Friday, February 25, 2011

நிதா

(சிறுகதை)

வயல்வெளி எங்கும் மந்திர நிறத்தைத் தழைய தழைய பரப்பி மேற்கின் மஞ்சத்தில் சூரியன் சாயும் ரம்மியப் பொழுது தன் கண்களின் ஈரத்தில் ஒளிர ஜன்னல் கம்பியை இறுகப் பிடித்துக்கொண்டு நின்றான் மோஹித். அவனுக்கென்று மாடியில் இருக்கும் அந்த அறை இப்போது தன்னைச் சுமந்தபடி எங்கோ வானத்தில் மிதந்துகொண்டிருப்பது போல் உணர்ந்தான்.


கீழே வாப்பா இன்னமும் சோஃபாவில் கோபமாகத்தான் அமர்ந்து கிழிக்காத குறையாக தினத்தந்தியைப் புரட்டிக் கொண்டிருக்கிறார் என்றாலும் சம்மதம் சொல்லிவிட்டார். “அந்தச் சிறுக்கி மவளயே கட்டிக்கிட்டு எக்கேடாவது கெட்டுப்போ” என்று சாபத் தொனியில்தான் அந்தச் சம்மதம் வெளிப்பட்டது. கண்ணீர்க் கேவலுடன் பிலாக்கணம் வைத்துக் கரைந்துகொண்டிருந்த அம்மாவும் அடுப்படிக்குச் சென்றுவிட்டார்கள், வாப்பாவின் மனதைப் போலவே சூடான டீ போடுவதற்கு.


’சூடுதான், ஆனால் அருமையான மணமும் சுவையும் நிச்சயம் இருக்கும். சூடாகச் சாப்பிட்டால்தான் நன்றாகவும் இருக்கும். ‘நிதா’வை நிக்காஹ் செய்து வீட்டிற்கு அழைத்துவரும்போதும் வாப்பாவிடம் இந்தக் கோபம் சூடு குறையாமல்தான் இருக்கும், இன்ஷா அல்லாஹ்! டீ க்ளாசை முதலில் கையில் எடுக்கும்போது சூடுதானே தெரியும். அதுபோலதான் வாப்பாவின் கோபமும். அப்புறம் அதிலேயே மணமும் சுவையும் தெரிந்து புத்துணர்ச்சி வருவதுபோல் வாப்பாவின் கோபத்திற்குள் உள்ள அன்பு நிறைந்த உள்மனம் நம்மை ஆதரிக்கும் சக்தியாக இருக்கும். இப்படிச் சொன்ன வாப்பா நிச்சயமாக, ’என் அம்மாவே எனக்கு மருமவளா வந்திருக்காங்க’ன்னு மெச்சத்தான் போகிறார். ‘ஒன்னுமில்லாத ஃபக்கீர் கழுத’ என்று எரிந்து விழுந்த வாப்பாவே, இந்தக் குடும்பத்திற்குக் கிடைத்த செல்வம் அவள் என்று பெருமிதம் பேசத்தான் போகிறார். ‘அவகிட்ட என்னடா இருக்கு?’ என்று கேட்டாரே. அவளிடம் என்னதான் இல்லை?’ என்று நினைத்துக்கொண்டான் மோஹித். விவாதத்தின் காரம் அவன் மனதில் குறைந்துகொண்டே வந்தது. ‘நிதா’வின் நினைவு தித்தித்தது. ஜன்னல் வழியே வந்து தழுவிச் சென்ற மக்ரிப் காற்று மனதையும் சில்லென்று கழுவிச் சென்றது. அதில் அவன் நினைவு பால்ய காலத்தில் நிற்கக் கண்டான்.




அப்போது மோஹிதுக்கு எட்டு வயது. நான்கு & ஐந்து வயது சிறுவர்களுடன் ‘மதறஸா’ சென்று அரபி ஓதிக்கொண்டிருந்தான். படிப்பில் மனம் லயிக்காத ஒரு சுட்டிப் பிசாசு போல் அவன் அந்த கிராமத்தையே தன் விளையாட்டு மைதானமாக்கி மகிழ்ச்சியாக வளர்ந்து கொண்டிருந்ததால் உலகப் படிப்பு, மார்க்கப் படிப்பு இரண்டிலும் ஆரம்பக் கோட்டிலேயே நான்கு வருஷங்களாக நின்றுகொண்டிருந்தான். ஆனாலும் உஸ்தாதுக்கு அவனைத்தான் மிகவும் பிடித்திருந்தது. “டேய் மாப்ள, நீ நம்மள மாதிரியே இருக்க. எனக்கும் அலிஃப் பே நாக்குல படியறதுக்கு ஏழு வருஷம் ஆச்சு. ஏழுங்கறது ஒரு ராசியான கணக்கு பாத்துக்க. நிச்சயம் நீ பெரீய்ய மௌலவியா வருவ” என்று அவனை ஆசிர்வதிப்பார். ஓதிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் எல்லாம் அதைக் கேட்டுக் கெக்கே பிக்கே என்று சிரிப்பார்கள். அது மட்டும் அவனுக்கு ரணமாக இருக்கும். அவன் வயதுச் சிறார் எல்லாம் குர்ஆன் ஃகத்தம் முடித்து மதறஸாவை விட்டே போய்விட்டார்கள். இவன் மட்டும் அலிஃபைத் தலைகீழாகப் போட்டாலும் அலிஃபே வருவதன் மர்மம் விளங்காமல் குழம்பியபடி இன்னமும் ஆரம்பச் சுவடியிலேயே குடைந்துகொண்டிருந்தான்.




அப்படி வாழ்க்கை ஒரு காட்டாறு போல் போய்க்கொண்டிருந்த காலத்தில்தான் ஒரு நாள் திடீரென்று ‘நிதா’ வந்து சேர்ந்தாள். அந்த ஊருக்கு, அந்த மதறஸாவிற்கு, மோஹிதின் வாழ்க்கைக்கு. தமிழ்நாட்டுப் பெண் என்று சொல்வதற்கான ஜாடையே அவளிடம் இல்லை. காஷ்மீர்காரி மாதிரி இருக்கிறாள் என்று வாப்பாவும் சொன்னார்கள். “எங்க அண்ணன் மகள்தான். பொறந்தப்பவே அம்மா மவ்த்தாப் போய்ட்டாங்க. இப்ப எங்க அண்ணனும் போயிட்டாரு. யதீமான பிள்ளை. ’ச்சச்சா’ங்கற மொறைல நாந்தே(ன்) வளக்கணும்.” என்று சொல்லி மதறஸா உஸ்தாதும் பள்ளிவாசல் இமாமுமான மவ்லவி அப்துல் வதூத் ஹஜ்ரத் ‘நிதா’வை அழைத்து வந்திருந்தார். பாவம் அவருக்கும் கலியாணமாகி இருபது வருசத்தில் பிள்ளை பாக்கியமே இல்லை.




உஸ்தாதின் செல்ல மகளாக ’நிதா’ வளரத் தொடங்கினாள். அவள் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படவில்லை. ஓதுவதற்காக மதறஸாவிற்கு மட்டும் வந்தாள். அங்கேதான் முதன் முதலாக அவளை மோஹித் பார்த்தான். அந்தக் கணம் மூர்க்கமான ஆனால் தீர்க்கமான ஒரு வாள் போல் அவனது அகவுலகை வெட்டியது. சட்டென்று ஒரு கை திரையை விலக்கி மாட விளக்கின் ஒளியை வீடெங்கும் பாய்ச்சியதுபோல் இருந்தது அவனுக்கு. ‘அலிஃப்’ என்று ஓதிக் கொண்டிருந்த அவனது வாய் பாதி பூத்த ரோஜாவைப் போல் நின்றுவிட்டது. அவன் பார்வை வியப்பான நடுக்கத்துடன் அவள் மீது அலிஃப் என்று தலைகீழாக எழுதியபோது கண்ணுக்குத் தெரியாத அலிஃபின் சுவையில் அவன் மனம் கரைந்துபோனது. தாளில் கறுப்பு நிறமாகத் தெரிந்த அலிஃப், ஒளியாலான ஓர் அலிஃபின் நிழல் போல் தோன்றியது. தன் ஷஹாதத் விரல், சுட்டியபடி அதைத் தொட்டுக் கொண்டிருப்பதையே மோஹித் இமைக்காமல் பார்த்தான். நிழல்-அலிஃப் ஒளி-அலிஃபைச் சுட்டிக் காட்டினால் ஒளி-அலிஃப் எதைச் சுட்டிக் காட்டுகிறது? என்று ஒரு வினோத எண்ணம் அவன் மனதில் ஒரு புன்னகை போல் பூத்தது. கிதாபை மூடி வைத்துவிட்டு அவன் மீண்டும் நிதாவைப் பார்த்தான். தன் மனதின் புன்னகை அவள் முகத்தில் இருப்பதாகப் பட்டது. குழப்பமா தெளிவா என்று சொல்லமுடியாத ஒரு மனநிலையுடன் அன்று வீடு திரும்பினான்.


நின்றாலும் அமர்ந்தாலும் சாய்ந்தாலும் தன் மனதின் அடியில் ஓர் ரகசிய நீரோட்டமாக ’நிதா’வின் நினைவு இருப்பதை மோஹித் சில நாட்களிலேயே கண்டுகொண்டான். அந்த நதி, மனம் என்னும் நிலத்தின் ஆழத்தில் உள்ள பாறைகளைத் தகர்த்துக் கொண்டும் மண்ணைக் கரைத்துக் கொண்டும் தன் மனதில் எப்போது ஓடத் தொடங்கியது என்று அவனால் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்தச் சிந்தனை நதி அவளின் மனதில் இருப்பதைத் தன்னிடமும் தன் மனதில் இருப்பதை அவளிடமும் யாருக்கும் தெரியாமல் சேர்த்துக் கொண்டிருக்கும் என்று அவனுக்குத் தெரிந்தது. உண்மையில், ஒரே நதியின் இரண்டு கரைகளாவே ’நிதா’வும் தானும் இருப்பதாக அவன் உணர்ந்தான்.


நாட்கள் நகர்ந்தபோது ’நிதா’வின் நினைவுகளால் மோஹிதின் கண்களில் ஒரு கனவுத்தன்மை திரை போல் கவிந்துவிட்டது. அந்தத் திரை, ஒளியை இருளுடன் பிசைந்து நெய்ததுபோல் விசித்திரமான அழகுடன் இருந்தது. எல்லா நிலைகளிலும் தனக்குள் ’நிதாவின்’ முகம், நீர்த்தடாகத்தில் பௌர்ணமியின் சாயல் ததும்புவது போல் நிறைந்திருப்பதாக மோஹித் கண்டான். தன்னுள் முன்பு விசையுடன் பாய்ந்து இயக்கிக் கொண்டிருந்த அதே சக்திதான் இப்போது தன்னைத் தன்னுள் வளைத்துக் கட்டிப்போட்டுள்ளது என்று நினைத்தான். மறைந்திருந்தது இப்போது வெளிப்பட்டு வந்து தன்னை ஆட்கொண்டுவிட்டது என்று அறிந்துகொண்டான். அது தன் மனதிற்கு என்ன சொல்கிறதோ அதையே தான் செய்ய வேண்டும் என்று எண்ணினான். அப்போது அது தன் பெயரைச் சொல்லும்படி அவன் மனதைத் தூண்டிற்று. ‘நிதா’ என்று சதா சொல்லிக் கொண்டிருப்பதில் இன்பம் இருக்கக் கண்டான்.


சிறு குழந்தை ஒன்று முதன்முதலில் எழுதத் தொடங்கும்போது எழுத அறியாமல் கிறுக்கும் அல்லது எழுத மறுக்கும். அப்போது அதன் தாய் அதன் கையைப் பிடித்துக்கொண்டு அதன் கையில் இருக்கும் பலபத்தால் ஸ்லேட்டில் எழுதுகிறாள். குழந்தையின் கையில் இப்படி அப்படி அசைவதற்கான சுய இச்சை என்பது இம்மி அளவும் இல்லை. தாய் தன்னை எப்படியெல்லாம் அசைக்கிறாளோ அப்படியெல்லாம் அது அசைகிறது. அவள் தன்னை அசைப்பதன் இன்பத்திற்கு அது தன்னை முற்றிலும் திரைகொடுத்துச் சொக்கியிருக்கிறது. குழந்தையின் கையைப் பிடித்து எழுதும் தாய் அதன் கையில் உள்ள பலபத்தால் ஸ்லேட்டில் எழுத்துக்களை எழுதுவதுபோல் வெளிப்படையில் தெரிகிறது. ஆனால் உண்மையில் அவள் அந்த அசைவுகளைக் குழந்தையின் கையில் எழுதுகிறாள். அதன் தசையில், நரம்பில், எலும்பில், ரத்தத்தில் அந்த அசைவுகளை எழுதுகிறாள். பின்பு அவள் தன் கையை எடுத்துவிட்டாலும் அந்தக் குழந்தையின் கை அப்படித்தான் அசையும். மோஹிதின் மனம் குழந்தையின் கையாக இருந்தது. ‘நிதா’வின் அசைவுகளை அது பாடம் செய்துகொண்டே இருந்தது.




உஸ்தாத் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார். ஓதுவதில் எப்போதும் நொண்டி அடிக்கும் மோஹித் இப்போது சிறகடித்துப் பறந்தான். இரண்டே நாளில் அட்சரங்களைத் தாண்டிவிட்டான். வாக்கியங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் கடந்தான். உஸ்தாத் எல்லோருக்கும் சிறு சிறு ’சூறா’க்கள் சொல்லிக் கொடுத்தார். அவற்றையும் பிறழாமல் சொன்னான். ஒவ்வொருவராக அவர் கேட்டுக் கொண்டே வருவார். மோஹிதின் முறை கடைசி. அவன் வயதால் பெரியவன் அல்லவா? எல்லாக் குழந்தைகளும் சுற்றில் தங்கள் முறை வரும் வரை கிதாபைத் திறந்து வைத்துக்கொண்டு நெட்டுருப் போட்டுக்கொண்டிருப்பார்கள். மோஹித், அவனது முறை வரும்போதுதான் வாயைத் திறப்பான். அதுவரை மௌனமாக ‘நிதா’வையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பான். சொன்னதைச் சொல்வதற்கே தடுமாறிக் குழைந்துகொண்டிருந்த ஒரு கிளிக்குஞ்சு இப்போது தீர்க்கமான பார்வை கொண்ட ராஜாளி ஆகிவிட்டது. ஆனால் அது இப்போது சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்டு ஓர் அரசியின் கைகளில் மௌனமாக அமர்ந்திருக்கிறது.


அவளது பேச்சின் அசைவு அவனது மௌனத்தில் பதிவாகிக் கொண்டிருந்தது. “மோஹித், நீ சொல்லுப்பா” என்று உஸ்தாதின் உத்தரவு வரும்போது அது அசைந்தது. எதைச் சொல்வது? என்னும் கேள்விக்கு அவன் மனதில் ஒரே ஒரு விடைதான் இருந்தது. ‘நிதா’ எதைச் சொல்வதாக அவன் அப்போது கண்டானோ அதைச் சொல்லவேண்டும் என்பதுதான் அது. சட்டென்று கண்களை மூடிக்கொள்வான். அவன் உதடுகள் அசையத் தொடங்கும். அப்படியே சூறாவைச் சொல்லிவிடுவான்.


