Tuesday, July 29, 2014

ரகசியம்


உன் ஒளி                      
இசையாகி நுழைந்தது
என்னுள்

கண்ணீரில் நீராடிய
இதயத்தைக்
காதலால் தழுவினாய்

உனக்காக
உலகத்தை
உதறித் தள்ளினார்கள்
உன் பக்தர்கள்

என் இதயத்தின் விழியோ
உலகெங்கிலும்
உன்னையே காண்கிறது

உன் ஒளியில்
ஒவ்வொரு துகளும்
கண்ணாடி ஆகிவிடவில்லையா?

உன் அழகை
தரிசித்த வெறியில்
என்னுள் மூளும்
அரிதாரங்களை அழிக்கும்
கலகம்

நினக்கு
பிம்பங்கள் இருக்கலாகாதென்று
கற்களைத் தேடியலையுமொரு
கண்ணாடியோ நான்?

வெளியே தேடிய கிளைகள்
சட்டென்று கண்டுகொண்டன
ஒவ்வொரு பூவிலும்
வேரின் (சு)வாசம்

வண்ணங்களில் மறைந்திருக்கும்
ஓவியன் நீ
திரையை விலக்கிய
ஓவியம் நான்

சொல்ல முடியாதவன் நீ
சொல்லி முடியாதவன் நான்

உரை
உன் திரை
இசை உன்
இரவு உடை

என் உடல்
என் உள்ளம்
என் உயிர்
என் ரகசியம்
எல்லாம்
உன் ரகசியம்

காதலில் உயிர்
கரையும்போதெல்லாம்
உள்ளம் வாசிக்கும்
உடலில் உன் ரகசியம்

Sunday, July 20, 2014

...என்றார் சூஃபி - part7

30

இன்றைய கூட்டத்தில் சூஃபி பின்வரும் சிறிய கதையைச் சொன்னார்:
“குடிசை வீட்டில் ஒருவன் வாழ்ந்து வந்தான். வறுமை அவனை விட்டு அகலவே இல்லை. அந்தச் சிறிய குடிசையை மராமத்துச் செய்வதற்குக் கூட அவனிடம் பணம் இல்லை. காற்றிலும் மழையிலும் அது நைந்து கந்தலாகிப் போயிருந்தது. அதன் மண்-சுவர் இற்றுப் போயிருந்தது.

அவனது குடிசைக்கு எதிரே, சாலையின் அந்தப் பக்கமாக, பெரிய மச்சுவீடு ஒன்று இருந்தது. கொடுத்து வைத்த சீமான் ஒருவரின் இல்லம். அதைப் பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு ஒரே ஏக்கமாக இருந்தது. ‘ச்சே! என்ன வாழ்க்கை இது? இப்படி தரித்திரம் பிடித்து என்னை ஆட்டி வைக்கிறதே. கண் முன்னே இத்தனைப் பெரிய வீட்டில் ஒருத்தன் வாழ்கிறான். அதுவல்லவா வாழ்க்கை? இந்தக் குடிசையில் மழைக்குப் பாதுகாப்பு உண்டா? வெய்யிலுக்கு மறைப்பு உண்டா? என்றைக்காவது ஒரு நாள் அந்த வீட்டுக்குள் இருந்து பார்க்க வேண்டும்’ என்று அவன் தன் மனதிற்குள் அடிக்கடி எண்ணிக் கொள்வான். அது ஒரு சங்கற்பமாகவே அவனுக்குள் உருவாகியிருந்தது.

காலம் இப்படியாகச் சென்று கொண்டிருக்க ஒருநாள் அதிகாலையில் அந்த ஊரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி ஓடிக்கொண்டிருந்தார்கள். இவனும் குடிசையை விட்டு வெளியே வந்தான். எதிர் வீட்டுச் சீமான் தனது மனைவி மக்களோடு வீட்டைத் திறந்தபடிப் போட்டுவிட்டு வெளியே ஓடுவதைப் பார்த்தான். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவன் மனம் பரபரத்தது. ‘லூசுப்பய. இத்தனைப் பாதுகாப்பான வீட்டை விட்டு ஓடுகிறானே. இந்தக் குடிசைக்குள் இருந்து இனியும் நான் சாகவேண்டியதில்லை’ என்று நினைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பாய்ந்து எதிர்வீட்டிற்குள் – அழகான பங்களாவிற்குள் – நுழைந்தான். நிலநடுக்கத்தில் அவனது குடிசை தரைமட்டமானது. ஆனால், அதே சமயம் பங்களாவும் படுத்துவிட்டது. அவன் அதற்குள் அப்படியே சமாதி ஆகிவிட்டான்.”

