Tuesday, March 26, 2013

விட்டில் சிறகு



’எதுவுமே
உவமை இல்லை
உனக்கு’
என்றேன்

’என் மகத்தான உவமை
நீதான்’
என்றாய்
*
விளக்கின் வெளிச்சத்தில்
வித வித வேலைகள்
விலகிச் செல்வோருக்கு

விட்டிலின் வேலை
விளக்கில் வீழ்வது மட்டுமே
*

காணாமல் போன விளக்கைத்
தேடித் திரிந்தது ஒரு விட்டில்

கண்டடைந்த போதோ
விளக்கில் வீழ்ந்து
காணாமல் போனது
*

ஆயிரம் நூல்களில்
அறியாத ஒன்றை
அறிந்தேன் உன் கண்களில்

ஆயிரம் நூல்கள் எழுதினும்
சொல்லிவிட முடியாது அதை
*

உன் காதலின் வீதியில்
அலங்கோலமாய்
அலைகின்றேன் மீண்டும்

பிறரிடம் நான் மதிப்போடிருந்த நாட்களுக்கு
எந்த மதிப்புமில்லை என்னிடம் இப்போது
*

வேறு வேறோ?
ஒன்றுதானோ?
உன் முத்தத்தின் இன்பம்
அதன் நினைவின் இன்பம்
*

பரிதாபம் கொள்வோர்க்குத் தெரியுமோ
என் வலியின் பின்னே உள்ள சுகம்?

பொறாமை கொள்வோர்தான் அறிவாரோ
என் சுகத்தின் பின்னே உள்ள வலி?

Monday, March 25, 2013

சமையல் வாசம்



மூன்று வரிகளில் ஒரு வாழ்க்கையை வருணித்துச் சொல்லிவிட முடியுமா? ‘பிறந்தார் வாழ்ந்தார் இறந்தார்’ என்று சொன்னால் அது பலரின் வாழ்க்கைக்குப் பொருத்தமாகத்தான் இருக்கும் போலும்!

ஹைகூ கவிதை போல், மூன்றே வரிகளில் இருந்தாலும் அர்த்தம் செறிந்ததாக, அழகாக ஒரு வாழ்க்கை வரலாறு இருக்க முடியுமா?

சூஃபி ஞானி மௌலானா ரூமி தன் வாழ்க்கையை அப்படித்தான் மூன்றே வரிகளில் சொல்லிச் செல்கிறார்கள்.

“மூன்று வரிகளில்
முடித்து விடலாம்
என் வாழ்வின் கதையை...
பச்சையாய் இருந்தேன்
சமைக்கப் பட்டேன்
சாப்பிடப் பட்டேன்”

யார் அவரைச் சமைத்தார்கள்? யார் சாப்பிட்டார்கள்? அது என்ன சமையல்?

பச்சையாய் இருப்பதைப் பக்குவப்படுத்தி மனிதன் சுவைத்து உண்பது போல் ஆக்கும் கலையைச் சமையல் என்கிறோம். மதம் என்பதற்குத் தமிழில் உள்ள அழகானதொரு பெயர் ’சமயம்’.

இறைவனின் சுவைக்குத் தகுந்த வண்ணம் மனிதனைப் பக்குவப் படுத்தும் கலையே சமயம்.

சமையல் என்றால் அடுப்பு மூட்ட நெருப்பு உண்டு அல்லவா? சூஃபிகள் சொல்கிறார்கள், ’உன் இதயமே அடுப்பு; இறைக்காதலே நெருப்பு’

சட்டி தானாகவே நெருப்பைப் பற்ற வைத்துக் கொள்வதில்லை. சமையல்காரன் / காரிதான் அதனைப் பற்ற வைக்கிறார். அவர்தான் குருநாதர். மௌலானா ரூமி குறிப்பிடும் சமையல்கார் அவரின் ஆன்மிக குருநாதர் ஷம்ஸுத்தீன் தப்ரேஸி அவர்கள்தான்.

ஷம்ஸ் என்றால் சூரியன் என்று பொருள். சூரியனே தேவைப்பட்ட அளவு ரூமியின் இதய அடுப்பும் அத்தனை பெரியதுதான்!

குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவை, ஆன்மிகச் சமையல் என்னும் பணியை அழகான ஒரு கவிதை வழி ரூமி நமக்கு உணர்த்துகிறார். பச்சைப் பட்டாணி ஒன்று சமையல்காரனிடம் புலம்புவதாக அந்தக் கவிதை அமைந்துள்ளது. அடியேனின் தமிழில் சற்றே அதை உங்களுக்குப் பரிமாறுகிறேன்:

“வேக வைக்கப்படும் சட்டியின் விளிம்புவரை
எம்பி குதிக்கிறது பச்சைப் பட்டாணி
‘எனக்கு ஏன் இதைச் செய்கிறீர்?’

சமையல்காரர் அதனைச்
சட்டாப்பையால் சாத்துகிறார்.

‘வெளியே குதித்தோட முயலாதே.
உன்னை நான் வேதனை செய்வதாய் நினைக்கிறாய்
நானோ உனக்குச் சுவையைத் தருகிறேன்,
சோறும் மசாலாவும் கொண்டு கலந்து
மனிதனின் உடலுக்கு நலம் ஆவாய் நீ.

தோட்டத்தில் மழைநீர் பருகினாயே
அந்தக் காலத்தை நினைவு கூர்வாயாக.
அஃது இதற்காகத்தான்!’