மிகவும் தாமதமாகத்தான் உஸ்தாத அதைக் கவனித்தார். இரும்புக்கடை சிக்கந்தர் பாயின் மகன் யாசர் அராஃபத் அவருக்கு அதைச் சுட்டிக்காட்டியிருந்தான். “என்ன எப்பக் கேட்டாலும் கண்ண மூடிக்கிட்டு சொல்ற? என்ன அதபு இது? கண்ணத் தொறந்து என்னைப் பாத்துக்கிட்டே சொல்லு” என்று மோஹிதை ஒருநாள் அதட்டிக் கேட்டார். அவன் கண்களைத் திறந்து அவர் முகத்தைப் பார்த்தான். சுற்றிச் சாம்பல் நிறத்தில் அடர்ந்த தாடியுடன் உப்பியிருந்த அவரின் கறுப்பு முகத்தை ஓர் அன்னியனைப் போல் பார்த்துக்கொண்டே இருந்தான். வாய் திறக்க மறுத்துவிட்டது. வெளி விழியின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு மனம் அப்படியே உள்ளே திரும்பிவிட்டது. உள்விழியால் இப்போது மீண்டும் ‘நிதா’வின் முகத்தைப் பார்த்தான். தாயின் கையில் மீண்டும் குழந்தையின் கைகள் வசப்பட்டுவிட்டன. சூறாவை மிகத் தெளிவாக ஓதினான். முடித்தபோது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அது, பிசிறில்லாமல் ஊற்றும் தைலதாரை போல் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் மிக இயல்பாக அவன் வழியே நடந்துவிட்டது. உஸ்தாத் தன்னிடம் கோள் மூட்டிய யாசர் அராஃபத்தை அழைத்தார். எண்ணெய் தேய்த்த பிரம்பு விளாசப்போகிறது என்று பயந்துகொண்டே அவன் அவர் அருகில் வந்தான். “இங்க பாருங்க இரும்புக்கட மாப்ள, ஃபஸாது பண்றது இப்லீஸோட வேலை. அத இனிமே நீங்க செய்யாதீங்க. ஓட்டிப்புடுவேன் ஓட்டி” என்று பிரம்பால் காற்றில் வட்டம் போட்டார்.




ஆனால் நிலை அப்படியே நீடிக்கவில்லை. ஒருநாள் ’நிதா’ மதறஸாவுக்கு வரவில்லை. மோஹிதின் மனம் சட்டென்று கசந்து சுண்டிப்போனது. உஸ்தாத் ஓதிக்கொடுப்பது, சிறார்கள் கிசுகிசுப்பது எதுவுமே அவனது புலன்களில் பிடிபடவில்லை. கனிச்சோலையின் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பறவைபோல் இருப்பவன் இப்போது கூண்டில் அடைபட்ட பறவை போல் உணர்ந்தான். பேச்சின் ஊற்று அன்று கண்களுக்குக் காட்சி தராததால் அவனது வாய் முத்திரை இடப்பட்டுவிட்டது. அவனது முறை வந்தபோது உஸ்தாத் வழக்கம்போல் “ஓதுங்கத்தா” என்றார், பிரம்பைக் காற்றில் சுழித்தபடி. அவன் எப்படி ஓதுவான்? கண்ணில் வெறுமையுடன் அவரை வெறித்து நோக்கினான். “என்னங்கத்தா, இப்பிடியே ’உம்ம்’முன்னு பாத்துக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்?” என்று உஸ்தாத் அதட்டினார். மௌனம். “ஏன், ஒடம்பு கிடம்பு சரியில்லியா?” என்றார். ஆமாம் என்று தலையாட்டினான். உயிர் கொஞ்சம் துவண்டுவிட்டிருப்பதாக உணர்ந்தான். “சரி, நாளைக்கு ஓதிக்காட்டுங்க” என்று உஸ்தாத் சொல்லி அனுப்பினார்.


இந்த நிலையில் சில மாதங்கள் ஓடின. ‘நிதா’ மதறஸாவுக்கு வராத நாளில் எல்லாம் மோஹித் ஊமையாகிவிடுகிறான் என்பதை உஸ்தாத் கவனித்தார். ஒரு நாள் சில துஆக்கள் சொல்லிக் கொடுத்துவிட்டு முறையை மாற்றி ஒவ்வொருவராகக் கேட்டுக்கொண்டு வந்தார். மோஹிதின் கண்கள் ‘நிதா’வின் மேல் அவ்வப்போது பட்டுத் திரும்புவதைக் கவனித்துவிட்டார். சட்டென்று மோஹிதிடம் கேட்டார். “ம்ம்ம்.. துஆ சொல்லுங்க.” அவன் அலங்க மலங்க விழித்தான். உள்ளுக்குள் கோபம் பொங்கப் பிரம்பால் நான்கு முறை விளாசினார். அழுவான் என்று எதிர்பார்த்தார். அவன் கண்களில் மௌனமாகக் கண்ணீர் கசிய நின்றான். மறுநாள் காலை மதறஸாவில் பாடம் நடந்தபோது அவனும் இல்லை, ’நிதா’வும் இல்லை.


“சின்னப் பயலுவலோட சேர்ந்து என்னால ஓதமுடியாது. இனிமேல் நான் மதறஸாவுக்குப் போவ மாட்டேன்” என்று வீட்டில் பிடிவாதமாகச் சொல்லிவிட்டான். ‘நிதா’வும் மதறஸாவுக்கு வருவதில்லை என்றும் உஸ்தாத் அவளுக்கு வீட்டிலேயே ஓதிக் கொடுக்கிறார் என்றும் யாசர் அரஃபாத் சொல்லி அறிந்தான். கடைவீதிக்குச் செல்லும்போது, வீட்டு விஷேசங்களின் போது என்று எப்போதாவது அவளை எதார்த்தமாகப் பார்க்க முடிந்தது. தினம் தினம் தன் மனதில் பூக்கும் ரோஜாவாய் இருந்த அவளின் தரிசனம் எப்போதாவது கிடைக்கும் குறிஞ்சிப் பூவாக மாறிப்போனது. ஆனால் அவள் சூறாக்கள் ஓதுகின்ற முகமும் குரலும் அவன் ஆழ்மனதின் அடிநீரோட்டமாக இருந்தது. பாலையில் தாகத்துடன் அலையும் ஒருவன் ஆழ்கிணறு ஒன்றைக் கண்டு அதன் ஆழத்திற்குள் இறங்கிக் கைகளால் நீர் அள்ளிப் பருகுவதுபோல் அவன் தன் தனிமைப் பொழுதுகளில் ஆழ்மனதிற்குள் இறங்கி ‘நிதா’வின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பான்.


தினமும் இரவு தூங்கச் செல்லும்போது ’குல்’ சூறாக்களை ஓதிக் கைகளில் ஊதி உடம்பெல்லாம் தடவிக்கொள்ள வேண்டும் என்று மோஹிதிற்கு உஸ்தாத் சொல்லியிருந்தார். அதை அவன் வழக்கமாகச் செய்துவந்தான். தான் அவ்வாறு கட்டிலில் படுத்துப் போர்த்திக்கொண்டதும் கண்களைமூடி ஓதும்போது உண்மையில் ஓதுவது தான் அல்ல என்பதையும் தன் ஆழ்மனதில் இருந்து ‘நிதா’வே ஓதுகிறாள் என்பதையும் ஒருநாள் கண்டுகொண்டான். அவள் முகம் நீரின் ஆழத்திலிருந்து மெல்ல மேற்பரப்பிற்கு நீந்தி வரும் மீன் போல் அவன் உள்விழியின் மணியில் வந்து தோன்றும். பின் ‘குல்’ சூறாக்களை ஓதுவாள். இவ்வாறு அவளின் முகம் அவன் மனதிற்கு சூறாக்களுக்கான முகமாகவே ஆகிவிட்டது.



 பருவ காலங்கள் சுழன்று மாறிச் சென்றன. ஒரு வருடத்தின் வசந்தம் போனபின் காலத்தின் சுழற்சியில் மீண்டும் அது மறுவருடத்தில் வரத்தானே செய்கிறது? அவ்வாறு ‘நிதா’வின் முகத்தைக் காணும் தருணங்கள் அவன் வாழ்வில் வந்துகொண்டிருந்தன. தன் மனதின் நிலத்தில் நடப்பட்டு வேரூன்றி வளரும் அந்த சிறிய ரோஜாச் செடி ஒரு நாள் மலரும் என்றும் அப்போது அது தன் உலகையே நறுமணத்தால் நிறைக்கும் என்றும் மோஹித் உறுதியாக நம்பினான். சிப்பியின் உள்ளே விழுகின்ற ஒரு துகள் அந்தச் சிப்பியின் சுரப்பால் மூடப்பட்டு மூடப்பட்டு ஒரு முத்தாக ஆகிவிடுகிறது. ஒரு சிப்பியின் உள்ளே ஒரு முத்தே வந்து விழுமானால் அது என்னாகும்?


காற்றில் அடித்த ஜன்னல் பிரக்ஞையில் அறைந்ததுபோல் மோஹிதை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியது. வெளியே இருட்டியிருக்கக் கண்டான். ’எல்லோரும் சம்மதம் சொல்லிவிட்டார்கள். இன்னும் ஒரு மாதத்தில் நிக்காஹ் நடந்துவிடும். இதே அறையில் ’நிதா’ இருப்பாள். என் யுகங்களின் ஏக்கப் பொருளை, இனிய இலக்கை இறுகத் தழுவிக் கண்களை மூடிக்கொள்வேன். மீண்டும் கண்களைத் திறப்பது மறுமைநாளில்தான் என்றிருக்குமானால் அதுதான் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்று மோஹித் நினைத்துக்கொண்டான். உஸ்தாத் இது நாள் வரை தன் மீது கோபமாக இருந்திருக்கிறார் என்பதை நினைக்கவே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ’நிதா’வைத் தனக்காக பெரிய அண்ணன் அவரிடம் கேட்டபோது, “அவன் இன்னும் திருந்தவே இல்லியா? இத பாருங்க முஸ்தஃபா, அவன் ஏதோ கனவுலகத்துலயெ மெதக்குறான். இந்த புள்ள அவனுக்குச் சரிப்பட்டு வராது. மறக்குறதுதான் நல்லதுன்னு சொல்லுங்க. பின்னால வேதனைப் படக்கூடாது.” என்று சொன்னாராம். அண்ணனால் அதை நம்பவே முடியவில்லை. “அஜ்றத்தாச்சேன்னு நானும் பொறுமையாப் பேசிப்பாத்தேன். அவரு என்னமோ தான் கோடீஸ்வரன் மாதிரியும் நாம ஃபக்கீர் பயலுகங்கற மாதிரியும் பேசுறாரு. தம்பி அந்த புள்ளய மறக்குறதுதான் நமக்குக் கவுரவம்” என்று வாப்பாவிடம் சொன்னார். தன்னை மிகவும் அன்புடன் ஓத வைத்த உஸ்தாத் தன் மீது இவ்வளவு வெறுப்புக் கொள்ளும்படியாக தான் செய்த தவறு என்ன என்று எண்ணி மோஹித் சில கணங்கள் வேதனைப்பட்டான். காலத்தின் கையில் எல்லா வேதனைகளுக்கும் மருந்து உள்ளது. ‘நிதா’ இந்த வீட்டிற்கு வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்லிக்கொண்டான்.


நாற்பது நாட்கள் நகர்ந்தன. அந்த வீட்டிற்கு ‘நிதா’ வந்தாள். அம்மாவுக்கு அவளை உடனே பிடித்துப் போனது. பத்து நாட்களில் வாப்பாவும் தன் புதிய மருமகளை மெச்சத் தொடங்கினார். ஆனால் குடும்பப் பிரச்சனைகள் அலைகளைப் போன்றவை அல்லவா? ஒன்று ஓய்ந்தால் அடுத்து உடனே இன்னொன்று பாய்ந்து வரத்தானே செய்யும். அப்படி ஒரு பிரச்சனை வந்தது, மூன்று அண்ணிகளின் வடிவில். குடும்பம் நான்கானது. மோஹித் அடுத்த தெருவிற்குத் தனிக்குடித்தனம் வந்தான். குருவிக்கூடு போல் சிறியதாக இருந்த அந்த அறை அவனுக்குச் சொர்க்கமாகத் தோன்றியது. அந்த வசந்த காலத்தின் இனிமைச் சின்னமாக ‘நிதா’ ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.


ஒருநாள் மோஹித் வீட்டிலிருந்து வழக்கம்போல் கடைக்குக் கிளம்பிச் சென்றான். சமையல் கட்டில் அமர்ந்து அம்மியில் ஏதோ அரைத்துக்கொண்டிருந்த ‘நிதா’வைப் பார்த்து, “நான் கடைக்குக் கிளம்புறேன். கதவைச் சாத்திக்கப்பா. போய்ட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு, ஹாலில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தன் அன்பு மகளை ஆசையாகப் பார்த்தான். குழந்தை லேசாக உசும்பியது. “ஜு..ஜூ..ஜு” என்றான். உதட்டைப் பிதுக்கிக்கொண்டு சிணுங்கியது. அது அழுகையாக மாறும்போல் தெரிந்தது. “குட்டி அழுவுறா என்னன்னு பாரு” என்று ‘நிதா’விடம் சொல்லிக்கொண்டே வெளியேறினான். தெருவில் இறங்கி நாலைந்து வீடுகள் தள்ளிப் போயிருப்பான். மஜீத் ராவுத்தர் கொடுத்திருந்த கொள்முதல் விவரப் பேப்பரை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது ஞாபகம் வந்தது. திரும்பி வீட்டுக்கு விரைந்தான். கதவருகில் வரும்போது ‘நிதா’ தன் மகளுக்குத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. ‘குல்’ சூறாக்கள் ஓதித் தன்னை வசியம் செய்த அதே இனிமையான குரல். கேட்டுக்கொண்டே மெதுவாக வந்து கதவில் கை வைத்தான். தாழிடப்படாமல் இருந்த கதவு மெல்ல திறந்தது. அந்த இடைவெளியில் அவன் கண்ணில் பட்ட காட்சி ஒருகணம் அவன் மூச்சை நெறித்து நிறுத்திவிட்டது. சட்டென்று வெளியே ஓடினான்.


வீட்டிற்குள் வந்து படபடக்க சோஃபாவில் சாய்ந்த மகனைப் பார்த்து வாப்பா பதறிப் போனார். அம்மா அடுக்களையில் இருந்து “என் மவனுக்கு என்னாச்சு றப்பே?” என்று அலறிக்கொண்டு ஓடிவந்தார்.


”ஏன்ப்பா கடையில எதாவது தகராறா?” என்றார் வாப்பா. இல்லை என்று தலையை ஆட்டினான்.


“வீட்டுல இருந்தா வர்ற?” என்றார். ஆமாம் என்று தலையசைத்தான்.


”புள்ளெக்கு ஏதாவது?...” என்று இழுத்தார். இல்லை என்று தலை ஆடியது.


”’நிதா’வ போய் கூட்டிட்டு வாங்கம்மா” என்று அருகில் நின்றுகொண்டிருந்த மூத்த மருமகளிடம் சொன்னார். மோஹித் அவர் கையைப் பிடித்துக்கொண்டான். வேண்டாம் என்று தலை அசைந்தது. முகத்தில் வியர்த்து வழிந்துகொண்டிருந்தது. “அவ எனக்கு வேணாம் வாப்பா. தலாக் சொல்லீர்றேன். அவ எனக்கு வேணவே வேணாம்” என்று மூச்சிறைக்கச் சொன்னான். அம்மா அப்படியே வாயில் கையை வைத்துக்கொண்டு நின்றுவிட்டார். வாப்பா செல்ஃபோனில் யாருக்கோ போட்டுப் பேசினார். ஐந்து நிமிடத்தில் பெரிய அண்ணன், உஸ்தாதை அழைத்துக்கொண்டு வந்தான்.


