Friday, June 25, 2021

நேரம், இடம் மற்றும் சகாக்கள்

 

            பண்டைக் காலத்தில் மன்னன் ஒருவன் தர்வேஷ் ஒருவரை அழைத்துக் கூறினான்:

            ”குருமார்களின் இடையறாத தொடர்ச்சி ஆதி காலத்து மனிதர்களிடம் போய் சேர்கிறது என்று சொல்லப்படுகின்றது. அத்தகைய தர்வேஷ் பாதை வழங்கிய ஒளிதான் பற்பல விழுமியங்களைத் தூண்டி நடத்தி வந்துள்ளது. எனது இந்த அரசாட்சி அவற்றின் மங்கிய பிரதிபலிப்பே அன்றி வேறில்லை.”

            ”உண்மைதான்,” என்றார் தர்வேஷ்.

            ”நடப்பு நிகழ்வுகளின் உண்மை நிலையை அறியும் அளவுக்கு எனக்கு ஞானம் இருப்பதால், நீங்கள் உங்களின் மேன்மையான ஞான நிலையிலிருந்து கற்றுத் தரும் பேருண்மைகளை நான் கற்க ஆவலும் விருப்பமும் கொண்டுள்ளேன் – கற்றுக் கொடுங்கள்!”

            ”இது ஆணையா? அல்லது, கோரிக்கையா?” என்று தர்வேஷ் கேட்டார்.

            ”நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரியே,” என்றான் மன்னன். “அது ஒரு ஆணையாகத்தான் வேலை செய்யும் என்றாலும் நான் கற்பேன். அது ஒரு கோரிக்கையாகத்தான் வேலை செய்யும் என்றாலும் நான் கற்பேன்.”

            தர்வேஷ் பேசுவதற்காக அவன் காத்திருந்தான்.

            பல நிமிடங்கள் கழிந்தன. ஆழ்ந்து சிந்திப்பவர் போல் குனிந்திருந்த தலையை தர்வேஷ் மெல்ல உயர்த்தினார். பிறகு சொன்னார்:

            ”’ஒளிபரப்பு நேரம்’ வரும் வரை நீ காத்திருக்க வேண்டும்.”

            மன்னன் குழம்பிவிட்டான். தான் கற்றுக்கொள்ள விரும்புவதால் தனக்கு ஏதேனும் சொல்லப்பட அல்லது காட்டப்பட தான் உரிமை பெற்றிருப்பதாக அவன் கருதினான்.

            ஆனால் தர்வேஷ் அரசவையை விட்டு வெளியேறினார்.

            அதற்குப் பிறகு, ஒவ்வொரு நாளும், தர்வேஷ் தொடர்ந்து அரசவைக்கு வந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் நாட்டின் நிர்வாகப் பணிகள் தொடர்ந்து நடந்தன. நாட்டில் இன்பமான நிலைகளும் சோதனையான சூழல்களும் மாறி மாறி வந்து போயின. அமைச்சர்களும் ஆளுநர்களும் ஆளாளுக்கு ஆலோசனைகளை அள்ளித் தெளித்தனர். வானச் சக்கரம் சுழன்றது.

            ஒட்டுக்கள் போட்ட நீண்ட அங்கி அணிந்த தர்வேஷ் ஒவ்வொரு முறை தன் கண்ணில் படும்போதும் அரசன் நினைத்தான்: ”தினமும் தர்வேஷ் இங்கே வருகிறார். ஆனால் அவர் ஒருபோதும் எனது ஞானக் கல்வியைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. அரசவையின் பல்வேறு பணிகளில் அவர் பங்கெடுக்கிறார் என்பது உண்மைதான்; அவர் பேசுகிறார், சிரிக்கிறார், சாப்பிடுகிறார்… சந்தேகமில்லை, அவர் தூங்கவும்தான் செய்கிறார். ஏதேனும் தெய்வீக சமிக்ஞை வர வேண்டும் என்று அவர் காத்திருக்கிறாரோ?” ஆனால், மண்டை காய எவ்வளவு யோசித்தாலும் இந்த மர்மத்தின் ஆழங்களை அரசனால் அளக்க முடியவில்லை.

            உரிய காலம் வந்ததும், மறைவின் அலை ஒன்று சாத்தியத்தின் கரையை மோதியது. அப்போது அரசவையில் ஓர் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருவர் சொன்னார், “தாவூது சாஹில்தான் இந்த உலகத்திலேயே மாபெரும் பாடகர்.”

            இது போன்ற கருத்துக்கள் எல்லாம் அரசரின் மனதை அவ்வளவாக ஈர்க்காது. ஆனால், இம்முறை அவர் அந்தப் பாடகரின் பாட்டைக் கேட்டே ஆக வேண்டும் என்று தீராத ஆவல் தீயைப் போல் பற்றிக்கொண்டது.

            ”அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்,” என்று ஆணை பிறந்தது.

            நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் பொறுப்பாளரை அந்தப் பாடகரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், பாடகர்களின் பேரரசரான தாவூது சொன்னார்: ”உங்களின் அரசருக்குப் பாடல் கலையைப் பற்றிப் போதிய ஞானம் இல்லை. வெறுமனே என் முகத்தைப் பார்ப்பதுதான் அவரின் விருப்பம் என்றால் நான் வருகிறேன். ஆனால், நான் பாடுவதைக் கேட்க அவருக்கு ஆசை எனில், எல்லாரையும் போன்று, எனக்குச் சரியான மனநிலை ஏற்படும்வரை அவர் காத்திருக்கத்தான் வேண்டும். எப்போது பாட வேண்டும் எப்போது கூடாது என்ற உணர்வுதான் என்னை உருவாக்கியிருக்கிறது. அந்த ரகசியத்தை அறிந்தால் உலகில் எந்தவொரு கழுதையும் சிறந்த பாடகர் ஆகிவிடும்.”

            இந்தச் செய்தி அரசனிடம் சொல்லப்பட்டபோது அவன் கோபத்திற்கும் ஆசைக்கும் இடையில் ஊசலாடினான். அவன் சொன்னான்: “எனக்காகப் பாடும்படி அவனை வற்புறுத்த இங்கே ஒருவர்கூட இல்லையா? அவனுக்குத் தோன்றும்போதுதான் அவன் பாடுவான் என்றால், நான் என்ன தொக்கா? நானும் எனக்குத் தோன்றும் போதுதான் கேட்பேன்.”

            மன்னன் அப்படிச் சொன்னதும் தர்வேஷ் எழுந்து நின்று சொன்னார்:

            ”காலத்தின் மயிலே! அந்தப் பாடகரைச் சந்திக்க என்னுடன் வாரும்!”

            அரசவையில் பெரிய சலசலப்பு தோன்றியது. எதிரும் புதிருமாகக் கருத்துக்கள் பிய்த்துக்கொண்டன. தர்வேஷ் ஓர் ஆழமான சூழ்ச்சி பண்ணிவிட்டார், இப்போது அவர் இந்தப் பாடகனை வைத்து விளையாடப் பார்க்கிறார் என்று சிலர் சொன்னார்கள். பாடகரை அவர் பாட வைத்துவிட்டால் அரசர் அவருக்குப் பெரிய சன்மானம் வழங்குவார் என்பது சிலரின் கருத்து. ஆனால், சவாலுக்கு அஞ்சி அவர்கள் வாயை மூடிக் கொண்டிருந்தனர்.

            ஒரு வார்த்தையும் பேசாமல் அரசன் எழுந்து நின்று தனக்கொரு ஏழ்மையான ஆடையைக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அதை அணிந்து கொண்டு, தர்வேஷைப் பின் தொடர்ந்து வீதியில் நடந்தான்.

            மாறுவேடமிட்ட மன்னனும் அவனின் வழிகாட்டியான தர்வேஷும் விரைவிலேயே பாடகரின் வீட்டு வாசலில் நின்றனர். அவர்கள் கதவைத் தட்டியதும் தாவூதின் குரல் வந்தது:

            ”இன்று நான் பாடவில்லை. என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். நீங்கள் போகலாம்.”

            ஆனால், தர்வேஷ் அங்கே அமர்ந்து உடனே பாடத் தொடங்கிவிட்டார்! தாவூதுக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஒன்றை அவர் பாடினார். ஆரம்பம் முதல் இறுதி வரை அதை அவர் சரியாகப் பாடினார்.

            இசை விற்பன்னர் அல்லாத அரசன் அவரின் பாடலைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்து விட்டான். அவனுடைய கவனம் எல்லாம் இப்போது தர்வேஷின் இனிய குரலில் ஊன்றி நின்றது. தர்வேஷ் அந்தப் பாடலை வேண்டும் என்றே சற்று சுருதிப் பிசகாகப் பாடினார் என்பதை அவன் அறியவில்லை. அந்தப் பிழையைத் திருத்த வேண்டும் என்னும் ஆவலை தாவூதின் உள்ளத்தில் தூண்டவே அவர் அப்படிப் பாடினார்.

            ”தயவு செய்து அதை மீண்டும் பாடுங்கள்,” என்று அரசன் கெஞ்சினான். “இது மாதிரியான ஓர் இனிய இசையை நான் கேட்டதே இல்லை!”

