Tuesday, July 31, 2012

நீரால் ஆனது



’நீராலானது’ - தேவதேவன் தன் கவிதைத் தொகுப்பு ஒன்றனுக்கு இப்பெயர் சூட்டினார். என்னை மிகவும் கவர்ந்த தலைப்புக்களில் இதுவும் ஒன்று.

இது ரமலான் மாதம். நோன்பின் மாதம். உணவுத் தடை மட்டுமன்று. வற்றி வரலும் வாய்க்கும் வயிற்றுக்கும் நீர்கூட வார்க்காத நோன்பு. ரமலான் என்றால் ’எரிப்பது’ என்று பொருள். பசி ஒரு தீ. அந்தப் பசித்தீ ரமலானில் முக்கிய இடம் பெறுகிறது.

சில நாட்களுக்கு முன் கல்லூரியில் ஒரு பேராசிரியர் சொன்னார், “உணவு கூட இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் தண்ணீர் தாகம்தான் அதிகக் கஷ்டமாக இருக்கிறது.”

’பசித்த வாய்க்கு உணவு’ என்றும் ‘பசிக்குச் சோறு’ என்றும் பேசப் படுவதுண்டு. அது தண்ணீராவது கிடைத்தவர்களின் அனுபவமாக இருந்திருக்கும். தமிழகத்தில் அந்தக் காலங்களில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு இல்லை அல்லவா?

ஆனால் பசியைவிட இன்னும் ஆழமானது தாகம். பாலைவனத்தில் பசி மட்டும் பிரச்சனை அல்ல. அதைவிடப் பெரிய பிரச்சனை தாகம். நீர் ஓர் அரும்பொருள் ஆன அரபுப் பாலையில் தோன்றிய இறைத்தூதருக்கு அருளப்பட்ட நோன்பு அமைப்பில் உணவு தவிர்த்த பசியுடன் நீர் தவிர்த்த தாகமும் இடம் பெற்றுள்ளது.

அன்று என் பிள்ளைகளும் நோன்பு வைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். நான்கு மணி வாக்கில் வீடு திரும்பிய இருவரும் ‘தண்ணி வேணும் தண்ணி வேணும்’ என்று தவித்துக் கொண்டே வந்தார்கள். அப்படியாக, அவர்களின் நோன்பு நான்கு மணிக்கெல்லாம் முடிவுற்றது.

அவர்கள் திண்பண்டம் கேட்காமல் தண்ணீர் கேட்டது என் சிந்தனையில் சுழன்று கொண்டே இருந்தது. பசியை தாகம் முந்தி விடுகிறது. காரணம் என்ன?

’நீராலானது’ என்று தேவதேவன் தன் நூலுக்கு இட்ட தலைப்பு நியாபகம் வந்தது. அந்தத் தலைப்பிற்கான கவிதை என் ஞாபகத்தில் இல்லை. நீராலானது என்று எதனைச் சொல்கிறார்? எது நீரால் ஆனது?

”உயிருள்ள ஒவ்வொன்றையும்
நாம் நீரிலிருந்து வெளியாக்கினோம்”
(21:30)
என்னும் திருக்குர்ஆன் வசனம் ஞாபகம் வந்தது. நீரருந்தும் போதெல்லாம் என் நினைவில் தோன்றும் திருவசனம்!

மனிதனுக்கு மட்டுமல்ல, சர்வகோடி ஜீவராசிகளுக்கும் நீர் என்பது தேகத்தின் மூலம்.

பிரபஞ்சம் ஒலியால் ஆனது என்பதொரு பார்வை. அவ்வொலி என்ன என்பதை அறிந்தவர்கள் அரிது.

பிரபஞ்சம் ஒளியால் ஆனது என்பதொரு பார்வை. அவ்வொளி என்ன என்பதை அறிந்தவர்கள் அரிது.

பிரபஞ்சம் சொல்லால் ஆனது என்பதொரு பார்வை. அச்சொல் என்ன என்பதை அறிந்தவர்கள் அரிது.

அந்த ஒலியும் ஒளியும் சொல்லும் ஒன்றே. இதனை அறிந்தவர்களும் அரிது.

‘பிரபஞ்சம் நீரால் ஆனது’ என்று நான் சொல்லிக் கொண்டேன். மனதில் இந்த வாசகம் தெவிட்டாமல் தித்தித்து இன்பம் தந்தது.

அந்த ஒலியும் ஒளியும் சொல்லும் நீரும் ஒன்றே.

’ஒவ்வொரு வஸ்துவும் தன் மூலத்தின் பக்கம் மீள்கிறது’ (குல்லு ஷைஇன் யர்ஜிஉ இலா அஸ்லிஹி) என்பது ஒரு சூஃபி ஞானவுரை. 

உடலில் உள்ள மண் மண் விளைந்த உணவைத் தேடும் தேட்டமே பசி.
உடலில் உள்ள நீர் நீரைத் தேடுவதே தாகம். எது குறைகிறதோ அதனைக் கொண்டு நிரப்ப வேண்டுவதே தேவையும் நிறைவும்.

மனித உடலின் கலவையில் மண்ணின் சத்தைவிட நீரின் சத்து மிக மிக அதிகம். சராசரி மனித உடலில் அறுபது விழுக்காடு நீர். எனவே மனித உடலுக்கு மண்ணின் தேவையை விட நீரின் தேவை பெரிது. அதனால்தான், தாகம் பசியை முந்துகிறது.

”தாகித்தவன்
நீரில் இறைவனைக் காண்கிறான்
தாகமில்லாதவன்
தன் முகத்தின்
பிம்பத்தையே காண்கிறான்”
என்கிறார்கள் மௌலானா ரூமி.

நீர் என்பது இறைவனின் கருவிகளுள் ஒன்று.
பிரபஞ்சம் அவன் வரைந்த நீரோவியம்.

”அனைத்தையும் நீரிலிருந்தே உயிருடன் வெளியாக்கினோம்” என்று சொல்லும் இறைவனை,
“அனைத்தையும்
இணைகளாகப் படைத்த
அவன் பரிசுத்தமானவன்”
(36:36)
என்று புகழ்கிறது திருக்குர்ஆன்.

நீரும் ஒரு ஜோடி. ஹைட்ரஜன் ஆண். ஆக்சிஜன் பெண்.

மரத்தின் ஆதாரம் வேர். உயிருக்கு அந்த வேர் தேடுவது நீர். எனவே நீர் என்பது வேரின் வேர்.

