Saturday, June 28, 2025

நிகாஹ் தாஷ்த் (ஆன்மிக நிலை விழிப்புணர்வு, சுதாரிப்பு)

 (நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஏழாம் கோட்பாடு குறித்த விளக்கம்)











நிகாஹ் என்றால் பார்வை என்று பொருள் (நழர் என்பது இதற்கு நிகரான அறபிச் சொல்.) இது இதயத்தைத் தொடர்ந்து கண்காணித்தல் என்னும் பயிற்சியாகும். அதாவது, உள்ளத்தில் தகாத, வீணான எண்ணம் ஒன்று கூட நுழைந்துவிடாமல் / எழுந்துவிடாமல் கவனித்துக் கொள்வதாகும். ஏனெனில், ஸூஃபித்துவத்தின் அடிப்படையான பயிற்சி தஸ்கியத்துந் நஃப்ஸ் – உள்ளத்தைத் தூய்மை செய்தல் என்பதுதான். அது மீண்டும் அழுக்காகி விடாமல் பாதுகாப்பதே நிகாஹ் தாஷ்த் என்னும் பயிற்சியாகும்.

            ”ஒரு சாதகர் தொடர்ச்சியாக பதினைந்து நிமிடங்கள் தன் மனத்தை வீண் எண்ணம் எழாமல் பாதுகாத்துவிட்டால் அது பெரிய சாதனை என்றும் அப்போதுதான் அவர் உண்மையில் ஸூஃபி ஆகிறார் என்றும் நக்‌ஷ்பந்திய்யா நெறியில் கருதப்படுகிறது” என்கிறார் ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன்.

            இந்த காலக் கணக்கு மேலும் அதிகமாகிக் கொண்டே செல்லும். எப்போதும் மனத்துக்கண் மாசிலன் ஆகியிருக்கும் நிலையை ஒருவர் அடைய வேண்டும். ஷைஃகு சஃ’துத்தீன் அல்-கஷ்காரி (ரஹ்) சொல்வது போல், “சாதகன் ஒன்று அல்லது இரண்டு அல்லது தன்னால் இயன்ற மணி நேரம் அதனது மனத்தில் கைருல்லாஹ்வின் (அல்லாஹ் அல்லாதவற்றின்) சிந்தனை நுழைந்துவிடாமல் பாதுகாத்து வர வேண்டும்.”

            ”தன் உள்ளத்தை அறிந்தவன் தன் இறைவனை அறிவான்” (மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப றப்பஹு) என்று ஹழ்ரத் அலீ (ரலி) சொன்னதாக பிரபலமான வாசகம் ஒன்றுண்டு. இதன் கருத்துப்படி, இறைவனை ஒருவர் அறிவதற்கு இதயத் தூய்மை மிகவும் அவசியமாகிறது.

            ”பத்து இரவுகள் நான் என் உள்ளத்தைக் காவல் காத்தேன். அது இருபது ஆண்டுகளாக என்னைக் காவல் காக்கிறது” என்று ஸூஃபி குரு ஒருவர் சொல்லியுள்ளார்.

            அபூ பக்ருல் கஹ்த்தானி (ரஹ்) சொல்கிறார்கள், “நான் என் இதயத்தின் வாசலில் நாற்பது ஆண்டுகள் காவலுக்கு நின்றேன். அது எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் அறியாத நிலையை அடையும்வரை அதனை நான் அல்லாஹ்வுக்காகத் தவிர வேறு எதற்காகவும் திறக்கவில்லை.”

            ஷைஃகு அபுல் ஹசன் அல்-ஃகரகானீ (ரஹ்) சொன்னார்கள், “நாற்பது ஆண்டுகளாக அல்லாஹ் என் உள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதில் தன்னைத் தவிர வேறு எதையும் அவன் காணவில்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் என் உள்ளத்தில் இடம் இல்லை.”


            மனிதனுக்குள்ள முக்கியமான அருட்கொடைகளில் ஒன்று கற்பனை ஆற்றலாகும். அதன் வழியாகப் பல்வேறு துறைகளில் பற்பல சாதனைகளை அவன் நிகழ்த்தியுள்ளான். “கல்வியறிவை விட கற்பனையாற்றல் முக்கியமானது” என்று விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார். ஆனால், கற்பனை என்பது நேர்வழியில் செலுத்தப் பெறாவிடில் அது அழிவு சக்தியாக மாறிவிடும். அது மின்சாரம் போன்றது. அதை ஆகுமான வழியில் பயன்படுத்தினால் நன்மை விளையும், ஆகாத வழியில் செலுத்தினால் தீமை விளையும்.

            ஸூஃபித்துவத்தின் முக்கியமான பயிற்சிகளில் ஒன்று குருவின் உருவத்தை நினைத்தல். இது ”தஸவ்வுரே ஷைஃகு” எனப்படும். ஒரு நபரின் குரலைக் கேட்கும்போது அவரின் உருவம் நமக்குச் சிந்தனையில் வரும் அல்லவா? குருவின் போதனைகளை நினைவு கூரும்போது அவரின் திருவுருவம் சாதகனுக்கு நினைவு வராமல் போகாது. ஷைஃகு திக்ரு செய்வது போன்றுதான் முரீது செய்ய வேண்டும். அதற்கும் இந்தக் கற்பனை ஆற்றல் உதவும். அத்தகைய நல்வழியான சிந்தனைகளுக்கு கற்பனை ஆற்றல் உதவுகிறது. அதனால் ஆன்மிகத்தில் மிகப் பெரிய பலன் கிடைக்கிறது.

            ஆனால், சராசரி மனிதர்களிடம் கற்பனை ஆற்றல் என்பது அவர்தம் உள்ளத்தில் சந்தேகம், இச்சைகள், குழப்பங்கள் முதலிய தகாத எண்ணங்களும் உணர்ச்சிகளும் உண்டாகிவிடக் காரணம் ஆகிறது. அதை அவர்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் மனம் அழுக்காகிப் போய்விடுகிறது. எனவே ஸூஃபித்துவத்தின் ஆரம்ப நிலையில் உள்ள சாதகன் தன் கற்பனைக்குக் கடிவாளம் போட வேண்டிய அவசியம் இருக்கிறது.

            இதனால்தான், ”அறமற்ற, ஒழுக்கமற்ற உருக்காட்சிகளைக் கற்பனை செய்வதை விட்டும் மனத்தைப் பாதுகாத்து வைப்பது நிகாஹ் தாஷ்த் ஆகும்” என்கிறார் உஸ்மான் நூரீ தோப்பாஷ்.

            சாதகன் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும்போது அவனின் உள்ளத்தில் இறைவனிடம் இருந்து மேன்மையான ஓர் உணர்வு நிலை (ஹால்) உண்டாகிறது. நிகாஹ் தாஷ்த் என்பது அவன் ஆழ்நிலை தியானத்தில் இருந்து வெளிவந்து உலகிற்குத் திரும்பிய பின்னரும் அந்த உணர்வு நிலை மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளும் பயிற்சி என்றும் ஒரு விளக்கம் உண்டு. 