            அரசன் கெஞ்சுவதைக் கேட்ட தாவூது தானே பாடத் தொடங்கினார். அவர் ஆரம்பித்த முதல் ஸ்வரத்திலேயே அரசனும் தர்வேஷும் மெய் மறந்து உறைந்துவிட்டார்கள். சாஹிலின் குயில் கழுத்தில் இருந்து பெருகிப் பாய்ந்த ஸ்வரப் பிரவாகத்தில் அவர்களின் கவனம் இணைந்து ஒன்றாகிவிட்டது.

            பாடல் முடிந்ததும், விலையுயர்ந்த பரிசுகளை தாவூதுக்கு அரசன் வழங்கினான். அவன் தர்வேஷிடம் சொன்னான்: “மகா ஞானியே! காலத்தின் குயிலான பாடகரைத் தூண்டிய உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன். எனது அரசவையில் உங்களையும் ஆலோசகராக நியமிக்க விரும்புகிறேன்.”

            ஆனால், தர்வேஷ் சொன்னார்: “மேன்மைமிகு மன்னரே! நீங்கள் விரும்பும் பாடலை நீங்கள் கேட்க வேண்டும் என்றால் முதலில் அங்கே பாடகர் ஆயத்தமாக இருக்க வேண்டும், அடுத்து நீங்கள் அங்கே இருக்க வேண்டும், அப்புறம் பாடலைத் தூண்டி விடுவதற்கான ஊடகமாக அங்கே ஒருவர் இருக்க வேண்டும். மேதையான பாடகர்களிடம் அரசர்களுக்கு இருக்கும் இதே நிலைதான் தர்வேஷ்களிடம் அவர்களின் மாணவர்களுக்கான நிலையும். நேரம், இடம், சகாக்கள் மற்றும் திறமைகள்.”

db

            ’குறிப்பிட்ட கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் சூஃபிக் கருத்துக்களைப் பயில முடியும், அவற்றுள் நேரம், இடம் மற்றும் சகாக்கள் ஆகியவை அடங்கும்’ என்னும் கருத்து சூஃபிகளுக்கும் வெளிரங்கமான சமய அறிஞர்களுக்கும் இடையில் உள்ள பிணககை அழுத்தமாகக் காட்டுகிறது.

            சூஃபிகளின் அனுபவங்களுக்கான ஆதாரங்களை மார்க்க அறிஞர்கள் தமது கல்வியின் ‘புழக்க மொழி’யிலேயே கோருகின்றனர். கல்வியாளர்கள் அல்லது விஞ்ஞானிகளுக்குத் தேவைப்படும் சூழ்நிலைகளை உருவாக்கும் வாய்ப்பையே சூஃபிகளும் கோருகின்றார்கள் என்பதை இந்தக் கதையைப் போன்றே, பல சூஃபி கதைகள் சுட்டிக் காட்டுகின்றன.


            இந்தப் பிரதி சையிது இமாம் அலீ ஷாஹ் அவர்களின் போதனைகளில் இருந்து எடுக்கப்பட்டது. 1880-இல் மறைந்த அவர்களின் அடக்கத்தலம் இந்தியாவில் குர்தாஸ்பூர் என்னுமிடத்தில் இருக்கிறது.

            ”சை” (Psi) என்று நவீன மீவுளவியல் அழைக்கும் தன்மையிலான நிகழ்வுகள் அவரைப் பற்றி அதிகம் சொல்லப்பட்டதால் எப்போதும் அவரைச் சுற்றி பற்பல ஆன்மிகப் பள்ளிகளைச் சேர்ந்த எதிர்காலச் சீடர்களும் ஆர்வலர்களும் மொய்த்துக் கொண்டிருந்தனர். அவர் தமது கனவில் தோன்றி மிக அவசியமான ஆலோசனைகளைக் கூறினார் என்றும், ஒரே நேரத்தில் அவர் பல இடங்களில் காட்சி அளித்தார் என்றும், அவர் என்ன கூறினாலும் கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சாதகமான வழிகாட்டுதல் அதில் இருக்கும் என்றும் மக்கள் சொல்லிக் கொண்டார்கள். ஆனால், நேரில் வந்து அவரைப் பார்த்தால் அவரிடம் அமானுஷ்யமாகவோ அசாதாரணமாகவோ எதுவுமே இருக்காது.

இக்கதைக்கு நான் எழுதிய பிற்குறிப்பு:


              இந்தக் கதையின் தலைப்பே இசை குறித்த ஒரு சூஃபிக் கோட்பாட்டைத்தான் குறிக்கிறது. சூஃபிகள் ஆன்மிக இசை நிகழ்வை “சமா” என்று அழைக்கிறார்கள். “சமீஃ” (கேட்போன்) என்பது அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்று. அதனடியாகவே இச்சொல் உருவாகியுள்ளது. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி குரு அபுல் ஹசன் அலீ இப்னு உத்மானுல் ஹுஜ்வீரி அவர்கள் எழுதிய “கஷ்ஃபுல் மஹ்ஜூப்” என்னும் நூலே பாரசீக மொழியில் எழுதப்பட்ட முதல் சூஃபித்துவ விளக்க நூல் என்று கருதப்படுகிறது. அவர்கள் அந்நூலில், சூஃபிகள் ’சமா’ நடத்துவதற்கு மூன்று நிபந்தனைகளைக் குறிப்பிட்டுள்ளார்கள்: நேரம் இடம் மற்றும் சகாக்கள் (ஜமான், ம(க்)கான், ரிந்தான்).

            இந்தக் கதை அக்பர் தனது அரசவைப் பாடகரான மியான் தான்சேனின் குருவான சுவாமி ஹரிதாஸ் அவர்களைச் சந்தித்த கதையை நினைவூட்டுகிறது. அக்பர் தனது அவையில் ‘நவரத்தினங்கள்’ என்னும் பெயரில் ஒன்பது பேரைத் திரட்டியிருந்தார். ஒவ்வொருவரும் அவரவர் துறையின் மாமேதைகள். இசைத்துறைக்கு மியான் தான்சேன். ஆனால், தன்னை விடத் தனது குரு ஹரிதாஸ் அவர்கள்தான் இசையின் சிகரம் என்று தான்சேன் கூறியதைக் கேட்டதில் இருந்து அவரைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆவல் அக்பருக்கு அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால், சுவாமி ஹரிதாஸ் பிருந்தாவனில் ’நிதி வன்’ என்னும் சோலையில் ஒரு சிறு குடியில் வசித்தார். ‘என் குரு அரசவைக்கெல்லாம் வர மாட்டார். அவர் அரசருக்காகவும் பாட மாட்டார். அவருக்குத் தோன்றும்போது இறைவனுக்காக மட்டுமே பாடுவார்,” என்று தான்சேன் சொன்னார். எனவே அக்பர் ஒரு சாதாரணக் குடிமகனாக மாறுவேடம் புனைந்து கொண்டு தான்சேனுடன் சென்று சுவாமி ஹரிதாஸின் பாடலைக் கேட்டார். ஹரிதாஸின் சீடர்களில் இருவர் மிகவும் புகழ் பெற்றனர்: ஒருவர் தான்சேன். அவர் அரசவைப் பாடகராகப் புகழ் ஈட்டினார். மற்றவர் பைஜு பாவ்ரா. அவர் தனது குருவைப் போன்றே பக்திப் பாடகராக இருந்தார்.

            அக்பரின் வாழ்வில் நிகழ்ந்த இக்கதையை நான் முதன் முதலில் ஓஷோவின் நூலொன்றில்தான் படித்தேன். (”Zarathustra A God That Can Dance – Talks on Fredrich Nietzsche’s ‘Thus Spake Zarathustra” என்னும் அவரது நூலின் பத்தாம் அத்தியாயத்தில் இக்கதை சொல்லப்பட்டுள்ளது.) அக்பர் மாறுவேடம் இட்டுக்கொண்டு நடுசாத்தில் மூன்று மணிக்குக் கிளம்பிச் சென்று சுவாமி ஹரிதாஸின் குடிசைக்கு வெளியே ஒளிந்து நின்று அவரின் பாடலைக் கேட்டார் என்கிறார் ஓஷோ. “ஒரு மன்னர், ஏறத்தாழ இந்தியா முழுவதையும் ஆட்சி புரிந்த பேரரசர், இசை கேட்பதற்காக ஒரு திருடனைப் போல் சென்றார்! அவர் அந்த இசையைக் கேட்டபோது அக்பரின் கண்களில் இருந்து ஆனந்தக் களிப்பின் கண்ணீர் வழிந்தோடியது. தான்சேனால் அதை நம்பவே முடியவில்லை,” என்று ஓஷோ சொல்வது இந்த சூஃபிக் கதையில் காணப்படும் காட்சியை அப்படியே ஒத்திருக்கிறது.


Tuesday, June 22, 2021

மீனவனும் ஜின்னும்

 


            ஒருநாள், மீனவன் ஒருவனின் வலையில் பித்தளைப் புட்டி ஒன்று சிக்கியது. அது ஈய மூடி இடப்பட்டிருந்தது. கடலில் அது மாதிரியான ஒரு வித்தியாசமான பொருளை அதுவரை அவன் கண்டெடுத்ததில்லை. எனவே, அதனுள் விலையுயர்ந்த பொக்கிஷம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணினான். மேலும், அதுவரை அவனுக்கு வாழ்க்கையில் மீன்பிடியும் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்ததில்லை. ஒருவேளை அந்தப் புட்டிக்குள் எதுவுமே இல்லை என்றாலும்கூட பித்தளை வியாபாரியிடம் அதை விற்கவாவது செய்யலாம்.

