Friday, February 25, 2011

நிதா

(சிறுகதை)

வயல்வெளி எங்கும் மந்திர நிறத்தைத் தழைய தழைய பரப்பி மேற்கின் மஞ்சத்தில் சூரியன் சாயும் ரம்மியப் பொழுது தன் கண்களின் ஈரத்தில் ஒளிர ஜன்னல் கம்பியை இறுகப் பிடித்துக்கொண்டு நின்றான் மோஹித். அவனுக்கென்று மாடியில் இருக்கும் அந்த அறை இப்போது தன்னைச் சுமந்தபடி எங்கோ வானத்தில் மிதந்துகொண்டிருப்பது போல் உணர்ந்தான்.


கீழே வாப்பா இன்னமும் சோஃபாவில் கோபமாகத்தான் அமர்ந்து கிழிக்காத குறையாக தினத்தந்தியைப் புரட்டிக் கொண்டிருக்கிறார் என்றாலும் சம்மதம் சொல்லிவிட்டார். “அந்தச் சிறுக்கி மவளயே கட்டிக்கிட்டு எக்கேடாவது கெட்டுப்போ” என்று சாபத் தொனியில்தான் அந்தச் சம்மதம் வெளிப்பட்டது. கண்ணீர்க் கேவலுடன் பிலாக்கணம் வைத்துக் கரைந்துகொண்டிருந்த அம்மாவும் அடுப்படிக்குச் சென்றுவிட்டார்கள், வாப்பாவின் மனதைப் போலவே சூடான டீ போடுவதற்கு.


