது 'தமிழ் மொழி சார்ந்த பிரச்சனை' மட்டுமல்ல. எல்லா மொழிக்கும் இந்தப் பிரச்சனை உண்டு. இதை விட்டும் அரபி மொழி தப்பித்துவிட்டதாக அவர் சித்தரிக்கிறார். அனால் இந்தப் பிரச்சனை அரபி மொழியிலும் உள்ளது!
"இறைவன் பார்க்கிறான்" என்று சொன்னால் அது ஆண்பாலாகிவிடுகிறது.
"குதா தேக்தா ஹே" என்று உருதுவில் சொன்னால் அது ஆண்பாலாகிவிடுகிறது.
"அல்லாஹ்" என்னும் சொல் ஆண்பாலையோ பென்பாலையோ குறிக்காது என்பது உண்மைதான். ஆனால் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸில் அல்லாஹ்வுக்கு ஆண்பால் விகுதியை வைத்தே வாசகங்கள் உள்ளன.
அரபியில் "ஹுவ" என்பதற்கு "அவன்" என்று பொருள். "ஹிய" என்பதற்கு "அவள்" என்று பொருள். ஹெஜ்.ஜி.ரசூல் மேற்கோள் காட்டியுள்ள திருக்குர்ஆன் அத்தியாயத்தின் முதல் வசனமே, "குல் ஹுவல்லாஹு அஹத்" (சொல்க: அவன் அல்லாஹ் ஏகன்) என்றுதான் உள்ளது. "ஹுவ" - 'அவன்' என்று தெளிவாகவே ஒரு பதம் போட்டுக் கூறியுள்ள இந்த அத்தியாயத்திற்கு "இக்லாஸ்" - "தூய்மை" என்றும் "தவ்ஹீத்" - "ஏகத்துவம்" என்றும் இரு பெயர்கள் உள்ளன. இதுவே இறைவனை அவன் என்று கூறுவதெல்லாம் இணைவைப்பாகாது என்பதைக் காட்டுகிறது. 'இல்லை, இணைவைப்புதான்'என்று அழிச்சாட்டியம் செய்தால் திருக்குரானிலேயே இணைவைப்பு உள்ளது என்றாகிவிடும்!
அல்லாஹ்வை வருணிக்கும் பல வசனங்கள் "ஹுவல்லதீ.." என்று ஆண்பாலிலேயே கூறுகின்றன.
"யுசப்பிஹு லஹு..." (அவனை தியானிக்கின்றன...) என்பதுபோல் வரும் வசனங்கள் 'லஹு' என்னும் ஆண்பால் விகுதியைத்தான் பயன்படுத்துகின்றன.
முஸ்லிம்கள் அதிகமாக ஓதுகின்ற குரான் வசனங்களில் ஒன்றான 'பகரா' அத்தியாயத்தின் 285 -வது வசனத்தில் "குல்லுன் ஆமன பில்லாஹி வ மலாஇகதிஹி வ குதுபிஹி வா ருசுலிஹி..." என்று வருகின்ற பகுதியிலும் "ஹி" என்னும் ஆண்பால் விகுதிதான் வழங்கப்பட்டுள்ளது, அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள் என்பதாக.("ஹா" என்பது பெண்பால் விகுதியாகும்.)
இந்தப் பால் விகுதிகளை விட்டு அரபி மொழியும் தப்பவில்லை. நானறிந்த வகையில் பால் விகுதிகளே இல்லாத ஒரு மொழி பாரசீக மொழிதான். அதில் மனிதனுக்குக்கூட ஆண்/பெண் பால்விகுதிகளைச் சுட்ட முடியாது! ஆண்/பெண் பகுப்பே அந்த மொழியில் இல்லை!

