’நீராலானது’ - தேவதேவன்
தன் கவிதைத் தொகுப்பு ஒன்றனுக்கு இப்பெயர் சூட்டினார். என்னை மிகவும் கவர்ந்த தலைப்புக்களில்
இதுவும் ஒன்று.
இது ரமலான் மாதம். நோன்பின் மாதம். உணவுத் தடை மட்டுமன்று. வற்றி
வரலும் வாய்க்கும் வயிற்றுக்கும் நீர்கூட வார்க்காத நோன்பு. ரமலான் என்றால் ’எரிப்பது’
என்று பொருள். பசி ஒரு தீ. அந்தப் பசித்தீ ரமலானில் முக்கிய இடம் பெறுகிறது.
சில நாட்களுக்கு முன் கல்லூரியில் ஒரு பேராசிரியர் சொன்னார்,
“உணவு கூட இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் தண்ணீர் தாகம்தான் அதிகக் கஷ்டமாக இருக்கிறது.”
’பசித்த வாய்க்கு உணவு’ என்றும் ‘பசிக்குச் சோறு’ என்றும் பேசப்
படுவதுண்டு. அது தண்ணீராவது கிடைத்தவர்களின் அனுபவமாக இருந்திருக்கும். தமிழகத்தில்
அந்தக் காலங்களில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு இல்லை அல்லவா?
ஆனால் பசியைவிட இன்னும் ஆழமானது தாகம். பாலைவனத்தில் பசி மட்டும்
பிரச்சனை அல்ல. அதைவிடப் பெரிய பிரச்சனை தாகம். நீர் ஓர் அரும்பொருள் ஆன அரபுப் பாலையில்
தோன்றிய இறைத்தூதருக்கு அருளப்பட்ட நோன்பு அமைப்பில் உணவு தவிர்த்த பசியுடன் நீர் தவிர்த்த
தாகமும் இடம் பெற்றுள்ளது.
அன்று என் பிள்ளைகளும் நோன்பு வைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றிருந்தார்கள்.
நான்கு மணி வாக்கில் வீடு திரும்பிய இருவரும் ‘தண்ணி வேணும் தண்ணி வேணும்’ என்று தவித்துக்
கொண்டே வந்தார்கள். அப்படியாக, அவர்களின் நோன்பு நான்கு மணிக்கெல்லாம் முடிவுற்றது.
அவர்கள் திண்பண்டம் கேட்காமல் தண்ணீர் கேட்டது என் சிந்தனையில்
சுழன்று கொண்டே இருந்தது. பசியை தாகம் முந்தி விடுகிறது. காரணம் என்ன?
’நீராலானது’ என்று தேவதேவன் தன் நூலுக்கு இட்ட தலைப்பு நியாபகம்
வந்தது. அந்தத் தலைப்பிற்கான கவிதை என் ஞாபகத்தில் இல்லை. நீராலானது என்று எதனைச் சொல்கிறார்?
எது நீரால் ஆனது?
”உயிருள்ள
ஒவ்வொன்றையும்
நாம்
நீரிலிருந்து வெளியாக்கினோம்”
(21:30)
என்னும்
திருக்குர்ஆன் வசனம் ஞாபகம் வந்தது. நீரருந்தும் போதெல்லாம் என் நினைவில் தோன்றும்
திருவசனம்!
மனிதனுக்கு
மட்டுமல்ல, சர்வகோடி ஜீவராசிகளுக்கும் நீர் என்பது தேகத்தின் மூலம்.
பிரபஞ்சம்
ஒலியால் ஆனது என்பதொரு பார்வை. அவ்வொலி என்ன என்பதை அறிந்தவர்கள் அரிது.
பிரபஞ்சம்
ஒளியால் ஆனது என்பதொரு பார்வை. அவ்வொளி என்ன என்பதை அறிந்தவர்கள் அரிது.
பிரபஞ்சம்
சொல்லால் ஆனது என்பதொரு பார்வை. அச்சொல் என்ன என்பதை அறிந்தவர்கள் அரிது.