”பரிசுத்தமான திருக்கலிமா (மூல மந்திரம்)
ஓர் பரிசுத்தமான மரத்தினைப் போன்றது.
அதன் வேர்கள் ஆழ்ந்து ஊன்றியவை
அதன் கிளைகள் வானளாவியவை
அது தன் ரட்சகனின் உத்தரவு கொண்டு
எல்லாக் காலங்களிலும்
கனிகளைச் தருகின்றது”
(14:24,25)

மூல மந்திரம் மனிதர்களின் மனங்களில் விதையாகத்தான் இருக்கிறது. பக்தி என்னும் நீர் அதனை விருட்சமாக வளரச் செய்கிறது. வளர்ந்த பின் அது ஞானக் கனிகளைத் தருகிறது. விதையில் இருந்து விருட்சத்தை அடையலாம்; விருட்சத்திலிருந்து கனிகளை அடையலாம். விருட்சத்தில் விளையும் கனிகளை விதையிலிருந்து பெற முடியாது.

”அவனே வானங்களையும் பூமியையும்
ஆறு நாட்களில் படைத்தான்.
அவனின் அர்ஷ் நிரின் மீது இருந்தது”
(11:7)
என்கிறது திருக்குர்ஆன்.

“இறைநம்பிக்கையாளனின் இதயம்
இறைவனின் அர்ஷ் (ஆசனம்)”
என்று அருளினார்கள் நபிகள் நாயகம்.

மண்ணாலான உடல் என்னும் பூமியில் பேரளவு தண்ணீர் இருக்கிறது. அதில் இதயமோ இறைவனின் அர்ஷாக இருக்கிறது.

இதுவரை நீரை நீராக வைத்தே பேசி வந்தோம். திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்கும் அர்த்தம் சார்ந்து புறமும் (ழாஹிர்) அகமும் (பாத்தின்) உண்டு என்னும் நபிமொழிக் கருத்தின்படி நீர் என்பது ஒரு குறியீடாக நின்று பல ஞானங்களைத் திறந்து தரும் இடங்கள் உண்டு.

“மேலும் பூமியில் அருகருகே இணைந்தாற்போல்
பல பகுதிகளை (அமைத்து அவற்றில்)
திராட்சைத் தோட்டங்களையும்
விளை நிலங்களையும்
கிளைகள் உள்ளதும் கிளைகள் இல்லாததுமான
பேரீச்சை மரங்களையும் (உண்டாக்கினான்).
ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும்
அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விடவும்
சுவையில் நாம் மேன்மை ஆக்கியுள்ளோம்
நிச்சயமாக இவற்றில்
உணர்ந்தறியும் மக்களுக்குப்
பல அத்தாட்சிகள் இருக்கின்றன.”
(13:4)
இறைவனின் வெளி அத்தாட்சிகளை அறிவோர் பலராவர். சூஃபிகள் அவனின் அந்தரங்க அத்த்தாட்சிகளையும் அறிந்துகொள்கிறார்கள். மேற்சொன்ன வசனத்தில் நீர் என்பது இறைவனின் ஏகத்துவத்தையும் தாவர விளைச்சல்கள் படைப்புக்களையும் குறிப்பதாகக் காண்கிறார் சூஃபி ஞானி ஃபக்ருத்தீன் இராக்கீ (ரஹ்).

அவர்களின் ஞான நூலான ‘லமஆத்’ (ஒளிச்சுடர்கள்)-இன் பதினாறாம் பாடத்தின் தலைப்பில் இவ்வாறு சொல்கிறார்கள்:
“இறைவனின் ஏகத்துவத்தின் மீது படைப்புக் கோலங்களின் பன்மைத் தன்மையால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே இந்தப் பன்மைகளில் அது தன் ஏகத்துவத்தில் நிலைத்தே இருக்கிறது. இதனை விளக்கும் ஓர் உதாரணம் பற்றி:”

அந்தப் பாடத்தை இவ்வாறு முடிக்கிறார்கள்:
“இந்த இயக்கங்களின் மூலம் ஒன்றுதான். அதுவே எல்லா இடங்களிலும் புதிய புதிய வண்ணங்களை வெளிப்படுத்துவதால் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ’ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும்
அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விடவும்
சுவையில் நாம் மேன்மை ஆக்கியுள்ளோம்.’(13:4)” 

”நீர் நோக்கி நீளும் வேர்களைப் போல்
உன் தேடல் நீளட்டும்”
என்பார் அப்துல் ரகுமான். (ஆலாபனை).

நீரின் மூலம் எதுவோ நம் மூலமும் அதுவே. சகலத்தின் மூலமும் அதுவே. அந்த ஆதி மூலமான பரம்பொருளை நோக்கி நம் தேடல்கள் நீளட்டும்!


Thursday, July 19, 2012

திரவ திறவுகோல்



வாழ்க்கை ஓர் அறுசுவை விருந்து.
அதில் இனிப்பும் காரமும் புளிப்பும் கரிப்பும் துவர்ப்பும் கசப்பும் பரிமாறப்படும்.
முழுதும் இனிமைதான் வேண்டும் என்றால் அது விருந்தாக இருக்காது. பிற சுவைகளுக்கு இடம் கொடுக்காத இனிமை நோயாகவும் மாறிவிடும்.

மனித மனத்தில் தோன்றும் எண்வகை உணர்வுகளும் அப்படித்தான்.
மனத் தோட்டத்தில் புன்னகைப் பூக்கள் மலரத்தான் வேண்டும். ஆனால் கண்ணீர்த் துளிகள் அவற்றின் மீது பன்னீர்த்துளிகளாய் அமரும்போதுதான் தோட்டத்தின் அழகு அதிகமாகிறது.

ஜப்பானிய மண்ணில் தோன்றிய மூன்றடிக் கவிதையான ’ஹைகூ’வின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படும் இஸ்ஸா எழுதிய பிரபலமான ஹைகூ ஒன்றுண்டு.

“இந்த உலகம்
ஒரு பனித்துளி உலகம்தான்
இருந்தாலும்... இருந்தாலும்”

இந்தச் சின்னஞ்சிறு கவிதை எந்தச் சூழலில் எழுதப்பட்டது என்பதற்கு இஸ்ஸா இட்டிருக்கும் குறிப்பு ‘என் குழந்தை இறந்தபோது’ என்பதாகும்.

அதிகாலையில் சூரியனின் சுடர் பட்டதும் சில நிமிடங்களில் ஆவியாகி மறைந்துவிடும் பனித்துளியைப் போல் இஸ்ஸாவின் குழந்தை வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலேயே இறந்துவிட்டது.

அழுக்கடைவதற்கு முன் தூய நிலையிலேயே மறைந்துவிடும் பனித்துளியைக் குழந்தையின் இறப்பிற்கு உவமை சொல்லியிருப்பது எத்தனை பொருத்தமானது!

