Wednesday, December 16, 2009

புழுதி படிந்த புனித நூல்



" இந்தியா எங்களுக்கு அருவருப்பூட்டுகிறது. இந்தியாவில் சுத்தமே இல்லை. எங்கள் ஊரில் ஒரு ஈ கூட இல்லை. ஒரு கொசு கூட இல்லை."
சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த உறவினரின் சிறுமகள் இப்படிச் சொன்னாள். அவளின் வயதில் அப்படிப் பார்ப்பது தவறில்லை. ஆனால் இந்த மனப்பான்மை புலம் பெயர்ந்து அயல் நாட்டில் வாழும் பெற்றோர்களால் தங்கள் பிள்ளைகளின் மனதில் உருவாக்கப்படுகிறது என்பது ஆரோக்கியமானதன்று. இது சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது.
இந்தியாவில் பிறந்து கால் நூற்றாண்டு காலம் இங்கேயே வளர்ந்து  பின்பு தொழில் நிமித்தம் வெளிநாட்டிற்குச் சென்ற ஒரு 'தமிழனின்' மனதில் தன தாய்நாடு பற்றிய பிரக்ஞை இத்தனை மோசமாக இருப்பதன் காரணம் என்ன. சுத்தம், சுத்தமின்மை என்பதைத் தாண்டி ஒரு நாட்டின் மீது செலுத்துவதற்கு வேறு பார்வை எதுவுமே இவர்களிடம் இல்லை. தன சந்ததிக்குக் கொடுப்பதற்கும் இவர்களிடம் இருப்பது இந்த ஒற்றைப் பார்வைதான். 
முப்பது வருஷங்கள் இம்மண்ணில் வளர்ந்த ஒரு மனிதனின் மனம் இந்நாட்டின் தனித்தன்மை எதனையும் உள்வாங்காமல் வெற்றுப்பாத்திரமாகவே இருந்துள்ளது. இது எப்படிச் சாத்தியம் என்பது வியப்பையே தருகிறது. அத்தனை மழுங்கிய / மழுக்கிய மூளையா? 
   பல்லாயிரம் வருட வரலாற்று மரபு
 கொண்ட நாட்டில் வளர்ந்தும் வெறுமையாக உள்ள ஒரு மனம் ஐம்பது வருட வரலாறு கூட உருப்படியாக இல்லாத ஒரு காலனியாதிக்கத் தயாரிப்பு நாடு வழங்குகின்ற ஆழமில்லாத மதிப்பீடு ஒன்றை உடனடியாகப் பெற்றுக்கொண்டு அதையே தன மேதாவிலாசமாக முன்வைக்கிறது. இது எத்தனைப் பெரிய அபத்தம் என்பது அதற்க்கு உரைப்பதில்லை. அதற்குத் தேவையெல்லாம் பகட்டுத்தனம் நிறைந்த நாகரிகம் மட்டுமே. 
சிங்கப்பூர் மட்டுமல்ல. இதுதான் வரலாற்று மரபு இல்லாத அமெரிக்கா போன்ற நவீன நாடுகள் உருவாக்கும் பார்வை. 
இந்தியா போன்ற மரபுச் செழுமை உள்ள நாடுகள் புழுதி படிந்த புனித நூல். நவீன நாடுகள் அட்டை பளபளக்க கடையில் கவர்ச்சியுடன் தொங்கும் பத்திரிக்கை ஏடுகள்.
இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது. 
இந்தியாவிற்கு 'தேசம்' என்று பெயர். 'தேசு' என்றால் ஒளி.
நாம் இம்மண்ணில் காண்பது தேசு.
சிலர் இம்மண்ணில் காண்பது தூசு.