Sunday, July 28, 2013

மனதில் (3) உறுதி வேண்டும் - part3

மூன்று வகை யகீன்களையும் சொல்லும் திருக்குர்ஆன் தன்னைக் குறிப்பாக எதனுடன் அடையாளப்படுத்திக் காட்டுகிறது என்பதைப் பார்ப்போம்:

“மேலும் நிச்சயமாக அது மெய்த் திட்பமாகும்” (வ இன்னஹூ ல-ஹக்குல் யகீன் – 69:51)

திருக்குர்ஆன் தன்னை ’ஹக்குல் யகீன்’ என்றே அழைத்துக் கொள்கிறது. அதாவது அது இறையனுபவ நூலாகும்.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் “முஹ்யீ” (உயிரளிப்பவன்) என்பதும் ஒன்று.

“இது ஏனெனில்
நிச்சயமாக அல்லாஹ்வே சத்தியம்
(தாலிக பிஅன்னல்லாஹ ஹுவல் ஹக்கு)
நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கிறான்
(வ அன்னஹு யுஹ்யில் மவ்த்தா)”
(22:6)

இத்திருவசனத்தின் மேற்கண்ட இரண்டு பகுதிகள் இரண்டு சூஃபி மகான்களை – இறை நேசர்களை என் நினைவில் கொண்டு வருகின்றன. அவ்விருவரும் இறையனுபவத்தின் இருவேறு நிலைகளில் நின்று செயல்பட்டவர்கள்.

அவ்விருவரில் ஒருவரான மன்சூர் அல்-ஹல்லாஜ் (ரஹ்) இறையனுபவத்தில் தன்னை மறந்த நிலையான ‘மஹ்வ்’ என்னும் நிலையில் மூழ்கியவராக இருந்தார். அல்லாஹ் அவரை ‘அனல் ஹக்’ (நானே சத்தியம்) என்று சொல்ல வைத்தான்.

அவ்விருவரில் மற்றவரான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் இறையனுபவங்களில் தன்னுணர்வைத் தக்க வைத்திருக்கும் ‘ஸஹ்வ்’ என்னும் நிலையில் நிற்பவராக இருந்தார். அல்லாஹ் அவர்களை ‘கும் பிஇத்னீ’ (என் கட்டளையைக் கொண்டு எழு) என்று சொல்லவைத்து மரித்த பிணத்தை உயிருடன் எழ வைத்தான். இஃது அன்னாரின் கராமாத்துக்களில் (அற்புதங்களில்) ஒன்றாக விதந்துரைக்கப் படுகின்றது.

”நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கிறான்” (22:6)
“நிச்சயமாக இறந்தோரை நாமே உயிர்ப்பிக்கிறோம்” (36:12)
இந்த அறிவு ’இல்முல் யகீன்’ என்னும் நிலை.

இப்றாஹீம் (அலை) இதனைக் காட்சியாகவே காணவேண்டும் என்று கேட்டார்கள். அந்த ஐனுல் யகீன் என்னும் நிலை அவர்களுக்கு அருளப்பட்டது.

“ஹக்குல் யகீன்” ஆன திருக்குர்ஆனின் வழியே இறையனுபவங்களில் மூழ்கியவருக்கு அது அனுபவத்திலேயே கண்டடைவதாக உள்ளது.

ஒவ்வொரு கணமும் இறைவனிடமிருந்து என்னில் ஜீவன் (ஹயாத்) வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் அவன் என்னை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறான் என்பதை உணர்ந்து திளைப்பது அந்த அனுபவத்தின் ஆரம்ப நிலையாகும்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் வழியே அல்லாஹ் நிகழ்த்திய கராமத் (அற்புதம்) – அதாவது இறந்தவரை உயிர்ப்பிப்பதற்கு இறைவனின் கருவியாகத் தான் ஆகிவிடும் நிலை அந்த அனுபவத்தின் உச்ச நிலையாகும்.

நபி ஈசா (அலை) [ஏசுநாதர்] இந்த அடிப்படையில் நிகழ்த்திய இரண்டு அற்புதங்களை குர்ஆன் பதிவுசெய்கின்றது:

1.”மேலும், என் உத்தரவைக் கொண்டு நீர் களிமண்ணினால் பறவை வடிவத்தைப் போல் படைத்து (வ இத் தஃக்லுகு மினத் தீனி கஹையத்தித் தைரி பி-இத்னீ) அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவை ஆகியது (ஃபதன்ஃபுஃகு ஃபீஹா ஃபதகூனு தைரன்(ம்) பி-இத்னீ )” (5:110)

2.“(மர்யமுடைய மகன் ஈசாவே!) இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறையிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைவு கூர்க) (வ இத் துஃக்ரிஜுல் மவ்த்தா பி-இத்னீ )” (5:110)

இந்தத் திருவசனத்தில் ஈசா நபியிடம் அல்லாஹ் உரையாடுகின்றான். எனவே “பி-இத்னீ” (என் உத்தரவைக் கொண்டு) என்பதை அல்லாஹ்வின் பக்கம் சார்த்திப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வுகள் ஈசா (அலை) அவர்களின் வழியே அல்லாஹ் நிகழ்த்திய அற்புதங்கள் (முஃஜிஸா – இறைத்தூதர்கள் வழி நிகழும் அற்புதங்கள்) ஆகும்.

