வாழ்க்கை
ஓர் அறுசுவை விருந்து.
அதில்
இனிப்பும் காரமும் புளிப்பும் கரிப்பும் துவர்ப்பும் கசப்பும் பரிமாறப்படும்.
முழுதும்
இனிமைதான் வேண்டும் என்றால் அது விருந்தாக இருக்காது. பிற சுவைகளுக்கு இடம் கொடுக்காத
இனிமை நோயாகவும் மாறிவிடும்.
மனித
மனத்தில் தோன்றும் எண்வகை உணர்வுகளும் அப்படித்தான்.
மனத்
தோட்டத்தில் புன்னகைப் பூக்கள் மலரத்தான் வேண்டும். ஆனால் கண்ணீர்த் துளிகள் அவற்றின்
மீது பன்னீர்த்துளிகளாய் அமரும்போதுதான் தோட்டத்தின் அழகு அதிகமாகிறது.
ஜப்பானிய
மண்ணில் தோன்றிய மூன்றடிக் கவிதையான ’ஹைகூ’வின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படும்
இஸ்ஸா எழுதிய பிரபலமான ஹைகூ ஒன்றுண்டு.
“இந்த
உலகம்
ஒரு பனித்துளி
உலகம்தான்
இருந்தாலும்...
இருந்தாலும்”
இந்தச்
சின்னஞ்சிறு கவிதை எந்தச் சூழலில் எழுதப்பட்டது என்பதற்கு இஸ்ஸா இட்டிருக்கும் குறிப்பு
‘என் குழந்தை இறந்தபோது’ என்பதாகும்.
அதிகாலையில்
சூரியனின் சுடர் பட்டதும் சில நிமிடங்களில் ஆவியாகி மறைந்துவிடும் பனித்துளியைப் போல்
இஸ்ஸாவின் குழந்தை வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலேயே இறந்துவிட்டது.
அழுக்கடைவதற்கு
முன் தூய நிலையிலேயே மறைந்துவிடும் பனித்துளியைக் குழந்தையின் இறப்பிற்கு உவமை சொல்லியிருப்பது
எத்தனை பொருத்தமானது!
பனித்துளி
குழந்தைக்கு மட்டும்தான் உவமையா? இல்லை. அது நமக்கு இஸ்ஸாவின் கண்ணீராகவும் தெரிகிறது.
குழந்தை
மட்டும் மறைந்து போகவில்லை. அதனை இழந்த இந்த துக்கமும் காலப் போக்கில் மறைந்துவிடத்தான்
போகிறது. ஆக, எதுவும் நிலையானது அல்ல.
இந்த
ஹைகூவின் அழகும் அர்த்தகனமும் அதன் இறுதி வரியில்தான் இருக்கின்றது. முதல் இரண்டு வரிகள்
பழைய தத்துவம் ஒன்றை ஒப்பிக்கின்றன, அவ்வளவே. ஆனால் ‘இருந்தாலும் இருந்தாலும்’ என்று
இஸ்ஸா விசும்பும்போது, கண்ணீர் தளும்பும் கண்களுடன் சற்றே தேம்பும்போது அந்த உணர்வின்
மூல ஊற்று நம் உள்ளத்திலும் திறந்து நனைக்கிறதா இல்லையா? இந்த ஹைகூவை உயிர்ப்புடன்
வைத்திருப்பது அதுதான்.
இதே கருத்தைத்தான்
ஏற்றப் பாட்டுக்காரன் கம்பனுக்குத் தந்த வரிகளும் நமக்குச் சொல்கின்றன:
“மூங்கில்
இலை மேலே
தூங்கும்
பனி நீரே
தூங்கும்
பனி நீரை
வாங்கும்
கதிரோனே.”
நபிகள்
நாயகத்தின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. அவர்களின் மகன் இப்றாஹீம் (ரலி) பாலகனாக இருந்தார்.
அபூஸைஃப் என்னும் கொல்லரின் வீட்டில் செவிலித் தாயின் பராமரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த
அந்தக் குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்க்ளின் கண்களில் நீர்
பொங்கி வழிந்தது. அதனைக் கண்ட நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ‘அல்லாஹ்வின்
தூதரே! தாங்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) சொன்னார்கள், “அவ்ஃபின் மகனே!
நிச்சயமாக இது கருணையாகும்” (யப்ன அவ்ஃபின்
இன்னஹா ரஹ்மத்துன்)
பிறகு,
இறந்துவிட்டிருக்கும் தன் பிள்ளையைப் பார்த்து நபி(ஸல்) கூறினார்கள்:
“கண்கள்
நீரை வார்க்கின்றன
இதயம்
மிகவும் வாடுகின்றது
எம் ரட்சகன்
உவப்பதன்றி
வேறு
எதையும் நாம் பேசுவதில்லை
இப்றாஹீமே!