கருணை முதலில்.
காமத்தின் இன்பம்,
அதன் பின்
கொதிக்கும் புதிய வாழ்வு தொடங்குகிறது
அந்த உயர்ந்த நண்பன்
அருந்துவதற்கு மிகவும் சுவையாக
விஷயம் புரியும்போது
சமையல்காரரிடம் பட்டாணி சொல்கிறது
‘இன்னும் கொஞ்சம் என்னை வேக வையுங்கள்
உங்கள் கைக்கரண்டியால் என்னைக் கிளறுங்கள்
எனக்கு நானே இதைச் செய்துகொள்ள முடியாது!

நானோ
பாகனை மறந்துவிட்டு
இந்தியாவின் தோட்டங்களைக்
கனவு காணுமொரு யானையைப் போல் இருக்கிறேன்.

நீங்களே என் சமையல்காரர்
நீங்களே என் பாகன்
உள்ளமைக்கு என் வழி நீங்களே!
உங்கள் சமையலை நேசிக்கின்றேன்.’

அந்தச் சமையல்காரர் சொல்கிறார்:
’நானும் உன்னைப் போல்தான் இருந்தேன்,
மண்ணிலிருந்து புதிதாக, பச்சையாக.
பிறகு காலத்தில் வெந்தேன்
அதன் பின் உடலில் வெந்தேன்
உக்கிரமான இரண்டு வேகல்.

என் மிருக மனம் வலிமையுடன் வளர்ந்தது
பயிற்சிகளால் அதனைப் பக்குவம் செய்தேன்
மேலும் கொஞ்சம் வெந்தேன்
அதற்கு அப்பாலும் வெந்து முடித்தேன்,
உன்னுடைய குருவாய் ஆனேன்.”



Saturday, March 16, 2013

ஊசியின் காது



இறைவனைப் பற்றிச் சராசரி மனிதர்கள் விளங்குவதற்கும் இறைஞானிகள் விளங்குவதற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு.

இறைவனின் வல்லமையைக் கூட தம் அறிவு எல்லையில் நின்று மட்டுமே விளங்கும் நிலை நிறைய பேரிடம் இருக்கின்றது.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: “ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா?”

இஃது ஒரு நிபந்தனையாகத் திருக்குர்ஆன் வசனமொன்றில் குறிப்பிடப்படுகிறது, இவ்வாறு:
“எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து
மேலும் அவற்றிடம் தற்பெருமை அடித்தார்களோ
நிச்சயமாக அவர்களுக்கு
வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டா;
ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில்
அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைய மாட்டார்கள்;
குற்றவாளிகளுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம்”
(7:40)

ஆக, “ஊசியின் காதில் ஒட்டகம் நுழைய முடியுமா?” அல்லது, “ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைக்க முடியுமா?”

சிறுபிள்ளைகளிடம் இக்கேள்வியைக் கேட்டால், வியப்பில் விழிகள் விரிய அவர்கள் விடை தருவார்கள், “நிச்சயமாக முடியாது” என்று.

அத்தனை சிறிய ஓட்டைக்குள் இத்தனை பெரிய ஒட்டகம் எப்படி நுழையும்? முடியாது, முடியவே முடியாது.

இறை நம்பிக்கையாளர் இப்படிச் சொல்வார்: “நம்மால்தான் முடியாது. ஆனால் இறைவனால் முடியும். அவன் சர்வ வல்லமை உடையவன்”

தர்க்கத்தின் பால பாடத்தில் கொஞ்சம் பயிற்சி உள்ளவராக இருப்பவரும்கூட இப்படிச் சொல்வார்:
“ஒரு பெரிய ஊசி செய்ய வேண்டும். அதன் காது ஒட்டகத்தை விடவும் பெரிதாக இருக்க வேண்டும். பிறகு ஒட்டகத்தை அதனுள் நுழைந்து அப்பால் போகும்படிச் செய்துவிடலாம். இது மனிதனால் முடியும் அல்லவா?”

இதே தர்க்கத்தைப் பயன்படுத்தி இன்னொரு இறைநம்பிக்கையாளர் சொல்வார்: “சரிதான். இன்னொரு வழி என்னவெனில் ஊசியின் காதைவிட ஒட்டகத்தைச் சிறியதாக்கி விட வேண்டும். அப்போதும் ஒட்டகம் ஊசியின் காதிற்குள் நுழைந்து அப்பால் போய்விடும். ஒட்டகத்தை அத்தனை சிறிதாக்க மனிதனால் முடியாது. ஆனால் இறைவனால் முடியும்.”

இவையெல்லாம் மனிதன் தன் அறிவின் எல்லைக்குள் நின்று பேசுவதாகவே உள்ளன. இதே விஷயத்தில் இறைஞானிகள் எப்படிப் பார்வை கொண்டுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.

அடியேனின் குருநாதர் பிலாலி ஷாஹ் ஜுஹூரி அவர்கள் பிரசங்கம் ஒன்றில் சொன்னார்கள்:
“ஊசியின் காதைப் பெரிதாக்கி அதில் ஒட்டகத்தை நுழைத்துவிடும் ஆற்றல் பெற்றவன் அல்லாஹ் என்று சிலர் சொல்கிறார்கள்.
ஒட்டகத்தைச் சிறிதாக்கி அதை ஊசியின் காதில் நுழைத்துவிடும் ஆற்றல் பெற்றவன் அல்லாஹ் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.
ஊசி அதன் அளவில் சிறியதாகவே இருக்க, ஒட்டகம் அதன் அளவில் பெரியதாகவே இருக்க, அப்போதும் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்து வெளியேற்றிவிடும் ஆற்றல் பெற்றவன் அல்லாஹ்!”