            இது பற்றி மின்ஹாஜுஸ் ஸாஇர் என்னும் நூலில் இப்படி எழுதப்பட்டுள்ளது: “மேன்மையான திக்ரில் இருந்து உண்டான விசேடமான விழிப்பையும் இறையுணர்வையும் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், ஹக்கு அல்லாதவற்றின் நினைவு உள்ளத்திற்குள் புகுந்து விடக்கூடாது.”

               நிகாஹ் தாஷ்த் என்பது ஓதுகின்ற வாசகங்களின் அர்த்தம் உள்ளத்தில் வெளிச்சமாகும்படி திக்ரு செய்வதாகும் என்றும் ஸூஃபிகள் விளக்குகின்றனர். எனவே அப்பயிற்சி திக்ரு செய்யும்போதே நிகழ்வதாகிறது.

            உதாரணமாக, சுப்ஹானல்லாஹ் (இறைவன் பரிசுத்தன்), அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே), மற்றும் அல்லாஹு அக்பர் (இறைவன் மிகப் பெரியோன்) ஆகிய வாசகங்களை ஒருவர் திக்ரு செய்கிறார். அதை வெறுமனே வாயால் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரின் உள்ளம் பல்வேறு சிருஷ்டிகளையும் அவற்றின் காரியங்களையும் நினைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது ஒழுங்கான திக்ரு ஆகுமா? அதனால் அவருக்கு ஆன்மிகத்தில் முன்னேற்றம் (தரக்கீ) ஏற்படுமா? ஓதுவதற்கான குறைந்த பட்ச நன்மை அவருக்குக் கிடைக்கும். அவ்வளவுதான்.

            ”திக்ரே லிசானீ லக்லகா / திக்ரே கல்பீ வஸ்வஸா” – ’நாவால் மட்டுமே செய்யும் திக்ரு உளறல் ஆகும், மனத்தால் மட்டுமே செய்யும் திக்ரு ஊசாட்டமாகும்’ என்று ஸூஃபிகள் சொல்லியுள்ளதை நினைவில் வையுங்கள்.

ஆனால், அந்த வாசகங்களின் அர்த்தத்தை உணர்ந்து அவர் ஓதும்போது, அதன் விளக்கங்களும் அவற்றின் உணர்வுகளும் அவரின் உள்ளத்தில் உண்டாகும்போதுதான் அது ஆன்மிகம் ஆகும். எனவேதான், திக்ரு செய்வதற்கு குருநாதர் போதிக்கும் தஃலீம் தல்கீன் ரீதியிலான அறிவு அவசியமாகிறது. ஸூஃபித்துவத்தின் போதனை முறை ‘நெஞ்சில் இருந்து நெஞ்சுக்கு’ (சீனா ப சீனா) என்று சொல்லப்படுகிறது. குருவின் இதயத்தில் இருந்து இல்மு என்னும் அறிவு ’அலம்’ (அச்சுப் பதித்தல்) என்பது போல் அப்படியே முரீதின் இதயத்தில் பதிந்துவிடுகிறது. இந்த முறையில் மிகக் குறுகிய காலத்தில் சாதகர் மிக அதிகமான முன்னேற்றத்தை அடைந்து விடுகிறார். இதைத்தான், “அறிஞர் நடக்கிறார், ஞானி பறக்கிறார்” என்னும் ஸூஃபி சொலவடை உணர்த்துகிறது. அத்தகைய சாதகர் மிக விரைவாகவே நிகாஹ் தாஷ்த் என்னும் நிலையை அடைய முடியும்.

மேற்சொன்ன வாசகங்களின் விளக்க ரீதியில், சுப்ஹானல்லாஹ் என்பது இறைவனின் ஷஃ’னே தன்ஸீஹ் (transcendence) என்பதை, அதாவது ’அவன் படைப்புக்களுக்கு அப்பாலாக இருக்கும் நிலை’யையும், அல்ஹம்துலில்லாஹ் என்பது ஷஃ’னே தஷ்பீஹ் (immanence) என்பதை, அதாவது அவன் படைப்புக்களுக்கு உடனிருக்கும் நிலை’யையும், அல்லாஹு அக்பர் என்பது இறைவனின் கமாலிய்யத் (perfection) என்பதை, அதாவது தன்ஸீஹ் தஷ்பீஹ் இரண்டும் சேர்ந்திருக்கும் பூரண நிலையையும் குறிக்கிறது. இந்த விளக்கங்களை எளிதில் கவனத்தில் கொண்டு வந்து ஓதும் வகையில் சுப்ஹானல்லாஹ் என்பதை கண்களை மூடி, சிருஷ்டிகளைப் பார்க்காமலும், அல்ஹம்துலில்லாஹ் என்பதை கண்களைத் திறந்து சிருஷ்டிகளைப் பார்த்தபடியும், அல்லாஹு அக்பர் என்பதை இரண்டு நிலைகளும் கலந்ததாக கண்களை மூடியும் திறந்தும் ஓதும்படியாக ஒரு உக்தி இருக்கிறது.

இதன் நோக்கம் திக்ரு செய்யப் பயன்படுத்தும் சொற்கள் / வாசகங்களின் அர்த்தம் சிந்தையில் வெளிச்சமாகி அவற்றின் உணர்வு நிலை (conscience) உண்டாக வேண்டும் என்பதுதான். இதன் காரணமாகவே திருக்கலிமாவின் விளக்கத்தை அதன் பல்வேறு படித்தரங்களுக்கு ஏற்ப வியாக்கியான வாசகங்களாகக் கோர்வை செய்திருக்கிறார்கள். லா இலாஹ இல்லல்லாஹ் என்பதற்கான வியாக்கியான வாசகங்களாக 1) லா மஃ’பூத இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை), 2) லா மக்ஸூத இல்லல்லாஹ் (தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை), 3) லா மவ்ஜூத இல்லல்லாஹ் (உள்ளமைக்கு உரியவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை), மற்றும் 4) லா மஷ்ஹூத இல்லல்லாஹ் (வெளியாகியிருப்பவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை) ஆகிய வாசகங்கள் கோர்வை செய்யப்பட்டுள்ளன. இந்த அர்த்தங்கள் சிந்தையில் வெளிச்சமாகும்படியாக திருக்கலிமாவை தியானம் செய்ய வேண்டும். [இப்படியான வாசகங்கள், மா ஃகலக்துல் ஜின்ன வல் இன்ச இல்லா லி-ய’ஃபுதூன் – ’ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை’ (51:56) என்னும் திருவசனத்திற்கு அய்யு லி-யஃ’ரிஃபூன் – ’அதாவது, அவனை அறிவதற்காகவே’ என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வியாக்கியானம் கொடுத்து திருவசனத்தின் அமைப்பிலேயே தஃப்சீர் வாசகத்தைக் கோர்வை செய்ததைப் போன்றதாகும்.]

