இனி, மூன்று யகீன்களின் விஷயத்திற்குத் திரும்புவோம். அவை மூன்றும்
திருக்குர்ஆனில் சொல்லப்பட்டவை என்றேன். இல்முல் யகீன் (102:5), ஐனுல் யகீன்
(102:7), ஹக்குல் யகீன் (69:51) என்பது அவை இடம்பெற்றுள்ள திருவசன விவரமாகும்.
இத்தருணத்தில் ஒரு நபிமொழியைக் கவனத்தில் கொள்வோம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நாமே இப்றாஹீம்
(அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதி உடையவர்கள் ஆவோம். இப்றாஹீம் (அலை)
அவர்கள், ‘என் ரட்சகனே! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகின்றாய் என்று எனக்குக் காட்டு’
என்று கேட்டபோது, அல்லாஹ், ‘நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்று கேட்டான். அவர்கள்,
‘ஆம், ஆனாலும் என் உள்ளம் நிம்மதி அடைவதற்காக இப்படிக் கேட்டேன்’ என்று பதிலளித்தார்கள்”
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹ் புகாரி:3372)
மேற்கண்ட நபிமொழியில் இடம்பெற்றுள்ள சம்பவம் திருக்குர்ஆனில்
(2:260)-ஆம் திருவசனத்தின் முற்பாதி ஆகும். அதன் பிற்பாதி பின்வருமாறு:
“’பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து (அவை உம்மிடம் திரும்பி
வருமாறு) பழக்கிக் கொள்ளும். பின்னர் (அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு
மலையின் மீது வைத்துவிடும். பின், அவற்றைக் கூப்பிடும். அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து)
வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்’ என்று
(அல்லாஹ்) கூறினான்.” (2:260)
இப்றாஹீம் (அலை) இவ்வாறு இறைவனிடம் கேட்டது பற்றி அழகிய விளக்கம்
ஒன்றைத் தருகிறார் மௌலானா ஃபஸ்லுல் கரீம்: “இவ்வகை ஐயம் அவர்களை இல்முல் யகீன் என்னும்
அறிவு நிலையிலிருந்து ஐனுல் யகீன் என்னும் காட்சி நிலைக்கு உயர்த்துவதாக இருந்தது.”
(நூல்: மிஷ்காத்துல் மஸாபீஹ் – கிதாபுல் அன்பியா,
ஹதீஸ் எண்: 9 அடிக்குறிப்பு.)
மேற்கண்ட ஹதீஸில் மௌலானா ஃபஸ்லுல் கரீம் அவர்கள் விளக்காமல்
விட்டு விட்ட பகுதி ஒன்றுள்ளது: ”நாமே இப்றாஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள
அதிகத் தகுதி உடையவர்கள் ஆவோம் (நஹ்னு அஹக்கு
பிஷ்ஷக்கி மின் இப்றாஹீம்)” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதன் கருத்து என்ன?
நிச்சயமாக அடுத்த நிலை நோக்கிய உயர்வுதான். அதாவது ஐனுல் யகீன்
என்னும் காட்சி நிலையிலிருந்து ஹக்குல் யகீன் என்னும் அனுபவ நிலைக்கு உயர்வது!
திருக்குர்ஆனில் இந்த மூன்று வகை யகீன்களை நோக்கிய திருவசனங்கள்
இருக்கின்றன.
அறிந்து கொள்ளத் தூண்டும் திருவசனங்களையும் அறிவித்துத் தரும்
திருவசனங்களையும் இல்முல் யகீனை நோக்கியவை எனலாம்:
“அறிக: நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி இலாஹ் (தேவைகளைப் பூர்த்தி
செய்து தரும் இறைவன், எனவே வணக்கத்திற்குரியவன்) வேறில்லை” (47:19)
“அறிக: நிச்சியமாக உங்களுக்குள் அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார்” (49:7)
“அறிக: இதயங்களின் நிம்மதி என்பது அல்லாஹ்வின் தியானைத்தைக்
கொண்டே உள்ளது” (13:28)
“அறிக: நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் – அவர்கள் மீது அச்சம்
இல்லை, மேலும் அவர்கள் கலைப்படவும் மாட்டார்கள்” (10:62)
இவையெல்லாம் அறிந்துகொள்ளத் தூண்டும் திருவசனங்கள்.