பனித்துளி குழந்தைக்கு மட்டும்தான் உவமையா? இல்லை. அது நமக்கு இஸ்ஸாவின் கண்ணீராகவும் தெரிகிறது.

குழந்தை மட்டும் மறைந்து போகவில்லை. அதனை இழந்த இந்த துக்கமும் காலப் போக்கில் மறைந்துவிடத்தான் போகிறது. ஆக, எதுவும் நிலையானது அல்ல.

இந்த ஹைகூவின் அழகும் அர்த்தகனமும் அதன் இறுதி வரியில்தான் இருக்கின்றது. முதல் இரண்டு வரிகள் பழைய தத்துவம் ஒன்றை ஒப்பிக்கின்றன, அவ்வளவே. ஆனால் ‘இருந்தாலும் இருந்தாலும்’ என்று இஸ்ஸா விசும்பும்போது, கண்ணீர் தளும்பும் கண்களுடன் சற்றே தேம்பும்போது அந்த உணர்வின் மூல ஊற்று நம் உள்ளத்திலும் திறந்து நனைக்கிறதா இல்லையா? இந்த ஹைகூவை உயிர்ப்புடன் வைத்திருப்பது அதுதான்.

இதே கருத்தைத்தான் ஏற்றப் பாட்டுக்காரன் கம்பனுக்குத் தந்த வரிகளும் நமக்குச் சொல்கின்றன:
“மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே.”

நபிகள் நாயகத்தின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. அவர்களின் மகன் இப்றாஹீம் (ரலி) பாலகனாக இருந்தார். அபூஸைஃப் என்னும் கொல்லரின் வீட்டில் செவிலித் தாயின் பராமரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்க்ளின் கண்களில் நீர் பொங்கி வழிந்தது. அதனைக் கண்ட நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ‘அல்லாஹ்வின் தூதரே! தாங்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) சொன்னார்கள், “அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்” (யப்ன அவ்ஃபின் இன்னஹா ரஹ்மத்துன்)
பிறகு, இறந்துவிட்டிருக்கும் தன் பிள்ளையைப் பார்த்து நபி(ஸல்) கூறினார்கள்:
“கண்கள் நீரை வார்க்கின்றன
இதயம் மிகவும் வாடுகின்றது
எம் ரட்சகன் உவப்பதன்றி
வேறு எதையும் நாம் பேசுவதில்லை
இப்றாஹீமே! நிச்சயமாக நாம்
உன் பிரிவால் அதிகக் கவலை அடைகின்றோம்”
(இன்னல் ஐன தத்மஉ வல் கல்ப யஹ்ஸனு
வலா யகூலு இல்லா மா யர்ளா ரப்புனா
வ இன்னா பிஃபிராக்கிக யா இப்றாஹீமு லமஹ்ஸுனூன்)
(ஸஹீஹுல் புகாரி: #1302)

நபித்தோழரின் கேள்விக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில் அற்புதமானது. நபித்தோழரின் இயற்பெயர் அப்துர் ரஹ்மான். அதாவது ரஹ்மானின் அடிமை என்று பொருள். ரஹ்மான் என்பது இறைவனின் திருநாமங்களில் முதன்மையானது. அல்லாஹ் என்னும் அவனது சுயநாமத்துடன் இணைத்துச் சொல்லப்படும் பண்புத் திருப்பெயர் ‘ரஹ்மான்’ என்பதே. அதற்கு ‘கருணையாளன்’ என்பது பொருள். நபித்தோழரின் தந்தையின் பெயர் அவ்ஃப் என்பதாகும்.

நபி(ஸல்) அவருக்கு விடை சொல்லும்போது ‘அப்துர் ரஹ்மானே!’ என்று அழைக்கவில்லை. மாறாக, “அவ்ஃபின் மகனே!” (யப்ன அவ்ஃபின்) என்று அழைத்தார்கள். பிள்ளையை இழந்துவிட்ட துக்கத்தில் இருக்கும் தந்தையான நபி(ஸல்) அதே தந்தை உறவைச் சுட்டித் தன் தோழரை விளிக்கிறார்கள்!

அவ்வாறு விளித்து, “நிச்சயமாக இது கருணையாகும்” (இன்னஹா ரஹ்ம(த்)துன்) என்று விளக்கினார்கள். ’இறைவன் நம்மில் இருக்கிறான், அவனின் கருணை நம் உறவுகளில் வெளிப்படுகிறது’ என்னும் ஞானம் இதில் அருளப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் அழுததைப் பார்த்து அந்த நபித்தோழர் வியப்படைந்தது ஏன்? ‘உலக வாழ்க்கை நிலையற்றது’ என்று போதிக்கும் இறைத்தூதரே இப்போது ஓர் இழப்பிற்காக அழுகிறார்களே என்று நினைத்ததால்தானே?

மனிதத்தன்மை – இயற்கையான மனித உணர்வுகள் - ஆன்மிகத்திற்கு எதிரானது என்று பலபேர் தவறாகக் கருதுகின்றார்கள். ஆனால் அது இறைவனின் கருணை வெளிப்படும் வாயில்கள் என்பதை அவர்கள் அறிந்தால் அப்படிக் கருத மாட்டார்கள். அந்த ஞானத்தைதான் நபியின் விடை நமக்கு உணர்த்துகின்றது.

இந்த நபிமொழி காட்டும் காட்சியைப் போன்ற ஒரு காட்சியை ஜென் வட்டாரத்திலும் நாம் காண்கிறோம்.

ஜென் ஞானி ஒருவர் இறந்துபோனார். அவருடைய தலைமைச் சீடர் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். இது சக சீடர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘தாமரை இலை மேல் உருளும் நீரைப் போல் நாம் இருக்க வேண்டும். பந்த பாசங்கள் என்னும் மாயையில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது. உடல்தான் அழியும்; ஆன்மா அழியாது என்பன போன்ற தத்துவங்களை மக்களுக்குப் போதிக்கும் மடம் அது. அப்படி போதித்த ஒரு ஞானியே தன் குரு இறந்ததற்காக அழுவதை மக்கள் பார்த்தால் மடத்தின் பெயர் கெட்டுவிடுமே என்று அவர்கள் பதறினார்கள். செய்தி கேட்டு மக்கள் கூட்டம் அங்கே திரளத் தொடங்கியது. அப்போதும் அந்தத் தலைமைச் சீடர் அழுதுகொண்டுதான் இருந்தார். இத்தனைக்கும் அவர்தான் அடுத்த குரு! எனவே சீடர்கள் அவரிடம் சொன்னார்கள், “தயவு செய்து அழுகையை நிறுத்துங்கள். உறவுகளே இல்லாத துறவிகளாகிய நாம் இப்படி அழுதால் ஊர் என்ன நினைக்கும்? உடல் அழிவது இயற்கை நிகழ்வு; ஆன்மா அழிவற்றது என்பது உங்களுக்குத் தெரியாதா? பிறகு ஏன் அழுகிறீர்கள்?”

