Wednesday, October 26, 2011

மடியில் சாய்ந்த கணினி

இரண்டு நாட்களாக எதுவுமே எழுதவில்லை. அதாவது எழுத முடியாத இக்கட்டான நிலை.
என் மடிக்கணினி சீரியஸாக உள்ளது.
உறங்கச் செல்லும் முன் கவிதை ஒன்றின் சில வரிகளைத் தட்டிவிட்டு நார்மலாகத்தான் ஷட்டவுன் செய்தேன். கணினியும் எப்பவும் போலத்தான் கண் மூடிற்று.
காலையில் அதன் பக்கமே நான் செல்லவில்லை. கட்டுரை ஒன்று பாதியில் இருந்தது. மதியம் வந்து தொடரலாம் என்று கல்லூரிக்குச் சென்று விட்டேன்.
கல்லூரியில் இருக்கும்போது மனைவி செல்பேசியில் அழைத்தாள். கணினியை எழுப்பிப் பார்த்திருக்கிறாள். அதில் பேச்சு மூச்சைக் காணவில்லை என்றதும் பதறிப்போய் எனக்கு போன் போட்டு விஷயத்தைக் கூறினாள். 
மதியம் வந்து நானும் எழுப்பிப் பார்த்தேன். எந்தத் துடிப்பும் இல்லை. கண்கள் மூடி அப்படியே கிடந்தது. மடியில் கிடத்தி அதன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். சலனமற்று இருந்தது.  மைக்கேல் ஏஞ்சலோவின் 'PIETA' சிற்பம் ஞாபகம் வந்தது.
நேற்று மாலை அதனை முதுகில் சுமந்துகொண்டு 'டாக்டரிடம்' ஓடினேன். என் டெல்லுக்குட்டி கோமாவில் இருப்பதாகச் சொன்னார். "எப்படியாவது மீட்டுக் கொடுங்கள்" என்றேன். அதன் தாய்ப் பலகை பழுதாகி இருக்கக்கூடும் என்று பயமுறுத்தினார். பதினாலாயிரம் செலவாகும் என்றார். "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை..." என்றெல்லாம் வசனம் பேசும் நிலையில் நான் இல்லை. அப்படியே தூக்கிக் கொண்டு வந்து விட்டேன். தீபாவளி முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம்  என்று என்னுடன் வந்த மச்சானும் சொல்லிவிட்டான். நாளை என் டெல்லுக்குட்டி பிறந்த ஆஸ்பத்திரிக்கே கொண்டுபோய் அட்மிட் செய்யலாம் என்றிருக்கிறேன். விரைவில் அவன் எழுந்து வந்து உங்களுடன் விளையாடுவான் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. அது வரை பிரபஞ்சக்குடிலில் மௌன விரதம் மட்டும்தான் செய்யமுடியும். விரைவில் சந்திப்போம்.
(இந்தத் தகவலை என் அக்காள் மகனின் கணிப்பொறியில் இருந்து அனுப்புகிறேன். அவன் நிலையம் கொஞ்சம் கையைக் கடிக்கிறது. எண்பது ஜீபிதான் பாக்கி உள்ளது மாமா என்று சொல்லித்தான் கொடுத்தான். அதனால் நிறைய பேச முடியவில்லை. )

Saturday, October 22, 2011

தைல ஓவியம்


இறைவனின் வண்ணங்கள்
ஈரமாய்க் குழைந்திருக்கும்
தூரிகை நீ

கிழக்கிலும் மேற்கிலும்
கிட்டாத தைலம் கொண்டு
ஓவியம் தீட்டப்படும்
கேன்வஸ் திரை நான்

என் தூரிகையே!
இறைவனின் கையில்
கருவியாகும் உன்னுடல்
என்னொரு கிளையாலானது

வண்ணம் தீட்டும்
உன் குஞ்சம்
ஒளியாலான பூ.

தீற்றல்களின்
ஈரம் காய்வதே
என் சுவாசம்.

உன்னைக் கொண்டு
என்னில் தோன்றும்
பல்வித ஓவியங்கள்
ஒவ்வொரு முறையும்
மாறி மாறி

மரபு ஓவியம்
மாடர்ன் ஓவியம்
அவனதே எல்லாம்.

உன்னை இயக்கும்
ஆதி ஓவியனின்
கையொப்பம்
உன்னைக் கொண்டு
என்னில் எழுதப்படும்
அந்தத் தருணம்
என் மோட்சம்.

Wednesday, October 19, 2011

பெயரில் என்ன இருக்கிறது?



