"வேதத்தின் சாரத்தை எடுத்துக்கொண்டேன்
அதன் எலும்புகளை வீசி எறிந்தேன்
சண்டையிடும் நாய்களுக்கு!"
-மௌலானா ரூமி.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் மௌலானா ரூமி அவர்கள் இப்படி எழுதினார்கள் என்றால் அந்தத் துணிச்சல் லேசுப்பட்டதல்ல. ஆனால் இவ்வாறு அவர்கள் எழுத வேண்டிய அவசியம் என்ன? எந்த மனநிலை இப்படி எழுதத்தூண்டியது? ஆன்மீகத்தில் ஆழமாகச் செல்வோருக்கு இது நன்றாகத் தெரியும். சடங்குகளின் கடின ஓட்டுக்குள் இருக்கும் கனியின் சாரம்தான் அவர்களின் பசியைத் தணிக்கும். சாதாரண மக்களின் கையில் மதம் என்பது நாயிடம் சிக்கிய தெங்கம்பழம்தான்! அதன் ஓட்டினை அந்த நாய் கடித்தும் பிராண்டியும் நக்கியும் உருட்டிக்கொண்டு கிடக்கும். ஆனால் ஓட்டுக்குள் இருக்கும் சுவையான சாரத்தை அது ஒருபோதும் அடையாது.
சடங்குத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் வெற்று மதவாதிகளை எந்த ஒரு ஞானியும் ஒரு கட்டத்தில் அதிர்ச்சியுறவே செய்கிறார். அவரின் அக எழுச்சிக் கணங்கள் தரும் தரிசனங்களைக் காண முடியாமல் மதவாதிகளின் கண்கள் கூசுகின்றன. அவரை அவர்கள் எதிர்க்கிறார்கள். அவர் ஒரு கலகக்காரனாக அவர்களுக்குத் தோன்றுகிறார். இப்படிப்பட்ட சூபி ஞானிகள்தான் எத்தனை எத்தனை!
சூபித்துவத்தில் ஒரு மர்மமான ஆள் "கிள்ரு" அவர்களாவார். இகத்திற்கும் பரத்திற்கும் நடுவில், மண்ணுக்கும் நீருக்கும் நடுவில், விழிப்புக்கும் உறக்கத்திற்கும் நடுவில், உடலுக்கும் உயிருக்கும் நடுவில், சடங்குகளுக்கும் சாரத்திற்கும் நடுவில், புறத்திற்கும் அகத்திற்கும் நடுவில், தூலத்திற்கும் சூட்சுமத்திற்கும் நடுவில் துருவங்கள் சந்திக்கும் அந்தச் சாம்பல் வெளியில் (GREY AREA) அவர் தோன்றுகிறார். இப்பாலிருந்து ஒரு சாதகனை அப்பாலுக்கு அழைத்துச் செல்பவர் அவர்.
"கிள்ரு" என்றால் பசுமை என்று பொருள். அவரின் காலடி படும் இடம் பசுமையாகிவிடும் என்பதால் இந்தப் பெயர் என்று கூறப்படுகிறது. இந்த மர்ம நபர் பற்றித் திருக்குரானின் பதினெட்டாம் அத்தியாயமான "சூரா கஹப்" (60 - 82 வசனங்கள் ) ஒரு சம்பவத்தைக் கூறுகிறது. அதில் அவருடைய பெயர் கூறப்படவில்லை. இறைவனிடமிருந்து 'நேரடியாக' - உள்ளுணர்வால் (இல்மே லதுன்னி) ஞானம் கொடுக்கப்பட்டவர் என்று அவர் குறிக்கப்படுகிறார். இந்தச் சம்பவத்தை விளக்கும் நபிமொழிகள் புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய ஆதாரத் தொகுப்புக்களில் உள்ளன. அவற்றில்தான் இவரின் பெயர் "கிள்ரு" என்று வந்துள்ளது. திருக்குரானில் வரும் இந்தச் சம்பவம் மிகவும் அற்புதமானது.