            அந்தப் புட்டி ரொம்பப் பெரியதாகவும் இல்லை. அதன் மூடி மீது ஒரு முத்திரை இருந்தது: இறைத்தூதரும் பேரரசருமான சுலைமானின் முத்திரை. அதனுள் பயங்கரமான ஜின் ஒன்று அடைக்கப்பட்டிருந்தது. அதனைக் கட்டுப்படுத்தி அடக்கி மனித குலத்தின் நன்மைக்காகச் சேவை செய்ய வைக்க வல்ல ஒரு மனிதன் தோன்றும் காலம் வரையில் மக்கள் அதனிடமிருந்து பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக சுலைமான் நபியே அதனைக் கடலுக்குள் வீசி எறிந்திருந்தார்.

            ஆனால், மீனவனுக்கு இதெல்லாம் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் தன் கையில் ஒரு அரிய வஸ்து சிக்கியிருக்கிறது, அவன் அதை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும், அது அவனுக்கு பெரிய லாபத்தை ஈட்டித் தரலாம் என்பதுதான். அதன் வெளிப்புறம் பளபளப்பாக இருந்தது. நிச்சயமாக அது ஒரு கலைப் பொருள்தான். அவன் நினைத்தான், “இதன் உள்ளே வைரங்கள் இருக்கக்கூடும்.”

            ”கற்றதை மட்டுமே கையாள்க” என்னும் மூதுரையை அவன் மறந்தான். புட்டியின் ஈய மூடியைத் திருகித் திறந்தான்.

            புட்டியைத் தலைகீழாகக் கவிழ்த்தான். ஆனால் அதனுள் எதுவுமே இல்லை. எனவே அதைத் தரையில் வைத்துவிட்டு அமர்ந்து ஏமாற்றத்துடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அதிலிருந்து குப்பென்று சிறு புகை ஒன்று சுழன்று எழுந்ததை கவனித்தான். அந்தப் புகை மெல்ல மெல்ல அடர்த்தி கூடிற்று. அது சுழன்று சுழன்று அச்சமூட்டும் பேருருவம் கொண்டு அவன் முன் நின்றது. இடி போன்ற ஓசையுடன் அவனிடம் பேசிற்று:

            ”நான் ஜின்களின் தலைவன். அற்புத நிகழ்வுகளின் ரசகியங்கள் தெரிந்தவன். நான் சுலைமான் நபிக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர் என்னைக் கைது செய்து புட்டிக்குள் அடைத்து விட்டார். இப்போது பழி வாங்கும் படலம் ஆரம்பம். நான் உன்னை அழிக்கப் போகிறேன்!”

            மீனவன் பீதியில் நடுங்கினான். நெடுஞ்சாண் கிடையாக மணலில் விழுந்து கதறினான்: “ஜின்னு அவர்களே! உங்களுக்கு விடுதலை தந்தவனையே நீங்கள் கொல்வது நியாயமா?”

            ”நிச்சயமாக, நான் உன்னைக் கொல்வேன்,” என்றது ஜின். “அற்ப மானுடனே! அடிபணியாமை என் இயற்கை, அழிவே என் திறமை. சில பல ஆயிரம் ஆண்டுகள் நான் முடங்கிக் கிடந்தாலும் என் மூர்க்கம் குறையாது மூடனே!”

            ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது என்பதன் தர்க்கம் மீனவனின் மூளைக்குப் பிடிபடவே இல்லை. இத்தனை ஆண்டுகளாக, எல்லாருக்கும் அள்ளிக் கொடுக்கும் கடல் தனக்கு மட்டும் கிள்ளிக் கிள்ளித்தான் கொடுத்தது. போகட்டும், தன் வாழ்வையே வசந்தமாக்கப்போகும் பொக்கிஷம் ஒன்று வலையில் மாட்டியிருக்கிறது என்று பார்த்தால் புட்டிக்குள் இருந்து பிசாசு ஒன்று கிளம்பி வந்து உயிரை வாங்க நிற்கிறது. தன் உயிரின் மதிப்புத்தான் என்ன?

            ஈய மூடியின் மீது பொறித்திருந்த முத்திரையை அவன் கவனித்தான். சட்டென்று அவன் மனதில் ஒரு சிந்தனை மின்னல் வெட்டிற்று. “நீ இந்தப் புட்டிக்குள் இருந்து வந்திருக்கவே முடியாது. நீ இவ்வளவு பெரிசாக இருக்கிறாய். புட்டி இவ்வளவு சிறியதாக இருக்கிறது,” என்றான்.


            ”என்ன, ஜின்களின் தலைவன் சொல்வதையே நீ நம்ப மறுக்கிறாயா?” என்று ஜின் கர்ஜித்தது. “இதோ பார்!” என்று சொல்லிக்கொண்டு கரைந்து கரைந்து மீண்டும் ஒரு சிறு புகைச் சுழலாக மாறி புட்டிக்குள் புகுந்து அடங்கிவிட்டது. மீனவன் சட்டென்று ஈய மூடியை வைத்துப் புட்டியை மூடிவிட்டான்.

            பிறகு அவன் தனது பலத்தை எல்லாம் திரட்டி தன்னால் முடிந்த அளவு தொலைவில் அந்தப் புட்டியைக் கடலுக்குள் வீசியெறிந்தான்.

            பல ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒருநாள், வேறொரு மீனவன், முந்தைய மீனவனின் பேரன், அதே இடத்தில் தனது வலையை வீசினான். அந்தப் புட்டி அவனின் வலையில் சிக்கியது.


            
அவன் அந்தப் புட்டியை மணல் மீது வைத்துவிட்டு அதைத் திறக்க எத்தனிக்கும் போது அவன் மனத்தில் ஒரு சிந்தனை தோன்றிற்று. அஃது, அவனுக்கு அவனின் தந்தையும், அவனின் தந்தைக்கு அவரின் தந்தையும் சொல்லி வந்திருக்கும் ஓர் அறிவுரை.

            அதாவது: “கற்றதை மட்டுமே கையாள்க.”

            தனது உலோகச் சிறையின் அசைவுகளால் தூக்கம் கலைந்து எழுந்த ஜின் பித்தளைப் புட்டிக்குள் இருந்து கத்தியது: “ஆதமின் மகனே! நீ யாராக இருந்தாலும், தயவு செய்து இந்தப் புட்டியைத் திறந்து எனக்கு விடுதலை கொடு. நான் ஜின்களின் தலைவன். அற்புத நிகழ்வுகளின் ரசகியங்கள் தெரிந்தவன். ஆனால், தனது தாத்தனின் அறிவுரையை நினைவு கூர்ந்த இளம் மீனவன் அந்தப் புட்டியை ஒரு குகைக்குள் பத்திரமாக வைத்துவிட்டு அருகில் இருந்த மலையின் முகட்டுக்கு ஏறிப் போய் அங்கே தனிமையில் தியானம் செய்யும் ஞானி ஒருவரைச் சந்தித்தான்.

            நடந்த கதையை ஞானியிடம் கூறினான். அவர் சொன்னார்: “உனக்குச் சொல்லப்பட்ட அறிவுரை மிகவும் சரிதான். இந்தக் காரியத்தை நீயேதான் செய்ய வேண்டும். எனினும், அதை எப்படிச் செய்வது என்பதை நீ முதலில் அறிய வேண்டும்.”

            ”ஆனால், நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அந்த இளைஞன் கேட்டான்.

            ”நிச்சயமாக. நீ செய்தே ஆக வேண்டும் என்று உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?” என்று அவர் கேட்டார்.

            ”எனக்குத் தோன்றுகிறது என்றால், அந்த ஜின்னை வெளியே விட வேண்டும் என்பதுதான். அது எனக்கு அற்புதங்களின் அறிவைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அல்லது, கடலின் அலைகளைப் போல் பொன்னொளி வீசும் தங்கக் கட்டிகளைத் தரலாம், அல்லது பச்சை மாமலை போல் கிடக்கும் மரகதக் குவியல். மேலும், ஜின்களால் என்னவெல்லாம் தர முடியுமோ அதையெல்லாம்!”

            ”ஒருவேளை நீ ஜின்னை வெளியே விட்டதும் இது எதையுமே அது உனக்குத் தராமல் போகலாம் என்று உனக்குத் தோன்றவே இல்லையா?” என்று ஞானி கேட்டார். “அல்லது நீ கேட்டதையெல்லாம் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு அதை நீ பாதுகாக்க முடியாதபோது உன்னிடம் இருந்து பறித்துக் கொள்ளலாம். அல்லது நீ அதை வெளியே விட்டதும் நீ எதிர்பாராத ஏதாவதும் நிகழலாம், அதை நீ சமாளிக்க முடியவில்லை என்றால் உன் கதி என்னாகும்? ஏனென்றால், தான் பயன்படுத்தக் கற்றதை மட்டுமே மனிதன் பயன்படுத்த முடியும். கற்றதை மட்டுமே கையாள்க!”

            ”சரி, நான் என்ன செய்ய வேண்டும்?”