“என்னங்க அஜ்றத்து, என் மவன் என்னமோ சொல்றான். ஒத்தக் கால்ல நின்னு ஒங்க மகள கட்டிக்கிட்டான். புள்ளயும் பொறந்திருச்சு. இப்ப தலாக் சொல்லீர்றேன் வாப்பாங்கறான். இன்னும் என்னென்ன கண்றாவியெல்லாம் இவன் கொண்டுவரப் போறானோ தெரியல” என்று வாப்பா தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்தார்.


”அவசரப் படாதீங்க ராவுத்தர். என்ன நடந்துச்சுன்னு கேப்போம்” என்றார் உஸ்தாத். அவருக்கு ஏதோ தெரிந்த கதையைக் கேட்பது போல் முகத்தில் ஒரு விலகல் தெரிந்தது. “மோஹித், இங்க பாருங்க. பதட்டப்படாதீங்க. என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க” என்றார்.


நடந்ததை மோஹித் தடுமாறித் தடுமாறிச் சொன்னான். வீட்டை விட்டுக் கடைக்குக் கிளம்பியது, திரும்பி வந்தது, கதவிடுக்கில் கண்டது எல்லாவற்றையும்.


”வீட்ல என்ன பாத்தீங்க? யாரு இருந்தா?”


“அவளும் புள்ளயும்தான்”


“சரி, உள்ளே போகவேண்டியதுதானே? தப்பா என்ன பாத்தீங்க இதுல?”


“அவ அடுப்பாங்கறையில உக்காந்து அம்மி அரச்சுக்கிட்டிருந்தா. புள்ள ஹால்ல தொட்டீல படுத்திருந்துச்சு. ஆனா அங்கிருந்தே அவ புள்ளெக்குப் பால் கொடுக்குறா. இத என் கண்ணால நான் பாத்தேன். அவ பொண்ணில்ல. பேயோ பிசாசோ என்னவோ. அவகூட என்னால ஒரு நிமிசம் இருக்க முடியாது”


மோஹிதின் கைகளும் கால்களும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவன் எதையோ பார்த்துவிட்டு மனக் குழப்பத்தில் அப்படி உளறுகிறான் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஹஜ்றத் நிதானமாகப் பேசினார்.


“அதுக்கொன்னும் கவல இல்ல மோஹித். அவ இப்ப வீட்டுல இருக்க மாட்டா. புள்ளய தூக்கிக்கிட்டுப் போயிருப்பா”


“என்னங்க அஜ்றத் சொல்றீங்க?” என்றார் வாப்பா.


“ஆமாங்க. அப்பவே நான் சொன்னேன். மறந்திடுப்பா. இந்தப் புள்ள ஒனக்கு ஒத்துவராதுன்னு. சில ரகசியங்கள் இருக்கு. அத நான் நேரம் வர்ற வரைக்கும் வெளியே சொல்லக்கூடாது. அப்படித்தான் இதுவும். ’நிதா’ மனுச இனத்த சேந்தவ இல்ல. எங்க அண்ணன் வாசிலாத்துப் பண்ணி வச்சிருந்த ஒரு ஜின்னோட மக(ள்)” என்று உஸ்தாத் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.


_____________________________________________
(குறிப்பு: இந்தக் கதையின் 'கரு'வை எனக்குச் சொன்னவர் நண்பர் மௌலவி அப்துல் லத்தீப் ரஷாதி அவர்கள்.)

இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால்.


ஃபக்கீர் – ஏழை


மதறஸா – மார்க்கக் கல்வியகம்.


உஸ்தாத் – ஆசிரியர்


அலிஃப் பே – அரபி மொழியின் ஆரம்ப எழுத்துக்கள்.


ஃகத்தம் – முடிவு, முற்றுப் பெறல்.


மவ்த் – மரணம்.


யதீம் – அனாதை.


ச்சச்சா – சிறிய தந்தை.


இமாம் – தலைவர்.


ஷஹாதத் – சாட்சி


கிதாப் – நூல்


சூறா – திருக்குர்ஆனின் அத்தியாயம்.


ஃபஸாத் – குழப்பம்.


துஆ – பிரார்த்தனை.


’குல் ’சூறா – ‘குல்’ என்னும் சொல்லுடன் ஆரம்பிக்கும் திருக்குர்ஆன் அத்தியாயங்கள்.


நிக்காஹ் – திருமணம்.


தலாக் – விவாகரத்து.


ஜின் – சாமானிய மனிதரின் கண்களுக்கு மறைந்த ஒரு படைப்பினம்.







Tuesday, February 22, 2011

பூசைக்கு வரும் காதல்



உன் ஞாபகத்தில்
மூழ்கியிருந்தேன்.
என்னைக் கலைத்தது
பாங்கோசை.

மூச்சில் வெட்டியது
காலத்தின் கையில் 
கணத்தின் வாள்.

அத்தர் அனுமானம் 
எத்தனை நாள்?
உன் சொர்க்கத்தின் 
நறுமணம் தா.

ஆசைகளின்
அழுக்கு கழுவி
பூசைக்கு வருகிறது
காதல்.

இசைக்கும் பேச்சுக்கும்
நடுவில் நிகழ்கிறது
நம் சம்பாஷனை.

இருள் திரை நீக்கினேன்
ஒளி திரையானது.
ஒளித் திரை நீக்கினேன்
இருள் திரையானது.

பிண்டத்தில்
பஞ்ச பூதங்களின்
கூத்து.

பாழில் பொங்கும்
பால் வீதிகளில்
வாலைக் காதலி
வருகிறாள் வலம்.


Tuesday, February 15, 2011

கத்திரி பாபா


(சிறுகதை)

மெயின் ரோட்டிலிருந்து இருநூறடி தூரத்தில் தீப்பெட்டிகளை அடுக்கியது போன்ற நெரிசலான எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு உள்ளே, குறுகலான பதின்மூன்று தெருக்களைத் தாண்டி அமைந்துள்ளது கத்திரி பாபாவின் தர்ஹா. பச்சை வண்ணம் பூசிய சிறிய ஆனால் அழகிய சுண்ணாம்புக் கட்டடத்தின் முகப்பில் ”ஹஸ்ரத் மஸ்தான் ஜானே அலீ காதிரி (ரஹ்)” என்று போடப்பட்டிருக்கும் பெயருக்குரிய இறைநேசர், அழியும் உலகான இந்த துன்யாவை விட்டு அழிவற்ற உலகான மேலுலகம் சென்றபோது, அதாவது அவர் மரணித்தபோது, இந்த இடத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டு தர்ஹா கட்டும் பணியை ’ட்ரிபுள் ஃபைவ்’ முகைதீன் ராவுத்தர் தொடங்கினாராம். அப்போது இந்த இடம் வயல்களுக்கு நடுவில் ஒரு மேடாக இருந்தது என்று என் தாத்தா சேத்துப்பா ராவுத்தர் சொல்லிக் கேட்டுள்ளேன்.


எனக்குத் தெரிய என் பால்ய வயது முதல் ஜானே அலீ காதிரி அவ்லியா அவர்கள் மக்களால் ’கத்திரி பாபா’ என்றுதான் அழைக்கப் படுகிறார். கத்திரி பாபா என்னும் இந்த வினோதமான பெயர் அவர்களுக்கு எப்படி வந்தது என்னும் கேள்விக்கான விடை காணும் ஆர்வம் சில ஆண்டுகளுக்கு முன், அதாவது “மம்மி” திரைப்படம் எங்கள் ஊரில் ஓடிக் கொண்டிருந்தபோது என் மனதில் உருவானது. அதற்கான முஸ்தீபுகளில் இறங்கி நான் செய்த ஆய்வில் கிடைத்த வேறு வேறு விளக்கங்களை ஒரு நோட்டில் (ஏட்டில்) எழுதிவைத்திருக்கிறேன். சரியான விடை என்னவென்றால் ’காதிரி பாபா’ என்னும் பெயர்தான் மக்களின் திருவாய்களில் மருவி ‘கத்திரி பாபா’ ஆகிவிட்டது. என்றாலும் இந்தப் பெயர் தோன்றிய வரலாறாகக் கூறப்படும் பல சம்பவங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை என்பதால் அதை நூத்தியெட்டாவது ஆளாக உங்களிடம் சொல்வதில் எனக்கு சந்தோசம்தான்.


”1940-களில் இந்த இடம் வெறும் வயக்காடாக இருந்தது. டவுனுக்குப் போகணும்னா மாட்டுவண்டிதான். குத்தகை எடுத்து விவசாயம் செஞ்ச இருபது குடும்பங்களை விட்டா இந்தப் பக்கம் வேத்து மூஞ்சிய பாக்கவே முடியாது. ஐம்பது ஏக்கராவுக்கு முதலாளியான 555 முகைதீன் ராவுத்தர் வருசத்துக்கு நாலு தடவை வருவாரு. அருவாமீசை கண்ணையா என்ன சொல்றாரோ அதுதான் அவருக்கு லா பாய்ண்ட்டு. கேட்டுக்கிட்டுக் கிளம்பிடுவாரு. “ம்..ம்.. சரிதான்… நல்லாப் பாத்துக்க” என்று சொல்லிவிட்டு வில்வண்டியில் ஏறிவிடுவார்.” என்று வெத்திலையைக் குதப்பிக் கொண்டே சொல்லத் தொடங்கினார் ரிபாய் பெரியத்தா.


“இந்தக் கதையெல்லாம் இருக்கட்டும்த்தா, கத்திரி பாபான்னு அவ்லியாக்கு எப்பிடி பேர் வந்துச்சுன்னு சொல்லுங்க?” என்றேன்.


“குறுக்க மறுக்க பேசினா எனக்கு தாட் வராது பாத்துக்க. இண்ட்ரஸ்ட் இல்லாத பயலுவகிட்ட வாய திறக்கிறதில்லேன்னு எங்க சைக்கு கையில வாதா பண்ணீருக்கேன். அத அப்பப்ப லேசா மீறுனதுக்கே செமத்தியா வுளுந்திச்சு பாவா. அதனால உன் இண்ட்ரஸ்ட் நெஜமானதான்னு சோதிச்சுத்தான் சொல்லுவேன். பொறுமையா இல்லேன்னா அஸ்ஸலாம் அலைக்கும்னுட்டு போய்கிட்டே இருப்பேன்.” என்று கோபம் பொங்க அவர் சொன்னபோது எனக்கு லேசாக பயம் வந்ததைப் பார்த்து எனக்கே கொஞ்சம் வியப்பாக இருந்தது. அப்படீன்னா இந்த மனுசன்கிட்ட உண்மையாவே விசயம் இருக்கு. அதை எப்படியாவது தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஐந்து நிமிடத்துக்கு முன்னால் ஆர்டர் செய்த (என் வீட்டில்தான்) இஞ்சி டீயை நஸ்ரின் வந்து கொடுத்துவிட்டு என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனாள். அவர் பார்வையில் “தீவட்டிப் பய” என்று அத்தா மனதார வையும் வாழ்த்து மொழிபெயர்க்கப் பட்டிருந்தது. என்னை மாதிரி ஹிஸ்டோரியனுக்கு இதெல்லாம் மெடல் இல்லையா?


இஞ்சி டீயை இரண்டு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு ரிபாய் பெரியத்தா கண்ணை மூடிக்கொண்டார். ரசிக்கிறார்! நல்ல சகுனம்தான். அவர் மனம் பூவைப் போன்றது. தானாக மலரும்வரை காத்திருக்க வேண்டும். அரை டம்ளர் டீ காலியானதும் பெரியத்தாவின் மனம் இதழ் திறந்தது.


“ஜாவிது பையா, ரொம்ப சுக்ரியாப்பா, அருமையான ச்சாய்.” என்று சொல்லி இன்னொரு உறிஞ்சு சுவைத்துவிட்டுச் சொன்னார், “அப்படீ இருந்த காலத்துல திடீர்னு ஒருநாள் இப்ப தர்ஹா இருக்கிற இடத்துக்கு மகான் வந்து சேந்தாங்க. எப்படி வந்தாங்க எங்கிருந்து வந்தாங்கன்னு எல்லாம் யாருக்கும் தெரியாது. திடீர்னு ஒருநாள் விடியறப்ப அங்க இருந்தாங்க. பச்சை தலைப்பா, வெள்ளை அபா போட்டிருந்தாங்க. ஒரு மூட்டை. அதை மரத்தடியில வச்சிட்டு ஃபஜ்ரு தொழுவுறதுக்கு வாய்க்கால்ல ஒலு செஞ்சிக்கிட்டிருந்தாங்க. அருவா மீசை கண்ணைய்யனோட மவன் செந்தில்வேலுன்னு பேரு அப்ப. யார்னு தெரியுதா?” என்று ரிபாய் பெரியத்தா நிறுத்தினார்.


“தெரியலியே பெரியத்தா…” என்று இழுத்தேன்.


“அட என்னப்பா நீ. உன் தோஸ்து அந்த மொறட்டுப் பய.., மீட்டிங்கெல்லாம் பேசுறானே…”


“அபூதாஹிரா?”