இறைத்தூதர்களும் இறைநேசர்களும் இறைவனின் கருவிகள் ஆவர். அவர்களின் வழியே நிகழும் அற்புதங்கள் (இயற்கை வழமை இகந்த நிகழ்வுகள், மீவியற்கை நிகழ்வுகள்) உண்மையில் இறைவன் நிகழ்த்துபவைதான். அவற்றை இறைவனின் கருவிகளான இறைத்தூதர்களும் இறைநேசர்களும் சுயமாகவே நிகழ்த்துகிறார்கள் என்று நினைப்பது தவறான புரிதலாகும்.

ஈசா (அலை) இறைவனின் கருவியாக இருந்தார்கள்.

“மர்யமின் மகன் மஸீஹ் (என்னும் ஈசா (அலை)) இறைவனின் தூதரே அன்றி வேறில்லை” (மல் மஸீஹுப்னு மர்யம இல்லா ரசூலுன் – 5:75)

இறைவனின் கருவியாக அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களின் வழியே இறைவனின் உத்தரவு வெளியாவது தன்னிலையாகவும் இருக்கலாம் படர்க்கையாக்வும் இருக்கலாம். அதாவது ‘கும் பி-இத்னில்லாஹ்’ (அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு) என்று வெளிப்பட்டாலும் ‘கும் பி-இத்னீ’ (என் உத்தரவைக் கொண்டு) என்று வெளிப்பட்டாலும் அது அல்லாஹ்வின் உத்தரவுதான்.

மூசா (அலை) அவர்கள் தீப்பிடித்த புதர் ஒன்றிலிருந்து நெருப்புக் கொள்ளியை எடுக்கச் சென்ற போது அல்லாஹ் அந்த புதரின் வழியே அவர்களை அழைத்துப் பேசினான். பேசுவது புதர் அல்ல, அல்லாஹ்தான் என்பதை மூசா நபி புரிந்துகொண்டார்கள்.

“நிச்சயமாக நான்தான் அல்லாஹ் (இன்னனீ அனல்லாஹ்); என்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை (லா இலாஹ இல்லா அன); என்னையே வணங்குவீராக (ஃபஃபுதுனீ); என்னை தியானிப்பதற்காகத் தொழுகையைப் பேணுவீராக (வ அகிமிஸ் ஸலாத்த லிதிக்ரீ)” (20:14)

இந்த வாக்கியங்கள் எரியும் புதர் பேசியவை அல்ல. அந்தப் புதரின் வழியே அல்லாஹ் பேசியவை. இதில் உள்ள ’நான்’ (அனா) அந்தப் புதருக்குச் சொந்தமான சுயம் அல்ல, அல்லாஹ்வின் சுயமாகும்.

அதேபோல், மன்சூர் அல்-ஹல்லாஜ் (ரஹ்) அவர்களின் வழியே வெளிப்பட்ட ‘அனல் ஹக்’ என்பதில் உள்ள ’நான்’ (அனா) அல்லாஹ்வுக்கு உரியதாகும்.

அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் உத்தரவில் இருந்த நான் (இத்னீ – என் உத்தரவு) அல்லாஹ்வுக்குச் சொந்தமானதாகும்.

புதர், மன்சூர் அல்-ஹல்லாஜ், அப்துல் காதிர் ஜீலானீ, ஏசுநாதர் எல்லாம் இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவிகளே. சுயம் அவனுடையதுதான்.

புதரிலிருந்து அல்லாஹ் பேசியதால் அது மூசா நபியை விடவும் அந்தஸ்தில் மேலானதாகி விடாது. நபி நபிதான், புதர் புதர்தான்.

அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் ஈசா நபியின் அற்புதத்தைத் தான் செய்து காட்டியதால் அவர்கள் ஈசா நபிக்கு இணையானவர்கள் அல்ல. நபி (இறைத்தூதர்) நபிதான், வலீ (இறைநேசர்) வலீதான். இறைநேசரின் உச்சமான அந்தஸ்தும்கூட எந்த இறைத்தூதரின் ஆரம்ப நிலையையும் தொட்டுவிட இயலாது.

ஈசா நபி நிகழ்த்திய அற்புதங்களைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் நிகழ்த்தியதாக திருக்குர்ஆனில் எங்கும் இல்லை. ஆனால் அத்தனை நபிமார்களுக்கும் தலைவரே அவர்கள்தான்.

”ஹக்குல் யகீன்” என்னும் நிலையை அந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் வழியே பொங்கும் அருட்கொடையாகவே (ஃபைஸானே முஹம்மதீ) இறைத்தூதர்களும் இறைநேசர்களும் அடைகின்றார்கள்.

எனவேதான் மேற்கண்ட அற்புத நிகழ்வில் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: “அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களின் சேவகன் நான்.”

’ஹக்குல் யகீன்’ ஆன திருக்குர்ஆன் இடம்பெறும் வழிபாடாகத் தொழுகை உள்ளது. அந்தத் தொழுகை பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

”நிச்சயமாகத் தொழுகையில் அனுபவம் உள்ளது” (இன்ன ஃபிஸ் ஸலாத்தி ஷுக்லா – நூல்: புகாரி:1216, 3875; முஸ்லிம்: 936)

தொழுகையில் ருகூ நிலையிலிருந்து எழும் தருணம் பற்றி அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: ‘அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையிலான திரை நீக்கப்பட்டதன் நோக்கத்தை அடியான் அடைந்துகொள்ளும் தருணம்.’