            ”அந்த ஜின் உனக்கு என்ன தர முடியுமோ அதில் கொஞ்சம் மாதிரியை அதனிடம் கேள். அந்தக் கொசுரு என்ன என்று பார். அதைப் பாதுகாப்பது எப்படி என்று அறிந்துகொள். அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று சோதித்துப் பார். அறிவைத் தேடு, உடைமைகளை அல்ல. ஏனெனில், அறிவு இல்லை எனில் உடைமைகள் வீண்தான். அதுதான் நம் வாழ்வின் சிரமங்களுக்குக் காரணம்.”

            இப்போது அந்த இளைஞன் தெளிவாகவும் சிந்திப்பவனாகவும் இருந்ததால் அவன் ஜின்னை விட்டு வந்த குகைக்குத் திரும்பும் போது ஞானி சொன்னபடி தன் மனதிற்குள் திட்டம் தீட்டிக் கொண்டான்.

            அந்தப் பித்தளைப் புட்டியைச் சுண்டினான். ஜின் பதில் பேசியது. அதன் குரல் உலோகத்தின் குரலைப் போல் கேட்டது, ஆனால் பயங்கரமாக இருந்தது: “சுலைமான் அலைஹிஸ் சலாம் (அவர் மீது பேரமைதி உண்டாவதாக!) அவர்களின் பெயரால் கேட்கிறேன், ஆதமின் மகனே! என்னை வெளியே விடு.”


            
”நீ உன்னைப் பற்றிச் சொல்வதை எல்லாம் உண்மை என்று என்னால் நம்ப முடியவில்லை. உனக்கு இருப்பதாக நீ சொல்லும் ஆற்றல்கள் எல்லாம் உண்மையிலேயே உனக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்தான்,” என்றான் இளம் மீனவன்.

            ”நீ என்னை நம்பவில்லையா? என்னால் பொய் சொல்ல முடியாது என்பது உனக்குத் தெரியாதா?” என்று ஜின் திரும்பிக் கேட்டது.

            ”இல்லை, எனக்குத் தெரியாது” என்றான் அவன்.

            ”அப்படியானால், உன்னை நான் எப்படி நம்ப வைப்பது?”

            ”எனக்கு ஒரு ஒத்திகை காட்டு. புட்டிக்குள் இருந்துகொண்டே உன்னால் எதாவது செய்ய முடியுமா?”

            ”ஆமாம், என்னால் முடியும்,” என்றது ஜின். “ஆனால், அந்த ஆற்றல்களைக் கொண்டு என்னால் இந்தச் சிறையிலிருந்து வெளியே வர முடியாது.”

            ”சரி சரி, என் மனதிற்குள் ஒரு பிரச்சனை குடைந்து கொண்டிருக்கிறது. அதற்கான சரியான தீர்வு என்ன என்பதை அறியும் ஆற்றலை எனக்குக் கொடு.”

            உடனடியாக, ஜின் தனது வினோதமான கலையைக் காண்பித்தது. தனது தாத்தாவிடம் இருந்து தந்தையின் வழியாக தான் பெற்றுள்ள அறிவுரையான மூதுரையின் மூலத்தை இளம் மீனவன் அறிந்தான். புட்டிக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஜின் அவனின் தாத்தனுக்குக் கொலை மிரட்டல் விடுத்த காட்சியை அவன் தன் மனத்திரையில் கண்டான். மேலும், ஜின்களிடம் இருந்து ஆற்றல்களை எப்படிப் பெறுவது என்றும் அவற்றைப் பிறருக்கு எப்படிச் சொல்லித் தருவது என்றும் அவனுக்கு வெளிச்சமாயிற்று. ஆனால் அதற்கு மேல் அவன் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்பதையும் அவன் உணர்ந்தான். எனவே, இளம் மீனவன் அந்த புட்டியை எடுத்து, அவனது தாத்தன் செய்ததைப் போன்றே, கடலுக்குள் வீசி எறிந்துவிட்டான்.

            அவன் தனது வாழ்வின் மிச்ச காலத்தை ஒரு மீனவனாக அல்லாமல் மக்களுக்கு போதனை செய்வதில் கழித்தான். ’தான் பயன்படுத்தக் கற்காத ஒன்றைப் பயன்படுத்த முயலும் மனிதனுக்கு உண்டாகும் தீமைகள்’ குறித்து அவன் விளக்கி எச்சரித்தான்.

            ஆனால், ஜின்கள் அடைக்கப்பட்டிருக்கும் புட்டிகள் எல்லாருடைய கைகளிலும் கிடைப்பதில்லை. அதைக் கண்டவர்கள் அரிதினும் அரிது. அப்படியே எவரேனும் கண்டெடுத்தாலும் அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ஞானியர் இருப்பதில்லை. இளம் மீனவனின் வழித்தோன்றல்கள் அவனின் “போதனை”களைக் கிளிப்பிள்ளைகள் போல் சொல்லிக்கொண்டு அவனின் விவரிப்புக்களை நாடகப் பாங்கில் பாவித்துக் கொண்டிருந்தனர். நாட்கள் போகப் போக அவர்கள் ஒரு தனி மதமாக உருவாகிவிட்டனர். மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட, பொன்னும் வெள்ளியும் நவமணிகளும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஆலயங்களில் அவர்கள் பித்தளைப் புட்டிகளில் பானங்களைப் பருகினர். இந்த மீனவனின் நடத்தைகள் மீது அவர்கள் பெரிய மரியாதை வைத்திருந்ததால் அவன் செய்த காரியங்களை எல்லாம் தாமும் போலச் செய்து மகிழ்ந்தனர்.

            பித்தளைப் புட்டி என்பது, பல நூற்றாண்டுகளுக்குப் பின் இவர்களுக்கு, புனிதச் சின்னமாகவும் பெரிய மர்மமாகவும் இருக்கின்றது. இந்த மீனவனை நேசிப்பதால் மட்டுமே அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த முனைகின்றனர். அவன் இருந்த கடலோர கிராமத்தில் அவர்கள் எளிய குடில் ஒன்றைக் கட்டி புத்தாடைகளும் பூக்களும் அணிகலன்கலும் சூடிக்கொண்டு அதனுள் புதுமையான சடங்குகள் பலவற்றைச் செய்கின்றனர்.

            இளம் மீனவனுக்கு போதனை வழங்கிய ஞானியின் வழி வந்த சீடர்கள் இப்போதும் அவர்களுக்குத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். மீனவனின் பரம்பரையில் வந்த பேரப் பிள்ளைகளையும் யாருக்கும் தெரியாது. பித்தளைப் புட்டி கடலுக்கு அடியில் எங்கோ கிடக்கிறது. அதனுள் ஜின் தூங்கிக் கொண்டிருக்கிறது.

db

            இந்தக் கதையின் ஒருவகைப் பிரதி ஆயிரத்தோர் இரவு அறபிக் கதைகள் வாசித்தவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அதன் வடிவம் தர்வேஷ்களால் சொல்லப்படுவது. மத்தியக் காலத்தின் வசியக்காரனான  விர்ஜில், நேப்பிள்ஸ் நகரில் பெற்ற ஆற்றலும், பொ.ஆ 999-இல் போப் சில்வஸ்டர் என்றான கெர்பர்ட் பெற்ற ஆற்றலும் இதே போல் ’ஜின்னிடம் இருந்து பெற்ற’ அறிவினால் வந்தது என்று சொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இக்கதைக்கு நான் எழுதிய அடிக்குறிப்பு:

            இந்தக் கதைக்கு இத்ரீஸ் ஷாஹ் எழுதியிருக்கும் பிற்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போப் சில்வஸ்டர் – II என்னும் வரலாற்று ஆளுமையைப் பற்றிச் சில செய்திகள்:

            இவரின் இயற்பெயர் கெர்பர்ட். பொ.ஆ 946-இல் பிரான்சு நாட்டில் பெல்லியாக் என்னும் ஊரில் பிறந்தார். பொ.ஆ 963-இல் ஆரில்லாக் நகரின் புனித ஜெரால்டு மடாலயத்தில் சமயக் கல்விப் பயில்வதற்காக இணைந்தார். எனவே அவர் பின்னாளில் ஆரில்லாக்கின் கெர்பர்ட் என்று அழைக்கப்பட்டார். பொ.ஆ 967-இல் பார்சிலோனாவின் ஆளுநரான இரண்டாம் போரல் மடலாயத்திற்கு வருகை தந்தபோது சமயப் பள்ளித் தலைவரின் பரிந்துரையில் கெர்பர்ட் அவருடன் காடலோனியா மடாலயத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார், கணிதமும் அரபி மொழியும் பயில்வதற்காக. ஏனெனில், இஸ்லாமிய ஆட்சி நடைபெற்று வந்த ஸ்பெயின் நாட்டின் கல்வித் தலைநகர் என்று கருதப்பட்ட குர்த்துபாவில் இருந்து பற்பல சுவடிகள் அந்த மடாலயத்தில் இருந்தன. அங்கே கெர்பர்ட் கணிதத்தில் இந்து-அராபிக் எண்களைப் பயின்றார். அபாகஸ் முறையையும் கற்றுக் கொண்டார்.

