Saturday, October 30, 2010

உருவெளிக் களங்கள் - 4

'மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான்' என்று சார்ல்ஸ் டார்வின் கூறினார். இந்தப் பரிணாமக் கோட்பாடு உண்மையா பொய்யா என்னும் விவாதங்கள் விஞ்ஞானிகள் மத்தியிலேயே இன்னும் முடிந்தபாடில்லை. மனிதர்களின் முகங்களைப் பார்க்கும்பொது அதில் குரங்கு மட்டுமல்லாது வேறு பல விலங்குகளின் ஜாடைகளும் தெரிவதைக் காணலாம்.தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலக அருங்காட்சியகத்தில் மன்னர் சரபோஜி திரட்டிய நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வித்தியாசமான மன்னர் அவர். இலக்கியம், மருத்துவம், வரலாறு, சோதிடம் இப்படி என்னென்ன துறைகள் உள்ளதோ அனைத்திலும் பல அரிய நூல்களைத் திரட்டியுள்ளார். ஆங்கிலம், சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, பிரெஞ்சு போன்ற பல மொழிகளின் நூல்கள் அவை. அதில் ஒரு வரைபடம் என் மனதை எப்போதும் கவர்கின்றது. நாய், பன்றி, செம்மறி ஆடு, ஒட்டகம், குதிரை, சிங்கம், குரங்கு, கிளி ஆகியவற்றின் சாயல்கள் உள்ள மனித முகங்களை ஓவியன் ஒருவன் வரைந்திருக்கிறான். அதைப்பார்த்த பின்னர் பல முகங்களை நான் பல்வேறு விலங்குகளின் சாயலில் காண ஆரம்பித்தேன். டைனாசர் சாயலில்கூட சிலர் தென்பட்டார்கள்!

கழுதையின் முகம் மிகவும் சீரியஸான ஒன்று. தத்துவவாதியின் முகத்தைப் போன்றது என்பார் ஓஷோ. தத்துவவாதிகளும் பல நூல்களைத் தங்கள் மண்டைக்குள் சுமப்பவர்கள்தானே? கழுதை பொதி சுமப்பதைப்போல்! ஒரு மனிதன் சோகமாக இருந்தால் 'முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறான்' என்று நாம் கூறுவது உண்டு. ஆங்கிலத்திலும் "He put a long face" என்று கூறுவார்கள். அது கழுதையின் முகத்திற்கு எவ்வளவு நன்றாகப் பொருந்துகிறது. எங்கள் வீட்டருகில் ஒருவர் அப்படிப்பட்ட முகத்துடன் இருக்கிறார். தெருவில் நடந்துசெல்லும் போதெல்லாம் முகத்தைத் தொங்கவிட்டபடி மெதுவாகத்தான் நடந்துசெல்வார், ஒரு கழுதையைப் போல!

இந்த அடிப்படையில், 'சிங்கத்திற்குப் பிறந்த ஒட்டகத்தைப் பூனை ஒன்று திருமணம் செய்து கொண்ட கதை' என்று நான் சொன்னால் அது முன்னாள் உலக அழகியின் கல்யாணக் கதை என்று நீங்கள் ஊகித்துவிடுவீர்கள்!


நான் அவதானித்த வகையில் என்னுடைய கணக்கெடுப்பு தருகின்ற ரிசல்ட் என்னவென்றால் பிற விலங்குகளின் சாயலைவிட குரங்கின் சாயல்தான் மனித முகங்களில் அதிகமாகத் தென்படுகிறது! (இந்தக் கருத்து சார்ல்ஸ் டார்வினின் ஆன்மாவுக்கு ஆறுதலாக இருக்கலாம்.) அதிலும் குறிப்பாக அரசியல், கலை, விஞ்ஞானம், விளையாட்டு  போன்ற துறைகளில் பிரபலமடைந்த பலரின் முகங்கள் குரங்கின் சாயலில்தான் உள்ளன! இது ஏன் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.


உதாரணமாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் முகம் குரங்கின் சாயல் கொண்டிருப்பதைக் காணலாம். ஏதோ எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் தோன்றித் தொலைக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் உலகெங்கும் உள்ள கலா ரசிகர்கள் பலருக்கு இப்படித் தோன்றத்தான் செய்கிறது. புஷ்ஷின் முக பாவனைகள் குரங்கின் முக பாவனைகள் பலவற்றுடன் ஒத்துப்போகின்றன என்பதைக் கண்டுள்ளார்கள்!புஷ்ஷைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாக வந்துள்ள பாரக் ஒபாமாவிலும் குரங்கின் சாயல் இருப்பதாக முகவியல் அறிவு கூறுகிறது. இதனையும் பலர் தங்கள் மனதில் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.