            உள்ளத்திற்குள் படைப்புக்களைப் பற்றிய எண்ணமே நுழையாமல் இருப்பது சாத்தியமா? என்று வினா எழலாம். ஆரம்ப நிலையில் சாதகரின் மனத்தில் அதிகமான எண்ணங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அப்போது சாதகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஒன்று உரைக்கலாம். நீரோடைக் கரையில் மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு தனக்குரிய மீன் – உறுமீன் – வரும் வரையில் கவனம் சிதறாமல் ஒரே இலக்கில் பார்த்துக்கொண்டு நிற்கும். அக்கம் பக்கத்தில் ஆயிரம் மீன்கள் ஓடினாலும் அவற்றை அது அலட்சியப் படுத்திவிடும். தனது இலக்கு வைக்கப்படும் இடத்தில் ஒரு மீன் வரும்போது சட்டென்று கொத்தி எடுத்துக் கொள்ளும். அது போல் இறைவனையே லட்சியமாகக் கொண்டு தியானத்தில் மனத்தைக் குவித்து வைத்திருக்கும்போது அவனல்லாதவை பற்றிய சிந்தனைகள் உள்ளே வரத்தான் செய்யும். சாதகர் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டும். அவற்றின் மீது கவனம் செலுத்தக் கூடாது. ஓர் எண்ணத்திற்கு அளிக்கப்படும் கவனமே அதனை பலப்படுத்தும். கவனம் அளிக்கப்படாத எண்ணங்கள் பலமிழந்து போகப் போக மறைந்துவிடும்.

         எண்ணங்களுக்கு நீ சக்தி ஊட்டிவிடாதே என்றுதான் இறைஞானியர் வழிகாட்டுகின்றனர். அதுதான் இப்பயிற்சியின் யுக்தி (knack) என்று புரிந்து கொள்ளுங்கள்.

            ஃகாஜா அப்துல் ஃகாலிக் இப்னு அப்துல் ஜமீல் அல்-குஜ்தவானி (ரஹ்) சொல்கிறார், “உள்ளத்திற்குள் எண்ணங்களே நுழையாது என்பது கிடையாது. ஆனால், அவை சில நேரங்களில் வரும், சில நேரங்களில் வராது.”

            இதே கருத்தில் ஃகாஜா அலாவுத்தீன் அல்-புஃகாரி (ரஹ்) சொல்கிறார், “எண்ணங்களை ஜெயிப்பது என்பது மிகக் கடினம், சாத்தியமில்லை என்றே சொல்லலாம். நான் என் இதயத்தை எண்ணங்களை விட்டும் இருபது ஆண்டுகள் பாதுகாத்து வைத்தேன். அதன் பின்னரும் அவை தோன்றிக் கொண்டுதான் இருந்தன. ஆனால் அவற்றால் என் இதயத்தின் மீது தாக்கம் செலுத்த முடியவில்லை.”

            இந்தக் கருத்திற்கு ஏற்ப ”நிகாஹ் தாஷ்த் எனபதன் அர்த்தம் உள்ளத்திற்குள் வரும் எண்ணங்கள் உள்ளத்தைப் பாதிக்காமல், அதன் மீது தாக்கம் செலுத்தாமல் இருப்பதாகும்” என்று ஷைஃகு அப்துல் மஜீத் இப்னு முஹம்மத் அல்-ஃகானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்.

            இக்கருத்தில் ஃகாஜா உபைதுல்லாஹ் அல்-அஹ்ரார் (ரஹ்) அவர்கள் தரும் விளக்கம் சுவையானது: “நிகாஹ் தாஷ்த் என்பதன் அர்த்தம் தொடக்க நிலையிலேயே சாதகர் எண்ணங்கள் எழாமல் இருப்பார்கள் என்பதன்று. ஆனால், இறை நினைவையும் உணர்வையும் எண்ணங்கள் பாதிக்காது என்பதுதான். இதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். எண்ணங்கள் ஆற்றில் விழுந்த வைக்கோல் போன்றவை. அவை ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்துவிடாது. ஆறு எங்கே போக வேண்டுமோ அதன் போக்கில் அது ஓடிக்கொண்டே இருக்கும்.”

            எண்ணங்களும் இறைவனின் படைப்புதான். அவன் படைக்காமல் அவை சுயமாகத் தோன்றிவிட முடியாது. எனவே, வீணான எண்ணங்கள் உண்டாகாமல் இருக்க இறைவனிடம் இதயத்தை ஒப்படைப்பது ஒன்றே வழியாகும். மவ்லானா ரூமி (ரஹ்) சொல்கிறார்கள்:

                        ”எண்ணங்களைப் பற்றிச் சிந்திக்காதே

                         எண்ணங்களைப் படைப்பவனைப் பற்றி யோசி.”

Thursday, June 26, 2025

பாஸ் கஷ்த் (மீளுதல்; திரும்புதல்)

 


பாஸ் கஷ்த் என்பது நக்‌ஷ்பந்திய்யா நெறியில் ஆறாவது கோட்பாடாக அமைகிறது. இதன் நேரடிப் பொருள் திரும்புதல், மீளுதல் என்பதாகும்.

பாஸ் கஷ்த் என்னும் ஃபார்சி சொல்லுக்கு இணையாக அவ்பா என்னும் அறபிச் சொல் அமையும். ஏனெனில் இங்கே குறிப்பிடப்படும் திரும்புதல் என்பது ஷரீஅத் விதிக்கும் கடமைகளை நிறைவேற்றிய உடன் சாதகன் இறைவனிடம் தன் கவனம் முழுவதையும் திருப்பி விடுவதைக் குறிக்கிறது.

அறபியில் திரும்புதல் என்பதைக் குறிக்க மூன்று சொற்கள் உள்ளன: தவ்பா, இனாபா, மற்றும் அவ்பா. இவை மூன்றும் தனித்தனிப் படித்தரங்கள் ஆகும். அவற்றின் விளக்கமாவது:

1.      தவ்பா – இது பொதுவாக பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) என்னும் அர்த்தத்தில் மக்களின் புழக்கத்தில் உள்ள சொல்லாகும். இது பாவத்தை விட்டும் நன்மையின் பக்கம் திரும்புவதைக் குறிக்கும்.

2.      இனாபா – இது இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவதுடன் நில்லாது அடியான் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றி அவனைத் திருப்தி படுத்துவதற்காகப் போராடும் நிலையாகும்.

3.      அவ்பா – இது என்பது முழுமையாக இறைவனிடம் திரும்பி விடுவதாகும். படைப்புக்களை விட்டு விலகியும் இறைவனிடம் நெருங்கியும் இருக்கும் நிலைக்குத் திரும்புதல் ஆகும்.

