Thursday, July 12, 2012

காதலியைத் தேடி



தமிழினத்தின் நாடித்துடிப்பை அளக்கும் கருவியாய் (விளங்கும்) ஒர்ர்ரே நாளிதழில் ஒரு செய்தியைக் கண்டேன். கணிதமேதை ஸ்ரீநிவாஸ ராமாநுஜத்திற்கும் அவரை உலகறியச் செய்யும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அவருக்கு அணுக்க நண்பராக இருந்தவரான தாமஸ் ஹார்டி (எங்க ராமுக்குட்டியின் நண்பேன்டா!) என்பவருக்கும் இடையே இருந்த நட்பை அடிப்படையாக வைத்து ஹாலிவுட்டில் ஒரு படம் எடுக்கப் போகிறார்களாம். வயிற்றில் கொக்ககோலாவை வார்க்கிறார்கள். ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ (மிஸ்டர் கேண்டி என்று விளிப்பார்கள். அந்நியர்கள்!) வந்து இருபத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்து ஒரு இந்தியரைப் பற்றி ஹாலிவுட்டில் திரைப்படம் வருவது கணித மேதைக்குத்தான் என்று நினைக்கிறேன். படத்தின் சூத்திரதாரி, அதாவது இயக்குநர் ரோஜர் ஸ்பாட்டிஸ்வுட் பிரபல ஜேம்ஸ் பாண்ட் படமான ”டுமாரோ நெவர் டைஸ்”-ஐ இயக்கியவர். ராமாநுஜமாக நடிக்க சித்தார்த்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று செய்தி. (ஃபார்முலா வர்க்கவ்ட் ஆனால் சரி!)

 
இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் எனக்கு சட்டென்று உமர் கய்யாமின் நியாபகம் வந்துவிட்டது. இது என்ன, ஸ்ரீநிவாஸ ராமாநுஜத்திற்கும் உமர் கய்யாமுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். நேரடியாக ஒரு சம்பந்தமும் இல்லை. வாஸ்தவம்தான். இருவரின் நினைவையும் இணைக்கின்ற ஒரு கண்ணி என் மனப்பரப்பில் உள்ளது. அதுதான் உமர்கய்யாமின் நினைவை மேலே கொண்டு வந்துவிட்டது. அது என்ன என்று சொல்வதற்கு முன் உமரைப் பற்றிச் சில விஷயங்கள் பார்த்தாக வேண்டும்.

தமிழ்ச்சூழலில் உமர் கய்யாமின் பாடலை முன்வைத்தால் அவரைக் கண்ணதாசனுடன் பலரும் இனம் காணக்கூடும். கோப்பைக் குடியிருப்பும் கோலமயில் துணையிருப்பும் என்று காரணங்கள் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு உமர் கய்யாமின் பாடல்களில் மதுவும் மாதுவும் இடம்பெற்றிருப்பது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் குறியீடுகள் என்று விளங்கிக் கொள்ள மிகச் சிலரே தயாராக இருப்பார்கள். இப்போதைக்கு அந்த ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம்.

எட்வர்ட் ஃபிட்ஜெரால்டு செய்த வேலை, அல்லது லீலை, உமர் கய்யாம் ஒரு புலனின்பத் திளைப்புக் கவிஞராக, ஹெடோனிஸ்ட் ஐகானாக உலகெங்கும் கொண்டாடப்படுபவர் ஆகிவிட்டார். அவருக்கு ஐரோப்பாவில் ரசிகர் மன்றங்கள் வைக்கப்பட்ட வரலாறுகூட உண்டு!

இப்படி ஒரு குஜால் கவிஞராகத் தப்பிதமாகப் பிரபலமாகிவிட்ட உமர் கய்யாம் உண்மையில் ஒரு சூஃபி ஞானி என்று சொல்பவர்களும் உண்டு. அதற்கு ஆதாரமாக, இறையியலில் அவரின் ஆழ்ந்த அறிவைப் புலப்படுத்துவதாக அவர் எழுதிய தத்துவ விளக்க நூற்களான ”அர்ரிசாலா ஃபில் உஜூத்”, “அல்-குதூபாத்துல் கர்ரா” மற்றும் ”ரிசாலா ஜவாபன் லில் த்ஸலாஸ் மசாயில்” ஆகியவை அமைந்துள்ளன. இந்த நூற்களில் அவர் விளக்கியுள்ள இறைஞானங்களைத்தான் அவர் தன் கவிதைகளில் பாரசீகக் கவிதை மரபினைச் சார்ந்து மது, காதலி போன்ற குறியீடுகளைக் கையாண்டு பாடியுள்ளார். ஃபிட்ஜெரால்ட் அவற்றை அப்படியே நேராகப் பொருள் கொண்டுவிட்டார். (அந்த வகையில் அந்தவொரு கோணத்தில் மட்டும், அவர் இன்றைய வஹ்ஹாபிய சிந்தனைவாதிகளுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார் எனலாம்.)