அரபி, உருது, ஹிந்தி ஆகிய மொழிகள் இதற்கு நேர்மாறானவை. இவற்றில் சொற்களே ஆணாகவும் பெண்ணாகவும் உள்ளன! பூனையைக் குறிக்கும் "பில்லி" என்னும் உருதுச்சொல் பெண்பால் சொல்லாகும், அந்தப் பூனை ஆணாக இருந்தாலும் சரி. "குர்சி" (நாற்காலி) என்னும் அரபிச் சொல் பெண்பால் சொல்லாகும். (நாற்காலியைப் பெண்ணுடலின் நளினத்தில் வடிவமைத்திருந்தால் அது 'நாற்காலி FETISH '- ஐ உருவாக்கும் வியாபார உத்தி. நான் அதைக் கூறவரவில்லை.) "ஷம்ஸ்" - 'சூரியன்' என்பது பெண்பால், "அரள்" - பூமி என்பது பெண்பால், "கமர்" - நிலா என்பது ஆண்பால்.

இறைவன் என்று கூறுவதாலேயே  கடவுளை ஆணாகச் சித்தரிக்கிறோம் என்பதெல்லாம் அராஜகமான கருத்தாகும். அப்படிக் கூறுவதாலேயே அல்லாஹ் ஆணாகிவிட மாட்டான். தாய் தந்தையர்கள் தங்கள் மகளைச் செல்லமாக, "டேய், இங்க வாடா கண்ணு" என்று ஆண்பாலில் அழைப்பதுண்டு. அப்படிக் கூறுவதாலேயே பெண் ஆணாகப் பால்மாற்றம் ஆகிவிடாது. அல்லாஹ்வுக்கு ஆண்பால் விகுதியைப் பயன்படுத்தும் திருக்குரானே கூறிவிட்டது:
"அல்லாஹ் ஆணுமல்ல பெண்ணுமல்ல"

சைவத் திருமுறையிலும் இக்கருத்து உள்ளது: "ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்" (இதில் அல்லா என்பது தமிழ் வார்த்தை, அரபி வார்த்தை அல்ல.)

இங்கேயே ஹெஜ்.ஜி.ரசூலின் வாதம் உடைந்துவிடுகிறது.ஆணுமல்லாத பெண்ணுமல்லாத அலியும் அல்லாத அல்லாஹ்வை ஏன் ஆண்பால் விகுதி இட்டு அழைக்க வேண்டும்? பெண்பால் விகுதி இட்டு அழைக்காதது ஏன்? என்று யோசித்தால் அது உருப்படியான வாதமாக இருக்கும். அரபு மொழியின் இலக்கணப்படி பாலில்லாத 'ந்யூட்டர்' பெயர்ச்சொற்களுக்கு ஆண்பால் விகுதி கொடுத்துக் கூறுவது பொது மரபு. அதன்படித்தான் அல்லாஹ்வுக்கு ஆண்பால் விகுதி கொடுக்கப் படுகிறது. "அல்லாஹ்" என்னும் சொல் எப்படி ஆண்பாலோ/ பெண்பாலோ அல்லாமல் இருக்கிறதோ அப்படியே இந்து மரபில் "பரம்", "பராபரம்", "பிரம்மம்" என்னும் சொற்கள் ஆண்/பெண் பால் இல்லாதவை. உபநிஷதங்கள் கடவுளை "பிரம்மம்" என்றுதான் அழைக்கின்றன.( புராணங்களில் வரும் பிரம்மன் என்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை.)

வேண்டுமானால் இறைவன் என்று சொல்லாமல் 'இறை' என்று சொல்லுங்கள். கலீல் அவ்ன் மவ்லானா அப்படித்தான் கூறுகிறார்கள். அவர்களின் 'தாகி பிரபம்', 'ஞானப் பேழை', 'அற்புத அகிலநாதர்' போன்ற நூல்களைப் பார்த்தால் இது விளங்கும். 'இறை கூறிற்று', 'இறை அருளிற்று' என்றுதான் எழுதுவார்.( இது அல்-திணை அல்ல. கடவுள் திணைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று காட்ட. திணையிலி என்று காட்ட.)



