Thursday, October 28, 2010

உருவெளிக் களங்கள் - 3

ஸ்ரீ அரவிந்தர், பரமஹம்ச யோகானந்தா போன்றவர்கள் நீளமான கூந்தல் வளர்த்து அதை நேர்வகிடு எடுத்துத் தலையின் இரண்டு பக்கமும் வழிய விட்டிருப்பார்கள். அது முகத்திற்கு ஒரு சமச்சீர் தன்மையை (SYMMETRY )அளிக்கிறது. சமச்சீர் தன்மை கொண்ட சிம்மெற்றி முகங்கள்தான் மனங்களை அதிகமாகக் கவர்கின்றன என்பது உளவியல் ஆய்வுகளால் நிரூபிக்கப் பட்டுள்ளது.

மக்களின் மனங்களைக் கவர்ந்த ஆளுமைகளின் முகங்களை ஆராய்ந்தபோது அவை சராசரி முகங்களைவிட அதிகமான சமச்சீர்த்தன்மை கொண்டவையாக இருந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் செயற்கையாக அந்த அளவு சமச்சீர்மை கொண்ட முகத்தை வரைந்தால், பாதி முகத்தை வரைந்து அதைக் கண்ணாடியில் பிரதிபலித்துச் சமமான மறுபாதியை ஏற்படுத்திப் பார்த்தால் அது காணச் சகிக்கமுடியாததாக இருப்பதையும் கண்டறிந்தார்கள். வேண்டுமானால் உங்கள் புகைப்படம் ஒன்றைப் பாதியாக வெட்டி அதைக் கண்ணாடியில் 'பெர்பெண்டிகுளர்'-ஆக வைத்துப் பாருங்கள்.



ஒரு வயது நிரம்பிய குழந்தைகளின் முன் இரண்டு திரைகளை வைத்து அதில் அக்குழந்தையின் தாயின் முகத்தை அரிதாரம் இன்றி ஒரு திரையிலும், அரிதாரம் பூசி மெருகேற்றி அதன்மூலம் கொஞ்சம் கூடுதலான சமச்சீர்மை தந்து மறு திரையிலும் காட்டினார்கள். குழந்தைகள் தங்கள் தாயின் அரிதாரமிட்ட முகத்தைத்தான் ரசித்தார்கள்! அடுத்த கட்ட சோதனையாக குழந்தையின் தாயின் முகத்தை ஒரு திரையிலும், நடிகை 'சிண்டி கிராபோர்ட்'-ன் முகத்தை மறு திரையிலும் காட்டினார்கள். குழந்தை அந்த நடிகையின் முகத்தைத்தான் ரசித்தது! உலக அழகி, உலக அழகன் போன்ற போட்டிகளில் முகத்தைமட்டுமல்ல, உடலையே சமச்சீர்மை கொண்டதாக உருவாக்கிக் காட்டவேண்டிய நியதியும் உள்ளது!  



சமய வரலாற்று ஓவியங்களில் பெண்மையின் மென்மையும் ஆண்மையின் வன்மையும் கலந்த சிம்மெற்றி முகங்களை அதிகமாகக் காணலாம். நீளமான முடியை நடுவகிடு எடுத்து இருபுறமும் வழியவிட்டவராகவே ஏசுநாதர் வரையப்படுகிறார். நபிகள் நாயகமும் அவ்வாறு தலை சீவிக்கொள்வார்கள் என்று ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

ஏசுநாதரின் இந்த உருவத் தன்மை கலீல் ஜிப்ரானை வெகு ஆழமாகப் பாதித்திருக்க வேண்டும். "JESUS THE SON OF MAN " என்னும் நூல் அவர் எந்த அளவு ஏசுவின் ஆளுமையில் கரைந்து போயிருந்தார் என்பதைக் காட்டும். அவருடைய "THE PROPHET " என்னும் நூல் பைபிளின் எதிரொலியாகவே கருதப்படுகிறது. ஏசுவின் ஆளுமையில் தன்னை இனம்காண்பதில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதற்கு அவருடைய எழுத்துக்களில் நிறையவே ஆதாரங்கள் உள்ளன. அதே சமயம் கிருத்துவ மத நிறுவனத்தின் போலித்தன்மையை எதிர்க்கும் கலகக் காரராகவும் அவர் இருந்தார்! எனவே தன் கதைகளில் வரும் கலகப் பாத்திரங்களை அவர் ஏசுநாதரின் சாயலிலேயே உருவாக்கினார்.