அந்தத் தருணத்தில் ஓதப்படும் மந்திரம்: “சமிஅல்லாஹு லிமன் ஹமித(ஹ்)” (தன்னைப் புகழ்வோரின் புகழ்ச்சியை அல்லாஹ் செவியேற்கிறான்).

அந்த நிலையின் மேன்மையை அபூ மூசா அல்-அஷ்அரீ (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் ‘சமிஅல்லாஹு லிமன் ஹமித(ஹ்)’ என்று கூறினான்” (ஃப இன்னல்லாஹ கால அலா லிஸானி நபிய்ய்ஹி சமிஅல்லாஹு லிமன் ஹமித(ஹ்) - நூல்: முஸ்லிம்:680)

அடியான் இறைவனுடைய பேச்சின் கருவியாக இயங்கும் தருணம் அது. நாக்கு அடியானுடையது வாக்கு இறைவனுடையது. அந்த நிலையின் ஞானத்தையும் அனுபவத்தையும் யாருக்கு அல்லாஹ் எந்த அளவு அருளுகின்றானோ அவர்களின் ஆன்மிக அந்தஸ்தும் அந்த அளவு உயர்ந்துவிடுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் விஷயத்தில் சொன்னார்கள் “உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்” (அல்-ஹக்கு யன்திகு அலா லிசானில் உமர் – அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: திர்மிதி)

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “இறைவிசுவாசியின் அகப்பார்வையை அஞ்சிக்கொள். நிச்சயமாக அவர் அல்லாவ்ஹின் ஒளியால் பார்க்கிறார்” (இத்தகூ ஃபிராசத்தல் முஃமினி ஃப-இன்னஹு யன்ழுரு பி-நூரில்லாஹ் – அறிவிப்பாளர்: அபூ சயீதுல் குத்ரி (ரலி) நூல்: திர்மிதி:3127)

’விலாயத்’ என்னும் இறைநேசத்தின் இந்த நிலை பற்றி அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்:
“நான் அவரை நேசிக்கும்போது (ஃப இதா அஹ்பப்துஹு)
அவரின் கேள்வியாக நானாகிறேன் (குன்து சம்அஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் கேட்கிறார் (யஸ்மஉ பிஹி)
அவரின் பார்வையாக (நானாகிறேன்) (வ பஸருஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் பார்க்கிறார் (யுப்ஸிரு பிஹி)
அவரின் கையாக (நானாகிறேன்) (வ யதஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் பிடிக்கிறார் (யுப்திஷு பிஹா)
அவரின் காலாக (நானாகிறேன்) (வ ரிஜ்லஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் நடக்கிறார் (யம்ஷீ பிஹா)”
(அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹ் புகாரி:கிதாபுர் ரிகாக்: 6502)

அல்லாஹ்விடம் இத்தகைய இறைநம்பிக்கையாளரின் மேன்மை என்ன என்பதை நபி(ஸல்) அவர்கள் ஓரிடத்தில் சொல்கிறார்கள்: “இறைநம்பிக்கையாளர் (ஆதி இறையில்லமாம்) ‘கஃபா’வை விடவும் மதிப்புடையவர்” (அல்-முஃமினு அக்ரம ஹுர்மத்தம் மினல் கஃபா – நூல்: இப்னு மாஜா, மிஷ்காத்தெ மஸாபீஹ்:பாகம்1:44)

மேற்சொன்ன செய்திகளெல்லாம் ’ஹக்குல் யகீன்’ என்னும் நிலையில் வாழுகின்ற இறைநேசர்களின் மேன்மையை எடுத்துரைப்பவையே ஆகும்.

‘நிச்சயமாகத் தொழுகையில் அனுபவம் இருக்கின்றது’ (இன்ன ஃபிஸ் ஸலாத்தி ஷுக்லா) என்று நபிமொழியில் சுட்டப்பட்டுள்ள அனுபவம் (ஷுக்ல்) என்ன என்பதற்கு மேற்சொன்ன ஹதீஸ் குத்ஸி விளக்கம் தருகின்றது: ”நான் அவரை நேசிக்கும்போது (ஃப இதா அஹ்பப்துஹு)” என்று அல்லாஹ் சொல்கிறான். எனவே தொழுகையில் உண்டாகும் ஹக்குல் யகீன் – அனுபவ உறுதி என்பது முஹப்பத் என்னும் நேசத்தின் உறுதியாகும்.

”இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியானவர்கள்” (வல்லதீன ஆமனூ அஷத்த ஹுப்பன் லில்லாஹி – 2:165)

நோன்பிலும் அந்த ஹக்குல் யகீன் என்னும் அனுபவமே நோக்கமாக இருக்கின்றது என்பதை அல்லாஹ் குறிப்பிடுகின்றான் (ஹதீஸ் குத்ஸி): “நோன்பு எனது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்” (அஸ்ஸவ்மு லீ வ அனா அஜ்ஸீ பிஹி – அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்:புகாரி:1894)

இறைநேசரை இறைவன் நேசிக்கும்போது அவனே அவரின் கேள்வியாக, பேச்சாக, கையாக, காலாக ஆகிவிடுகிறான் என்று ஹதீஸ் குத்ஸியில் கூறப்பட்டுள்ளதன் ஞானத்தில் சூஃபிகள் இந்த ஹதீஸ் குத்ஸியை விளக்குகிறார்கள்: ‘நானே கூலி கொடுப்பேன்’ என்பதன் பொருள் ‘நானே கூலியாகி விடுகிறேன்’ என்பதாகும். அதாவது இறைநேசர் அவனையே அடைந்துகொள்கிறார்.