“நீங்கள் எப்பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம்
உள்ளது” (2:115)
இது அறிவித்துத் தரும் திருவசனம். இதில் அல்லாஹ்வின் முகம் என்பது
எதைக் குறிக்கும் என்று விளக்கப்படாமல் பூடகமாகவே சொல்லப்பட்டுள்ளது. மேலும் அல்லாஹ்வின்
முகத்தைப் பார்க்குமாறு கட்டளை இவ்வசனத்தில் இல்லை.
“அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான்”(24:35)
இதுவும் தகவல் தருகின்றது. ஆனால் அந்த ஒளியை தரிசிக்குமாறு கட்டளை
இவ்வசனத்தில் இல்லை.
“நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கின்றான்” (57:4)
“நாம் பிடரி நரம்பை விடவும் (மனிதனாகிய) அவனிடம் மிகவும் நெருக்கமாக
இருக்கின்றோம்” (50:16)
இதிலும் அறிவித்துத் தருதல்தான் இருக்கின்றது. அனுபவத்தை அடையுமாறு
கட்டளை இடப்படவில்லை.
ஆழ்ந்த பார்வையுடன் (தஃபக்குர்) அகப்பார்வையுடன் (பஸீரத்/ முஷாஹதா)
கூடிய காட்சியைத் தூண்டும் திருவசனங்களை ஐனுல் யகீனை நோக்கியவை எனலாம்.
இவை இரண்டு வகைப்படும்.
1.படைப்புக்களில் அகப்பார்வை செலுத்தி அதில் இறைவனின் ’அஃப்ஆல்’
என்னும் செயல்பாடுகளைக் காணத் தூண்டும் திருவசனங்கள்:
”ஒட்டகத்தை
அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா, அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று?
மேலும்
வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று,
மேலும்
மலைகளை, அவை எவ்வாறு நடப்பட்டிருக்கின்றன என்று,
மேலும் பூமியை, அது எவ்வாறு விரிக்கப்பட்டிருக்கிறது என்று” (88:17-20)
“வானத்தின் வெளியில் கட்டுப்பட்டுப் பறக்கும் பறவைகளை இவர்கள்
பார்க்கவில்லையா? அவற்றைத் தாங்கியிருப்பவன் அல்லாஹ்வே அன்றி வேறில்லை” (16:79)
வெறுமனே படைப்புக்களை மட்டும் பார்த்து வரும் மனிதனை அவற்றில்
இறைவனின் செயல்பாடுகளைப் பார்க்குமாறு இவ்வசனங்கள் சொல்கின்றன.
2. படைத்தவனாகிய இறைவனை (அகப்பார்வை கொண்டு) தரிசிக்குமாறு சொல்லும்
திருவசனங்கள். அதாவது அல்லாஹ்வின் சிஃபாத் என்னும் திருப்பண்புகளையும் உஜூது என்னும்
உள்ளமையையும் வெளிப்பாடு (ஜுஹூர்) என்னும் அடிப்படையில் தரிசிக்கச் சொல்லும் திருவசனங்கள்:
”உம் இறைவனின் பக்கம் நோக்குக, எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்று” (25:45)
இத்திருவசனத்தில் நிழல் என்னும் செயப்படுபொருள் (மஃப்ஊல்) மற்றும்
நீட்டுதல் என்னும் செயல் (ஃபிஃல்) ஆகியவை குறிப்பிடப் பட்டிருந்தாலும் நோக்கும்படியான
கட்டளை இவற்றின் பக்கம் இல்லாது றப்பு – இறைவன் என்னும் செய்பவன் (கர்த்தா – ஃபாயில்)
பக்கம் சொல்லப் பட்டுள்ளது. அதாவது கர்த்தா – கர்மம் – கருவி ஆகிய மூன்றில் இவ்வசனம்
கர்த்தாவைக் காணுமாறு கட்டளை இடுகிறது.