இக்கதையின் மீது நாங்கள் சற்று நேரம் சிந்தனை செலுத்திக் கொண்டிருந்தோம்.
“காதலின் புயலால் கந்தலாகிக் கண்ணீர் கசியும் இதயம் உள்ளவர்களே! உங்கள் தன்முனைப்பு தரைமட்டமாகும் தருணத்தில் தப்பியோட நினைக்காதீர்கள்.” என்றார் சூஃபி.

31

சூஃபி கூறிய இன்னொரு சிறிய கதை:

“அடர்ந்து செழித்த ஒரு காட்டிற்குள் வாலிபன் ஒருவன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். உலக வாழ்க்கையின் சராசரித் தன்மையை வெறுத்து ஆனந்த மயமான ஏகாந்தமான வாழ்க்கையைத் தேடி அவன் அந்தக் காட்டிற்குள் ஓடிவந்திருந்தான். ’இயற்கையின் மடியில் இனி நானொரு குழந்தை. பறவைகளும் விலங்குகளுமே எனது உறவுகள். கைகளைப் போல் நீட்டியிருக்கும் மரக்கிளைகளில் எல்லாம் இறைவன் எனக்குச் சுவையான உணவை அள்ளித் தருகிறான். என் வாழ்வில் இனி துன்பமே இல்லை’ என்றெல்லாம் எண்ணியபடி அவன் காட்டுக்குள் குஷாலாகச் சுற்றிக் கொண்டிருந்தான். 
அவ்வாறு இருக்கையில், ஒருநாள் காட்டாற்றின் கரையில் இரண்டு மரங்களை அவன் கண்டான். ஒரு மரத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் பளபளப்பாகப் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு மரத்தில் முட்கள் மண்டிய கிளைகளுக்கு இடையில் சொறி பிடித்தது போன்ற கனிகள் இருந்தன. அவனுக்குப் பசியாக இருந்தது. கண்ணைக் கவர்ந்த அந்த அழகிய கனிகளை அவன் முகர்ந்து பார்த்தான். அதன் மணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. இன்னொரு மரத்தின் கனியிலும் ஒன்றைப் பறித்து முகர்ந்து பார்த்தான். அதன் துர்நாற்றம் வயிற்றைப் பிரட்டியது. அதை வெறுப்போடு வீசி எறிந்தான். பிறகு முதல் மரத்தின் அழகிய கனியை ஆர்வத்தோடு புசித்தான். அதன் சுவை வருணிப்புக்கு எட்டாததாக இருந்தது. சொர்க்கத்தின் கனியே கிடைத்துவிட்டது என்பது போல் அவன் மகிழ்ந்து இன்னும் நான்கைந்து கனிகளைத் தின்று விட்டு அந்த மரத்தின் நிழலில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் உடலெல்லாம் நீலம் பாய்ந்து வாயில் நுரை தள்ளி மல்லாந்து விழுந்து மரணித்துவிட்டான்.


சிறிது நாட்கள் கழிந்தன. மூலிகை வைத்தியன் ஒருவன் தன் மகனுடன் அந்தக் காட்டிற்குள் வந்தான். தனது குல வித்தையைத் தன் மகனுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக. செடிகள் கொடிகள் அவற்றின் இலைகள் வேர்கள் காய்கள் கனிகள் இவற்றின் தன்மைகளை எல்லாம் தன் மகனிடம் சொல்லிக் கொண்டே வந்தான். காட்டாற்றின் ஓரத்தில் ஒரு மரத்தின் அடியில் கிடந்த அந்த வாலிபனின் பிணத்தை அவர்கள் கண்டார்கள். உடலெல்லாம் விஷம் பாய்ந்து அவன் செத்துப் போயிருப்பது தெரிந்தது. அவனுக்கு அருகில் சொறிப்பழம் ஒன்று கிடந்தது.

