Wednesday, March 30, 2011

திரைகளுக்குப் பின்னால்…





சமீபத்தில் ஒரு புத்தகம் படித்து முடித்தேன். அதில் சொல்லப்பட்ட செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள IONS (INSTITUTE OF NOETIC SCIENCES)-ல் முதுவிஞ்ஞானியாகப் பணியாற்றிவரும் டீன் ராடின் (DEAN RADIN) என்பவர் எழுதியுள்ள “NOETIC UNIVERSE – THE SCIENTIFIC EVIDENCE FOR PSYCHIC PHENOMENA” என்பதே அந்தப் புத்தகம். டீன் ராடின் பணியாற்றிவரும் IONS நிறுவனம் அப்போலோ விண்வெளிப்பயணி எட்கர் மிச்செல் என்பவரால் 1973-ல் ஆரம்பிக்கப்பட்டது. ’சை’ (PSI) என்று அழைக்கப்படும் மீப்புலன் நிகழ்வுகளை விஞ்ஞான ஆதாரங்களுடன் ஆய்ந்து நிறுவுவதே இந்த அமைப்பின் கொள்கை. டீன் ராடின் மேலும் லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் பிரக்ஞை ஆய்வுக் கூடம் (CONSCIOUSNESS RESEARCH LABORATORY) ஒன்றினையும் நிறுவி ஆராய்ச்சி செய்து வருகிறார்.



ஏகப்பட்ட காசைப் போட்டு வாங்கிவிட்டேன் என்பதற்காக இந்த நூலை “ஆகா மிக அருமையான நூல். அல்வா போல் சுவையாக சுவாரஸ்யமாக இருக்கிறது” என்று பில்ட்-அப் கொடுத்து நான் உங்களுக்கு அறிமுகம் செய்துவைப்பது நியாயம் இல்லை. இது கொஞ்சம் ’அருவை’யான நூல்தான். ஏனெனில் விஷயமே அறுவை சிகிச்சை போன்றதுதான். ஒரு துறைக்குள் மிக ஆழமாக மூழ்கி அதையே வாழ்ந்து வருபவர்கள் என்னதான் இறங்கி வந்து ’எல்லோருக்கும்’ புரியும் வண்ணம் அந்தத் துறையின் நுட்பங்களை விளக்கிப் ‘பொது மக்களுக்கு’ ஆன ஒரு நூலை எழுத நினைத்தாலும் அதுவும்கூட பாதிதான் சுவையாக இருக்கும்போலும். அப்படிப் பல நூல்கள் உண்டு. அதில் இதுவும் ஒன்று. ஆனால் கறாரான அறிவியல் முறைகளின்படியான தன் ஆய்வுகளை டீன் ராடின் நம்பகத்தன்மையுடன், புள்ளி விவரங்களுடன் எடுத்துவைத்து முடிவுகளைக் கூறும் நேர்மையும் அவரது பல்லாண்டு கால உழைப்பும் நம்மை நிச்சயம் கவருகின்றன. மெச்ச வைக்கின்றன.



ஒரு சிக்கலான அறிவியல் துறையை மக்களுக்கு அறிமுகம் செய்வதற்குக்கூட அந்தத் துறையின் மீது பிரபலங்களின் வெளிச்சம் விழ வேண்டியிருக்கிறது. ‘டாவின்சி கோட்’ புகழ் (நெலமடா சாமி!) டான் பிரவ்ன் லேட்டஸ்டாக எழுதிய “தி லாஸ்ட் சிம்பல்” (THE LOST SYMBOL) என்னும் நாவலில் ‘நோயட்டிக்ஸ்’ (NOETICS) என்னும் இந்தத் துறையைப் பற்றிய அருமையான அறிமுகம் இருந்தது. இதைப் பற்றி டீன் ராடின் தன் நூலின் பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர்தான் தன் பல வருட கால ஆராய்ச்சி அனுபவங்களை அவர் ஒரு நூலாக வெளியிடும் துணிவைப் பெற்றுள்ளார். அந்த நாவலைப் படித்துவிட்டுத்தான் நானே டீன் ராடினின் நூலை வாங்கி வந்தேன்.