            புனித பெனடிக்டின் போதனைகளில் தேர்ச்சி பெற்ற துறவியாக இருந்த கெர்பர்ட், சில காலம் ரெய்ன்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், ரவன்னா மாகாணத்தின் பேராயராகவும் பணியாற்றினார். 2 ஏப்ரில் 999 பொ.ஆ-இல் ”போப்” பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியை அடைந்த முதல் பிரான்சு நாட்டவர் அவரே. அப்போது அவரின் பெயர் இரண்டாம் போப் சில்வஸ்டர் என்றானது. பொ.ஆ 1003-இல் தனது மரணத்தின் வரை போப்பாக இருந்தார்.

            மூர்களின் ஸ்பெயின் நாட்டில் வசித்திருந்தபோது திடீரென்று அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கான காரணங்கள் யாருக்கும் தெரியவில்லை. இந்தியாவில் இருந்து திரும்பிய அவரின் போக்கில் பெரிய மாற்றங்கள் இருந்தன. அவர் வெங்கலத்தால் ஆன தலை ஒன்றைச் செய்து வைத்திருந்தார். அதனிடம் கேள்விகள் கேட்டால் விடை கூறும். மக்கள் அது ஏதோ மாந்திரீக ஆற்றல் என்று நம்பினார்கள். ஆனால் அது ஒருவகையான எந்திரன் (ரோபோ) என்று அவர் சொன்னார். 996-இல் அவர்தான் முதன் முதலில் எந்திர கடிகாரத்தை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் இருந்த “ஒன்பது மறைவான நபர்களின்” நூலில் இருந்தே அவர் அத்தகைய ஆற்றல்களை அடைந்தார் என்று சிலர் சொல்கிறார்கள். சிலரோ, அவர் ஸ்பெயினின் குர்த்துபா மற்றும் செவில் ஆகிய நகரங்களில் தங்கி அரபி பயின்றபோது ஜின்களை வசியப்படுத்தும் கலையைக் கற்றுக் கொண்டார் என்றும், அரபி மாந்திரீகர் ஒருவரின் சுவடியைத் திருடிப் பயின்றார் என்றும் சொல்கிறார்கள். அவர் மறைமுகமாக ஷைத்தானிடம் தீட்சை பெற்றிருந்தார் என்று கூறும் அளவுக்கு அவரைப் பற்றிய ஐதீகக் கதைகள் பெருகியுள்ளன.


Friday, June 18, 2021

ரொட்டியும் நகைகளும்

 


            முற்காலத்தில் அரசன் ஒருவன் ஒருமுறை தன் செல்வத்தின் ஒரு பகுதியை பயன் கருதாத தர்மமாகக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்தான். அதே சமயம், தான் வழங்கும் தர்மம் என்னவாகிறது என்று பார்க்கவும் விரும்பினான். எனவே, நம்பகமான ரொட்டிக்காரன் ஒருவனை அழைத்து இரண்டு பெரிய மென் ரொட்டிகள் சுடும்படி அவனிடம் சொன்னான். ஒரு ரொட்டிக்குள் இன்னின்ன நகைகள் பொதிந்து வைக்கப்பட வேண்டும் என்றும், மற்றொன்று வெறுமனே மாவும் நீரும் கொண்டு செய்யப்பட வேண்டும் என்றும் திட்டம்.

            தான் கண்டுபிடிக்க முடிந்த மிகவும் பயபக்தி உள்ள ஒருவனிடமும், பயபக்தி அறவே இல்லாத ஒருவனிடமும் அவற்றை அந்த ரொட்டிக்காரன் கொடுத்துவிட வேண்டும்.

            அடுத்த நாள் ரொட்டிக்கடைக்கு இரண்டு பேர் வந்து சேர்ந்தனர். ஒருவன் தர்வேஷ் உடை அணிந்திருந்தான். பார்க்க மிகவும் பயபக்தி உள்ளவனாகத் தோன்றினான். ஆனால், உண்மையில் அவர் வெறும் ஏமாற்றுக்காரனே. மற்றொருவன் எதுவும் பேசாமல் மௌனமாக நின்றான். அவன் மூஞ்சியைப் பார்த்தாலே ரொட்டிக்காரனுக்குப் பத்திக்கொண்டு வந்தது. ஏன் என்று காரணம் தெரியவில்லை. அவன் முகம் மிகவும் கெட்டவன் யாரையோ ஞாபகப் படுத்துவதாக ரொட்டிக்காரன் நினைத்தான். எனவே இவனையும் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

            அதனால், ரொட்டிக்காரன் ஒரு முடிவுக்கு வந்தான். நகைகள் பொதிந்த ரொட்டியை அவன் அந்த போலி தர்வேஷுக்குக் கொடுத்தான். வெற்று ரொட்டியை மற்றவனிடம் தந்தான்.

            போலி தர்வேஷ் தன் கையில் ரொட்டியை வாங்கியவுடன் அது மிகவும் கனமாக இருப்பதை உணர்ந்தான். அதை அமுக்கிப் பார்த்து உள்ளே இருக்கும் நகைகளை உணர்ந்தான். ஆனால், அதெல்லாம் சரியாகப் பிசையப்படாத மாவுக் கட்டிகள் என்று நினைத்தான். மீண்டும் அவன் ரொட்டியைத் தன் கையில் வைத்து எடையை நிதானித்தான். பொதுவாக ரொட்டி அவ்வளவு கனம் இருக்காது. ஆனால் இது ரொம்பவும் கனமாக இருப்பதாக அவனுக்குப் பட்டது. ரொட்டியைத் திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று எண்ணியபடி அவன் கடைக்காரனைப் பார்த்தான். கடைக்காரன் சற்று முசுடனாகத் தெரிந்தான். அவனிடம் ஏச்சு வாங்க வேண்டாம் என்று எண்ணிய போலி தர்வேஷ் தனக்கு அருகில் நிற்கும் இரண்டாமவனிடம் சொன்னான்: “நண்பரே! நாம் ஏன் நமது ரொட்டிகளை மாற்றிக் கொள்ளக்கூடாது? உங்களைப் பார்த்தால் மிகவும் பசித்தவராகத் தெரிகிறது. எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ரொட்டியோ பெரிதாகவும் கனமாகவும் இருக்கிறது.”

            இறைவன் தன் கையில் எதைக் கொடுக்கிறானோ அதை மனமுவந்து ஏற்றுக் கொள்வது என்னும் முடிவில் இருந்த அந்த இரண்டாம் ஆள் உடனே ஒப்புக்கொண்டான். ரொட்டிகள் கை மாறின.

            அடுமனையின் உள்ளிருந்து கதவு விரிசலின் வழியாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த அரசன் மிகவும் ஆச்சரியப்பட்டான். ஆனால் இப்போது இந்த இரண்டு பேரின் நன்மை தீமை கணக்குகள் என்ன என்பதை அவனால் சொல்ல முடியவில்லை.

            போலி தர்வேஷ் சாதாரண ரொட்டியை அடைந்தான். ஆனால் அவனை உண்மையான தர்வேஷ் என்று எண்ணிய அரசன் வேறு விதமாகச் சிந்தித்தான். அதாவது, துறிவியான தர்வேஷை செல்வத்தை விட்டும் பாதுகாப்பதற்காக விதியே குறுக்கிட்டு அவருக்குச் சாதகமாக வேலை செய்திருக்கிறது என்று அவன் நினைத்தான். உண்மையில் நல்லவனான இரண்டாமவன் வீட்டிற்குப் போய் ரொட்டிக்குள் நகைகள் இருப்பதைக் கண்டான். அதைக் கொண்டு அவன் தன் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொண்டான். இந்த நிகழ்வை அரசனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

            ”செய்யச் சொன்னதை நான் செய்துவிட்டேன்” என்றான் ரொட்டிக்காரன்.

            ”விதியை நீங்கள் ஒருபோதும் மாற்ற முடியாது,” என்றான் அரசன்.

            ”நான் எவ்வளவு பெரிய புத்திசாலி!” என்று கூறிக்கொண்டான் போலி தர்வேஷ்.

db


    

  1089-இல் மறைந்த சூஃபி குரு காஜா அப்துல்லாஹ் அன்ஸார் அவர்களின் தர்காவில் (காஸர்காஹ், மேற்கு ஆஃப்கானிஸ்தான்) இக்கதை வாசிக்கப்பட்டது. ஒரு மனிதனின் எதிர்காலத்திற்குப் பெரு மதிப்புக் கொண்ட ஒரு பொருளை முன் கூட்டியே அவனிடம் தந்தால் அதன் மதிப்பை அவன் விளங்கிக் கொள்வான் என்று கூறமுடியாது என்பதே இக்கதையின் முதல் நிலை அர்த்தம்.