மேற்காணும் மூன்றில் அவ்பா என்னும் நிலையே பாஸ் கஷ்த் என்பதைக் குறிக்கிறது.

நஃபீ மற்றும் இஸ்பாத் ஆகியவற்றைக் கொண்டு திக்ரு செய்யும் முரீது, இலாஹி அன்த மக்ஸூதீ வ ரிளாக்க மத்லூபீ – ‘என் இறைவா! நீயே என் இலட்சியம், உன் பொருத்தமே என் இலக்கு’ என்று நபி (ஸல்) கூறியிருப்பதைப் புரிந்து கொள்ளும் நிலை இது” என்று ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் சொல்கிறார்.

 இத்தகைய நிலையில் உள்ள அடியான் எங்கு நோக்கினும் இறைவனையே தன் அகக் கண்ணால் காண்பவன் ஆகிறான். அதாவது முஷாஹதா என்னும் நிலையில் நிலைக்கிறான்.

நீங்கள் எத்திசை நோக்கினும் அல்லாஹ்வின் முகமே நிறைந்துள்ளது” (2:115)

என்னும் திருவசனத்தின் ரகசியம் இத்தகையோருக்கே திறக்கப்படுகிறது. இந்த அகப்பார்வையை எட்டிய பாக்கியவான்களே

”கண்களைத் திறந்திட நிறை முகம்

கண்களை மூடிட இறை மயம்

கண்களைத் திறந்ததும் அவன் அவன்

காட்சியில் வந்ததும் அவன் அவன்

அல்லாஹு அல்லாஹ்”

என்று ஸூஃபி ஞானி ஃபாரூக்கி ஷாஹ் ஃபள்லி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் பரவசமுற்றுப் பாடுவது போல் பாட இயலும்.

            பாஸ் கஷ்த் என்பது இறைவனிடம் சரணடைவதைக் குறிக்கிறது என்றும் நக்ஷ்பந்திய்யா நெறியினர் விளக்கம் தருகின்றனர். முழுமையான பணிவுடன் இறைவனின் நாட்டத்திற்கு நாம் சரணடைந்து நம்மை ஒப்படைத்துவிட வேண்டும். அதுவே நபிவழியாக உள்ளது. அது ஏனெனில், இறைவனை நாம் எவ்வளவுதான் தியானித்தாலும் புகழ்ந்தாலும் அவனின் தகுதிக்குத் தக்கபடி நம்மால் அதை நிறைவேற்ற முடியாது. இதனால்தான் நபி (ஸல்) சொன்னார்கள்:

“நினைவுகூரப்படுவோனே! நீ நினைவுகூரப்பட வேண்டிய

தகுதிக்குத் தக யாம் உன்னை நினைவுகூரவில்லையே!”

            நபி (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பதைக் கொண்டு ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் தரும் விளக்கமாவது:

            ”அல்லாஹ் தன் அடியானை நினைவு கூர்தலும் அல்லாஹ்வின் உதவியும் இருந்தாலே தவிர அடியான் தன் திக்ரில் அல்லாஹ்வின் பிரசன்னத்திற்கு வந்து சேர முடியாது, அடியான் தன் திக்ரில் அல்லாஹ்வின் ரகசியங்களையும் திருப்பண்புகளையும் வெளியாக்க முடியாது. அபூ யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) சொன்னது போல், ‘நான் அல்லாஹ்வை அடைந்தபோது அவன் என்னை நினைவு கூர்வது நான் அவனை நினைவு கூர்வதை முந்தியிருக்கக் கண்டேன்.’ அடியான் தன் தானே சுயமாக திக்ரு செய்ய முடியாது. தன் வழியாக அல்லாஹ்தான் திக்ரு செய்கிறான் என்பதை அவன் உணரவேண்டும்.”

            பாஸ் கஷ்த் என்பது இறைவனிடம் மீளுதல் என்பதைக் குறிக்கும் என்று கண்டோம். அதாவது படைப்புக்களை விட்டும் படைத்தவனிடம் மீளுதல் என்று இதனை அர்த்தப்படுத்தும்போது அந்தப் படைப்புக்களில் சாதகனும் இருக்கிறான். எனவே, உண்மையான மீளுதல் என்பது ஒருவர் தன்னை விட்டுமே இறைவனிடம் மீளுதலாகும். எனவே, பாஸ் கஷ்த் என்பது இறை நினைவில் மூழ்கியிருத்தல் என்னும் இஸ்திக்ராக் நிலையைக் குறிக்கிறது என்று ஸுஃபிகள் சொல்கின்றனர். இதனை விளக்க சுவையான நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது:

            ஸூஃபி ஒருவருக்கு இறை தியானத்தின்போது மனத்தில் பல்வேறு ஊசாட்டங்கள் வந்து கொண்டிருந்தன. அவற்றில் தூய்மையற்ற எண்ணங்களும் இருந்தன. தன் மனம் இப்படி அழுக்காக இருக்கிறதே என்று அவர் பெரிதும் கவலைப் பட்டார். தான் ஸூஃபித்துவத்தில் நேர்மையாக இல்லை என்று அவர் வெட்கினார். எனவே, அவரின் ஷைஃகு அவரை வேறொரு ஸூஃபியிடம் அழைத்துச் சென்றார். அந்த ஸூஃபி இஸ்திக்ராக் என்னும் நிலையில் இருப்பவர். அதாவது இறை நினைவில் தன்னை மறந்து மூழ்கியிருப்பவர். தன்னிடம் ஆலோசனை கேட்டு வந்த சாதகரிடம் அந்த ஸூஃபி சொன்னார், ‘உன் பிரச்சனைக்குத் தீர்வு இறை தியானத்தில் மூழ்குவதுதான், மயிர் பிளக்கும் அறிவு விவாதங்கள் அல்ல.’ அப்போது அந்த சாதகர் ஒன்றை உணர்ந்து கொண்டார். அதாவது தனது நேர்மையின்மை, அவமானம், தேவைகள், ஆசைகள் என்று சிந்தித்துக் கொண்டிருந்ததில் தன் நினைவிலேயே மூழ்கி இருந்துவிட்டார். அதுவே இறை நினைவுக்குத் தடையாகி விட்டது.


            
மேற்சொன்ன கருத்தை மல்வானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் தன் மஸ்னவி ஷரீஃபில் ஒரு சிறிய கதை மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள்:

            விஷக் குளவிகள் ஒருவனைத் துரத்திக் கொண்டு வந்தன.

            சட்டென்று அவன் நதியில் குதித்துவிட்டான்.

            இந்தக் குறியீட்டின் அர்த்தம்தான் என்ன? கேள்.

            தண்ணீர்தான் திக்ரு – இறைவனை நினைவு கூர்தல்.

            லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹ்வை அன்றி தெய்வமில்லை.

            உள்ளமையில் இறைவன் மட்டுமே இருக்கிறான்.