பன்முக ஆளுமை கொண்ட உமர் கய்யாமின் இன்னொரு முகம் அவர் ஒரு கணித மேதை என்பது! (ஸ்ரீநிவாஸ ராமாநுஜம் பற்றிக் கூறி ஆரம்பித்த கட்டுரையில் கய்யாமைப் பற்றி எழுதுவதற்கு இந்த ஒரு பொருத்தம் போதாதா?) அரித்மெடிக், அல்ஜீப்ரா மற்றும் இசை ஆகிய துறைகளில் ஆழமான ஆய்வுகள் செய்து நூற்கள் எழுதியுள்ள உமர் கய்யாம் ஒரு சிறந்த வானியல் விஞ்ஞானியாகவும் விளங்கினார். செல்ஜூக் சாம்ராஜ்யத்தின் மூன்றாம் மன்னரான மாலிக் ஷாஹ்வின் ஆதரவில் இஸ்ஃபஹான் நகரில் அமைக்கப்பட்ட வானியல் ஆராய்ச்சிக் கூடத்தில் உமர் கய்யாம் பதினெட்டு வருடங்கள் ஆய்வுகள் நடத்தினார். அதன் பயனாக ஒரு புதிய காலெண்டர் முறையை- ஆண்டுக் கணக்கை உருவாக்கினார். அதற்கு ‘ஜலாலி காலண்டர்’ என்று பெயரிட்டார். அந்தக் காலக் கணக்கு ஜூலியன் காலண்டர் முறையை விடவும் துல்லியமானதாகவும் க்ரிகோரியன் காலண்டர் முறைக்கு நெருக்கமாக உள்ளதாகவும் விஞ்ஞானிகள் காண்கின்றனர்.

ஜெ.ஜெ.ஓகொன்னர் மற்றும் இ.ஜெ.ராபர்ட்ஸன் ஆகியோர் சொல்கின்றனர், “கய்யாம் ஓர் ஆண்டின் நீளம் 365.24219858156 என்று கணக்கிட்டார். இந்த முடிவு பற்றி இரண்டு கருத்துக்கள். முதலில், இத்தனைத் துல்லியமாகச் சொல்வதற்கு அசாதரணமான தன்னம்பிக்கை வேண்டும். ஒரு மனிதனின் வாழ்நாளில் ஓர் ஆண்டின் நீளம் என்பது ஆறாம் தசம இடத்தில் மாறுபடுகிறது என்பதை இப்போது நாம் அறிந்திருக்கிறோம். இரண்டாவது, கய்யாமின் முடிவு மிகவும் துல்லியமாகவே இருக்கிறது! ஒப்பிட்டு நோக்கின், 19-ம் நூற்றாண்டின் முடிவில் ஓர் ஆண்டின் நீளமானது  365.242196 நாட்களாக இருந்தது. இன்று அது 365.242190 நாட்களாக உள்ளது.”

உமர் கய்யாமைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள இன்னொரு கதையும் உண்டு. அது அவரை ஒரு காதலனாகக் காட்டுகின்றது. உமர் கய்யாமின் ஆளுமை காதல் மற்றும் அறிவியல் என்னும் இரண்டு துருவங்களுக்கு இடையே அலைகழிக்கப் படுவதாக அந்தக் கதை சித்தரிக்கிறது. அந்தக் கதை உண்மையான சரித்திரமா இல்லையா என்பது பற்றி நான் அறியேன். ஆனால் அது உண்மையாக இருக்கக் கூடும் என்றே என் உள்ளுணர்வு சொல்கிறது. நிச்சயமாக, காதலனான உமர் கய்யாம்தான் பின்னாளில் ஒரு சூஃபியாக பரிணமித்திருக்க முடியும். விஞ்ஞானியான உமர் கய்யாம் இடையிலேயே அந்தக் காதலில் கரைந்து போய்விடுகிறார்.

உமர் கய்யாமின் அகத்தேடலைத் தூண்டிவிட்டது அவரின் காதல்தான். பெண்ணின் மீதான காதலாகச் சிறு வயதில் ஆரம்பித்த அது, அப்பெண்ணின் இழப்பில் சத்தியத் தேடலாக மாறுகிறது. அது விஞ்ஞானத்தின் பயனின்மையைப் பார்த்து அதனை உதறித் தள்ளி சூஃபித்துவம் நோக்கி ஓடுகின்றது. இப்படித்தான் அந்தக் கதை சொல்கிறது. விஞ்ஞானம் என்பது புறவுலகின் உண்மையை / தன்மையை அறிவும் தேடல்தான். அகத்தின் தேடல் ஆன்மிகம். அதற்கு விஞ்ஞான முறைகள் உதவாது என்பது மட்டுமல்ல, உபத்திரவமாகவும் இருக்கும்.