வேதம் வழங்கப்பட்ட இறைத்தூதர் மூஸா (அலை) - மோசே என்னும் MOSES -தன்னை விட அறிவாளி வேறு யாருமில்லை என்று ஒருமுறை நினைக்கிறார். இறைவன் அதை மறுத்து "கிள்ரு" என்பவர் அவரைவிடப் பெரிய ஞானி என்று கூறி அவரைச் சென்று பார்த்துச் சில ஞானங்களைக் கற்றுக்கொள்ளுமாறு பணிக்கிறான். மூசாவும் அவரைத் தேடிச் செல்கிறார்கள். அவருடைய முகவரியே மிகவும் விசித்திரமாக உள்ளது.
இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தில் அவர் இருப்பார். குறியீடாக இவை சமயத்தின் புறச்சடங்குகளால் ஆன தளத்தையும் அக நிலைகளால் ஆன ஆன்மிகத்தையும் சுட்டுவதாக சூபித்துவ வாசிப்பு அறிகிறது. அது சரி, இரண்டு கடல்கள் சந்திக்கும் இடம் என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது? ஒரு பொறித்த மீனைக் கொண்டு செல்லவேண்டும். அந்த மீன் மீண்டும் உயிர் பெரும் இடம்தான் அதன் அடையாளம். இறந்த உள்ளம் மீண்டும் சமயப் பிரக்ஞையை அடையும் நிலை என்று இதனை விளங்கலாம். அந்த இடத்தில்தான் "கிள்ரு" இருப்பார்.
அவ்வாறே மூஸா அவர்கள் ஒரு பணியாளனுடன் சென்று அந்த இடத்தைக் கண்டறிகிறார்கள். பின்பு கிள்ருடன் சில நாட்கள் இருக்க அனுமதி கேட்கிறார்கள். "என்னுடன் இருப்பதற்கு உங்களுக்குப் பொறுமை போதாது" என்று கிள்ரு மறுக்கிறார். ஏனெனில் மூஸா இறைச்சட்டங்களை மிகவும் கறாராகக் கடைபிடிக்கக்கூடியவர். அவருக்கு எல்லாம் நூல் பிடித்தாற்போல் இருக்கவேண்டும். மேலும் மூசா அவர்கள் மிகவும் முன்கோபக்காரர் என்பது ப்ரஸித்தம். ஆனால் கிள்ரு வெளிப்பார்வைக்கு மிகவும் சிக்கலானவர். அவர் நடவடிக்கைகள் தாறு மாறாக இருப்பதுபோல் தெரியும். ஒரு பைத்தியக்காரக் கலகக்காரனைப்போல் அவர் நடந்துகொள்வதாக எண்ணி விடுவீர்கள். அப்படிப்பட்ட ஞானி அவர். மூஸா அவர்களுடன் அவர் இருந்த நாட்களில் நடந்ததும் அதுதான்!
மூன்று சம்பவங்கள் நடந்தன. அவை மூன்றிலுமே கிள்ரு அவர்களின் நடவடிக்கைகள் மூஸா நபியின் பொறுமையை உடைத்து விடுகின்றன.
1 ) ஒரு பயணக்கப்பலை உடைத்துச் சேதப் படுத்துகிறார். அந்தக் கப்பல் கடற்கொள்ளையரின் கையில் சிக்காமல் இருக்கவே அப்படிச் செய்தார்கள் என்பது பின்பு தெரிகிறது.
2 ) விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் தலையைத் திருகிக் கொலை செய்கிறார். எதிர்காலத்தில் அவன் தன் பெற்றோர்களையே கொலை செய்வான் என்று விதியில் எழுதப்பட்டுள்ளது. எனவே அவனைக் கொலை செய்து விதியை மாற்றி விட்டதாகக் கூறுகிறார். (இவர் இப்படிக் கொலை செய்து விதியை மாற்ற வேண்டும் என்பதும் முன்பே எழுதப்பட்டுவிட்ட ஒரு விதிதான்!)