இறைக்காதல் என்பது ஆழங்காண இயலாத பல நுட்பங்களைக் கொண்டதாக இருக்கிறது. இறைக்காதலின் அனுபவங்கள் என்பவை எண்ணற்ற வண்ணங்கள் ஆகும். வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று பல விகிதங்களில் கலந்து பல நிறப்பிரிகைகளில் தம்மை வெளிப்படுத்துகின்றன. திறமை மிக்க ஓவியன் அவற்றைக் கொண்டு தனித்தன்மை கொண்ட பல ஓவியங்களைத் தீட்டுகிறான்.

அதுபோல், தன் நேசத்தில் இறைவன் தரும் அனுபவங்கள் ஒவ்வொரு இறைநேசருக்கும் வேறுபடுகின்றது. ஒவ்வொரு இறைநேசரையும் தன் நேசத்தின் ரகசியக் களஞ்சியமாக அவன் ஆக்கிவிடுகிறான்.

வெள்ளைத் தாளையே அல்லது திரையையே ஓவியன் தன் வண்ணங்களைத் தீட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கிறான். உள்ளத்தை சலவை செய்து வெண்மை ஆக்கியவர்களையே அல்லாஹ் தன் நேசத்தின் வண்ணங்களைப் பொழிவதற்குத் தேர்ந்தெடுக்கிறான்.

“அல்லாஹ்வின் வண்ணம் (சிப்கதல்லாஹி)
வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வை விட அழகன் யார்?
(வ மன் அஹ்சனு மினல்லாஹி சிப்கா)
அவனையே நாங்கள் வணங்குகிறோம்
(நஹ்னு லஹூ ஆபிதூன்)”
(2:138)


உள்ளத்தை வெள்ளை செய்வோம். இறைவன் தன் நேசத்தின் வண்ணத்தை அள்ளித் தருவான்.

Saturday, July 27, 2013

மனதில் (3) உறுதி வேண்டும் -part 2

இனி, மூன்று யகீன்களின் விஷயத்திற்குத் திரும்புவோம். அவை மூன்றும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டவை என்றேன். இல்முல் யகீன் (102:5), ஐனுல் யகீன் (102:7), ஹக்குல் யகீன் (69:51) என்பது அவை இடம்பெற்றுள்ள திருவசன விவரமாகும்.

இத்தருணத்தில் ஒரு நபிமொழியைக் கவனத்தில் கொள்வோம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நாமே இப்றாஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதி உடையவர்கள் ஆவோம். இப்றாஹீம் (அலை) அவர்கள், ‘என் ரட்சகனே! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகின்றாய் என்று எனக்குக் காட்டு’ என்று கேட்டபோது, அல்லாஹ், ‘நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்று கேட்டான். அவர்கள், ‘ஆம், ஆனாலும் என் உள்ளம் நிம்மதி அடைவதற்காக இப்படிக் கேட்டேன்’ என்று பதிலளித்தார்கள்” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹ் புகாரி:3372)

மேற்கண்ட நபிமொழியில் இடம்பெற்றுள்ள சம்பவம் திருக்குர்ஆனில் (2:260)-ஆம் திருவசனத்தின் முற்பாதி ஆகும். அதன் பிற்பாதி பின்வருமாறு:
“’பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக் கொள்ளும். பின்னர் (அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்துவிடும். பின், அவற்றைக் கூப்பிடும். அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்’ என்று (அல்லாஹ்) கூறினான்.” (2:260)

இப்றாஹீம் (அலை) இவ்வாறு இறைவனிடம் கேட்டது பற்றி அழகிய விளக்கம் ஒன்றைத் தருகிறார் மௌலானா ஃபஸ்லுல் கரீம்: “இவ்வகை ஐயம் அவர்களை இல்முல் யகீன் என்னும் அறிவு நிலையிலிருந்து ஐனுல் யகீன் என்னும் காட்சி நிலைக்கு உயர்த்துவதாக இருந்தது.” (நூல்: மிஷ்காத்துல் மஸாபீஹ் – கிதாபுல் அன்பியா, ஹதீஸ் எண்: 9 அடிக்குறிப்பு.)

மேற்கண்ட ஹதீஸில் மௌலானா ஃபஸ்லுல் கரீம் அவர்கள் விளக்காமல் விட்டு விட்ட பகுதி ஒன்றுள்ளது: ”நாமே இப்றாஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதி உடையவர்கள் ஆவோம் (நஹ்னு அஹக்கு பிஷ்ஷக்கி மின் இப்றாஹீம்)” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதன் கருத்து என்ன?

நிச்சயமாக அடுத்த நிலை நோக்கிய உயர்வுதான். அதாவது ஐனுல் யகீன் என்னும் காட்சி நிலையிலிருந்து ஹக்குல் யகீன் என்னும் அனுபவ நிலைக்கு உயர்வது!

