Monday, August 5, 2013

நோன்பைத் திறந்து... part-2

அடியான் அவனது இச்சையையும் உணவையும் குடிப்பையும் விட்டுவிடுவதாக அல்லாஹ் சொல்கிறான். நோன்பு என்னும் ரசவாதத்தில் இச்சை மறைந்து இறைக்காதல் தோன்றிவிடுகிறது.

“அவனது உணவையும் அவனது குடிப்பையும்” (அக்லஹு வ ஷுர்பஹு) என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பைத் திறக்கும் அடியானோ “(இறைவா!) உன்னுடைய இரணத்தைக் கொண்டே நோன்பைத் திறக்கிறேன்” (வ அலா ரிஸ்கிக அஃப்தர்த்து) என்று சொல்கிறான்.

அடியானின் உணவு (அக்லஹு) என்று அல்லாஹ் சொன்னதன் பொருள், அந்த உணவு அவனுக்காக படைக்கப்பட்டது என்பதாகும். இது இறைவன் தன் அடியானிடம் கொண்டுள்ள கருணையைக் காட்டுகின்றது.

அல்லாஹ்வின் உணவு (ரிஸ்கிக) என்று அடியான் சொல்வது, அந்த உணவுக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள தொடர்பை அவன் உணர்ந்துகொண்டான் என்பதைக் காட்டுகின்றது. உணவு (ரிஜ்க்) உணவளிப்பவனான (ரஜ்ஜாக்) இறைவனிடமிருந்து வருகின்றது (மினல்லாஹ்) என்பது நோன்பிற்கு முன்பே உணரப்பட்டதுதான். நோன்பின் அனுபவத்தில் உணர்ந்து கொண்டது அதனினும் ஆழமான ஓர் உண்மை.

இரணம் (ரிஜ்க்) என்பதும் ஒரு படைப்புத்தான் (ஃகல்க்). எனவே அதன் எதார்த்தமும் ’ஃபனா’வே ஆகும். அதன் எதார்த்த நிலையும் இல்லாமை (அதமிய்யத்) ஆகும். அதற்கென்று தனியே உஜூது (உள்ளமை) ஏது? அதுவும் இறைவனின் உள்ளமையில் அவனால் தரிப்படுத்தப் பட்டுள்ளது (காயிம் பிமவ்ஜூதிஹி). ரிஜ்க் ரஜ்ஜாக்கை விட்டுப் பிரிந்தில்லை. இதை நோன்பாளி உணர்ந்து கொள்கிறான்.

”இறைவா! உன் உணவைக் கொண்டே நோன்பைத் திறக்கிறேன்” (வ அலா ரிஜ்கிக அஃப்தர்த்து) என்று அடியான் சொல்கிறான். நோன்பின் நிலையிலிருந்து உண்ணவும் பருகவுமான நிலைக்கு மீள்வதற்கு ’இஃப்தார்’ என்று சொல்லப்படுகிறது. இதன் வேர்ச்சொல் ’ஃபதர’ என்பதாகும். அதற்கு முக்கியமான மூன்று அர்த்தங்கள் உள்ளன: உடைத்தல், படைத்தல் மற்றும் இயற்கை (ஃபித்ரத்).

மனிதன் தான் படைக்கப்பட்ட இயற்கை நிலைக்கு மீள்கிறான் என்னும் பொருளிலும் அது இஃப்தார் ஆகிறது. உடைத்தல் என்னும் அர்த்தத்தில்தான் ஆங்கிலத்தில் அதனை Breakfast அதாவது to break the fast என்று கூறுகின்றார்கள். தமிழில் ”நோன்பு திறத்தல்” என்று நளினமாகச் சொல்கிறோம்.

அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று “அல்-ஃபாத்திர்”. படைப்புக்களை இன்மையில் இருந்து உள்ளமைக்குக் கொண்டு வருபவன்.