நிச்சயமாக நாம்
உன் பிரிவால்
அதிகக் கவலை அடைகின்றோம்”
(இன்னல் ஐன தத்மஉ வல் கல்ப யஹ்ஸனு
வலா யகூலு இல்லா மா யர்ளா ரப்புனா
வ இன்னா பிஃபிராக்கிக யா இப்றாஹீமு லமஹ்ஸுனூன்)
(ஸஹீஹுல்
புகாரி: #1302)
நபித்தோழரின்
கேள்விக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில் அற்புதமானது. நபித்தோழரின் இயற்பெயர் அப்துர்
ரஹ்மான். அதாவது ரஹ்மானின் அடிமை என்று பொருள். ரஹ்மான் என்பது இறைவனின் திருநாமங்களில்
முதன்மையானது. அல்லாஹ் என்னும் அவனது சுயநாமத்துடன் இணைத்துச் சொல்லப்படும் பண்புத்
திருப்பெயர் ‘ரஹ்மான்’ என்பதே. அதற்கு ‘கருணையாளன்’ என்பது பொருள். நபித்தோழரின் தந்தையின்
பெயர் அவ்ஃப் என்பதாகும்.
நபி(ஸல்)
அவருக்கு விடை சொல்லும்போது ‘அப்துர் ரஹ்மானே!’ என்று அழைக்கவில்லை. மாறாக, “அவ்ஃபின்
மகனே!” (யப்ன அவ்ஃபின்) என்று அழைத்தார்கள். பிள்ளையை இழந்துவிட்ட துக்கத்தில் இருக்கும்
தந்தையான நபி(ஸல்) அதே தந்தை உறவைச் சுட்டித் தன் தோழரை விளிக்கிறார்கள்!
அவ்வாறு
விளித்து, “நிச்சயமாக இது கருணையாகும்” (இன்னஹா
ரஹ்ம(த்)துன்) என்று விளக்கினார்கள். ’இறைவன் நம்மில் இருக்கிறான், அவனின் கருணை
நம் உறவுகளில் வெளிப்படுகிறது’ என்னும் ஞானம் இதில் அருளப்படுகிறது.
நபி
(ஸல்) அவர்கள் அழுததைப் பார்த்து அந்த நபித்தோழர் வியப்படைந்தது ஏன்? ‘உலக வாழ்க்கை
நிலையற்றது’ என்று போதிக்கும் இறைத்தூதரே இப்போது ஓர் இழப்பிற்காக அழுகிறார்களே என்று
நினைத்ததால்தானே?
மனிதத்தன்மை
– இயற்கையான மனித உணர்வுகள் - ஆன்மிகத்திற்கு எதிரானது என்று பலபேர் தவறாகக் கருதுகின்றார்கள்.
ஆனால் அது இறைவனின் கருணை வெளிப்படும் வாயில்கள் என்பதை அவர்கள் அறிந்தால் அப்படிக்
கருத மாட்டார்கள். அந்த ஞானத்தைதான் நபியின் விடை நமக்கு உணர்த்துகின்றது.
இந்த
நபிமொழி காட்டும் காட்சியைப் போன்ற ஒரு காட்சியை ஜென் வட்டாரத்திலும் நாம் காண்கிறோம்.
ஜென்
ஞானி ஒருவர் இறந்துபோனார். அவருடைய தலைமைச் சீடர் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார்.
இது சக சீடர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘தாமரை இலை மேல் உருளும் நீரைப் போல் நாம்
இருக்க வேண்டும். பந்த பாசங்கள் என்னும் மாயையில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது. உடல்தான்
அழியும்; ஆன்மா அழியாது என்பன போன்ற தத்துவங்களை மக்களுக்குப் போதிக்கும் மடம் அது.
அப்படி போதித்த ஒரு ஞானியே தன் குரு இறந்ததற்காக அழுவதை மக்கள் பார்த்தால் மடத்தின்
பெயர் கெட்டுவிடுமே என்று அவர்கள் பதறினார்கள். செய்தி கேட்டு மக்கள் கூட்டம் அங்கே
திரளத் தொடங்கியது. அப்போதும் அந்தத் தலைமைச் சீடர் அழுதுகொண்டுதான் இருந்தார். இத்தனைக்கும்
அவர்தான் அடுத்த குரு! எனவே சீடர்கள் அவரிடம் சொன்னார்கள், “தயவு செய்து அழுகையை நிறுத்துங்கள்.