தொலைவில் காணுதல் (CLAIRVOYANCE), தொலைவில் கேட்டல் (CLAIRAUDIENCE), மனதைப் படித்தல் (MIND-READING), முன்னனுமானம் (PRECOGNITION), முன்னூட்டம் (PRESPONSE) என்பன போன்று நாம் ஆன்மிகத்தில் அடிக்கடி கேள்விப்படும் பொருண்மைகளை விஞ்ஞானப் பூர்வமாக விளக்கும் இந்த நூலில் முன் தயாரிப்பாக PARANORMAL, SUPERNATURAL, MYSTICAL, SCIENCE AND SCIENTIFIC METHOD ஆகிய ஐந்து கான்செப்ட்-களை டீன் ராடின் விளக்குகிறார். அதில் ஆன்மிகம் என்பதை விளக்க அவர் எழுதியுள்ள ஒரு சிறு பத்தி என் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அது இது: “Mystical refers to the direct perception of reality; knowledge derived directly rather than indirectly. In many respects mysticism is surprisingly similar to science in that it is a systematic method of exploring the nature of the world. Science concentrates on outer, objective phenomena, and mysticism concentrates on inner, subjective phenomena. It is interesting that numerous scientists, scholars and sages over the years have revealed deep, underlying similarities between the goals, practices, and findings of science and mysticism. Some of the most famous scientists wrote in terms that are practically indistinguishable from the writings of mystics.” (page.10)

இந்தப் பத்தியில் ராடின் கூறியுள்ள ஒவ்வொரு வரியும் தனித்தனியாக விளக்கமாகக் காண வேண்டியவை. இந்தப் பத்தி அப்படியே சூஃபித்துவத்திற்குப் பொருந்தி வருகிறதே என்று நான் வியந்தேன். அதே போல் ஒருவர் இதை இந்து மரபின் யோகத்துடனும், பௌத்த மரபின் ஜென்னுடனும் பொருத்திப் பார்க்கலாம். பொதுவாக இந்தப் பத்தி ஆன்மிகத்தை அறிவியலுடன் அழகாகப் பொருத்திக் கூறுகிறது. இரண்டுமே இருவேறு கோணங்கள் கொண்ட ஆனால் ஒரே இலக்கை நோக்கிய மெய்காண் முறைகள் என்று காட்டுகிறது

“ஆன்மிகம் என்பது மெய்ம்மையின் நேரடி கிரகிப்பு. இடையீடாக அன்றி நேரடியாகப் பெறப்படும் அறிவு.” என்று ராடின் சொல்லியிருப்பதைத்தான் சூஃபித்துவம் “இல்மே லதுன்னி” என்று கூறுகிறது. அதாவது “உள்ளுதிப்பின் அறிவு.” இது இறைவனிடமிருந்து நேரடியாக ஞானியின் இதயத்திற்குள் பாய்வது. புலன்களின் இடையீடு (வாஸ்தா) கொண்டு அடையப்பெறுவது அல்ல. ‘கிள்ரு’ என்னும் ஞானியைப் பற்றிக் குறிப்பிடும் திருக்குரான் வசனத்தில் “அவருக்கு நம் பிரசன்னத்தில் இருந்தே அறிவைப் புகட்டினோம்” (வ அல்லம்னாஹு மின் லதுன்னா இல்மா – 18:65 ) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

”மூங்கிலைப் பற்றி

மூங்கிலிடம் இருந்தே

தெரிந்துகொள்”

என்று ஜென் கவிஞர் பாஷோ சொன்ன கவிதையும்கூட இந்தக் கருத்தைத்தான் உணர்த்துகிறது என்று நினைக்கிறேன்.