"What's in a name? That which we call a rose
 By any other name would smell as sweet."
-William Shakespeare (Romeo and Juliet)


அப்போது என் மகள் கைக்குழந்தையாக இருந்தாள். தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தேன். உம்மும்மும்..ஞைஞைஞை என்றெல்லாம் கிப்பரிஷ் செய்து குழந்தைகளுக்குத் திகிலூட்டுவது சிலருக்குக் கைவந்த கலை. அக்கலையில் எனக்குப் ப்ரிச்சயம் இல்லாததால் கொஞ்சுவதற்கு நான் வார்த்தைகளைத்தான் பயன்படுத்துவேன். அதுவும் வேறு வழியில்லாமல்தான். ஏனெனில் எனக்கு இயல்பாக வருவது மௌனம்தான். ஆனால் ஒரு குழந்தையை முகத்திற்கு நேராகப் பிடித்தபடி ஒன்றும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தால் அது பீதி அடைந்துவிடும் என்பதால் என் மௌனத்தைக் கலைந்துவிட்டு நான் ஏதாவது சொல்லிக் கொஞ்சுவதுண்டு. அப்போது என்ன தோன்றியதோ, என் செல்ல மகளை நான் ‘பசும்புல்லே, கூழாங்கல்லே, மூங்கிற்பிரம்பே’ என்பன போல் ஏதேதோ சொல்லிக் கொஞ்ச, அதைக் கேட்டு என் மகள் குஷாலாகி கிக்கிள் செய்தபோதும், என் சகதர்மினி முகம் சிவக்கச் சமையற்கட்டிலிருந்து வந்தாள். “பிள்ளைய இப்படியா கொஞ்சுறது? கல்லு கட்டைன்னுக்கிட்டு” என்று சொல்லி மகளைத் தூக்கிக் கொண்டு போனாள்.

நான் நாற்காலியில் அமர்ந்தபடிக்கு யோசித்துப் பார்த்தேன். நான் அப்படி என்ன தவறாகச் சொல்லிவிட்டேன்? என் குழந்தையைக் கொஞ்சுவதில் நான் என் தனித்தன்மையைக் கடைப்பிடிக்கக் கூடாதா? குழந்தையைக் கண்ணே மணியே வைரமே மான்குட்டியே சந்தனமயிலே சண்பகப் பூவே என்பன போன்ற இலக்கிய நயம் வாய்ந்த உவமைகள் கூறித்தான் கொஞ்ச வேண்டுமாம். அதுதான் பாசம் பீறிடுவதின் அடையாளமாம். தமிழாசானாகிய நான் இதைக்கூட அறியாமல் இருப்பது மிகவும் விந்தைதான்! 


’தங்கமே, வைரமே’ என்றுதான் (காஸ்ட்லியாகக்) கொஞ்ச வேண்டும். கூழாங்கல் என்றா கொஞ்சுவார்கள். அது சரி, ஆனால் நான் என் மகளை வங்கி லாக்கரில் வைத்துக் கற்பனை செய்ய முடியுமா? சலசலத்து ஓடும் காட்டாற்றின் கரையில், மரங்களின் நிழலில் குளிர்ந்துக் கிடக்கும் ஒரு கூழாங்கல்லின் ஆனந்தம் குழந்தையின் இருப்பில் கசிவதை நான் தொட்டுணரும்போது அதைக் கூழாங்கல் என்று கொஞ்சுவதுதானே பொருத்தம்?

இந்தச் சிந்தனை அப்படியே பெயர்களின் மரபுகள் நோக்கி நகர்ந்தது. கீழைத் தேய சமயங்கள் எல்லாம் எளிமையை, பணிவைப் போதிப்பவை. ஆனால், பொதுவாக நாம் வைத்துக் கொள்ளும் பெயர்கள் மிகவும் பிரம்மாண்டமான அர்த்தம் கொண்டவையாக உள்ளன. எளிமையான பொருட்களின் பெயர்களை மனிதர்கள் வைத்துக்கொள்வது கொஞ்சம் குறைவுதான். உதாரணமாக, சூரியன் –சூர்யா – கதிரவன் –ஷம்ஸ், சந்திரன் –வெண்ணிலா –பூர்ணிமா –கமர், அருந்ததி –வீனஸ் –ஸுஹ்ரா –சுரையா. எல்லாம் வானளாவிய பெயர்கள்.

நதிகளின் பெயர்களைப் பெண்களுக்குச் சூட்டும் மரபு இந்து சமயத்தில் இருக்கிறது. கங்கா, யமுனா, காவேரி, கோதாவரி, சரஸ்வதி, நதியா போன்ற பெயர்கள். அவ்வாறு முஸ்லிம்கள் நதிப்பெயர் வைத்துக்கொள்ள வழியில்லை. ஏனெனில் அரேபியாவில் நதியே இல்லை. ஜம்ஜம் கிணறு மட்டும் இருக்கிறது. அப்பெயரையும் பிள்ளைகளுக்கு வைப்பதில்லை. ’நில் நில்’ என்று அதற்கு அர்த்தம். நபிமொழிகளில் நீல் (நைல்) ஃபுராத் (யூஃப்ரிடிஸ்) ஆகிய நதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றையாவது சூட்டிக்கொள்ளலாம் அல்லவா? நயீம், தஸ்னீம் போன்ற பெயர்கள் வைக்கப்படுகின்றன. அவை சொர்க்கத்தின் நீரோடைகள்! பிள்ளைகளுக்கு அழகான நல்ல அர்த்தமுள்ள பெயர்களைச் சூட்டும்படி நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார்கள். எனவே பிரம்மாண்டம் தொனிக்கும் பெயர்களையும் நாம் வைக்கிறோம்.


