Sunday, August 4, 2013

நோன்பைத் திறந்து... - part 1


இவ்வருட ரமலானின் ஆரம்பத்தில் இருந்தே மனம் நோன்பு வைக்கவும் திறக்கவும் சொல்லப்படும் மந்திரங்களின் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டது.

மரபாகச் சொல்லப்பட்டு வரும் மந்திரங்கள் ஆதாரமானவை அல்ல என்று ஒரு சிலர் ஆட்சேபனை செய்கின்றார்கள். நோன்பு வைக்க எந்த மந்திரமும் சொல்லத் தேவை இல்லை என்றுகூட சிலர் சொன்னார்கள். உண்மைதான். யார் இல்லை என்றார்கள்?

அலசிப் பார்த்ததில் மரபாகச் சொல்லப்பட்டு வரும் இந்த மந்திரங்கள் ஹதீஸ்களில் காணப்படும் மந்திரங்கள் சிலவற்றை ஒன்றாகக் கலந்து கோர்வை செய்யப்பட்டவை என்பது தெரிந்தது. அப்படிக் கோர்வை செய்தவர்கள் அஞ்ஞானிகள் அல்லர் என்பதும் புலப்பட்டது.

நோன்பு நோற்பதற்காக ஓதப்படும் மந்திரம் என்று ஹதீஸில் காணப்படுவது:
“வபி ஸவ்ம கதின் நவைத்து மின் ஷஹ்ரி ரமலான்” (ரமலான் மாதத்திலிருந்து பகலின் நோன்பிற்கு ’நிய்யத்’ செய்கிறேன்) [நூல்: அபூ தாவூத்]

இந்த ஹதீஸின் அடிப்படையில் உருவான ஒரு வாசகத்தைதான் மரபாக இங்கே ஓதி வருகின்றார்கள்: ”நவைத்து ஸவ்ம கதின் அன் அதாயி ஃபர்ளி ரமலான ஹாதிஹிஸ் ஸனத்தி லில்லாஹி தஆலா” (இவ்வருட ரமலானின் கடமையான நோன்பை பணிவுடன் பகலில் அல்லாஹ்வுக்காக நோற்க நிய்யத் செய்கிறேன்)

மாலை அந்திப் பொழுதில் நோன்பினை முடிக்கும்போது (இஃப்தார்) ஓதப்படும் மந்திரமாக ஹதீஸில் உள்ளது:
அல்லாஹும்ம இன்னீ லக ஸும்து வபிக ஆமன்து வஅலா ரிஸ்கிக அஃப்தர்த்து” (அல்லாஹ்வே! நிச்சயமாக நான் நோன்பு வைத்தேன், மேலும் உன்னையே நம்பினேன், மேலும் உன் இரணத்தின் மீதே நோன்பைத் திறக்கிறேன்) [நூல்: அபூதாவூத்: 2358]

இம்மந்திரத்தின் இடையே ‘வஇலைக்க தவக்கல்த்து’ (மேலும் உன்னிடமே பொறுப்பு வைத்தேன்) என்பதும் இணைக்கப்பட்டு மரபாக ஓதப்பட்டு வருகின்றது. மேலும் இதன் இறுதியில் “ஃபதகப்பல் மின்னீ” (என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக) என்று ஓதப்படுகின்றது. அதன் முகாந்திரம் பின்வரும் ஹதீஸ் ஆகும்:

உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”ரமலான் நெருங்கும் காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குப் பின்வருமாறு ஓதும்படிக் கற்றுத்தந்தார்கள்: ”அல்லாஹ்வே! ரமலானுக்கு எங்களைப் பாதுகாப்பாயாக, ரமலானை எங்களுக்குப் பாதுகாப்பாயாக; என்னிடமிருந்து அதனை நீ ஏற்றுக் கொள்வாயாக!” (அல்லாஹும்ம சல்லிம்னீ லிரமலான வ சல்லிம் ரமலான லீ வ தசல்லம்ஹு மின்னீ முதகப்பலா – நூல்: தபரானீ 912, 913; கன்ஸுல் உம்மால்)

நோன்பு வைப்பதற்கு சொல்லப்படும் மந்திரத்தில் ’நவைத்து’ (நிய்யத் செய்கிறேன்) என்று வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘இன்னமல் அஃமாலு பிந்நிய்யாத்’ (செயல்கள் அனைத்தும் நிய்யத்துக்களின் படியே அமைகின்றன). [அறிவிப்பாளர்: உமர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்]

நிய்யத் என்னும் சொல் ஆங்கிலத்தில் INTENTION என்றும் தமிழில் எண்ணம் என்றும் மொழிபெயர்க்கப் படுகின்றது. ஆனால் எண்ணம் என்னும் சொல் அத்தனை சரியானதாகப் படவில்லை. ஏனெனில் உள்ளத்தின் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட சொற்கள் அறபியில் நிறைய உள்ளன:

ஃகயால் – கற்பனை – Imagination; திக்ரு – நியாபகம் – Remembrance; ஃபிக்ரு – சிந்தனை – thinking, contemplation; ழன்ன் – அனுமானம், கருத்து – hypothesis, postulation; ரைய் – சுயக்கருத்து – opinion; இராதத் – நாட்டம் – will. வேண்டாம், மொழிச் சிக்கலில் இறங்கினால் நம் இழையைத் தவரவிட்டு விடுவோம்.