அதைப் பார்த்துவிட்டு மகன் தந்தையிடம், ‘அப்பா! இவன் அந்தச் சொறிப் பழத்தை உண்டதால் விஷம் பாய்ந்து இறந்து போயிருக்கிறான் என்று நினைக்கிறேன். சரிதானே?’ என்று கேட்டான்.

தந்தை அவனிடம் சொன்னான், ‘நீ நினைப்பது தவறு மகனே. கீழே கிடப்பது அவன் சாப்பிடாமல் போட்டுவிட்ட பழம். அது சொறி பிடித்தது போல் இருப்பதாலும் துர்நாற்றம் அடிப்பதாலும் அது விஷப் பழமாக இருக்கலாம் என்று நினைத்தே அவன் அதை உண்ணாமல் போட்டுவிட்டான். அவன் சாப்பிட்டது, இதோ, இந்த மரத்தின் பழம். இது பார்க்க அழகாகவும் மணமாகவும் இனிப்பாகவும் இருக்கும். ஆனால் இப்பழம் கொடிய விஷம்.”

இதைக் கேட்ட மகன் தன் தந்தையிடம், ’அப்படியானால் இதற்கு விஷ முறிவு ஏதேனும் உண்டா அப்பா?’ என்று கேட்டான்.

’நிச்சயமாக. அவன் சாப்பிடாமல் கீழே போட்டிருக்கிறானே, அந்தச் சொறிப் பழம்தான் இந்த பழத்தின் விஷத்திற்கான முறிவு. அதை அவன் ஒரே ஒரு கடி சுவைத்திருந்தால் போதும். இந்த விஷமெல்லாம் முறிந்து போயிருக்கும். அத்தனை வீரியமானது அது’ என்று வைத்தியன் தன் மகனுக்குச் சொல்லிக் கொடுத்தான்.”

இந்தக் கதை ஏன் சொல்லப்பட்டது என்று நான் சிந்தனை செய்திருந்தேன். அமுதம் என்று நினைத்தது விஷமாகவும், விஷம் என்று நினைத்தது அமுதமாகவும் இருந்து விடலாம் என்பதை இக்கதை உணர்த்துகிறது என்று விளங்கினேன்.

அப்போது, “அன்பர்களே! ஆன்மிகம் என்பது ஒரு பெருங்காடு. அதில் நுழைந்து கண்ணில் கண்டதையெல்லாம் ருசிக்கலாம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அதில் விஷக் கனிகளும் உண்டு. எதை உண்ணலாம் எதைத் தொடவும் கூடாது என்பதைச் சொல்ல ஒரு வழிகாட்டி – ஞான குரு – மிகவும் அவசியம்” என்றார் சூஃபி.

32


மாதுளம்பழம் பற்றிய பிரபலமான நபிமொழியைச் சொல்லிக் கொண்டிருந்தார் சூஃபி: “மாதுளம்பழம் சொர்க்கத்தின் பழங்களில் ஒன்று. இங்கே பூமியில் விளையும் மாதுளம் கனிகளிலும் ஒவ்வொரு கனிக்குள்ளும் சொர்க்கத்தின் ஒரு விதை உண்டு. அது எது என்று நமக்குத் தெரியாது. எனவே, எவர் ஒருவர் முழுமையாக ஒரு மாதுளங்கனியை உண்பாரோ அவர் சொர்க்கத்தின் ஒரு துளியை ருசித்தவராவார்.

இது நபி(ஸல்) அவர்கள் கூறிய அருள்மொழி. சரி, ஒரு மாதுளம்பழத்தின் விதைகளில் எது சொர்க்கத்திலிருந்து வந்த ஒன்று என்பது நபிக்குத் தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். அவர்களின் அகப்பார்வைக்கு அது சிரமமான காரியம் அல்ல. இதுதான் அந்தச் சொர்க்கத்தின் துளி என்று அவர்கள் சட்டென்று அடையாளம் காட்டிவிட முடியும். ஆனால் அவர்கள் சொன்னது நம் போன்ற சராசரி மனிதர்களுக்காக.”

இவ்வாறு அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் ஒரு சாதகர் கேள்வி கேட்டார்: “மகானே! இப்போதெல்லாம் மாதுளம்பழம் வாங்கி வந்து உடைத்துப் பார்த்தால் அதற்குள் பல விதைகள் அழுகிக் கிடக்கின்றனவே. அந்த அழுகிய விதையில் சொர்க்கத்தின் துளியும் போய்விட்டால் என்ன செய்வது?”