3 ) உணவும் நீரும் தர மறுத்து அவமானப்படுத்தி அனுப்புகின்ற ஓர் ஊரின் எல்லையில் உள்ள ஒரு வீட்டின் சாய்ந்த சுவற்றை நிமிர்த்திக் கட்டி மராமத்து செய்கிறார். அந்த சுவற்றின் கீழே ஒரு பொக்கிஷம் புதைந்திருப்பதாகவும், அது அந்த வீட்டில் உள்ள இரண்டு அனாதைச்சிறுவர்களின் சொத்து என்றும் அது இப்போது வெளிப்பட்டால் அந்த ஊர் மக்கள் அபகரித்துக் கொள்வார்கள் என்றும் கூறுகிறார்.
இந்த மூன்று நிகழ்வுகளிலும் மூஸா நபி பொறுமையை இழந்து கோபப்பட்டதால் அத்துடன் அவரைக் கழட்டி விட்டுத் தன் வழியில் கிள்ரு சென்று விடுகிறார். அவர் வழி தனி வழி! அதாவது சித்தன் போக்கு சிவன் போக்கு என்று சொல்வதைப்போல!
இது போன்ற மனநிலையில் உள்ளவர்களை சூபி ஞான மரபு "மஜ்தூபுகள்" என்று அழைக்கிறது. மன எழுச்சி -EUPHORIA / ELATION - என்பது எல்லா மனிதர்களுக்கும் அவ்வப்போது ஏற்படுகின்ற ஒரு விஷயம்தான். ஆனால் அந்த ஒரு மனநிலையிலேயே சிக்கி நின்றுவிடுபவர்கள் உண்டு. அவர்களைத்தான் மஜ்தூப் என்று கூறுகிறோம்.
கிள்ரு அவர்களைப் பற்றிய புனைவுகள் பிற்காலங்களில் பல நாடுகளில் தோன்றின. மஜ்தூபுகளின் மனநிலைகளுக்கு ஒரு தொகுப்புப் பெயராக கிள்ரு என்பது அமைந்துவிட்டது எனலாம். கிள்ரைப் பற்றி ஒருவருக்கு எண்ணம் தோன்றினால் அவர் நாற்பது அடி சுற்றுவட்டத்தில் அங்குதான் எங்கோ இருக்கிறார் என்று பொருள் என்பது ஒரு ஐதீகம். இதைச் சொன்னவரிடம் நான் இரண்டு சந்தேகங்களை முன்வைத்தேன்.
1 ) நாம் இருக்கும் இடத்திலிருந்து நாற்பது அடிக்குல்தான் கிள்ரு இருக்கிறார் என்றால், அவரைப்பற்றிய எண்ணம் அங்கிருக்கும் அனைவருக்கும் தோன்றாமல் ஏன் ஒருவருக்கு மட்டும் தோன்றுகிறது?
2 ) நூறு அடிகள் சுற்றளவுள்ள ஒரு மைதானத்தின் நடுவில் நின்றுகொண்டு கிள்ரு பற்றி நான் என்னும்போது நற்பதடிக்குள் அவரை நான் காணவில்லை என்றால் இந்தத் தியரி தவறு என்றுதானே பொருள்? அல்லது கிள்ரு ஏன் கண்ணுக்குத் தெரியாமல் அருவமாக அங்கே இருப்பாரா?
இதைக் கேட்டதும் அந்த மனிதர் பதில் சொல்லாமல் என்னை ஒரு மாதிரி வெறித்துப் பார்த்தார். ஒரு வேலை அவர்தான் கிள்ருவாக இருக்குமோ என்று தோன்றியது!