“கூறுக: அல்லாஹ்வே! வானங்களின் மற்றும் பூமியின் படைப்பாளனே!”
(குலில்லாஹும்ம ஃபாத்திருஸ் சமாவாத்தி வல் அர்ள் – 39:46)

சரி, உடைத்தலுக்கும் படைத்தலுக்கும் என்ன சம்பந்தம்? விடையாகப் பின்வரும் திருவசனத்தைக் கருதலாம்:

“நிச்சயமாக அல்லாஹ்தான் தானியங்களையும் விதைகளையும் பிளப்பவன். இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகின்றான். உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகின்றான். அவன்தான் அல்லாஹ். பின் எப்படி நீங்கள் திசைகெட்டுத் திரிகின்றீர்?” (இன்னல்லாஹ ஃபாலிக்குல் ஹப்பி வந்நவா; யுஃக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யி(த்)தி வ முஃக்ரிஜுல் மய்யி(த்)தி மினல் ஹய்ய்; தாலிகுமுல்லாஹு, ஃபஅன்னா து’ஃபகூன் -6:95)

தானியங்களும் வித்துக்களும் உடைகின்றபோதுதான் அவை முளை விட்டுச் சிறு செடியாகின்றன. உடைப்பவன் என்பதற்கு மேற்கண்ட திருவசனத்தில் வந்துள்ள சொல் ’ஃபாலிக்’ என்பதாகும். இந்தச் சொல்லின் வேரிலிருந்தே விடியல் நேரத்தைக் குறிக்கும் ஃபலக் என்னும் சொல் வருகின்றது. ஆங்கிலத்தில் Daybreak!

”கூறுக: விடியற்காலையின் ரட்சகனிடம் பாதுகாவல் தேடுகிறேன்”
(குல் அஊது பி-றப்பில் ஃபலக் -113:1)

தானியங்களும் விதைகளும் முளை விடுவதற்காகப் பிளக்கின்ற செயல்பாட்டிற்கும் இருளில் வெளிச்சம் பரவுகின்ற விடியலுக்கும் ஓர் உருவகத் தொடர்பை இறைவனின் ஞானம் நமக்கு உணர்த்துகின்றது.

இருளின் விதை பிளந்து
ஒளி முளைவிட்ட போது...

தொழுகைக்கான பாங்கழைப்பில் ஓதப்படும் வரிகள்:
ஹய்ய அலஸ் ஸலாத் – தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ் – வெற்றியின் பக்கம் வாருஙள்

ஃபலாஹ் – வெற்றி என்பது என்ன? அறபிகளின் தொன்மையான பொருளில் ஃபலாஹ் என்பது வித்து பிளந்து முளை விடுவதைக் குறிக்கும். அதாவது ஹயாத்தின் (வாழ்வின், ஜீவனின்) அடையாளம் அது.

அதற்கும் ஸலாத் – தொழுகைக்கும் என்ன தொடர்பு? தொழுகை என்பது ஒருவித ’ஃபலாஹ்’ – விதை பிளத்தல் ஆகும்.

“இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் பதிலளியுங்கள், அவர் உங்களை உங்களுக்கு உயிரளிப்பதின் பக்கம் அழைக்கும்போது” (யா அய்யுஹல்லதீன ஆமனுஸ்தஜீபூ லில்லாஹி வ லிர்ரசூலிஹி இதா தஆகும் லிமா யுஹ்யீகும் – 8:24)

விடிகாலை என்பதென்ன? இருளின் மீது வெளிச்சம் பரவித் தன்னைக் காட்டிக்கொண்டு அதனை மறைப்பதாகும்.

படைத்தல் என்பது என்ன? படைப்புக்களின் எதார்த்த நிலையான அதமிய்யத்தின் (இன்மையின்) மீது அல்லாஹ் தன் உள்ளமையின் (உஜூதின்) சுடர்களை வெளிப்படுத்துவது (ஜுஹூர்). படைப்புக்களின் இன்மையான குணங்களை (சிஃபாத்தே நாக்கிஸா) தன் பூரணமான குணங்கள் (சிஃபாத்தெ காமிலா) கொண்டு மறைப்பது.

எனவே விடியல் தொழுகையின் (ஃபஜ்ரு / ஸுப்ஹு) பாங்கழைப்பில் கூடுதலாகச் சொல்லப்படுகின்றது:
அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்” – தூக்கத்தை விட தொழுகை மேலானது – உறக்கத்தினும் தொழுகை நன்று.

(6:95)-ஆம் திருவசனத்தில் விதை பிளத்தலைத் தொடர்ந்து ”இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகின்றான்” (யுஃக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யி(த்)தி) என்று அல்லாஹ் சொல்வதன் ஒரு விளக்கம் இது.

எவ்வாறெனில், நபி(ஸல்) நவின்றார்கள்: ’தூக்கம் என்பது மரணத்தின் சகோதரன்’ (நூல்:மிஷ்காத்).