“ஆங்… அவந்தான். அவனோட அத்தா இருந்தாரே மோதீனார் உமர் பாய், அவர பின்ன யாருன்னு நெனச்ச? நான் சொல்ற செந்தில்வேலுதான். மகான் இங்க வந்தப்ப அவரு விடலப் பையனா இருந்தாரு. அவ்லியாவ முதல்ல பாத்தது அவருதான். புதுசா ஒரு மனுசன் மூட்டை முடிச்சோட வந்து இருக்கிறத பாத்துட்டு, ஒலு செஞ்சிக்கிட்டிருந்தவர்ட்ட போய் ‘யாருய்யா நீ? இங்க என்ன பண்ற?’ன்னு கேட்டிருக்கான். அப்ப அவரு சின்னப் பையன்கிறதுனால ’அவன் இவன்’னு சொல்றேன். தப்பில்லைல?... ஒலு செஞ்சிக்கிட்டிருந்த மகான் வாய திறந்து ஒன்னுமே பேசல. அப்படியே ஒரு பார்வை. சர்வ நாடியும் புடிச்சு உலுக்குனாப்ல பய வெலவெலத்துப் போய்ட்டான். ஒரு தப்படி எடுத்துவைக்க முடியல. சிலை கணக்கா நிறுத்திப்புட்டாரு. அவன் பாத்துக்கிட்டே இருக்கான். அவரு எழுந்திருச்சுப் போய் ஒரு துணிய எடுத்துத் தரையில விரிச்சு தொழுவுறாரு. கிராஅத் செஞ்சு தொழுவுறாரு. பாஷையே புதுசா இருக்கு. ஒன்னும் புரியல. ஆனா அது ஏதோ மந்திரம்னு நெனச்சிக்கிட்டே கேக்கறான். உடம்பு மனசெல்லாம் பூந்து என்னமோ செய்யுது. சுகமாவும் இருக்கு, பயமாவும் இருக்கு, அழுகையாவும் வருது. அவ்லியா தொழுது முடிச்சு சம்மணம் போட்டு உட்காந்துகிட்டு அவன ஜாடைல ‘இங்க வாடா’ன்னு கூப்பிடுறாரு. அவனால அப்பத்தான் அசையவே முடிஞ்சுது. பக்கத்துல போனான். நெஞ்சு படபடன்னு அடிக்குது. இது மனுசந்தானான்னு பாக்குறான். அவ்லியா கண்ணுல ஒரு நூரானிய்யத். அதுல அப்படியே சொக்கிப் போயிட்டான். அவன் கைல ஒரு பேரீச்சம் பழத்த கொடுக்கிறாரு. சாப்பிடுன்னு ஜாடை காட்டுறார். வாயில போட்டு மெதுவா மெல்றான். தலைய சுத்திக் கிறுகிறுன்னு வருது. அப்படியே தள்ளாடிக்கிட்டு வீடு வந்து மல்லாந்துட்டான். தோசிப்பய காலங்காத்தால எங்க போயி சரக்கு அடிச்சிட்டு வந்தான்னு கண்ணையனுக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது. கீழ கிடந்த பயல கழுத்துத் துண்ட முறுக்கி அப்படியே தூக்குறாரு. வாசன மயக்குது. இது என்னடா இது சாராயமாட்டம் இல்லியேன்னு ஒரு யோசனை. பய மூஞ்சீல தண்ணிய வாரி அடிச்சு சுதாரிக்க வச்சுக் கேட்டா இரண்டு நிமிசம் திருதிருன்னு முழிக்கிறான். முனி கினி அடிச்சுச்சா இல்ல மோகினி புடிச்சுச்சான்னு எல்லாருக்கும் பீதி கெளம்புது. வயக்காட்டுப் பக்கம் கைய காட்டுறான். “என்னடா? என்னடா?”ன்னு கேக்குறாங்க. “அல்லாஹூ அக்பர்”னு அவ்லியா தொழுவுறப்ப சொன்ன தக்பீரைச் சொல்றான். இது என்னமோ வினோதமான பேய் பிடிச்சுக்கிச்சுன்னு எல்லாருக்கும் கவலையாப் போச்சு. வாங்கடா போய் பாப்பம்னு ஆளுகள கூட்டிக்கிட்டு கண்ணைய்யா வயக்காட்டுக்கு வந்தாரு. அவ்லியாவ பாத்து அடிக்க வந்தாங்க. முடியுமா? கௌது நாயகம் வம்சமில்லியா? பக்தாதுலேர்ந்து வந்தவங்கள்ல. ஒரு நஜர்தான். நரம்பச் சுண்டி இழுத்து நிறுத்தீரும். சுறுக்கமாச் சொல்லிப்புடுறேன். அப்படி இஸ்லாத்துல வந்தவங்கதான் நம்ம ஊரு சனமெல்லாம். அப்ப அவ்லியாவுக்கு எந்தப் பேரும் கிடையாது. கண்ணைய்யாவோட புள்ள மோதீனார் உமர் பாய்தான் அவுங்களுக்கு எடுபிடி. மகான எப்படிக் கூப்பிடுறதுன்னு சனங்க கேட்டப்ப ‘பாபா’ன்னு கூப்பிடச் சொல்லிக்குடுத்தது அவருதான். அப்பலேர்ந்து அவங்கள ‘பாபா’ன்னுதான் எல்லோரும் கூப்பிட்டாங்க.”




நீண்ட கதையைச் சொல்லி முடித்து ரிபாய் பெரியத்தா முகத்தை மேலே தூக்கி ட்யூப் லைட்டைப் பார்த்தார். கண்கள் கூசவே முகத்தைத் திருப்பித் துண்டால் கண்களைக் கசக்கிக் கொண்டார். ஆர்வமாக ஒரு கேள்வி கேட்டேன் என்பதற்காகப் பெரியத்தா இப்படி வளைச்சு வளைச்சு லாடம் அடிக்கிறாரே என்று என் மனதிற்குள் நொந்துகொண்டேன். “பெரியத்தா, மாஃப் செய்யுங்க. அவ்லியாவுக்குக் ’கத்திரி பாபா’ன்னு எப்படி பேர் வந்துச்சுன்னு சொல்லுங்களேன்” என்றேன்.


“ஹஹ்ஹஹ்ஹஹ்… போரடிக்குதாக்கும். சரி, சொல்றேன். ரெண்டு வருசம் அப்படியே போச்சு. தர்ஹா இருக்கிற இடத்துல சின்னதா ஒரு கீத்துக்கொட்டாய். அதுலதான் பாபா இருந்தாங்க. 555 முகைதீன் ராவுத்தர் ஒரு தோட்டத்துல கத்திரிச் செடி போட்டிருந்தாரு. கண்ணைய்யா மேற்பார்வைலதான் அது இருந்துச்சு. என்ன காரணம்னே தெரியல, கத்திரிச் செடியெல்லாம் அப்படியே தீப்பட்டாப்ல கருகிக் கருகி விழுந்துச்சு. நாலைஞ்சு தடவை இப்படியே ஆனதும் 555 முகைதீன் ராவுத்தர் அவ்லியாக்கிட்ட வந்து ’ஏதாவது செய்யுங்க பாபா’ன்னு கேட்டுக்கிட்டாரு. அந்த எடத்த விட்டு அதுநாள் வரைக்கும் நகராத பாபா அன்னிக்குத்தான் எந்திருச்சு கத்திரித் தோட்டத்துக்கு வந்தாங்க. வாய்க்கால்ல ஒலு செஞ்சாங்க. மூனு தடவ தண்ணிய கொப்புளிச்சுக் கத்திரித் தோட்டத்துல துப்புனாங்க. அதுக்கப்புறம் பாக்கணுமே வெளச்சல. கராமத்தான நெலமாப் போச்சு அது. அதுலேர்ந்துதான் பாபாவை எல்லாரும் ’கத்திரி பாபா’ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க.”


இதைக் கேட்டதும் எனக்கு லேசாகச் சிரிப்பு வந்தது. அவ்வளவு கராமத்தான அவ்லியாவுக்கு இது ஃபிட்டிங்கான கிளைமாக்ஸாப் படல. அஜானுபாகுவான மல்யுத்த வீரன் ஒருவன் என்னைப் பார்த்துப் பத்து நிமிடங்கள் முறைத்துவிட்டு ‘வாடா டேய்’ என்று பெண் குரலில் கூப்பிட்டதைப் போல் இருந்தது. நான் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டதைப் பார்த்த ரிபாய் பெரியத்தா, “ஏன்? என்ன?” என்பதுபோல் பார்த்தார். கிளைமாக்ஸ் சொதப்பலாக இருப்பதைச் சொன்னேன். “அடப் போப்பா நீ வேற, பிஜ்ஜா சாப்புடற பயலுக்கெல்லாம் கத்திரிக் கதை சிரிப்பாத்தான் இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து சலாம் சொல்லிவிட்டு நடையைக் கட்டினார். இந்த மனுசங்ககிட்ட ஹிஸ்டரியை விட மிஸ்டரிதான் அதிகமா இருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.


மறுநாள் மதியம் யாசீன் டீக்கடையில் அபூதாஹிரைப் பார்த்தேன். அவனுடைய வம்ச சரித்திரத்தை விசாரித்தேன். அவ்லியா என்றாலே அவனுக்கு அலர்ஜி. இதில் செந்தில்வேல் மோதீனார் ஆன கதை அவனை எப்படிக் கவரும்? உடனே மூஞ்சி சிவந்துவிட்டது. “இந்த டுபாக்கூர் அவ்லியாவ பத்தி என்கிட்ட கேளு மாப்ள சொல்றேன். இவன் பேரும் தெரியாது ஊரும் தெரியாது. எங்கிருந்தோ சுட்டுக்கிட்டு வந்த துரு புடிச்ச கத்திரிக்கோல கையில வச்சிக்கிட்டு வர்றவன் போறவனை எல்லாம் மெறட்டி காசு பறிச்ச திருட்டுப் பய இவன். கத்திரிக்கோல் திருடன்னு அந்தக் காலத்துல பார்ட்டி ரொம்ப ஃபேமஸ். அப்புறம் போலீசுல மாட்டிக்கிட்டு வேலூர்ல கம்பி எண்ணியிருக்கு. ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு ஆள் எங்க போச்சுன்னு தெரியல. யாரு கண்ணுலயும் படல. அப்புறம் ஒரு நாள் திடீர்னு தாடி கீடில்லாம் வச்சுக்கிட்டு, தாயத்து போடுறேன்னு நாலு ஆளுகள சேத்துக்கிட்டு இங்க வந்து டேறா போட்டாச்சு. மடப்பயலுவ திருட்டுப்பயன்னு பாக்காம கத்திரிக்கோல் பாபான்னு கால்ல உளுந்துட்டானுங்க. அதுதான் அப்புறம் கத்திரி பாபா ஆயிடுச்சு.” என்று பொரிந்து தள்ளிவிட்டான்.


“கத்திரி பாபா” என்ற பெயரின் பின்னணி ஆராய்ச்சியாக என் நோட்டில் இரண்டு தகவல்களையும் அன்று இரவு எழுதிவைத்தேன். வரலாற்றில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மறுநாள் முக்கியமான ஒருவரைச் சந்தித்தேன். தர்ஹாவின் முத்தவல்லியாக இருக்கும், சில்க் ஜிப்பாவில் மிகவும் ஒல்லியாக இருக்கும் அல்தாஃப் ஹுசைன் காதிரி.


தர்ஹா டிரஸ்டியின் வீட்டுக்கு நான் சென்றபோது அவர் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு பாடலை அல்லது மாடலை ரசித்துக்கொண்டிருந்தார். கரடி போல் நான் வந்து சேர்ந்தது பிடிக்காமலேயே பதில் சலாம் கூறி “வாங்க தம்பி, உட்காருங்க” என்று மர-நாற்காலியைக் காட்டினார். நான் அமர்ந்துகொண்டு விசயத்தைச் சொன்னேன்.


“நீங்க காதைக் கொடுக்குறீங்கனு நல்லா ரீல் சுத்தீருக்கானுங்க தம்பி. நல்ல வேளை என்கிட்ட வந்தீங்க. ஹக்கான விசயத்தை நான் சொல்றேன். அவ்லியாவோட லஃனத்து புடிச்சவனுங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டு அலையாதீங்க.” என்று சுறுக்கமாக ஒரு பீடிகை போட்டு முடித்தார்.


”சரிங்கஜி, நீங்க சொல்லுங்க” என்றேன்.


“அவ்லியாவோட உண்மையான பேரு ஹஸ்ரத் மஸ்தான் ஜானே அலீ காதிரி (ரஹ்)-ங்கறதுதான். அவுங்க மறைஞ்சு தர்ஹா கட்டினதுக்கப்புறமும் அதே பேருதான் இருந்திச்சு. அப்புறம் சரியா எனக்கு ஏழு வயசா இருக்கைல பாபா ஒரு கராமத் செஞ்சாங்க. அது என்னன்னா ஒவ்வொரு தர்ஹாவுலயும் வருசத்துக்கு ஒரு தடவைதான் உரூஸ் கந்தூரி நடத்துறது வழக்கம். அப்ப பாபா எங்க வாப்பா கனவுல வந்து, ‘அரே கௌஸ் பாய், உலகத்துல உள்ள எல்லா அவ்லியாக்களும் நானேதான். அதுனால எல்லா அவ்லியாக்களையும் இந்த வருசம் கண்ணியப் படுத்துற விதமா வருசம் பூரா கந்தூரி நடத்தணும்’ அப்படீன்னு சொல்லிட்டாங்க. எங்க வாப்பாதான் அப்ப முத்தவல்லி. வருசம் முச்சூடும் கந்தூரி நடத்தணும்னா அதுக்குப் பைசா ரொம்ப ஆகுமே, என்ன செய்யறதுன்னு வாப்பா ரொம்ப கவலைப்பட்டாங்க. எங்க அம்மீக்கு அவ்லியாமேல அக்கீதா ஜாஸ்தி. ’பாபா பாத்துக்குவாங்க. நீங்க கவலைப் படாம செய்யுங்க’ன்னு என் வாப்பாட்ட ஆறுதல் சொன்னாங்க. சொன்ன மாதிரியே, அந்த வருசம் பூரா மிஸ்கீன், ஃபக்கீர்சா, தர்வேஸ்னு ஒரே கூட்டம். அத்தினிப் பேருக்கும் குஸ்கா என்ன சால்னா என்ன, கந்தூரி ஜமாய்க்குது. பாபாவோட தர்பாருக்கு மினிஸ்டர்கள்லாம் வந்தாங்க. ஆற்காட்டு நவாப் வந்து சுத்தி இருந்த இடத்தையெல்லாம் வாங்கி தர்ஹாவுக்கு எழுதி வச்சாங்க. அந்த வருசம் பூரா துட்டு வந்து கொட்டிக்கிட்டே இருந்துச்சு. திடீர்னு ராத்திரி ஒருத்தர் வருவாரு, அவ்லியாவ ஜியாரத் செய்யணும்பாரு. கட்டா எடுத்து பத்தாயிரம் ரூபா கொடுத்துட்டுக் கிளம்புவாரு. ‘சாஹேப் ஆப் கோன்?’-னுன்னு கேட்டா “துர்க்கி சே ஆத்தா ஹூ(ன்)”-ன்னு சொல்லிட்டுப் போவாரு. இந்த மாதிரி வருசம் பூரா ஒரே அஜீபுதான். அப்பதான் அவ்லியாவ எல்லாரும் ‘கந்தூரி பாபா’ன்னு சொல்ல ஆரம்பிச்சது. அது அப்படியே இப்லீஸ் புடிச்சவனுங்க வாயில மாறி கத்திரி பாபா ஆயிடுச்சு.” என்று தன் பங்குக்கான வரலாற்றைச் சொல்லி முடித்தார் அல்தாஃப் ஹுசைன் காதிரி.




“தம்பீ, பாபாவோட வரலாற நீங்க புஸ்தகமா எழுதுங்க.” என்றார். நான் தலையாட்டிவிட்டுக் கிளம்பினேன். கத்திரித்தோட்ட பாபா, கத்திரிக்கோல் பாபா, கந்தூரி பாபா என்று மூன்று ஆப்ஷன்கள் என் முன் சிரித்தன. உண்மை என்னுடன் கண்ணாமூச்சி ஆடுவதாக உணர்ந்தேன். இதெல்லாம் சரிப்பட்டு வராது, பாபாவின் ரூஹானி தீட்சை பெற்றவர் என்று சொல்லப்படும் நானா சாஹிப் அவர்களைப் போய் பார்ப்பது என்று முடிவு செய்தேன். நானா சாஹிப் என்றாலே ஊருக்குள் பலருக்குப் பயம். ஜின்னுகள ஏவிவிட்டுப் பணம் பறிக்கிறவருன்னு ஒரு பேச்சு இருக்கு. “ஜின்னுகள ஏவிப் பொண்ணுகள வசியம் பண்றான்யா அந்த …….” என்று சொல்வான் நௌஷாத் அலீ. ஆனால் இந்தியா முழுவதும் இருந்து அவ்வப்போது பெரிய பெரிய கார்கள் வந்து நானே சாஹிபின் வாசலில் காத்துக்கிடப்பதை என் கண்களால் பார்த்திருக்கிறேன். ’விசயம் இல்லாத மனுசன்கிட்டயா இப்படி வந்து உளுவுறானுங்க. நல்லதோ கெட்டதோ, ஆனால் யாருகிட்டயும் இல்லாத ’ஃகாஸான’ எதுவோ ஒன்னு இவருகிட்ட இருக்கு’ என்று மனதிற்குள் நான் சொல்லிக்கொண்டதுண்டு. அன்று இரவே அவரைப் பார்க்கச் சென்றேன்.


நானா சாஹிப் வீட்டில் அன்று விருந்தினர் யாருமில்லை. நான்கைந்து சீடர்கள் மட்டும் இருந்தார்கள். கைலி மட்டும் கட்ட்கிக்கொண்டு மாமிச மலைபோல் கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தார் நானா சாஹிப். யார் என்று என்னை விசாரித்தார். வந்த விசயத்தையும் சேர்த்துச் சொன்னேன். கண்களை மூடி ஏதோ ஓதினார். திடீரென்று ஓங்காரமாக “யா ஹய்யுல் கய்யூம்” என்று முழங்கினார். தீர்க்கமான பார்வையால் என்னைப் பார்த்தார்.