மேற்குலக நாடுகளைச் சேர்ந்த மனிதர்களின் பெயர்களை அவதானித்தபோது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவை அதிகார போதைக்கும் இனவெறிக்கும் பெயர் போன நாடுகள். ஆனால் அவற்றின் மனிதர்களின் பெயர்கள் மிகவும் எளிமையாக இருக்கின்றன. ராபின் என்று பெயர் வைத்த பலரை நீங்கள் அங்கே பார்க்கலாம். (தமிழ்ப்படங்களில் கூட வில்லனின் வலதுகைக்கு இப்பெயர் வருவதுண்டு). ராபின் என்பது ஒருவகை குருவி. நாம் இங்கே தவிட்டுக்குருவி என்று பெயர் வைக்க முடியுமா? குருவி, பராந்து, பொட்டக்கோழி என்பதெல்லாம் நம் ஊரில் கேலி தொனிக்கும் பட்டப் பெயர்களாகத்தான் இருக்கும்.

மாணவப் பருவத்திலிருந்தே வித்தியாசமான பெயர்களின் ஒலித்தொனிகளும் அர்த்தபாவங்களும் என்னை மிகவும் கவர்ந்து வந்துள்ளன. எல்.கே.ஜியில் இருந்து ப்ளஸ்-ஒன் வரை என்னுடன் பயின்று என் நெருங்கிய நண்பனாக இருந்து கல்யாணபுரம் பெருமாள் கோயிலின் குடமுழுக்கிற்கு நீர் மொள்ளப் போய் ஆற்றில் மூழ்கி இறந்து போனவனின் பெயர் “ஹரிஹரவெங்கடசுப்பிரமணியன்”. மூன்று பெயர்களை ஒரே ஆளே வைத்துக்கொண்டிருக்கிறான் என்று நாங்கள் அவனைக் கிண்டல் செய்வோம். பெற்றோருக்கு ஒரே பிள்ளை அவன். ஹால்-டிக்கட்டில் கையெழுத்துப் போடும்போது போடுவான் போடுவான் போட்டுக்கொண்டே இருப்பான். நாங்கள் பக்கத்தில் நின்றுகொண்டு ஹரி ரயில் ஓட்டுகிறான் என்போம்.

இலக்கியத்தில் வரும் சில பெயர்கள் எனக்கு மிகவும் திகிலூட்டியிருக்கின்றன. ‘நரிவெரூஉத்தலையார்” என்று ஒரு பெயர். புறநானூற்றுக் கவிஞர். இந்தப் புண்ணியவானுக்கு ஏன் இப்படி ஒரு பெயரை வைத்தார்கள் என்று ஒன்பதாம் க்ளாஸ் படிக்கையில் ஆத்து ஆத்துப் போனேன். நரித்தலையும் மனித உடலும் கொண்ட ஒரு தொன்ம ரூபமாக அவரைக் கற்பனை செய்து வைத்திருந்தேன். பின்பக்கம் சற்றே மண்டை சப்பி நீண்டது போல் ஒருவன் எங்களுடன் படித்தான். நாங்கள் அவனுக்கு இந்தப் புறநாற்றூப் புகழ் கொண்ட பெயரைச் சூட்டி அழைத்தோம்.

 
இவ்வாறு நாய் அல்லது ஓநாய் தலையும் மனித உடலும் கொண்ட உருவத்தை லத்தீன் மொழியில் சைனோசெஃபால்லஸ் (cynocephalus) என்று அழைத்தார்கள். எகிப்திய தொன்மங்களில் ஹப்பி, அனுபிஸ் ஆகிய தெய்வங்கள் இந்த உருவம் கொண்டவையாக இருந்தன. ஆச்சரியமான விஷயம் என்னவெனில், கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் தெஸியாஸ் (Ctesias) இத்தகைய உருவம் கொண்ட மனிதர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி விளக்கமாக எழுதியிருக்கிறார். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சந்திர குப்த மௌரியாவிடம் சிரியா மன்னனின் தூதாகப் பாடலிபுத்திரத்திற்கு வந்த மெகஸ்தனீஸ் தன் குறிப்புக்களில் இப்படிப்பட்ட மக்கள் இந்தியாவில் வாழ்ந்ததாகத் தெரிவிக்கிறார். நாய்த்தலை கொண்ட அந்த மக்கள் மலைகளில் வாழ்ந்ததாகவும், குரைத்துக்கொண்டு உரையாடியதாகவும் அவர் எழுதியுள்ளார். எனவே, நரிவெரூஉத்தலையார் அத்தகைய மனிதர்களில் ஒருவரோ என்ற திகிலான எண்ணமும் ஏற்படுகிறது!