 "கலீல் என்னும் கலகக்காரன்" (KAHLIL THE HERETIC ) என்னும் கதை அவருடைய மிக முக்கியமான கதை. அதில் வரும் கதாப்பாத்திரத்திற்கு அவர் தன் பெயரையே கொடுத்திருக்கிறார். கலீல் உறங்கிக் கொண்டிருக்கும்போது மிரியம் என்ற பெண்ணும் அவளுடைய தாயும் அவனைப் பற்றிப் பேசும் வரிகள் மிகவும் முக்கியமானவை:

"மிரியமும் சேர்ந்துகொண்டு சொன்னாள், 'அம்மா, இவருடைய கைகள் தேவாலயத்தில் உள்ள கிறிஸ்துவின் கைகளைப்போல் உள்ளன.' அவளின் அம்மா கூறினாள், 'இவர் முகம் ஒரே சமயத்தில் பெண்ணின் மென்மையையும் ஆணின் வன்மையையும் கொண்டுள்ளது!" (And Miriam rejoined, "His hands Mother, are like those of Christ in the Church." The mother replied, "His face possesses at the same time a woman's tenderness and a man's boldness." )




கீழை மரபில் ஞானிகளின் உருவங்கள் வரையப்படுவதன் பின்னணியில் உள்ள உளவியல் மிகவும் ஆழமானது. மனிதனின் அகத்திற்குள் பரந்து விரிந்திருக்கும் உருவெளிக் களங்களில் மிகத் தொலைவு வரை சென்று வந்து வரைந்திருக்கிறார்கள்! சிவன்,கிருஷ்ணா, ராமா, புத்தர் போன்றோரது முகங்கள் இளமையாக வரையப்படுகின்றன. அதில் பெண்மையின் சாயலும் உள்ளது. வட்டமாக, சமச்சீர்த் தன்மையின் சாத்தியமான எல்லையில் அந்த முகங்கள் வரையப்பட்டுள்ளன. கண்கள் நீளமாகவும், புருவங்கள் வில்லைப் போல் வளைந்தும், உதடுகள் சிறியதாகவும் சிவந்தும் ( 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும் பனித்த சடையும்...' என்று அப்பர் பாடிச் செல்வதைப்போல்) அவை வரையப்பட்டுள்ளன. ஆனால் அவை விகாரமாகத் தெரிவதில்லை. மாறாக அவற்றில் ஒரு அமானுஷ்யமான பேரழகு தெரிகிறது!

இந்திய ஓவியங்களில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம், சிவன் கிருஷ்ணன் ராமன் போன்ற ஆன்மிக ஆளுமைகளை நீல நிறத்தில் (சில சமயம் பச்சை நிறத்தில்) வரைகிறார்கள் என்பது. ஒரு விதத்தில் நீலம் என்பது பிரபஞ்சத்தின் நிறம். அதாவது பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசத்தின் (ETHER ) நிறம். பூமியைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் ஒளியின் பிரிகை (REFRACTION OF LIGHT ) பூமியில் நீல நிறத்தின் அதிர்வலையில்தான் விழுகிறது. எனவே பூமியிலிருந்து வானம் நீல நிறமாகத் தெரிகிறது. முக்கால் பாகம் பரந்துள்ள கடலும் நீல நிறமாகத் தெரிகிறது. நம் பூமியே ஒரு நீல கிரகம் (BLUE PLANET ). எனவே நீல நிறம் என்பது ஒளி பூமிக்கு வந்ததை உணர்த்தும் ஒரு குறியீடு ஆகிறது. கிருஷ்ணன், சிவன், ராமன் போன்றோரின் தேகங்களை நீல நிறமாக வரையும்போது அது ஒரே சமயத்தில் பிரபஞ்சத்தன்மை (UNIVERSALITY ) கொண்டதாகவும் பூமித்தன்மை ( EARTHLINESS ) கொண்டதாகவும் அமைந்துவிடுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் இந்தக் குறியீடு நிச்சயமாக விளங்கப்படுகிறது என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் இந்த ஓவியங்கள் நம் ரசனையில் இனிக்கின்றன.