ஆனால் சூஃபி ஞானிகள் இன்னும் ஒரு நிலை தாண்டிச் செல்கிறார்கள். இறைவனைக் கொண்டே இறைவனை அறிகிறார்கள். இறைவனைக் கொண்டே படைப்புக்களையும் அறிகிறார்கள். மூங்கிலைப் பற்றி அதனைப் படைத்த இறைவனிடம் இருந்தே தெரிந்துகொள்கிறார்கள். அதாவது அனைத்துக்கும் மூலமாக இருக்கும் ஒன்றை அதனைக் கொண்டே அறிகிறார்கள். மேலும் அனைத்தையும் அதனைக் கொண்டே அறிகிறார்கள்.



”நோயசிஸ்” (NOESIS) என்னும் கிரேக்கச் சொல்லுக்கு உள்ளுதிப்பு அல்லது நேரடியான உள்ளறிவு என்றுதான் பொருள். அதனைப் பற்றி ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற உளவியல் அறிஞர் வில்லியம் ஜேம்ஸ் சொன்னார்: “நோயசிஸ் என்பது பகுத்தறிவால் தடுக்கப்படாத, சத்தியத்தின் ஆழங்களைக் கண்டுகொள்ளும் அகப்பார்வை நிலைகளாகும். அவை முக்கியத்துவமும் அர்த்தகனமும் உள்ள ஒளியூட்டங்களும் திரைவிலகல்களும் ஆகும். வார்த்தைப்படுத்த இயலாதவை என்றாலும், ஒரு பொது நியதியாக அவை தம்மில் ஒரு வினோதமான அதிகாரத்தைக் கொண்டுள்ளன.” (“states of insight into depths of truth unplumbed by the discursive intellect. They are illuminations, revelations, full of significance and importance, all inarticulate though they remain; and as a rule they carry with them a curious sense of authority.”)



வில்லியம் ஜேம்ஸ் INSIGHT (அகப்பார்வை) என்று சொல்லியிருப்பதை சூஃபிகள் “பஸாரத்” என்று சொல்கிறார்கள். ILLUMINATIONS, REVELATIONS என்று அவர் சொல்லியிருப்பவை சூஃபிகளால் கஷ்ஃப், இர்ஃபான், இல்ஹாம், இல்மெ லதுன்னி போன்ற சொற்களால் குறிக்கப்படுகின்றன.



“all inarticulate though they remain” என்று வில்லியம் ஜேம்ஸ் சொல்லியிருக்கிறாரே, அதைத்தான் “கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்” என்று தமிழகத்தில் சொன்னார்கள். “சொல்லப்படும் உண்மை என்பது பாதி உண்மை” என்று தாவோ-தெ-சிங் என்னும் நூலில் சீன ஞானி லாவ்சூ (LAO TZU) சொல்லியிருப்பதும் அதைத்தான்.



“and as a rule they carry with them a curious sense of authority” என்று வில்லியம் ஜேம்ஸ் சொல்லியிருப்பது என்ன? ஞானிகளின் அக அனுபவத்திலிருந்து வெளிப்படும் சொற்கள் எத்தனைதான் அபத்தமாக அல்லது புதிர்த்தன்மை கொண்டதாக அல்லது புரியாததாக இருந்தாலும் மனித மனங்கள் அவற்றைப் புறக்கணிக்க முடியாத ஓர் அழுத்தம் அதில் இருக்கும். காலத்தால் நிறம் மங்கிவிடாமல் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்து மரபில் அத்தகைய வாக்கியங்களை ஆப்த வாக்கியங்கள் என்று சொல்வார்கள். ’அகம் ப்ரம்மாஸ்மி’, ‘தத்வமஸி’, ‘ஏகம் ஸத்’ போன்ற வாக்கியங்கள் அந்த வகை. சூஃபித்துவத்தில் ’ஷாத்’ என்னும் பரவச வாக்கியங்கள் பல நூற்றாண்டுகள் தாண்டியும் அதே வீச்சுடன் உள்ளன. மன்சூர் ஹல்லாஜிடம் வெளிப்பட்ட “அனல் ஹக்” என்பதன் உட்பொருள் என்ன என்பது இன்றளவும் விவாதப் பொருளாகவே இருக்கிறது. அதேபோல் மகாஞானி இப்னுல் அரபி அவர்களின் பல வாக்கியங்கள் ஒரு மனிதனின் ஆன்மிக அறிவை தரங்காட்டும் உரைகற்களாக இருக்கின்றன.



