Sunday, July 1, 2012

கோல்மன் பார்க்ஸ்


                
’விதி உண்டா இல்லையா?’ என்னும் விவாதம் ஏதோ ஒரு சேனலில் ஓடிக்கொண்ட்ருந்தது. என் சகதர்மினி பார்த்துக் கொண்டிருந்தாள். விதி உண்டு என்றும் இல்லை என்றும் இரு தரப்பில் கல்லூரி மாணவர்கள், விவாதிக்கிறேன் என்ற பெயரில் பக்குவமில்லாமல் கதறிக் கொண்டிருந்தார்கள். ஐந்து நிமிடங்களுக்கு மேல் சகிக்கமுடியாமல் நான் அவளிடம் சொன்னேன், “இதையெல்லாம் விதியே என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?”

அவள் வேறு சேனலுக்கு மாற்றிவிட்டாள். நானும் புரண்டு படுத்தேன். சிந்தனை அந்த விதிச்சுழலில் மாட்டிக் கொண்டது. சட்டென்று எனக்கு கோல்மன் பார்க்ஸ் (COLEMAN BARKS) ஞாபகம் வந்தார். அவருடைய வாழ்வில் நிகழ்ந்த அழகான சம்பவங்கள் நினைவில் மலர்ந்தன. நம் வாழ்க்கை முன் வரையறை செய்யப்பட்டது (PRE-DETERMINED) என்னும் கருத்தை மனம் தொடும்போதெல்லாம் கோல்மன் பார்க்ஸின் வாழ்க்கை எனக்கு ஞாபகம் வரும்.

மௌலானா ரூமியிடம் நான் மனதைப் பரிகொடுப்பதற்குக் காரணமாக இருந்தவர்களுள் கோல்மன் பார்க்ஸ் மிகவும் முக்கியமானவர். அவருடைய “THE ESSENTIAL RUMI” என்னும் நூல் மஸ்னவி என்னும் கடலுக்குள் என்னை இழுத்துச் சென்ற பேரலையாக இருந்தது. அந்நூல் 27 அத்தியாயங்களில் மௌலானா ரூமியின் கவிதைகளை அழகான ஆங்கிலப் புதுக்கவிதைகளாகப் பரிமாறுகின்றது.

1937-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டென்னெஸ்ஸி மாநிலத்தில் உள்ள ’ச்சட்டனூகா’வில் பிறந்து, வளர்ந்த பின்னர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கோல்மன் பார்க்ஸ், முப்பது ஆண்டுகள் ஜார்ஜியா பல்கலைக் கழகத்தில் கவிதையியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஜியார்ஜியா மாநிலத்தின் ஏதென்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

அவரது அலுவலக வாழ்க்கையின் குறிப்பு மேற்சொன்னபடி அமைந்திருந்தாலும் அவரின் அக வாழ்வின் பாதை முற்றிலும் வேறு மாதிரியானது. அவருடன் நம்மை நெருக்கமாக உணரச் செய்வது அந்த அகவாழ்க்கைதான். கோல்மன் பார்க்ஸ் இன்று உலகெங்கும் அறியப்படுவதும், பலராலும் நேசிக்கப் படுவதும் ஒரு பேராசிரியராக அல்ல. அவருடைய முழு வாழ்வின், ஆளுமையின் அடையாளமாகச் சொல்லப்படுவது “ரூமியின் மொழிபெயர்ப்பாளர்” (RUMI TRANSLATOR) என்னும் அடைமொழிதான்.

மௌலானா ரூமி அவர்கள் சொல்லச் சொல்ல அவரின் கவிதைகளைப் படியெடுத்து எழுதியவர் ஹுசாமுத்தீன் ச்செலபி என்னும் மாணவராவார். அவரையே “RUMI’S SCRIBE” என்று வரலாறு சொல்கிறது. அதுபோல் ஃபார்ஸி மொழியில் அமைந்துள்ள ரூமியின் காவியத்தையும் கவிதைகளையும் (மஸ்னவி மற்றும் தீவானெ ஷம்ஸ்) பிற மொழிகளில் மொழிபெயர்ப்பவர்களுக்கு “RUMI TRANSLATOR” என்னும் அடைமொழி ஒரு டாக்டரேட் பட்டம் போல் அமைகிறது. தமிழில் அந்தப் பட்டத்தைப் பெரியவர் நரியம்பட்டு சலாம் அவர்களுக்குத்தான் அளிக்கவேண்டும்.