திகிலூட்டிய இன்னொரு பெயர் பிசிராந்தையார். தலைமுடி எல்லாம் பிசிர் பிசிராக இருக்க (இப்போதுள்ள ஸ்பைக்ஸ் ஸ்டைலின் முன்னொடி!) ஆந்தை போன்ற பெரிய விழிகளுடன் இருக்கும் ஒரு முகம்தான் கற்பனையில் விரியும். ஏதோ லூயி கரோல் உருவாக்கிய கதாப்பாத்திரம் போல் தோன்றும்.

சங்கப் பெயர்களே பெரும்பாலும் ஒரு புனைவுத் தன்மையை உணரவைத்த காலம் அது. இப்போதும் லேசாக அந்த உணர்வு தட்டத்தான் செய்கிறது. கோப்பெருஞ்சேரன் இரும்பொறை, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, தலையலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், சேரமான் கனைக்கால் இரும்பொறை, காக்கைப் பாடினியார், கடியலூர் உருத்திரங்கண்ணனார், பேய்மகள் இளவெயினி, நெய்தலங்கனலிற் பிறந்த இளஞ்சேட்சென்னி என்பன போன்ற பெயர்களை வரிசையாகச் சொல்லிப்பார்த்தால் ஏதோ நடிகர் திலகம் சிவாஜி பேசும் வசனம் போல் தொனிக்கிறது. அட்டகாசமான பெயர்கள். பதாகைகள் படபடத்துப் பறக்க வெண்ணிறப் புரவியில் ஆரோகணித்து நெஞ்சு நிமிர்த்தி இவர்ந்து வருவோருக்கு மிகவும் பொருத்தமான பெயர்கள்!


சங்க இலக்கியப் பரப்பிலேயே எனக்கு மிகவும் கவர்ச்சியான பெயராகத் தெரிவது ‘வெள்ளிவீதியார்’. தனித்து நிற்கும் ஆளுமை அவள். வெள்ளிவீதி என்பதன் வசீகரம் அப்பெயரின் அர்த்தபாவங்கள் நம் மனதில் தோற்றும் அலைகளில் இருக்கின்றது. நம் சூரியக் குடும்பத்தை THE MILKY WAY OF GALAXY – பால்வீதி என்று தமிழில் அழைக்கிறோம். வெள்ளிவீதி என்பதும் அதனையே. பெண்மை நலம் மிகவும் செறிந்த பெயர் இது. கிரேக்கத் தொன்மத்தில் காதலின் தேவதையாகச் சொல்லப்படுபவள் வீனஸ். வட துருவ நட்சத்திரம் அது. இடம் பெயராதது. எனவே இந்து மரபில் அது கற்பின் அடையாளமாகி விட்டது. ‘வடமீன் கற்பு’ என்று சிலாகிக்கப்படுவது. அருந்ததி என்று அதற்கு இங்கே பெயர். (அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…) வைகறைப் பொழுதில் வடதிசையில் கீழ்வானில் மின்னுவது வீனஸ்தான். எனவே அது விடிவெள்ளி என்று சொல்லப்படுகிறது. அது சூரியனைச் சுற்றி வர (பூமியின் கணக்கில்) எட்டு ஆண்டுகள் ஆகின்றன. தொடங்கிய இடத்திலேயே வந்து முடித்துவிடும். அதன் பாதை தோராயமாக ஒரு ஐந்துமுனை நட்சத்திர வடிவத்தை வரைந்து வைத்தது போல் இருக்கிறது. எனவே வீனஸ் கிரேக்க மறைஞானத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அந்தப் பாதைதான் வெள்ளிவீதி என்ற கோணத்தில் பார்க்கும்போது வெள்ளிவீதியாரின் மேல் வியப்பு மேலிடுகிறது. வீனஸ் – காதலின் தலைவி. பால்வீதி என்பதில் உள்ள பால் என்பது காதலின் பக்கம் கவனத்தைத் திருப்பிவிடுகிறது. காதல் – காமம் என்ற கருத்தியல் பிரிவினை இப்போது இருப்பது போல் சங்க காலத்தில் இல்லை. வெள்ளிவீதியாரும் பால் பற்றிப் பாடுவதில் (நல்ல) பெயர் பெற்றவர். பால் கொதித்துப் பொங்கும் தருணங்களைப் பாடுவது அவரின் தனித்தன்மை. அதாவது, பெருந்திணை!