Saturday, June 12, 2021

நீரின் மேல் நடந்த மனிதன்

 


            கடும் பயிற்சிகளுக்குப் பேர் போன ஆன்மிகப் பள்ளி ஒன்றைச் சேர்ந்த, மரபான மனம் கொண்ட தர்வேஷ் ஒருவர் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தார். அற மற்றும் அறிவார்ந்த சிக்கல்களைப் பற்றிய சிந்தனையில் அவரின் மனம் மூழ்கியிருந்தது. ஏனெனில் அவர் சார்ந்திருந்த சூஃபிச் சமூகம் அப்படியான ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்டே இயங்கியது. உணர்ச்சிகரமான மார்க்கச் செயற்பாடுகளையே அவர் சத்தியத் தேடல் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

            திடீரென்று பேரோசை ஒன்று அவரின் கவனத்தைக் கலைத்தது. அது ஒரு மனிதக் குரல்தான். யாரோ தர்வேஷ்களின் மந்திரத்தை உச்சக் குரலில் ஓதுகின்றார். “என்ன இது அனர்த்தமான உச்சரிப்பு?” என்று அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார். ஏனெனில் அந்த மனிதன் மந்திரத்தைப் பிழையாக உச்சரித்தான். “யா ஹூ” என்பதே சூஃபிகள் ஓதும் முறை. ஆனால் அதை அவன் “ஊயா..ஹூயா…” என்று ஓதிக் கொண்டிருந்தான்.

            பிறகு அவர் நினைத்தார், சூஃபி பள்ளி ஒன்றின் பொறுப்புள்ள மாணவன் என்னும் அடிப்படையில் அந்த பாமர மனிதனின் உச்சரிப்பைத் திருத்த வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது. ஒருவேளை மந்திரத்தைச் சரியாகக் கற்றுக்கொள்ள அவனுக்கு வழிகாட்டி யாரும் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், ஓத வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் இருக்கிறது, அது அவனின் குரலிலேயே தெரிகிறது, அவன் நேர்மையாக முயற்சி செய்கிறான். எனவே அவனுக்கு உதவி செய்யத்தான் வேண்டும்.

            அந்த மனிதனின் குரல் ஆற்றுக்கு நடுவில் இருந்த ஒரு தீவிலிருந்து வந்து கொண்டிருந்தது. எனவே தர்வேஷ் வாடகைக்குப் படகு பிடித்துக்கொண்டு அங்கே சென்றார்.

            அங்கே எளிமையான கோரைக் குடிசை ஒன்றில் தர்வேஷ்களின் ஆடையை அணிந்த பாமரன் ஒருவன் அமர்ந்திருந்தான். “ஊயா… ஹூயா…” என்று உரக்க உச்சரித்தபடி அவன் அதன் தாள கதிக்குத் தக அசைந்து கொண்டிருந்தான். தர்வேஷ் அவனை இடைமறித்துச் சொன்னார்: “நண்பா! நீ சூஃபிகளின் வாசகத்தைப் பிழையாக உச்சரிக்கிறாய். இப்படி ஓதினால் ஒரு நன்மையும் கிடைக்காது. சரியாக ஓதும் முறையை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். அந்தக் கடமை எனக்கு இருப்பதால்தான் வாடகைக்குப் படகு பிடித்து உன்னிடம் வந்திருக்கிறேன். கல்வி கற்பிப்பவருக்கும் நன்மை இருக்கிறது, கற்பவருக்கும் நன்மை உண்டு.”

            அந்த மனிதன் நெக்குருகிப் போனான். அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. “உங்களுக்குப் புண்ணியமாப் போகும் ஐயா! எனக்குச் சொல்லிக் கொடுங்கள். நான் அப்படியே ஓதுகிறேன்,” என்றான்.

            ”நீ இப்படி ஓது: ‘யா ஹூ… யா ஹூ… யா ஹூ’ அவ்வளவுதான். மிகவும் எளிமையான மந்திரம்தான். இதில் உனக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை… எங்கே ஓது பார்க்கலாம்: ‘யா ஹூ… யா ஹூ… யா ஹூ…’”

            அவன் சேர்ந்து ஓதினான்: “யா ஹூ… யா ஹூ… யா ஹூ…”

            ”அவ்வளவுதான். இப்படியே ஓது. உனக்கு இறைவன் நற்கூலி வழங்குவான்.” என்று சொல்லிவிட்டு தர்வேஷ் கிளம்பினார். பாமர மனிதன் அவருக்கு மிகவும் பணிவுடன் ஒரு சீடனைப் போல் நன்றி கூறினான்.

            ஒரு நபரின் தவறைத் திருத்திவிட்டோம், ஒரு நன்மையான காரியத்தைச் செய்துவிட்டோம் என்னும் மன நிறைவுடன் தர்வேஷ் படகில் ஏறிக் கிளம்பினார். மந்திர வாசகத்தை மிகச் சரியாக உச்சரிப்பவர் நீரின் மீது கூட நடக்க முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒருவரை இன்னமும் அவர் பார்த்ததில்லை. ஆனால், ஏதொவொரு காரணத்தால் என்றாவது ஒரு நாள் தானே அந்த ஆற்றலை அடைந்துவிடுவார் என்னும் பலமான நம்பிக்கை அவருக்கு இருந்தது.

            இப்போது அந்தக் கோரைக் குடிசையில் இருந்து முன்பு போல் பேரோசை கேட்கவில்லை. ஆனால், தான் கற்றுக்கொடுத்த பாடத்தை அந்தப் பாமரன் ஒழுங்காக ஏற்றுக்கொண்டான் என்னும் திருப்தி அவருக்கு இருந்தது.

            ஆனால் திடீரென்று அந்தப் பாமர தர்வேஷின் குரல் உரத்துக் கேட்டது. அவன் மீண்டும் பழைய மாதிரி “ஊயா… ஹூயா…” என்றே ஓதினான்.

            மனித குலம் எப்படி கோணிப் போகிறது… எப்படி அது தன் தவறுகளிலேயே ஊன்றி நிற்கிறது என்றெல்லாம் தர்வேஷுக்குக் கவலையான சிந்தனைகள் எழ ஆரம்பித்துவிட்டன. அவர் அப்படின் நினைத்துக் கொண்டிருக்கும் போது வினோதமான ஒரு காட்சியைக் கண்டார். தீவிலிருந்து அந்தப் பாமரன் அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான், நீரின் மேல்!

            வியந்து போய் அவர் படகை நிறுத்திவிட்டார். பாமர தர்வேஷ் படகின் அருகில் வந்து நீரின் மீது நின்றபடியே அவரிடம் கேட்டான்: “போதகரே! தொந்திரவுக்கு மன்னிக்கவும். வேறு வழியில்லை. எனக்கு மீண்டும் மந்திரம் தப்பாகிவிட்டது. இன்னும் ஒரு முறை எனக்குச் சரியாக ஓதச் சொல்லித் தாருங்கள் ஐயா! அதை ஞாபகம் வைப்பது எனக்குச் சிரமமாக இருக்கிறது.”

db

            ஆங்கிலத்தில் [பிற மொழிகளில்] இந்தக் கதையின் உயிரோட்டமான பகுதியின் ஒரு கோணத்தை மட்டுமே பெயர்த்தளிக்க முடிகிறது. ஏனெனில், இக்கதையின் அறபிப் பிரதிகள் பல பொருள் கொண்ட ஒரு சொல்லை அல்லது சொற்றொடரைப் பயன்படுத்துகின்றன. [homonyms என்கிறார் இத்ரீஸ் ஷாஹ். அது ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பது. தமிழிலும் அத்தகைய சொற்கள் உண்டு. உதாரணமாக, ’அரவம்’ என்றால் ஒலி என்றும் பாம்பு என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. தமிழில் அது போல் ‘எழுத்தோரன்ன பொருள் தெரி புணர்ச்சி’ என்று சொற்றொடர் வகை ஒன்று உண்டு. ’காசா லேசா?’ (காசு என்றால் சாதாரணமா? என்று அர்த்தம்) ‘காசாலே சா’ (பணத்தாலே செத்துப் போ என்று அர்த்தம்) – மொ.பெ-ர்] அத்தகைய சொற்றொடர்களின் வெளிப்படையான அர்த்தங்கள் அபத்தமாகவோ அல்லது ஒரு அறத்தை வலியுறுத்துவதாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றின் மாற்று அர்த்தத்தில் அவை ஆழ்நிலைப் பிரக்ஞையில் விழிப்படைவதற்கான நோக்கில் உருவாக்கப் பட்டிருக்கும்.

            கிழக்கில் இக்கதை பொது மக்களிடம் பரவியிருக்கிறது. ஆனால் மிகத் தொன்மையான தர்வேஷ் ஆவணங்களில் இக்கதை காணப்படுகிறது.