அந்தச் சீடர்களுக்கு அப்போது அந்த ஜென் குரு சொன்ன பதில் மிகவும் அற்புதமானது: “உடல்தான் அழியும்; ஆன்மா அழியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், நான் ஆன்மாவுக்காக அழவில்லை. நான் நம் குருவின் உடலுக்காகத்தான் அழுகிறேன்! எத்தனை அழகான அற்புதமான உடல் அவருடையது! குருவின் ஆன்மாவை நாம் மீண்டும் சந்திக்கத்தான் போகிறோம். ஆனால், அவரின் இந்த அழகான உடல் சிறிது நேரத்தில் அழிந்துவிடும். அதற்காகத்தான் அழுகிறேன். நம் ஜென் தத்துவம் ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு அழுகை வருகின்றது. இயற்கையாக இது நிகழ்கின்றது. இயற்கையோடு இயைந்து இரு என்பதும் ஜென்னின் போதனைதானே? நான் என் அழுகையை வலிந்து அடக்கினால் அதுவே ஜென்னுக்கு மாற்றமானதுதானே? எனவே அழுகை வரும்வரை நான் அதை அனுமதிக்கத்தான் வேண்டும்!”

புத்தர் மரணப்படுக்கையில் கிடக்கிறார். அவருடைய தம்பியும் அனுக்கச் சீடர்களில் ஒருவனுமான ஆனந்தாவுக்கு துக்கம் நெஞ்சைப் பிசைகிறது. புத்தர் கற்றுத் தந்த ஞானம், அநித்யங்களில் உணர்ச்சி வசப்படல் ஆகாது என்னும் போதனை பொங்கும் கண்ணீருக்கு அணை கட்ட முயல்கிறது. ஆனால் அவனின் இதயம் உணர்ச்சிகளின் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலை வைத்து கவிஞர் இசை தன் “உறுமீங்களற்ற நதி” என்னும் நூலில் அழகான ஒரு கவிதை எழுதியிருக்கிறார்:

புத்தன் அழுதான்

ஆற்றமாட்டாது
கண்ணீர் பெருக்கியபடி இருந்த ஆனந்தாவுக்கு
திடீரென தான் ஒரு புத்தன் என்பது
பிரக்ஞையில் படவே
அழுகையை நிறுத்திக் கண்களைத் துடைத்துக் கொண்டான்
நித்ய ஸாந்தமும் மந்தகாசமுமாய்
தன் முகத்தை நிலைநிறுத்த முயன்றானெனினும்
அங்குமிங்கும் இழுத்துக்கொண்டு நெளிந்த
முகரேகைகளின் வழியே கண்ணீர் பீய்ச்சியது
அது அவன் தம்மங்களனைத்தையும்
அடித்துக் கொண்டோடியது
மறைவிடம் தேடி ஓடும் ஆனந்தா
எவ்விடம் போயினும் நீ ஒரு புத்தனே
இன்னும் சில வினாடிகளில்
மரிக்க இருக்கிறான் உன் புத்தன்
அவனுடலெங்கும் சிந்தட்டும் உன் கேவல்கள்
வாரி அள்ளி மடியிலிட்டு
பெருங்குரலில் வெடித்தழு புத்தா.

தண்ணீர் நதிகள் மனித குலத்தின் புற நாகரிகம் வளர்த்தன. கண்ணீர் நதிகள் மனித குலத்தின் அக நாகரிகம் வளர்த்தன.

தண்ணீர்ப் பாசனம் பயிர் வளர்த்தது. கண்ணீர்ப் பாசனம் உயிர் வளர்த்தது.

அல்லாமா இக்பால் கூறுகிறார்:
”மனிதனின் பொருட்டுப்
பல இரவுகள்
கண்ணீர் சிந்தின என்
கண்கள்...
ரகசியங்களின் திரைகள்
அகன்று போயின
அதனால்.”

ஆம். மனிதன் தேடும் பொக்கிஷம் அவனுக்குள்ளேயே மறைந்திருக்கிறது. கண்ணீரே அந்தப் பொக்கிஷத்தின் பூட்டைத் திறக்கும் திரவ திறவுகோல்.

Wednesday, July 18, 2012

காதலியைத் தேடி -2




GOOD WILL HUNTING என்னும் அத்திரைப்படம் 1997-ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் திரைக்கதையை எழுதியவர்கள் மேட் டேமன் (Matt Damon) மற்றும் பென் அஃப்லெக் (Ben Affleck) ஆகியோர். படத்தின் கதாநாயகனாக மேட் டேமன் நடிக்க துணை நடிகர்களில் ஒருவராக பென் அஃப்லெக் நடித்திருக்கிறார். முதன்மைத் துணை நடிகராக ராபின் வில்லியம்ஸ் நடித்து சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதினையும் இப்படம் வாங்கிற்று. அதன் சுருக்கம்:


இருபது வயதான வில் ஹண்ட்டிங் Massachusetts Institute of Technology-இல் துப்புறவுப் பணியாளராக வேலை பார்க்கிறான். ஓய்வு நேரங்களில் தன் மூன்று நண்பர்களுடன் கும்மாளமடித்துப் பொழுது போக்குகிறான். Combinatorics என்னும் கணிதப் பிரிவில் ஃபீல்ட்ஸ் பதக்கம் (இது கணிதத்திற்காக வழங்கப்படும் சர்வதேச அளவிலானதொரு விருது!) பெற்றவரான பேராசிரியர் ஜெரால்டு லம்ப்யூ என்பவர் அந்தப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். ஒருமுறை அவர் தன் மாணவர்களுக்கு அல்ஜீப்ரா கிராஃப் தியரியில் ஒரு கடினமான சிக்கலை முன்வைக்கிறார். அது நடைபாதையில் உள்ள பலகையில் எழுதப்பட்டிருக்கிறது. அவ்வழியாகச் செல்லும் வில் ஹண்ட்டிங் அந்தக் கணக்கிற்கான விடையை அப்பலகையிலேயே எழுதி வைக்கிறான். தன் மாணவர்கள் யாரும் அந்த விடையை எழுதவில்லை என்று அறியும் பேராசிரியர் ஆச்சரியப்படுகிறார். அதை எழுதியது யார் என்று கண்டறிவதற்காக அவர் அதனை விடவும் கடினமான ஒரு கணிதச் சிக்கலை எழுதிவைத்துவிட்டு மறைந்திருந்து கண்காணிக்கின்றார். துப்புறவுப் பணி முடித்து அவ்வழியாக வரும் வில் ஹண்ட்டிங் சர்வ சாதாரணமாக அதன் விடையை எழுதுகிறான். நேற்று விடையை எழுதியது அவனாக இருக்க முடியாது என்றும் அவன் ஏதோ கிறுக்குகிறான் என்றும் நினைக்கும் பேராசிரியர் கத்திக்கொண்டே அவனைத் துரத்துகிறார். அவன் ஓடிவிடுகிறான். பலகையைப் பார்க்கும் பேராசிரியருக்கு பேரதிர்ச்சி! அவன் சரியான விடையை எழுதியிருக்கிறான். தன்னாலேயே தீர்க்க முடியாத ஒரு சிக்கலுக்குத் துப்புறவுப் பணியாளன் எந்தச் சிரமமும் இல்லாமல் விடை எழுதிவிட்டான்! அவன் ஒரு ஜீனியஸ் என்பதை அவர் உணர்ந்துகொள்கிறார்.