மீண்டும் ஆங்கிலப் பெயர்களுக்கு வருகிறேன். பாடநூற்களில் கண்ட கவிஞர்களின் பெயர்கள் அவர்களின் கவிதைகளை விட அதிக சுவாரஸ்யமாக இருந்தன. சில பெயர்களை என் மனப்போக்கில் அர்த்தம் கொடுத்து நினைவில் நிறுத்திக் கொண்டேன்.
Wordsworth – ’இவன் வார்த்தைக்கு நாலு பேருகிட்ட நல்ல மதிப்பு இருக்கு’
Robert Burns – ’ராபர்ட் பத்திக்கிட்டு எரியிறான்’

ஆரம்பத்தில் நான் சொன்னேனே, கல் கட்டை புல் என்று, அதெல்லாம் ஆங்கிலேயர்களிடம் பெயர்களாகி விடுகின்றன. நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் ஒருவரின் பெயர் Gunter Grass. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியில் Gladstone Small (மகிழ்ச்சியான சிறிய கல்) என்று ஒருவர் இருந்தார். இன்னொருவர் Anthony Grey. இந்தப் பெயரே சாம்பல் நிறத்தில் சிமெண்டு சிலை ஒன்று உயிருடன் நகர்வது போன்ற கற்பனையை உருவாக்கியது. கோல்ஃப் விளையாட்டின் சாதனையாளன் Tiger Woods – புலிக்காடு!


என் மனம் கவர்ந்த இந்நாள் அமெரிக்கக் கவிஞரின் பெயர் Coleman Barks. மௌலானா ரூமியின் மஸ்னவி காவியப் பகுதிகளை அட்டகாசமான ஆங்கிலத்தில் ஆக்கி ஒரு டஜன் நூல்களுக்கும் அதிகமாக வெளியிட்டவர். அமெரிக்காவில் அதிகம் வாசிக்கப்படும் கவிஞராக ஒரு பத்தாண்டு காலம் மௌலானா ரூமி விளங்குவதற்கு இவரின் மொழிபெயர்ப்புத் திறமையே காரணம் ஆயிற்று. ஃபிலடெல்ஃபியாவில் அடங்கி இருக்கும் சூஃபி ஞானி பாவா முஹையுத்தீன் (ரஹ்) என்பவரின் சீடர். 


Bark என்பதற்கு மரப்பட்டை என்றும் நாய் குரைப்பு என்றும் அர்த்தங்கள் உள்ளன. கோல்மன் பார்க்ஸ் என்றால் கோல்மன் குரைக்கிறான் என்று அர்த்தம்! இது பற்றி அவரே தன் குருவுடனான ஒரு சந்தோஷ நிகழ்வைச் சொல்கிறார்:

”ON HOWLING
My sufi teacher, Bawa Muhaiyaddeen, when he saw me, and knowing my name was Barks, would go into a wolf howl for a joke and a teaching. He mirrored some need to howl that he saw there walking in. He himself would often break into spontaneous praise songs while sitting on his bed. Crying out loud for help is Rumi’s point. With that vulnerable breaking open in the psyche, the milk of grace starts to flow” (Coleman Barks, ‘The Essential Rumi’, chapter #14 The Howling Necessity: Cry Out in Your Weakness)

சில பெயர்களைக் கேட்கும்போது அதன் எதுகை அல்லது இயைபு சட்டென்று மனதில் தோன்றித் தொலைக்கிறது. மாணவப் பருவத்தில் பாரதிதாசனின் கவிதைகளைப் படித்ததும், கலைஞர் பாணியில் கொஞ்ச காலம் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்ததும் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சாலமன் பாப்பையா என்பதை பாலமன் ஆப்பையா என்று விவேக் சொல்வாரே, அதுபோல் தோன்றுகிறது. சாத்தையா என்று ஒரு பெயர். (அதுவே இரண்டு அர்த்தத்தில் இருக்கிறது!) அதனை, ’சாத்தையா நடப்பதில் நீ வாத்தையா’ என்று கவிதை வருகிறது. சாத்தனார் என்றால் நாத்தனார்.

இந்த எகனமொகனப் பார்வை எல்லாக் கவிஞர்களுக்கும் இருக்கும் போலும். நபிகள் நாயகத்தின் மருமகனார் ஒருவரின் பெயர் அலீ முர்தழா. அலீ என்றால் மேலானவர் என்று அரபியில் அர்த்தம். தமிழில் அது அலி என்றாகி ஏடாகூடமான பொருளைத் தருவதால் சீறாப்புராணத்தில் உமறுப் புலவர் ஜாக்கிரதையாக ‘அலிபுலி’ என்று அழைக்கிறார். சிங்கம் அலி என்று சொல்லலாம்தான். அலிபுலி என்று எதுகை ஏன்? கவியுள்ளம்தான் காரணம். அதுபோல் ’சுலைமான்’ என்றதும் என் மொழிப்புலனில் ’கலைமான்’ என்னும் சொல் ப்ளிங்க் ஆகும். இப்படித்தான் பாருங்கள், இலங்கையில் ’கண்டி மவ்லானா’ என்று ஒரு சிறந்த மார்க்க அறிஞர் இருக்கிறார். அவர் பெயரைக் கேட்டதுமே, இவர் சென்னையில் இருந்தால் கிண்டி மவ்லானாவாக இருந்திருப்பாரோ என்று தோன்றும். (தப்பாக எடுத்துக்கொண்டு, உன் POETIC TEMPERAMENT-ல் தர்பைய போட்டுக் கொளுத்த என்று வையாதீங்க)

