Saturday, March 16, 2013

ஊசியின் காது



இறைவனைப் பற்றிச் சராசரி மனிதர்கள் விளங்குவதற்கும் இறைஞானிகள் விளங்குவதற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு.

இறைவனின் வல்லமையைக் கூட தம் அறிவு எல்லையில் நின்று மட்டுமே விளங்கும் நிலை நிறைய பேரிடம் இருக்கின்றது.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: “ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா?”

இஃது ஒரு நிபந்தனையாகத் திருக்குர்ஆன் வசனமொன்றில் குறிப்பிடப்படுகிறது, இவ்வாறு:
“எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து
மேலும் அவற்றிடம் தற்பெருமை அடித்தார்களோ
நிச்சயமாக அவர்களுக்கு
வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டா;
ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில்
அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைய மாட்டார்கள்;
குற்றவாளிகளுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம்”
(7:40)

ஆக, “ஊசியின் காதில் ஒட்டகம் நுழைய முடியுமா?” அல்லது, “ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைக்க முடியுமா?”

சிறுபிள்ளைகளிடம் இக்கேள்வியைக் கேட்டால், வியப்பில் விழிகள் விரிய அவர்கள் விடை தருவார்கள், “நிச்சயமாக முடியாது” என்று.

அத்தனை சிறிய ஓட்டைக்குள் இத்தனை பெரிய ஒட்டகம் எப்படி நுழையும்? முடியாது, முடியவே முடியாது.

இறை நம்பிக்கையாளர் இப்படிச் சொல்வார்: “நம்மால்தான் முடியாது. ஆனால் இறைவனால் முடியும். அவன் சர்வ வல்லமை உடையவன்”

தர்க்கத்தின் பால பாடத்தில் கொஞ்சம் பயிற்சி உள்ளவராக இருப்பவரும்கூட இப்படிச் சொல்வார்:
“ஒரு பெரிய ஊசி செய்ய வேண்டும். அதன் காது ஒட்டகத்தை விடவும் பெரிதாக இருக்க வேண்டும். பிறகு ஒட்டகத்தை அதனுள் நுழைந்து அப்பால் போகும்படிச் செய்துவிடலாம். இது மனிதனால் முடியும் அல்லவா?”

இதே தர்க்கத்தைப் பயன்படுத்தி இன்னொரு இறைநம்பிக்கையாளர் சொல்வார்: “சரிதான். இன்னொரு வழி என்னவெனில் ஊசியின் காதைவிட ஒட்டகத்தைச் சிறியதாக்கி விட வேண்டும். அப்போதும் ஒட்டகம் ஊசியின் காதிற்குள் நுழைந்து அப்பால் போய்விடும். ஒட்டகத்தை அத்தனை சிறிதாக்க மனிதனால் முடியாது. ஆனால் இறைவனால் முடியும்.”

இவையெல்லாம் மனிதன் தன் அறிவின் எல்லைக்குள் நின்று பேசுவதாகவே உள்ளன. இதே விஷயத்தில் இறைஞானிகள் எப்படிப் பார்வை கொண்டுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.

அடியேனின் குருநாதர் பிலாலி ஷாஹ் ஜுஹூரி அவர்கள் பிரசங்கம் ஒன்றில் சொன்னார்கள்:
“ஊசியின் காதைப் பெரிதாக்கி அதில் ஒட்டகத்தை நுழைத்துவிடும் ஆற்றல் பெற்றவன் அல்லாஹ் என்று சிலர் சொல்கிறார்கள்.
ஒட்டகத்தைச் சிறிதாக்கி அதை ஊசியின் காதில் நுழைத்துவிடும் ஆற்றல் பெற்றவன் அல்லாஹ் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.
ஊசி அதன் அளவில் சிறியதாகவே இருக்க, ஒட்டகம் அதன் அளவில் பெரியதாகவே இருக்க, அப்போதும் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்து வெளியேற்றிவிடும் ஆற்றல் பெற்றவன் அல்லாஹ்!”

இதே போல் இன்னொரு விஷயமும் நியாபகம் வருகிறது.

யானையைப் படைத்தவனும் அவனே; பூனையைப் படைத்தவனும் அவனே.
யானைக்கு அதற்குத் தேவையான உணவை அளிப்பவன் அவனே. பூனைக்கு அதற்குத் தேவையான உணவை அளிப்பவன் அவனே.

யானைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தருகிறான். பூனைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தருகிறான். மாற்றி வழங்குவதில்லை.
யானைக்குத் தேவையான அளவு உணவைப் பூனைக்கு ஊட்டினால் பூனை வயிறு வெடித்துச் செத்துவிடும். பூனைக்கான அளவு உணவை யானைக்கு வழங்கினால் அது பட்டினியில் செத்துவிடும். எனவே எது எதற்கு எவ்வளவு தேவையோ அது அதற்கு அவ்வளவு வழங்குகின்றது அவனின் அளப்பரிய அருள்.

