Tuesday, October 4, 2011

விளையும் பருவம்




வானமெங்கும் கொட்டிக்கிடக்கிறது அழகு
பூமியெங்கும் கொட்டிக்கிடக்கிறது அழகு

வெளியிடை எங்கும்
காற்றினும் நிறைந்துள்ளது
அழகு

அழகென்பது என்ன?
அநித்யமா? நித்யமா?
பேரறிவின் மறுபெயரா?
விகிதங்களின் விளைவா?
மாயையின் மது மயக்கா?
ஆரறிவார் அதன் யதார்த்தம்?

காற்று வாங்கி நடக்கையில்
காலெல்லாம் அப்பும்
நாயுருவி போல்
மூளைக்குள் கேள்விகள்
முட்களாய் உறுத்தும்
சாபம் கவிந்தது எக்கணம்?
யாதாகி வாய்க்கும்
விமோசனம்?

மனித மனம் தீண்டாத
புன்செய்க் காட்டில்
புற்கள் அளைத்தோடும் சிறுமி
சோப்புக் குமிழிகளைத் தீண்டுகையில்
அநித்யத்தினூடே தொடுகிறாள்
அழிவில்லாத ஆனந்தம்.

No comments:

Post a Comment