ஆனால், நிய்யத் என்பதற்கு ‘எண்ணம்’ என்பதை விடவும் ‘தேட்டம்’ என்னும் சொல் பொருத்தமானது. ஏனெனில் நிய்யத் என்பது ஒரு துஆ (பிரார்த்தனை), கோரிக்கை (இக்திளா). அதில் என் இயலாமை (இஜ்ஸ்) வெளிப்படுகின்றது.

நோன்பு வைப்பதற்கான மந்திரத்தில் ’நவைத்து’ – ’நான் நிய்யத்திக்கிறேன்’ என்றே உள்ளது. நோன்பிற்காக இறைவனிடத்தில் ‘நான்’ வைக்கும் கோரிக்கை அது. இந்தக் கோரிக்கையை அவனிடம் வைக்கும் என்னுடைய ’நான்’ (அனிய்யத் – ego) என்பது எதார்த்தத்தில் அவனுடைய அனிய்யத்தின் நிழல்தான். இது ’இளாஃபீ அனா’ (உள்ளமையற்ற சுயத்தின் தன்னுணர்வு) ஆகும்.

’நவைத்து ஸவ்ம’ – நோன்பு வைக்க ’நிய்யத்’திக்கிறேன். அதாவது நோன்பை நான் வைக்க முடியாது. என்னில் நோன்பை அவன்தான் வைக்க வேண்டும்.

நோன்பு பற்றிய பிரபலமான ஹதீஸ் குத்ஸி ஒன்றை கவனியுங்கள்:
“நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: அல்லாஹு தஆலா கூறுகின்றான்: ‘நோன்பு என்னுடையயது, அதற்கு நானே சன்மானம் தருகின்றேன். நோன்பாளி அவனது இச்சையையும் அவனது உணவையும் அவனது குடிப்பையும் எனக்காக தவிர்த்து விடுகிறான். நோன்பு என்பது ஒரு கவசம். நோன்பாளிக்கு இரண்டு இன்பங்கள் உள்ளன: ஒன்று அவன் நோன்பைத் திறக்கும் போது, இன்னொன்று அவன் தன் இரட்சகனைச் சந்திக்கும்போது. நோன்பாளியின் வாயின் மாறிய வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடவும் நறுமணமானது.” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயீ, இப்னு மாஜா)

அஸ்ஸவ்மு லீ” (நோன்பு என்னுடையது) என்கிறான் அல்லாஹ் அதாவது, உண்ணாமல் பருகாமல் இருப்பது அல்லாஹ்வின் நிலை. உணவும் குடிப்பும் அவனுக்குத் தேவை இல்லை. அந்த ஹால் (நிலை) நம்மில் பிரதிபலிப்பது நோன்பு. அதை அவன்தான் நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.

இந்த வகையில் நோன்பு என்பது அல்லாஹ்வில் அடியானின் ’நான்’ அழிந்து போகும் ஃபனா ஃபில்லாஹ் என்னும் நிலையாகும். அழிந்து போதல் என்பதன் கருத்து இல்லாமல் ஆதல் அல்ல. மறைந்து போதல் ஆகும். இருளும் ஒளியும் போல. ஒளி வந்ததும் இருள் மறைந்துவிடுகிறது. ஆனால் இருள் அங்கேதான் இருக்கிறது. ஒளி அதனை மறைத்துத் தன்னைக் காட்டுகின்றது. அல்லாஹ்வின் நிலை நம்மில் பிரதிபலிப்பது அதனைப் போன்றதே (பிலா தஷ்பீஹ்)

அடியானின் ‘நான்’ சுயமாக, அதுவாகவே ஃபனா ஆக முடியாது. அல்லாஹ்தான் தன்னில் அதை அழிக்க வேண்டும். எனவேதான் ’நான் நோன்பு வைக்கிறேன்’ (அனா அஸூமு) என்று சொல்லாமல் ’நவைத்து ஸவ்ம’ என்று நோன்பிற்கான தேட்டத்தை, கோரிக்கையை முன் வைக்கிறேன்.

