Friday, October 1, 2010

கூழாங்கல்லின் தியானம்


இந்தியாவில் முஸ்லிம்கள் மைனாரிட்டி சமூகம். முஸ்லிம்களில் சூபிகள் மைனாரிட்டி. எனவே சூபி வழியைப் பின்பற்றும் நான் மைனாரிட்டிக்குள் மைனாரிட்டி! 

இப்படியொரு எண்ணம் திடீரென்று மனதில் உதித்தது. என் சக சீடபாடிகளுடன், சக சாதகர்களுடன் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்த நினைவுகளை மீண்டும் அசைபோட்டுப் பார்த்தபோது சில உண்மைகள் பளிச்சிட்டன. அதில் முக்கியமானது என்னவென்றால், அவர்களுடனும் என்னால் முழுமையாக ஒத்துப்போக முடியவில்லை என்பதுதான்! எனவே நான் மைனாரிட்டிக்குள் மைனாரிட்டிக்குள் மைனாரிட்டி என்று தோன்றியது! அதாவது மைனாரிட்டி க்யூப்!

இது எதுபோல் இருந்தது என்றால், நீங்கள் ஒரு பாடலைக் கேட்கிறீர்கள். அதன் வரிகள் உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளன. ஆனால், மெட்டும் தாளமும் கண்றாவியாக இருப்பதாக உணர்கிறீர்கள். அல்லது, ஒரு பாடலின் தாளம் உங்களுக்கு ஒத்துப்போகிறது, ஆனால் அதன் ராகம் படு த்ராபையாக இருக்கிறது. அதுபோலத்தான், சக சாதகர்களுடன் பேசும்போது லயம் தொடர்ந்து வருவதில்லை. அவர்களுடைய பேச்சுப் பரப்பிலிருந்து  என் மனம் எனக்குப் பிடித்த புள்ளிகளை மட்டும் அடிக்கோடிட்டுக் கொள்கிறது. அவற்றை மட்டுமே பிறரிடம் பகிர்ந்துகொள்ளவும் செய்கிறது.எல்லா சாதகர்களுமே இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உணர்ந்துகொள்ளலாம்!

சாதகர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது மட்டும்தான் இந்த நிலை என்பதில்லை. குருநாதர் உரையாற்றும்போதும் இதே நிலைதான். பேச்சைக் கேட்ட பிறகு சாதகர்களுக்கு இடையே நடக்கும் கலந்துரையாடலைக் கவனித்தால் இதை உணரலாம். குருநாதரின் உரையிலிருந்து ஒவ்வொரு சாதகரும் தன் மனதைப் பாதித்ததாக எடுத்துக்கூறும் மேற்கோள்கள் வேறுபடும். என்னைக் கவர்ந்த பரவசப்படுத்திய ஒரு பாய்ண்ட் இன்னொரு சதாகரின் கவனத்திலேயே பதியாமல் போயிருக்கும். அண்ட் வைஸ் வெர்சா.

சில சாதகர்களை அதி தீவிரமாக மன எழுச்சி கொள்ளவைக்கும் வரிகள் தன் மனதில் எந்த அசைவையும் ஏற்படுத்துவதில்லை என்று ஒரு முறை அப்துல் காதிர் பிலாலி அவர்கள் கூறினார். இந்த நிலை எனக்கும் ஏற்பட்டதுண்டு. ஆனால், என்னைப் பரவசப் படுத்துகின்ற வரிகளுக்கான என் கோட்டாவும் நிச்சயம் உள்ளது.

அக எழுச்சியின் பரவச நிலையில் சூபி ஞானிகள் பேசிய சில பரவச வாசகங்களின் பின்னணியை கார்ல் எர்னஸ்ட் (CARL ERNST ) என்பவர் டாக்டர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்திருந்தார்."THE WORDS OF ECSTASY IN SUFISM" என்னும் தலைப்பில் மலேசியாவில் அது நூலாக வெளியிடப்பட்டது. படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இனம் புரியாத பரவசம் ஏற்பட்டதற்கு மேலாக அதில் பல இடங்கள் என் மண்டைக்கு எட்டவே இல்லை. அந்தப் பரவசம் கூட புரியாமலே பல பக்கங்களைப் படித்ததால் உண்டானதுதான் என்று இப்போது புரிகிறது! பிறகு என்ன செய்தேன் என்றால் சூபி குரு ஹக்கீமி ஷாஹ் பைஜி அவர்களிடம் அந்த நூலைக் கொடுத்துவிட்டேன். அதைப் படித்துவிட்டு அவர்கள் என்னிடம் சொன்னார்கள், "உங்களுக்கும் எனக்கும் பல இடங்களில் ஒத்துப்போகவே இல்லை. நான் முக்கியமான இடமென்று கருதிய இடங்களில் நீங்கள் குறியிடவில்லை. நீங்கள் குறித்துவைத்துள்ள இடங்கள் எனக்குச் சிறப்பாகப் படவில்லை."

ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும் அனுபவமும் அவனுக்கே உரியதுதான். ஒரு குருவின்கீழ் சீடர்களாகச் சேருபவர்களும் முழுமையாகத் தங்களுடைய சுயத்தன்மையை இழந்துவிட முடியாது.  
சூபிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் பார்த்தால் ஒன்று நன்றாகத் தெரிகிறது. அவர்களில் பெரும்பாலோருக்கு மக்களின் ஆதரவும் மதிப்பும் அவர்களின் வாழ்நாளில் கிடைத்திருக்கவில்லை.மக்கள் அவர்களை மத எதிரிகளாகத்தான் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் மந்திரவாதிகள் என்றும், சாத்தானின் சீடர்கள் என்றும், மத நிறுவனத்திற்கு எதிரானவர்கள் என்றும் இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் ஆளானார்கள். மாபெரும் தலைவர் - 'ஷைகுல் அக்பர்' என்று அழைக்கப்படும் சூபி ஞானி இப்னுல் அரபி அவர்களுக்கு ஒரு டஜன் சீடர்கள் மட்டுமே அவர்களின் வாழ்நாளில் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. மாஸ் சப்போர்ட் பெற்றிருந்த ஞானிகளுக்கும் கூட அவர்களை ஆழமாகப் புரிந்து கொண்டவர்கள், அவர்களின் அகத்தளத்தினை எட்டியவர்கள் மிகவும் குறைவாகவே இருந்திருப்பார்கள். இது இயற்கையான அமைப்பாகத் தெரிகிறது. இதற்கு மாற்றமாக இருக்க முடியாது. சிகரத்தில் பல்லாயிரம் கால்கள் ஒன்றாக நிற்பது சாத்தியமில்லை!சுழித்து ஓடுகின்ற நதியின் கீழே உருத்திரண்டு கிடக்கும் கூழாங்கற்களின் மேல் அவற்றை வழவழப்பாக்கிச் செல்லும் நதி ஒன்றுதான் என்றாலும், அந்தக் கூழாங்கற்களின் வடிவமும் நிறமும் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு கூழாங்கல்லின் தியானமும் தனியானதுதான். தன் மேனியைச் சுழித்தோடும் நதியின் பிரவாகத்தை அது உணர்ந்துகொள்வதும் தனித்துவமானதுதான். எதிரிகளிடமிருந்து மட்டுமல்ல, நண்பர்களிடமிருந்தும்கூட சுயம் இப்படித்தான் ஒரு வட்டமாக உருத்திரண்டுவிடும் போலும். அதன் தனிமை நிலை தவிர்க்கமுடியாதது.

பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பரந்து செல்வதில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், ஒவ்வொரு பறவையும் தன் சிறகைத் தானேதான் அடித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் பறத்தல் இல்லை.

மான்கள் குதிரைகள் கூட்டம் கூட்டமாக ஒடுவதில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், ஒவ்வொரு மானும் குதிரையும் தன் கால்களைத் தானேதான் அசைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் பாய்தல் இல்லை.

கூட்டுத் தொழுகை, கூட்டு தியானம் என்பதும் அதுபோல்தான். வெறுமனே கூட்டத்தில் அமர்ந்துகொண்டு தலையாட்டும் மக்குப் பிண்டங்கள் ஞானத்தின் உலகில் நுழைந்துவிட முடியாது!

4 comments:

 1. இறைவனை நான் தேடிய ஒரு காலமும் உண்டு. இன்று என்னை தேடுகின்ற மாறுதல் உண்டு என்றார்கள் உங்கள் குருநாதர். வேற்றுமைகள் நம் சுயத்தின் தனித்தன்மைகள்.தேடலில், சுவைத்தலிலும் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே.
  தேடுங்கள்... வேற்றுமைகள் தெலைந்து போகும் வரை.வஸ்ஸலாம்.

  ReplyDelete
 2. Is not "search for self-identity" only the beginning of the "true search"? Will not the self-identity vanish once we approach the peak of the true search? Is not loosing the "I" or "individuality" the primary objective of the true search for the truth? Thanks for raising these questions in the readers minds. Am I not giving the "thought provoking" verdict to your every blog? Are they truly thought provoking or it is just that saying so is my "individuality" you are talking about? :)

  ReplyDelete
 3. ///ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும் அனுபவமும் அவனுக்கே உரியதுதான்.///

  எவ்வளவு பெரிய உண்மையை போகிற போக்கில் சொல்கிறீர்கள் பேராசிரியரே!

  கோவிலிலும், மசூதியிலும், சர்ச்சிலும் கூடுவது சும்மா ஒரு சமூக இணைப்பாக மட்டுமே இருக்க முடியும்.

  எல்லோரும் தூங்கிய பிறகு, இருட்டில் கொசு வலைக்குள், யாரும் அறியாமல், இறைவனைத் தேடு என்பார் பரமஹம்சர்.

  ஜப மாலையை ஒரு துணி போட்டு மறைத்துக்கொண்டு உருட்டும் வழக்கம் உள்ளது.இது சிம்பாலிக்காக உனக்கு மட்டுமே உரியது என்பதைக் காட்டவே.

  இந்துக்கோவில்கள் ஏன் ஒரே சத்தமாயுள்ளன என்ற கேள்விக்கு பதில்:
  " நாங்கள் அங்கே இறைவனைக் கொண்டாடச் செல்கிறோம்.கொண்டாட்டம் என்றாலே பேரொலிதானே!"

  அவனுடன் பேச, உறவாட, தியானிக்கத் தனிமைதான்.அப்போது மெள‌னம்தான்!

  ReplyDelete