இந்தச் சிக்கலுக்கான விடையை சூபி மரபில் இப்னு அரபி அவர்களின் எழுத்துக்களில் காண முடிகிறது. ஆண்-பெண் அல்லாத கடவுளை திருமறையே ஆண் விகுதிகளால் சுட்டுவது கண்கூடு. அப்படிச் சுட்டுவதால் அவன் ஆணாகிவிடமாட்டான். ஆனால் ஆணுக்குள் பெண் அடக்கம் என்று காணும் ஒரு கோணம் உள்ளது. திருக்குரானின் பல கட்டளை வாக்கியங்கள் ஆணை முன்னிறுத்தியே சொல்லப்பட்டுள்ளன. எனினும் அவை பெண்ணுக்கும் பொருந்தும் என்றுதான் அர்த்தப் படுத்தப் படுகிறது. மனிதனின் தோற்றம் குறித்த திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீசையும் ஊன்றி கவனித்தால் ஒரு விஷயம் தெரிய வரும். அல்லாஹ் முதலில் 'ஆதம்' என்னும் ஆணைத்தான் படைத்தான். பின்பு 'ஹவ்வா'- ஏவாள் என்னும் பெண்ணைப் படைத்தான். எங்கிருந்து? ஆதமின் விலா எலும்பிலிருந்து! அதாவது பெண் படைக்கப் படுவதற்கு முன் இருந்த ஆண் வெறும் ஆண் மட்டுமல்ல. அவனுக்குள் பெண்ணும் இருந்தாள்! பெண்ணின் சாராம்சம் ஆணுக்குள் மறைந்திருந்தது. அவர் வெறும் ஆதம் அல்ல 'ஆதம்-ஹவ்வா' ஆவார்! இதனடிப்படையில் இப்னு அரபி கூறினார்கள், திருக்குரானில் சொல்லப்பட்டுள்ளது போல் அல்லாஹ்வை "ஹுவ" - 'அவன்' என்று அழைத்தால் அதில் "ஹிய" - அவள் என்பதும் அடங்கும். அது அவனது ஜலால் - ஜமால் (ஆற்றல் - அழகு) இரண்டையுமே குறிக்கும். தனியாக "ஹிய" - அவள் என்று சொன்னால் அது அல்லாஹ்வின் ஜமாலை - கருணையை, அழகாய் மட்டும் குறிக்கும். இது உருவகித்துக் கொள்ளும் முறைதான். இதற்கு நேரடிப் பொருள் எடுத்தால் திருக்குரானே அல்லாஹ்வை ஆணாகக் காட்டுகிறது என்ற தவறான கருத்து உண்டாகிவிடும்.



கிருத்துவம் இப்படித்தான் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவுக்கு ஒரு வயாதான தந்தையின் தோற்றத்தை வழங்கிவிட்டது! கிழடு தட்டிய சிவனையோ திருமாலையோ இந்துக்களால் உருவகிக்கவே முடியாது. வாட்டிகன்  சிஸ்டைன் தேவாலயத்தின் விதானத்தில் மைக்கேல் ஏஞ்சலோ கி.பி.1511 -ல் தீட்டிய "CREATION OF ADAM " (ஆதாமின் தோற்றம்) என்னும் ஓவியத்தில் கடவுளை அவர் ஒரு கிழவராகக் காட்டியிருக்கிறார். ஆனால் ஆதாமை ஒரு வாளிபனாகச் சித்தரித்துள்ளார். "கடவுள் மனிதனைத் தன் உருவத்தில் படைத்தார்" (ஜெனசிஸ்: 1 : 27 ) என்னும் பைபிள் வாசகத்தைக் குறியீடாக மட்டுமல்லாது நேரடியாகவும் பொருள் கொள்கின்ற கிருத்துவ நிலைக்கு இது மாற்றமாக உள்ளது.