கிள்ரு அவர்கள் ஒரு இறைத்தூதர் என்றும் இறைத்தூதர் அல்ல ஆனால் ஓர் இறைநேசர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. அவர் மாவீரன் அலெக்சாண்டரைச் சந்தித்ததாக ஒரு கருத்து உள்ளது. திருக்குரானில் 'துல்கர்னைன்' - இரண்டு கொம்புகள் உள்ளவன் - என்று ஒரு கேரக்டர் உண்டு. அது அலெக்சாண்டர்தான் என்று சிலர் கருதுகின்றனர். துல்கர்னைனும் ஓர் இறைத்தூதர் என்றும் இல்லை அவர் ஓர் இறைநேசர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.
நம் முன் திடீரென்று கிள்ரு வந்து நின்றால் அவரை எப்படிக் கண்டுபிடிப்பது? அவர் வலது கையின் கட்டை விரலைத் தடவிப்பாருங்கள்! ஆமாம், கிள்ருவுக்கு வலது கையின் கட்டைவிரலில் எலும்பு இருக்காது என்பது இந்திய முஸ்லிம்கள் கண்டுபிடித்த ஓர் ஐதீகம்.
கோட்டாறு நூஹுப் புலவர் பற்றிய ஒரு நிகழ்ச்சி உண்டு. சிறு வயதில் நண்பர்களுடன் தெருவில் அவர் விளையாடிக்கொண்டிருந்த போது ஒரு பித்துக்குளி வருகிறான். சிறுவர்கள் அவனைப் பகடி செய்து கற்களால் அடித்துத் துரத்துகிறார்கள். அவன் வெகு தூரம் ஓடியதும் விட்டுவிட்டுத் திரும்புகிறார்கள். நூஹு அந்தப் பித்தனின் மீது இறக்கம் கொண்டு அவன் அருகில் போய் நிற்கிறார். அவரை அவன் தன் அருகில் அழைத்து வாயைத் திறக்கச் சொல்கிறான். அவன் பார்வையில் ஒரு வசியம் உள்ளது. எனவே நூஹு அவன் சொன்னபடியே வாயைத் திறந்து காட்டுகிறார். உடனே அவன் அவரின் வாய்க்குள் எச்சிலைத் துப்பிவிட்டு ஓடிவிடுகிறான். நூஹுக்குத் தலையைச் சுற்றுகிறது. நெஞ்சிற்குள் ஏதோ உருளுகிறது. நூஹுப் புலவரே கூறுகிறார், "அந்தக் கணத்தில் எனக்கு ஞானம் பொங்கிவிட்டது. பித்தனாக வந்தது வேறு யாருமல்ல, கிள்ருதான்!"
இதேபோல் அஜ்மீர் தர்காவில் சமாதி கொண்டுள்ள காஜா நாயகத்தின் வாழ்விலும் ஒரு சம்பவம் உண்டு. அவர்களின் வாலிப வயதில் பாரசீக நாட்டில் ஒரு திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஒரு நாள் தோட்டத்திற்குள் ஒரு பக்கிரி ஒருவர் வருகிறார். பல நாட்கள் உண்ணாமல் இருந்தது போன்று தெரிகிறது. களைத்துப்போய் அமர்ந்த அந்தப் பக்கிரிக்கு ஒரு திராட்சைக் குலையைக் கொடுத்துக் காஜா நாயகம் உபசரிக்கிறார்கள். பக்கிரி அதைச் சுவைத்து உண்கிறார். உண்டபின் தன் பையிலிருந்து ஒரு பேரீத்தம்பழத்தை எடுத்துக் காஜா நாயகத்திடம் கொடுக்கிறார். அதை அவர்கள் வாயில் போட்டு மேன்றதும் தலையைச் சுற்றிக்கொண்டு கிறுகிறு என்று வருகிறது. அத்துடன் தோட்டத்தை விட்டு வெளியேறி ஒரு நாடோடியாகி விடுகிறார்கள். அவர்களின் ஆன்மீக வாழ்வு தொடங்குகிறது. அந்தப் பக்கிரி வேறு யாருமல்ல கிள்ருதான் எனப்படுகிறது.