“தம்பீ, இது ஒன்னும் பெரிய விசயமில்ல. லைலத்துல் கத்ரு ராத்திரிக்கு என்ன செய்வீங்க?”


“பள்ளிவாசலுக்குப் போய் தொழுவேன் ஹஸ்ரத்”


“வர்ர ரம்ஜானுக்கு ஒன்னு செய்யுங்க. லைலத்துல் கத்ரு அன்னிக்கு தர்ஹா பக்கம் ஒரு ஈ காக்கா இருக்கிறதில்ல தெரியுமா? பாபா காலத்தில இருந்தே அப்படித்தான். அன்னிக்கு ராத்திரி அங்க போய் தங்குனவங்க எல்லாம் பைத்தியம் பிடிச்சு அலைஞ்சாங்க. இந்தா, இவனோட அண்ணனுக்கு அப்படித்தான் ஆச்சு” என்று தன் கையை ஒரு சீடனின் பக்கம் காட்டினார். அவன் பயத்துடன் நெளிந்தான். “அதுக்குக் காரணம் என்னன்னா முறையான தயாரிப்பு இல்லேங்குறதுதான். லைலத்துல் கத்ரு ராத்திரிக்கு அவ்லியாவோட தர்பார்ல ஜிக்கிர் மஜ்லிஸ் நடக்குது. ஜின்னுகள் கலந்துக்கிற கூட்டம் அது. முடிஞ்சா நீங்களும் கலந்துக்கங்க. உங்களுக்கு நசீப் இருந்தா ஒன்னு ரெண்டு ஜின்னுகள பாக்கலாம். கொள்ள அளகா இருப்பாங்க. பயந்தீங்கன்னா மூளை பெறண்டுரும். பாத்துக்குங்க. இதுனாலதான் பாபாவுக்கு ‘கத்ரி பாபா’ன்னு பேரு. அதை ஜனங்க வாய்ல கத்திரி பாபான்னு ஆக்கிட்டாங்க. சில உண்மைகள மறைச்சுத்தான் ஆகணும் இல்லியா?” என்றார்.




இந்த விளக்கத்தில் எனக்கு ஒரு திருப்தி வந்தது. ஏனென்றால் இதில் ஒரு சவால் இருந்தது. ரம்ஜானுக்காக இரண்டு மாதங்கள் காத்திருந்தேன். லைலத்துல் கத்ரு இரவு வந்தது. நண்பர்களிடம் சொல்லிப் பார்த்தேன். “எதுக்குடா ஒனக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்? அந்த ஃப்ராடுப்பய சொல்றான்னு கேட்டுக்கிட்டு வந்து எங்கள்ட்ட வேற சொல்ற…” என்று நொந்துகொண்டார்கள்.


அன்று இரவு வீட்டில் சொல்லிக்காமல் தர்ஹாவுக்குச் சென்றேன்.


காலை பதினோரு மணிக்கு எழுந்து குளித்துவிட்டுக் கடைவீதி பக்கம் நடந்தேன். என் ஜமா நௌஷாத்தின் வீட்டில் இருந்தது. “வாங்க மாப்ள, நைட்டு தர்ஹாவுக்குப் போயிருந்தீங்க போல? ஜின்ன கின்ன பாத்தீங்களா?” என்றான் அபூதாஹிர். “அட போங்கப்பா, எல்லாம் வெறும் கப்சா” என்று சொல்லிக்கொண்டே முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன், மனதில் பொங்கித் ததும்பும் மகிழ்ச்சி என் புன்னகை வழியே கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில்.


___________________________________________________


துன்யா – உலகம்.


அவ்லியா / ஔலியா / ஒலியுல்லா / வலியுல்லா – இறைநேசர்.


சைக்கு – ஷைக் என்பதன் மருவிய வடிவம். குருநாதர்.


வாதா – வாக்குறுதி.


சுக்ரிய்யா – ஷுக்ரிய்யா. நன்றி.


அபா – மேலங்கி


ஒலு – தொழுகை முதலிய வழிபாடுகளுக்காக முகம் கைகள் கால்கள ஆகியவற்றைக் கழுவும் முறை.


மோதீனார் (முஅத்தின்) – பள்ளிவாசலில் தொழுகைக்குப் ‘பாங்கு’ என்னும் அழைப்பு கூறுபவர்.


கிராஅத் – திருக்குர்ஆனை முறைப்படி இனிய தொனியில் ஓதுதல்.


நூரானிய்யத் – தேஜோமயம் , ஒளிமயம்.


நஜர் – பார்வை.


மாஃப் (முஆஃப்) – மன்னிப்பு.


கராமத் – இறைநேசர்களின் வழியே வெளிப்படும் அற்புதச் செயல்கள்.


ஹக் – உண்மை, சத்தியம்.


லஃனத் – சாபம்.


உரூஸ் கந்தூரி – தர்ஹாக்களில் விருந்துடன் நடக்கும் வருட வைபவம்.


அம்மீ – அம்மா.


அக்கீதா – கொள்கை, நம்பிக்கை.


ஃபக்கீர்சா – ஃபக்கீர்ஷா. துறவிகள்.


தர்வேஸ் – தர்வேஷ். நாடோடி ஞானிகள்., சூஃபிகள்.


ஜியாரத் – விசிட். விஜயம், சந்திப்பு.


அஜீபு – அதிசயம்.


இப்லீஸ் – சாத்தான்.


ரூஹானி – ஆத்மார்த்தம்.


ஜின் – அரூபமான ஒரு படைப்பினம்.


ஃகாஸ் – விசேஷம், சிறந்த.


லைலத்துல் கத்ரு – மகத்தான இரவு. ரம்ஜான் மாதத்தின் 27-ஆம் இரவு.


ஜிக்கிர் மஜ்லிஸ் – தியான சபை.


நசீப் – கொடுப்பினை, ப்ராப்தம்.


Saturday, February 12, 2011

தானாக வளரும் புல்



”வர வர சோம்பேறித்தனம் அதிகமாயிட்டே வருது. இந்த நிலைமைய மாத்துறதுக்கு என்ன செய்யலாம்?” என்று என்னிடம் கேட்டார் ஒரு நண்பர்.

”நல்ல ஆளாப் பாத்துக் கேட்டீங்களே...” என்று என் மனதில் நினைத்துக் கொண்டே சிரித்தேன். சில கணங்கள் யோசித்துவிட்டு அவரிடம் சொன்னேன்: “சோம்பேறிகளிடம் ஒரு தகுதி இருக்கிறது. இறைவன்தான் செயல்படுகிறான் என்பதற்கு அவர்கள் அத்தாட்சியாக இருக்கிறார்கள்!”

இந்தக் கருத்து என் நண்பருக்கு மிகவும் வித்தியாசமாகவும் ஆறுதல் அளிப்பதாகவும் இருந்திருக்க வேண்டும். மனதின் சுமை இறங்கிவிட்டது போல் மிகவும் ரசித்துச் சிரித்தார். நான் இந்தப் பாய்ண்ட்டை மேலும் விளக்கினேன்: “நான் அதைச் செய்தேன், நான் இதைச் செய்தேன், நான்தான் செய்கிறேன், என்னால்தான் நடந்தது என்றெல்லாம் நினைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக இருப்பதைவிட ‘நான்’ என்பது இல்லாமல் சோம்பேறியாக இருப்பது மேலானது, நல்லது. இப்படி ஒரு பார்வை சூஃபிகளிடம் இருக்கிறது.”

‘சோம்பேறிப்பயல்’ என்று பட்டம் வாங்கிக் கட்டிக்கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! சோம்பேறித்தனம் என்பதும்கூட ஒரு வீரியமான மூலதனம்தான். அது உங்களிடம் இருக்கிறது. அதை வீணாக்கிவிடாதீர்கள். இது எதற்குப் பயன்படப் போகிறது என்று அபத்தமாகச் சிந்தித்து அதைத் தூக்கி எறிந்துவிடாதீர்கள். கோடானு மில்லியன் டாலர்கள் கொடுக்க முடியாத ஒன்றை அதனால் அடைய முடியும்! அதனால் மட்டுமே என்றுகூடச் சொல்லலாம்!



அதை ஓஷோ தன் “வெற்றுப் படகு” என்னும் தாவோ ஞான விளக்க நூலில் மிக அருமையாக இப்படிச் சொல்கிறார்: “சுவாங்தஸு மிகவும் வலியுருத்துகிறார். விழிப்பாக இருங்கள், மிகவும் பயனுள்ளவராக இருக்காதீர்கள். இல்லையெனில் மக்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். பிறகு உங்களைக் கையாள, நிர்வகிக்கத் தொடங்கி விடுவார்கள். பிறகு உங்களுக்குத் தொந்தரவுதான். உங்களால் பலன் கொடுக்க முடிகிறது என்றால் உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் பலன் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தப் படுவீர்கள். உங்களால் சில குறிப்பிட்டவற்றைச் செய்ய முடிகிறது என்றால், திறமையுடையவராக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வீணாக்கப்பட முடியாது. அவர் சொல்கிறார், பயனற்ற தன்மை தனக்கே உரிய இயல்பான சில பயன்களையும் பெற்றுள்ளது. நீங்கள் அடுத்தவர்களுக்குப் பயனுள்ளவர்களாய் இருக்க முடிந்தால் பிறகு நீங்கள் அடுத்தவருக்காக வாழ வேண்டும். பயனற்றிருந்தால் யாரும் உங்களைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள், உங்கள் இருத்தலையே யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். சந்தைப் பகுதியில்கூட நீங்கள் இமயமலையில் இருப்பதைப் போல் வாழ்வீர்கள். அந்தத் தனிமையில் நீங்கள் வளர்வீர்கள். உங்கள் முழுச் சக்தியும் உள்நோக்கிச் செல்லும்!”



இந்த விளக்கத்தைப் படித்த என் கல்லூரி நாட்களில் உண்மையில் நான் மாபெரும் உதவாக்கரையாகத்தான் இருந்தேன். யாரும் என்னிடம் வேலை சொல்லத் தயங்குவார்கள். அதற்கென்று உதவும்கரைகள் பலர் இருந்தார்கள். இயல்பிலேயே ஒரு விலகல்தன்மை என்னிடம் இருந்தது. ஆனால் என் நேரம் என்னிடம் இருந்தது! நான் அதைச் சுவைத்துக் கொண்டிருந்தேன். “நானே காலமாக இருக்கிறேன்” என்று இறைவன் சொல்வதாக ஒரு ஹதீஸ் குத்ஸி உள்ளது. எனவே என் தனிமையில் நான் இறைவனின் சுவையை அறிந்துகொண்டேன் என்று கூறலாம்!



அதே காலகட்டத்தில் நான் படித்த ஒரு அற்புதமான நூல் “THE ESSENTIAL RUMI”. மௌலானா ரூமியின் சூஃபி மகாகாவியமான ’மஸ்னவி’யில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பல க(வி)தைகளின் தொகுப்பு. அதிலிருந்து ஒரு கதையை உங்களுக்குக் கூறுகிறேன்.

“மரணப் படுக்கையில் கிடந்த ஒரு மனிதர் தன் செல்வங்களைத் தன் மூன்று மகன்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது எப்படி என்று நினைத்துக் கொண்டிருந்தார். தன் முழு வாழ்வையும் அந்த மூன்று மகன்களுக்குள் வைத்திருந்த தந்தை அவர். அந்த மூவரும் அவரைச் சுற்றி சைப்ரஸ் மரங்களைப் போல் நின்றார்கள், உயரமாகவும் உறுதியாகவும்.

நகர நீதிபதி வந்திருந்தார். அவரிடம் அந்தத் தந்தை சொன்னார், “என் மகன்களில் எவன் மிகவும் சோம்பேறியோ அவனுக்கே முழு சொத்தையும் கொடுத்துவிடுங்கள்.” இவ்வாறு கூறிவிட்டு அவர் இறுதியாகக் கண்களை மூடிக்கொண்டார்.

நீதிபதி அந்த மூன்று சகோதரர்களின் பக்கம் திரும்பினார். “நீங்கள் மூவரும் உங்களுடைய சோம்பேறித்தனத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். நீங்கள் எவ்வளவு சோம்பேறிகள் என்பதை நான் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று சொன்னார்.

ஞானிகள் சோம்பேறித்தனத்தில் நிபுணர்கள்! அவர்கள் அதைச் சார்ந்திருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் அவர்களைச் சுற்றிலும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். உண்மையில் இறைவனே செயல்படுபவன் (ஃபாயிலே ஹகீகி). அவர்கள் நிலத்தை உழுவதே இல்லை. ஆனால் அறுவடை வீடு வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறது!

“வாருங்கள், நீங்கள் எப்படிப்பட்ட சோம்பேறிகள் என்பதை எனக்குச் சொல்லுங்கள்.”

உச்சரிக்கப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உள்மனதின் மீதான திரையாகும். அந்தத் திரையில் லேசான ஒரு சிடுக்கு, பொறித்த கறியின் ஒரு இழை அளவு மட்டுமே, அதன் வழியே ஆயிரம் சூரியன்கள் வெடித்து வருகின்றன. சொல்லப்படுவது அபத்தமாகவும் தவறாகவும்கூட இருக்கலாம். கேட்பவன் அதன் ஊற்றுக்கண்ணைப் புரிந்துகொள்கிறான். பூங்காவிலிருந்து ஒரு தென்றல் வீசுகிறது. சாம்பல் மேட்டிலிருந்து இன்னொன்று. நரியின் குரலும் சிங்கத்தின் குரலும் எப்படி வேறுபட்டுள்ளன என்பதைப் பார். அவை உனக்குச் சொல்லும் சேதியும்.

அடுப்பின் மீதுள்ள பானையின் மூடியை ஒருவர் திறக்கும் சத்தம் உனக்குச் சொல்லிவிடும் இன்றிரவு என்ன உணவு என்று. இன்னும் சிலர் நீராவியின் வாசத்திலிருந்தே தெரிந்துகொள்கிறார்கள், காடி ஊற்றிக் காய்ச்சப்பட்ட காரமான சூப்பை!

பானை வாங்கும் மனிதன் அதனைத் தட்டிப் பார்க்கிறான், அதன் சத்தத்தை வைத்து அதில் விரிசல் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள.

அந்த மூன்று சகோதரர்களில் மூத்தவன் நீதிபதியிடம் சொன்னான், “ஒரு மனிதனை அவன் குரலில் இருந்து நான் கண்டுகொள்வேன். ஒருவேளை அவன் பேசவில்லை என்றால் மூன்று நாட்கள் காத்திருப்பேன். அப்போது அவனை என் உள்ளுணர்வால் தெரிந்துகொள்வேன்.”

இரண்டாம் மகன் சொன்னான், “அவன் பேசும்போது அவனை நான் அறிவேன். அவன் பேசவில்லை என்றால் நானாக அவனிடம் பேச்சு கொடுப்பேன்.”

அந்த நீதிபதி கேட்டார், “இந்த ட்ரிக் அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால்?”

எனக்கொன்று ஞாபகம் வருகிறது. ஒரு தாய் தன் பிள்ளையிடம் சொன்னாள், “இடுகாட்டின் வழியாக நீ இரவில் தனியாக நடந்து செல்லும்போது பேய் வந்து நின்றால் அதைப் பார்த்து ‘ச்சூ ச்சூ’ என்று விரட்டு. பேய் மாயமாய் மறைந்துவிடும்.” அந்தப் பிள்ளை தன் தாயிடம் கேட்டது, “அம்மா, அந்தப் பேயின் அம்மாவும் அதற்கு இந்த ட்ரிக்கைச் சொல்லிக் கொடுத்திருந்தால் நான் என்ன செய்வது? பேய்களுக்கும் தாய்கள் உண்டே!” அருமையான கேள்வி!