இதே போல் இன்னொரு விஷயமும் நியாபகம் வருகிறது.

யானையைப் படைத்தவனும் அவனே; பூனையைப் படைத்தவனும் அவனே.
யானைக்கு அதற்குத் தேவையான உணவை அளிப்பவன் அவனே. பூனைக்கு அதற்குத் தேவையான உணவை அளிப்பவன் அவனே.

யானைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தருகிறான். பூனைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தருகிறான். மாற்றி வழங்குவதில்லை.
யானைக்குத் தேவையான அளவு உணவைப் பூனைக்கு ஊட்டினால் பூனை வயிறு வெடித்துச் செத்துவிடும். பூனைக்கான அளவு உணவை யானைக்கு வழங்கினால் அது பட்டினியில் செத்துவிடும். எனவே எது எதற்கு எவ்வளவு தேவையோ அது அதற்கு அவ்வளவு வழங்குகின்றது அவனின் அளப்பரிய அருள்.

இதுவரை சொன்னது ஒருநிலை வரையிலான சிந்தனை. ஆனால் ஆன்மிகம் அதற்கு அப்பாலும் போகிறது.

இறைவன் நாடினால், பூனையின் வயிற்று அளவிற்கான உணவிலிருந்து யானைக்குத் தேவையான சக்தியை வழங்குவான். அது யானைக்கு மட்டுமல்ல, பூனைக்குமே!

யானைக்கான அளவு உணவை ஒரு பூனை தின்று செறித்து விடும்படியும் செய்வான்!

அவன் நாடினால் பூனை ஒன்று யானையையே தின்றுவிடும்படியும் செய்வான்.

சிறியதில் எப்படிப் பெரியது அடங்கும் என்று மனித அறிவு சிந்தித்துக் கொண்டிருக்கட்டும்.

அளவில் அளவற்றது நிகழும் என்பதை அறிந்தவர்கள் ஆயிரம் பேர் உண்டு.

”நிச்சயமாக அல்லாஹ்தான் உணவளித்துக் கொண்டிருப்பவன்
சக்தியாளன், உறுதியாளன்” (51:58)

அனைத்துப் படைப்புக்கும் அவனே இரணம் தருகின்றான். இரணம் என்பது உணவை மட்டும் குறிப்பதாக எண்ண வேண்டாம். உண்மையில் இரணம் என்பது அவனின் திருப்பண்புகளின் ஒளிச்சுடர்களை அவன் நம்மில் பிரதிபலிப்பதே ஆகும். அவ்வகையில், சக்தி என்பது அவனின் ஒரு திருப்பண்பு. அதை அவன் நமக்கு ஊட்டும் ஒரு வடிவமே உணவு என்பது.

ஜீவன், அறிவு, ஆற்றல், நாட்டம், கேள்வி, பார்வை, பேச்சு – இவை எல்லாம் அவன் நமக்களிக்கும் ’ரிஜ்க்’ (இரணம்) ஆகும்.

”இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றான்” (2:212)

அவ்வாறு கணக்கின்றி அவன் தருவது அவனின் அருளைக் கொண்டாகும். அது எவரின் உரிமையும் அல்ல. இந்த அருள் “ஃபஸ்ல்” எனப்படும்.

“அவர்கள் செய்த(தற்கு) மிக அழகானதை
அவர்களுக்கு அல்லாஹ் கூலியாக வழங்குவதற்காகவும்
அவனுடைய நல்லருளைக் கொண்டு
மேலும் அவன் அதிகப் படுத்துவதற்காகவும்.
மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக்
கணக்கின்றிக் கொடுக்கிறான்”
(24:38)

அவன் கணக்கின்றிக் கொடுக்க நாடினால் கால அளவும் இல்லை, இட அளவும் இல்லை. அந்தத் திரைகளை அவன் தூக்கி விடுகிறான். ஏசுநாதரின் பரிசுத்த அன்னையான மர்யம் (அலை) அவர்களுக்கு அவன் எப்படி உணவளித்தான் என்பதைச் சிந்தியுங்கள். குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும் கனிகளைக் கோடையிலும், கோடையில் மட்டுமே கிடைக்கும் கனிகளைக் குளிர்காலத்திலும் அவர்கள் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். மட்டுமல்ல, அந்தக் காலத்தில் அந்த நாட்டிலேயே கிடைக்காத கனி வர்க்கங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

“அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை
அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;
அவளை அழகிய தூய்மையில் வளர்த்தான்;
ஜகரிய்யாவின் பொறுப்பில் வைத்தான்;
ஜகரிய்யா அவளின் தொழுகை அறைக்குள் செல்லும்போதெல்லாம்
அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார்;
அவர் கேட்டார்:
‘மர்யமே! இது உணக்கு எங்கிருந்து வந்தது?’
அவள் சொன்னாள்:
‘இது அல்லாஹ்விடமிருந்து வந்தது.
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்குக்
கணக்கின்றி வழங்குகிறான்”
(3:37)

அந்த மர்யமின் மணிவயிற்றில் உதித்த ஏசுநாதர்தான் தன் சீடர்களுக்கு சொர்க்கத்தில் இருந்து உணவுகளை – மேசையில் விரிப்புடன் வைக்கப்பட்ட நிலையில் – வரவழைத்துக் கொடுத்தார்கள்! கணக்கின்றி அவன் தருகின்ற போது அதற்கு இவ்வுலகு அவ்வுலகு என்னும் எல்லைகளும் இல்லை. இரு உலகிற்குமான திரைகளை அவன் தூக்கிவிடுகிறான்.

