Sunday, July 28, 2013

மனதில் (3) உறுதி வேண்டும் - part3

மூன்று வகை யகீன்களையும் சொல்லும் திருக்குர்ஆன் தன்னைக் குறிப்பாக எதனுடன் அடையாளப்படுத்திக் காட்டுகிறது என்பதைப் பார்ப்போம்:

“மேலும் நிச்சயமாக அது மெய்த் திட்பமாகும்” (வ இன்னஹூ ல-ஹக்குல் யகீன் – 69:51)

திருக்குர்ஆன் தன்னை ’ஹக்குல் யகீன்’ என்றே அழைத்துக் கொள்கிறது. அதாவது அது இறையனுபவ நூலாகும்.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் “முஹ்யீ” (உயிரளிப்பவன்) என்பதும் ஒன்று.

“இது ஏனெனில்
நிச்சயமாக அல்லாஹ்வே சத்தியம்
(தாலிக பிஅன்னல்லாஹ ஹுவல் ஹக்கு)
நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கிறான்
(வ அன்னஹு யுஹ்யில் மவ்த்தா)”
(22:6)

இத்திருவசனத்தின் மேற்கண்ட இரண்டு பகுதிகள் இரண்டு சூஃபி மகான்களை – இறை நேசர்களை என் நினைவில் கொண்டு வருகின்றன. அவ்விருவரும் இறையனுபவத்தின் இருவேறு நிலைகளில் நின்று செயல்பட்டவர்கள்.

அவ்விருவரில் ஒருவரான மன்சூர் அல்-ஹல்லாஜ் (ரஹ்) இறையனுபவத்தில் தன்னை மறந்த நிலையான ‘மஹ்வ்’ என்னும் நிலையில் மூழ்கியவராக இருந்தார். அல்லாஹ் அவரை ‘அனல் ஹக்’ (நானே சத்தியம்) என்று சொல்ல வைத்தான்.

அவ்விருவரில் மற்றவரான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் இறையனுபவங்களில் தன்னுணர்வைத் தக்க வைத்திருக்கும் ‘ஸஹ்வ்’ என்னும் நிலையில் நிற்பவராக இருந்தார். அல்லாஹ் அவர்களை ‘கும் பிஇத்னீ’ (என் கட்டளையைக் கொண்டு எழு) என்று சொல்லவைத்து மரித்த பிணத்தை உயிருடன் எழ வைத்தான். இஃது அன்னாரின் கராமாத்துக்களில் (அற்புதங்களில்) ஒன்றாக விதந்துரைக்கப் படுகின்றது.

”நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கிறான்” (22:6)
“நிச்சயமாக இறந்தோரை நாமே உயிர்ப்பிக்கிறோம்” (36:12)
இந்த அறிவு ’இல்முல் யகீன்’ என்னும் நிலை.

இப்றாஹீம் (அலை) இதனைக் காட்சியாகவே காணவேண்டும் என்று கேட்டார்கள். அந்த ஐனுல் யகீன் என்னும் நிலை அவர்களுக்கு அருளப்பட்டது.

“ஹக்குல் யகீன்” ஆன திருக்குர்ஆனின் வழியே இறையனுபவங்களில் மூழ்கியவருக்கு அது அனுபவத்திலேயே கண்டடைவதாக உள்ளது.

ஒவ்வொரு கணமும் இறைவனிடமிருந்து என்னில் ஜீவன் (ஹயாத்) வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் அவன் என்னை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறான் என்பதை உணர்ந்து திளைப்பது அந்த அனுபவத்தின் ஆரம்ப நிலையாகும்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் வழியே அல்லாஹ் நிகழ்த்திய கராமத் (அற்புதம்) – அதாவது இறந்தவரை உயிர்ப்பிப்பதற்கு இறைவனின் கருவியாகத் தான் ஆகிவிடும் நிலை அந்த அனுபவத்தின் உச்ச நிலையாகும்.