            இந்தப் பிரதி அண்மைக் கிழக்கில் உள்ள “அசாசீன்” (Essential, Original, அசல்) நெறியினரின் ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


இந்தக் கதைக்கு எளியேன் எழுதிய அடிக்குறிப்பு:



கதைகள் இனம் மொழி சமயம் நாடு என்னும் எல்லைகளைக் கடந்து செல்பவை. தாம் சென்றடையும் இலக்கின் வார்ப்பில் தம்மை ஒப்படைத்துக் கொள்பவை. அவ்வாறு தனது அடையாளங்களை மாற்றிக் கொண்டு பல்வேறு மரபுகளில் வாழ்ந்து வரும் கதைகள் பல உள்ளன. இக்கதையும் அவற்றில் ஒன்று. இதே கதை கிறித்துவச் சமயத்திற்கு ஏற்ப உருமாற்றப் பட்டுள்ளது. ருஷ்ய இலக்கிய மேதையான லியோ தொல்ஸ்தாய் (Leo Tolstoy) இக்கதையை ”திரீ ஸ்டார்ட்ஸா” (”Три Старца” / “The Three Hermits” / “மூன்று துறவிகள்”) என்னும் பெயரில் 1885-இல் எழுதினார். அக்கதை 1886-இல் ”நீவா” (தினைத்தோட்டம்) என்னும் வார இதழில் வெளியானது. 1907-இல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியான “Twenty-Three Tales” (’இருபத்து மூன்று கதைகள்’) என்னும் நூலில் இடம்பெற்றிருந்தது. லியோ தொல்ஸ்தாய் எழுதிய கதையின் படி படகில் சென்றவர் கிறித்துவ பிஷப் ஒருவர். அவர் வடமேற்கு ருஷ்யாவில் உள்ள ஆர்க்கேஞ்சலஸ்க் என்னும் இடத்தில் இருந்து வட ருஷ்யாவின் வெண் கடலில் உள்ள தீவு ஒன்றில் இருக்கும் சொலோவெட்க்ஸ்கி மடத்துக்குப் பயணமாகிறார். வழியில் உள்ள தீவு ஒன்றில் முதுமையான பாமரத் துறவிகள் மூவரைக் காண்கிறார். அவர்கள் மிகவும் எளிய பிரார்த்தனை ஒன்றைச் செய்து வருகின்றனர்: “நீவிர் மூவர், யாமும் மூவர், எம்மீது கருணை காட்டுக.” இந்த மந்திரத்தில் லியோ தொல்ஸ்தாய் தனது ரோமன் கத்தோலிக்க, பவுலியக் கிறித்துவக் கொள்கையான திரியேகத்துவம் (Trinity) என்பதைக் கையாண்டுள்ளார். நீவிர் மூவர் என்பது பிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவி (யஹோவா, ஏசு, ஜிப்ரயீல்) ஆகிய மூவரைக் குறிக்கும். தர்வேஷ் கதையில் ஒரு நபராக இருந்த பாமரனை தொல்ஸ்தோய் திரியேகத்துவக் கொள்கையை வைத்துப் புனைந்த மந்திரத்திற்காகவே மூன்று துறவியராக மாற்றியிருக்கிறார்.



            அந்தப் பாமரத் துறவிகளுக்கு பாதிரியார் நீண்ட வாசகங்கள் கொண்ட பிரார்த்தனையைக் கற்றுக் கொடுக்கிறார். அது பைபிளில் உள்ள பிரார்த்தனை (மத்தேயு 6:9). ஏசுநாதர் மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக பைபிள் குறிப்பிடும் பிரார்த்தனைகளில் அதுவும் ஒன்று. எனவேதான் பாதிரி அதனை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார். ஆனால் அந்தப் பாரமர்களால் அவ்வளவு நீளமான பிரார்த்தனையை நினைவில் நிறுத்த முடியவில்லை. அவர்கள் செய்யும் பிரார்த்தனை ஒற்றை வரியில் சுருக்கமாக இருக்கிறது. அதுவே அவர்களுக்கு நீரின் மீது நடக்கும் ஆற்றலைத் தருகிறது. அவர்களின் பிரார்த்தனை, மரபுவழித் திருச்சபை (Orthodox Church) வலியுறுத்துகின்ற ”ஏசு பிரார்த்தனை” (Jesus Prayer) என்னும் ஒற்றை வரிப் பிரார்த்தனையை ஒத்தகாக இருக்கிறது. “Lord Jesus Christ, Son of God, have mercy on me” என்பதே அந்தப் பிரார்த்தனை. (பின்பு அவ்வரியின் இறுதியில் sinner (பாவி) என்னும் சொல்லும் கூடுதலாக இணைக்கப்பட்டது.) இப்பிரார்த்தனை, எரமெட்டிக் மரபு என்னும் தனிமைத் துறவு மரபில் நீண்ட காலம் ஆழ்நிலை தியானத்திற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது (eremitic என்னும் சொல்லே hermetic என்றாகி, தனித்திருக்கு துறவியைக் குறிக்கும் hermit என்னும் சொல்லைத் தந்துள்ளது.) கிழக்கத்திய மரபுவழித் திருச்சபையில் இந்த ஆன்மிக நெறி “ஹேசிகாஸம்” (hesychasm) என்று அழைக்கப்படுகிறது. ருஷ்ய மரபுவழித் திருச்சபை மிகவும் பழமையானது என்பதும் இங்கே கவனத்திற்குரியது. பாமரத் துறவியர் “இடைநிறுத்தம் இன்றித் தொடர்ந்து பிரார்த்தனை செய்தார்கள்” (pray without ceasing) என்று தொல்ஸ்தாய் எழுதியிருப்பது மரபுவழித் திருச்சபையின் ஆன்மிக நெறியில் உள்ள ஆழ்நிலை தியானத்தை சமிக்ஞை காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

            பிரார்த்தனையின் சாராம்சமே முக்கியமானது என்னும் கருத்தை வலியுறுத்தவே இந்தக் கதையை லியோ தொல்ஸ்தாய் எழுதியிருக்கிறார். தனது கதையின் தொடக்கத்தில் அவர் பைபிள் வாசகம் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்: “அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது அஞ்ஞானிகளைப் போல் வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.”


            
லியோ தொல்ஸ்தாய் எழுதிய ”மூன்று துறவியர்” கதையை நான் முதன் முதலில் ஓஷோவின் நூல் ஒன்றில்தான் படித்தேன். தொல்ஸ்தாய் எழுதிய பல கதைகளை ஓஷோ தனது உரைகளில் பல இடங்களில் கையாண்டிருக்கிறார். இந்தக் கதையையும் அவர் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கக் கூடும். ”Be Still and Know” என்னும் அவருடைய நூல் 1979-இல் வெளிவந்தது. சீடர்களின் வினாக்களுக்கு அளித்த விடைகளின் தொகுப்பு அந்நூல். அதில் ஓரிடத்தில் இந்தக் கதையை அவர் சொல்லியிருக்கிறார். அதன் முடிவில் ஓஷோ சொல்கிறார்: “பிரார்த்தனை என்பது ஓர் எளிய நிலை. அது சொற்களில் இல்லை, மௌனத்தில் இருக்கிறது.”

 

Friday, June 11, 2021

நெசவாளி ஃபாத்திமாவும் கூடாரமும்

 (சூஃபி கதை நேரம்...)

            தூரக் கிழக்கில் ஒரு பட்டினத்தில் ஃபாத்திமா என்னும் இளம்பெண் ஒருத்தி இருந்தாள். அவள், வளமான நெசவாளி ஒருவரின் மகள். ஒரு நாள் அவளிடம் அவளின் அப்பா சொன்னார்: “வா, மகளே! நாம் ஒரு பெரும் பயணம் புறப்படுகிறோம். மத்தியக் கடலின் தீவுகளில் எனக்கு வணிகம் இருக்கிறது. ஒருவேளை, நீ அங்கே உனக்கு ஏற்ற அழகான ஓர் இளைஞனைக் காணலாம். அவனை நீ திருமணம் செய்துகொள்ளலாம்.”

            அவர்கள் புறப்பட்டு தீவு தீவாகப் பயணித்தனர். அப்பா வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அவள் தனக்கு வாய்க்கப் போகும் கணவனைப் பற்றிக் கற்பனைகளை நெய்து கொண்டிருந்தாள். ஆனால், ஒருநாள் அவர்கள் க்ரீட் தீவுகளுக்குப் போய்க் கொண்டிருந்த போது சூறாவளி வீசியது. கப்பல் சிதைந்தது. அரை மயக்கமான நிலையில் ஃபாத்திமா அலெக்ஸாண்ட்ரியாவின் கடற்கரையில் ஒதுங்கினாள். அவளின் அப்பா இறந்துவிட்டார். இப்போது அவள் நிர்க்கதியாக நின்றாள்.

            கப்பல் சிதலமடைந்து கடலில் விழுந்து தத்தளித்த அனுபவம் அவளை மிகவும் பாதித்திருந்தது. அவளின் கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகள் அதனால் மழுங்கிவிட்டது.

            அவள் மணல்களில் அலைந்து கொண்டிருக்கையில் ஆடைகள் தயாரிக்கும் குடும்பம் ஒன்று அவளைக் கண்டது. அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் அவளைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவளுக்குத் தங்களின் கைத்தொழிலைக் கற்றுக் கொடுத்தனர். 

        இவ்வாறு அவளுக்கு ஓர் இரண்டாம் வாழ்க்கை கிடைத்தது. ஓரிரு ஆண்டுகளிலேயே அவள் பழசையெல்லாம் மறந்து மீண்டும் கலகலப்பாகிவிட்டாள். ஆனால், ஒருநாள் அவள் ஏதோ ஒரு வேலையாகக் கடற்கரையில் இருந்தபோது அடிமை வணிகர்களின் குழு ஒன்று அங்கே வந்து அவளைக் கைப்பற்றி மற்ற அடிமைகளுடன் அவளையும் அடைத்து எடுத்துச் சென்றது.

            அவள் பிழிந்து பிழிந்து அழுதாள். ஆனால் அடிமை வணிகர்கள் அவள் மீது இரக்கம் காட்டவில்லை. அவர்கள் அவளை இஸ்தான்பூலுக்குக் கொண்டு போய் அங்கே ஓர் அடிமையாக விற்று விட்டனர்.