நூலின் இந்த ஆரம்ப அத்தியாயங்களைத் தொடர்ந்து தன் ஆராய்ச்சிகளைப் புள்ளி விவரங்களுடன் விளக்குகிறார் டீன் ராடின். இருநூற்றி ஐம்பது பக்கங்கள் ஓடிய பின்னர் விஞ்ஞானத்தின் மீதான பொதுவான அலசலைத் தொடங்குகிறார். அறிவியல் கண்ணோட்டத்தின் ஆரம்ப வரலாறு (பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் நிகோலஸ் கோப்பர்னிகஸ், ரெனெ தெகார்தெ, கலீலியோ கலீலி, ஐசாக் நியூட்டன் ஆகியோர் துவக்கி வைத்த சிந்தைனை முறைகள் என்கிறார்), மனம்Xஜடம் (MIND X MATTER) என்று பிரபஞ்சத்தை இரண்டாகப் பிளந்தது, அதனால் உண்டான சிக்கல்கள் ஆகியவற்றை விளக்கிச் செல்கிறார். இதில் ’சை’ (PSI) ஒரு அறிவியல் துறையாக வளர்ந்து வந்த பாதை மற்றும் நவீன அறிவியல் பகுத்தறிவை மீறியதாகவும் ஆன்மிகத்துடன் பொருந்தியதாகவும் இருப்பது ஆகியவற்றையும் விளக்குகிறார்.



’மதம் ஒரு அபினி’ என்று கார்ல் மார்க்ஸ் சொன்னது சுப்ரஸித்தம். அதாவது, ரொம்ப ஃபேமஸ். ஆனால் பகுத்தறிவு என்பதும் ஒரு மூடநம்பிக்கை ஆகிவிட்டது அல்லவா? அதை ஹார்மேன் இவ்வாறு கூறுகிறார், “Just as the absolute power held by the church for centuries had been seductive, the growing power of science had seduced as well.” (Harman.W, Higher Creativity). ‘மதம் என்பது அறிவியலுக்கு எதிரானது. மதம் என்பது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. பகுத்தறிவு என்பது அறிவியல் ரீதியானது’ என்று ஒரு பொதுப்பார்வை நிலவுகிறது. ஆனால் நவீன அறிவியல் இந்தக் கருத்துக்களை எல்லாம் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. பகுத்தறிவு அடிப்படையிலான அறிவியல் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிக் கொடுத்த விளக்கங்கள் முழுமையானதாக இல்லை என்பதை அது கண்டுகொண்டுள்ளது. இயற்பியலாளர் ஸ்டீவன் வெய்ன்பெர்க் சொல்வதுபோல், “எந்த அளவு பிரபஞ்சம் புரிவதாகத் தெரிகிறதோ அந்த அளவு அது அபத்தமாகவும் உள்ளது” (“The more the universe seems comprehensible, the more it also seems pointless.” – Steven Weinberg, ‘The First Three Minutes: A modern view of the origin of the universe’)