இப்படிப் பல பேர் டார்வின் தியரிக்கான சிறந்த ஆதாரங்களைப் போல் தோன்றினாலும் என் மனதில் மாணவப் பருவத்திலேயே இந்த வகையில் பதிந்துபோன ஆளுமை வைலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்தான்!திருவையாற்றில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தியாகராஜர் மகோத்ஸவத்தில் அவருடைய கச்சேரியைக் கேட்டிருக்கிறேன். ஆட்டோகிராப்பும்  வாங்கியிருக்கிறேன். வைலின் படம்போல் கிறுக்கி அதற்குக் கீழே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். தன் கலையில் அசுர சாதனைகள் செய்தவர் என்று அவரைப்பற்றிக் கூறுவார்கள். நான் வைலின் இசையை ரசிப்பது எல்.சுப்பிரமணியம் வாசிக்கும்போதுதான். எல்.ஷங்கர், லால்குடி ஜெயராமன், சந்திரசேகர் மற்றும் வடக்கத்தி இசையில் என்.ராஜம், ஷோபா ஷங்கர் ஆகியோரின் இசையையும் ரசித்துள்ளேன். ஆனால் குன்னக்குடி வைத்தியநாதனை நான் ரசித்தது அவருடைய இசைக்காக அல்ல. அவருடைய முகத்திற்காகத்தான். கள் குடித்த குரங்கின் அத்தனை சேஷ்டைகளும் குணஷ்டைகளும் பொங்கிக் கூத்தாடும் முகம் அது! இன்னும் விசேஷம் என்னவென்றால் அத்தனை சேஷ்டைகளையும் தன் இசையில் அவர் கொண்டுவந்து ரகளை செய்துவிடுவார் என்பதுதான்! இதை ரசிப்பதற்காகவே முதல் வரிசையில் மேடைக்கு அருகில் இடம்பிடித்து அமர்ந்து விடுவோம்.ஐந்து நாட்கள் நடைபெறும் உத்ஸவத்தில் திருவையாறு மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களின் பாமர மக்கள் திரண்டு வந்து இசை கேட்பது அவருக்கு மட்டும்தான் என்பதைப் பதினைந்து வருஷங்கள் பார்த்திருக்கிறேன். ஜேசுதாசுக்கு வரும் கூட்டத்தைவிட அதிகமாக வருவார்கள்.செவ்வியல் கீர்த்தனைகள் மட்டும் வாசிக்காமல் விளையாட்டு வித்தைகள் காட்டுகிறார் என்னும் விமரிசனம் அவர்மீது எழுந்தது. அதைப் பற்றியெல்லாம் மனுஷன் சட்டை செய்யாமல் பாமர மனம் மகிழும்படி வாசித்துக் கொண்டுதான் இருந்தார். அதற்காகவே உத்ஸவத்தின் கடைசி நாளன்று நள்ளிரவில் இறுதி நிகழ்ச்சியாக வாசிப்பார். ஒரு முறை தொலைக்காட்சியில் அவர் திரைப்பாடல்களை வாசித்ததையும் பார்த்திருக்கிறேன். அவருடைய அந்த முக பாவனைகளை வேறு யாரும் செய்துவிட முடியாது. No one can ape him out!இப்படிப்பட்ட முக அவதானங்கள் எல்லா நேரத்திலும் வெறும் கிண்டலும் கேலியுமாகத்தான் இருக்கும் என்று கூற முடியாது. சோமாலியா, சூடான் போன்ற ஆப்ரிக்க நாடுகளில் பஞ்சத்தால் வாடி வதங்கித் துவண்டு கிடக்கும் குழந்தைகளைக் காணும்போது தேவாங்குகளைப் போல் இருக்கிறார்கள். அந்தக் காட்சி நெஞ்சைப் பிழிகிறது. ஏனெனில் அந்தத் தோற்றம் கொடிய வறுமையின் விளைவு. அங்கு தாண்டவமாடும் வறுமை சில நாடுகளின் அரசியல் திமிரின் விளைவு. ஒரு சில மனங்களில் ஏறியுள்ள அதிகாரக் கொழுப்பின் காரணமாகத்தான் இந்த நாடுகளின் பிள்ளைகள் எலும்பும் தோலுமாக இருக்கிறார்கள். சில நாடுகள் கடல்களில் கொண்டுபோய்க் கொட்டும் உபரி தானியங்களும் பாலும் இவர்களுக்கு வழங்கப்பட்டால் பூமியின் பரப்பில் இப்படிப்பட்ட உருவெளிக் களங்கள் இருக்காது!

(தொடரும்...)

4 comments:

 1. உங்கள் எழுத்து நடை படிக்கும் ஆர்வலர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். கருத்துகளுக்கிடையில் மெலிதான நகைச்சுவையும், மேற்கோள்களும் பிரமாதமாக இருக்கின்றன. 'நாகூர் ரூமி' வழியாக அறிந்து, எங்களின் வலை தளத்திலும் உங்களுடைய வலைத்தளத்துக்கு வர, இன்று அறிமுக இணைப்பு கொடுத்திருக்கிறேன். நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்!!

  (கமெண்ட்ஸில் உள்ள word verfication-ஐ நீக்கி விடுங்கள்.)

  ReplyDelete
 2. குன்னக்குடி பற்றி எழுதியுள்ளதை ரசித்தேன்...

  ReplyDelete
 3. Mr.Rameez, u can as wel announce asking ur visitors not to place cmnts!..u r not going to answer them anyway..regards

  ReplyDelete
 4. //குன்னக்குடி வைத்தியநாதனை நான் ரசித்தது அவருடைய இசைக்காக அல்ல. அவருடைய முகத்திற்காகத்தான். கள் குடித்த குரங்கின் அத்தனை சேஷ்டைகளும் குணஷ்டைகளும் பொங்கிக் கூத்தாடும் முகம் அது! இன்னும் விசேஷம் என்னவென்றால் அத்தனை சேஷ்டைகளையும் தன் இசையில் அவர் கொண்டுவந்து ரகளை செய்துவிடுவார் என்பதுதான்!//

  பகடிக்கு ஓர் அளவு இல்லையா? ரூமியையும் ,உமர்கயாமையும் ரசிக்கும் மெல்லிய ஆள் நீங்கள். குன்னக்குடியின் இசை உங்களை எப்படிக் கவரும்?

  எனக்கு அவரைப்பார்க்கும் போதெல்லாம்"கொட்டாம்பட்டி ரோடில்லே....குட்டி போற ஷோக்கிலே.."நினைவுக்கு வந்துவிடும்.

  ReplyDelete