            இரண்டாம் தடவையாக அவளின் உலகம் சிதைந்துவிட்டது. இப்போது, அந்தச் சந்தையில், அடிமைகளை வாங்குவோர் ஒரு சிலரே இருந்தனர். அவர்களில் ஒருவர் கப்பல்களுக்குப் பாய்மரம் தயாரிக்கும் தனது மரப்பட்டறையில் வேலை செய்வதற்கு அடிமை கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தார். ஃபாத்திமாவின் நிர்க்கதியான நிலையைப் பார்த்த அவர் அவளை வாங்குவதென்று முடிவு செய்தார். வேறு யாராவது அவளை வாங்குவதை விடத் தான் அவளை வாங்கினால் அவளுக்கு ஓரளவு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்பதே அவரின் நினைப்பு.

            தன் மனைவிக்கான வேலைக்காரியாக அவளைக் கொடுக்கலாம் என்று எண்ணி அவர் ஃபாத்திமாவைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் வீடு வந்து சேர்ந்தபோது பேரிடியான செய்தி ஒன்று அவருக்குக் காத்திருந்தது. அவரின் சரக்குகள் சென்ற கப்பல் கொள்ளையடிக்கப் பட்டதால் அவர் தன் செல்வங்களை எல்லாம் இழந்துவிட்டார். அவரால் அதற்கு மேல் பணியாட்கள் வைத்துக் கொள்ள முடியாது. எனவே, பாய் மரம் செய்யும் வேலையில் அவரும் அவரின் மனைவியும் ஃபாத்திமாவும் மட்டுமே கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.

            தன்னை மீட்டு வந்த எஜமானின் மீதுள்ள விசுவாசத்தால் ஃபாத்திமா மிகக் கடுமையாக உழைத்தாள். அதனால் மனம் மகிழ்ந்த அவர் அவளுக்கு விடுதலை வழங்கினார். அவள் அவரின் நம்பகமான உதவியாளராகப் பணியாற்றினாள். இவ்வாறு, தனது மூன்றாம் வாழ்வில் அவள் முன்னை விட மதிப்பும் மகிழ்ச்சியும் உடையவள் ஆனாள்.

            ஒருநாள், எஜமான் அவளிடம் சொன்னார்: “ஃபாத்திமா, நம் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலுடன் நீ ஜாவா தீவுக்கு என் காரியதரிசியாகப் போய் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவற்றை நீ கவனமாக நல்ல விலைக்கு விற்று வர வேண்டும்.”

            அவள் கிளம்பினாள். ஆனால், கப்பல் சீனப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சூறாவளி ஒன்றில் சிக்கிச் சிதைந்தது. இரண்டாம் தடவையாக ஃபாத்திமா கடலில் விழுந்து தத்தளித்துக் கரை ஒதுங்கினாள். அது அவள் அறிந்திராத அந்நிய தேசம். அவள் மீண்டும் நொந்து கரைந்து அழுதாள். தான் எதிர்பார்த்த எதுவுமே தன் வாழ்க்கையில் நடப்பதில்லை என்பதை எண்ணி எண்ணி மனம் நொறுங்கினாள். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கும்போதே ஏதாவது ஒரு அசம்பாவிதம் வந்து அவள் நம்பிக்கையில் மண் அள்ளிப் போட்டுவிடுகிறது.

            ”கடவுளே! ஏன் இப்படி நான் சிரமப்பட்டு என் வாழ்க்கையை நல்ல நிலைக்குக் கொண்டு வரும்போதெல்லாம் கேடு வந்து சேர்கிறது? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துயரங்கள் நேர வேண்டும்?” என்று அவள் கதறி அழுதாள். ஆனால் விடையே இல்லை. எனவே அவள் மணலில் இருந்து எழுந்து ஊருக்குள் போகத் தொடங்கினாள்.

            சீனாவில் யாருக்கும் ஃபாத்திமாவையோ அவளின் துயரங்களையோ தெரியாது. ஆனால், அந்த ஊரில் மரபான நம்பிக்கை ஒன்று இருந்தது. என்றேனும் ஒருநாள் தொலைவான தேசம் ஒன்றிலிருந்து ஒரு அந்நியன் – ஒரு பெண் – வருவாள். அவள் சீன அரசருக்காக ஒரு கூடாரத்தை நெய்து கொடுப்பாள். அப்போதெல்லாம் கூடாரம் செய்யும் கலை சீனர்களுக்குத் தெரியாது. எனவே அவர்கள் ஒவ்வொரு நாளும் அதீத எதிர்பார்ப்புடன் அந்தக் கலையை அறிந்த ஒருத்தியின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

            அப்படியான ஒரு பெண் கடற்கரைக்கு வந்து சேரும்போது அவளைத் தவற விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பரம்பரையாக ஒவ்வொரு மன்னரும் ஆண்டுக்கு ஒரு முறை தமது தூதுவர்களை எல்லா ஊர்களுக்கும் அனுப்பி வெளிநாட்டுப் பெண் யாரேனும் வந்திருந்தால் உடனே அரசவைக்கு அழைத்து வர வேண்டும் என்று கண்காணித்து வந்தனர்.

            சீனக் கடற்கரையின் ஊர் ஒன்றுக்கு ஃபாத்திமா வந்து சேர்ந்த நேரமும் அத்தகையதுதான். அவளின் மொழியை அறிந்த துபாஷி ஒருவரை வைத்து மக்கள் அவளிடம் பேசினார்கள். அவள் தங்கள் மன்னரின் அவைக்குப் போக வேண்டும் என்று சொன்னார்கள்.

            ஃபாத்திமா தன் முன் கொண்டு வரப்பட்டதும் மன்னர் அவளிடம் கேட்டார், “பெண்ணே! உனக்குக் கூடாரம் செய்யத் தெரியுமா?”

            ”முடியும் என்று நம்புகிறேன்,” என்றாள் ஃபாத்திமா.

            அவள் அதற்குத் தேவையான கயிறுகள் கேட்டாள். ஆனால், அவள் கேட்பது மாதிரியான கயிறுகள் அவர்களிடம் இல்லை. எனவே, தான் கற்றுக்கொண்ட கைவினையை நினைவுப்படுத்தி இழைகளைக் கொண்டு அவளே கயிறு திரித்தாள். பிறகு அவள் கூடாரத்துக்கான கெட்டித் துணி கேட்டாள். அதுவும் சீனர்களிடம் இல்லை. எனவே, அலெக்சாண்ட்ரியாவின் நெசவாளர்களிடம் தான் கற்றுக்கொண்ட நுட்பங்களை நினைவு கூர்ந்து அவளே கூடாரத்துக்கான கெட்டித் துணியை நெய்தாள். பிறகு அவளுக்குக் கூடாரக் கழிகள் தேவைப்பட்டன. ஆனால், சீனர்களிடம் அவள் கேட்கும் பொருள் இல்லை. எனவே, இஸ்தான்பூலில் கப்பல்களுக்கான பாய்மரக் கழிகள் தயாரிப்பதில் தான் பெற்றிருந்த அனுபவத்தைக் கொண்டு அவளே மரங்களை அறுத்துக் கூடாரக் கழிகளை உருவாக்கினாள். அந்தப் பொருட்கள் எல்லாம் தயாரானதும், தனது பயணங்களில் பல்வேறு இடங்களில் தான் பார்த்திருந்த கூடாரங்களின் அமைப்புகளை எல்லாம் தன் மூளையைக் கசக்கி நினைவில் ஓர்ந்து அவள் ஒரு கூடாரத்தை எழுப்பி முடித்தாள்.

            சீன மன்னர் வந்து கூடாரத்தைப் பார்த்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவள் என்ன பரிசு கேட்டாலும் தருவதாக ஃபாத்திமாவிடம் கூறினார். அவள் சீனாவிலேயே தங்கிவிட முடிவு செய்தாள். அங்கே அவள் ஓர் அழகான இளவரசனைத் திருமணம் செய்துகொண்டாள். அங்கே அவள் தன் மரணப் பரியந்தம் தன் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் சூழ இன்பமாக வாழ்ந்தாள்.


            ஒரு நேரத்தில் நமக்கு நடப்பது மிகக் கொடூரமான அனுபவமாகத் தோன்றினாலும் அது தன் வாழ்வின் நிரந்தர மகிழ்ச்சியின் உருவாக்கத்தில் ஓர் இன்றியமையாத பகுதிதான் என்பதை ஃபாத்திமா தனது இந்த சாகச நிகழ்வுகளால் உணர்ந்து கொண்டாள்.

db

            இந்தக் கதை கிரேக்க நாட்டுப்புற இலக்கியத்தில் நன்கு அறியப்பட்டதாகும். அதன் சமகால இலக்கியத் தொகுதிகளில் தர்வேஷ்களின் இலச்சினைக் கருத்துக்களையும் மரபுகளையும் காண முடியும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கதைப் பிரதி அட்ரியானோப்பிளைச் சேர்ந்த ஷைகு முஹம்மது ஜமாலுத்தீன் அவர்களின் பெயரால் வழங்கப்படுகிறது. அவர் ’ஜமாலிய்யா நெறி’ (’பேரழகின் வழி’)-யின் நிறுவனர் ஆவார். 1750-இல் இறந்தார்.