அதாவது, “நிழலின் பக்கம் நீங்கள் நோக்க வேண்டாமா, அது எவ்வாறு
நீட்டப்படுகிறது என்று?” என்பதாக, மஃப்ஊல் (செயப்படுபொருள்) ஆன நிழலை நோக்கியதாக இவ்வசனம்
இல்லை. ஆனால் அகப்பார்வை அருளப்படாதவர்கள், பொது நிலையைச் சேர்ந்தவர்கள், இல்முல் யகீன்
நிலையில் நிற்பவர்கள் மற்றும் ஐனுல் யகீனில் அஃப்ஆல் என்னும் செயல்பாடுகளின் தரிசன
நிலையில் மட்டும் நிற்பவர்கள் இந்தத் திருவசனத்தைத் தாம் நிற்கும் நிலைக்கு வளைத்து
இவ்வாறுதான் பொருள் கொள்வார்கள்.
ஹக்குல் யகீன் என்னும் மெய்ஞ்ஞான அனுபவத்தை நோக்கித் தூண்டுகின்ற
வசனங்களும் திருமறையில் உள்ளன:
”அல்ல, எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கு (முழுமையாக) அர்ப்பணித்து
நற்கருமங்களைச் செய்கிறானோ அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உள்ளது. இத்தகையோர் மீது
அச்சமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (2:112)
”நிச்சயமாக நான் என முகத்தை வானங்களையும் பூமியையும் படைத்தவனுக்காகவே
உறுதியாக அமைத்துவிட்டேன்” (6:79)
”கூறுக: மெய்யாக என் தொழுகையும் என் தியாகமும் என் வாழ்வும்
என் மரணமும் அகிலங்களின் ரட்சகனான அல்லாஹ்வுக்கே” (6:162)
”அல்லாஹ்தான் சுருக்குகிறான், விரிவாக்குகிறான்” (2:245)
“நிச்சயமாக
அவனே சிரிக்க வைக்கிறான், அழச் செய்கிறான்
இன்னும்
நிச்சயமாக அவனே மரிக்கச் செய்கிறான், மேலும் உயிர்ப்பிக்கிறான்” (53:43,44)
”அல்லாஹ்விடம் விரைக” (51:50)
“நாம்
உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
மேலும் நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்” (94:1,2)
”எனவே,
நீர் ஓய்ந்ததும் முயல்வீராக
மேலும், உம் இறைவனிடம் சார்ந்து விடுவீராக” (94:7,8)
(விளக்கத்திற்கு ஓர்
உதாரணம்: ஓர் இல்லத்தரசி, நாளெல்லாம் தன் கணவனுக்கும் அந்தக் கணவனைக் கொண்டு பெற்ற
தன் பிள்ளைகளுக்குமாகப் பணிவிடை செய்கிறாள். வீட்டைப் பராமரிக்கின்றாள். கணவனுக்கும்
பிள்ளைகளுக்கும் விருப்பமானபடி உணவு வகைகளைச் சமைக்கின்றாள். இரவு வரை வேலைகள் அவளுக்கு.
அதன்பின் ஓய்ந்து உறக்கம் கொள்ளும் சமயம் தன் நேசக் கணவனின் மார்பில் தலை சாய்த்துக்
கண் மூடும் அந்தத் தருணம்தான் அவளுக்கு எத்தனை இனிமையானது!)
திருக்குர்ஆனில் இறைவனைப் பற்றிய திருவசனங்களில் பெரும்பான்மை
அறிவித்துத் தருபவையே ஆகும். ஏனெனில் ’இல்முல் யகீன்’ என்னும் நிலைதான் மனிதர்களுக்குப்
பொதுவானதாக இருக்கின்றது. அதைத் தாண்டி ஐனுல் யகீன் என்னும் நிலையை அடைபவர்கள் அரிது.
அதையும் தாண்டி ஹக்குல் யகீன் என்னும் நிலைக்கு வருபவர்கள் அரிதினும் அரிது. சூஃபிகள்
என்றும் அவ்லியாக்கள் என்றும் அழைக்கப்படும் இறைநேசர்களே அந்த நிலைகளை அடைகிறார்கள்.
பொதுமக்களுக்கோ மேற்சொன்ன திருவசனங்கள் அனைத்துமே வெறும் ’கீல்’
(வாய்ச்சொல்) ஆக இருக்கின்றன. ஆனால் இறைநேசர்களான சூஃபிகளுக்கோ அவை அனைத்துமே ’ஹால்’
(மனநிலைகள்) ஆக இருக்கின்றன. எனவேதான் அவர்கள் சதா இறைவனின் அனுபவத்தில் திளைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
(to be continued...)
No comments:
Post a Comment