            அந்தக் குளவிகள் என்ன? அவனின் காம எண்ணங்கள்

            இவள் அவள் இவன் அவன் இது அது.

            தலை மேலே எழுகிறது. குளவிகள் கொட்டுகின்றன.

            அவன் சட்டென்று மீண்டும் முழுகுகிறான்.

            தண்ணீரே உன் மூச்சாகி விடட்டும்.

            தலை முதல் பாதம் வரை நதியாகிவிடு.

            அப்போதுதான் குளவிகள் உன்னை விட்டுவிடும்.

            நீ நதியை விட்டு விலகிப் போனாலும்

            அப்போது அவை உன்னை கவனிக்காது.

            சூரியன் வந்துவிட்ட பின்னர்

விண்மீன்களை எவரும் தேடுவதில்லை.

            இறைவனில் மூழ்கிப் போகும் ஒருவர் மறைந்து விடுவதில்லை.

            அவர் இறைப் பண்புகளில் ஊறிப் போய்விடுகிறார்.

            குர்’ஆனில் இருந்து சான்று வேண்டுமா?

            ’வ இன் குல்லுல் லம்மா ஜமீஉல் லதைனா முஹ்ளரூன்’

                        ’அவர்கள் அனைவரும் நிச்சயமாக

நம்மிடமே கொண்டுவரப் படுவார்கள்’ (36:32)

            அந்தப் பயணிகளுடன் இணைந்துவிடு.

            நாம் எரிக்கும் விளக்குகள் அணைந்து விடுகின்றன,

            சில வெகு சீக்கிரமே, சில விடியல் வரை.

            மங்கலானவை சில, பிரகாசமானவை சில,

            எல்லா விளக்குக்கும் ஒரே எண்ணெய்தான்!

            ஒரு வீட்டில் விளக்கு அணைந்தால்

            பிற வீடுகளை அது பாதிப்பதில்லை.

            அதுதான் மிருக ஆன்மாவின் உதாரணம்.

            புனித ஆன்மா அப்படிப்பட்டதன்று.

            சூரியன் எல்லா வீடுகளின் மீதும் பிரகாசிக்கிறது.

            அது சாயும்போது எல்லா வீடுகளும் இருள்கின்றன.

            உன் குருவின் திருவுருவம் ஒளியாகும்.

            உன் பகைவர்களோ இருளை நேசிக்கின்றனர்.

            சிலந்தி தன்னிலிருந்தே வலை பின்னி

            ஒளியின் மீது திரையிட்டுக் கொள்கிறது.

            காட்டுக் குதிரையை அதன் காலைப் பிடித்து

            அடக்கி விடலாம் என்று எண்ணாதே.

            கழுத்தைப் பிடி, கடிவாளம் இடு.

            அறிவுடன் செயல்படு, அப்புறம் சவாரி செய்.

            சுய நிராகரிப்பு உனக்குத் தேவையாக உள்ளது.

            பழைய ஒழுக்கங்களின் மீது அலுத்துக் கொள்ளாதே,

            அவை பேருதவி புரிகின்றன, இப்போதும்.*

            உலகத் தேவைகள் மற்றும் கடமைகளுக்கான காரியங்களை நிறைவேற்றிய பின்னர் முற்றிலுமாம இறைவனிடம் மீண்டு அவனின் நினைவில் மூழ்கி இருத்தல் என்னும் கருத்துள்ள பாஸ் கஷ்த் என்னும் இந்தக் கோட்பாட்டினைச் நாம் நிறைவேற்ற நபி (ஸல்) அவர்களே அழகிய முன் மாதிரியாக இருக்கிறார்கள். அவர்களை நோக்கி இறைவன் இப்படிச் சொன்னான்:

 நிச்சயமாக நுமக்குப் பகலில் நீண்ட வேலைகள் உள்ளன” (73:7)

”உம் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து கொண்டிருப்பீராக,

மேலும், அனைத்தையும் விட்டு அவனுக்காகவே ஆகிவிடுவீராக” (73:8)

            இந்த நிலை “தபத்துல்” என்று சொல்லப்படுகிறது. ஒரு முஸ்லிம் எந்த அளவுக்கு இறைவனின் நினைவில் மூழ்குதல் வேண்டும் என்று இது காட்டுகிறது. இந்த இறைக் கட்டளை இன்னுமோர் இடத்திலும் வருகிறது:

’எனவே, நீங்கள் ஓய்ந்ததும் (இறைவனிடம்) ஈடுபட்டு முனைவீராக’ (94:7)

’மேலும், முழுமையாக நும் இறைவனிடம் சார்ந்துவிடுவீராக’ (94:8)

            ”தபத்துல்” என்னும் இந்த நிலையை அடையும்படியான கட்டளை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமானது, அதை நாம் செய்ய வேண்டியதில்லை என்று எவரேனும் நினைத்தால் அது தவறான சிந்தனையும், வழிகேடும் ஆகும். அப்படி நினைப்பவர் படைப்புக்களுடனான தொடர்புகளில் மூழ்கி உழன்று தன் இறை நம்பிக்கையைப் பழுதாக்கிக் கொள்வார் என்பதில் ஐயமில்லை.

இந்த நிலையை நபியின் வழிகாட்டுதல்படி நபித்தோழர்கள் அடைந்திருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து இன்று வரை அடுத்தடுத்த தலைமுறையின் இறைநேசர்கள் இந்த நிலையை அடைந்து வருகின்றனர். இந்த நிலையை மிக ஆழமாக அடைந்திருந்த காரணத்தால் அருமை நபியின் திருமகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு “பதூல்” என்னும் சிறப்புப் பெயரும் உண்டாயிற்று.


            
இந்த நிலை குறித்து இறைஞானி அல்லாமா ஷுஹூதி ஷாஹ் ஃபைஜி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் தரும் நீண்ட விளக்கங்களில் இருந்து சில கருத்துக்கள் பின்வருமாறு:

            தபத்துல் என்றால் அனைத்தை விட்டும் துண்டித்துக் கொண்டு அல்லாஹ்விடம் ஒன்றித்துவிடுதல். எல்லா உறவுகளையும் எவன் துண்டித்தானோ அவன்தான் அல்லாஹ்வுடன் ஒன்றிக்க முடியும். இல்லை என்றால் அல்லாஹ்வுடன் ஒன்றித்து லயிப்பது – வஸ்லு – கிடைக்காது. அவரை ’வாசில் ப ஹக்’ என்று சொல்ல முடியாது. அவர் ’வாஸில் ப துன்யா’ – உலகத்துடன் ஒன்றித்தவராகவே இருப்பார். எல்லாவற்றையும் துண்டித்துக் கொண்டு அல்லாஹ்வுடன் ஒன்றித்துவிடுவது என்றால் என்ன அர்த்தம்? காட்டுக்குப் போய்விடுவதா? காடும் மா சிவல்லாஹ் (அல்லாஹ் அல்லாதவை)தானே? ஒருவன் காட்டுக்குப் போய் மலைக் குகையில் உட்கார்ந்துவிட்டான். காடும் மா சிவல்லாஹ், மலையும் மா சிவல்லாஹ், குகையும் மா சிவல்லாஹ். அவையும் கைருல்லாஹ் (அல்லாஹ்வுக்கு வேறானவை)தானே? அவற்றை விட்டு எப்படி அல்லாஹ்விடம் ஓடுவாய் நீ? எனவே, தபத்துல் என்றால் எல்லா சிருஷ்டிகளை விட்டும் கல்பை (இதயத்தை)ப் பிடுங்கி அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவது! அவை நம் கல்பில் உட்கார்ந்திருந்தால் நாம் அல்லாஹ்வை நினைத்தோம் என்று சொல்லவே முடியாது.