”மர்யமுடைய மகன் ஈசா சொன்னார்:
‘அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது
ஓர் உணவு மரவையை இறக்குவாயாக;
அது எங்களுக்கு- எங்களில் முன்னவர்களுக்கும்,
எங்களில் பின் வருபவர்களுக்கும்
ஒரு பெருநாளாகவும்
உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்;
இன்னும் எங்களுக்கு உணவளிப்பாயாக
நீயே உணவளிப்போரில் மேலானவன்’”
(5:114)

அவன் எல்லையின்றி வழங்க நாடுகின்ற போது வாழ்வு மற்றும் மரணம் என்று மனித மனம் வகுத்து வைத்திருக்கும் எல்லைகளையும் அவன் நீக்கிவிடுகிறான்.

”அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டவர்களை
மரணித்தவர்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்;
அவர்கள் தம் ரட்சகனிடம் உயிருடனிருக்கின்றார்கள்
அவர்கள் (அவனால்) உணவளிக்கப்படுகின்றார்கள்.
தன் (ஃபஸ்ல்) அருளிலிருந்து
அல்லாஹ் அவர்களுக்கு
அளித்ததைக் கொண்டு ஆனந்தமாய் இருக்கின்றார்கள்”
(3:169,170)

எல்லையற்ற வாழ்வை – ஜீவனை அவன் தந்துவிடுகிறான். இன்னும், ஜீவனுடன் இருந்து நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இதர பண்புகளான அறிவு ஆற்றல் நாட்டம் கேள்வி பார்வை பேச்சு ஆகியவற்றையும் அவன் எல்லையின்றித் தருகின்றான்.

மேலும் தன் நேச நபிக்கு அவன் ஒரு பிரார்த்தனையைக் கற்றுத்தருகின்றான்:
“நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்
நீதான் பகலை இரவில் புகுத்துகின்றாய்
மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளிப்படுத்துகின்றாய்
உயிருள்ளதிலிருந்து மரித்ததை நீயே வெளிப்படுத்துகின்றாய்
மேலும், நீ நாடியோருக்குக்
கணக்கின்றிக் கொடுக்கின்றாய்”
(3:27)

எல்லை இன்றி அவன் தருகின்ற போது
இல்லை என்று சொல்ல இடம்தான் ஏது?

Wednesday, March 6, 2013

இன்று தெரிந்த இழை



வியப்பின் அலைகள் அடுத்தடுத்து மனதில் மோதிக் கொண்டிருந்தன.

முத்துக்கள் சிதறிக் கிடப்பது போல் தெரிகின்றன. ஆனால் கண்ணுக்குத் தெரியாத இழை ஒன்றில் அவை ஏற்கனவே கோர்க்கப்பட்டே கிடக்கின்றன.

இன்று என் இதயத்தில் அந்த இழை தட்டுப்பட்டது.

காலை 8:30, கல்லூரியில் முதல் பிரிவேளை. முதுகலைத் தமிழ் வகுப்பில் நாகூர் ரூமியின் ”சூஃபி வழி” நூலை முன்வைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். லைலா மஜ்னூன் கதை ஒரு சூஃபிக் கதை என்று அவர் அதில் எழுதியிருந்ததை விளக்கினேன்.
அப்துல் ரகுமான் ஒரு கட்டுரையில் லைலா மஜ்னூன் கதையைச் செறிவு கொண்ட நாடகம் போல் எழுதியிருந்ததை எடுத்துச் சொன்னேன். அதில் ஒரு காட்சி:

ஸ்லேட்டில் மஜ்னூன் மீண்டும் மீண்டும் லைலாவின் பெயரையே எழுதிக் கொண்டிருக்கிறான். அதைப் பார்க்கும் அவள் அவனிடமிருந்து பலகையைப் பிடுங்கி லைலா என்ற பெயருக்குப் பக்கத்தில் கயஸ் என்று அவனின் இயற்பெயரை எழுதுகிறாள். (மஜ்னூன் என்பது அவனுக்குப் பட்டப்பெயர். பித்தன் என்று பொருள்!) உடனே அவன் அவளிடமிருந்து பலகையைப் பறித்துத் தன் பெயரை அழிக்கிறான். அவளிடம் சொல்கிறான், “இப்படி நம் பெயர்களைத் தனித்தனியே எழுதாதே. லைலா என்று எழுதினாலே அதற்கு கயஸ் என்றுதான் அர்த்தம்!”

பாடம் முடிந்து வந்துவிட்ட பிறகு இவ்விஷயம் மறந்துவிட்டது. மீண்டும் இடைவேளையில் இழை ஓடிற்று. அப்துல் ரகுமானுக்குச் சொல்-பொருள் என்னும் இணையின் மீது தனி ப்ரீத்தி உண்டு. “சொல்லும் பொருளும் அமரக் காதலர்களாக எனக்குத் தெரிகிறார்கள்” என்று அவர் எங்கோ எழுதியிருப்பது ஞாபகம் வந்தது.

தன் கஜல் கவிதைகளில்கூட அவர் ஒரு துளியை இப்படி வரைகிறார்:
“என் காதல் கடிதம்
இப்படித்தான் தொடங்கியது:
நான் வெறும் சொல்லே
நீயே அதன் பொருள்”

தொலை மாவட்டம் ஒன்றில் உள்ள ஒரு கல்லூரிக்காக வினாத்தாள் குறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். நண்பகல் 12:00. உச்ச வேளையில் ஓர் உச்சக் கவிதையைப் புரட்ட நேர்ந்தது. பாரதியாரின் கண்ணம்மா என் காதலி வரிசையில் யோகம் என்ற கவிதை. அதில் அப்துல் ரகுமானின் முன்னோடி தென்பட்டான் இப்படி:
“பேசு பொருள் நீ எனக்கு
பேணும் மொழி நான் உனக்கு”

பொருள் என்றால் அர்த்தம். மொழி என்பது சொல்லைக் குறிக்கும்.