இந்நிலையில், வில் ஹண்ட்டிங் தான் சிறுவனாக இருந்தபோது தன்னைக் கொடுமைப் படுத்திய ஒருவனை வன்முறையாகத் தாக்கியதற்காகச் சிறைத் தண்டனை பெறுகிறான். பேராசிரியர லம்ப்யூ அவனுக்காக நீதிபதியிடம் பரிந்து பேசுகிறார். இரண்டு நிபந்தனைகளின் பேரில் வில் ஹண்ட்டிங் தன் சிறைக் காலத்தைப் பல்கலைக்கழகத்தில் கழிக்கலாம் என்று நீதிபதி சலுகை அளிக்கிறார். அதாவது, அவன் பேராசிரியருடன் சேர்ந்து கணிதப்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், சிறு வயது முதல் அவன் அடைந்த உளவியல் காயங்கள் ஆறுவதற்காக அவன் வாரம் ஒருமுறை மனநல மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அவர் தரும் அறிக்கைகள் ஒவ்வொரு வாரமும் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிபந்தனைகளின்படி வில் ஹண்ட்டிங் பேராசிரியருடன் சேர்ந்து கணித ஆய்வில் ஈடுபடுகிறான். அது அவனுக்குச் சிறுபிள்ளை விளையாட்டாகவே இருக்கிறது. ஆனால் மனநல ஆலோசகரைச் சந்திப்பதை அவன் வெறுக்கிறான். இரண்டு ஆலோசகர்கள் அவனின் கேள்விகளையும் கிண்டலையும் சகிக்க முடியாமல் ஓடிவிடுகிறார்கள். இது பேராசிரியர் லம்ப்யூவிற்குப் பெரிய சிக்கலாக இருக்கிறது.

பேராசிரியர் லம்ப்யூ தன் நண்பரும் பங்கர்ஹில் கம்யூனிட்டி கல்லூரியில் உளவியல் பயிற்றுவிப்பவருமான பேராசிரியர் சியான் மக்யூவைத் தனக்கு உதவும்படிக் கேட்டுக்கொள்கிறார். சியான் முதலில் முடியாது என்று சொன்னாலும் வில் ஹண்ட்டிங்கின் கணித அறிவையும் மேலும் அவன் அவருடைய பிறந்த ஊரிலிருந்து வந்தவன் என்பதையும் லம்ப்யூ எடுத்துச் சொன்னதும் அவனுக்கு மனநல ஆலோசனை வழங்க சம்மதிக்கிறார். இந்தக் காட்சியில்தான் வருகிறார் நம்ம ஊரு கணக்கு ஹீரோவான ஸ்ரீநிவாஸ ராமாநுஜம். தோராயமாக அந்த உரையாடல்:

சியான்: எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன
லம்ப்யூ: சியான், சியான்...
சியான்: எனக்கு ஓய்வே இல்லையேப்பா, ரொம்ப பிசியா இருக்கேன்
லம்ப்யூ: இந்தப் பையன் அற்புதமானவன் சியான், இவனைப் போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல.
சியான்: அப்படி என்ன இருக்கு அவன்கிட்ட ஜெர்ரி?
லம்ப்யூ: ராமாநுஜன் பற்றிக் கேட்டிருக்கியா?
சியான்: ம்ம்.. இல்லை
லம்ப்யூ: நூறு வருஷங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்... இந்தியர். ஒரு கிராமத்துல குடிசைல இருந்தார். முறையான கல்வி எதுவும் இல்ல. ஆனால் ஒரு கணக்கு புத்தகத்தைப் பார்த்துட்டு அவருக்குள்ள பல தியரிகள் தோன்ற ஆரம்பிச்சுது.
சியான்: ம்ம்... அதையெல்லாம் எழுதி வைத்தார். அப்புறம்?
லம்ப்யூ: அதை கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வச்சார், பேராசிரியர் ஹார்டிக்கு.
சியான்: ஓஹோ...
லம்ப்யூ: ஹார்டிக்கு உடனே புரிஞ்சு போச்சு, இவரு ஒரு பெரிய மேதைன்னு. ராமாநுஜத்தை அவர் கேம்ப்ரிஜுக்கு அழைச்சுக்கிட்டார். இருவருமா உழைச்சு கணிதத்துல ஏகப்பட்ட தியரிகள் கண்டுபிடிச்சாங்க. இந்த ராமாநுஜன் – அவரோட மேதைமை நிகரற்றது. சியான், இந்தப் பையன் வில் ஹண்ட்டிங்கும் அதே மாதிரிதான். ஆனால் கொஞ்சம் முரட்டு சுபாவம். அதுக்குத்தான் உன் உதவியைக் கேட்கிறேன்.


பேராசிரியர் லம்ப்யூவின் கோரிக்கையை சியான் ஏற்றுக்கொள்கிறார். வில் ஹண்ட்டிங்கின் மனம் செய்யும் எதிர்ப்புக்களை மெல்ல மெல்ல கரைக்கிறார். சியான் உளவியல் நிபுணர் மட்டும் அல்ல. அவர் ஒரு நல்ல கலைஞரும் கூட. அவருக்குள் கவித்துவம் இருக்கிறது. தன் காதல் காலத்தின் நினைவுகளை ஓவியங்களாகத் தீட்டி வைத்திருக்கிறார். அவருடைய மனைவி இளம் வயதிலேயே புற்று நோயால் இறந்து போன பின் வேறு வேறு பெண்ணை அவர் தேடவே இல்லை. இது பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் வில் ஹண்ட்டிங் அவருடன் உரையாடுகிறான். இந்தப் படத்தில் வரும் மிக அழகான உரையாடல்களில் இதுவும் ஒன்று:

ஹண்ட்டிங்: நீங்கள் ஏன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை?
சியான்: அவள்தான் இறந்து விட்டாளே...
ஹண்ட்டிங்: அதனால்தான் கேட்கிறேன், நீங்கள் இன்னொரு திருமணம் செய்துகொள்ளலாம் அல்லவா?
சியான்: எப்படி முடியும், அவள்தான் இறந்து விட்டாளே...
(அவர் சொல்வதன் அர்த்தத்தை விளங்கிக்கொண்டு வில் ஹண்ட்டிங் மௌனமாகத் தலையாட்டுகிறான். உங்களுக்கு விளங்குகிறதா?)

இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் போது வில் ஹண்ட்டிங்கிற்கு ஒரு புதிய நட்பு கிடைக்கிறது. ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ்காரியான ஸ்கைலார் என்னும் யுவதிக்கு அவளின் ஆய்வுப் பணியில் உதவுகிறான். அந்த நட்பு மெல்ல மெல்ல காதலாகவும் மலர்கிறது. ஆனால் தன் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அவளிடம் சொல்வதற்கு வில் ஹண்ட்டிங் தயங்குகிறான். இந்தக் குழப்பத்திற்கு சியான் ஒரு தெளிவைத் தருவார் என்று அவரிடம் பேசுகிறான். அவனுடைய ஆழ்மனத்தைத் தூரெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை அவர் உணர்கிறார். பால்ய வயதில் அவன் பாலியல் ரீதியான கொடுமைகளை அனுபவித்தவன் என்பதைச் சொல்லி அவன் உடைந்து அழுகிறான். தானும் அவனைப் போலத்தான் என்று சியான் கூறுகிறார். அந்தக் கசப்பான நினைவுகளின் சுவடுகளை அழித்துவிட்டுப் புதிதாகப் பிறந்தவனைப் போல் இனி வாழ்வில் முன்னேறிச் செல்ல அவனுக்கு ஊக்கம் தருகிறார். இந்தக் காட்சிகளில் வரும் ஒரு உரையாடல் இப்படத்தின் அடிக்கருத்தைத் திரட்டித் தருகிறது:


சியான்: நீ அன்னிக்குச் சொன்னத நெனச்சுப் பார்த்தேன். என் ஓவியத்தைப் பற்றி.
ஹண்ட்டிங்: ஓ...
சியான்: நடு ராத்திரி வரைக்கும் நெனச்சுப் பார்த்தேன். எனக்கு என்னமோ ஆச்சுது. ரொம்ப ஆழமான நிம்மதியான தூக்கத்துல மூழ்கிப் போனேன். அதுக்கப்புறம் உன்னைப் பத்தி நான் நெனக்கவே இல்லை. எனக்கு என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியுமா?
ஹண்ட்டிங்: ம்ஹூம்.
சியான்: நீ சின்னப்பையன். நீ எதைப் பற்றிப் பேசுறேங்கற அறிவே உனக்குக் கிடையாது.
ஹண்ட்டிங்: அப்படியா, ரொம்ப நன்றி!
சியான்: அது சரிதான். நீ பாஸ்டனுக்கு வெளியே போனதே கிடையாதில்லியா?
ஹண்ட்டிங்: இல்லை
சியான்: அப்படின்னா, நான் உன்கிட்ட ஓவியத்தைப் பற்றிக் கேட்டால், நீ மேம்போக்கா ஏதாவது அபத்தமான பதிலைச் சொல்லுவ... ஓவியத்தைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களைப் பற்றிப் பேசுவ. மைக்கேலேஞ்சலோ? ம், அவரைப் பற்றி உனக்கு நிறைய தெரியும். வாழ்க்கைப் பணி, அரசியல் சிந்தனைகள், அவரும் போப்பும், பாலியல் பார்வைகள். அவருடைய எல்லாக் கலைப் படைப்புக்களும், சரிதான். ஆனால் நான் சவால் விடுவேன், சிஸ்டைன் ச்சேப்பலினுள் என்ன விதமான மணம் வீசுகிறது என்பது பற்றி உன்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. நீ அங்கே ஒருபோதும் நின்று அந்த அழகான விதானத்தைப் பார்த்தது கிடையாது. நான் உன்னிடம் பெண்களைப் பற்றிக் கேட்டால், உன்னுடைய தனிப்பட்ட விருப்பங்கள் பற்றி எனக்கு ஒரு பட்டியலே நீ தரலாம். அவர்களில் சிலரைச் சில தடவை நீ அனுபவித்தும் இருக்கலாம். ஆனால், உன்னுடன் உறங்கிய ஒரு பெண்ணின் அருகில் காலையில் விழித்தெழுந்து அவளைப் பார்த்து மனம் மகிழ்ச்சியால் நிரம்பும் உணர்வு எப்படிப்பட்டது என்று உன்னால் சொல்லவே முடியாது. நீ ஒரு முரட்டுப் பையன். போர் பற்றி நான் உன்னிடம் கேட்டால் நீ என் மீது ஷேக்ஸ்பியர் மேற்கோள் ஒன்றை விட்டெறிவாய், சரிதானா? “Once more into the breach, dear friends.” ஆனால் ஒருபோதும் நீ ஒரு போர்க்களத்தில் நின்றது கிடையாது. உன்னுடைய மிக நெருங்கிய நண்பனின் தலையை உன் மடியில் ஏந்திக்கொண்டு, அவன் தன் கடைசி மூச்சை விட்டபடி உன் உதவிக்காக உன்னை வெறித்துப் பார்க்கும் அனுபவத்தை அடைந்தது கிடையாது. நான் உன்னிடம் காதலைப் பற்றிக் கேட்டால் நீ எனக்கு ஒரு சானட் பாடலைச் சொல்லிக் காட்டுவாய். ஆனால் தன்னை இழந்தவனாக ஒரு பெண்ணின் கண்களுக்குள் நீ ஒருபோதும் பார்த்தது கிடையாது. அப்படிப் பார்வையில் கலந்து யாரையாவது நீ அறிந்ததுண்டா? கடவுள் உனக்காகவே ஒரு தேவதையை இந்த மண்ணில் இறக்கியிருக்கிறான், நரகத்தின் ஆழத்திலிருந்து அவள் நம்மை மீட்டெடுப்பாள் என்பது போல் நீ உணர்ந்ததுண்டா? அந்த தேவதைக்காக என்றென்றும் காதலனாக இருப்பது எப்படி இருக்கும் என்பது உனக்குத் தெரியுமா? அவளை இழந்த பின்னும்? எதனாலாவது? கேன்சர்? ஒரு ஆஸ்பத்திரி அறையில், இரண்டு மாதங்கள், அவளின் கைகளைப் படித்தபடி ராத்திரி முழுதும் உட்கார்ந்து கொண்டே தூங்கி, ஏன்னா உன் கண்களைப் பார்த்தாலே டாக்டர்களுக்குத் தெரியுது, ‘பார்வையாளர் நேரம்’ங்கறது உனக்குப் பொருந்தாதுன்னு. உண்மையான இழப்பு பற்றி உனக்குத் தெரியாது. ஏன்னா. எதையாவது நீ உன்னைவிட அதிகமா நேசிச்சாதான் உண்மையான இழப்பு சாத்தியம். அந்த அளவுக்கு நீ யாரையாவது நேசிச்சிருப்பன்னு என்னால நம்ப முடியல. நான் உன்னைப் பார்க்கிறேன். ஒரு அறிவாளியான, தன்னம்பிக்கையான மனிதனை என்னால பார்க்க முடியல. ஒரு விடலைத் தனமான, பயந்தாங் கொள்ளியைத்தான் நான் பார்க்கிறேன். ஆனால் நீ ஒரு ஜீனியஸ், வில். அதை யாரும் மறுக்க முடியாது. உன்னுடைய ஆழங்களை யாரும் புரிஞ்சுக்க முடியாது. ஆனால், என்னுடைய ஒரு ஓவியத்தைப் பார்த்துட்டதாலேயே என்னைப் பற்றி உனக்கு எல்லாம் தெரியும்னு நீ நெனக்கிற. என் வாழ்க்கையை நீ பிளந்து எடுத்துட்ட. நீ ஒரு அனாதை, இல்லியா? உன்னுடைய வாழ்க்கையின் ஆரம்ப காலம் எவ்வளவு கஷ்டமானதா இருந்துச்சுன்னு எனக்குத் தெரிய வந்ததற்குக் காரணம் நான் ஒலிவர் ட்விஸ்ட் படிச்சதுனாலன்னு நெனக்கிறியா? அது உன்னை வரையறை செய்யுதா? தனிப்பட்ட முறையில, அதைப் பத்தியெல்லாம் நான் கொஞ்சமும் கவலைப் படல, ஏன் தெரியுமா? உன்கிட்டேருந்து நான் கத்துக்க எதுவுமில்ல. உன்னைப் புரிஞ்சுக்கனும்னா அதுக்கு நான் ஒரு எழவு புத்தகத்தையும் படிக்க முடியாது. நீயா உன்னைப் பத்தி மனம்விட்டுப் பேசினாத்தான் ஆச்சு. அப்ப எனக்கும் சுவாரஸ்யம். நான் உள்ளே வரலாம். ஆனால் நீ அதுக்குத் தயாரா இல்ல. உன் மனசுலேருந்து என்ன சொல்லுவியோன்னு பயந்து போயிருக்க. உன் ஆட்டம், தலைவா.