திருக்குர்ஆனில் இந்த மூன்று வகை யகீன்களை நோக்கிய திருவசனங்கள் இருக்கின்றன.
அறிந்து கொள்ளத் தூண்டும் திருவசனங்களையும் அறிவித்துத் தரும் திருவசனங்களையும் இல்முல் யகீனை நோக்கியவை எனலாம்:

“அறிக: நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி இலாஹ் (தேவைகளைப் பூர்த்தி செய்து தரும் இறைவன், எனவே வணக்கத்திற்குரியவன்) வேறில்லை” (47:19)

“அறிக: நிச்சியமாக உங்களுக்குள் அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார்” (49:7)

“அறிக: இதயங்களின் நிம்மதி என்பது அல்லாஹ்வின் தியானைத்தைக் கொண்டே உள்ளது” (13:28)

“அறிக: நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் – அவர்கள் மீது அச்சம் இல்லை, மேலும் அவர்கள் கலைப்படவும் மாட்டார்கள்” (10:62)

இவையெல்லாம் அறிந்துகொள்ளத் தூண்டும் திருவசனங்கள்.

“நீங்கள் எப்பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது” (2:115)

இது அறிவித்துத் தரும் திருவசனம். இதில் அல்லாஹ்வின் முகம் என்பது எதைக் குறிக்கும் என்று விளக்கப்படாமல் பூடகமாகவே சொல்லப்பட்டுள்ளது. மேலும் அல்லாஹ்வின் முகத்தைப் பார்க்குமாறு கட்டளை இவ்வசனத்தில் இல்லை.

“அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான்”(24:35)

இதுவும் தகவல் தருகின்றது. ஆனால் அந்த ஒளியை தரிசிக்குமாறு கட்டளை இவ்வசனத்தில் இல்லை.

“நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கின்றான்” (57:4)

“நாம் பிடரி நரம்பை விடவும் (மனிதனாகிய) அவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கின்றோம்” (50:16)

இதிலும் அறிவித்துத் தருதல்தான் இருக்கின்றது. அனுபவத்தை அடையுமாறு கட்டளை இடப்படவில்லை.

ஆழ்ந்த பார்வையுடன் (தஃபக்குர்) அகப்பார்வையுடன் (பஸீரத்/ முஷாஹதா) கூடிய காட்சியைத் தூண்டும் திருவசனங்களை ஐனுல் யகீனை நோக்கியவை எனலாம்.
இவை இரண்டு வகைப்படும்.

1.படைப்புக்களில் அகப்பார்வை செலுத்தி அதில் இறைவனின் ’அஃப்ஆல்’ என்னும் செயல்பாடுகளைக் காணத் தூண்டும் திருவசனங்கள்:

”ஒட்டகத்தை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா, அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று?
மேலும் வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று,
மேலும் மலைகளை, அவை எவ்வாறு நடப்பட்டிருக்கின்றன என்று,
மேலும் பூமியை, அது எவ்வாறு விரிக்கப்பட்டிருக்கிறது என்று” (88:17-20)

“வானத்தின் வெளியில் கட்டுப்பட்டுப் பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றைத் தாங்கியிருப்பவன் அல்லாஹ்வே அன்றி வேறில்லை” (16:79)

வெறுமனே படைப்புக்களை மட்டும் பார்த்து வரும் மனிதனை அவற்றில் இறைவனின் செயல்பாடுகளைப் பார்க்குமாறு இவ்வசனங்கள் சொல்கின்றன.

2. படைத்தவனாகிய இறைவனை (அகப்பார்வை கொண்டு) தரிசிக்குமாறு சொல்லும் திருவசனங்கள். அதாவது அல்லாஹ்வின் சிஃபாத் என்னும் திருப்பண்புகளையும் உஜூது என்னும் உள்ளமையையும் வெளிப்பாடு (ஜுஹூர்) என்னும் அடிப்படையில் தரிசிக்கச் சொல்லும் திருவசனங்கள்:

”உம் இறைவனின் பக்கம் நோக்குக, எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்று” (25:45)

இத்திருவசனத்தில் நிழல் என்னும் செயப்படுபொருள் (மஃப்ஊல்) மற்றும் நீட்டுதல் என்னும் செயல் (ஃபிஃல்) ஆகியவை குறிப்பிடப் பட்டிருந்தாலும் நோக்கும்படியான கட்டளை இவற்றின் பக்கம் இல்லாது றப்பு – இறைவன் என்னும் செய்பவன் (கர்த்தா – ஃபாயில்) பக்கம் சொல்லப் பட்டுள்ளது. அதாவது கர்த்தா – கர்மம் – கருவி ஆகிய மூன்றில் இவ்வசனம் கர்த்தாவைக் காணுமாறு கட்டளை இடுகிறது.

அதாவது, “நிழலின் பக்கம் நீங்கள் நோக்க வேண்டாமா, அது எவ்வாறு நீட்டப்படுகிறது என்று?” என்பதாக, மஃப்ஊல் (செயப்படுபொருள்) ஆன நிழலை நோக்கியதாக இவ்வசனம் இல்லை. ஆனால் அகப்பார்வை அருளப்படாதவர்கள், பொது நிலையைச் சேர்ந்தவர்கள், இல்முல் யகீன் நிலையில் நிற்பவர்கள் மற்றும் ஐனுல் யகீனில் அஃப்ஆல் என்னும் செயல்பாடுகளின் தரிசன நிலையில் மட்டும் நிற்பவர்கள் இந்தத் திருவசனத்தைத் தாம் நிற்கும் நிலைக்கு வளைத்து இவ்வாறுதான் பொருள் கொள்வார்கள்.