நபி ஈசா (அலை) [ஏசுநாதர்] இந்த அடிப்படையில் நிகழ்த்திய இரண்டு அற்புதங்களை குர்ஆன் பதிவுசெய்கின்றது:

1.”மேலும், என் உத்தரவைக் கொண்டு நீர் களிமண்ணினால் பறவை வடிவத்தைப் போல் படைத்து (வ இத் தஃக்லுகு மினத் தீனி கஹையத்தித் தைரி பி-இத்னீ) அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவை ஆகியது (ஃபதன்ஃபுஃகு ஃபீஹா ஃபதகூனு தைரன்(ம்) பி-இத்னீ )” (5:110)

2.“(மர்யமுடைய மகன் ஈசாவே!) இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறையிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைவு கூர்க) (வ இத் துஃக்ரிஜுல் மவ்த்தா பி-இத்னீ )” (5:110)

இந்தத் திருவசனத்தில் ஈசா நபியிடம் அல்லாஹ் உரையாடுகின்றான். எனவே “பி-இத்னீ” (என் உத்தரவைக் கொண்டு) என்பதை அல்லாஹ்வின் பக்கம் சார்த்திப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வுகள் ஈசா (அலை) அவர்களின் வழியே அல்லாஹ் நிகழ்த்திய அற்புதங்கள் (முஃஜிஸா – இறைத்தூதர்கள் வழி நிகழும் அற்புதங்கள்) ஆகும்.

இறைத்தூதர்களும் இறைநேசர்களும் இறைவனின் கருவிகள் ஆவர். அவர்களின் வழியே நிகழும் அற்புதங்கள் (இயற்கை வழமை இகந்த நிகழ்வுகள், மீவியற்கை நிகழ்வுகள்) உண்மையில் இறைவன் நிகழ்த்துபவைதான். அவற்றை இறைவனின் கருவிகளான இறைத்தூதர்களும் இறைநேசர்களும் சுயமாகவே நிகழ்த்துகிறார்கள் என்று நினைப்பது தவறான புரிதலாகும்.

ஈசா (அலை) இறைவனின் கருவியாக இருந்தார்கள்.

“மர்யமின் மகன் மஸீஹ் (என்னும் ஈசா (அலை)) இறைவனின் தூதரே அன்றி வேறில்லை” (மல் மஸீஹுப்னு மர்யம இல்லா ரசூலுன் – 5:75)

இறைவனின் கருவியாக அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களின் வழியே இறைவனின் உத்தரவு வெளியாவது தன்னிலையாகவும் இருக்கலாம் படர்க்கையாக்வும் இருக்கலாம். அதாவது ‘கும் பி-இத்னில்லாஹ்’ (அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு) என்று வெளிப்பட்டாலும் ‘கும் பி-இத்னீ’ (என் உத்தரவைக் கொண்டு) என்று வெளிப்பட்டாலும் அது அல்லாஹ்வின் உத்தரவுதான்.

மூசா (அலை) அவர்கள் தீப்பிடித்த புதர் ஒன்றிலிருந்து நெருப்புக் கொள்ளியை எடுக்கச் சென்ற போது அல்லாஹ் அந்த புதரின் வழியே அவர்களை அழைத்துப் பேசினான். பேசுவது புதர் அல்ல, அல்லாஹ்தான் என்பதை மூசா நபி புரிந்துகொண்டார்கள்.

“நிச்சயமாக நான்தான் அல்லாஹ் (இன்னனீ அனல்லாஹ்); என்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை (லா இலாஹ இல்லா அன); என்னையே வணங்குவீராக (ஃபஃபுதுனீ); என்னை தியானிப்பதற்காகத் தொழுகையைப் பேணுவீராக (வ அகிமிஸ் ஸலாத்த லிதிக்ரீ)” (20:14)

இந்த வாக்கியங்கள் எரியும் புதர் பேசியவை அல்ல. அந்தப் புதரின் வழியே அல்லாஹ் பேசியவை. இதில் உள்ள ’நான்’ (அனா) அந்தப் புதருக்குச் சொந்தமான சுயம் அல்ல, அல்லாஹ்வின் சுயமாகும்.

அதேபோல், மன்சூர் அல்-ஹல்லாஜ் (ரஹ்) அவர்களின் வழியே வெளிப்பட்ட ‘அனல் ஹக்’ என்பதில் உள்ள ’நான்’ (அனா) அல்லாஹ்வுக்கு உரியதாகும்.

அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் உத்தரவில் இருந்த நான் (இத்னீ – என் உத்தரவு) அல்லாஹ்வுக்குச் சொந்தமானதாகும்.

புதர், மன்சூர் அல்-ஹல்லாஜ், அப்துல் காதிர் ஜீலானீ, ஏசுநாதர் எல்லாம் இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவிகளே. சுயம் அவனுடையதுதான்.

புதரிலிருந்து அல்லாஹ் பேசியதால் அது மூசா நபியை விடவும் அந்தஸ்தில் மேலானதாகி விடாது. நபி நபிதான், புதர் புதர்தான்.

அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் ஈசா நபியின் அற்புதத்தைத் தான் செய்து காட்டியதால் அவர்கள் ஈசா நபிக்கு இணையானவர்கள் அல்ல. நபி (இறைத்தூதர்) நபிதான், வலீ (இறைநேசர்) வலீதான். இறைநேசரின் உச்சமான அந்தஸ்தும்கூட எந்த இறைத்தூதரின் ஆரம்ப நிலையையும் தொட்டுவிட இயலாது.

ஈசா நபி நிகழ்த்திய அற்புதங்களைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் நிகழ்த்தியதாக திருக்குர்ஆனில் எங்கும் இல்லை. ஆனால் அத்தனை நபிமார்களுக்கும் தலைவரே அவர்கள்தான்.

”ஹக்குல் யகீன்” என்னும் நிலையை அந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் வழியே பொங்கும் அருட்கொடையாகவே (ஃபைஸானே முஹம்மதீ) இறைத்தூதர்களும் இறைநேசர்களும் அடைகின்றார்கள்.

எனவேதான் மேற்கண்ட அற்புத நிகழ்வில் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: “அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களின் சேவகன் நான்.”

’ஹக்குல் யகீன்’ ஆன திருக்குர்ஆன் இடம்பெறும் வழிபாடாகத் தொழுகை உள்ளது. அந்தத் தொழுகை பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

”நிச்சயமாகத் தொழுகையில் அனுபவம் உள்ளது” (இன்ன ஃபிஸ் ஸலாத்தி ஷுக்லா – நூல்: புகாரி:1216, 3875; முஸ்லிம்: 936)

தொழுகையில் ருகூ நிலையிலிருந்து எழும் தருணம் பற்றி அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: ‘அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையிலான திரை நீக்கப்பட்டதன் நோக்கத்தை அடியான் அடைந்துகொள்ளும் தருணம்.’

அந்தத் தருணத்தில் ஓதப்படும் மந்திரம்: “சமிஅல்லாஹு லிமன் ஹமித(ஹ்)” (தன்னைப் புகழ்வோரின் புகழ்ச்சியை அல்லாஹ் செவியேற்கிறான்).

அந்த நிலையின் மேன்மையை அபூ மூசா அல்-அஷ்அரீ (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் ‘சமிஅல்லாஹு லிமன் ஹமித(ஹ்)’ என்று கூறினான்” (ஃப இன்னல்லாஹ கால அலா லிஸானி நபிய்ய்ஹி சமிஅல்லாஹு லிமன் ஹமித(ஹ்) - நூல்: முஸ்லிம்:680)

அடியான் இறைவனுடைய பேச்சின் கருவியாக இயங்கும் தருணம் அது. நாக்கு அடியானுடையது வாக்கு இறைவனுடையது. அந்த நிலையின் ஞானத்தையும் அனுபவத்தையும் யாருக்கு அல்லாஹ் எந்த அளவு அருளுகின்றானோ அவர்களின் ஆன்மிக அந்தஸ்தும் அந்த அளவு உயர்ந்துவிடுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் விஷயத்தில் சொன்னார்கள் “உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்” (அல்-ஹக்கு யன்திகு அலா லிசானில் உமர் – அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: திர்மிதி)

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “இறைவிசுவாசியின் அகப்பார்வையை அஞ்சிக்கொள். நிச்சயமாக அவர் அல்லாவ்ஹின் ஒளியால் பார்க்கிறார்” (இத்தகூ ஃபிராசத்தல் முஃமினி ஃப-இன்னஹு யன்ழுரு பி-நூரில்லாஹ் – அறிவிப்பாளர்: அபூ சயீதுல் குத்ரி (ரலி) நூல்: திர்மிதி:3127)

’விலாயத்’ என்னும் இறைநேசத்தின் இந்த நிலை பற்றி அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்:
“நான் அவரை நேசிக்கும்போது (ஃப இதா அஹ்பப்துஹு)
அவரின் கேள்வியாக நானாகிறேன் (குன்து சம்அஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் கேட்கிறார் (யஸ்மஉ பிஹி)
அவரின் பார்வையாக (நானாகிறேன்) (வ பஸருஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் பார்க்கிறார் (யுப்ஸிரு பிஹி)
அவரின் கையாக (நானாகிறேன்) (வ யதஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் பிடிக்கிறார் (யுப்திஷு பிஹா)
அவரின் காலாக (நானாகிறேன்) (வ ரிஜ்லஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் நடக்கிறார் (யம்ஷீ பிஹா)”
(அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹ் புகாரி:கிதாபுர் ரிகாக்: 6502)