தான் ஒரு அனாதை என்றும் தன் வளர்ப்புத் தந்தையால் சிறுவயதிலேயே பாலியல் ரீதியாகச் சீரழிக்கப் பட்டவன் என்னும் உண்மையை அவன் தன் தோழியான ஸ்கைலாரிடம் சொன்ன பிறகும் தான் அவனைக் காதலிப்பதாகவே அவள் சொல்கிறாள். தன் மருத்துவப் படிப்பிற்காக கலிஃபோர்னியாவிற்குச் செல்வதாகவும் அவன் அங்கே வந்து தன்னுடன் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அவள் கூறிச் செல்கிறாள். இந்நிலையில் பேராசிரியர் ஜெரால்டு லம்ப்யூ அவனுக்காக இண்ட்டர்வியூக்கள் ஏற்பாடு செய்கிறார். சிறந்த பேராசிரியராகவும் கணிதமேதையாகவும் அவன் உருவாகிப் புகழ் பெறலாம் என்று சொல்கிறார். இந்த இரண்டு வழிகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்று வில் ஹண்ட்டிங் குழம்புகிறான்.


தான் ஒரு கூலித் தொழிலாளியாகவே வாழ விரும்புவதாக அவன் தன் நண்பர்களிடம் சொல்லும் போது அவன் தன் திறமைகளை வீணடிக்கிறான் என்று கவலைப்படுகிறார்கள். பேராசிரியரின் ஏற்பாட்டினை ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுரை சொல்கிறார்கள். ஆனால், காதலின் பாதையில் செல்லும்படி சியான் அவனுக்குச் சொல்கிறார்.

ஒருநாள் பல்கலைக்கழக வகுப்பறைக்கு வரும் ஹண்ட்டிங் தன் பேராசிரியருடன் வாக்குவாதம் செய்கிறான். அவனின் முடிவு அவருக்குப் பிடிக்கவில்லை. கோபம் கொள்ளும் ஹண்ட்டிங் கணிதத் தியரிகள் எல்லாம் தனக்கு வெறும் நகைச்சுவைத் துணுக்குகள்தான் என்று சொல்கிறான். அந்தப் பேராசிரியர் தன் வாழ்க்கை முழுதும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு கணிதச் சிக்கலுக்கு என்ன விடை வரும் என்பதைத் தான் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி சில தாள்களைக் காட்டுகிறான். அந்த விடை அவரை ஆச்சரியப்பட வைக்கிறது. அது எப்படி வருகிறது என்னும் படிநிலைகள் அந்தத் தாளில் உள்ளன. அதைத் தன்னிடம் தருமாறு அவர் கேட்கும்போது அவன் மிக அலட்சியமாகக் கொளுத்திச் சாம்பலாக்கி விட்டு அங்கிருந்து வெளியேறுகிறான்.

அவனின் 21-ம் பிறந்த நாளுக்காக அவனுடைய நண்பர்கள் அவனுக்கு மராமத்துச் செய்யப்பட்ட ஒரு ஷெவ்ரொலே நோவா காரினைப் பரிசாகத் தருகிறார்கள். அதனைக் கிளப்பும் அவன் தன் காதலியுடன் இணைந்து புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக கலிஃபோர்னியா நோக்கி விரைகிறான்.

உமர் கய்யாமிலும், வில் ஹண்டிங்கிலும் என் உள்ளத்தை நான் அடையாளம் காண்கிறேன். ஆன்மிகத்தின்பால் நாட்டமுள்ள ஒவ்வொருவரும் காண்பார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதனை எழுதிக் கொண்டிருக்கும் தருணங்களில் அல்லாமா இக்பாலின் பாடல் ஒன்றும் எனக்கு நினைவு வந்துகொண்டிருந்தது.


’பாங்கெ தாரா’ என்னும் நூலில் உள்ள கவிதை அது. “அக்ல்-ஒ-தில்” (பகுத்தறிவும் இதயமும்) என்னும் அக்கவிதையில் பகுத்தறிவுக்கும் உள்ளுணர்வு மற்றும் காதலின் உதிப்பிடமாக விளங்கும் இதயத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை உரையாடலாகத் தருகிறார் அல்லாமா இக்பால் (ரஹ்):

“ஓர் நாள் பகுத்தறிவு இதயத்திடம் சொன்னது:
‘வழிதவறியோருக்கு வழிகாட்டி நான்
பூமி விட்டெழுந்து வானம் தொடுகிறேன் நான்
எத்தனை ஆழமாய் விளங்குகிறேன் என்பதைப் பார்!
இவ்வுலகில் வழிநடத்துவதே என் பணி ஆகும்
பண்பில் ஒரு ’கிள்ரு’ போல் இருக்கின்றேன் நான்
உள்ளமையின் நூலுக்கோர் உரையாளன் நான்
இறை மகத்துவம் வெளியாகும் தளம் நான்
நீயோ வெறுமொரு இரத்தத் துளி ஆவாய்
விலைமதிப்பில்லா ரத்தினத்தின் பொறாமை நான்’
இத்தனையும் கேட்டபின் இதயம் சொன்னது
‘இதெல்லாம் உண்மைதான்,
என்றாலும் என்னையும் கொஞ்சம் பார்
நான் யார் என்று.
உள்ளமையின் ரசசியத்தை நீ புரிந்துகொள்கிறாய்
நானோ அதனை என் கண்களால் காண்கிறேன்!
உன் தொடர்போ வெளியுலகின் மீது
நானோ அந்தரங்கம் அறிந்து வைத்திருக்கிறேன்
கல்வி உன்னிடமிருந்து எனில்
ஞானம் என்னிடம் இருந்து!
நீ இறைவனைத் தேடுபவன்
நான் இறைவனைக் காட்டுபவன்!
நிம்மதியின்மை கல்வியின் முடிவாகும்
அந்த நோய்க்கு மருந்து நான்.
உண்மையின் சபையில் மெழுகுவத்தி நீ
அழகின் அவையில் அகல்விளக்கு நான்
காலத்திலும் இடத்திலும் கட்டுண்டவன் நீ
எல்லை மரத்தின் கிளையமரும் பறவை நான்
என் படித்தரத்தின் உயர்வை என்னென்பது?
மகத்தான இறைவனின் சிம்மாசனம் நான்.’”

இந்தப் பாடலில் நான் காணும் நுட்பங்களில் மூன்றினை இங்கே சொல்ல விரும்புகிறேன்.


மனிதனுக்குப் பகுத்தறிவும் தேவைதான். ஆனால் அதுவே முழுமையாகிவிடாது. இப்பாடலில் அல்லாமா இக்பால் பகுத்தறிவிற்கு உவமையாக இறைநேசர் கிள்ரு அவர்களைச் சொல்லியிருக்கிறார். கிள்ரு அவர்களை மூசா நபி சந்தித்த நிகழ்ச்சி திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. கிள்ரு அவ்ர்களிடம் மூசா நபி சில பாடங்கள் கற்றுக்கொண்டார்கள் என்பதை வைத்து அவர் மூசா நபியை விட ஆன்மிகப் படித்தரத்தில் உயர்ந்தவர் என்று சொல்லிவிட முடியாது. நபியின் படித்தரம் ஆரம்பமாகும் நிலையைக் கூட எந்த ஓர் இறைநேசரும் எட்ட முடியாது.

அது போல், இதயம் தடுமாறும் நேரத்தில் பகுத்தறிவு செயல்பட்டுக் காப்பது உண்டு. அதை வைத்துப் பகுத்தறிவே பெரிது என்று சொல்வது தகாது. இதயத்தின் படித்தரத்தை அதனால் ஒருபோதும் எட்டவியலாது.

”எல்லை மரத்தின் கிளையமரும் பறவை நான்” என்பதன் மூல வரி “தாயிரெ ஸித்ரா ஆஷ்னா ஹூ(ன்) மெய்(ன்)” என்பதாகும்.

”ஸித்ரத்துல் முன்தஹா” என்பது ஏழு வானங்கள் தாண்டிய எல்லையில் இருக்கும் ஓர் இலந்தை மரம். நபி (ஸல்) அவர்கள் விண்ணேற்றம் சென்றபோது அந்த எல்லை வரைதான் வானவர்கோன் ஜிப்ரயீல், நபி (ஸல்) அவர்களுடன் வந்தார்கள். அதனைக் கடந்து ஓரடி எடுத்து வைத்தாலும் தான் இறையொளியில் நாஸ்தியாகிவிடுவேன் என்று சொன்னார்கள். எனவே நபி(ஸல்) தனியே முன்னேறிச் சென்று இறைவனை தரிசித்தார்கள்.

அந்த எல்லை மரம் பகுத்தறிவு முடியும் இடம் என்று சூஃபித்துவத்தில் ஒரு விளக்கம் உண்டு. அதைத்தான் இங்கே அல்லாமா இக்பால் தெரிவிக்கிறார்கள். இதயம் அந்த எல்லை மரத்தில் ஓய்வு கொண்டு அதற்கு அப்பால் உள்ள தெய்வீக வெளியில் சிறகடிக்கும் பறவையாக இருக்கிறது.

அந்த எல்லை மரத்தைத் தாண்டி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்தான் சென்றார்கள். இதயம் என்பதற்கான ‘கல்ப்’ என்னும் அரபிச் சொல்லினை அப்ஜத் என்னும் ஒலியனியல் முறைப்படி மாற்றி அமைத்தால் முஹம்மத் என்னும் சொல் வரும்! (இதனை இத்ரீஸ் ஷாவின் “THE SUFIS” என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம்.)

பகுத்தறிவு ஒருபோதும் இறைவனை தரிசிக்க முடியாது. ஆனால் இதயத்தின் கண்ணே அவனைக் காணும் என்பது குறிப்பு.
”மகத்தான இறைவனின் சிம்மாசனம் நான்” என்பதன் மூல வரி “அர்ஷ் ரப்பெ ஜலீல் கா ஹூ(ன்) மெய்(ன்)” என்பதாகும். (அர்ஷ் என்பதற்கு இணையான  வேறு சொல் இல்லை. சிம்மாசனம் என்பது தோராயமான மொ.பெதான்.)

முத்தாய்ப்பான இந்த வரி நபி (ஸல்) அவர்களின் ஓர் அமுத வாக்கினை முன்வைத்து முடிகிறது: “கல்புல் முஃமின் அர்ஷுல்லாஹ்” – இதயம் இறைவனின் அரியணை ஆகும்.