ஹக்குல் யகீன் என்னும் மெய்ஞ்ஞான அனுபவத்தை நோக்கித் தூண்டுகின்ற வசனங்களும் திருமறையில் உள்ளன:

”அல்ல, எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கு (முழுமையாக) அர்ப்பணித்து நற்கருமங்களைச் செய்கிறானோ அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உள்ளது. இத்தகையோர் மீது அச்சமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (2:112)

”நிச்சயமாக நான் என முகத்தை வானங்களையும் பூமியையும் படைத்தவனுக்காகவே உறுதியாக அமைத்துவிட்டேன்” (6:79)

”கூறுக: மெய்யாக என் தொழுகையும் என் தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் அகிலங்களின் ரட்சகனான அல்லாஹ்வுக்கே” (6:162)

”அல்லாஹ்தான் சுருக்குகிறான், விரிவாக்குகிறான்” (2:245)

“நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான், அழச் செய்கிறான்
இன்னும் நிச்சயமாக அவனே மரிக்கச் செய்கிறான், மேலும் உயிர்ப்பிக்கிறான்” (53:43,44)

”அல்லாஹ்விடம் விரைக” (51:50)

“நாம் உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
மேலும் நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்” (94:1,2)

”எனவே, நீர் ஓய்ந்ததும் முயல்வீராக
மேலும், உம் இறைவனிடம் சார்ந்து விடுவீராக” (94:7,8)

(விளக்கத்திற்கு ஓர் உதாரணம்: ஓர் இல்லத்தரசி, நாளெல்லாம் தன் கணவனுக்கும் அந்தக் கணவனைக் கொண்டு பெற்ற தன் பிள்ளைகளுக்குமாகப் பணிவிடை செய்கிறாள். வீட்டைப் பராமரிக்கின்றாள். கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் விருப்பமானபடி உணவு வகைகளைச் சமைக்கின்றாள். இரவு வரை வேலைகள் அவளுக்கு. அதன்பின் ஓய்ந்து உறக்கம் கொள்ளும் சமயம் தன் நேசக் கணவனின் மார்பில் தலை சாய்த்துக் கண் மூடும் அந்தத் தருணம்தான் அவளுக்கு எத்தனை இனிமையானது!)

திருக்குர்ஆனில் இறைவனைப் பற்றிய திருவசனங்களில் பெரும்பான்மை அறிவித்துத் தருபவையே ஆகும். ஏனெனில் ’இல்முல் யகீன்’ என்னும் நிலைதான் மனிதர்களுக்குப் பொதுவானதாக இருக்கின்றது. அதைத் தாண்டி ஐனுல் யகீன் என்னும் நிலையை அடைபவர்கள் அரிது. அதையும் தாண்டி ஹக்குல் யகீன் என்னும் நிலைக்கு வருபவர்கள் அரிதினும் அரிது. சூஃபிகள் என்றும் அவ்லியாக்கள் என்றும் அழைக்கப்படும் இறைநேசர்களே அந்த நிலைகளை அடைகிறார்கள்.


பொதுமக்களுக்கோ மேற்சொன்ன திருவசனங்கள் அனைத்துமே வெறும் ’கீல்’ (வாய்ச்சொல்) ஆக இருக்கின்றன. ஆனால் இறைநேசர்களான சூஃபிகளுக்கோ அவை அனைத்துமே ’ஹால்’ (மனநிலைகள்) ஆக இருக்கின்றன. எனவேதான் அவர்கள் சதா இறைவனின் அனுபவத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

(to be continued...)

Tuesday, July 23, 2013

மனதில் (3) உறுதி வேண்டும் - part 1


இறை நம்பிக்கை என்றால் என்ன?

இதற்குப் பல கோணங்களில் பல விடைகள் இருக்கலாம். உள்ளம் சம்பந்தப்பட்டு இதற்கோர் ஆழமான விடையை நபி(ஸல்) அவர்களின் வாக்கில் காண்கிறோம்.

‘அல்-ஈமானு ஹுவல் யகீன்’ என்கிறார்கள் அவர்கள்.

‘இறைநம்பிக்கை என்பது நிச்சயமாக ’யகீன்’தான்’ என்பது அதன் பொருள்.

யகீன் என்பதை ஆங்கிலத்தில் Conviction, Certainty, Certitude என்றெல்லாம் மொழிபெயர்க்கிறார்கள்.

தமிழில் உறுதி என்றும் தெளிவு என்றும் பொருள் தரப்படுகிறது.

யகீன் என்பது இந்த இரண்டுமே சேர்ந்ததாகும்.

யகீன் = தெளிவு+உறுதி.

ஒரு விஷயத்தைப் பற்றி மனத்தில் உண்டாகும் தெளிவினால் விளையும் மனவுறுதி என்று இதனைக் கூறலாம். ’மனத்திட்பம்’ என்பது இன்னும் அருமையான சொல்லாக இருக்கும்.

சமஸ்கிருதத்தில் ‘பிரத்யக்‌ஷம்’ என்னும் வார்த்தை யகீன் என்பதற்குப் பொருந்தும் என்று கருதுகிறேன். ஊர்ஜிதம் என்பது புழக்க பாஷையில் உள்ளது. அதுவும் ஓகேவாகலாம்.