திருக்குர்ஆனில் உறக்கம் என்பது மரணத்திற்கும், உறக்கத்திலிருந்து விழித்தெழுவது வாழ்விற்கும் தொடர்புபடுத்திப் பேசப்பட்டுள்ளது:
”அவன்தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான். மேலும், நீங்கள் பகலில் செய்தவற்றை எல்லாம் அறிகிறான். குறித்த தவணை முடிவதற்காக மீண்டும் உங்களைப் பகலில் எழுப்புகிறான்” (ஹுவல்லதீ யதவஃப்பாக்கும் பில் லைல் வ யஃலமு மா ஜரஹ்தும் பின்நஹாரி ஸும்ம அப்அஸுகும் ஃபீஹி லியுக்ளா அஜலும் முசம்மன் – 6:60)

”அல்லாஹ் உயிர்களை அவர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காதவர்களுக்கு அவர்களின் தூக்கத்திலும் கைப்பற்றுகிறான். பின்பு, எதன்மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை நிறுத்திக் கொள்கிறான். பிறவற்றை குறித்த தவணை வரை அனுப்பி விடுகிறான். சிந்திப்போருக்கு இதில் அத்தாட்சிகள் உள்ளன” (அல்லாஹு யதவஃப்பல் அன்ஃபுச ஹீன மவ்த்திஹா வல்ல(த்)தீ லம் தமுத் ஃபீ மஹாமிஹா. ஃபயும்சிகுல்லதீ களா அலைஹல் மவ்த்த வ யுர்சிலுல் உஃக்ரா இலா அஜலிம் முசம்மன். இன்ன ஃபீ தாலிக லஆயாதில் லிகவ்மின் யதஃபக்கரூன் -39:42)

எனவே, உறங்கச் செல்லும்போது நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்:
”உன் பெயரைக் கொண்டு, அல்லாஹ்வே!, மரணிக்கிறேன் பின் உயிர்த்தெழுகிறேன்” (பிஸ்மிக்க அல்லாஹும்ம அமூத்து வ அஹ்யா – நூல்: முஸ்லிம், ஃபத்ஹுல் பாரீ)

”உன் பெயரைக் கொண்டு, என் ரட்சகனே, என்னைச் சாய்க்கிறேன். உன்னைக் கொண்டே எழுகிறேன். நீ என் உயிரைக் கைப்பற்றினால் அதன் மீது கருணை செய். நீ அதை மீண்டும் அனுப்பினால் அதைப் பாதுகாப்பாயாக, உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பதைப் போல்” (பிஸ்மிக்க றப்பீ வளஃது ஜன்ம்பீ, வபிக அர்ஃபஉஹு, ஃபஇன் அம்சக்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா, ஃபஇன் அர்சல்தஹா ஃபஹ்ஃபழ்ஹா, பிமா தஹ்ஃபழு பிஹி இபாதகஸ் ஸாலிஹீன் – நூல்: புகாரி, முஸ்லிம்)

”அல்லாஹ்வே! நீயே என் ஆன்மாவைப் படைத்தாய், நீயே அதனை எடுத்துக்கொள்கிறாய். அதன் மரணமும் அதன் வாழ்வும் உனக்கே. நீ அதற்கு வாழ்வளித்தால் அதனைப் பாதுகாப்பாயாக. நீ அதை மரணிக்கச் செய்தால் அதற்கு மன்னிப்பு அளிப்பாயாக. அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன்” (அல்லாஹும்ம இன்னக ஃகலக்த நஃப்சீ வ அன்த தவஃப்பாஹா லக மமாத்துஹா வ மஹ்யாஹா, இன் அஹ்யய்தஹா ஃபஹ்ஃபழ்ஹா வ இன் அமத்தஹா ஃபக்ஃபிர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஆஃபியத் – நூல்: முஸ்லிம், அஹ்மத்)
 
ஆக, உறங்கி எழும் நேரமான விடியல் என்பது வாழ்வுடனும் படைப்புடனும் தொடர்புடையதாக உள்ளது.

“இருளின் விதை பிளந்து
ஒளி முளைவிட்ட போது
என்னை அழைத்தாய் நீ
வைகறையின் வாசலில்
சட்டென்று என்னில் நிறைந்தாய் நீ”

விடியலை அறபியில் ’ஃபஜ்ரு’ என்றும் சொல்வார்கள். ஃபஜர என்னும் வேர்ச்சொல்லுக்கு உடைத்தல், பிளத்தல் ஆகிய அர்த்தங்கள் உண்டு.