’சூடுதான், ஆனால் அருமையான மணமும் சுவையும் நிச்சயம் இருக்கும். சூடாகச் சாப்பிட்டால்தான் நன்றாகவும் இருக்கும். ‘நிதா’வை நிக்காஹ் செய்து வீட்டிற்கு அழைத்துவரும்போதும் வாப்பாவிடம் இந்தக் கோபம் சூடு குறையாமல்தான் இருக்கும், இன்ஷா அல்லாஹ்! டீ க்ளாசை முதலில் கையில் எடுக்கும்போது சூடுதானே தெரியும். அதுபோலதான் வாப்பாவின் கோபமும். அப்புறம் அதிலேயே மணமும் சுவையும் தெரிந்து புத்துணர்ச்சி வருவதுபோல் வாப்பாவின் கோபத்திற்குள் உள்ள அன்பு நிறைந்த உள்மனம் நம்மை ஆதரிக்கும் சக்தியாக இருக்கும். இப்படிச் சொன்ன வாப்பா நிச்சயமாக, ’என் அம்மாவே எனக்கு மருமவளா வந்திருக்காங்க’ன்னு மெச்சத்தான் போகிறார். ‘ஒன்னுமில்லாத ஃபக்கீர் கழுத’ என்று எரிந்து விழுந்த வாப்பாவே, இந்தக் குடும்பத்திற்குக் கிடைத்த செல்வம் அவள் என்று பெருமிதம் பேசத்தான் போகிறார். ‘அவகிட்ட என்னடா இருக்கு?’ என்று கேட்டாரே. அவளிடம் என்னதான் இல்லை?’ என்று நினைத்துக்கொண்டான் மோஹித். விவாதத்தின் காரம் அவன் மனதில் குறைந்துகொண்டே வந்தது. ‘நிதா’வின் நினைவு தித்தித்தது. ஜன்னல் வழியே வந்து தழுவிச் சென்ற மக்ரிப் காற்று மனதையும் சில்லென்று கழுவிச் சென்றது. அதில் அவன் நினைவு பால்ய காலத்தில் நிற்கக் கண்டான்.
அப்போது மோஹிதுக்கு எட்டு வயது. நான்கு & ஐந்து வயது சிறுவர்களுடன் ‘மதறஸா’ சென்று அரபி ஓதிக்கொண்டிருந்தான். படிப்பில் மனம் லயிக்காத ஒரு சுட்டிப் பிசாசு போல் அவன் அந்த கிராமத்தையே தன் விளையாட்டு மைதானமாக்கி மகிழ்ச்சியாக வளர்ந்து கொண்டிருந்ததால் உலகப் படிப்பு, மார்க்கப் படிப்பு இரண்டிலும் ஆரம்பக் கோட்டிலேயே நான்கு வருஷங்களாக நின்றுகொண்டிருந்தான். ஆனாலும் உஸ்தாதுக்கு அவனைத்தான் மிகவும் பிடித்திருந்தது. “டேய் மாப்ள, நீ நம்மள மாதிரியே இருக்க. எனக்கும் அலிஃப் பே நாக்குல படியறதுக்கு ஏழு வருஷம் ஆச்சு. ஏழுங்கறது ஒரு ராசியான கணக்கு பாத்துக்க. நிச்சயம் நீ பெரீய்ய மௌலவியா வருவ” என்று அவனை ஆசிர்வதிப்பார். ஓதிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் எல்லாம் அதைக் கேட்டுக் கெக்கே பிக்கே என்று சிரிப்பார்கள். அது மட்டும் அவனுக்கு ரணமாக இருக்கும். அவன் வயதுச் சிறார் எல்லாம் குர்ஆன் ஃகத்தம் முடித்து மதறஸாவை விட்டே போய்விட்டார்கள். இவன் மட்டும் அலிஃபைத் தலைகீழாகப் போட்டாலும் அலிஃபே வருவதன் மர்மம் விளங்காமல் குழம்பியபடி இன்னமும் ஆரம்பச் சுவடியிலேயே குடைந்துகொண்டிருந்தான்.
அப்படி வாழ்க்கை ஒரு காட்டாறு போல் போய்க்கொண்டிருந்த காலத்தில்தான் ஒரு நாள் திடீரென்று ‘நிதா’ வந்து சேர்ந்தாள். அந்த ஊருக்கு, அந்த மதறஸாவிற்கு, மோஹிதின் வாழ்க்கைக்கு. தமிழ்நாட்டுப் பெண் என்று சொல்வதற்கான ஜாடையே அவளிடம் இல்லை. காஷ்மீர்காரி மாதிரி இருக்கிறாள் என்று வாப்பாவும் சொன்னார்கள். “எங்க அண்ணன் மகள்தான். பொறந்தப்பவே அம்மா மவ்த்தாப் போய்ட்டாங்க. இப்ப எங்க அண்ணனும் போயிட்டாரு. யதீமான பிள்ளை. ’ச்சச்சா’ங்கற மொறைல நாந்தே(ன்) வளக்கணும்.” என்று சொல்லி மதறஸா உஸ்தாதும் பள்ளிவாசல் இமாமுமான மவ்லவி அப்துல் வதூத் ஹஜ்ரத் ‘நிதா’வை அழைத்து வந்திருந்தார். பாவம் அவருக்கும் கலியாணமாகி இருபது வருசத்தில் பிள்ளை பாக்கியமே இல்லை.
உஸ்தாதின் செல்ல மகளாக ’நிதா’ வளரத் தொடங்கினாள். அவள் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படவில்லை. ஓதுவதற்காக மதறஸாவிற்கு மட்டும் வந்தாள். அங்கேதான் முதன் முதலாக அவளை மோஹித் பார்த்தான். அந்தக் கணம் மூர்க்கமான ஆனால் தீர்க்கமான ஒரு வாள் போல் அவனது அகவுலகை வெட்டியது. சட்டென்று ஒரு கை திரையை விலக்கி மாட விளக்கின் ஒளியை வீடெங்கும் பாய்ச்சியதுபோல் இருந்தது அவனுக்கு. ‘அலிஃப்’ என்று ஓதிக் கொண்டிருந்த அவனது வாய் பாதி பூத்த ரோஜாவைப் போல் நின்றுவிட்டது. அவன் பார்வை வியப்பான நடுக்கத்துடன் அவள் மீது அலிஃப் என்று தலைகீழாக எழுதியபோது கண்ணுக்குத் தெரியாத அலிஃபின் சுவையில் அவன் மனம் கரைந்துபோனது. தாளில் கறுப்பு நிறமாகத் தெரிந்த அலிஃப், ஒளியாலான ஓர் அலிஃபின் நிழல் போல் தோன்றியது. தன் ஷஹாதத் விரல், சுட்டியபடி அதைத் தொட்டுக் கொண்டிருப்பதையே மோஹித் இமைக்காமல் பார்த்தான். நிழல்-அலிஃப் ஒளி-அலிஃபைச் சுட்டிக் காட்டினால் ஒளி-அலிஃப் எதைச் சுட்டிக் காட்டுகிறது? என்று ஒரு வினோத எண்ணம் அவன் மனதில் ஒரு புன்னகை போல் பூத்தது. கிதாபை மூடி வைத்துவிட்டு அவன் மீண்டும் நிதாவைப் பார்த்தான். தன் மனதின் புன்னகை அவள் முகத்தில் இருப்பதாகப் பட்டது. குழப்பமா தெளிவா என்று சொல்லமுடியாத ஒரு மனநிலையுடன் அன்று வீடு திரும்பினான்.