சிந்தனை இப்படி ஓடுகையில் தொல்காப்பிய வரி ஒன்று சிந்தனையில் மின்னிற்று:
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”. வியப்பாக இருந்தது, இந்த வரியைத்தான் காலை இரண்டாம் பிரிவேளையில் இளங்கலை வகுப்பில் பாடத்தினூடே பேசிவிட்டு வந்திருந்தேன்.

அனைத்துச் சொல்லும் ஏதேனும் பொருளைக் குறிப்பதாகவே இருக்கிறது; ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருளாவது உண்டு என்பது மட்டும் இவ்வரியின் அர்த்தம் அன்று. இந்த வரியைத் தொல்காப்பியர் ஒரு வரட்டு இலக்கணத் தகவலாக மட்டும் எழுதியிருப்பார் என்று எண்ணுவது பிழை. ஏகாரத்தில் முடியும் இந்த வரி அவரின் மனத்தில் எழுந்த தீரா வியப்பு ஒன்றை ஒலிப்பதாகவே நான் உணர்கிறேன். “அடடா! எல்லாச் சொல்லும் பொருளைக் குறிப்பதாகவே இருக்கிறதே!” என்ற வியப்பு. அர்த்தம் அற்ற சொல் அவணி மிசை இல்லை என்று அறிந்த கணத்தின் ஆழ்ந்த ஆனந்த வியப்பு அது.

இரவு 9:00. உண்டி முடித்து நீர் குடித்து எழுந்த போது மனத்தில் ஓர் பாடலும் எழுந்தது. நபி பெருமான் மீது காதல் கொண்டு புனையப்பட்ட ’நாத்’ என்னும் வகைப் பாடல். உணர்வில் உயிர் பொங்கி உள்ளம் உருகிட உருது மொழியில் ரஜாவுல் ஹக் அலீமி ஷாஹ் ஆமிரி அவர்கள் இயற்றியது. அவர்களே பாடக் கேட்டுச் சொக்கிப் போயிருக்கிறேன். அந்தப் பாடலை முன்பு எப்போதோ ஓர் அட்டையில் எழுதி வைத்திருந்தேன். முதல் கண்ணி மட்டும் நினைவில் இருந்தது:
“இரவு உங்கள் கூந்தலின் அசைவு
விடியல் உங்கள் முகத்தின் அழகு
என் இதயமெனும் கிண்ணத்தில்
என் பார்வை எனும் திருவோட்டில்
கொஞ்சம் ஒளிப்பிச்சை போடுங்கள் நபியே!”
(ராத் தேரீ ஸுல்ஃபோன்கா உதாரா ஸுப்ஹு தேரே ருஃக்சார் கீபீ
காஸ்ஸாயே தில் கஷ்கோலே நஜர் மே டால்தே குச் அன்வார் கீபீ)

பாடலை முழுமையாய்ப் படிக்கும் ஆவலுடன் தேடினேன். புத்தக அடுக்குகளுக்கு இடையே அகப்பட்டது. எடுத்துப் பாடிக்கொண்டே வரும்போது வியப்பின் இன்னொரு அலை அப்பாடலின் ஐந்தாம் கண்ணியில் அடித்தது.

அந்த ஐந்தாம் கண்ணி மிகவும் நுட்பமானது. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள ரகசியமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பதைச் சொல்லும் கண்ணி அது. அதில் சொல்லும் பொருளும் சொல்லப்பட்டிருந்தது:
“துகளிலே பாலை
துளியிலே பரவை
திரையிலே ஜுவாலை
காதலில் அழகு
வார்த்தையில் அர்த்தம்
அடிமையில் இறைவன்
என்னில் உம் ரகசியம்
கண்டு கொண்டேன்”
(தர்ரே மே சஹ்ரா கத்ரே மே தர்யா பர்தே மே ஜல்வா இஷ்க் மே ஹுஸ்ன்
லஃப்ஸ் மே மஃனா அப்த் மே மவ்லா முஜ் மே தேரே அஸ்ரார் கீபீ)
(குறிப்பு: பரவை என்றால் கடல். உருதுவில் என்ன மெட்டில் மகான் பாடினார்களோ அதே மெட்டில் தமிழாக்கம் செய்திருப்பதால் இப்படி பழந்தமிழ்ப் பதம் ஒன்றினைப் பயன்படுத்த நேர்ந்தது.)



Friday, March 1, 2013

ஓர் அல்லி மலர் போல்



சில தினங்களுக்கு முன் – பல தினங்களாகவும் இருக்கலாம் – என் இல்லத்திற்கு வந்திருந்த மௌலா.அப்துல் காதிர் பிலாலி அவர்கள் தன் பாட்டனார் தமிழாக்கம் செய்த சூஃபி ஞான நூல் ஒன்றினை அன்பளிப்பாகத் தந்து சென்றார்கள்.