ஃபலாஹ் என்றால் வெற்றி என்றும் அது விதை பிளத்தலைக் குறிக்கும் என்றும் கண்டோம். வெற்றி என்பதைக் குறிக்க இன்னொரு சொல் ஃபதஹ் என்பதாகும்.
அல்லாஹ் தன் நேச நபியைப் பார்த்துச் சொல்கிறான்:
”நிச்சயமாக நாம் உமக்குத் தெளிவான வெற்றியாக வெற்றியளித்தோம்” (இன்னா ஃபதஹ்னா லக ஃபத்ஹம் முபீனா – 48:1)

’ஃபத்ஹ்’ என்பதன் (வேர்ச்சொல்: ஃபதஹ) பொருள் என்ன? திறத்தல், ஆரம்பித்தல். எனவே திருக்குர்ஆனின் திறப்பாகவும் ஆரம்பமாகவும் அமைந்த அத்தியாயத்தின் பெயர் “அல்-ஃபாத்திஹா” என்றானது.

எனவே, (48:1)-ஆம் திருவசனத்தின் உட்பொருள்: “(நபியே) மகத்தான திறப்பாக உமக்கு நாம் திறந்தோம்.”

இது தொடர்பாக இன்னொரு திருவசனம்: “உமக்காக உம் நெஞ்சை நாம் விரிவாக்க வில்லையா?” (அலம் நஷ்ரஹ் லக ஸத்ரக் -94:1)

படைப்புக்கள் அனைத்திற்கும் நபியே மகத்தான திறப்பாவார், ஆரம்பமாவார். பிரபஞ்ச நூலின் அல்-ஃபாத்திஹா அவர்களே.

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “வேதநூலின் திறப்பு இன்றித் தொழுகை இல்லை” (லா ஸலாத்த இல்லா பில் ஃபாத்திஹத்தல் கிதாப் – அறிவிப்பாளர்: உபாதா இப்னுஸ் சாமித் (ரலி), நூல்: புகாரி: அத்தியாயம்-12/ 723, சுனன் இப்னு மாஜா: அத்தியாயம்-7 /837).

ஃபாத்திஹா அத்தியாயத்திற்கு ‘உம்முல் குர்ஆன்’ (குர்ஆனின் தாய்) என்றும் ஒரு பெயர் உண்டு. நபி(ஸல்) நவின்றார்கள்: “எவர் தொழுகையில் உம்முல் குர்ஆனை ஓதவில்லையோ அவரின் தொழுகை செல்லாது” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: சுனன் இப்னு மாஜா- அத்தியாயம்-7 / 838)

”உம்முல் குர்ஆன்” என்று சொல்லப்பட்டதன் காரணம் குர்ஆன் முழுவதும் அதிலிருந்து விளக்கமாக வெளிப்படுத்தப்பட்டதே. அதாவது, குர்ஆன் முழுவதும் அதனுள் அடக்கம். உம்ம் (தாய்) என்னும் சொல் இங்கே மூலம் (Source) என்னும் பொருளில் அமைந்துள்ளது.

படைப்புக்கள் முழுமைக்கும் பிரபஞ்சம் முழுமைக்கும் ’உம்மி’ நபியான முஹம்மத் (ஸல்) அவர்களே திறப்பாகவும் ஆரம்பமாகவும் மூலமாகவும் இருக்கின்றார்கள். அந்த நபியில் பிரபஞ்சம் முழுவதுமே அடக்கம்!

இனி, விடியல் – தொழுகை – பிளத்தல் – படைத்தல் - இஃப்தார் என்னும் பொருண்மைகளின் பக்கம் கவனத்தை மீட்போம்.

விடியலுக்கு அரபியில் உள்ள இன்னொரு பெயர் ‘ஸுப்ஹு’. விடியலை அல்லாஹ் வாழ்வுடன் அடையாளப்படுத்திச் சொல்லும் திருவசனத்தில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்:
“விடியலின் மீது சத்தியமாக, அது சுவாசிக்கும் போது”
(வஸ்ஸுப்ஹி இதா தனஃப்பஸ் -81:18)
மூச்சு விடுதல் என்பது வாழ்வின் அடையாளம் அன்றோ!

விடிகாலையில் தொழப்படும் ஃபலக், ஃபஜ்ரு ஆகிய சொற்களுக்கு உடைதல், பிளத்தல் என்னும் அர்த்தங்கள் உண்டு.