பாருங்கள், நம் பிள்ளைகளுக்கு இலவசமாக மிட்டாய் கொடுக்கும் பக்கிரி பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் ஞானம் கொடுக்கும் கிள்ராகவும் இருக்கக்கூடும்!
இதுபோன்ற மனிதர்களைப் பற்றிய பதிவுகள் எல்லாச் சமய மரபுகளிலும் உள்ளன. ஒரு ECCENTRIC தன்மையுள்ள ஆன்மிக ஆளுமையாக அவர் தொடர்ந்து எல்லாக் காலங்களிலும் வருகிறார். எல்லா ஞானிகளின் வாழ்விலும் குறிக்கிடுகிறார். அவரை பல்வேறு ஆன்மிக மரபுகள் பல பெயர்களால் அழைக்கின்றன. கிள்ருதான் கிருத்துவ மரபில் வரும் செயின்ட் ஜார்ஜ் என்று பரவலாக ஒரு நம்பிக்கை உள்ளது.
மௌலானா ரூமியின் 'மஸ்னவி' காவியத்திலிருந்து பல பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கோல்மன் பார்க்ஸ் (COLEMAN BARKS ) ஒரு அற்புதமான கருத்தைக் கூறுகிறார். அதாவது மஸ்னவி காவியத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் நீண்ட கதைகளில் ( 'the stories that frame the masnavi ') கிள்ரு போன்ற கதாப்பாத்திரங்கள் வருகின்றன. அவர்களின் கலகத்தன்மை உண்டாக்கும் அனுபவத்தை 'KHIDHERSQUE EXPERIENCE ' என்று கூறும் அவர் கிள்ரு பாத்திரத்தை ஆங்கில நாடோடிக் கதையான "SIR GAWAIN AND THE GREEN KNIGHT " என்பதில் வரும் பச்சைக் காவலனுடன் ஒப்பிடுகிறார். கிள்ரு என்றால் பச்சை என்றுதானே பொருள்!
டிராய் நகரம் எரியூட்டி அழிக்கப்பட்ட பின்னர் அதன் வீரர்கள் ஆளுக்கொரு திசையில் சென்று ஐரோப்பாவின் பல சாம்ராஜ்யங்களை உருவாக்குகிறார்கள். ரோமுலஸ் 'ரோம்' நாட்டையும், டிசியஸ் 'டசானி'யையும், லங்கோபர்த் 'லொம்பார்டி'யையும், பெலிக்ஸ் ப்ரூட்டஸ் 'பிரிட்டன்' நாட்டையும் உருவாக்கினார்கள் என்று இந்தக் கதை துவங்குகிறது. பிரிட்டன் ராஜ்ஜியத்தில் பின்னாளில் ஒரு மாமன்னன் தோன்றுகிறான் - 'மன்னன் ஆர்த்தர்' (KING ARTHUR ). அவனுடைய தளபதியாக இருப்பவன் சர் கவாயின் என்பவன். ஒரு நாள் அரசவைக்குள் திடீரென்று புகும் வினோத மனிதன் ஒருவன் ஒரு சவால் விடுகிறான். அந்த மனிதன் தலை முதல் பாதம் வரை பச்சை நிறத்தில் இருக்கிறான். தன்னை ஒரு காவலாளி - KNIGHT - என்று கூறிக்கொள்கிறான். ( THE KNIGHT TEMPLARS என்று ஒரு ரகசிய இயக்கம் உண்டு. குறிப்பாக பிரிட்டனை மையப்படுத்திய கிருத்துவ வரலாற்றில் இவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்து மன்னரவையால் - ராணி அவை? - சிறந்த ஆளுமையாக விளங்கும் ஒருவருக்கு 'KNIGHTHOOD ' வழங்கப்படுகிறது. இங்கிலாந்தில் வழங்கப்படும் உச்சமான இந்த விருது இந்த ஆண்டு எழுத்தாளர் சாலமன் ருஷ்திக்கு வழங்கப்பட்டுள்ளது.)