மஸ்னவி காவியத்தின் ஆறு நூல்களையும் (பாகங்களையும்) வரிக்கு வரி நேரடி அர்த்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர். ரெனால்டு நிக்கல்சன் அவர்கள்தான். ஆனால் அவரின் மொழிபெயர்ப்பு வெறுமனே இலக்கிய வட்டத்திற்குள் மட்டும் வாசிக்கப்பட்டு முடங்கிக் கிடந்தது. ஆனால் கோல்மன் பார்க்ஸின் மொழிபெயர்ப்பில் மௌலானா ரூமியின் கவிதைகள் அமெரிக்க மக்களிடம் வெகுவாகப் பரவி ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது. அமெரிக்காவில் மிகவும் அதிகமாக விரும்பிப் படிக்கப் படும் கவிஞர் என்னும் பெருமையை, 13-ஆம் நூற்றாண்டில் பாரசீகத்திலும் துருக்கியிலும் வாழ்ந்த ரூமிக்கு 20-ம் நூற்றாண்டின் இறுதியில் பெற்றுத் தந்தது.

இத்தனைக்கும் கோல்மன் பார்க்ஸுக்கு ஃபார்ஸி மொழி தெரியாது! நிக்கியின் மொழிபெயர்ப்பை முன்வைத்துக் கொண்டு அதை மீண்டும் மொழிபெயர்க்கிறார். அல்லது ஃபார்ஸி மூலத்தை ஆங்கிலத்தில் உரைநடையாக ஜான் மொய்ன் என்னும் பேராசிரியர் மொழிபெயர்த்துத் தர அதனை ஆங்கிலத்தில் புதுக்கவிதை ஆக்குகிறார். ஆனால் அவர் அப்படிச் செய்வதில் ஒரு மந்திர ரஸவாதம் நிகழ்ந்து விடுகிறது. அதாவது காய்ச்சப்பட்ட நீரை மீண்டும் காய்ச்சினால் அது இயற்கை நீரின் சுவையை மீண்டும் அடைந்தால் எப்படி இருக்கும்? பார்க்ஸின் மொழிபெயர்ப்பில் அந்த அதிசயம் நடந்துவிடுகிறது. மௌலானா ரூமியின் சொற்கள் அத்தனை எளிமையாக இருந்தாலும் எப்படி நம்மைப் பரவசப் படுத்துகின்றதோ, எத்தனை ஆழமாக உள்ளத்தைத் தைக்கின்றதோ அது போல் பார்க்ஸின் மொழிபெயர்ப்பு செயல்படுகின்றது.

பார்க்ஸின் மொழிபெயர்ப்புக்கள் துல்லியமாக இல்லை என்றும், ரூமியின் கருத்துக்களை அவை திரிக்கின்றன என்றும் ஒரு கராரான குற்றச்சாட்டு உண்டு. கோல்மன் பார்க்ஸ் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மனநிலைகளுக்கு ‘அப்பீல்’ ஆகும் வண்ணம் தன் மொழிபெயர்ப்பை அமைக்கிறார். அதில் கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக் கொள்கிறார் என்பது உண்மைதான். இன்னொரு கோணத்தில் பார்த்தால், மௌலானா ரூமியின் சொற்களை விடவும் அவரின் கருத்துக்கள் தன் மனத்தில் ஏற்படுத்தும் விளைவுகளையே அவர் மொழிபெயர்க்கிறார். “பொருளை வரையாதே. அது உன்னில் உண்டாக்கும் விளைவுகளை வரை” (Paint not the object, but the effect it creates) என்று பாப்லோ பிக்காஸோ சொன்னாராம். கோல்மன் பார்க்ஸ் அதைத்தான் கவிதையில் செய்கிறார்.

மஸ்னவி உண்டாக்கும் மனநிலைகளின் பக்கம் தன் கவனத்தைக் குவிப்பதால்தான் கோல்மனின் மொழியாக்கங்கள் நம்மை ஈர்க்கின்றன. ஏ.ஜே.ஆர்பெர்ரி, ரெனால்டு நிக்கல்சன், அன்னிமேரி ஷிம்மல் போன்றோர் ’ரூமி அறிஞர்கள்’ (RUMI SCHOLARS) என்று சொன்னால், கோல்மன் பார்க்ஸ் ‘ரூமியின் காதலர்’ (RUMI LOVER) என்று சொல்லலாம். ”ஈரான் எனது முதல் தாய்நாடு” என்று சொன்ன அமெரிக்கர் அவர்!

கோல்மன் அடிப்படையில் ஒரு கவிஞர். மௌலானா ரூமியின் கவிதைகளை மொழிபெயர்க்கத் துவங்கும் முன் தன்னுடைய கவிதை நூற்களை வெளியிட்டிருக்கிறார்.1972-ல் அவருடைய முதல் கவிதைத் தொகுதியான “தி ஜூஸ்” (THE JUICE) வெளியானது. ’GOURD SEED’, ‘TENT MAKING’, ‘GRAND-DAUGHTER POEMS’, ‘QUICKLY AGING HERE’ முதலியவை அவருடைய பிற கவிதை நூல்கள்.