உமர் கய்யாமின் இந்தச் சரிதை ஒரு வரட்டு வரலாறாக இல்லாமல் ஒரு சுவாரஸ்யமான புதினத்தைப் படிப்பதாக அமைகிறது. தமிழில் எம்.ஈ.கே.மவ்லானா எழுதிய ‘உமர் கய்யாம்’ என்னும் நூலினை நான் படித்த போது அப்படித்தான் உணர்ந்தேன். அதே கதை ஹாலிவுட்டில் “KEEPER: THE LEGEND OF OMAR KHAYYAM” என்னும் திரைப்படமாக 2005-ல் வெளிவந்தது. அதனை இயக்கியவர் இரானிய-அமெரிக்கரான கைவான் மஷாயிக்.
பன்னிரண்டு வயதான கம்ரான் என்னும் சிறுவனின் அண்ணனான நாதிர் இனம்தெரியாத ஒரு வியாதியால் சிறுகச் சிறுக இறந்து கொண்டிருக்கிறான். அவர்களின் குடும்பம் எப்போதும் அடுத்தடுத்த தலைமுறைக்குத் தன் வரலாற்றை வாய்மொழியாக வழங்கிப் பேணி வருகிறது. அந்தக் கடமையைச் செய்யும் பொருட்டு நாதிர் தம் குடும்பத்தின் முன்னோரான பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமர் கய்யாமின் கதையைக் கம்ரானுக்குச் சொல்கிறான் என்பதாகத் திரைப்படத்தைக் கைவான் மஷாயிக் அமைத்திருக்கிறார். இப்படம் சமர்கந்த், புகாரா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய இடங்களில் படமாக்கப் பட்டுள்ளது.


உமர் கய்யாம் பால்ய வயதில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது அவருக்கு இரண்டு சிறுவர்கள் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் மூவரும் தமக்குள் ஒரு வாக்குறுதி எடுத்துக் கொண்டார்கள். அதாவது, அவர்களில் யார் ஒருவர் பின்னாளில் உயர்பதவிக்குச் சென்றாலும் மற்ற இரண்டு நண்பர்களுக்கும் உதவ வேண்டும் என்று. அதன்படியே நிஜாமுல் முல்க் பின்னாளில் செல்ஜூக் அரசரின் தளபதி ஆனார். சொன்னபடியே அவர் தன் நண்பர்களுக்கு உதவ முன் வந்தார். ஹசன் சப்பாஹ் அரண்மனைக் காவலராக நியமிக்கப்பட்டார். உமர் கய்யாமின் விருப்பப்படி அவர் வானியல் ஆராய்ச்சிகள் நிகழ்த்துவதற்கு இஸ்ஃபஹானில் ஒரு ஆய்வுக்கூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

மாணவப் பருவத்தில் உமர் கய்யாமுக்கு தோழி ஒருத்தியும் இருந்தாள். அவள் பெயர் தர்யா. கய்யாம் அவளைக் காதலித்தார். ஹசன் சப்பாஹுக்கும் அவளை அடைய வேண்டும் என்னும் விருப்பம் இருந்தது. இதனால் பின்னாளில் நண்பர்கள் இருவரும் பகைவர்களாக மாறினர்.

அரண்மனைக் காவலராக இருந்த சப்பாஹ் அரண்மனைக்குள் பல குழப்பங்களை விளைவித்தார். அதனால் பதவி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவர் ஷியா பிரிவில் உள்ள இஸ்மாயிலி என்னும் உட்பிரிவைச் சேர்ந்தவராக இருந்தார். தன் பிரிவின் கொள்கைகளை அரசியல் சூழ்ச்சிகளால் பரவச் செய்ய வேண்டும் என்னும் திட்டம் அவரின் வாழ்வையே மாற்றி அமைத்தது. தனக்கென்று தொண்டர்களைத் திரட்டிக் கொண்டு அலமூத் என்னும் கோட்டையைக் கைப்பற்றி அங்கே ‘பூமியின் சொர்க்கம்’ என்னும் தோட்டத்தை அமைத்தார். மாற்றுக் கொள்கையாளர்களைக் கொலை செய்வதற்கான அமைப்பு ஒன்றினை உருவாக்கினார். அவர்கள் தம்மை ‘ஹஷீஷீன்’ என்று அழைத்துக் கொண்டனர். இந்தச் சொல்தான் மாறுவேடமிட்டு வந்து கொலை செய்வதற்கான ‘ASSASSINATION’ என்னும் ஆங்கிலச் சொல்லின் மூலம் என்று கருதப்படுகிறது. ஹசன் சப்பாஹின் பெயரால் அந்த அமைப்பு ‘ஹசீசீன்’ என்று சொல்லப்பட்டது என்று ஒரு கருத்து உண்டு. ஹஷீஷ் என்றால் கஞ்சா என்று பொருள். அதனடியாகவே அவர்களுக்கு ஹஷீஷீன் என்னும் பெயர் வந்தது என்னும் பார்வையும் உண்டு. ஏனெனில், ஹசன் சப்பாஹ் தன் தொண்டர்களைத் தேர்ந்தெடுக்கக் கையாண்ட முறைகளில் அவர்களுக்கு ஹஷீஷ் கலந்த பானத்தைப் பருகக் கொடுத்து மயக்குவதும் ஒன்று.