இதுவரை சொன்னது ஒருநிலை வரையிலான சிந்தனை. ஆனால் ஆன்மிகம் அதற்கு அப்பாலும் போகிறது.

இறைவன் நாடினால், பூனையின் வயிற்று அளவிற்கான உணவிலிருந்து யானைக்குத் தேவையான சக்தியை வழங்குவான். அது யானைக்கு மட்டுமல்ல, பூனைக்குமே!

யானைக்கான அளவு உணவை ஒரு பூனை தின்று செறித்து விடும்படியும் செய்வான்!

அவன் நாடினால் பூனை ஒன்று யானையையே தின்றுவிடும்படியும் செய்வான்.

சிறியதில் எப்படிப் பெரியது அடங்கும் என்று மனித அறிவு சிந்தித்துக் கொண்டிருக்கட்டும்.

அளவில் அளவற்றது நிகழும் என்பதை அறிந்தவர்கள் ஆயிரம் பேர் உண்டு.

”நிச்சயமாக அல்லாஹ்தான் உணவளித்துக் கொண்டிருப்பவன்
சக்தியாளன், உறுதியாளன்” (51:58)

அனைத்துப் படைப்புக்கும் அவனே இரணம் தருகின்றான். இரணம் என்பது உணவை மட்டும் குறிப்பதாக எண்ண வேண்டாம். உண்மையில் இரணம் என்பது அவனின் திருப்பண்புகளின் ஒளிச்சுடர்களை அவன் நம்மில் பிரதிபலிப்பதே ஆகும். அவ்வகையில், சக்தி என்பது அவனின் ஒரு திருப்பண்பு. அதை அவன் நமக்கு ஊட்டும் ஒரு வடிவமே உணவு என்பது.

ஜீவன், அறிவு, ஆற்றல், நாட்டம், கேள்வி, பார்வை, பேச்சு – இவை எல்லாம் அவன் நமக்களிக்கும் ’ரிஜ்க்’ (இரணம்) ஆகும்.

”இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றான்” (2:212)

அவ்வாறு கணக்கின்றி அவன் தருவது அவனின் அருளைக் கொண்டாகும். அது எவரின் உரிமையும் அல்ல. இந்த அருள் “ஃபஸ்ல்” எனப்படும்.

“அவர்கள் செய்த(தற்கு) மிக அழகானதை
அவர்களுக்கு அல்லாஹ் கூலியாக வழங்குவதற்காகவும்
அவனுடைய நல்லருளைக் கொண்டு
மேலும் அவன் அதிகப் படுத்துவதற்காகவும்.
மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக்
கணக்கின்றிக் கொடுக்கிறான்”
(24:38)

அவன் கணக்கின்றிக் கொடுக்க நாடினால் கால அளவும் இல்லை, இட அளவும் இல்லை. அந்தத் திரைகளை அவன் தூக்கி விடுகிறான். ஏசுநாதரின் பரிசுத்த அன்னையான மர்யம் (அலை) அவர்களுக்கு அவன் எப்படி உணவளித்தான் என்பதைச் சிந்தியுங்கள். குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும் கனிகளைக் கோடையிலும், கோடையில் மட்டுமே கிடைக்கும் கனிகளைக் குளிர்காலத்திலும் அவர்கள் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். மட்டுமல்ல, அந்தக் காலத்தில் அந்த நாட்டிலேயே கிடைக்காத கனி வர்க்கங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

“அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை
அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;
அவளை அழகிய தூய்மையில் வளர்த்தான்;
ஜகரிய்யாவின் பொறுப்பில் வைத்தான்;
ஜகரிய்யா அவளின் தொழுகை அறைக்குள் செல்லும்போதெல்லாம்
அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார்;
அவர் கேட்டார்:
‘மர்யமே! இது உணக்கு எங்கிருந்து வந்தது?’
அவள் சொன்னாள்:
‘இது அல்லாஹ்விடமிருந்து வந்தது.
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்குக்
கணக்கின்றி வழங்குகிறான்”
(3:37)

அந்த மர்யமின் மணிவயிற்றில் உதித்த ஏசுநாதர்தான் தன் சீடர்களுக்கு சொர்க்கத்தில் இருந்து உணவுகளை – மேசையில் விரிப்புடன் வைக்கப்பட்ட நிலையில் – வரவழைத்துக் கொடுத்தார்கள்! கணக்கின்றி அவன் தருகின்ற போது அதற்கு இவ்வுலகு அவ்வுலகு என்னும் எல்லைகளும் இல்லை. இரு உலகிற்குமான திரைகளை அவன் தூக்கிவிடுகிறான்.

