’எதுவுமே
உவமை
இல்லை
உனக்கு’
என்றேன்
’என்
மகத்தான உவமை
நீதான்’
என்றாய்
*
விளக்கின்
வெளிச்சத்தில்
வித வித
வேலைகள்
விலகிச்
செல்வோருக்கு
விட்டிலின்
வேலை
விளக்கில்
வீழ்வது மட்டுமே
*
காணாமல்
போன விளக்கைத்
தேடித்
திரிந்தது ஒரு விட்டில்
கண்டடைந்த
போதோ
விளக்கில்
வீழ்ந்து
காணாமல்
போனது
*
ஆயிரம்
நூல்களில்
அறியாத
ஒன்றை
அறிந்தேன்
உன் கண்களில்
ஆயிரம்
நூல்கள் எழுதினும்
சொல்லிவிட
முடியாது அதை
*
உன் காதலின்
வீதியில்
அலங்கோலமாய்
அலைகின்றேன்
மீண்டும்
பிறரிடம்
நான் மதிப்போடிருந்த நாட்களுக்கு
எந்த
மதிப்புமில்லை என்னிடம் இப்போது
*
வேறு
வேறோ?
ஒன்றுதானோ?
உன் முத்தத்தின்
இன்பம்
அதன்
நினைவின் இன்பம்
*
பரிதாபம்
கொள்வோர்க்குத் தெரியுமோ
என் வலியின்
பின்னே உள்ள சுகம்?
பொறாமை
கொள்வோர்தான் அறிவாரோ
என் சுகத்தின்
பின்னே உள்ள வலி?
Nice
ReplyDelete