“மெய்வழி – ’ஹிகம்’ மொழிபெயர்ப்புச் சுருக்கம்” என்பது தமிழில் அந்நூலுக்குக் கொண்டுக்கப்பட்டுள்ள தலைப்பு. தமிழாக்கம் செய்தவர் மௌலவீ அல்ஹாஜ் டி.எம். மூஸாகான் பாகவி என்னும் மகான். உத்தமபாளையத்தில் வாழ்ந்தவர்கள். ஏற்கனவே அந்நூலின் முதற்பதிப்புப் பிரதி (1963) ஒன்று என்னிடம் இருக்கிறது. எனினும் மௌலா ஹாஜி. ஷாஹுல் ஹமீது ஃபைஜி அவர்கள் பதிப்பித்திருக்கும் இப்பிரதி எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி தந்தது.

அரபியில் ’ஹிகம்’ என்றால் ஞானங்கள் என்று அர்த்தம். சூஃபித்துவ உலகில் மைல்கல் போல் கருதப்படும் ஞான விளக்க நூல்களில் இதுவும் ஒன்று. இதனை இயற்றிய ஞானி இப்னு அதாவுல்லாஹ் அஸ்ஸிக்கந்தரிய்யி (IBN ATAILLAAH OF ALEXANDRIA, d.1309) அவர்கள் ஷாதுலிய்யா ஞானப் பள்ளியின் (தரீக்காவின்) மூன்றாம் தலைமை குருநாதர்.
உலகெங்கும் பரவியிருக்கும் ஷாதுலிய்யா நெறியில் ஆத்ம சீடர்களால் அடிக்கடி படித்தும் பரிமாறியும் சிலாகிக்கப்படும் இந்நூலுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் பல உள்ளன. இணைய தளங்களிலும் விரிவுரைகளும் விளக்கங்களும் செய்யப்பட்டு வருகின்றது.

செழுமையான அரபி நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் எண்ணிடப்பட்டு அறிவுரைகள் அமைந்துள்ளன. ஞானம் செறிந்த சிறு சிறு வாசகங்கள் அவை என்று அறிஞர்கள் போற்றுகின்றனர். டாக்டர் அப்துல் ஜப்பார் விக்டர் டான்னர் என்பார் இந்நூல் பற்றிக் கூறுவதாவது, “ஹிகம் நூல் வேறு பரிமாணத்தில் உள்ளது. அது மீண்டும் மீண்டும் படிக்கப் படும்போது ஆழமாக வேலை செய்கின்ற தன்னளவில் நிறைவான நூலாகும். ஞான ஒளியைத் தேடுவோர்க்கு மிக ஆழமான, காலாதீதமான, குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் அமைந்த முத்துக்களை அது வழங்குகின்றது”

நண்பர் வழங்கிச் சென்ற பிரதியை இன்று மாலை அகஸ்மாத்தாகப் புரட்டியபோது 117-ம் எண்ணிட்ட உபதேசத்தில் இருந்த ஞான வெளிச்சத்தில் சொக்கி நின்றுவிட்டேன். அது பின்வருமாறு. குறிப்பு: [ ] என்னும் அடைப்புக்குள் அடியேன் அரபியைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன்.

“அறிவு ஞானமற்ற பொது ஜனங்கள் ஏதாகிலுமொரு பாவமான காரியங்களைச் செய்தால் அதை மறைக்கும்படி அல்லாஹுத் தஆலாவிடம் துஆ [மேலான இறைவனிடம் பிரார்த்தனை] கேட்பார்கள். ஏனெனில் ஜனங்களுக்குத் தெரிந்தால் தன்னுடைய மதிப்பு போய்விடும் (இன்னும்) அவர்களின் உபகாரம் ஒத்தாசைகள் இல்லாமல் போய்விடும் என்பதைப் பயந்து அவ்விதம் மறைக்கக் கேட்பார்கள்.

ஆகவே அவர்களின் எண்ணமும் கவனமும் மனிதர்களைப் பற்றியதாய் ஆகிவிடுகிறது. ஆனால் அல்லாஹுத் தஆலாவிற்குச் சொந்தமான அறிவு ஞானமுள்ள ஜனங்கள், பாவமான காரியங்கள் தங்கள் மனதுகளில் ஊசாடாமலும், அதன் பக்கம் சிந்தனைகள் செல்லாமலும் பாவங்களை விட்டும் மறைக்க அல்லாஹுத் தஆலாவின் பொருத்தமெனும் பார்வையை விட்டு விழுந்து விடுவார்கள் என்பதைப் பயந்து மறைக்கக் கேட்பார்கள். ஆகவே இவர்களின் எண்ணமும் சிந்தனைகளும் அல்லாஹுத் தஆலாவைப் பயந்ததினால் இருக்கிறது.

இவ்விரு கூட்டத்தார்களின் நோக்கங்களுக்கிடையில் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. அதாவது ஒரு கூட்டத்தினர் சிருஷ்டிகளைப் பயந்தும் மற்ற கூட்டத்தினர் ஹக்கைப் பயந்தும் மறைக்கத் தேடுகிறார்கள்”

இந்த ஞான உரையின் கருத்தில் என் சிந்தனை நெடு நேரம் நின்றிருந்த போது  மௌலானா ரூமி (ரஹ்) தன் மஸ்னவி காவியத்தில் சொல்லியிருக்கும் ஒரு கதை ஞாபகம் வந்தது. இதற்கும் அதற்கும் அடிப்படையில் என்ன தொடர்பு என்று தெளிவாகத் தெரியவில்லை. மௌலானா ரூமியும் இப்னு அதாவுல்லாஹ்வும் சமகாலத்தவர்கள் என்பதாலா? ஆனால், மௌலானா ரூமியின் அந்தக் கதையில் வருபவனும் தன் பாவங்கள் மறைக்கப்பட வேண்டும் என்று விரும்புபவனே! அந்தக் கதை இதோ:

“சில காலங்களுக்கு முன் நஸூஹ் என்னும் பெயர்கொண்ட ஒருவன் இருந்தான். ஹமாம் என்னும் பொதுக் குளியலறையில் பெண்களுக்கு தேகம் தேய்த்து விடும் பணி செய்து வாழ்ந்து வந்தான். அவன் முகத்தில் தாடியும் இல்லை, மீசையும் இல்லை.