இரண்டாம் சகோதரனால் இதற்கு விடை கூற இயலவில்லை.

நீதிபதி இளைய சகோதரனிடம் கேட்டார், “ஒரு மனிதனைப் பேசவைக்கவே முடியவில்லை என்றால் என்ன செய்வது? அவனுடைய சுபாவத்தை எப்படி நீ அறிவாய்?”

“நான் அவன் முன் மௌனமாக அமர்ந்திருப்பேன். பொறுமை என்னும் ஏணியைச் சாத்தி வைப்பேன். அவனுடைய முன்னிலையில் இன்பத்தையும் துன்பத்தையும் கடந்த ஒரு பேச்சு என் மனதிலிருந்து பொங்கத் தொடங்கினால் அவனுடைய ஆன்மா யமன் தேசத்தின் மீது எழும் நட்சத்திரத்தைப் போல் பிராகசமானதும் ஆழமானதும் ஆகும் என்று அறிந்துகொள்வேன். அதுபோல், வலதுகரம் போன்ற வலிமையான வார்த்தைகளை நான் சரளமாகப் பேசும்போது, நான் என்ன பேசுகிறேன் என்பதில் இருந்தும், அதை எப்படிப் பேசுகிறேன் என்பதில் இருந்தும் அவனை அறிந்துகொள்வேன். ஏனெனில் எங்களுக்கிடையில் எங்களது ஆன்மாக்களின் இரவுக் காற்று வீசும்படி ஒரு ஜன்னல் திறந்துள்ளது!”

நிச்சயமாக, இந்த இளைய சகோதரந்தான் மகா சோம்பேறி. அவனே வெற்றிபெற்றான்.”

சோம்பேறியாக இருங்கள் என்று ஊக்கப்படுத்துவது அபத்தமாக இல்லையா? என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் சுறுசுறுப்பும் சோம்பேறித்தனமும் ஒரு கழியின் இரண்டு முனைகள் போன்றவை. வாழ்க்கை என்னும் கழைக்கூத்தில் கயிற்றின்மீது நடப்பவன் இரண்டையும் சமன்படுத்த வேண்டும். சுறுசுறுப்பாக இருங்கள் என்று அறிவுரை சொல்லிச் சொல்லி இன்று அது ஒரு நோயாகவே ஆகிவிட்டது. ஓர் அவசரகதி கவிந்து வாழ்க்கையின் இயல்பான அழகையே கெடுத்துவைத்துள்ளது. “உலகம் எங்கோ போய்க்கொண்டுள்ளது. எனவே நாம் ஒரு கணமும் தாமதிக்க முடியாது.” என்று எல்லோரும் ஓடுகிறார்கள். உலகம் எங்கே செல்கிறது என்று யோசிக்க ஒருவரும் தயாராக இல்லை. செயல்பட்டால்தான் எதுவும் நடக்கும் என்று ஒரு தப்பான புரிதல் நம் மூளையை ஆக்கிரமித்துக் கொண்டதால், இயற்கை அமைப்பில் எதுவும் செய்யாமலே நடக்கக் கூடிய பல அழகான விசயங்களை, கொடுத்து வைத்த விசயங்களை நாம் செயற்கையாக்கிக் கெடுத்து வைத்துள்ளோம். சுறுசுறுப்பிற்கு நாம் மிக மிக அதிகமான விலை கொடுத்துவிட்டோம்.

கெடுதிகள் செய்யும் சுறுசுறுப்பை விட நன்மைகள் தரும் சோம்பேறித்தனமே நமக்குத் தேவை. சோம்பேறித்தனத்திற்காக வாதாட ஆரம்பித்த நான் அதனைக் கொண்டு வாழ்வின் லட்சியத்தையே அடைய முடியும் என்று சொன்னேன். அது என்ன என்று சொல்லிவிடுகிறேன். ஆபிரகாம் மாஸ்லோ என்னும் உளவியல் அறிஞர் மனிதனின் தேவைகளைப் பல அடுக்குகள் கொண்ட ஒரு முக்கோணமாகக் கட்டமைத்தார். அதில் கீழ் நிலைத் தேவைகள் எல்லோருக்கும் அடிப்படையானவை என்றும் அடுத்தடுத்து மேல் நிலைகளில் உள்ள தேவைகளை குறைந்த நபர்களே அடைகிறார்கள் என்றும் சொன்னார். உண்வு, உடை, உறையுள், காமம் போன்ற உடல் சார்ந்த தேவைகள் அனைவருக்கும் அடிப்படையானவை. சமூக அந்தஸ்த்து, செல்வம் போன்ற தேவைகள் இடையில் உள்ளன. முக்கோணத்தின் சிகரமுனையில் உள்ள தேவை, மனிதனின் உச்சபட்சமான தேவை “தன்னை அறிதல்” (SELF-REALIZATION / SELF - ACTUALIZATION) என்று ஆபிரகாம் மாஸ்லோ குறிப்பிட்டார்.



இந்தத் ’தன்னையறிதல்’ என்பதைத்தான் சூஃபிஸம் போன்ற ஞான வழிகளில் முதல் படியாக வைத்துள்ளார்கள்! ‘தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்’ என்பது மிகப் பிரபலமான சூஃபிமொழி. இங்கே தலைவன் என்பது இறைவனைக் குறிக்கும்.

தன்னை அறிவது என்பது விழிப்புணர்வு சம்பத்தப்பட்டது. கனவில் சுறுசுறுப்பாக இயங்குவதால் என்ன பலன் வந்துவிடப் போகிறது. ஆனால் உலகில் பெரும்பாலானோர் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளார்கள், “சும்மா இருப்பதே சுகம்” என்று சொன்ன ஞானிகளைப் பார்த்து அவர்கள் சிரிக்கிறார்கள். ஆனால் அந்த ஞானிகள் விழித்துக்கொண்டவர்கள்.

தன்னை அறிவதற்கு உங்கள் சக்தியை உள்நோக்கிக் குவிக்கவேண்டும். அதனால் வெளி நோக்கி அதனைப் பாய்ச்சி நீங்கள் செய்யும் ஆயிரம் ஆயிரம் வெட்டி வேலைகளை நீங்கள் நிறுத்த வேண்டியுள்ளது. அப்படி நீங்கள் நிறுத்திவிடும்போது பிறர் உங்களைச் சோம்பேறி என்றுதானே மெச்சுவார்கள்?! ஆனால் நம் முயற்சியால் கெட்டுக்கொண்டிருந்த பல விசயங்கள் இயல்பாக இயற்கையாக நடப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். கடவுள் உங்களைச் சுற்றி வேலை செய்துகொண்டிருப்பார், பல வடிவங்களில்.

இப்படித்தான் நான் வீட்டில் என் மனைவி செய்யும் வேலைகளை ரசித்துக் கொண்டே அமர்ந்திருப்பேன். ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்கும் எனக்கு, நான் சுறுசுறுப்பாக இருப்பதற்காகத் தேநீர் போட்டுக் கொண்டுவந்து கொடுப்பாள்!

மனிதக் காதலாகட்டும் இறைக் காதலாகட்டும், ஒரு சூட்சுமம் உண்டு. அவசரப்பட்டால் காரியம் கெட்டுவிடும்! ஒப்படைத்துவிடுங்கள். உங்கள் வழியே காரியங்கள் நடந்தேறுவதை அனுபவியுங்கள். ஜென்னின் சாராம்சம் கொண்ட ஹைகூ கவிதை என்று சொல்லப்படும் கவிதை ஒன்றுண்டு.

“சும்மா இரு

வசந்தம் வருகிறது

புல் தானாக வளர்கிறது!”









Wednesday, February 9, 2011

சுகவரி



காதலி!
ஒன்றை மற்றொன்று 
கழுவித் தூய்மையாக்கும்
கைகளைப் போல் 
காதல் செய்கிறோம் நாம்!

ஒருகை தட்டினால் 
ஓசை இல்லை 
-முதுமொழி.

ஒருகை ஓசையைக்
கேட்டுவிட்டு வா
-ஜென் குருவின்
பொன்மொழி.

இரு கைகள்
தட்டும்போது
ஓசை வருவது
இதிலிருந்தும் அல்ல
அதிலிருந்தும் அல்ல.

இரு கைகளையும்
சூழ்ந்திருக்கும்
ஒன்றிலிருந்து.

ஆதாமைப் படைக்க
களிமண் பிசைந்த
இரண்டு கைகளின்
நிழல்களாய் நாம்
காதல் செய்கையில்...

சுயங்களில்
சுடரேற்றும்
சுகம்
என்னிலிருந்தும் அல்ல
உன்னிலிருந்தும் அல்ல.

இருவரையும்
அனைத்தையும்
சூழ்ந்திருக்கும்
ஏகத்திலிருந்து.




கவிச் சிற்பம்



செதுக்கி எறிந்த
கற் துகள்களாய்
வீழ்கின்றன
சொற்கள்.

வரிகளுக்கிடையில்
அரூபச் சிற்பங்கள்
வைக்கப்பட்டுள்ள
கூடம் இது.

தாளில் எழுதப்படுவது
கவிதை அல்ல
கவிதையின் மேப்.

கவிதைகளின்
தொகுப்புப் போல்
தெரிவது
ஒற்றைக் கவிதை ஒன்றின்
அகராதி.

அர்த்தங்களை
அகர வரிசையில்
தேடாதே.
அலைவரிசையில்
தேடு.

நிறைய துகள்கள்
சிறிய சிற்பம்.

குறைந்த துகள்கள்
பெரிய சிற்பம்.

உளி தொலையும் நாளில்
உருவாகி வரும்
சிற்பியையே
செதுக்கி எறிந்துவிட்ட
சிற்பம் ஒன்று.

 

Sunday, February 6, 2011

மேடைக் காட்சிகள்



இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் மேடைகளுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. பட்டிமன்றம், வழக்காடு மன்றம், தனிப்பேச்சு, கவியரங்கம் என்பன போன்ற இலக்கிய மேடைகள், ஆன்மிக மேடைகள் மற்றும் குறிப்பாக அரசியல் மேடைகள். மேடைப்பேச்சு என்பது ஒரு கலையாக முழு வீச்சில் செயலாற்றிய அல்லது பயன்படுத்தப்பட்ட நூற்றாண்டு அது. எந்த ஒரு ஊடகமும் அதன் காலகட்டத்தை நிறைவு செய்துவிட்ட நிலையில் அதன் நிறைகளைப் பரிசீலிக்கும் அதே வேளையில் அதன் குறைகளை அல்லது அது வளர்ந்து வந்த பாதையில் உண்டாக்கி வைத்த போலிமைகளையும் அபத்தங்களையும் எள்ளுவதும் செய்யப்பட வேண்டிய ஒன்று. அதைத்தான் இந்தக் கட்டுரையில் நான் செய்கிறேன்.

அப்பாடா! என் சிறு வயதில் என்னைக் கவர்ந்த பேச்சாளரான பேராசிரியர். க.அன்பழகன் அவர்களின் நடையின் சாயலில் ஒரு பத்தி எழுதிவிட்டேன். ஆம், கழக ஆதரவாளர்களின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற வரலாற்றுப் பதிவு எனக்கு உண்டு! அதனால் பல களங்கள் கண்டவன், மேடைகள் கண்டவன் என்பதால் (அதாவது, ஒரு பார்வையாளனாக தூரத்தில் இருந்து அவற்றையெல்லாம் கண்டவன் என்பதால்) மேடைப் பேச்சு குறித்து நான் எழுதித்தான் ஆகவேண்டும்.



அது என் மாணவப் பருவம். சினிமாவை விட ஒரு கட்டத்தில் அரசியல் எங்களைக் கவர்ந்தது. தமிழில் என் ஆர்வத்தை வளர்த்துவிட்ட என் தந்தையும் பெரிய தந்தையும் கழக மேடைகளை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். நான் கொஞ்சம் வித்தியாசமானவன். கலைஞரின் பேச்சைவிடப் பேராசிரியரின் பேச்சுத்தான் என்னைப் பெரிதும் கவர்ந்தது. அவரின் தமிழ் மிகவும் செறிவானது. எனினும் அதைக் கிராமத்து மக்கள் மரியாதையுடன் கேட்டதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். ஏனெனில் செறிவான உணவு பலருக்குச் செறிக்காது!

ஆனால் கழக மேடைகள் பெரிதும் களை கட்டிய நாட்கள் என்று சொன்னால் அது தீப்பொறி ஆறுமுகம், இரா.வெற்றிகொண்டான் போன்றோர் பேசிய நாட்கள்தான். தமிழனின் சீரழிந்த ரசனைக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்துகின்ற பாணியில் அவர்கள் எப்படி மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறார்கள் என்பதை அப்போதே அவதானித்தேன். வெற்றிகொண்டான் வருகிறார் என்றாலே மாணவர்களின் மனத்தில் ஒரு ரகளை உண்டாகிவிடும். “வெறி கொண்டான் – வெட்டிக் கொன்றான் – வெற்றி கொண்டான்” என்று ரிதமாகப் பாடிக்கொண்டு அவர்கள் ஓடியதைப் பார்த்திருக்கிறேன். ஏதோ தலையலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைச் சங்கப் புலவன் புகழ்ந்தது போன்ற இந்த வரிகள் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் உள்ளம் கள்வெறி கொண்ட கணங்களில் எதார்த்தத்தில் நிற்பவன் எவன்? இத்துடன் இதை நிறுத்திக் கொள்வோம். வெற்றிகொண்டான் சமீபத்தில்தான் இறந்துபோனார். துஞ்சினாரைத் தூற்றுதல் பண்பன்று. “இமயம் சரிந்தது” என்றோ “சுனாமி சுருண்டது” என்றோ போஸ்டர் அடித்துக் கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டுமே தவிர ஏகடியம் பேசக்கூடாது!



இந்தக் கட்டுரைக்கான பொறி என் மனதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் விழுந்தது. திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலைஞர் உரையாற்றினார். சிலப்பதிகாரக் காட்சி ஒன்றை மேற்கோள் காட்டித் தன் பேச்சைத் தொடங்கினார். “கையில் சிலம்பேந்திக் கண்ணகி மதுரை வீதியில் நடந்தபோது ‘நீதியும் உண்டுகொல், மன்னனும் உண்டுகொல்’ என்று கேட்டாள். நான் இங்கே கேட்கிறேன், போலீசும் உண்டுகொல்? போலீசும் உண்டுகொல்?” என்று அவர் பேசும்போது தொலைக்காட்சியில் மக்கள் கூட்டத்தைக் காட்டினார்கள். தானைத் தலைவரின் பேச்சைக் கேட்கக் கூடியிருந்த உடன்பிறப்புக்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் தெரியுமா? சிலர் சிரித்துக் கொண்டிருந்தனர். சிலர் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தனர். சிலர் மண்ணை வாரி வீசிக் கொண்டிருந்தனர். சிலர் கடலை கொரித்துக் கொண்டிருந்தனர். சிலர் கடலை போட்டுக் கொண்டிருந்தனர். இதுதான் இன்றைக்கு மேடைப் பேச்சின் கதி!