            ஜோ ஹே சப் கோ பூல் ஜாத்தா ஒ ஃகுதா கோ யாத் கர்த்தா  - ’எவர் அனைத்தையும் மறந்து விடுகிறானோ அவர்தான் இறைவனை நினைவு கூர்கிறார்’ என்று ஞானிகள் பாடுகின்றனர். ஆனால் இந்த நிலையை அவ்வளவு லேசாக அடைய முடியாது. தொழுகைக்குத் தலைமை தாங்கும் இமாம் பதவியில் இருக்கும் ஒரு மார்க்க அறிஞருக்கும்கூட, தொழுகையின் நிலையிலும் இந்த நிலை உண்டாவதில் தடை வந்துவிடுகிறது. ‘ஜோ இமாம் பன் கயா ஹே உசே ஃபிக்ரே முப்ததீ ஹே’ – எவர் இமாம் ஆகிவிட்டாரோ அவருக்கு தன் பின்னால் நின்று தொழுபவரைப் பற்றிய சிந்தனை உண்டாகி விடுகிறது’ என்று மகான் பாடுகிறார்கள்.”

            எனவே பாஸ் கஷ்த் அல்லது தபத்துல் என்னும் இந்த நிலை உண்டாவதற்கு தனியான கால அவகாசமும், ஓர்மையுடன் பயிற்சியில் ஈடுபடுவதும் அவசியமாகும்.

            இந்த நிலையை பீரானே பீர் சய்யிதுனா கவ்ஸுல் அஃ’ழம் முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் அடைந்திருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள், “மா ஃபில் அர்ளி ஃபில் அர்ளி, லைச ஃபில் கல்பி இல்லல்லாஹ்” – ’மண்ணின் மீது உள்ளவை மண்ணின் மீதே உள்ளன, என் மனத்தில் அல்லாஹ்வை அன்றி யாரும் இல்லை.’ இத்தகைய நிலையை நாம் அடைய அல்லாஹ் அருள் புரிவானாக!

 

 

* தி எஸ்ஸென்ஷியல் ரூமி” என்னும் நூலில் கோல்மன் பார்க்ஸ் “திக்ரு” என்னும் தலைப்பில் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.

Monday, June 23, 2025

யாத் கர்த் (இறைநினைவில் மூழ்கியிருத்தல்)

(நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஐந்தாவது ஸூஃபிக் கோட்பாடு)










திக்ரு (அறபி), யாத் (ஃபார்சி) ஆகிய சொற்கள் நினைவு கூர்வது, நினைப்பது, ஞாபகம் செய்வது என்று அர்த்தப்படும்.

            திக்ருல்லாஹ் என்றால் அல்லாஹ்வை நினைவு கூர்தல் என்று அர்த்தம். அது இறை தியானத்தைக் குறிக்கிறது.

            இறைவனை நினைவு கூர்வதே வழிபாடுகள் அனைத்தின் சாராம்சமும் உயிருமாக உள்ளது. இறை தியானம் இல்லை எனில் எந்த ஒரு வழிபாடும் உயிரற்ற உடல் ஆகிவிடும்.

            தொழுகை, நோன்பு, ஈகை, புனிதப் பயணம் முதலிய வணக்க வழிபாடுகளின் எல்லா வடிவங்களும் உடல்தான். அவற்றில் உயிராக இருப்பது இறை தியானமே ஆகும்.

            எனவே, வழிபாட்டு வடிவங்களுக்கு இடம், காலம் என்னும் எல்லைகளை வைத்த இறைவன், திக்ரு என்னும் இறை தியானத்திற்கு எல்லை வகுக்கவில்லை.

            அதாவது, நாளொன்றுக்கு ஐந்து வேளை தொழுகை, ஆண்டில் ஒரு மாதத்தில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு, செல்வந்தர்களுக்கு ஓராண்டின் சேமிப்பில் 2.5 விழுக்காடு தூயவரி, இயலுவோருக்கு ஆயுளில் ஒரு முறை ஹஜ் என்னும் புனிதப் பயணம் என்று எல்லை உண்டு. ஆனால், இறை தியானத்திற்கு இவ்வளவு போதும் என்று வரம்பு இல்லை. அதனை அதிகமாகச் செய்ய வேண்டும் என்பது இறைநம்பிக்கையாளர் ஒவ்வொருவரின் மீதும் கட்டாயக் கடமை (ஃபர்ளு) ஆகும்.

இறைநம்பிக்கை கொண்டோரே! அதிகமான நியாபகமாக

அல்லாஹ்வை நினைவு கூருங்கள்” (33:41)

என்று இறைவன் கட்டளை இடுகிறான். ”திக்ரன் கஸீரா” (அபரிதமான அதிகமான நியாபகம்) என்று சொல்லியிருப்பதன் பொருள் “இடை விடாது தியானித்தல்” என்று சொல்லப்படுகிறது. எனவே இது எப்போதும் இறைவனின் நினைவிலேயே மூழ்கி இருப்பதைக் கோருகிறது. அதனை ஸூஃபிகளே நிறைவேற்றுகின்றனர்.

            குரு ஒருவரிடம் ”பைஅத்” என்னும் தீட்சை அடைந்து அவரின் சீடராகி அவரின் வழிகாட்டுதல் படி பயிற்சிகள் செய்வதால் இந்நிலை அடையப்படுகிறது. தீட்சையின் நோக்கம் (மக்ஸதே பைஅத்) என்பது யாதே ஹக் அலத் தவாம், வ யாஃப்த்தே ஹக் – அதாவது சதா காலமும் இறைவனை நினைவு கூர்வதும், இறைவனை அடைவதும் ஆகும் என்று ஸூஃபிகள் சொல்கின்றனர். ஒரு குருவின் நேரடித் தொடர்பில் இப்பயிற்சியை செய்ய வேண்டியது அவசியம். குருவின் தொடர்பின்றி தானாக முயல்வோருக்கு இந்த நிலை ஒருபோதும் வாய்க்காது.