நின்றாலும் அமர்ந்தாலும் சாய்ந்தாலும் தன் மனதின் அடியில் ஓர் ரகசிய நீரோட்டமாக ’நிதா’வின் நினைவு இருப்பதை மோஹித் சில நாட்களிலேயே கண்டுகொண்டான். அந்த நதி, மனம் என்னும் நிலத்தின் ஆழத்தில் உள்ள பாறைகளைத் தகர்த்துக் கொண்டும் மண்ணைக் கரைத்துக் கொண்டும் தன் மனதில் எப்போது ஓடத் தொடங்கியது என்று அவனால் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்தச் சிந்தனை நதி அவளின் மனதில் இருப்பதைத் தன்னிடமும் தன் மனதில் இருப்பதை அவளிடமும் யாருக்கும் தெரியாமல் சேர்த்துக் கொண்டிருக்கும் என்று அவனுக்குத் தெரிந்தது. உண்மையில், ஒரே நதியின் இரண்டு கரைகளாவே ’நிதா’வும் தானும் இருப்பதாக அவன் உணர்ந்தான்.


நாட்கள் நகர்ந்தபோது ’நிதா’வின் நினைவுகளால் மோஹிதின் கண்களில் ஒரு கனவுத்தன்மை திரை போல் கவிந்துவிட்டது. அந்தத் திரை, ஒளியை இருளுடன் பிசைந்து நெய்ததுபோல் விசித்திரமான அழகுடன் இருந்தது. எல்லா நிலைகளிலும் தனக்குள் ’நிதாவின்’ முகம், நீர்த்தடாகத்தில் பௌர்ணமியின் சாயல் ததும்புவது போல் நிறைந்திருப்பதாக மோஹித் கண்டான். தன்னுள் முன்பு விசையுடன் பாய்ந்து இயக்கிக் கொண்டிருந்த அதே சக்திதான் இப்போது தன்னைத் தன்னுள் வளைத்துக் கட்டிப்போட்டுள்ளது என்று நினைத்தான். மறைந்திருந்தது இப்போது வெளிப்பட்டு வந்து தன்னை ஆட்கொண்டுவிட்டது என்று அறிந்துகொண்டான். அது தன் மனதிற்கு என்ன சொல்கிறதோ அதையே தான் செய்ய வேண்டும் என்று எண்ணினான். அப்போது அது தன் பெயரைச் சொல்லும்படி அவன் மனதைத் தூண்டிற்று. ‘நிதா’ என்று சதா சொல்லிக் கொண்டிருப்பதில் இன்பம் இருக்கக் கண்டான்.