அதே தானைத் தலைவர் இன்னொரு முறை திருச்சிக்கு வந்து பேசிய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் ஒரு பாடலின் வரிகளைச் சொல்லி பலத்த கைத்தட்டல்களையும் சீழ்கை ஒலிகளையும் பெற்றார். அப்படி என்ன பாடல் வரிகள்? புறநானூறா? அகநானூறா? பதிற்றுப்பத்தா? சிலப்பதிகாரமா? பாரதிதாசனின் பாடல் வரிகளா? ம்ஹூம். ரஜினிகாந்த் நடித்த ’முரட்டுக் காளை’ படத்திலிருந்து இரண்டு வரிகள்! கைத்தட்டு வாங்க வேண்டும் என்றால் கலைஞருக்கே இந்த கதி! மேடைப்பேச்சு என்னும் கலை மரணப் படுக்கையில் கிடக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.



மேடைப் பேச்சு என்பது இப்படி நலிந்து வரும் சூழலில் அதன் பொற்காலக் காட்சிகள் என் மனதில் விரிகின்றன. தமிழ் மேடைப் பேச்சிற்கென்று நாம் உருவாக்கிக் கொண்டுள்ள தனித்தன்மைகளை அதில் நான் உணர்கிறேன்.

மே.கா.1: கால்வட்டம், அரைவட்டம், முக்கால்வட்டம் என்று எத்தனை முன்னோட்டப் பேச்சாளிகள் மேடையேறினாலும் அனைவரும் ஒருமுறை மேடையில் இருக்கும் அனைவரையும் “அவர்களே இவர்களே” என்று அழைத்து அட்டண்டன்ஸ் எடுப்பது ஒரு செந்தமிழ் மரபாகும். அந்த வகையில் அன்றொரு நாள்…. மணி பதினொன்று ஆகிவிட்டது. பத்து மணிக்கே மல்லாந்துவிடும் வெல்லமண்டி முனுசாமிக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறது. முதலில் வீட்டில் இருப்பதுபோல் கனவு. சிறியதா பெரியதா என்று அவருக்கே தெளிவில்லை. அப்போது மேடையில் முழங்கத் தொடங்கிய ஒரு அரைவட்டம் ’அவர்களே’ பட்டியல் இட்டுக் கொண்டே வந்து “அண்ணன் வெல்லமண்டி முனுசாமி அவர்களே!...” என்று விளிக்க, கனவின் கதவிடுக்கில் அந்தச் சத்தம் உள்ளே நுழைந்தவுடன் ”ஐயோ மரகதம் அடுத்த மாசம் கட்டாயம் வாங்கித் தர்ரேன்” என்று நம் அண்ணன் அலறினார். திடுக்கிட்டு அலங்க மலங்க விழித்தார். பிறகு மீண்டும் தூக்கம். ஒரு முக்கால் வட்டம் அட்டண்டன்ஸ் போடத் தொடங்கியது. இப்போ நம் அண்ணன் எட்டாம் வகுப்பு மாப்பிள்ளை பென்ச்சில் இருந்தார், கனவில்தான். “அண்ணன் வெல்லமண்டி முனுசாமி அவர்களே!” என்ற சத்தம் கேட்டவுடன் கையைத் தூக்கிக்கொண்டு எழுந்தார்: “உள்ளேன் ஐயா.”

மே.கா.2: இருபத்தேழாம் வட்டத்துக்கு வெறும் அல்லக்கையாகவே ஐந்து ஆண்டுகள் லோ லோ என்று இங்கும் அங்கும் அலைந்து நொந்து நூடில்ஸ் ஆகிப் போயிருந்த தம்பி நிலாநேசனின் வாழ்வில் அன்று பொன்னான நாள். வட்டம் மேடையில் வரவேற்புரை ஆற்றி முடித்தவுடனே “நான் அதை வழிமொழிகிறேன்” என்று ஒலிபெருக்கியில் பேசித் தன் குரலுக்குத் தமிழ் கூறு நல்லுலகில் ஒரு முகவரியை ஏற்படுத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருந்தது. அதற்காக காலக் கருக்கலில் கண்விழித்து ஏழு முறை பல் துலக்கி ரிகர்ஸல் செய்தான். “நான் அதை வழிமொழிகிறேன்” என்று மீண்டும் மீண்டும் தலைவர்கள் நடிகர்கள் பேச்சாளர்கள் பாணியில் ஆயிரம் முறை சொல்லிப் பார்த்துக் கொண்டான். என்ன செய்வது, விதி வலிது! வட்டம் வரவேற்புரையை முடிக்கும் தருணம். இவன் தயாராகப் பின்னால் நின்றுகொண்டிருந்தான். மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்த தலைவரைப் பார்த்தான். அவரும் அவனை ஒரு பார்வை பார்த்தார். தொண்டனும் நோக்கினான் தலைவரும் நோக்கினார். அவ்வளவுதான். உள்ளே உதறல் எடுத்தது. ஒலிபெருக்கியை வளைத்துக் கதறினான்: “நான் அதை மொலிவழிகிறேன்!”

மே.கா.3: இதுவும் மேடைச் சொதப்பல் என்னும் வகையைச் சேர்ந்ததுதான். ஒரு நிகழ்ச்சியில் நன்றியுரை ஆற்றும் பொறுப்பை அவருக்கு வழங்கியிருந்தார்கள். ஒவ்வொருவராகக் குறிப்பிட்டு “…….க்கு என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று சொல்ல வேண்டும். உரித்தாக்கிக் கொள்ள அவரின் கிளிநாக்கு கீழ்ப்படியவில்லை. “உரித்துத் தாக்கிக் கொல்கிறேன்” என்று பிடிவாதம் பிடித்தால் பாவம் அவர்தான் வேறு என்ன செய்வார்? நன்றிப் பெருக்குடன் சகட்டு மேனிக்கு ஒவ்வொருவராக உரித்துத் தாக்கித் தள்ளினார். எனக்குப் படு மகிழ்ச்சியாக இருந்தது!



மே.கா.4: என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மேடைச் சொதப்பல் என்று இதைத்தான் சொல்ல வேண்டும். அது ஒரு முக்கியமான விழா. முடிந்த பிறகு சிறப்பு அழைப்பாளர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு ஒரு சிறு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை அறிவிக்க விழா நாயகர் எழுந்தார். டிஃபனைத் தமிழில் சிற்றுண்டி என்று சொல்கிறோமே. டீ காஃபிக்கும் அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று நினைத்துவிட்டார் போலும். மகிழ்ச்சி பொங்க அனைவரையும் பார்த்து “விழா முடிந்ததும் சிற்றுண்டியும் சிறுநீரும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் இருந்து அருந்திச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்!” என்று அறிவித்தார்!

மே.கா.5: தமிழ் மேடைப் பேச்சு மரபுகளில் ஒன்று பேச்சின் முடிவில் “இறுதியாக நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்” என்று கூறிக்கொள்வது. இவ்வாறு கூறிக்கொள்ளும் பேச்சாளர்களில் அதை இதய சுத்தியுடன் உண்மையாகவே கடைப்பிடித்த்வர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். “கடைசியாக ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன்” என்று சொன்ன பிறகு ஒன்றரை மணி நேரம் பேசுபவர்கள் உண்டு. ஏற்கனவே ஒரு விஷயத்தைக் கூட கூறாமல் இரண்டு மணி நேரம் மொக்கை போட்டுவிட்டு இறுதியாக ஒன்றைக் கூறிக்கொள்கிறேன் என்று பேச்சாளர் சொல்லும் போது லாஜிக் உதைத்தாலும் ஏதாவது பாய்ண்ட் சொல்லமாட்டாரா என்று ஆர்வம் பிறக்கும். ஏமாற்றமும் கிடைக்கும். தமிழைத் ’தமிளு’ என்று உச்சரிக்கும் ஒருவர் இப்படித்தான் “கடைசியாக ஒன்றை நான் கூறிக் கொல்கிறேன்…” என்றார். கீழே இருந்த ஒருவர் சொன்னார், “ஏற்கனவே நிறையா கீறிக் கீறிக் கொன்னுட்டீங்க. இப்ப இது வேறயா?”



ஒரேஷன் அல்லது ஸ்பீச் என்று ஆங்கிலத்தில் கூறுவதை நாம் தமிழில் பேச்சு என்று சொன்னாலும் அதற்கென்று சிறப்பான பல பெயர்கள் இருக்கின்றன. சொற்பொழிவு, சொற்பெருக்கு என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அவை அவற்றின் நேரடிப் பொருளில் பலித்துவிட வேண்டும் என்று நான் சில நேரங்களில் விரும்புவேன். அப்படி ஆக்கிவிடக்கூடிய ஆற்றல் என் அருள்வாக்குக்கு இருப்பதைப் போன்று கற்பனை செய்ததுண்டு. அவற்றை இனி சொல்கிறேன்.

மே.கா.6: ஒரு பிரபலமான பேச்சாளர் “சொற்பொழிவு ஆற்றுவார்” என்று அறிவிக்கப்பட்டது. “அப்படியே ஆகட்டும்” என்று ஆசீர்வதித்தேன். அவர் பேசி முடித்தபோது முன்வரிசையில் அமர்ந்திருந்தோர் அவர் அடித்த ஸ்ப்ரேயில் நனைந்து போயிருந்தார்கள். மைக்கில் ஜொல் வழிந்துகொண்டிருந்தது. அவ்வளவு அற்புதமாகப் பொழிந்து தள்ளிவிட்டார்!

மே.கா.7: ஒரு பொதுக் கூட்டத்திற்கான விளம்பரத்தில் ஒரு தலைவரின் பெயரைப் போட்டு ‘கர்ஜிப்பார்” என்று எழுதியிருந்தார்கள். “அப்படியே ஆகக் கடவது” என்று ஆசி வழங்கினேன். இரவு பத்து மணி. தலைவர் ஒலிவாங்கியின் முன் வந்து நின்றார். வாழ்க முழக்கங்கள் ஒலித்து ஓய்ந்தன. என் அருள்வாக்கின் பலனால் அவர் மண்டையில் இருந்த மொழிகள் எல்லாம் மாயமாய் மறைந்து போய்விட்டதை அவரேகூட அப்போது அறிந்திருக்கவில்லை. பேசுவதற்கு வாய் திறந்தார். “கர்ர்ர்..” என்று ஒருமுறை கர்ஜித்தார்! கீழே நின்றிருந்த விசிலடிச்சான் குஞ்சுகள், தலைவர் தொண்டையைச் செருமுகிறார் என்று எண்ணி அருகிலிருப்போர் காது கிழிய விசில் எனப்படும் ஃபிகில் ஒலி எழுப்பினார்கள். ஏனேனில் மேடைப் பேச்சாளனுக்கு தொண்டை உப்புத்தாள் வைத்துத் தேய்த்தது போல் சொரசொரப்பாக இருக்க வேண்டும் என்பது தங்கத் தமிழகத்தில் ஒரு நியதி அல்லவா? அப்படி இரும்பு துரு பிடித்தது போல் தங்கள் குரல் ஆக வேண்டும் என்பதற்காகப் பீடி பற்றவைத்த விடலைகளை நான் அறிவேன். தலைவர் இன்னொரு முறை “கர்ர்ர்ர்… கர்ர்ர்ர்” என்று உருமிய போதுதான் உண்மையாகவே அவர் கர்ஜிக்கிறார் என்பது தெரிந்தது!



மே.கா.8: புரோட்டா கடைகளில் ‘முட்டை வீச்சு’ என்று ஸ்பெஷலாக ஒரு அயிட்டம் போடுகிறார்கள். அதை ஆர்டர் செய்தாலே மாஸ்டருக்கு ஒரு தனி குஷி வந்துவிடும். அதுபோல் தொண்டர்களைக் குஷி படுத்தும் காரசாரமான பேச்சை இப்போதெல்லாம் உரை வீச்சு என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு பொதுக்கூட்ட விளம்பரத்தில் அதை “உறை வீச்சு” என்று எழுதியிருந்தார்கள். அதற்கும் என் ஆசியை வழங்கி வைத்தேன். தலைவர் வந்து மைக் முன்னால் நின்று திருவாய் மலர்ந்திருக்கிருக்கிறார். பொதுக்கூட்டம் மேஜிக் ஷோ போல் ஆகிவிட்டதாம். ஆமாம், அவரின் வாயிலிருந்து தலையணை உறை, கடித உறை, கையுறை, காலுறை, ஆணுறை, இத்தியாதி உறைகள் எல்லாம் புறப்பட்டுப் பார்வையாளர்கள் மத்தியில் வீசப்பட்டுள்ளன. ஒரே கலாட்டாவாம்.



பேச்சாளர்களாக உருவாகிறோம் என்று தொலைக்காட்சியில் ‘அரட்டை அரங்கம்’ போன்ற நிகழ்ச்சிகளில் குரலின் மகரக்கட்டு உடையாத சிறுவர்களும் உடையக் கூடாத சிறுமிகளும் பெரியவர்களின் தோரணையில் வீச் வீச் என்று பேசுவது எனக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது. இந்த “உரை கீச்சு” நிகழ்ச்சிகள் ஒரு தவறான முன்னுதாரணம் என்றே நான் சொல்வேன்.

“யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்” என்பது போல் வைரமுத்து என்னென்னவோ கேட்பாரே, அதுபோல் நானும் சத்தம் இல்லாத மேடை கேட்கிறேன்.



Wednesday, February 2, 2011

ஈரிதழ் ரோஜா



முன்பு எழுதிய ஒரு கட்டுரையில் ஏசு நாதரின் வாயைப் பற்றி கலீல் ஜிப்ரான் வருணித்து எழுதிய ஒரு வரியை மிகவும் சிலாகித்துக் கூறி அதற்கு இணையான ஒரு வரியை வாயை வருணிக்க எந்தக் கவிஞனும் எழுதியதில்லை என்று சொல்லியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு ஒருவர் ஆச்சரியமாக ‘உண்மையாகவே இதற்கு இணையாக அல்லது இதைவிட அற்புதமாக வேறு எந்தக் கவிஞனும் கற்பனை செய்து பாடவே இல்லையா?” என்று கேட்டார். நான் அறிந்த வரையில் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது என்று சொன்னேன்.




’HE WHOSE MOUTH WAS A RED PAIN MADE SWEET’ என்னும் அந்த ஒற்றை வரிதான் இலக்கியப் பரப்பிலேயே ஒரு வாயைப் பற்றிய மிக உன்னதமான வருணனை என்பது என் கருத்து. இது ஒரு அருவ உருவகம். அல்லது அருவகம் என்று கூறலாம்! நண்பரின் கேள்விக்குப் பிறகு இலக்கியங்களில் இடம் பெற்ற வாய் வருணனைகளை ஒவ்வொன்றாக ஞாபகம் செய்தேன்.




“செவ்விதழ்” என்பது தமிழில் ஒரு ஹால்மார்க் சொற்றொடர். கிட்டத்தட்ட அது ஒரு கெட்ட வார்த்தையாகவே ஆகிவிட்டது! பல கவிஞர்கள் வாய் வைத்தால், அது பாவம் வேறு என்னவாகித் தொலைக்கும்? ‘கொவ்வை இதழ்’ என்னும் வருணனையும் அதே கேஸ்தான்! ‘கோவப் பழம் போன்ற உன் உதடுகளை மறைத்துக்கொள். கிளிகள் கொத்திக் குதறிவிடப் போகின்றன’ என்றெல்லாம் காதலியைப் பார்த்து அசட்டுத்தனமாகப் பாடும் புலவர்களுக்குத் தமிழில் பஞ்சமே வந்ததில்லை. ஆனால் புதிதாகச் சிந்திக்கத் தெரியாத டுபாக்கூர் கவிஞர்கள்தான் இப்படியெல்லாம் பாடுவார்கள்.


சங்கத் தமிழின் சாயல் கொண்டு வடுகபட்டி வைரமுத்து எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.