  இந்திய ஆன்மிகக் கலை மரபில், குறிப்பாக வைணவ சமய மரபில் காணப்படும் இந்த நீல நிறக் குறியீட்டை ஜேம்ஸ் கேமரான் (JAMES CAMERON )  அள்ளிக்கொண்டு போய் தன் "அவதார்" என்னும் திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் படத்தின் பெயரைக் கேட்டவுடனே நீல நிற உருவங்கள்தான் மனதில் தோன்றுகின்றன. வைணவ மரபின் பல விஷயங்கள் பெயர் மாற்றத்துடன் இப்படத்தில் இடம் பெறுவதைக் காண்கிறேன். அத்துடன் யூத மரபின் சில குறியீடுகளையும் இணைத்திருக்கிறார். "அவதார்" என்ற பெயரே வைணவக் கலைச்சொல்தான். நீல நிறத்தில் தோன்றும் வேற்றுகிரக வாசிகளின் நெற்றியில் நீர்க்கோடு போல் 'நாமம்' போடப்பட்டுள்ளதையும் காணலாம். 

  

  இவர்கள் வாழும் கிரகம் நம் சூரியனிலிருந்து 4 .37 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆல்ஃபா சென்டாரி (ALPHA CENTAURI ) என்னும் விண்மீன் திரளுக்குள் உள்ளது. அதற்கு 'பண்டோரா' (PANDORA )என்று பெயர் கொடுத்துள்ளார் கேமரான். இந்தப் பெயர் 'பண்டாரம்' என்பதுபோல் ஒலிக்கிறது. 'வைகுண்டம்' என்று சொல்லப்படுகின்ற கான்சப்ட் இதில் தெரிகிறது. அந்தப் பண்டோரா கிரகத்தில் வாழுபவர்களை "நஃவி" என்று கேமரான் அழைக்கிறார். ஹீப்ரு மொழியில் 'நஃவி' என்றால் இறைத்தூதர் என்று அர்த்தமாம்! இச்சொல் அரபி மொழியில் 'நபி' என்று உள்ளது.  


'பண்டோரா' கிரகத்தில் புனித மரம் ஒன்றுள்ளது. ஆன்மாக்களின் மரம் (TREE OF SOULS ) என்று அது கூறப்படுகிறது. இதனைக் 'கற்பகத் தரு' என்று காணலாம்.


படத்தில் இடம்பெறும் இன்னொரு முக்கியமான பாத்திரம் 'டோருக்' என்னும் மாமிச உண்ணிப்  பறவை. இதனைக் 'கருடாழ்வார்' தொன்மத்தின் மறு ஆக்கம் என்று கூறலாம். அமெரிக்காவில் இப்படிப் படமெடுக்கிறார்கள். நம் ஊரில் 'தசாவதாரம்' என்று பெயர் வைத்து 'அவதாரங்கள்' என்ற பெயரில் ஏழெட்டு 'ஏலியன்'களைக் காட்டிப் பயமுறுத்துகிறார்கள்!

(தொடரும்...)  

2 comments:

  1. பிரமாதம் திரு.ரமீஸ் அவர்களே...திரு.அப்துல்காதர் அவர்களின் வலையில் தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.லே அவுட்டும் சரி தங்கள் கட்டுரைகள், படங்கள் அத்தனையும் கிளாசிக். ஏன் வெப்சைட்டுகளில் பதிவு செய்வதில்லை? போகிற போக்கில் படிக்கக் கூடிய விடயங்கள் இல்லை இவை..நிதானமாகப் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.நான் அறிந்த வரையில் தங்கள் ஆத்ம திருப்திக்காகவும், சிறப்பான செய்திகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றும்(வலைகளில்) எழுதுபவர்கள் மிகவும் குறைவு..அவர்களில் நீங்களும் ஒருவர்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. ///கீழை மரபில் ஞானிகளின் உருவங்கள் வரையப்படுவதன் பின்னணியில் உள்ள உளவியல் மிகவும் ஆழமானது. மனிதனின் அகத்திற்குள் பரந்து விரிந்திருக்கும் உருவெளிக் களங்களில் மிகத் தொலைவு வரை சென்று வந்து வரைந்திருக்கிறார்கள்! சிவன்,கிருஷ்ணா, ராமா, புத்தர் போன்றோரது முகங்கள் இளமையாக வரையப்படுகின்றன. அதில் பெண்மையின் சாயலும் உள்ளது. வட்டமாக, சமச்சீர்த் தன்மையின் சாத்தியமான எல்லை////

    ஆமாம் கிருஷ்ணரைக்கிழவராக எண்ணவே முடியவில்லை.நல்ல பதிவு

    ReplyDelete