அல்லாஹ்விடம் இத்தகைய இறைநம்பிக்கையாளரின் மேன்மை என்ன என்பதை நபி(ஸல்) அவர்கள் ஓரிடத்தில் சொல்கிறார்கள்: “இறைநம்பிக்கையாளர் (ஆதி இறையில்லமாம்) ‘கஃபா’வை விடவும் மதிப்புடையவர்” (அல்-முஃமினு அக்ரம ஹுர்மத்தம் மினல் கஃபா – நூல்: இப்னு மாஜா, மிஷ்காத்தெ மஸாபீஹ்:பாகம்1:44)

மேற்சொன்ன செய்திகளெல்லாம் ’ஹக்குல் யகீன்’ என்னும் நிலையில் வாழுகின்ற இறைநேசர்களின் மேன்மையை எடுத்துரைப்பவையே ஆகும்.

‘நிச்சயமாகத் தொழுகையில் அனுபவம் இருக்கின்றது’ (இன்ன ஃபிஸ் ஸலாத்தி ஷுக்லா) என்று நபிமொழியில் சுட்டப்பட்டுள்ள அனுபவம் (ஷுக்ல்) என்ன என்பதற்கு மேற்சொன்ன ஹதீஸ் குத்ஸி விளக்கம் தருகின்றது: ”நான் அவரை நேசிக்கும்போது (ஃப இதா அஹ்பப்துஹு)” என்று அல்லாஹ் சொல்கிறான். எனவே தொழுகையில் உண்டாகும் ஹக்குல் யகீன் – அனுபவ உறுதி என்பது முஹப்பத் என்னும் நேசத்தின் உறுதியாகும்.

”இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியானவர்கள்” (வல்லதீன ஆமனூ அஷத்த ஹுப்பன் லில்லாஹி – 2:165)

நோன்பிலும் அந்த ஹக்குல் யகீன் என்னும் அனுபவமே நோக்கமாக இருக்கின்றது என்பதை அல்லாஹ் குறிப்பிடுகின்றான் (ஹதீஸ் குத்ஸி): “நோன்பு எனது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்” (அஸ்ஸவ்மு லீ வ அனா அஜ்ஸீ பிஹி – அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்:புகாரி:1894)

இறைநேசரை இறைவன் நேசிக்கும்போது அவனே அவரின் கேள்வியாக, பேச்சாக, கையாக, காலாக ஆகிவிடுகிறான் என்று ஹதீஸ் குத்ஸியில் கூறப்பட்டுள்ளதன் ஞானத்தில் சூஃபிகள் இந்த ஹதீஸ் குத்ஸியை விளக்குகிறார்கள்: ‘நானே கூலி கொடுப்பேன்’ என்பதன் பொருள் ‘நானே கூலியாகி விடுகிறேன்’ என்பதாகும். அதாவது இறைநேசர் அவனையே அடைந்துகொள்கிறார்.

இறைக்காதல் என்பது ஆழங்காண இயலாத பல நுட்பங்களைக் கொண்டதாக இருக்கிறது. இறைக்காதலின் அனுபவங்கள் என்பவை எண்ணற்ற வண்ணங்கள் ஆகும். வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று பல விகிதங்களில் கலந்து பல நிறப்பிரிகைகளில் தம்மை வெளிப்படுத்துகின்றன. திறமை மிக்க ஓவியன் அவற்றைக் கொண்டு தனித்தன்மை கொண்ட பல ஓவியங்களைத் தீட்டுகிறான்.

அதுபோல், தன் நேசத்தில் இறைவன் தரும் அனுபவங்கள் ஒவ்வொரு இறைநேசருக்கும் வேறுபடுகின்றது. ஒவ்வொரு இறைநேசரையும் தன் நேசத்தின் ரகசியக் களஞ்சியமாக அவன் ஆக்கிவிடுகிறான்.

வெள்ளைத் தாளையே அல்லது திரையையே ஓவியன் தன் வண்ணங்களைத் தீட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கிறான். உள்ளத்தை சலவை செய்து வெண்மை ஆக்கியவர்களையே அல்லாஹ் தன் நேசத்தின் வண்ணங்களைப் பொழிவதற்குத் தேர்ந்தெடுக்கிறான்.

“அல்லாஹ்வின் வண்ணம் (சிப்கதல்லாஹி)
வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வை விட அழகன் யார்?
(வ மன் அஹ்சனு மினல்லாஹி சிப்கா)
அவனையே நாங்கள் வணங்குகிறோம்
(நஹ்னு லஹூ ஆபிதூன்)”
(2:138)


உள்ளத்தை வெள்ளை செய்வோம். இறைவன் தன் நேசத்தின் வண்ணத்தை அள்ளித் தருவான்.

No comments:

Post a Comment