தத்துவங்களுக்குத் தகுந்தாற்போல் இறைவனை இவ்வாறு உருவகித்துப் பேசுகின்ற போக்கு எல்லா ஞான மரபுகளிலும் காணப்படுகிறது. சூபி ஞானிகள் அல்லாஹ்வைக் காதலியாக' உருவகித்து எழுதினார்கள். இது சூபித்துவ "நாயக- நாயகி பாவனை" (BRIDAL MYSTICISM ). இதற்கு நேரடிப் பொருள் வைத்துப் பார்த்த வஹ்ஹாபிகள் சூபிகள் இறைவனைப் பெண் என்று கூறுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். குறியீடான வசனங்களுக்கெல்லாம் இப்படி நேரடிப் பொருள் வைத்துப் பார்த்தே உண்மையைத் தவறவிட்டுத் தடம் மாறிப்போன வஹ்ஹாபிகள்தான் "இறைவனுக்கு உருவம் உண்டு" என்று வாதாடுகிறார்கள். இதே போக்கில் சென்றால் நாளை "இறையாண்மை" குறித்தும் வாதாடுவார்கள்!

கல்லூரியிலும் சில பகுத்தறிவு மாணவர்கள் என்னிடம் இப்படியெல்லாம் வாதாடுகிறார்கள்."அல்லாஹ்வின் கைகள்,பாதங்கள்,முகம்,கண் இதெல்லாம் திருக்குரானில் சொல்லப்பட்டுள்ளது.எனவே அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு.இதையெல்லாம் நீங்கள் மறுக்கிறீர்களா?" என்று கேட்பார்கள். "இதையெல்லாம் நான் மறுக்கவில்லை. ஆனால் உருவமுள்ள கை என்றோ, உருவமுள்ள முகம் என்றோ வரவில்லையே? அல்லாவுக்கு உருவமில்லாத கைகள், உருவமில்லாத பாதங்கள், உருவமில்லாத முகம்தான் உள்ளன" என்று கூறுவேன்."உருவம் இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?" என்பார்கள். "ஏனெனில் எனக்கு உருவம் இருக்கிறது. படைப்புக்களுக்கு உருவம் இருக்கிறது. படைத்தவனுக்கு உருவம் கிடையாது என்பதற்கு இதுவே ஆதாரம்! 'லைஸ கமித்லிஹி ஷை-உன்' எப்பொருளும் அவனைப்போல் இல்லை (42 : 11 ) " என்று நான் பதில் கூறுவேன். இப்படியே சின்னப்புள்ளத் தனமான வாதங்களாகப் போய்க்கொண்டிருக்கும். சில நேரங்களில் அவர்களின் பாணியிலேயே பதில் சொல்வேன். "அல்லாஹ்வுக்கு தலை உண்டா? வயிறு உண்டா?" என்று கேட்பேன். "ஆதாரமில்லை" என்பார்கள். "தலையில்லாத இடத்தில் கண், வயிறில்லாத இடத்தில் இரண்டு கைகள். காலில்லாத நிலையில் இரண்டு பாதங்கள். இதுதான் 'உங்கள்' அல்லாஹ் என்றால் அவனைவிட அதிகாமான உறுப்புக்கள் மனிதனிடமும் விலங்குகளிடமும் உள்ளன. படைப்பை விடவும் அவனைத் தாழ்த்திவிட்டீர்கள். இப்படி ஒரு HANDICAP உருவத்தை உலகில் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். அதைத்தான் நீங்கள் சொர்கத்தின் உச்சகட்டமான தரிசனம் என்கிறீர்கள் போலும்! என் அல்லாஹ் இப்படி ஊனமுற்ற அல்லாஹ் அல்ல" என்பேன்.