சிறு குழந்தை ஒன்று முதன்முதலில் எழுதத் தொடங்கும்போது எழுத அறியாமல் கிறுக்கும் அல்லது எழுத மறுக்கும். அப்போது அதன் தாய் அதன் கையைப் பிடித்துக்கொண்டு அதன் கையில் இருக்கும் பலபத்தால் ஸ்லேட்டில் எழுதுகிறாள். குழந்தையின் கையில் இப்படி அப்படி அசைவதற்கான சுய இச்சை என்பது இம்மி அளவும் இல்லை. தாய் தன்னை எப்படியெல்லாம் அசைக்கிறாளோ அப்படியெல்லாம் அது அசைகிறது. அவள் தன்னை அசைப்பதன் இன்பத்திற்கு அது தன்னை முற்றிலும் திரைகொடுத்துச் சொக்கியிருக்கிறது. குழந்தையின் கையைப் பிடித்து எழுதும் தாய் அதன் கையில் உள்ள பலபத்தால் ஸ்லேட்டில் எழுத்துக்களை எழுதுவதுபோல் வெளிப்படையில் தெரிகிறது. ஆனால் உண்மையில் அவள் அந்த அசைவுகளைக் குழந்தையின் கையில் எழுதுகிறாள். அதன் தசையில், நரம்பில், எலும்பில், ரத்தத்தில் அந்த அசைவுகளை எழுதுகிறாள். பின்பு அவள் தன் கையை எடுத்துவிட்டாலும் அந்தக் குழந்தையின் கை அப்படித்தான் அசையும். மோஹிதின் மனம் குழந்தையின் கையாக இருந்தது. ‘நிதா’வின் அசைவுகளை அது பாடம் செய்துகொண்டே இருந்தது.
உஸ்தாத் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார். ஓதுவதில் எப்போதும் நொண்டி அடிக்கும் மோஹித் இப்போது சிறகடித்துப் பறந்தான். இரண்டே நாளில் அட்சரங்களைத் தாண்டிவிட்டான். வாக்கியங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் கடந்தான். உஸ்தாத் எல்லோருக்கும் சிறு சிறு ’சூறா’க்கள் சொல்லிக் கொடுத்தார். அவற்றையும் பிறழாமல் சொன்னான். ஒவ்வொருவராக அவர் கேட்டுக் கொண்டே வருவார். மோஹிதின் முறை கடைசி. அவன் வயதால் பெரியவன் அல்லவா? எல்லாக் குழந்தைகளும் சுற்றில் தங்கள் முறை வரும் வரை கிதாபைத் திறந்து வைத்துக்கொண்டு நெட்டுருப் போட்டுக்கொண்டிருப்பார்கள். மோஹித், அவனது முறை வரும்போதுதான் வாயைத் திறப்பான். அதுவரை மௌனமாக ‘நிதா’வையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பான். சொன்னதைச் சொல்வதற்கே தடுமாறிக் குழைந்துகொண்டிருந்த ஒரு கிளிக்குஞ்சு இப்போது தீர்க்கமான பார்வை கொண்ட ராஜாளி ஆகிவிட்டது. ஆனால் அது இப்போது சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்டு ஓர் அரசியின் கைகளில் மௌனமாக அமர்ந்திருக்கிறது.


அவளது பேச்சின் அசைவு அவனது மௌனத்தில் பதிவாகிக் கொண்டிருந்தது. “மோஹித், நீ சொல்லுப்பா” என்று உஸ்தாதின் உத்தரவு வரும்போது அது அசைந்தது. எதைச் சொல்வது? என்னும் கேள்விக்கு அவன் மனதில் ஒரே ஒரு விடைதான் இருந்தது. ‘நிதா’ எதைச் சொல்வதாக அவன் அப்போது கண்டானோ அதைச் சொல்லவேண்டும் என்பதுதான் அது. சட்டென்று கண்களை மூடிக்கொள்வான். அவன் உதடுகள் அசையத் தொடங்கும். அப்படியே சூறாவைச் சொல்லிவிடுவான்.