இந்து என்றால் சமஸ்கிருதப் பெயர், முஸ்லிம் என்றால் அரபிப் பெயர் என்ற நிலை உள்ளது. இப்படி இருக்கும்போது மொழி அறியாத காரணத்தால் ஒருவர் பெயரைப் பற்றித் தவறாகப் பேசுவதும் நிகழ்ந்து விடுகிறது. அலீ என்னும் அரபுப் பெயர் ஒரு உதாரணம். ஒருமுறை சகோதரர் ஒருவர் ஏதோ ஒரு இலக்கிய நூலில் பார்த்துவிட்டுச் சொன்னார், ”பாருங்கள், இந்து சாமியெல்லாம் ஆபாச சாமிகளாக இருக்கின்றன. சரஸ்வதிக்குக் காமரூபினி என்று ஒரு பெயராம். இதையெல்லாம் வெட்கமுள்ளவங்க ஒரு பேருன்னு வப்பாங்களா? காமத்தைத் தூண்டும் கவர்ச்சியான உருவம் கொண்டவள்னு ஒரு சாமிக்கே பேரு வச்சிருக்காங்களே, இதை அறிவு ஒத்துக்கிருமா?” என்று பெரியார் பாணியில் பேசினார். 


நான் கேட்டுக்கொண்டிருந்தேன். சரஸ்வதியின் பெயர்களில் ஒன்று காமரூபினி என்பது சரிதான். அழகான பெயர் அது! நான் நண்பரிடம் கேட்டேன், “உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா?” அவர் இல்லை என்றார். “தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். காமம் என்பதற்குப் புழக்கத்தில் உள்ள அர்த்தத்தை வைத்துக் கொண்டெல்லாம் சமய விஷயங்களைப் பேசாதீர்கள். அப்படி இருப்பதால்தான் ‘சன்னி முஸ்லிம்’ என்று மாற்றிச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய நிலை. அதைச் சரியான அரபி உச்சரிப்பில் சொல்ல முடிவதில்லை இங்கே. நடைமுறைக்கு விவஸ்தைன்னு ஒன்னு இருக்கா? அது எதைப் பத்திக் கவலைப்படும்? அதுமாதிரிதான் இப்ப நீங்க பேசினது. காமரூபினிங்கறது ஆழமான அர்த்தமுள்ள ஆன்மிகப் பெயர். அதன் அரிச்சுவடி கூட உங்களுக்குத் தெரியாது. காமம்னா உங்களைப் பொருத்த வரை செக்ஸ்னு அர்த்தம். அவ்வளவுதான். இந்த அர்த்தம் தவறென்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அதன் மீதான உங்கள் பார்வை தவறானது. மேலும் இது போதுமான அர்த்தமும் அல்ல. காமம் என்றால் விருப்பம் என்று அர்த்தம். வெரி சிம்ப்ள். விருப்பம் முற்றிக் காமம் ஆகிறது. சிலருக்கு, விருப்பம் கனிந்து காமம் ஆகிறது. அது அவரவர் தனிநிலையைப் பொருத்தது. காமரூபினி என்றால் நீங்கள் நினைப்பது போல் கவர்ச்சி உருவம் என்று பொருளல்ல. விரும்பிய உருவத்தை எடுத்துக்கொள்ளும் நிலை என்று பொருள். அதை நான் தத்துவ நோக்கில் இப்படிப் பார்க்கிறேன்: இறைவனின் ‘சக்தி’ அவன் விரும்பிய பொருட்களில் எல்லாம் அவன் விரும்பிய (நாட்டம் – இராதத்) வண்ணம் வெளிப்படுகிறது. இதுதான் காமரூபினி என்று பெண்ணாக உருவகிக்கப் பட்டிருக்கிறது.”

என் நண்பர் ஒருவரின் பெயர் சத்தியநாராயணன். அதன் அர்த்தம் என்ன என்று ஒரு அன்பர் கேட்டார். ”சத்தியம் என்றால் உண்மை – ஹக்கு. நாராயணன் என்றால் மனிதர்களில் இருப்பவன், அல்லது மனிதர்களின் ரட்சகன் என்று சொல்லலாம். இதைப் பார்த்தால் ‘இலாஹின்னாஸ் – மனிதர்களின் இறைவன்’ (114: 3) என்று குர்ஆன் சொல்வதுதான் ஞாபகம் வருகிறது.” என்று சொன்னேன். உடனே அவர் பேச்சை வேறு திசைக்குத் திருப்பினார். “இந்து மதத்தில் மனிதனுக்கே தாங்கள் வணங்கும் கடவுளின் பெயரை வைத்துக்கொள்கிறார்கள். இந்த இணைவைப்பு இஸ்லாத்தில் இல்லை. நாம் அல்லாஹ்வின் பெயர்களுடன் அப்து (அடிமை) என்பதைச் சேர்த்துதான் வைக்க வேண்டும். அப்படித்தான் நாம் பெயர் சூட்டுகிறோம். இறைவனின் பெயரையே மனிதர்களுக்கும் வைத்துக்கொள்ள நம் மார்க்கம் அனுமதிக்கவில்லை…” என்று ஆரம்பித்து எனக்குத் தெரியாத(?) செய்திகளை எல்லாம் பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிட்டார். நான் தலையைப் பிசைந்து கொண்டிருந்தேன். நான் அவருக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டும் என்னும் கடமையுணர்ச்சி எனக்குள் உருவாகிவிட்டது. இனி அவரை வெறும் ‘தலை’யோடு அனுப்பி வைக்கக்கூடாது. நம் பங்குக்கு நாமும் அவருக்குப் புரியாத சில விஷயங்களைச் சொன்னால்தான் ஆச்சு என்று முடிவெடுத்தேன். 