பிரபஞ்சத்தை மனம்Xஜடம் (MIND X MATTER) என்று பகுத்தறிவுதான் இரண்டாகப் பகுத்துப் பார்த்தது. ஆனால் விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதில்தான் அதன் நிம்மதி தொலைந்து போயிற்று. ஏனெனில் மனமும் ஜடமும் பல இடங்களில் கண்ணாமூச்சி ஆடத் தொடங்கியபோது ‘வளர்ந்த பிள்ளை’யான பகுத்தறிவால் அதை ஜீரணிக்க முடியவில்லை! ராடின் சொல்கிறார், “மனமும் ஜடமும் நிச்சயமாக மிகவும் வேறுபட்ட படைப்புக்களாகத் தெரிகின்றன. மனம் சிந்திக்கிறது, அது இடத்தில் கட்டுப்பட்டதாக இல்லை, அது மதிப்புக்களில் அக்கறை கொண்டுள்ளது, அதற்குச் சுயேச்சை உள்ளது, இலக்கால் இயங்குகிறது, தற்சார்பு கொண்டது, மனதின் நேரடியான பிரக்ஞை அனுபவத்தின் வழியாகவே நாம் அனைத்தையும் அறிகிறோம். இதற்கு மாறாக, நாம் அறிந்த வரை, ஜடம் சிந்திப்பதில்லை, அது இடத்தில் கட்டுப்பட்டது, மதிப்புடையது அல்ல, வரையறுக்கப்பட்டது, இலக்கற்றது, பருத்தன்மை கொண்டது, அதைப்பற்றிய அனைத்து அறிவும் மனதால்தான் கிரகிக்கப்படுகிறது. எனவே, வேறு வேறான இந்த இரண்டும் எப்படிச் சேர்ந்திருக்கின்றன?” (Mind and matter certainly seem to be very different creatures. The mind thinks, it isn’t located in space, it’s concerned with values, it has free will, it’s driven by purpose, it’s private, and everything we personally know is through the mind’s direct, conscious experience. By contrast, as far as we know matter doesn’t think; it’s localized in space; it’s value-free, determined, purpose-less, objective; and all knowledge about it is inferred by our mind. So how can we have two such different things in the world.” Page.284) இதுதான் ஆரம்பக் கேள்வியாக விஞ்ஞானிகளின் தூக்கத்தைக் கெடுத்தது என்கிறார் அவர்.



பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் அளந்துவிடுவோம் பிளந்துவிடுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்த செவ்வியல் விஞ்ஞானம் (CLASSICAL SCIENCE) ஒரு நிலைக்கு மேல் நகர முடியாமல் நின்றுவிட்டது. ஜட உலகில்கூட அனைத்து விசயங்களையும் நேரடியாக அவதானிப்பதும் மதிப்பிடுவதும் சாத்தியமில்லை என்று ஹெய்சன்பெர்க்-இன் நிலையாமைக் கோட்பாடு (Heisenberg’s Uncertainty Principle) சொன்னது. இது ஏன் இப்படி என்று ‘பகுத்தறிவு’ மண்டையைப் பிய்த்துக்கொண்டபோது உளவியல் அறிஞர் கென் வில்பர் ஒரு காரணத்தைக் கூறினார்: “பிரபஞ்சம் என்பது கருத்துXபொருள் என்பதாக, பார்க்கும் ஒரு நிலை X பார்க்கப்படும் மறு நிலை என்பதாகப் பகுக்கப்பட்டதும் ஏதோ ஒன்று எப்போதும் விடுபட்டுப் போகிறது. இந்த நிலையில் பிரபஞ்சம் எப்போதும் தன்னை ஒரு பக்கம் தவிர்த்துக்கொள்கிறது. எந்த அவதானிப்பு முறைமையும் தன் அவதானிப்பை அவதானிக்க முடியாது. பார்ப்பது தன் பார்த்தலைப் பார்க்க முடியாது. ஒவ்வொரு கண்ணிலும் ஒரு அந்தகப் புள்ளி உண்டு. திண்ணமாக இந்த ஒரு காரணத்தினால்தான் அறிவியலின் இருமை அணுகுமுறை அனைத்தின் அடித்தளத்திலும் நாம் வெறும் நிலையின்மை மற்றும் முழுமையின்மை ஆகியவற்றைக் காண்கிறோம்!” (“When the universe is severed into a subject vs. an object, into one state which sees vs. one state which is seen, something always gets left out. In this condition, the universe ‘will always partially elude itself.’ No observing system can observe itself observing. The seer cannot see itself seeing. Every eye has a blind spot. And it is for precisely this reason that at the basis of all such dualistic attempts we find only: Uncertainty, Incompleteness!” –Ken Wilbur, ‘Spectrum of Consciousness’) இந்தப் பத்தியைப் படித்தால் அப்படியே உபநிஷத் படிப்பதுபோல் இருக்கிறது! ஆனால் இது நவீன அறிவியல் கருத்து.