நோன்பு திறத்தல் என்பதைக் குறிக்கும் இஃப்தார் (ஃபதர) என்பதற்கும் உடைத்தல், பிளத்தல் என்னும் அர்த்தங்கள் உண்டு.

இந்த பிளத்தல் உடைதல் என்பவை தானியங்கள், விதைகள் ஆகியவை பிளந்து செடிகளும் பயிர்களும் பிறத்தலைக் குறிக்கின்றன. இதனால் அவை படைத்தல் என்பதைக் குறிப்பதாகின்றன.

ஃபதர என்னும் வேரிலிருந்தே அல்லாஹ்வின் திருநாமங்களுள் ஒன்றான ‘அல்-ஃபாத்திர்’ (படைப்பவன்) என்பது வருகின்றது.

இருளில் ஒளி பரவும் நேரம் விடியல். அது ஃபஜ்ரு. அது ஃபலக்.

என் அதமிய்யத்தில் (இன்மையில்) அல்லாஹ்வின் உள்ளமையின் சுடர்கள் பிரதிபலித்து என்னை நிலைப்படுத்தி வைத்திருக்கிறான் என்னும் அனுபவ உணர்வைத் திறப்பது இஃப்தார்.

அதை நான் அவனது உணவைக் கொண்டே திறக்கிறேன். உணவு மட்டுமென்ன, சுயமாகவா நிலைப்பட்டுள்ளது? அதுவும் அதம் (இன்மை) அல்லவா? படைப்பு (ஃகல்க்) அல்லவா? அதுவும் அவனின் உள்ளமையைக் கொண்டே நிலைப்படுத்தப் பட்டுள்ளது. (அவன் உணவாகிவிடவும் இல்லை, உண்பவன் ஆகிவிடவும் இல்லை என்னும் நிலையில்) உணவிலும் உண்பவனிலும் இருந்து உண்பவனுக்கு உணவை ஊட்டுபவன் அவனே. இது ரஜ்ஜாக் (உணவளிப்பவன்) என்பதன் விளக்கம் (தஃரீஃப்). எனவே, உணவில் உணவளிப்பவனை அடைவதே ’இஃப்தார்’ ஆகிறது.

இது நோன்பாளிக்கு கிடைக்கும் இரண்டு இன்பங்களில் முதலாவதாகும். அந்த இரண்டு இண்பங்களாக அல்லாஹ் சொல்கிறான் (ஹதீஸ் குத்ஸி): ”நோன்பாளிக்கு இரண்டு இன்பங்கள் உள்ளன: இஃப்தாரின் போதுள்ள இன்பம் மற்றும் அவன் தன் ரட்சகனைச் சந்திப்பதின் போதுள்ள இன்பம்” (லிஸ்ஸாயிமி ஃபர்ஹத்தானி ஃபர்ஹத்துன் ஹீன யுஃப்திரு வ ஃபர்ஹத்துன் ஹீன யல்கா றப்பஹு)

இஃப்தாரில் நோன்பாளி அடையும் முதலாம் இன்பம் – உணவில் உணவளிப்பவனை அடைந்துகொள்வது – சிறிய சந்திப்பு (லிகாயே அஸ்கர்) ஆகும். ஏனெனில் இதில் உணவு என்னும் திரையின் இடையீடு இருக்கின்றது.

நோன்பாளியின் இரண்டாம் இன்பம் என்று சொல்லப்பட்டுள்லது மறுமையில் அவன் தன் ரட்சகனைச் சந்திப்பதாகும். அது பெரிய சந்திப்பு (லிகாயே அக்பர்) ஆகும். அங்கே அவன் எவ்வித இடையீடுமின்றித் தன் இறைவனைச் சந்திப்பான்.

”சூரத்துல் கியாமத்” – ’மறுமை’ என்னும் அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்கிறான்:
“முகங்கள் அந்நாளில் பிரகாசிக்கும்
தம் ரட்சகனைப் பார்த்தபடி”
(உஜூஹுன்ய் யவ்மஇதின் நாளிர(ஹ்)
இலா றப்பிஹா நாழிர(ஹ்) -75:22,23)


இஃப்தார் என்னும் இந்தச் சிறிய சந்திப்பு அந்தப் பெரிய சந்திப்பிற்கு நம்மைத் தயார் செய்கின்றது.

(to be continued...)

No comments:

Post a Comment