அந்த
ஒலியும் ஒளியும் சொல்லும் ஒன்றே. இதனை அறிந்தவர்களும் அரிது.
‘பிரபஞ்சம்
நீரால் ஆனது’ என்று நான் சொல்லிக் கொண்டேன். மனதில் இந்த வாசகம் தெவிட்டாமல் தித்தித்து
இன்பம் தந்தது.
அந்த
ஒலியும் ஒளியும் சொல்லும் நீரும் ஒன்றே.
’ஒவ்வொரு
வஸ்துவும் தன் மூலத்தின் பக்கம் மீள்கிறது’ (குல்லு ஷைஇன் யர்ஜிஉ இலா அஸ்லிஹி) என்பது
ஒரு சூஃபி ஞானவுரை.
உடலில்
உள்ள மண் மண் விளைந்த உணவைத் தேடும் தேட்டமே பசி.
உடலில்
உள்ள நீர் நீரைத் தேடுவதே தாகம். எது குறைகிறதோ அதனைக் கொண்டு நிரப்ப வேண்டுவதே தேவையும்
நிறைவும்.
மனித
உடலின் கலவையில் மண்ணின் சத்தைவிட நீரின் சத்து மிக மிக அதிகம். சராசரி மனித உடலில்
அறுபது விழுக்காடு நீர். எனவே மனித உடலுக்கு மண்ணின் தேவையை விட நீரின் தேவை பெரிது.
அதனால்தான், தாகம் பசியை முந்துகிறது.
”தாகித்தவன்
நீரில்
இறைவனைக் காண்கிறான்
தாகமில்லாதவன்
தன் முகத்தின்
பிம்பத்தையே
காண்கிறான்”
என்கிறார்கள்
மௌலானா ரூமி.
நீர்
என்பது இறைவனின் கருவிகளுள் ஒன்று.
பிரபஞ்சம்
அவன் வரைந்த நீரோவியம்.
”அனைத்தையும்
நீரிலிருந்தே உயிருடன் வெளியாக்கினோம்” என்று சொல்லும் இறைவனை,
“அனைத்தையும்
இணைகளாகப்
படைத்த
அவன்
பரிசுத்தமானவன்”
(36:36)
என்று
புகழ்கிறது திருக்குர்ஆன்.
நீரும்
ஒரு ஜோடி. ஹைட்ரஜன் ஆண். ஆக்சிஜன் பெண்.
மரத்தின்
ஆதாரம் வேர். உயிருக்கு அந்த வேர் தேடுவது நீர். எனவே நீர் என்பது வேரின் வேர்.
”பரிசுத்தமான
திருக்கலிமா (மூல மந்திரம்)
ஓர் பரிசுத்தமான
மரத்தினைப் போன்றது.
அதன்
வேர்கள் ஆழ்ந்து ஊன்றியவை
அதன்
கிளைகள் வானளாவியவை
அது தன்
ரட்சகனின் உத்தரவு கொண்டு
எல்லாக்
காலங்களிலும்
கனிகளைச்
தருகின்றது”
(14:24,25)
மூல மந்திரம்
மனிதர்களின் மனங்களில் விதையாகத்தான் இருக்கிறது. பக்தி என்னும் நீர் அதனை விருட்சமாக
வளரச் செய்கிறது. வளர்ந்த பின் அது ஞானக் கனிகளைத் தருகிறது. விதையில் இருந்து விருட்சத்தை
அடையலாம்; விருட்சத்திலிருந்து கனிகளை அடையலாம். விருட்சத்தில் விளையும் கனிகளை விதையிலிருந்து
பெற முடியாது.
”அவனே
வானங்களையும் பூமியையும்
ஆறு நாட்களில்
படைத்தான்.
அவனின்
அர்ஷ் நிரின் மீது இருந்தது”
(11:7)
என்கிறது
திருக்குர்ஆன்.
“இறைநம்பிக்கையாளனின்
இதயம்
இறைவனின்
அர்ஷ் (ஆசனம்)”
என்று
அருளினார்கள் நபிகள் நாயகம்.