இதற்கு அடுத்த நிலையில் ராடின் எழுதுகிறார்: “ஐன்ஸ்டீன் ஜடத்தையும் சக்தியையும் சமன்படுத்தியபோது பொருள்முதல்வாதம் சந்தேகத்தில் விழுந்தது.” (“Materialism was cast into doubt by Einstein’s equivalence of matter and energy.” Page.287) இந்த இடத்தில் உயிரைப் படிக்கும் உயிரியலும் ஜடத்தைப் படிக்கும் இயற்பியலும் எப்படி தலைகீழாகப் புரண்டுவிட்டன என்பதை ராடின் மிகச் சுவையாகக் குறிப்பிடுகிறார்: “உயிரியலாளர்கள் பக்கா பொருள்முதல்வாதிகள் போலவும், இயற்பிலாளர்கள் ஆன்மிகவாதிகள் போலவும் பேசத்தொடங்கினார்கள். உயிர் முறைகளை ஆராயும் உயிரியலாளர்கள் தம் ஆய்வுப்பொருட்களை விட்டு விலகி நின்று அவதானித்து வெற்றி கண்டார்கள் என்றால், செத்த ஜடத்தை ஆராய்ந்த இயற்பியலாளர்களுக்கோ தம் ஆய்வுப் பொருளை விட்டும் தாம் பிரிந்தில்லை என்று நினைக்கும்படி ஆகிவிட்டது!” (“biologists begin to sound like hard-core materialists, and physicists begin to sound like mystics. Biologists studying living systems have enjoyed great success standing apart from their object of study, while physicists studying dead matter have been forced to adopt the idea that they are inseparable from their object of study! –page.293)



இருபத்தைந்து நூற்றாண்டுகளாக பகுத்தறிவு அடிப்படையிலான செவ்வியல் அறிவியல் கடைப்பிடித்து வந்த இருமை நோக்கின் மீது நவீன அறிவியல் மரண அடி கொடுத்துள்ளது என்று கருதும் கென் வில்பர் சொல்கிறார், “எல்லா அறிவியல் துறைகளும் இருமை நோக்குடன்தான் தொடங்கின என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அவற்றில் சில, தங்கள் இருமைத் தன்மையை ’அழிவின் எல்லை’ வரை நகர்த்திச் சென்றன. அதில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளுக்கு அங்கே அவர்களது வாழ்வின் பேரதிர்ச்சி காத்திருந்தது!” (“There is no doubt that all sciences began as pure dualisms – some, however… pursued their dualisms to the ‘annihilating edge,’ and for those scientists involved, there awaited the shock of their lives.”)


அது என்ன பேரதிர்ச்சி?

(தொடரும்)




Sunday, March 20, 2011

பூர்வீக வீட்டின் கொன்றை மரம்



தாத்தாவோ
அவரின் தந்தையோ
நட்டுவைத்ததாம்
என் மகனின் நாட்களில்
இன்றும் இருக்கும்
இந்தக் கொன்றை மரம்.

பூர்வீக வீட்டின்
வெளிமதிலருகே
நிழல் தரும் எத்தனிப்புடன்
நிற்பதுபோல் நிற்கிறது.

வரிசையாய் அறைகள் கொண்ட
நீள்மனை போல்
விதைகளின் கிலுகிலுப்பையான
கரிய நீண்ட காய்கள்
காணப்படுவதில்லை இப்போதெல்லாம்
மெலிந்துவிட்ட அதன் கைகளில்.

மஞ்சள் பட்டுடுத்திய
புதுமணப் பெண்போல்
நின்ற காலங்கள்
சென்று போயின.