உறவுகளே இல்லாத துறவிகளாகிய நாம் இப்படி அழுதால் ஊர் என்ன நினைக்கும்? உடல் அழிவது
இயற்கை நிகழ்வு; ஆன்மா அழிவற்றது என்பது உங்களுக்குத் தெரியாதா? பிறகு ஏன் அழுகிறீர்கள்?”
அந்தச்
சீடர்களுக்கு அப்போது அந்த ஜென் குரு சொன்ன பதில் மிகவும் அற்புதமானது: “உடல்தான் அழியும்;
ஆன்மா அழியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், நான் ஆன்மாவுக்காக அழவில்லை.
நான் நம் குருவின் உடலுக்காகத்தான் அழுகிறேன்! எத்தனை அழகான அற்புதமான உடல் அவருடையது!
குருவின் ஆன்மாவை நாம் மீண்டும் சந்திக்கத்தான் போகிறோம். ஆனால், அவரின் இந்த அழகான
உடல் சிறிது நேரத்தில் அழிந்துவிடும். அதற்காகத்தான் அழுகிறேன். நம் ஜென் தத்துவம்
ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு அழுகை வருகின்றது. இயற்கையாக இது நிகழ்கின்றது. இயற்கையோடு
இயைந்து இரு என்பதும் ஜென்னின் போதனைதானே? நான் என் அழுகையை வலிந்து அடக்கினால் அதுவே
ஜென்னுக்கு மாற்றமானதுதானே? எனவே அழுகை வரும்வரை நான் அதை அனுமதிக்கத்தான் வேண்டும்!”
புத்தர்
மரணப்படுக்கையில் கிடக்கிறார். அவருடைய தம்பியும் அனுக்கச் சீடர்களில் ஒருவனுமான ஆனந்தாவுக்கு
துக்கம் நெஞ்சைப் பிசைகிறது. புத்தர் கற்றுத் தந்த ஞானம், அநித்யங்களில் உணர்ச்சி வசப்படல்
ஆகாது என்னும் போதனை பொங்கும் கண்ணீருக்கு அணை கட்ட முயல்கிறது. ஆனால் அவனின் இதயம்
உணர்ச்சிகளின் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலை வைத்து கவிஞர் இசை
தன் “உறுமீங்களற்ற நதி” என்னும் நூலில் அழகான ஒரு கவிதை எழுதியிருக்கிறார்:
புத்தன் அழுதான்
ஆற்றமாட்டாது
கண்ணீர்
பெருக்கியபடி இருந்த ஆனந்தாவுக்கு
திடீரென
தான் ஒரு புத்தன் என்பது
பிரக்ஞையில்
படவே
அழுகையை
நிறுத்திக் கண்களைத் துடைத்துக் கொண்டான்
நித்ய
ஸாந்தமும் மந்தகாசமுமாய்
தன் முகத்தை
நிலைநிறுத்த முயன்றானெனினும்
அங்குமிங்கும்
இழுத்துக்கொண்டு நெளிந்த
முகரேகைகளின்
வழியே கண்ணீர் பீய்ச்சியது
அது அவன்
தம்மங்களனைத்தையும்
அடித்துக்
கொண்டோடியது
மறைவிடம்
தேடி ஓடும் ஆனந்தா
எவ்விடம்
போயினும் நீ ஒரு புத்தனே
இன்னும்
சில வினாடிகளில்
மரிக்க
இருக்கிறான் உன் புத்தன்
அவனுடலெங்கும்
சிந்தட்டும் உன் கேவல்கள்
வாரி
அள்ளி மடியிலிட்டு
பெருங்குரலில்
வெடித்தழு புத்தா.
தண்ணீர்
நதிகள் மனித குலத்தின் புற நாகரிகம் வளர்த்தன. கண்ணீர் நதிகள் மனித குலத்தின் அக நாகரிகம்
வளர்த்தன.
தண்ணீர்ப்
பாசனம் பயிர் வளர்த்தது. கண்ணீர்ப் பாசனம் உயிர் வளர்த்தது.
அல்லாமா
இக்பால் கூறுகிறார்:
”மனிதனின்
பொருட்டுப்
பல இரவுகள்
கண்ணீர்
சிந்தின என்
கண்கள்...
ரகசியங்களின்
திரைகள்
அகன்று
போயின
அதனால்.”
ஆம்.
மனிதன் தேடும் பொக்கிஷம் அவனுக்குள்ளேயே மறைந்திருக்கிறது. கண்ணீரே அந்தப் பொக்கிஷத்தின்
பூட்டைத் திறக்கும் திரவ திறவுகோல்.
அற்புதம்- கண்ணீர்
ReplyDelete