 மௌலானா ரூமியின் கவிதை உலகிற்குள் தான் காலடி எடுத்து வைத்த அனுபவத்தை அவர் இப்படிச் சொல்கிறார்:
“என்னுடைய கல்விப் பயிற்சி, பெர்க்கலி மற்றும் ச்சேப்பல் ஹில் ஆகிய இடங்களில் நான் பயின்றபோது, அமெரிக்க இலக்கியத்திலும் 20-ஆம் நூற்றாண்டு இலக்கியத்திலுமாக இருந்தது. 1976-ஆம் ஆண்டு வரை நான் ரூமியின் பெயரைக் கேள்விப்பட்டது கூட இல்லை. அந்த ஆண்டுதான் ஒருநாள் ரொபர்ட் ப்ளை (Robert Bly) என் கையில் ஏ.ஜே.ஆர்பரியின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றினைத் தந்து, ‘இக்கவிதைகள் அவற்றின் கூண்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்று சொன்னார். ஒரு மொழிபெயர்ப்பாளன் ஏன் ஒரு குறிப்பிட்ட ஆளுமையைத் தன் பணிக்காகத் தேர்ந்தெடுக்கிறான் ஏன் பிற கவிஞர்களை அவன் தேர்ந்தெடுப்பதில்லை என்பது என்றைக்குமே மர்மமான விஷயம்தான். ஏதேனும் ஒத்திசைவு அங்கே இருந்தாக வேண்டும். ரூமியின் கவிதைகளில் இருந்த விசாலம் மற்றும் ஏக்கவுணர்விடம் நான் உடனடியாக ஈர்க்கப்பட்டேன். ஆர்பெரியின் ஆங்கிலத்தை மாற்றியமைத்தபடி நான் இந்தப் புதிய உலகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அறியலானேன். என் மொழிபெயர்ப்பின் ஆரம்ப முயற்சிகளை சட்டப் பேராசிரியரான என் நண்பன் ஒருவனுக்கு அனுப்பிவைத்தேன். அவற்றை அவன் தன் வகுப்பில் வாசித்துக் காட்டியிருக்கிறான். சட்டம் பயிலும் மாணவன் ஒருவன் முன்வந்து என் முகவரியைக் கேட்டுப் பெற்று எனக்குப் பல முறை கடிதம் எழுதினான். ஃபிலடெல்ஃபியாவில் இருக்கும் தன் குருநாதரைக் காண வரும்படி மீண்டும் மீண்டும் என்னை அழைத்துக் கொண்டிருந்தான்”

கோல்மன் பார்க்ஸின் வாழ்க்கையில் அடுத்து நடந்தது என்ன என்பதைக் காணும் முன் இங்கே ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக நிறுததுகிறேன். கனவைப் பற்றி  உங்கள் அபிப்ராயம் என்ன? கனவு ஒரு தனி உலகம். அது ஒரு தனி மொழி. அது ஓர் ஆழமான அனுபவம். இன்னும் கனவுலகத்தை நாம் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. இவ்வுலகில் நாம் காலத்தை அனுபவிப்பதற்கும் கனவில் அனுபவிப்பதற்கும் பெரிய மாற்றம் உள்ளது. கனவுலகம் பொய்யுலகம் அல்ல. இவ்வுலகை விடவும் இன்னும் மெய்யானது. சொல்லப்போனால் தற்காலிகத்திற்கும் நிரந்தரத்திற்கும் பாலமாக உள்ள ஓர் உலகம் அது.

மிகவும் ஆழமான பரிமானங்கள் கொண்ட கனவைப் பற்றி ஒரு ‘முஸ்லிம் பகுத்தறிவு அழைப்பாளர்’ ஒரு பிரசங்கத்தில் சொன்னதைக் கேட்டு மிகவும் நொந்து போனேன். “கனவில் ரசூலுல்லாஹ்வைக் காண்பது என்பது சாத்தியம் அல்ல. ஏனெனில் நாம் முன்பே கண்ட ஒருவரைத்தான் நாம் கனவில் காண முடியும். நேரில் கண்டிராத ஒருவரை நாம் கனவிலும் காண முடியாது” என்று அவர் உளறிக் கொண்டிருந்தார். அவர் மார்க்கத்தை ’அறிவியல்’ ரீதியாக ஆய்பவராம். இப்படியெல்லாம் படு தட்டையான பார்வை கொண்டவர்களின் கைகளில் மார்க்கம் என்பது நாயின் வாயில் அகப்பட்ட தெங்கம்பழம் ஆகிவிடும்.