“ஏன் இந்தச் சந்தேகம்? அழுகாத விதைகள் உள்ளன அல்லவா? சொர்க்கத்தின் துளி அதில் இருக்கும். ஏனெனில், சொர்க்கத்தின் துளி அழுகாது!” என்றார் சூஃபி.

(சில சமயங்களில் யாருமே சாப்பிடாமல் முழு மாதுளம்பழமும் அழுகி விடுகிறதே. அப்போது அதிலிருக்கும் சொர்க்கத்தின் துளி என்னவாகும்? என்று என் மனதிற்குள் ஒரு கேள்வி உதித்தது. நான் அதை சூஃபியிடம் கேட்கவில்லை.)

”இந்த மஜ்லிஸ் (சபை) இருக்கிறதே, அதுவும் ஒரு மாதுளங்கனிதான். சொர்க்கத்தின் துளி போன்ற புனிதர் எவராது இங்கே அவசியம் இருப்பார். அவர் யார் என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒவ்வொருவரைப் பார்க்கும் போதும் அந்த சொர்க்கத் துளி இவராக இருக்கக் கூடும் என்று பார்த்து மதிப்பளிக்க வேண்டும். “உங்களில் ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்” (வ லா தல்மிஸூ அன்ஃபுஸ(க்)கும் -49:11) என்று குர்ஆன் சொல்கிறது. இதற்கு ஹழ்றத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கொடுத்த விளக்கம்: ‘அடுத்தவரின் குறைகளைத் துருவித் திரிவதில் நேரத்தைப் போக்காதீர்’ என்பதே.


எனினும், ஒரு ஜும்மா தொழுகையின் போது, இன்னின்ன மனிதர்கள் நயவஞ்சகர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அடையாளம் காட்டி எழுப்பி விட்டார்களே! அதுபோல், அகப்பார்வை கொண்ட மனிதருக்கு அழுகிய விதைகள் அடையாளம் தெரிந்தால் அது வேறு. சாதகர்கள், எல்லா நபர்களையும் சொர்க்கத் துளிகளாகவே காண வேண்டும். அகப்பார்வை பெற்ற ஞானிகளுக்கு உண்மையான சொர்க்கத் துளிகள் யார் யார் என்று அடையாளம் தெரியும்.” என்றார் சூஃபி.

Wednesday, July 9, 2014

தூக்கத்தை விடவும்...


வைகறை நேரத் தொழுகைக்கு ஒலிக்கும் அழைப்பில் மட்டும் சிறப்பாக ஓதப்படும் வரி: “அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்”

“தொழுகை தூக்கத்தை விடவும் மேலானது” என்பது இதன் பொருள்.

இது ஏன்? என்பதை நாம் அறிய வேண்டும்.

“தூக்கத்தில் மனிதன் இறைவனை மறந்திருக்கிறான். ஆனால் தொழுகையில் இறைவனை நினைக்கிறான். அதனால் தூக்கத்தை விடவும் தொழுகை மேலானது ஆகிறது. ஆனால், எவனது தொழுகையில் இறை நினைவு இல்லையோ அவனின் தொழுகை தூக்கத்தை விடவும் கீழானதுதான்.” என்று குருநாதர் பிலாலி ஷாஹ் ஜுஹூரி அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

இன்னொரு கோணத்தில் இன்னொரு விளக்கத்தை நாம் அடைகிறோம். அது நம் மூளையின் இயக்கம் சம்பந்தப் பட்டது.

தூக்கத்திலும் விழிப்பிலும் நம் மூளை ஒரே நிலையில் இருப்பதில்லை. அதன் இயக்கம் நமது பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. உண்மையில் மூளையின் செயல்பாடுகளையே நாம் “மனநிலை” என்னும் பெயரால் குறிப்பிடுகிறோம். “மனம் (Mind) என்பதை அளந்து ஆராய்ந்து அறிய உடலில் நமக்குக் கிடைத்திருக்கும் கருவி மூளைதான்” என்கிறார் தீபக் சோப்ரா.

மூளையின் அதிர்வுகளை அளக்கும் முறை Electro Encephalo Gram (EEG) எனப்படுகிறது. அதன் கணக்குப்படி மூளையின் அல்லது மனத்தின் நிலைகளை மருத்துவ விஞ்ஞானிகள் இப்படிப் பட்டியலிடுகிறார்கள்:

காம்மா நிலை: நொடிக்கு 30 அதிர்வுகளுக்கும் மேல். இந்நிலை சிந்தனை வயப்பட்ட நிலையில் இருப்பது.

பீட்டா நிலை: நொடிக்கு 15 முதல் 30 அதிர்வுகள். இந்நிலை விழிப்பு சுதாரிப்பு ஆகியவற்றில் இருப்பது.

ஆல்ஃபா நிலை: நொடிக்கு 9 முதல் 14 அதிர்வுகள். இந்நிலை நிம்மதி ஓய்வு அமைதி தியானம் ஆகியவற்றில் இருப்பது.

தீட்டா நிலை: நொடிக்கு 4 முதல் 8 அதிர்வுகள். இந்நிலை கனவுள்ள உறக்கம் ஆழ்ந்த ஓய்வு ஆழ்நிலை தியானம் ஆகியவற்றில் இருப்பது.

டெல்டா நிலை: நொடிக்கு 1 முதல் 3 அதிர்வுகள். இந்நிலை கனவில்லா ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது.

அதிகமாகச் சிந்திப்பதில் மூளை ஏன் விரைவாகச் சோர்வடைகிறது என்பது இப்போது புரிந்திருக்கும். மேலும், தியானம் என்பது சிந்திப்பது அல்ல என்பதும் இப்போது தெரிகிறது அல்லவா?

அதிகமாகச் சிந்திப்பவர்களே அறிவாளிகள் அல்லது சிறந்த கவிஞர்களாக, விஞ்ஞானிகளாக, மெய்ஞ்ஞானிகளாக இருப்பார்கள் என்று நாம் நினைத்து வந்திருக்கிறோம். இதிலோ தியானம் என்பது அல்ஃபா அல்லது தீட்டா நிலையாகவும் சிந்தித்தல் என்பது காம்மா நிலையாகவும் காட்டப்பட்டுள்ளது. இது ஒரு முரணாகத் தோன்றலாம்.

நியூராலஜி (மூளையியலின்) ஆராய்ச்சிக் கண்டறிதல்கள் வேறு விதமாகச் சொல்கின்றன. அதிகமாகச் சிந்திப்பது ஒருபோதும் உங்களை மேனிலைக்கு இட்டுச் செல்வதில்லை என்று அவை கூறுகின்றன. மூட்டை நிறைய செல்லாத பணம் வைத்திருப்பவன் எப்படிப் பணக்காரன் அல்லவோ அதே போல். மாறாக மில்லியன் ரூபாய்க்கு ஒரு கிரெடிட் கார்ட் வைத்திருப்பவனைப் போல் ஆழமான அமைதியான மனநிலை உள்ளவர்களே மேனிலை அடைகிறார்கள்.

“மேதைகள் எல்லா நேரங்களிலும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் என்னும் பொதுக் கருத்துக்கு மாறாக அவர்களின் மனம் சராசரியை விடவும் அமைதியாகவும் தெளிவாகவும் உள்ளது” என்கிறார் டாக்டர் தீபக் சோப்ரா.(நூல்: How To Know God, chapter #5: Strange Powers / Geniuses, Child Prodigies and Savants, p.222)

இஸ்லாம் என்றால் அமைதி வழி என்று பொருள். சலாம் என்றால் அமைதி என்று அர்த்தம். எனில், அந்த அமைதி வழியின் தொழுகை என்பது அமைதி நிலையில் நிகழ்வதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது தொழுகை என்பது ஆல்ஃபா நிலையில் அல்லது தீட்டா நிலையில் நிகழ்வதாக இருக்க வேண்டும்.

தொழுகைக்காக நீரால் அங்கசுத்தி (ஒளூ) செய்துகொள்கிறோம். மனதிற்குச் செய்யும் ’ஒளூ’ (Ablution) என்பது என்ன? உங்கள் மூளையின் அதிர்வுநிலையை ஆல்ஃபா அல்லது தீட்டா நிலையில் வைப்பது என்று சொல்லலாம்.