”நறுமுகையே! நறுமுகையே!


நீ ஒரு நாழிகை நில்லாய்.


செங்கனி ஊறிய வாய் திறந்து


நீ ஒரு திருமொழி சொல்லாய்”


என்று தொடங்கும் அந்தப் பாடல் தமிழில் வந்த அற்புதமான இசைப் பாடல்களில் ஒன்று.


இவ்வாறு செவ்விதழ், கனியிதழ் என்றெல்லாம் தமிழ்ப் புலவர்கள் வருணிக்கும் வார்த்தைகளைக் கசடறக் கற்றதாலோ என்னவோ புதுக்கவிதை எழுதப் பழுகுகிறேன் என்று டைரியில் மடக்கி மடக்கி எழுதிக் கொண்டு வரும் மாணவர்கள் இடம் பொருள் ஏவல் இங்கிதம் இன்றி இந்த உவமைகளைப் போட்டு வருணித்து வைப்பார்கள். அது கிழவியின் உதடாக இருந்தாலும் சரி! ஆனால் உண்மையான கவித்துவம் பொருத்தமான ஆழமான உவமையைத் தேடுகிறது.




நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடிய பிரபலமான ஒரு பாடலில் திருமாலின் வாயை வருணித்துத் “திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ” என்று வருகிறது. அது ஏன் பவளம்? திருமால் பாற்கடலுக்குள் பள்ளி கொண்டவன். கடலுக்குள் இருப்பது பவளம். எனவே திருமாலின் வாய்க்கு அது உவமையாகக் கூறப்பட்டது. இது பொருத்தமான உவமை.


 இராவணனால் கடத்தப்பட்டு இலங்கையில் அசோகவனத்தில் கைதியாக அமர்ந்திருக்கிறாள் சீதை. தன் தகா இச்சைக்கு இணங்கும்படி அவளிடம் இரப்பதற்கு இராவணன் வருகிறான். அந்தக் காட்சியை வருணிக்கும் கம்பன் அப்போது சீதையின் உதடுகளுக்கு ஓர் உவமை சொல்கிறான். ‘சீதையின் உதடுகள் இந்திரக் கோபப் பூச்சிகளைப் போல் இருந்தன!’ என்பது அந்த உவமை. இரத்தத்துளிகளைப் போல் வட்டமாக இருக்கும் அந்தப் பூச்சிகளை நீங்கள் பார்த்திருக்கலாம். என் பால்ய வயதில் திருச்சியிலேயே பார்த்திருக்கிறேன். ‘வெல்வெட்டுப் பூச்சி’ என்று பிடித்து டப்பாக்களில் அடைத்து வைப்போம். குறுந்தொகையில் அதற்குச் ‘செம்மூதாய்ப் பூச்சி’ என்று பெயர். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான அந்தப் பூச்சி இப்போதெல்லாம் திருச்சிக்கு வருவதே இல்லை. கம்பன் தன் காப்பியத்தில் அதற்கு ‘இந்திர கோபம்’ என்னும் புராணப் பெயரைத் தருகிறான். இராவணன் மீது சீதை கொண்டிருந்த கோபத்தை அந்தப் பெயரிலேயே பிரதிபலித்துவிடுகிறான்! அதுவும் உதட்டுக்குச் சொல்லும் உவமையில்!


தவறாகச் சொல்லப்படும் உவமை கொலைத் திட்டத்திற்கே வழி வகுக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது ஒரு வரலாற்று உண்மை! “ஜிலேபி வாயன்” என்று கவுண்டமணி செந்திலைத் திட்டுவது போல் திட்டினால் சில ஊர்களில் அரிவாளை உருவிக்கொண்டு துரத்துவார்கள். நான் அதைச் சொல்லவரவில்லை. இது வேறு விசயம். கண்ணுக்கு உவமையாக முன்னுக்குப் பின்னான ஒரு வாயை உவமையாக ஒருவர் கூற அது தவறு என்று சொன்னவன் மீது அவர் கொலை வெறி கொண்ட கதை அது.


விசிட்டாத்துவைதம் என்னும் தத்துவத்தை உருவாக்கி வைணவ சமயத்தைப் பரப்பிய இராமானுஜரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி அது. அப்போது அவர் காளைப் பருவத்தை எட்டாத கன்று. யாதவப் பிரகாசரின் சீடனாக அவர் வேதபாடம் கற்று வந்த காலம். ஒரு நாள் இராமானுஜர் தன் குருவின் பணிவிடையில் இருக்கும்போது இன்னொரு சீடன் அங்கு வந்து சாந்தோக்கிய உபநிஷத்தில் உள்ள “கப்யாஸம் புண்டரீகம்” என்னும் சொற்றொடருக்குப் பொருள் கேட்கிறான். “திருமாலின் சிவந்த கண்கள் குரங்கின் குதம் போல் இருந்தன” என்று சொல்கிறார் யாதவப் பிரகாசர். (கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று பிரித்து அவர் பொருள் சொன்னார். ”குரங்கின் ஆசனவாய்” என்று அதற்கு அர்த்தம்.)


தன் குருநாதர் இப்படித் திருமாலின் முக அழகுடன், அதுவும் கண்களுடன் குரங்கின் புட்டத்தைப் பொருத்திப் பார்க்கின்றாரே என்று இராமானுஜரின் உள்ளம் வெந்துவிட்டது. அது மிகவும் அபத்தமான விளக்கம் என்று குருவிடம் மறுத்துக் கூறிய இராமானுஜர் அதற்குச் சரியான, பொருத்தமான பொருளைச் சொல்கிறார். கப்யாஸம் என்பதை கம்+பீபதி+ஆஸம் என்று பிரிக்கவேண்டும். அப்போது கபி என்பது குளிர்ந்த நீரைப் பருகும் சூரியன் என்றும் ஆஸம் என்பது தாமரை என்றும் பொருள் தரும் என்று கூறுகிறார். இதனால் இராமானுஜர் மீது கோபம் கொண்ட யாதவப் பிரகாசர் அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டித் தன் சீடர்களுடன் காசிக்கு அழைத்துச் சென்றார் என்பதும் இராமானுஜர் தப்பித்து வந்ததும் வரலாறு.




சூஃபி இலக்கியங்கள் செழித்து வளர்ந்த பாரசீக மொழிக்குள் போய்ப் பார்த்தால் அங்கே உதடுகளுக்கு உவமையாக இருப்பது எப்போதுமே ரோஜாதான். பாரசீக இலக்கிய உலகமே ஒரு ரோஜாத் தோட்டமாகத்தான் காட்சி அளிக்கிறது. இமாம் சாஅதி தன் காவியத்தை மிகச் சரியாகவே ‘குலிஸ்தான்’ (ரோஜாத் தோட்டம்) என்று அழைத்தார். அந்த அளவுக்கு ரோஜாப்பூவின் மீது பாரசீகக் கவிஞர்களுக்கு ஒரு காதல். ரோஜாவின் இதழ்களைத்தான் காதலியின் உதடுகளுக்கு மிகவும் பொருத்தமான உவமை என்று அவர்கள் கருதுகிறார்கள். அதன் நிறத்திற்காக, அதன் மென்மைக்காக, அதன் நறுமணத்திற்காக!


உதாரணத்துக்கு ஒரு கவிதையைச் சொல்கிறேன்.


”ரோஜாவைப்


பறிப்பதா வேண்டாமா என்று


தயங்கி நிற்கிறான் தோட்டக்காரன்”


என்று பாடுகிறான் ஒரு கவிஞன். அதாவது அவன் காதலியின் வாய்க்கு அருகே ஒரு மச்சம் இருக்கிறதாம். அதைத்தான் இப்படி வருணிக்கிறானாம்!

ஆங்கிலக் கவிஞன் பென் ஜான்சன் தன் காதலியின் உதடுகளை வருணித்த விதம் கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால் படு பரவசமானது! நேரடியாகச் சொல்லாமல் அறிவாளிகளுக்கு மட்டும் புரியுமாறு பாடியிருக்கிறான். நீங்கள் அறிவாளியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பாடல் வரியைப் பாருங்கள்:


“கோப்பையில்


ஒரு முத்தம் மட்டும்


இட்டுச் செல்.


நான்


மதுவைத் தேடமாட்டேன்.”


(“Or leave a kiss but in the cup, And I’ll not look for wine”)


ம்ஹூம், இதெல்லாம் உருப்படுவதற்கான வழியாகத் தெரியவில்லை என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்ய? இன்னும் சற்றே ஆழமான ஒரு கவிதை வரியைச் சொல்கிறேன். இது உங்களுகுப் புரிந்துவிட்டால் உங்களை ஞானி என்றே அழைக்கலாம். டீலா? நோ டீலா? (ஒரு ஹிண்ட் கொடுக்கிறேன். இது புரியவேண்டும் என்றால் உங்களுக்கு விசிஷ்டாத்துவைத தத்துவம் தெரிந்திருக்க வேண்டும். காதலியின் உதடுகளில் மறைந்திருக்கும் ரகசியம் அப்போதுதான் உங்களுக்குப் புரியும்! கவிஞர் வாலி இயற்றிய ஒரு திரைப்பாடலின் வரிகள் இவை.)


“கேளாத வேணு கானம்


கிளிப் பேச்சில் கேட்கக் கூடும்”


(மக்குகளுக்கு ஓர் உபரி சேதி. கிளி என்பது இங்கே காதலியைக் குறிக்கும். கிளி ஜோசியத்தை அல்ல!)




பதினைந்தாம் நூற்றாண்டில் அஃப்கானிஸ்தான் நாட்டில் குராசான் பகுதியில் ஜாம் என்னும் ஊரில் பிறந்து சமர்கந்தில் வாழ்ந்த சூஃபி ஞானக் கவிஞர் நூருத்தீன் அப்துர் ரஹ்மான் ஜாமி. நபிகள் நாயகத்தின் மீது அளப்பரிய காதல் கொண்ட அவர் இயற்றிய கஜல்கள் இன்றளவும் சூஃபிகளால் பரவசத்துடன் பாடப்படுகின்றன. அதில் ஒரு கஜல் பாடலில் நபிகள் நாயகத்தின் உதடுகளை இவ்வாறு அவர் வருணிக்கிறார்:


“உங்கள் சிவந்த உதடுகளைக் காணுந்தோறும்


என் இதயம் சொல்கிறது:


எத்தனைப் பேரின்பம் கொண்டதாக


ஆக்கிவிட்டான் இறைவன்


இந்த யமன் தேசத்துக் கனிகளை!”


(யமன் என்பது அரேபியாவில் உள்ள ஒரு பகுதி. அந்த தேசத்தின் தோட்டங்கள் மிகவும் செழிப்பாக இருக்குமாம். எந்த அளவு என்றால், ஒரு வெற்றுக் கூடையைத் தலைமீது வைத்துக் கொண்டு ஒரு தோட்டத்திற்குள் நுழைந்து நடந்தால் மறுபக்கம் வெளியேறும்போது உதிர்ந்த கனிகளால் அது நிறைந்திருக்குமாம்!)


இந்த உவமைகளை எல்லாம் எண்ணிப் பார்த்த என் மனம் மீண்டும் கலீல் ஜிப்ரான் வருணித்து எழுதிய வரிகளுக்கே வந்து நின்றது. ஆனால் இது வேறு வருணனை. ஜிப்ரான் எழுதிய ‘மர்த்தா’ என்னும் சிறுகதையில் வரும் ஒரு வரி. கதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.




”அவள் பெயர் மர்த்தா. தன் தொட்டில் பருவத்தில் தந்தையையும் பத்தாம் வயதில் அன்னையையும் இழந்தவள். வட லெபனானின் அழகிய மலைச் சாரல்களில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வீட்டில் பணிப்பெண்ணாக வாழ்ந்து வந்தாள். மாடுகளை மேய்த்து வருவதே அவளின் தினசரி வேளையாக இருந்தது. இயர்கையின் மடியில் அவள் ஒரு பூச்செடி போல் வளர்ந்தாள். அறிவின் விதைகள் தூவப்படாத கன்னி நிலமாக இருந்தாள். பதினாறு வயதில் அவள் அந்த லெபனான் மலைச் சாரலைப் போல் அழகாக இருந்தாள். அப்போது ஒரு நாள் குதிரையின் மீது வந்த ஒரு வழிப்போக்கனின் கண்கள் அவளைக் கண்டன. அவன் பேச்சில் இருந்த ஆறுதல் தொனி அவளை மயக்கியது. தன் எசமானன் மற்றும் எசமானியின் கொடுமைகளில் இருந்து தன்னை மீட்க வந்த வாழ்வின் தூதனாக அவனைக் கண்டாள். அன்று மாலை மாடுகள் மட்டும் வீடு திரும்பின.




ஆறு ஆண்டுகள் கழிந்து போயின. கி.பி.1900 இலையுதிர்காலத்தில் நான் பெய்ரூத் நகருக்குத் திரும்பினேன். அங்கே மக்கள் நெரிசலில் ஒரு சிறுவனைக் கண்டேன். அவனுக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு தட்டில் பூக்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும், ‘ஐயா, பூக்கள் வேண்டுமா?’ என்று கேட்டான். பாதி திறந்திருந்த அவனின் வாய் அவனது ஆன்மாவின் ஆழமான காயத்தைக் காட்டுவதுபோல் இருந்தது. (His mouth was half-open, resembling and echoing a deep wound in the soul.) விபச்சாரத்தால் உடலும் மனமும் நைந்து மரணப் படுக்கையில் கிடக்கும் தன் அன்னையைக் காப்பாற்றவே அவன் அந்தப் பூக்களை விற்கிறான் என்று அறிந்தேன். தன் அம்மாவின் பெயர் ‘மர்த்தா’ என்றும் தன் தந்தை யாரென்று தெரியாது என்றும் அந்தச் சிறுவன் சொன்னான். நான் அவனுடன் மர்த்தாவைப் பார்க்கச் சென்றேன். என்னைக் காமுகன் என்று நினைத்து நொந்தாள். நான் அவளது ஊரிலிருந்து வருபவன் என்றும் அவளை நலம் விசாரிக்க வந்தவன் என்றும் அறிமுகம் செய்து கொண்ட பிறகு ஒரு சகோதரனாக என்னை ஏற்றுக் கொண்டு ஆறுதல் அடைந்தாள். குற்றவுணர்ச்சி அவளை உருக்குலைத்திருப்பதைக் கண்டேன். அவளிடம் சொன்னேன், “மர்த்தா, உடலின் அசிங்கம் ஒரு தூய ஆன்மாவைத் தொடமுடியாது.” (The filth of the body cannot reach a pure soul.) என் சொற்களால் நிம்மதி அடைந்தவளாக அவளின் உயிர் பிரிந்தது.”


ஏசுவின் வாயை ‘இனிப்பாக்கப்பட்ட சிவந்த வேதனை’ என்று வருணித்த கலீல் ஜிப்ரான், வாழ்வின் சுமையைச் சுமக்கும் ஒரு ஐந்து வயதுச் சிறுவனின் வாயை ‘ஆழமான வெட்டுக் காயம்’ என்று வருணித்திருப்பதை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. தன் கதை மாந்தர்களை எல்லாம் ஏசுவைக் காட்டும் கண்ணாடியாகவே அவர் வார்த்துள்ளார். இன்றும், பிச்சை எடுக்கின்ற அல்லது சிறு பொருட்களைக் கூவி விற்கின்ற சிறுவர்களைக் காணும்போது அவர்களின் வாய் அவர்களின் ஆன்மாவில் விழுந்துள்ள வெட்டுக் காயமாகத்தான் எனக்குத் தெரிகிறது.