காலத்திற்கு அப்பால் துழாவும் 
வேர்களின் வழியே
உயிரின் அலைகளில் புரண்டு
கிளைகளில் கரையொதுங்கும்
மஞ்சள் சிப்பிகளாய்க்
கொஞ்சமாய்ச் சிரிக்கிறது வசந்தத்தில்
என் பாட்டியைப் போலவே,
பூர்வீக வீட்டில் நிற்கும்
கொன்றை மரம். 

Wednesday, March 16, 2011

TAKE DIVERSION!

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி விடும்படி ஆகிவிட்டது.
என் மடிக்கணினி சில நாட்களாகவே மக்கார் செய்து வந்தது.
தட்டிக் கொண்டிருக்கும் போதே தானாகவே அணைந்துவிடுகிறது.
மீண்டும் மீண்டும் நினைவு தப்பிக் கோமாவில் விழும் ஒருவரைப் போல் அது இருந்தது.
'ஆட்டோ ரிப்பேர்' செய்து நானும் கொஞ்ச காலம் தட்டிக் கொண்டிருந்தேன். நன்றாகப் போய்க்கொண்டிருக்கும், திடீரென்று ஊடல் கொள்ளும்! பத்து மனைவிகளுக்குச் சமமாக ஊடல் கொள்ளும் ஒரு மடிக் கணினியை வைத்துக் கொண்டு நான் எப்படி ப்ளாக் நடத்துவது?



இப்போது என் மடிக் கணினி பணிமனையில் இருக்கிறது.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கல்லூரியில் என் துறையில் இருக்கும் ஒற்றைக் கணிப்பொறியைக் கொண்டுதான் நான் இடுகைகள் போடுவேன். அந்தக் கணிப்பொறியும் எப்படி இருந்தது என்று நான் சொல்லித்தான் ஆக வேண்டும். பத்து எய்ட்ஸ் நோயாளிகளைப் போல் இருந்தது அதன் நிலை. அவ்வளவு வைரஸ் தாக்குதல். அதனால் வேகத்தில் கம்ப்யூட்டர் தந்தை சார்ல்ஸ் பாப்பேஜ் கண்டுபிடுத்த இயந்திரத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது! அதை வைத்து ஒரு வருடம் வித்தை காட்டியிருக்கிறேன்! இப்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள். புதிய லேப் உருவாக்கித் தரும் பனி நடப்பதால் அதன் கனெக்ஷன் வயர்கள் எல்லாம் உருவப்பட்டு மூலைக்குப் போய்விட்டது.

முன்பே ஒருமுறை "மலரும் ரோஜா" என்று ஒரு கவிதையை ஏற்றிவிட்டு ஒருவார காலம் கம்பம் சென்றுவிட்டேன். "ரோஜா மலர்ந்து ரொம்ப நாளாச்சு. எங்கே அடுத்த பதிவு?" என்று அரபுத் தமிழன் கேட்டிருந்தார். விழுந்தடித்துக் கொண்டு அடுத்த இடுகையை ஏற்றினேன். ஆனால் இப்போது அப்படி ஏற்ற முடியாத நிலை. இன்னும் கொஞ்ச நாள் எடுக்கும் போல.



கல்லூரியில் ஒரு அற்புதமான சூபி விழாவை இந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தி முடித்தோம். மவ்லானா ரூமியின் 'மஸ்னவி' காவியம் தமிழாக்கத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா. ஆறு பாகங்களையும் முழுமையாக மொழிபெயர்த்துத் தந்திருக்கும் பெரியவர் நரியம்பட்டு.எம்.ஏ.சலாம் அவர்கள் வந்திருந்தார்கள். விழாவில் மவ்லானா ரூமியின் பல கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டாலும், நண்பர் அபூதாகிர் ஜமாலி கூறிய ஒரு மேற்கோள் அனைவரின் மனதையும் ஈர்த்தது. உண்மையில் செயல்படுபவன் இறைவன்தான். ஆனால், மனிதர்கள் 'நான் செய்தேன்', நீ செய்தாய், அவன் செய்தான் என்றெல்லாம் பீற்றிக் கொள்கிறார்கள் என்னும் கருத்தை மிக அழகாகச் சொன்ன கவிதை வரிகளின் மேற்கோள். அது இது:

"வண்டியை
இழுப்பது என்னவோ
மாடுகள்தான்,
ஆனால்
சக்கரங்கள் கிடந்து
சத்தமிடுகின்றன."