இப்படி ANTHROPOMORPHIC அல்லாஹ்வை அவர்களின் மனம் உருவாக்கிக் கொள்ளவேண்டிய நிலை ஏன்? சின்னப்புள்ளத்தனம் என்று சொன்னேனே, அதுதான் காரணம்! இறைவனை மனிதனின் உருத்தன்மையில் சித்தரித்துக் கொள்வது ஒரு உளவியல் தேவையாக உள்ளது. அந்தத் தேவையைக் கடந்து அப்பால் செல்வதற்கு மனப்பயிற்சிகள் அவசியம். அரைவேக்காட்டு மூளைகள் அந்த நிலையைத் தாண்டுவது அரிது.

இந்து மதம் இறைவனின் இரண்டு நிலைகளைப் பற்றிப் பேசுகிறது. இறைவனின் திருக்கல்யாண குணங்கள்- தெய்வீகப் பண்புகள் (சிபாத்) படைப்புக்களில் வெளிப்படுகின்ற நிலையில் அவனை "சற்குண பிரம்மம்" என்றும், படைப்புக்களைத் தாண்டிய தன்மய நிலையில் (தன்ஸீஹ்) நிலையில் அவனை "நிர்குண பிரம்மம்" என்றும் கூறுகிறது. சற்குண பிரம்மா வழிபாடுதான் வெகுசனங்களுக்கு இலகுவானது. மனப்பயிற்சிகளால் முயன்று முன்னகரும் சாதகர்கள்தான் நிர்குண நிலையை அவதானிக்க முடியும் என்றும் கூறுகிறது.



இந்த உளவியலை ராமகிருஷ்ண பரமஹம்சர் மிக எளிமையாக விளக்கினார்: "ஒரு எறும்பு கடவுளைப் பற்றிச் சிந்தித்தால் அவரை ஒரு மாபெரிய எறும்பாகத்தான் கற்பனை செய்யும். ஒரு மீன் கடவுளை ஒரு மாபெரும் மீனாகத்தான் கற்பனை செய்யும். அப்படித்தான் மனிதனும் கடவுளைக் கற்பனை செய்கிறான்" என்பார்.
என்ன, எறும்பு கற்பனை செய்யும் அந்தக் கடவுளின் உருவிற்கு எட்டு கொடுக்குகள் இருக்கும்! மீனின் கற்பனை உருவில்  கடவுள் பத்து சிறகுகள் கொண்டிருப்பார்! மொழியின் போதாமை போலவே இது மனித மனத்தின் போதாமைதான். 

இந்த உளவியலை நீங்கள் குழந்தைகளிடம் காணலாம். என் மகன் என் மகளை சில சமயம் மிரட்டும்போது "அல்லாஹ் உன்னை அடிப்பான் பாத்துக்க. அல்லாவுக்கு எவ்வளவு பெரிய கை இருக்கும் தெரியுமா? (அத்தாவோட கைல மொத்து வாங்கினாலே இப்படி வலிக்குதே. அல்லாவோட கைல சிக்குனா என்னா ஆவ பாத்துக்க என்னும் லாஜிக்!) அவனோட வாய் இவ்ளோ பெரிசா இருக்கும்...(கைகள் விரிகின்றன) பல்லு இவ்ளோ பெரிசா இருக்கும்..." என்று கூறுவான். இந்த ஐந்து வயதுச் சிறுவனிடம் போய் நான் 'அருவுருத் தத்துவம்' பேசினால் அவனுக்கு அது புரியாது.சில சமயம் என்னிடம், "காபாவுக்குள்ள போனா அல்லாவைப் பார்க்கலாமா அத்தா?" என்று கேட்பான். 'காபா அல்லாஹ்வின் வீடு' என்று சொல்லித்தந்தது நான்தானே! வஹ்ஹாபிகள் இந்த அளவு கைப்புள்ளைகளாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் மேலே ஏற்றி ஏழு வானங்களுக்கு அப்பால் உள்ள சிம்மாசனத்தில் (அர்ஷ்) அல்லாஹ்வை 'அமர' வைத்துள்ளார்கள்!
"மூட மதபோதகனே!
கடவுளை அர்ஷில் 
சோம்பேறியாக 
அமரவைத்துவிட்டாய் நீ!"
என்று பாடுவார் மகாகவி இக்பால்.