இளம்பெண்ணின் முகமாய் அது தோற்றம் தந்தது. அவன் பெண்வேடம் தரித்துக் கொண்டான், வேலைக்காக. ஆனால் அவன் அலி அல்ல. ஆண்மையை மறைத்துக் கொண்டான், அவ்வளவே.

பெண்களின் கேசத்தை அலசும்போது அவர்தம் மேனியைத் தீண்டுவதில் இன்பம் கண்டிருந்தான். அழகிய யுவதிகளுக்கு, குறிப்பாக இளவரசிக்கு, சதைபிடித்து விடுவதில் அவனின் பாலுணர்வு சதாகாலமும் வீரியமுடன் விழித்துக் கிடந்தது.

இப்படி தொடர்ந்து காமுகமாய் இருக்க வேண்டி இல்லாததாய் வேறு ஏதாவது ஒரு வேலைக்குப் போய்விட்டால் என்ன என்று அவன் மனம் அடிக்கடி யோசிக்கும். ஆனால் அவனால் அந்த வேலையை விட்டு விலக முடியவில்லை.

அப்போது, அவ்வூருக்கு வந்திருந்த இறைநேசர் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டான். சூஃபி, மகான், ஞானி என்றெல்லாம் அவரைப் பற்றிய வியப்புரைகள் அவன் செவியில் விழுந்து அவரிடம் இழுத்தன. சென்று கண்டான். “உங்கள் பிரார்த்தனையில் என்னையும் ஞாபகம் வையுங்கள்” என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.

உலகை விட்டு விடுதலை ஆன அந்த மகான் இறைவனின் பக்கம் முற்றிலும் தன்னைத் திறந்து வைத்தவர் ஆவார். நஸூஹின் இரகசியம் அவருக்கு வெளிச்சமானது. எனினும், தகைமையால் அவர் அது பற்றிப் பேசாமல் இருந்தார்.

இறைஞானி சொற்பமாகவே பேசுகிறார். ஆனால் அவர் தெய்வீக மர்மங்களால் நிரம்பியவர் ஆவார். அவருக்குள் பல ரகசிய குரல்கள் கேட்ட வண்ணம் உள்ளன. அந்தக் கோப்பை புகப்பட்டப்பட்ட எவரும் மௌனமாகத்தான் இருப்பார்.

அந்த மகான் புன்னகை செய்துவிட்டுச் சத்தமாகப் பிரார்த்தித்தார், “எப்படி என்று உனக்கே தெரிந்த வழியில் நீ உன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும்படி அல்லாஹ் உன்னை ஆக்கி அருள்வானாக!”

அத்தகைய சூஃபியின் பிரார்த்தனை பிறரின் பிரார்த்தனைகளை விட்டும் வேறுபட்டது. அவர் தன் சுயத்தை முற்றிலும் கரைத்துவிட்டவர் ஆவார். தான் ஒன்றுமில்லை என்பதை ஆழமாக உணர்ந்தவராவார். அவரின் பிரார்த்தனை இறைவன் தன்னுடன் தானே உரையாடுவது போன்றது. அது மறுக்கப் படுவதில்லை.

நஸூஹ் தன்னை மாற்றிக் கொள்வதற்கான காரணங்கள் வெளிப்படத் தொடங்கின.

ஆடையற்ற ஓர் இளம்பெண்ணுக்கு அவன் தொட்டியில் நீர் வார்த்துக் கொண்டிருந்த போது தன் காதணியில் பதித்திருந்த பெரிய முத்து ஒன்று இல்லாததை அவள் கண்டாள்.

சட்டென்று, கதவுகள் அடைத்துத் தாழிடப்பட்டன. மெத்தைகளிலும் விரிப்புகளிலும் துவட்டும் துண்டுகளிலும் ஆடைகளிலும் அந்த முத்து தேடப்பட்டது. எங்கும் இல்லை.

இப்போது அரசரின் பெண்கள் அனைத்துப் பெண்களையும் சோதிக்கிறார்கள், வாயில், அக்குள்களில், அபங்களில், எங்கெல்லாம் மறைக்க முடியுமோ எல்லா இடங்களிலும்.

எப்பெண்ணும் சோதனைக்குத் தப்ப முடியாது என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொருவரையும் ஆடை களைய ஆணையிடுகிறாள் அந்தப்புரத்தின் அதிகாரப் பெண்.

அப்போது நஸூஹ் ஒரு குளியலறைக்குள் தாழிட்டுக் கொண்டு நிற்கிறான், நடுங்கியபடி!

“அந்த முத்தை நான் திருடவில்லை. ஆனால் அவர்கள் என்னை அம்மணமாக்கிப் பார்த்தால்? இந்தப் பெண்களால் நான் அடையும் நிலையைக் கண்டுவிட்டால்? இறைவா! என்னைக் காப்பாற்று. நான் பொடுபோக்காக இருந்துவிட்டேன். ஆனால், தயவு செய்து இந்த முறையும் என் பாவத்தை மறைத்துவிடு. நான் எப்படி இருந்தேன் என்பதை வெளிப்படுத்திவிடாதே இறைவனே! நான் திருந்திவிடுகிறேன்.”