மண்ணாலான
உடல் என்னும் பூமியில் பேரளவு தண்ணீர் இருக்கிறது. அதில் இதயமோ இறைவனின் அர்ஷாக இருக்கிறது.
இதுவரை
நீரை நீராக வைத்தே பேசி வந்தோம். திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்கும் அர்த்தம் சார்ந்து
புறமும் (ழாஹிர்) அகமும் (பாத்தின்) உண்டு என்னும் நபிமொழிக் கருத்தின்படி நீர் என்பது
ஒரு குறியீடாக நின்று பல ஞானங்களைத் திறந்து தரும் இடங்கள் உண்டு.
“மேலும்
பூமியில் அருகருகே இணைந்தாற்போல்
பல பகுதிகளை
(அமைத்து அவற்றில்)
திராட்சைத்
தோட்டங்களையும்
விளை
நிலங்களையும்
கிளைகள்
உள்ளதும் கிளைகள் இல்லாததுமான
பேரீச்சை
மரங்களையும் (உண்டாக்கினான்).
ஒரே தண்ணீர்
கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும்
அவற்றில்
சிலவற்றை வேறு சிலவற்றை விடவும்
சுவையில்
நாம் மேன்மை ஆக்கியுள்ளோம்
நிச்சயமாக
இவற்றில்
உணர்ந்தறியும்
மக்களுக்குப்
பல அத்தாட்சிகள்
இருக்கின்றன.”
(13:4)
இறைவனின்
வெளி அத்தாட்சிகளை அறிவோர் பலராவர். சூஃபிகள் அவனின் அந்தரங்க அத்த்தாட்சிகளையும் அறிந்துகொள்கிறார்கள்.
மேற்சொன்ன வசனத்தில் நீர் என்பது இறைவனின் ஏகத்துவத்தையும் தாவர விளைச்சல்கள் படைப்புக்களையும்
குறிப்பதாகக் காண்கிறார் சூஃபி ஞானி ஃபக்ருத்தீன் இராக்கீ (ரஹ்).
அவர்களின்
ஞான நூலான ‘லமஆத்’ (ஒளிச்சுடர்கள்)-இன் பதினாறாம் பாடத்தின் தலைப்பில் இவ்வாறு சொல்கிறார்கள்:
“இறைவனின்
ஏகத்துவத்தின் மீது படைப்புக் கோலங்களின் பன்மைத் தன்மையால் எந்த பாதிப்பும் இல்லை.
எனவே இந்தப் பன்மைகளில் அது தன் ஏகத்துவத்தில் நிலைத்தே இருக்கிறது. இதனை விளக்கும்
ஓர் உதாரணம் பற்றி:”
அந்தப்
பாடத்தை இவ்வாறு முடிக்கிறார்கள்:
“இந்த
இயக்கங்களின் மூலம் ஒன்றுதான். அதுவே எல்லா இடங்களிலும் புதிய புதிய வண்ணங்களை வெளிப்படுத்துவதால்
வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ’ஒரே
தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும்
அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விடவும்
சுவையில் நாம் மேன்மை ஆக்கியுள்ளோம்.’(13:4)”
”நீர்
நோக்கி நீளும் வேர்களைப் போல்
உன் தேடல்
நீளட்டும்”
என்பார்
அப்துல் ரகுமான். (ஆலாபனை).
நீரின்
மூலம் எதுவோ நம் மூலமும் அதுவே. சகலத்தின் மூலமும் அதுவே. அந்த ஆதி மூலமான பரம்பொருளை
நோக்கி நம் தேடல்கள் நீளட்டும்!
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteரமலான் முபாரக்.
மிக ஆழமான சிந்தனை,
எது குறைகிறதோ அதனைக் கொண்டு நிரப்ப வேண்டுவதே தேவையும் நிறைவும்.
நம்முடைய வாழ்வில் நாம் இதனை பின்பற்றுகிறோமா?