ஹசன் சப்பாஹ் அனுப்பிய ஒருவன் சூஃபியாக மாறுவேடம் தரித்து வந்து நிஜாமுல் முல்க்கைக் கொலை செய்துவிடுகிறான். அரசியல் மாற்றங்களால் உமர் கய்யாமின் வாழ்வில் புயல் வீசத் தொடங்குகிறது. அந்தக் குழப்பங்களில் ஏற்கனவே அவர் தன் காதலியான தர்யாவைத் தொலைத்திருந்தார்.

உமர் கய்யாமின் மனம் கசந்துவிட்டது. விஞ்ஞானத்தில் அவரால் மனம் ஒன்றித் தோய்ந்திருக்க இயலவில்லை. அவர் தன் காதலியைத் தேடி அலைகிறார். அவள் எங்கு சென்றாள் என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. பாரசீக சாம்ராஜ்யம் எங்கும் அவர் தன் மனத்தோட்டத்தின் ரோஜா மலரைத் தேடிப் பயணிக்கிறார். அவருடன் விசுவாசமான ஒரு வேலைக்காரன் மட்டும் உதவியாக உடன் வருகிறான். இறுதியில் ஒரு கிராமத்தில் தன் காதலியைக் கய்யாம் கண்டடைகிறார். அவள் நோய் என்னும் கொடுங்காற்றில் சிக்குண்ட ரோஜாப்பூவாய் தளர்ந்து கிடக்கிறாள். மரணத்தின் வாசலில் தன் காதலியைக் கைப்பிடிக்கிறார் உமர் கய்யாம். அவள் திருமண இணைவின் இன்பத்தைத் தாங்கமாட்டாள், செத்துவிடுவாள் என்று வேலைக்காரன் சொல்கிறான். கய்யாமுக்கோ தன் காதலி தன் மனைவியாக வேண்டும் என்பது மட்டுமே போதுமாக இருக்கிறது. அவர் உள்ளத்தில் பேரின்பத்தின் ஊற்று பொங்கிப் பாய்ந்து எல்லாத் துயரங்களையும் போக்கியிருந்தது. அன்று இரவு விருந்து நடக்கிறது. ஏழைகளும் பராரிகளும் அழைக்கப்படுகிறார்கள். உயர்தரமான உணவுடன் அவர்களுக்குப் பணத்தையும் நகைகளையும் உமர் கய்யாம் வாரி வீசுகிறார். அந்த இடமே சந்தோஷக் கூச்சல்களால் அமளி துமளி ஆகிறது.

இந்த இடத்தில் எம்.ஈ.கே.மவ்லானா ஓர் அருமையான வசனத்தை வைத்திருக்கிறார். ஒருவன் அந்த வேலைக்காரனிடம் கேட்கிறான், “என்ன உங்கள் எஜமான் குடித்திருக்கிறாரா?” அதற்கு வேலைக்காரன் விடை சொல்கிறான், “மடையனே! இந்த உலகில் உள்ள அத்தனை மதுவையும் நீ குடித்தாலும் என் எஜமான் இன்று அடைந்திருக்கும் போதையை நீ அடைய முடியாது!”

அந்தத் திருமண நாளின் இரவே தர்யாவின் மரண நாளாகவும் ஆகிறது. அவளின் இறுதிச் சடங்குகளை முடித்த பின் உமர் கய்யாம் ஒரு நாடோடியாகச் சுற்றித் திரிகின்றார். அந்த இழப்பே அவரின் ஆன்மிகத் தேடலின் ஆரம்பப் புள்ளி என்று நாம் அனுமானித்துக் கொள்ளலாம். இதுதான் அவரின் கதை.

உமர் கய்யாமின் இக்கதை எனக்கு இன்னொரு ஹாலிவுட் திரைப்படத்தை நியாபகப் படுத்தியது. அதிலும் ஸ்ரீநிவாச ராமநுஜம் பற்றி ஓரிடத்தில் பேசப்படுகிறது!

(தொடரும்)

No comments:

Post a Comment