பச்சைக் காவலனின் சவாலை ஏற்றுக் கொள்ளும் சர் கவாயின் - இவரும் ஒரு காவலன் (KNIGHT ) ஆவார்- அந்தப் பச்சைக் காவலனை அடுத்த புத்தாண்டு நாளில் அவனுடைய இடத்தில் சந்திப்பதற்காக காடுகள் மலைகள் எல்லாம் அலைந்து செல்கிறான். இடையில் இன்னொரு மன்னனைச் சந்திக்கிறான். அவன் அரண்மனையில் சில நாட்கள் அதிதியாகத் தங்க வேண்டி வருகிறது. மன்னன் தன் வீரர்களுடன் வேட்டைக்குச் சென்றுள்ள நேரங்களில் அரசி சர் கவாயினைத் தன் அழகால் மயக்க முற்படுகிறாள். ஆனால் ஒவ்வொரு முறையும் சர் கவாயின் அந்த ஈர்ப்பில் விழுந்துவிடாமல் தப்பித்துக் கொள்கிறான். (இந்த இடம் பைபிள் மற்றும் குர்ஆனில் வருகின்ற யூசுப்-சுலைகா கதையுடன் ஒப்புநோக்கப் படுகிறது.) அது அந்த மன்னனே சர் கவாயினுக்கு வைத்த சோதனை என்பது பின்னர் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அவன் பிறகு ஒரு வெளியில் சந்திக்கும் அந்தப் பச்சைக் காவலன் வேறு யாருமல்ல, அந்த மன்னன்தான் என்பதும் தெரிய வருகிறது.அவனது இடம் 'பச்சை ஆலயம்' (GREEN CHAPEL ) என்று அழைக்கப்படுகிறது. பசும் புல்வெளி அடர்ந்த ஒரு காட்டில் அது உள்ளது. அங்கு வருபவர்களின் தலையை வெட்டி அவர்களின் வீரத்தைப் பச்சைக் காவலன் சோதிக்கிறான். முதலில் தன் தலையை வெட்டச் சொல்லி முன்பு மன்னன் ஆர்த்தரின் அவையில் சவாலுக்கு அழைத்ததும், இங்கே வந்தபின் வந்தவர்களின் தலையை வெட்டி மீண்டும் ஒட்டவைத்துப் புதிய மனிதனாக்கி வாழ்த்துவதும் அவனுடைய கலகங்கள் என்று கூறலாம். இதே போன்று 'மறுபிறப்பு' கொடுத்து தீட்சை தரும் முறை FREEMASONS என்னும் ரகசிய இயக்கத்தில் உள்ளது. பூணூல் அணியும் யக்ஞோபவீத நிகழ்வை ஒரு மறுபிறப்புக் குறியீடு என்றே அர்த்தப்படுத்துகிறார்கள். எனவே பிராமணன் "துவிஜா" - இருபிறப்பாளன் என்று குறிக்கப்படுகிறான்.