அவன் அழுகிறான், முணகுகிறான், மீண்டும் அழுகிறான், அவனுக்கான நேரம் நெருங்கி வருகிறது.

’நஸூஹ், உன்னைத்தவிர எல்லோரையும் சோதனை செய்தாகிவிட்டது. நீ வெளியே வா. உன்னையும் பார்த்து விடுவோம்’

அந்தக் கணத்தில் அவன் உயிரின் சிறகுகள் படபடக்கின்றன. பறவை மேலே எழும்பி விட்டது.

அவனின் தன்முனைப்பு இடிந்த சுவர் போல் சாய்ந்து விழுந்தது.

தன்னில் தான் இல்லாமல், ‘நான்’ இல்லாமல், இறைவனுக்குத் தலைசாய்த்து விட்டான்.

அவனின் கப்பல் மூழ்கி அவ்விடத்தில் கடல் அலையடித்து அசைகிறது.

ராஜாளியின் கால் பிடி நழுவி அதிலிருந்து விழும் இரையைப் போல் அவனின் தேக அவமானம் விழுந்து விட்டது.

அவனுடைய கற்கள் நீர் அருந்துகின்றன. அவனின் களம் தங்க இழை தைத்த பட்டுத்துணி போல் பளபளக்கிறது.

நூறு ஆண்டுகள் செத்துக் கிடந்த ஒருவர் சட்டென்று உயிர்பெற்று வாலிப முறுக்குடன் வருகின்றார்.

முறிந்த கிளையில் முகை அரும்பி முறுவல் செய்கிறது.

இதெல்லாம், அச்சம் கிளப்பிய அந்த அழைப்பிற்குப் பின் நஸூஹின் உள்ளே நடக்கின்றன.
நீண்ட இடைவெளி. மிக நீண்ட மௌனம்.

அப்போது ஒரு பெண் உரத்த குரலில் கத்துகிறாள், ‘இதோ இங்கே இருக்கிறது!”
குளியல் சாலை கைத்தட்டல் ஓசைகளால் நிரம்புகிறது. நஸூஹ் தன் புதிய வாழ்க்கை தன் முன் ஒளிவீசக் காண்கிறான்.

பெண்கள் அவனிடம் (அவளிடம்!) மன்னிப்புக் கேட்கக் கூடுகிறார்கள், “உன் மேல் சந்தேகப் பட்டதற்கு ரொம்ப வருந்துகிறோம். நீ எடுக்கவில்லை என்று எங்களுக்குத் தெரியும்.’

எப்படியெல்லாம் அவனைச் சந்தேகப் பட்டுவிட்டோம் என்று பலவாறு பேசி அவனிடம் அவர்கள் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இறுதியில் அவன் பேசுகிறான்: ‘நீங்கள் யாரும் நினைத்ததை விடவும், சொன்னதை விடவும் நான் ரொம்பவும் அவமானக்காரன். உலகிலேயே மிகவும் கேவலமானவன் நான்தான். நீங்கள் சொன்னதெல்லாம் நான் செய்ததில் நூறில் ஒரு பங்குதான். என்னிடம் மன்னிப்புக் கேட்காதீர்கள்.

உங்களுக்கு என்னைத் தெரியவே தெரியாது. ஒருவருக்கும் தெரியாது. என் கேவலத்தை அல்லாஹ் மறைத்துவிட்டான். சைத்தான் எனக்குத் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தான். ஆனால் கொஞ்ச காலத்தில் அவை எனக்கு எளிதாகி விட்டன. எந்த அளவுக்கு என்றால், பிறகு நான் சைத்தானுக்குத் தந்திரங்கள் சொல்லித் தந்தேன். அல்லாஹ் நான் செய்வதை எல்லாம் பார்த்தான். ஆனால், பொது இடத்தில் என் பாவங்களை வெளிப்படுத்தவில்லை.

இப்போது நான் மீண்டும் முழுமையில் தைக்கப் பட்டுவிட்டேன்.

நான் செய்தவை இப்போது நான் செய்யாதவை போல.

எந்த அடிபணிவை நான் செய்யாது இருந்தேனோ, அதை இப்போது செய்துவிட்டேன்.

ஒரு சைப்ரஸ் மரம் போல், ஒரு அல்லி மலர் போல், தூய்மையாக, கண்ணியமாக, விடுதலையாக, சட்டென்று இப்போது அப்படி உணர்கிறேன்.

நான் சொன்னேன், “போச்சே! என்னைக் காப்பாற்று.” அந்தப் ‘போச்சே!’ என்னும் கைசேதம் ஒரு கயிறாகி என் கிணற்றுக்குள் இறங்கி வந்தது. அதைப் பிடித்து ஏறி வந்து நான் இப்போது சூரிய ஒளியில் நிற்கிறேன்.

ஒரு கணம், நானொரு குறுகிய நாறுகின்ற சேற்றில் கிடந்தேன். மறுகணம், இந்தப் பிரபஞ்சமும் என்னைக் கொள்ள முடியா விசாலம் ஆனேன்.

என் உடலில் உள்ள ஒவ்வொரு ரோமமும் பேச முடிந்தாலும் நான் என் நன்றியை நவில இயலாது.

இந்த வீதிகளின் தோட்டங்களின் குறுக்கும் மறுக்கும் நின்றுகொண்டு நான் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம், ‘நான் அறிந்ததை எல்லோரும் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்பது மட்டுமே!”