“நீங்கள் சொல்வது அடிப்படையான விஷயம். ஒரு அடுக்கு உள்ளே சென்று பார்த்தால் ஷிஃப்டிங் இருப்பதைக் காணலாம்.” என்றேன். விழித்தார். என்ன சொல்ல வருகிறேன் என்பது போல் என்னைப் பார்த்தார். “அஸ்மாவுல் ஹுஸ்னா – அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள். 99 பெயர்கள், அவனின் ரட்சகத் தன்மையைச் சுட்டும் பெயர்கள். அதனுடன் நாம் அடிமை என்பதையோ அல்லது தொடர்புள்ள வேறு பெயரையோ சேர்த்துத்தான் நமக்குப் பெயர் வைத்துக்கொள்கிறோம். ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்பது இறைவனின் பெயர். அப்துர்ரஹ்மான் (ரஹ்மானின் அடிமை) என்பதும் ஹபீபுர் ரஹ்மான் (ரஹ்மானின் தோழர்) என்பதும் போன்றவை மனிதர்களின் பெயர். ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) என்பது இறைப்பெயர். அப்துர் ரஹீம் என்பது மனிதப் பெயர். சமது (தேவையற்றோன்) என்பது இறைப்பெயர். அப்துஸ் ஸமது என்பது மனிதப் பெயர். மாலிக் (ஆட்சியாளன்) என்பது இறைப் பெயர். அப்துல் மாலிக் என்பது மனிதப் பெயர். இப்படியாக 99 திருப்பெயர்களுக்கும் வைத்துக்கொள்ளலாம். இது ஒரு நிலை. ஆனால் இறைவனின் அழகிய திருநாமங்களில் சில பெயர்கள் இறைவனுக்கும் படைப்புக்களுக்கும் பொதுவானவை. அவற்றை ‘அப்து’ (அடிமை) என்று சேர்க்காமல் அப்படியே வைத்துக்கொள்ளவும் முடியும். உதாரணமாக, நூர், முஃமின், ரஷீத் போன்ற பெயர்கள். யா முஃமின், யா ரஷீத் என்று இறைவனை அழைப்பது போலவேதான் இப்போது இந்தப் பெயர்கள் வைத்த மனிதர்களையும் (அரபியில் அழைத்தால்) அழைக்க வேண்டிவரும். அதனால் அவர் இறைவனாகி விட்டார் என்று விவஸ்தை உள்ள யாரும் சொல்ல மாட்டார்கள். மனதில் என்ன நோக்கம் வைத்து அழைக்கிறோம் என்பதுதான் இங்கே உங்கள் செயலை முடிவு செய்யும். இது ஒரு உள்ளடுக்கு. இதற்கு அடுத்து இன்னொரு உள்ளடுக்கும் (inner level) இருக்கிறது” என்று சொல்லி நிறுத்தினேன். அதையும் சொல்லுங்கள் என்பது போல் அன்பர் பார்த்தார். சொன்னேன். அதைச் சொல்ல எண்ணித்தான் இந்தக் கட்டுரையைத் தட்ட ஆரம்பித்தேன். 