நாகூர் ரூமியின் ஒரு சிறுகதையில் அவரிடம் அவரின் மகள் "அல்லாஹ் ஆணா? பொண்ணா?" என்று கேட்பாள். அதற்கவர் மிக லாவகமாக, "அல்லாஹ் உன்னப் போல பொண்ணுதான் குட்டீ!" என்று கூறுவார். இதுதான் ஒரு குழந்தைக்குச் சொல்லும் பதிலாக இருக்கமுடியும். ஆனால் ஹெஜ்.ஜி.ரசூலை என்னால் அப்படியொரு குழந்தையாகப் பார்க்க முடியவில்லையே! எனவேதான் இவ்வளாவு விளக்கவேண்டியிருக்கிறது, அவரால் புரிந்துகொள்ள முடியும் என்பதால். "கமான் கைப்புள்ள, YOU CAN DO IT !"

3 comments:

  1. நல்ல பதிவு , குழந்தை மொழி ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு, சிந்தனையைத் தூண்டும் விதமான பதிவு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ஒரு சிறு விளக்கம்:

    //நானறிந்த வகையில் பால் விகுதிகளே இல்லாத ஒரு மொழி பாரசீக மொழிதான். அதில் மனிதனுக்குக்கூட ஆண்/பெண் பால்விகுதிகளைச் சுட்ட முடியாது! ஆண்/பெண் பகுப்பே அந்த மொழியில் இல்லை!/

    “ ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவென்றால் அவ்
    வுருவை இக் தொருத்தன் என்கோ? ஒருத்தி என்கோ?
    இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர்
    இயற்சொல் இல தெனின் யான் மற் றென் சொல் வேனே.”
    -குமரகுருபரர்

    முழு இடுகையும்:

    http://arurs.blogspot.com/2010/10/blog-post.html

    ReplyDelete
  3. ///இந்த உளவியலை ராமகிருஷ்ண பரமஹம்சர் மிக எளிமையாக விளக்கினார்: "ஒரு எறும்பு கடவுளைப் பற்றிச் சிந்தித்தால் அவரை ஒரு மாபெரிய எறும்பாகத்தான் கற்பனை செய்யும். ஒரு மீன் கடவுளை ஒரு மாபெரும் மீனாகத்தான் கற்பனை செய்யும். அப்படித்தான் மனிதனும் கடவுளைக் கற்பனை செய்கிறான்" என்பார்.
    என்ன, எறும்பு கற்பனை செய்யும் அந்தக் கடவுளின் உருவிற்கு எட்டு கொடுக்குகள் இருக்கும்! மீனின் கற்பனை உருவில் கடவுள் பத்து சிறகுகள் கொண்டிருப்பார்! மொழியின் போதாமை போலவே இது மனித மனத்தின் போதாமைதான்.///

    அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டிய கிருஷ்ணருடைய அந்தக் காட்சி ஓவியமாக உள்ளது. அதிலும் கூடப் பல கைகள் ,முகங்களுடன் அவரை அவதானித்து இருந்தாலும், ஓவியம் முழுமை அடையவில்லை என்ற உணர்வையும் அந்த ஓவியனே நமக்கு ஏற்படுத்தி விடுவான்.

    இறை என்பது கற்பனைக்கு எட்டாதது.நம் சிற்றறிவுக்குத் தோன்றிய வண்ணம்
    எப்படியோ உருவகிக்கிறோம்.

    இந்து உருவ வழிபாட்டு முறையில் உருவங்களின் பங்கை சரியாகவே புரிந்து வைத்து உள்ளீர்கள்.நன்றி.

    ReplyDelete