”மர்யமுடைய மகன் ஈசா சொன்னார்:
‘அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது
ஓர் உணவு மரவையை இறக்குவாயாக;
அது எங்களுக்கு- எங்களில் முன்னவர்களுக்கும்,
எங்களில் பின் வருபவர்களுக்கும்
ஒரு பெருநாளாகவும்
உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்;
இன்னும் எங்களுக்கு உணவளிப்பாயாக
நீயே உணவளிப்போரில் மேலானவன்’”
(5:114)

அவன் எல்லையின்றி வழங்க நாடுகின்ற போது வாழ்வு மற்றும் மரணம் என்று மனித மனம் வகுத்து வைத்திருக்கும் எல்லைகளையும் அவன் நீக்கிவிடுகிறான்.

”அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டவர்களை
மரணித்தவர்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்;
அவர்கள் தம் ரட்சகனிடம் உயிருடனிருக்கின்றார்கள்
அவர்கள் (அவனால்) உணவளிக்கப்படுகின்றார்கள்.
தன் (ஃபஸ்ல்) அருளிலிருந்து
அல்லாஹ் அவர்களுக்கு
அளித்ததைக் கொண்டு ஆனந்தமாய் இருக்கின்றார்கள்”
(3:169,170)

எல்லையற்ற வாழ்வை – ஜீவனை அவன் தந்துவிடுகிறான். இன்னும், ஜீவனுடன் இருந்து நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இதர பண்புகளான அறிவு ஆற்றல் நாட்டம் கேள்வி பார்வை பேச்சு ஆகியவற்றையும் அவன் எல்லையின்றித் தருகின்றான்.

மேலும் தன் நேச நபிக்கு அவன் ஒரு பிரார்த்தனையைக் கற்றுத்தருகின்றான்:
“நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்
நீதான் பகலை இரவில் புகுத்துகின்றாய்
மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளிப்படுத்துகின்றாய்
உயிருள்ளதிலிருந்து மரித்ததை நீயே வெளிப்படுத்துகின்றாய்
மேலும், நீ நாடியோருக்குக்
கணக்கின்றிக் கொடுக்கின்றாய்”
(3:27)

எல்லை இன்றி அவன் தருகின்ற போது
இல்லை என்று சொல்ல இடம்தான் ஏது?

2 comments:

  1. அருமையான பதிவு.....ஒரு முக்கியமான விசயத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் .......
    ".....ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில்...." என்று சொல்கிறபோதே ஊசியின் காதில் ஒட்டகம் நுழையமுடியுமா என்னும் கேள்வியையே வரவிடாமல் செய்துவிட்டானே இறைவன். அதை நாம் கவனிக்கத் தவறல் கூடாதல்லவா? மறைமுகமாகச் சொல்லியிருந்தாலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் என்று சொல்கிறபோதே ஊசியின் காதில் ஒட்டகம் நுழையமுடியும் ....அப்படி ஒரு தருணம் வரும் .....அந்த தருணம் வருகிறபோது அப்படிச் செய்ய தன்னால் முடியும் என்பதையும் இறைவன் தெளிவாக சொல்லிவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அப்படியிருக்க ஊசியின் காதில் ஒட்டகம் நுழைய முடியுமா என்ற கேள்வியே இறை நம்பிக்கையாளருக்கு சாத்தியம் இல்லாமல் போகிறதே. தர்க்கவாதிகளுக்கோ, தத்துவ ஞானிகளுக்கோ, அறிவியல் அறிஞர்களுக்கோ புரிபடாத விஷயங்கள் கூட இறைநேசர்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் எளிதில் புரிபடுவதுதானே ஆன்மீகத்தின் அதிசயம்!

    மற்றுமொரு கேள்வியையும் அதற்க்கான பதிலையும் இந்த பதிவு எனக்குள்ளே தோற்றுவித்திருக்கிறது:
    "சிறியதில் எப்படி பெரியது அடங்கும்?" என்கிற கேள்விக்கு எனக்குள் தோன்றிய உடனடி பதில்: அடடா.....அப்படித்தானே அடங்கியிருக்கிறது.
    எது சின்னது? எது பெரியது?
    "எது என்னுடையதோ அது என்னுடையது ......எது உன்னுடையதோ அதுவும் என்னுடையது" என்கிற Airtel விளம்பர பாணியில் சொல்ல வேண்டுமென்றால்
    எது பெரியதோ அது பெரியது ......எது சின்னதோ அதுவும் பெரியது.
    ஆக, சின்னது என்பதே இல்லை. எல்லாமும் பெரியதே. எல்லா பெரியதும் பெரியதுனடையதே.

    ReplyDelete
  2. ஊசியின் காதில் ஒட்டகம் நுழைய முடியும்...
    உங்களுக்கு கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட.. இந்த மலையை பார்த்து.. கடலில் பெயர்ந்து விழு என்று சொன்னால் அது பெயர்ந்து வாழும்...

    ReplyDelete