“ரஹ்மான், ரஹீம், கரீம், வதூத், ரஷீத், லத்தீஃப், முஃமின், முஹைமின், ஜப்பார் போன்ற இறைத்திருநாமங்களைக் கவனியுங்கள். இலக்கண ரீதியாக அவை ஆண்பால் பெயர்கள். விஷயம் திசை திரும்பிவிட வேண்டாம். பால் பகுப்பின் பால் படுவதை விட்டும் அப்பால் ஆன இறைவனுக்கு – ஐ மீன் – ஆணோ பெண்ணோ அலியோ அல்லாத இறைவனுக்கு ஏன் ஆண்பால் பெயர்கள் சொல்லப்படுகின்றன? என்று நான் கேட்க வரவில்லை. இதெல்லாம் மொழி சார்ந்த சிக்கல்கள். மொழியின் போதாமையைக் காட்டுவன. அரபி மொழியில் பெயர்ச்சொற்களுக்கே ஆண்/பெண் பால் சுட்டு உண்டு. அதன் இலக்கணம் அப்படி. அல்லாஹ் என்னும் பெயருக்கு மட்டும் பாலினச் சுட்டு இல்லை. ரஹீம் என்பது ஆண்பால் என்று சொல்லும்போது அந்தப் பெயர்ச்சொல்லே ஆண்பாலாக இருக்கிறது என்று அர்த்தமே தவிர அது சுட்டும் ஆள் ஆண்பால் என்று அர்த்தப்படாது. ரட்சகத் தன்மையைக் குறிக்கும் நாமங்களில் சில தவிர பிற எல்லாமே ஆண்பாற்பெயர்கள். (அவற்றுக்கு ஏன் பெண்பாற் பெயர்கள் இல்லை? என்பதும் கேட்க வேண்டிய கேள்விதான். தேடல் இருந்தால் விடை கிடைப்பது சாத்தியமே.) 


எனக்குத் தோன்றும் ஐயம் இதுதான் நண்பரே, இறைவனின் அழகிய திருநாமங்களை இலக்கண ரீதியாகப் பெண்பாலாக்கிப் பெண்களுக்குச் சூட்டுகிறோமே, அதன் தாத்பரியம் என்ன?” என்று கேட்டேன். கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள் என்றார்.

“சரி, உதாரணம் தந்து விளக்குகிறேன். ரஹீம் என்பது இலக்கணப்படி ஆண்பாற்பெயர் (முதக்கிர்). அது அல்லாஹ்வை குறிக்கிறது. அப்துல் ரஹீம் (ரஹீமின் அடிமை) என்பது மனிதனில் ஆணுக்குப் பெயர். ரஹீம் என்பதை இலக்கணப்படி பெண்பால் (முஅன்னஸ்) ஆக்கினால் ரஹீமா என்றாகும். இதனை முஸ்லிம் பெண்களுக்குச் சூட்டிக்கொள்கிறோம். இதே போல் பல திருநாமங்களின் பெண்பால் வடிவங்கள் பெண்களுக்குச் சூட்டப்படுகின்றன. ஆனால் அவற்றின் ஆண்பால் வடிவங்கள் ஆண்களுக்கு உரியவை அல்ல. அவை அல்லாஹ்வின் ரட்சகத் தன்மையை (ருபூபிய்யத்தை)க் குறிப்பவை. 

கரீம் என்பது இறைவனைக் குறிக்கும். அப்துல் கரீம் (கரீமின் அடிமை) என்பது ஆண்பெயர். கரீமா என்பது பெண்பெயர்.

வதூத் என்பது இறைவனைக் குறிக்கும். அப்துல் வதூத் (வதூதின் அடிமை) என்பது ஆண்பெயர். வதூதா என்பது பெண்பெயர்.

ரஷீத் என்பது இறைவனைக் குறிக்கும். அப்துல் ரஷீத் (ரஷீதின் அடிமை) என்பது ஆண்பெயர். ரஷீதா என்பது பெண்பெயர்.

லத்தீஃப் என்பது இறைவனைக் குறிக்கும். அப்துல் லத்தீஃப் (லத்தீஃபின் அடிமை) என்பது ஆண்பெயர். லத்தீஃபா என்பது பெண்பெயர்.

பெண்களும் இறைவனின் அடிமைகள்தானே? ஆனால் பாருங்கள் அப்துல் ரஹீம் அப்துல் ரஷீத் அப்துல் வதூத் போன்ற பெயர்கள் எல்லாம் ஆண்களாகிய நமக்குத்தான். பெண்களுக்கல்ல. அடிமை என்று அவர்களை அழைக்கக்கூட முடியாது! (ஆபிதா என்று தனியாகப் பெயர் வைத்து அழைத்தால் உண்டு) அவர்களானால் ரஹீமா கரீமா ரஷீதா லத்தீஃபா என்றெல்லாம் பெயர்களை வைத்துக்கொள்கிறார்கள். நாமெல்லாம் அடிமைகள். அவர்கள் ஏதோ எஜமானிகள் போல! இது ஏன்?” 

நண்பர் யோசித்தார், “அ…? அல்லாஹ்வின் பெயர்களைப் பெண்பாலாக்கி வைத்துக்கொண்டால் அது இணைவைப்பாகாதா?...” 

“ஆக மாட்டேங்குதே! அதுதான் எப்படி என்று நாம் சிந்திக்க வேண்டியது” என்று சொல்லி அவரை நல்லபடியாக அனுப்பி வைத்தேன்.

‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்கிறார் ஷேக்ஸ்பியர். அதையே கொஞ்சம் மாற்றி “பெயரில் இருப்பது என்ன?” என்று கேட்க வேண்டும். பெண்களின் பெயரில் இருப்பது என்ன என்று நீங்களும் சிந்தனை செய்யுங்கள்.