உள்ளத்தில் தெளிவு எந்தெந்த வகையில் உண்டாகும் என்று கேட்டால் அடியேன் மூன்று என்று முத்திரை காட்டிவிடுவேன்.

[அடடே! சின்முத்திரைக்குப் புதுப்பொருள்: மூன்று தெளிவுகள் உன்னுள் உண்டானால் உன் ஆன்மா இறைவனை அடையும்!]

மூன்று என்று நான் சொல்லும் வரையறை திருக்குர்ஆன் தருவது. ஆம், யகீன் எதனடியாக விளையுமோ அதை வைத்து யகீனை அது மூன்றாக வகைப்படுத்துகிறது.

இல்முல் யகீன்: அறிவால் (கல்வியால்) உண்டாகும் மனத்திட்பம்.
ஐனுல் யகீன்: காட்சியால் உண்டாகும் மனத்திட்பம்
ஹக்குல் யகீன்: அனுபவத்தால் உண்டாகும் மனத்திட்பம்.

இந்த மூன்று யகீன்களும் சூஃபிகளின் வட்டத்தில் மரபாக ஒரு உவமானம் சொல்லி விளக்கப்படுகின்றன.

புகை தெரிகின்றதை வைத்து அங்கே நெருப்பு இருக்கின்றது என்று உறுதி கொள்வது. நெருப்பின்றிப் புகையாது என்னும் அறிவு இங்கே உறுதியின் அடிப்படையாகிறது.

புகை வரும் இடத்தை நோக்கி ஒருவன் செல்கிறான். அங்கே நெருப்பு எரிந்து கொண்டிருப்பதைக் கண்களால் பார்க்கிறான். இங்கே காட்சி என்பது உறுதியின் அடிப்படையாகின்றது.

இன்னும் அருகில் நெருங்குகிறான். நெருப்பின் கதகதப்பை உணர்கிறான். இன்னும் நெருங்குகிறான். அதன் உஷ்ணத்தை, அனலை உணர்கிறான். இங்கே அனுபவம் என்பது உறுதியின் அடிப்படையாகிறது.

இன்னொரு உவமானம். பாரசீக சூஃபிக் கவிஞர் ஃபரீதுத்தீன் அத்தார் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:

சில விட்டில்கள் ஒன்றுகூடிப் பேசின. அரசனின் மாளிகையில் விளக்கு ஒன்று இருப்பதாகவும். அதனுள் பிரகாசமான சுடர் ஒன்று இருப்பதாகவும் அவற்றின் வேத நூலில் எழுதப்பட்டிருப்பதை அறிகின்றன. இந்த ‘அறிவு’ சில விட்டில்களின் இதயங்களில் உணர்வைத் தூண்டுகிறது. எப்படியேனும் அந்த விளக்கை தரிசித்துவிட வேண்டும் என்று அவை முடிவெடுக்கின்றன. அந்த அரண்மனைக்குப் புறப்பட்டுச் செல்கின்றன.

அரண்மனையில் உள்ள ஓர் அறையின் நடுவில் அந்த பிரகாசமான விளக்கை அவை காண்கின்றன. அந்த விளக்கின் காட்சியில் தம்மையே மறந்து பேரானந்தம் அடைகின்றன. ஒரு விட்டில் அந்த விளக்கைப் பற்றி மிகப்பெரிய காவியம் பாடுகின்றது. இன்னொரு விட்டில் அந்த விளக்கின் அழகை தாம் படித்திருந்த வேதத்தின் செய்திகளுடன் ஒப்பிட்டு வருணித்து உரைநூல் ஒன்று வரைகிறது.

அவற்றில் மிகச்சில விட்டில்கள் அந்த விளக்கின் அழகால் ஈர்க்கப்படுகின்றன. பாய்ந்து சென்று அந்த விளக்கின் ஜுவாலைக்குள் தன்னையே அர்ப்பணிக்கின்றன. மறுபக்கம் அவை தீயின் பொறியாய்க் கனன்றுகொண்டு வந்து விழுகின்றன. ஏனைய விட்டில்கள் அவற்றைப் பரிதாபமாகப் பார்க்கின்றன. ஆனால் அவற்றால் அந்த விட்டில்களின் பக்கத்தில் நெருங்க முடியவில்லை. விளக்கில் எரிந்த விட்டில்களின் அருகில் இருந்தபடி விளக்குச் சுடரின் அனலை அவை கொஞ்சம் அனுபவித்துக் கொள்கின்றன. தாமும் விளக்கை அனுபவித்துவிட்டதாக அவை மகிழ்கின்றன.

இன்னொரு உவமானம்.
இளைஞன் ஒருவனுக்கு அவனின் பெற்றோர்கள் பெண் பார்க்கிறார்கள். இன்னார் வீட்டில் ஒரு பெண் இருக்கின்றாள். நல்ல அழகி என்று பேசிக்கொள்கிறார்கள். அப்பெண்ணின் லட்சணங்களை அவன் கேள்விப்படுகிறான். பார்த்தவர்கள் சொன்னதிலிருந்து அவனுக்கு ஒரு மனக்கருத்து உண்டாகிறது. ஆனால் இந்த மனப்பிம்பம் அவளின் அசலான உருவமாக இருக்க முடியுமா?

நிச்சயமும் செய்தாகிவிடுகிறது. மணப்பெண்ணை அவன் ஒருமுறை நேரில் பார்க்க அனுமதிக்கின்றார்கள். பார்க்கிறான். தன் கற்பனையை எண்ணி வெட்கப்படுகிறான்.