இறைத்தூதரை மட்டுமல்ல, இறைவனையே கனவில் காண முடியும் என்பது சூஃபிகளின் நம்பிக்கை. மட்டுமல்ல, இறைத்தூதரை இப்போதும் இவ்வுலகில் நேரில் காணலாம் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இவற்றில் எனக்கும் எந்தக் குழப்பமும் இல்லை! இனி கோல்மன் பார்க்ஸின் அனுபவத்தைப் பார்ப்போம்.

“முடிவாக நான் ஃபிலடெல்ஃபியாவிற்குச் சென்று, இலங்கையில் இருந்து வந்தவரான ஞானி பாவா முஹையுத்தீன் கட்டிலில் அமர்ந்தபடித் தன் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்த போது ஒரு வருடத்திற்கு முன்பு நான் என் கனவில் கண்ட அதே மனிதர் இவர்தான் என்பதை அறிந்தேன்! அப்படியொரு நிகழ்வை என்னால் விளக்கிச் சொல்ல முடியாது. அதே சமயம், அப்படி நிகழ்ந்ததை என்னால் மறுக்கவும் முடியாது. ரூமிப் பணியைத் தொடரும்படி என்னிடம் பாவா சொன்னார்கள். “அது செய்து முடிக்கப்பட வேண்டும்.” ஆனால் ஓர் எச்சரிக்கையும் தந்தார்கள், “ஒரு ஞானியின் நூலில் நீ பணியாற்றுகிறாய் என்றால், நீ ஒரு ஞானியாக வேண்டும்.” நான் ஒரு ஞானி ஆகவில்லை. ஆனால், ஒன்பது ஆண்டுகள், ஒவ்வோராண்டும் நாலைந்து தடவைகள் ஒரு ஞானியின் பிரசன்னத்தில் நான் இருந்திருக்கிறேன். ரூமி சொல்கிறார்கள்:
’அறிவு தன் மயிர்-பிளக்கும் வேலையைச் செய்கிறது
மிகவும் துல்லியமாக,
ஆனால், எந்தக் கலையும்
துவங்குவதோ தொடருவதோ இல்லை
அதற்கொரு குருநாதர்
ஞானத்தை ஊட்டாமல்’

இந்த சூஃபி ஞானியின் தொடர்பு எனக்குக் கிடைத்திருக்கா விடில், ரூமியின் பார்வையில் கவித்துவம் என்பது என்ன என்பதைப் பற்றியோ, அவரின் கவிதைகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றியோ நான் எந்த அறிவும் இல்லாதவனாக இருந்திருப்பேன். ‘சூஃபி’ என்னும் வார்த்தையைக் கூட இங்கே பயன்படுத்த வேண்டியதில்லை. என்னில் பாவா செய்த, செய்துவருகின்ற பணி என்பது மதத்தைக் கடந்த ஒன்று. ‘காதலே சமயம், பிரபஞ்சமே வேதம்.’ ரூமியின் கவிதைகளில் பணி செய்வது அந்தரங்கத் தோழமையை மேலும் ஆழமாக்குகிறது. என் சீடத்துவம் தொடர்கிறது. மொழிபெயர்ப்பு என்னும் பெயரில் நான் செய்பவை, ஆக்கங்களோ – மொழிபெயர்ப்போ – புலப்பாடுகளோ – போலச் செய்தலோ, அவை என்னவாக இருப்பினும், என் குருவுக்கான காணிக்கைகளே. சீடனாக என்பதினும் தோழனாக. இந்தக் கவிதைகள் மெனக்கெட்டு செய்யப்பட்ட மொழியாக்கங்கள் அல்ல; இவை என்றும் தொடரும் ஓர் உரையாடலில் இருந்து வெளிப்படுபவை என்பதற்காக நான் மிகவும் நன்றியுடன் உணர்கிறேன். நான் ஒருமுறை பாவாவிடம் கேட்டேன், அவரின் கண்களில் நான் காணும் அந்த ஒளி ஏதேனும் ஒருநாள் என் கண்களின் பின்னால் வந்து நின்று கொண்டு பார்க்குமா என்று. அவர் குரு-சிஷ்ய உறவு பற்றி மிகவும் ஆழமாகப் பேசினார். இறுதியாகச் சொன்னார், “அதற்கு, நான் என்பது நாம் ஆக வேண்டும்.””

(தொடரும்...) 

1 comment:

  1. ஆர்வத்தை தூண்டும் ஆரம்பம். கோல்மனின் வார்த்தைகளில் பருகிய ஞான அமுதை பிலாலியின் வார்த்தைகளில் பகிர்ந்து கொள்வதை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete