Monday, November 23, 2009

உரைநடை - நடந்துதான் பார்க்கலாம்!

"பிரபஞ்சக்குடில் போட்டிருக்கிறீர்கள். நான் கொட்டாரவாசி. குடிலுக்கு எப்போதாவதுதான் விருந்தாளியாக வருவேன்." என்று நண்பர் மௌலா அப்துல் காதிர் கூறினார். அதன் அர்த்தத்தையும் அவரே சொன்னார், "கவிதைகள் எனக்கு விளங்குதல் கடினம். உரைநடையே பழக்கம்." 
விருந்தினருக்கு எது பிடிக்குமோ அதைச் சமைத்து வைப்பதுதான் முறை. "இது எங்க ஊரு பதார்த்தம். சாப்பிட்டுப் பாருங்க" என்று கூறி சில பல வகைகளை வைப்பதும் உண்டல்லவா? அதுபோல், கொட்டாரவாசிகளுக்கும் இதர வட்டாரவாசிகளுக்கும் அவ்வப்போது கவிதைகளைப் பரிமாறிக்கொண்டே உரைநடைப் பதிவுகளை  வழங்கலாம்  என்று பத்து நாள் யோசனைக்குப் பிறகு முடிவாகிவிட்டது.
"வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்" என்று ஓஷோவின் நூல் ஒன்று உண்டு. ஏறக்குறைய அதே நிலைதான். வண்டி வண்டியாக வார்த்தைகளைக்  கொட்டி எழுதும் பழக்கம் எனக்கில்லை. சொல்லப்போனால் நான் கவிதை எழுத ஆரம்பித்ததே சொல் சிக்கனத்துக்காகத்தான். சுருங்கக் கூறி விளங்க வைத்தல் என்பார்களே, அதுபோல. அல்லது சுருங்கக் கூறி குழப்பி வைத்தல் என்றாலும் எனக்குச் சம்மதமே.
மனதிற்குள் மௌனம் குடி கொள்ள வேண்டி என்ன பாடுகள்? வார்த்தைகள் மறைய நாளெல்லாம் தியானத்தில் ஒற்றைத் திருப்பெயர் மட்டும் மூச்சில் இழையும் லயம் கண்டிருத்தல் அனுபவித்தபின் வார்த்தைகளின் வெள்ளப்பெருக்கு சகிக்கக் கூடியதன்று. இதில் நான் தமிழ் விரிவுரையாளன் வேறு!
வலம்புரி ஜான் அவர்களுக்கு "வார்த்தை வங்கி" என்று ஒரு பட்டம் யாரோ சூட்டியிருந்தார்கள். என் வங்கியோ
 திவாலாகிக்கொண்டிருப்பதையே விரும்புகிறேன்.
"வேதம் கண் போன்றது. அதற்குக்  கூறப்படும் உரை கண்ணுக்கு மை இடுதல் போல் இருக்க வேண்டும். அதிகமாகிவிட்டால் அசிங்கமாகிவிடும். லேசாகத் தீட்டவேண்டும்." என்பது பாரதியின் "வேதத் திருவிழியாள்" என்னும் பாடலின் கருத்து.
என் உரைநடை அதுபோலத்தான் அமையும் என்று நினைக்கிறேன்.