Thursday, March 10, 2011

மஜ்னூன் சொல்கிறான்



மஜ்னூன் சொல்கிறான்:
காதல் என்னைத் தொட்டபோது
காம்பஸ் கருவியின்
காந்தமுள் போலானேன்.
அவள் வீடே 
என் உலகின் 
ஒற்றைத் திசை ஆனது.

மஜ்னூன் சொல்கிறான்:
வீட்டுக்குள் இருக்கும்
நிஜம் அவள்.
வீதியில் அலையும்
நிழல் நான்.

மஜ்னூன் சொல்கிறான்:
அவளின் தெருவில்
நாயைப் போல் அலையும் எனக்கு
அவளின் தெருவில்
அலையும் நாய்
அரசனைப்போல் தெரிகிறது!

மஜ்னூன் சொல்கிறான்:
அவளின் தெருவில்
நான் அலைவது
இருக்கும் ஒன்று
தொலைந்த ஒன்றைத்
தேடுவது அல்ல,
தொலைந்த ஒன்று
இருப்பதைத் தேடுவது.

மஜ்னூன் சொல்கிறான்:
லைலாவின் பெயரில்
நான் அடைந்துகொண்டதை
அல்லாஹ்வின் பெயரிலும்
அடையவில்லை நீ.
ஏனெனில்
நான் லைலாவின் காதலன்
நீ அல்லாஹ்வின் எதிரி!

மஜ்னூன் சொல்கிறான்:
வீடு துறந்து அவளது
வீதியின் தூசியாகிவிட்ட
என்னைப் பார்,
பக்தனே!
இறைவனின் வீட்டை அடைய
உன் வீட்டைவிட்டு
வெளியேறத்தான்
வேண்டும் நீ.
இறைவனையே அடைய
உன்னையே விட்டு
வெளியேறத்தான்
வேண்டும் நீ!

மஜ்னூன் சொல்கிறான்:
ரோஜா
காதலின் சின்னம்
என்பது சரிதான்.
காலையில் இருக்கிறது
அவளைப் போல்.
மாலையில் ஆகிறது
என்னைப் போல்.

  

3 comments:

  1. //வீட்டுக்குள் இருக்கும் நிஜம் அவள்.
    வீதியில் அலையும் நிழல் நான்.

    இறைவனையே அடைய உன்னையே விட்டு
    வெளியேறத்தான் வேண்டும் நீ! //

    அருமை அருமை

    ReplyDelete
  2. //இறைவனையே அடைய
    உன்னையே விட்டு
    வெளியேறத்தான்
    வேண்டும் நீ!//


    என்னைவிட்டு நானே வெளியேரணும்னா...? எப்பூடி?

    அதான வெளங்கல!

    அழகிய கவிதை. ரூமி சொன்னது போல உள்ளது.

    ReplyDelete