ரூமி ரூமிதான்!


Thursday, March 10, 2011

மஜ்னூன் சொல்கிறான்



மஜ்னூன் சொல்கிறான்:
காதல் என்னைத் தொட்டபோது
காம்பஸ் கருவியின்
காந்தமுள் போலானேன்.
அவள் வீடே 
என் உலகின் 
ஒற்றைத் திசை ஆனது.

மஜ்னூன் சொல்கிறான்:
வீட்டுக்குள் இருக்கும்
நிஜம் அவள்.
வீதியில் அலையும்
நிழல் நான்.

மஜ்னூன் சொல்கிறான்:
அவளின் தெருவில்
நாயைப் போல் அலையும் எனக்கு
அவளின் தெருவில்
அலையும் நாய்
அரசனைப்போல் தெரிகிறது!

மஜ்னூன் சொல்கிறான்:
அவளின் தெருவில்
நான் அலைவது
இருக்கும் ஒன்று
தொலைந்த ஒன்றைத்
தேடுவது அல்ல,
தொலைந்த ஒன்று
இருப்பதைத் தேடுவது.

மஜ்னூன் சொல்கிறான்:
லைலாவின் பெயரில்
நான் அடைந்துகொண்டதை
அல்லாஹ்வின் பெயரிலும்
அடையவில்லை நீ.
ஏனெனில்
நான் லைலாவின் காதலன்
நீ அல்லாஹ்வின் எதிரி!

மஜ்னூன் சொல்கிறான்:
வீடு துறந்து அவளது
வீதியின் தூசியாகிவிட்ட
என்னைப் பார்,
பக்தனே!
இறைவனின் வீட்டை அடைய
உன் வீட்டைவிட்டு
வெளியேறத்தான்
வேண்டும் நீ.
இறைவனையே அடைய
உன்னையே விட்டு
வெளியேறத்தான்
வேண்டும் நீ!

மஜ்னூன் சொல்கிறான்:
ரோஜா
காதலின் சின்னம்
என்பது சரிதான்.
காலையில் இருக்கிறது
அவளைப் போல்.
மாலையில் ஆகிறது
என்னைப் போல்.

  

Wednesday, March 2, 2011

கஜல் துளிகள்

பகலெல்லாம்
உன் நினைவுகள்
உறங்கும்
என் நெஞ்சில்.

இரவெல்லாம்
தூக்கம் இல்லை
உன் நினைவுகளால்.

~

மூச்சு உயிர் தொடும்
பேச்சு மௌனம் தொடும்
நீ மட்டும் இருக்கும்
தனிமையில்.

மூச்சும் பிசகும்
பேச்சும் பிசகும்
நீ இருந்தாலும்
சபையில்.

~

இனிய இசை கேட்டு
வெகு காலமாச்சு
உன் மூச்சால்
புல்லாங்குழலுக்கு
உயிரூட்டு.




வீணையில் உறங்கும் இசையை
வருடி எழுப்புகிறாய் நீ.
அதுவோ
அரை மயக்கத்தில் உலவும்
நீ தொட்ட போதையில்.

~

வாள் எடுத்து வரும்
உன் கையை
முத்தமிடக் குனிகிறேன்
தலையே போய்விடும்
அபாயத்தில்.

காதலனுக்கு
இன்பம்தான் ஏது
உயிரைக்  காத்துக்கொள்ளும்
உபாயத்தில்?

~

நாவுதானே
உச்சரிக்கின்றது
உன் பெயரை?

இதில்
காதலனுக்கு மட்டும் ஏன்
நாசியில் பெருமூச்சு?
விழிகளில் கண்ணீர்?

சரிதான்
காதலனுக்கு மட்டும்தானே
உன் நறுமணம்!
உன் தரிசனம்!