            









இறைவனை சதா காலமும் நினைவு கூரும் நிலையை அடைந்த பின்னரே அவனை அடைகின்ற நிலை கிடைக்கிறது. இறைவனை அடைந்த பின்னரே அவனை அகக் கண்ணால் தரிசிக்கும் ஷுஹூத் என்னும் நிலை கிடைக்கும்.

            இறைவனை நினைவுகூர்தல் என்பது இரண்டு நிலைகளில் உள்ளது.

1.      இறைவனை அவனின் அழகிய திருநாமங்கள் கொண்டு நினைவு கூர்தல். இது அவனின் ருபூபிய்யத் என்னும் ரட்சகத் தன்மையில், அவனின் சிஃபாத் என்னும் திருக்கல்யாண குணங்களின் படித்தரத்தில் நினைவு கூர்வதாகும்.

நும் ரட்சகனின் பெயரை நினைவு கூர்க. மேலும்,

அனைத்தையும் விட்டு ஒதுங்கி அவனுடன் சேர்ந்துவிடுக” (73:8)

2.      அழகிய திருநாமங்களுக்கு உரியவனான அந்த இறைவனையே நினைவு கூர்வதாகும். இது அவனின் சுயத் திருநாமம் (இஸ்மு ஜாத்) ஆன “அல்லாஹ்” என்னும் திருநாமத்தால் நிகழ்த்தப்படும். மேலும், அவனின் உலூஹிய்யத் (தெய்வத்தன்மை) பற்றிய பிரகடனம் ஆன ”லா இலாஹ இல்லல்லாஹ்” என்னும் திருக்கலிமாவைக் கொண்டும் நிகழ்த்தப்படும்.

“என்னை நினைவு கூருங்கள், உங்களை நினைவு கூர்கிறேன்” (2:152)

என்னும் திருவசனத்தில் அவனையே நினைவு கூரும்படியாகக் கட்டளை உள்ளது.

            ”திக்ரு என்பதன் உண்மையான அர்த்தம் இறைவனைப் பற்றிய அக விழிப்பாகும். திக்ரின் நோக்கம் இந்த பிரக்ஞையை (உணர்வை) அடைவதுதான்” என்கிறார் ஃகாஜா உபைதுல்லாஹ் அஹ்ரார் (ரஹ்) அவர்கள்.

            ஆரம்ப நிலையில் சாதகன் நாவால் திக்ரு செய்கிறான். இது திக்ரே ஜலி என்று சொல்லப்படும். அவன் பக்குவம் அடையும்போது அடுத்தடுத்து திக்ரே கல்பி என்னும் இதயத்தின் தியானம், திக்ரே அஃக்ஃபா அல்லது திக்ரே ரூஹி என்னும் உயிரின் தியானம், திக்ரே ஃகஃபிய்யுல் அஃக்ஃபா அல்லது திக்ரே சிர்ரி என்னும் ரகசியத்தின் தியானம் முதலிய அகவயமான தியானங்களுக்கு முன்னேறுகிறான்.

            இது பற்றி சய்யிதுனா முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: “ஆரம்ப நிலையில் ஒருவர் இறைவனின் திருப்பெயரைத் தன் நாவால் உச்சரிக்கிறார். இதயம் உயிர் பெற்றதும் அவர் அதனை அந்தரங்கமாக உச்சரிக்கிறார். ஆரம்பத்தில் ஒருவர் தான் நினைவு கூரும் வார்த்தைகளை வெளிப்படுத்திச் சொல்ல வேண்டும். அப்புறம் படிப்படியாக அந்த தியானம் ஒருவரின் சுயம் வரை பரவிவிடுகிறது. முதலில் அது இதயத்தில் இறங்குகிறது. அப்புறம் ஆன்மாவுக்கு ஏறுகிறது. அப்புறம் அது மேலும் நகர்ந்து ரகசியங்களின் ஸ்தானத்தை அடைகிறது. மேலும் முன்னேறி மறைவையும், மறைவின் மறைவையும் அடைகிறது.”



            











திக்ரு என்னும் இறை நினைவுதான் மனிதனைப் புனிதனாக்கும் ஆன்மிக ரசவாதத்தின் அடிப்படை ஆகும். இறைக் காதலையே ரசவாதம் என்று மவ்லானா ரூமி போன்ற ஸூஃபி மகான்கள் சொல்லுகின்றனர். இரண்டும் முரணான கருத்துக்கள் அல்ல. ஏனெனில், இறைவனைக் காதலிக்காமல் நீங்கள் அவனை எப்போதும் திக்ரு செய்யும் நிலையை அடைய முடியாது. “ஒருவன் ஒன்றை நேசிக்கும்போது அதனை அதிகமதிகம் நினைவு கூர்கிறான்” (மன் அஹப்ப ஷைஅன் அக்ஸர திக்ரஹு) என்பது ஓர் அறபி முதுமொழியாகும். 

            சதா இறைவனை நினைவு கூர்வதால் மனிதன் எப்படிப் புடம் போடப் படுகிறான் என்பதை உஸ்மான் நூரீ தோப்பாஷ் இப்படி விளக்குகிறார்:

            ”இதயத்தில் இருந்து கிளம்பும் திக்ரின் சூக்குமமான சூடு முழு உடலிலும் பரவும்போது மனிதனின் உப நினைவு மனத்தில் மறைந்து கிடக்கும் உணர்ச்சிகள் யாவும் உயிர் பெற்றுவிடுகின்றன. அவை செயல்படும் பிரக்ஞையாக மாறி விடுகின்றன. அது ஒருவரின் நடத்தையில் பிரதிபலிக்கிறது. தன் எண்ணங்கள் முழுவதும் இறைவனைப் பற்றிய நினைப்பாகவே ஆகிவிட்ட ஒருவர் கருணை, பொறுமை, தாராளம், மன்னிப்பு முதலிய புனிதப் பண்புகளை விட்டும் நீக்கப்பட்டவராக இருப்பார் என்று கற்பனை செய்யவும் இயலாது. இவை அனைத்தும் ஒருவர் பக்குவமான மனிதர் ஆவதற்கு இன்றியமையாத பண்புகள் ஆகும். திக்ரின் மூலம் இதயத்தை உயிருள்ளதாக்குவது என்பது தஸவ்வுஃபில் (ஸூஃபித்துவத்தில்) மிக முக்கியமான நியதிகளில் ஒன்றாகும்.”

            திக்ரு செய்யும் முறைகள் பல இருக்கின்றன. மூச்சில் இறை நினைவை இணைத்துச் செய்யப்படும் பாசே அன்ஃபாஸ் என்னும் மூச்சு திக்ரு எல்லா ஞான நெறிகளிலும் பொதுவானதாகவும் அடிப்படையானதாகவும் இருக்கிறது. எனினும், ஒவ்வொரு மகானும் வெளிரங்கத்தில், செய்முறை வடிவத்தில் சிறு சிறு வேறுபாடுகளுடன் தியானப் பயிற்சிகளை நடைமுறைப் படுத்துகின்றனர். நக்ஷ்பந்திய்யா நெறியில் திக்ரு முறை அமைந்திருக்கும் முறையை ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் பின்வருமாறு விளக்குகிறார்:

            ”சாதகன் தன் இதயத்தில் (முராக்கபா) என்னும் தியானநிலையை அடையும் வரை தன் நாவால் நஃபீ (மறுத்தல்) மற்றும் இஸ்பாத் (உறுதிப்படுத்தல்) ஆகியவற்றைக் கொண்டு திக்ரு செய்ய வேண்டும்.