தியானம் என்பதிலும் உறக்கம் என்பதிலும் மூளை ஒரே அதிர்வு நிலையில் இருப்பதைக் காண்கிறோம். அப்படியானால் உறக்கமும் தியானமும் ஒன்றுதானா? அல்லது இரண்டும் எப்படி வேறுபடுகின்றன? என்று கேட்கலாம். இரண்டையும் வேறுபடுத்துவது சுதாரிப்பு (alertness) அல்லது பிரக்ஞை (consciousness) ஆகும்.

”உறக்கத்தில் சுதாரிப்பு அல்லது பிரக்ஞை இல்லை. ஆனால் ஓய்வுநிலை (relaxation) இருக்கிறது. தியானத்தில் அதே ஓய்வுநிலையுடன் பிரக்ஞையும் இருக்கிறது” என்பார் ஓஷோ.

உறக்கத்தை விடவும் தொழுகை மேலான நிலை ஆவது இப்படித்தான். அதாவது உறக்கத்தின் ஓய்வு நிலையுடன் பிரக்ஞையும் இருக்கும் நிலையே தொழுகைக்கான நிலை. ஆல்ஃபா அல்லது தீட்டா நிலையில் இருந்து பிசகி உங்கள் மூளை பீட்டா அல்லது காம்மா நிலைக்குப் போய்விடும் எனில் நீங்கள் தொழுகையில் இல்லை என்று சொல்லிவிடலாம்!
விழிப்பிலும் தூக்கத்தின் முழுமையான ஓய்வு நிலையில் இருப்பது என்பது சாத்தியமா? என்று ஐயம் வருகிறதா? நம் மூளையோ தூக்கத்தில் கூட ஓய்வாக இருப்பதில்லை அல்லவா?

தொழுகையில் மட்டுமல்ல, விழித்திருக்கும் நேரம் முழுவதும் இதே ஓய்வு நிலையில், ஆனால் பிரக்ஞையுடன், இருப்பவர்கள் உண்டு. அதாவது ஐவேளை தொழுகைக்கு வெளியிலும் தொழுகையின் ‘நிலை’யில் இருப்பவர்கள் உண்டு.

”தம் தொழுகையின் மீது (எப்போதும்) நிலைத்திருப்போர்” (அல்லதீனஹும் அலா சலாத்திஹிம் தாயிமூன் – 70:23)

”ஞானத்தின் தலைவாசல்” என்று சூஃபிகள் போற்றும் ஹழ்றத் அலீ (ரலி) அத்தகைய நிலையில் உன்னதமான படித்தரத்தை அடைந்தவர்கள். அன்னாரின் தொடையில் அம்பு தைத்தபோது அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் தோழர்கள் அந்த அம்பினை உருவி எடுத்தார்கள்! அறுவை சிகிச்சைக்குத் தேவையான ஓய்வு நிலை. ஆனால் முழுமையான விழிப்புணர்வுடன்!

இத்தகைய நிலையில் இருக்கும் மனிதர்கள் யார்? அவர்கள் அந்த நிலையை எப்படி அடைந்தார்கள்? என்பதைப் பார்க்கலாம்.

மனிதனின் மனத்தை சஞ்சலப்படுத்தும் விஷயங்கள் என்று அச்சம் மற்றும் கவலை ஆகியவற்றைக் கூறலாம். என்ன ஆகுமோ என்னும் அச்சம். இப்படி ஆகிவிட்டதே என்னும் கவலை. இப்படி ஆகிவிடுமோ என்னும் அச்சம். இப்படி ஆகவில்லையே என்னும் கவலை. இவ்விரு விஷயங்களை விட்டும் விடுதலை அடைந்த ஒரு கூட்டத்தை குர்ஆன் அடையாளம் காட்டுகிறது:

”அறிந்துகொள்க. நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அலா இன்ன அவ்லியா அல்லாஹி லா ஃகவ்ஃபுன் அலைஹி வ லா ஹும் யஹ்ஸனூன் -10:62)

அவர்களின் மனத்தை மட்டும் அச்சமும் கவலையும் தீண்டாதது எப்படி என்று கேட்கலாம்.
அவர்கள் கடவுளை அடைந்தவர்கள். தம் உள்ளே கடந்து கடவுளை அடைந்தவர்கள். இறைவனைத் தம் இதயத்தில் குடி வைத்தவர்கள்.


இறைவனை அச்சமும் கவலையும் தீண்டுவதில்லையே!