கிள்ரு, பச்சைக் காவலன் போன்ற ஒரு தொன்மப் பாத்திரமாகவே வைணவ மரபில் வரும் நாரதரைக் காண முடிகிறது. "நாரதர் கலகம் நன்மையில் முடியும்" என்பது பிரபலமான பழமொழி. கிள்ரு மற்றும் பச்சைக் காவலன் ஆகியோர் செய்த கலகங்கள் நன்மையில் முடிந்ததை மேலே கண்டோம். இருவருமே ஆழமான ஞானம் உடையவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். நாரதரும் அப்படியே. எண்பத்துநான்கு சூத்திரங்களில் பக்தி நிலைகளை விளக்கும் "நாரத பக்தி சூத்திரம்" இதனைக் காட்டும். மேலும், நாரதருக்கும் பச்சை நிறத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. அவர் துளசி மாலை அணிந்தவர். திருத்துழாய் பச்சை நிறம். அவர் உலவுகின்ற இடமாக பசுமையான மலைகளைக் கூறலாம். ஏனெனில் மலைச்சாரலுக்கும் சமவெளிக்கும் இடைப்பட்ட முல்லை நிலம் கண்ணனுக்கு உரியது என்று தொல்காப்பியம் வகுக்கிறது. திருமாலைப் 'பச்சைமா மலைபோல் மேனி' என்று ஆழ்வார் பாடினார். குறியீடாக மலை என்பதை மண்ணுக்கும் விண்ணுக்கும் இடைப்பட்ட நிலையாகக் கூறப்படுவதுண்டு. (அதனால்தான் மேகதூதத்தில் யக்ஷி மலையின் உச்சியில் இருக்கிறாள், அதாவது தூலத்திற்கும் சூக்குமத்திற்கும் இடைப்பட்ட நிலையில்.) நாரதர் திருமால் பக்தர். மால் என்றாலே பித்து என்று பொருள். பக்தி என்பதும் ஒரு பித்தேறிய நிலைதான். அதாவது "மஜ்தூப்" நிலை!
Subscribe to:
Post Comments (Atom)
நண்பரே, மிகவும் அருமையான பதிவு. ரசிக்கத் தூண்டும் நடை.
ReplyDeleteஇஸ்லாம் குறித்து நிறையத் தெரியாது. தொடர்ந்து எழுதுங்கள், தெரிந்து கொள்கிறோம்.
அற்புதமான பதிவு உங்களுடையது. சூஃபி மகான்கள் பற்றி நிறைய தேடிக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவு பல விஷயங்களை மிகவும் அநாயாசமாகச் சொல்லிச் செல்கின்றது. http://www.kpenneswaran.com என்னும் என்னுடைய வலைத்தளத்தில் உங்களுடைய வலைப்பூவுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்.
ReplyDeleteயதார்த்தா கி.பென்னேஸ்வரன்
அருஞ்சுவைப் பதிவுகள்தாம் போங்க. இந்தப் பச்சைக்குடிலையே சுற்றிக் கொண்டிருக்கிறேனே வெகு நேரமாய், நானும் ம்ஜ்தூபாகி விட்டேனோ :)
ReplyDeleteWe should not think about "Kilru". The thinking has to come on its own - I think. :)
ReplyDeleteகட்டுரையை வாசிக்கும் போது கிள்ரு மிக அருகில் இருப்பதைப் போல உணர்ந்தேன்.என்னை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
ReplyDeleteமோஸஸ்கு எரிச்சல் ஊட்டிய 3 நிகழ்வுகள் போல கிருஷ்ணரிடம் ஒரு புராணம் உண்டு.
அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒரு பணக்காரன் வீட்டில் சென்று தண்ணீர் கேட்பார்கள்.அவன் தர மறுத்து விரட்டி விடுகிறான்.அந்தப் பணக்காரனுக்கு மேலும் செல்வம் கிடைக்கட்டும் என்று கிருஷ்ணர் ஆசீர்வதிக்கிறார்.
ஒரு ஏழை வீட்டிலும் கேட்பார்கள். அவன் தன்னிடம் இருந்த ஒரே செல்வமான பசுவின் பாலைக் கொடுப்பான். வாங்கி அருந்திவிட்டு அந்தப் பசு சாகட்டும் என்பார்.அதுவும் செத்துவிடும்.
"என்ன கிருஷ்ணா இது?"என்பான் அர்ஜுனன்.
"அவன் மேலும் மேலும் பணம் கிடைத்து மேலும் மேலும் மமகாரம் பிடித்து பாவத்தின் மீது பாவம் செய்வான்.
இவன் இருந்த ஒரே பந்தமான மாடு செத்ததால் என் மீது தியானம் திரும்பி முக்தி அடைவான்" என்கிறார் கிருஷ்ணர்.
God's ways are inscrutable!