            ”அந்த நிலையை அடைய அவர் ஒவ்வொரு நாளும் லா இலாஹ என்னும் நஃபி மற்றும் இல்லல்லாஹ் என்னும் இஸ்பாத் ஆகியவற்றை ஐயாயிரம் முதல் பத்தாயிரம் தடவைகள் தன் நாவால் சொல்லி, தன் இதயத்தில் இருந்து அதனைத் துருவேற வைத்து மழுங்கடிக்கும் விடயங்களை எல்லாம் நீக்க வேண்டும்.

            ”இந்த திக்ரு இதயத்தை மெருகூட்டி சாதகனை ஜுஹூர் என்னும் வெளிப்பாட்டின் நிலைக்கு இட்டுச் செல்லும்.

            ”அவர் அந்த அன்றாட திக்ரை தன் உள்ளத்தாலோ நாவாலோ செய்து வர வேண்டும். அல்லாஹ் என்னும் சுயத்திருநாமத்தை (இஸ்மு ஜாத்) உச்சாடனம் செய்ய வேண்டும். அந்தத் திருநாமம் ஏனைய அனைத்து நாமங்களையும் பண்புகளையும் தன்னுள் அடக்கியதாகும். அல்லது, லா இலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லி நஃபி மற்றும் இஸ்பாத் செய்தபடி திக்ரு செய்ய வேண்டும்.

            ”இந்த அன்றாட திக்ரு சாதகனை அந்த திக்ரு செய்யப்படுவோனின் பூரணமான பிரசன்னத்திற்கு இட்டுச் செல்லும்.

            ”நக்‌ஷ்பந்தி ஸூஃபி குருமாரின் வழிமுறைப்படி நஃபி மற்றும் இஸ்பாத் திக்ரு செய்வதற்குப் பின்வரும் நியதிகளை ஒருவர் பேண வேண்டும்

-        சாதகர் தன் கண்களை மூடியிருக்க வேண்டும்.

-        வாயை மூடியிருக்க வேண்டும்.

-        பற்களை இறுக கெட்டித்து வைக்க வேண்டும்.

-        தன் நாக்கை மேலண்ணத்தில் ஒட்ட வைத்திருக்க வேண்டும்.

-        மூச்சைப் பிடித்து வைக்க வேண்டும்.

”நஃபி மற்றும் இஸ்பாத் ஆகியவற்றைக் கொண்டு தன் இதயத்தில் திக்ரு செய்ய வேண்டும். இதற்காக அவர் லா என்னும் சொல்லைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். இதை அவர் தன் நாபியிலிருந்து தன் மூளைக்கு உயர்த்த வேண்டும்.

லா என்னும் சொல் மூளையை அடைந்ததும் இலாஹ என்னும் சொல்லினை வெளிக்கொண்டு வருகிறது. அதனை மூளையில் இருந்து வலது பக்கத் தோளுக்கு நகர்த்த வேண்டும்.

“அங்கிருந்து இல்லல்லாஹ் என்னும் சொல் கொண்டு இதயத்தில் அடிக்க வேண்டும்.

“அச்சொல் இதயத்தை அடித்தவுடன் அதன் சக்தியும் சூடும் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பரவுகிறது. லா இலாஹ என்னும் நஃபி கொண்டு சாதகன் இந்த உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் மறுத்துத் தள்ளுகிறான். அப்புறம், இல்லல்லாஹ் என்னும் இஸ்பாத் கொண்டு அவை அனைத்தும் அல்லாஹ்வின் தெய்வீகப் பிரசன்னத்தில் அழிந்துவிட்டன என்பதை உறுதிப்படுத்துகிறான்.

”இதை அவன் ஒவ்வொரு மூச்சிலும் – உள் மூச்சிலும் வெளி மூச்சிலும் – மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறான். எப்போதும் அது தன் இதயத்திற்கு வருமாறு பேணுகிறான். தனக்குத் தன் குருநாதர் பரிந்துரைத்த எண்ணிக்கைப்படி இதனைச் செய்கிறான்.

”இவ்வழியில் ஒரே மூச்சில் இருபத்து மூன்று தடவைகள் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லும் நிலையைச் சாதகன் படிப்படியாக அடைகிறான்.

“பூரணமான ஷைஃகு ஒருவர் ஒவ்வொரு மூச்சிலும் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை எண்ணற்ற தடவைகள் சொல்ல முடியும்.

“அல்லாஹ் மட்டுமே நம் இலக்கு, நமக்கு வேறு இலக்கு இல்லை என்பதே இந்தப் பயிற்சியின் அர்த்தம் ஆகும்.

“இந்தப் பயிற்சின் விளைவாக, இறைவனின் பிரசன்னம் மட்டுமே ஒரே உள்ளமை என்று காண்பது முரீதின் இதயத்தில் இறைத்தூதரின் காதலை உண்டாக்குகிறது. அப்போது அவர் ’முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று சொல்கிறார். அது இறைப் பிரசன்னத்தின் இதயத்தில் உள்ளதாகும்.”

இஸ்லாமின் அல்-கலிமத்துத் தய்யிபா என்னும் பரிசுத்தக் கொள்கை வாசகத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர தெய்வம் இல்லை என்னும் முற்பகுதி உலூஹிய்யத் (தெய்வநிலை) என்பதைப் பிரகடனம் செய்கிறது. முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதராக உள்ளார்கள் என்னும் பிற்பகுதி ரிசாலத் (தூதுத்துவம்) என்பதைப் பிரகடனம் செய்கிறது.

எனவே, நபியை நினைவு கூராமல் இறை தியானம் நிறைவு பெறாது. எதார்த்தத்தில் திக்ரு என்னும் காரியம் நடைபெற நினைப்பவன் (தாக்கிர்) மற்றும் நினைக்கப்படுபவன் (மத்கூர்) ஆகிய இருவர் வேண்டும் என்பது நியதி. இறைவன் மத்கூராகவும் அடியான் தாக்கிர் ஆகவும் இருப்பதில், அடியானின் பலகீனத்தைக் கருதி அல்லாஹ் தன் திருத்தூதரை தனக்கும் அடியானுக்கும் இடையில் முதக்கிர் (நினைவூட்டக்கூடியவர்) ஆக வைத்திருக்கிறான்.

”(நபியே!) நினைவூட்டுவீராக. நிச்சயமாக நீவிர் நினைவூட்டக் கூடியவரே” (88:21)