திருமணம் நடந்தது. அவளை அனுபவித்து இன்பம் அடைகின்றான். அந்த அனுபவம் அவனுக்கே உரியதுதான். யாரும் யாருக்கும் சொல்லிக்கொள்ள முடியாத, உயிர்கள் அனைத்தும் அறிந்த ரகசியம் அது.

இந்த மூன்று யகீன்களும் மூன்று வகை மனிதர்களை உருவாக்குகின்றன.

அறிவிலிருந்து யகீன் அடைந்தவர் ஆலிம் (அறிஞர்)
காட்சியிலிருந்து யகீன் அடைந்தவர் ஆரிஃப் (ஞானி)
அனுபவத்திலிருந்து யகீன் அடைந்தவர் ஆஷிக் (காதலர்)

இப்லீஸ் (ஷைத்தான்) இறைவனை அறிந்த ஆலிமாகவும், இறைவனைக் கண்ட ஆரிஃபாகவும் இருந்தான். ஆனால் இறைவனை அனுபவித்த ஆஷிக்காக இல்லை.

மனிதன் இந்த நிலையில் அனைத்துப் படைப்பினங்களை விடவும் மேலான நிலையில் வைக்கப்பட்டான். ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நிலையை அல்லாஹ் சொல்கிறான்:

”அவரை நான் செவ்வையாக உருவாக்கி என் உயிரிலிருந்து அவருக்குள் ஊதியபோது, ‘அவருக்குச் சிரம் பணியுங்கள் என்றேன்.” (15:29; 38:72)

இறைவன் தன் உயிரிலிருந்து ஊதியது அவர் உடலெல்லாம் பரவியது. அந்த நிலையில் ஆதம் (அலை) சொன்ன வாசகம் ‘அல்ஹம்துலில்லாஹ்’ – எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அந்த வாசகமே திருக்குர்ஆனின் திறப்பாக (ஃபாத்திஹா) முதல் திருவசனமாக அமைக்கப்பட்டுள்ளது: “அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்” – அகிலங்கள் அனைத்தின் ரட்சகனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மனிதன் பிரபஞ்சத்தின் குறியீடாக இருக்கிறான்.

அதன்பின் ஆதம் (அலை) தன் ரட்சகனைக் கண்டார்கள். அதன்பின் இறைவன் அவர்களுக்குக் கற்பித்தான்.

“அவனே மனிதனைப் படைத்தான்
அவனே அவருக்கு விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்”
(55:3,4)

”எல்லாப் பெயர்களையும் ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான்” (2:31)

எனவே, மனிதனின் உயர்வு என்னவெனில், அவன் முதலில் ஆஷிக்காக இருந்து பின்பு ஆரிஃபாகி அதன் பின் ஆலிம் ஆனவன்.

ஆதம் (அலை) அவர்கள் இறைவன் தன் உயிரிலிருந்து தமக்குள் ஊதியதை முதலில் அனுபவித்தார். அதன் பின்னர்தான் தன் விலாவிலிருந்து தனக்காகப் படைக்கப்பட்ட பெண்ணான ஹவ்வா (அலை) அவர்களை அனுபவித்தார்.

பேரின்பத்தின் சாயலாக அவருக்குச் சிற்றின்பம் தரப்பட்டது.

‘உயிர் ஊதுதல் என்னும் அந்த மூல நிகழ்வின் நினைவு கூர்தலாகவே ஆண் பெண்ணுடன் இணைதல் இருக்கிறது’ என்பது இப்னுல் அரபி (ரஹ்) அவர்களின் கருத்து. இந்த நியாபகமூட்டலில் நிகழாத தாம்பத்யம் அதன் ஆன்மிக நோக்கத்தை எட்டாது.

’அவரை நான் செவ்வையாக்கி அவருக்குள் என் உயிரிலிருந்து ஊதிய போது...’
உயிர் ஊதப்படும் முன் உடல் செவ்வையாக்கப் பட்டதன் சாயலும் பெண்ணை நேசிப்பதில் ஆண் செய்ய வேண்டிய கடமை ஆகிறது.

’மனைவியுடன் கூடும் முன் கணவன் அவளுக்குத் தூது அனுப்பவும்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். தூது அனுப்புவது என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் வினவினார்கள். ‘முத்தங்கள் பொழிவது’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (’திப்புன் நபவி’ – இப்னு கய்யிம் அல்-ஜவ்ஸிய்யா) இந்தக் குறிப்பைச் சிந்தித்துக் கொள்க.

‘உலகில் நீ எப்படிக் காதலிக்கின்றாயோ
அதற்குத் தகுமாறே
மறுமையில் இறைவன்
உன்னிடம் நடந்துகொள்வான்’
என்கிறார் மௌலானா ரூமி (ரஹ்).


ஆதம் (அலை) உயிரூட்டப்பட்டதன் சாயலாய் உள்ள ஆண் பெண் இணைவு நிகழ்வின் வழியாகவே மனித சந்ததிகள் தோன்றுகின்றன. எனவே, ’மனிதன் இறைவனின் ரகசியம் ஆவான்’ என்னும் கருத்தின்படி நாமெல்லாம் இறை-ரகசியத்தின் பிரதிகளாக இருக்கிறோம்.

(to be continued...)