நோன்பில் அடியான் அனுபவிக்க வேண்டிய தத்துவம் பின்வரும் திருவசனங்களின் பொருளைத்தான்:

“அதன் மீதுள்ள அனைத்தும் அழிந்துவிடும்
பின், மகத்துவமும் கண்ணியமும் மிக்க
நும் ரட்சகனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும்”
(குல்லு மன் அலைஹா ஃபான்;
வ யப்கா வஜ்ஹி றப்புக துல் ஜலாலி வல் இக்ராம்
-55:26, 27)

ஃபனா ஆகும் படைப்புக்கள் அப்படியே இல்லாமல் ஆகிவிடுவதில்லை. மீண்டும் உள்ளமையில் கொண்டுவரப் படுகின்றன. சொர்க்கவாசிகளுக்கு அருளப்படும் உடல்களின் அமைப்பு இம்மையில் அவர்களுக்கு இருந்த உடலமைப்பினும் வேறுபட்டது. மாறா இளமை. அதற்குக் கழிவுகள் இல்லை. வியர்வையோ கஸ்தூரி மணம்.

இம்மையுலகம் ’தாருல் ஃபனா’ (அழியும் உலகம்) என்றும் மறுமையுலகம் ‘தாருல் பகா’ (நிலைத்திருக்கும் உலகம்) என்றும் சொல்லப்படுகின்றன.

அல்லாஹ்வில் ஃபனா ஆகிவிட்ட ’நான்’ என்பது அவனால் மீண்டும் நிலைப்படுத்தப் படுகின்றபோது அதன் அமைப்பே மாறிவிடுகின்றது. அல்லாஹ்வைக் கொண்டு அவனின் பொருத்தத்தில் இருக்கும் ’பகா பில்லாஹ்’ என்னும் நிலை அது. 

அடியானின் இயற்கை நிலை உண்ணலும் பருகலுமாகும். நோன்பின் நிலையில் இருந்து அந்த நிலைக்கு அடியானை அல்லாஹ் திருப்புகின்ற தருணத்தில் அவன் சொல்கிறான்: “அல்லாஹும்ம லக ஸும்து” (அல்லாஹ்வே உனக்காக நான் நோன்பு வைத்தேன்).

இங்கே அடியான் சொல்கிறான்: ‘ஸும்து’ (நான் நோன்பு வைத்தேன்)! இது அல்லாஹ்வைக் கொண்டு ‘பகா’ (தரிப்பாடு) நிலையில் உள்ள அனிய்யத்தின் பேச்சாகும். இது அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட ’நான்’ (அனா) ஆகும்.

”நான் என்பதைப் புரட்டு நான் என்றே ஆகும்
லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன்
தெளிவான முகவரி இதுவே”
(அனா கோ பல்ட்டோ அனா ஹீ ஹே
யஹீ ஹே சாஃப் ப(த்)தா லா இலாஹ இல்லல்லாஹ்)
-பீர் கவ்ஸி ஷாஹ் அக்பரி (ரஹ்)

நோன்பு எதற்காக நோற்கப்பட்டது? அல்லாஹ்வே சொல்கிறான், “நோன்பாளி அவனின் இச்சைகளையும் அவனின் உணவையும் அவனின் குடிப்பையும் எனக்காகத் தவிர்த்துக் கொள்கிறான்” (யதவு ஷஹ்வதஹு வ அக்லஹு வ ஷுர்பஹு மின் அஜ்லீ)

மஹர் (மணக்கொடை) கொடுக்கப்படுவது மணப்பெண்ணுக்காக எனில் அந்த மணப்பெண்ணைத்தான் அடையப்பட வேண்டும். அவள் அன்றி வேறு பொருட்களை, அவளின் சொத்து பத்துக்களை அடைவது திருமணத்தின் நோக்கம் அல்ல.

சூஃபிகள் சொல்கிறார்கள்: ”யாருக்காக நோன்பு நோற்கப்பட்டதோ அவனை அடைதல் வேண்டும். அவன் அன்றி அவனின் சொர்க்கம் கிடைப்பது நோன்பின் நோக்கம் அல்ல”


அல்லாஹ்வின் வாக்கு: “நோன்பு என்னுடையது நானே அதற்குக் கூலி தருகிறேன்” (அஸ்ஸவ்மு லீ, வ அனா அஜ்ஸீ பிஹி). இந்த ’இபாரத்’ (பிரதிப் பொருள்) உணர்த்தும் ’இஷாரத்’ (குறிப்புப் பொருள்)-ஆக சூஃபிகள் சொல்கிறார்கள்: வ அனா உஜ்ஸா பிஹி – அதற்கு நானே கூலியாகி விடுகிறேன்! (தஷ்கீல் இல்லாத பிரதிகளாகவே அறபியில் இருக்குமாதலால் இரண்டு விதமாகவுமே வாசிக்க இயலும்.) இறைக்காதலர்களுக்கு இதை விளங்குவதில் முஷ்கில் (கஷ்டம்) ஏதும் இல்லை!

(to be continued...)

No comments:

Post a Comment