மிகவும் தாமதமாகத்தான் உஸ்தாத அதைக் கவனித்தார். இரும்புக்கடை சிக்கந்தர் பாயின் மகன் யாசர் அராஃபத் அவருக்கு அதைச் சுட்டிக்காட்டியிருந்தான். “என்ன எப்பக் கேட்டாலும் கண்ண மூடிக்கிட்டு சொல்ற? என்ன அதபு இது? கண்ணத் தொறந்து என்னைப் பாத்துக்கிட்டே சொல்லு” என்று மோஹிதை ஒருநாள் அதட்டிக் கேட்டார். அவன் கண்களைத் திறந்து அவர் முகத்தைப் பார்த்தான். சுற்றிச் சாம்பல் நிறத்தில் அடர்ந்த தாடியுடன் உப்பியிருந்த அவரின் கறுப்பு முகத்தை ஓர் அன்னியனைப் போல் பார்த்துக்கொண்டே இருந்தான். வாய் திறக்க மறுத்துவிட்டது. வெளி விழியின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு மனம் அப்படியே உள்ளே திரும்பிவிட்டது. உள்விழியால் இப்போது மீண்டும் ‘நிதா’வின் முகத்தைப் பார்த்தான். தாயின் கையில் மீண்டும் குழந்தையின் கைகள் வசப்பட்டுவிட்டன. சூறாவை மிகத் தெளிவாக ஓதினான். முடித்தபோது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அது, பிசிறில்லாமல் ஊற்றும் தைலதாரை போல் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் மிக இயல்பாக அவன் வழியே நடந்துவிட்டது. உஸ்தாத் தன்னிடம் கோள் மூட்டிய யாசர் அராஃபத்தை அழைத்தார். எண்ணெய் தேய்த்த பிரம்பு விளாசப்போகிறது என்று பயந்துகொண்டே அவன் அவர் அருகில் வந்தான். “இங்க பாருங்க இரும்புக்கட மாப்ள, ஃபஸாது பண்றது இப்லீஸோட வேலை. அத இனிமே நீங்க செய்யாதீங்க. ஓட்டிப்புடுவேன் ஓட்டி” என்று பிரம்பால் காற்றில் வட்டம் போட்டார்.
ஆனால் நிலை அப்படியே நீடிக்கவில்லை. ஒருநாள் ’நிதா’ மதறஸாவுக்கு வரவில்லை. மோஹிதின் மனம் சட்டென்று கசந்து சுண்டிப்போனது. உஸ்தாத் ஓதிக்கொடுப்பது, சிறார்கள் கிசுகிசுப்பது எதுவுமே அவனது புலன்களில் பிடிபடவில்லை. கனிச்சோலையின் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பறவைபோல் இருப்பவன் இப்போது கூண்டில் அடைபட்ட பறவை போல் உணர்ந்தான். பேச்சின் ஊற்று அன்று கண்களுக்குக் காட்சி தராததால் அவனது வாய் முத்திரை இடப்பட்டுவிட்டது. அவனது முறை வந்தபோது உஸ்தாத் வழக்கம்போல் “ஓதுங்கத்தா” என்றார், பிரம்பைக் காற்றில் சுழித்தபடி. அவன் எப்படி ஓதுவான்? கண்ணில் வெறுமையுடன் அவரை வெறித்து நோக்கினான். “என்னங்கத்தா, இப்பிடியே ’உம்ம்’முன்னு பாத்துக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்?” என்று உஸ்தாத் அதட்டினார். மௌனம். “ஏன், ஒடம்பு கிடம்பு சரியில்லியா?” என்றார். ஆமாம் என்று தலையாட்டினான். உயிர் கொஞ்சம் துவண்டுவிட்டிருப்பதாக உணர்ந்தான். “சரி, நாளைக்கு ஓதிக்காட்டுங்க” என்று உஸ்தாத் சொல்லி அனுப்பினார்.


இந்த நிலையில் சில மாதங்கள் ஓடின. ‘நிதா’ மதறஸாவுக்கு வராத நாளில் எல்லாம் மோஹித் ஊமையாகிவிடுகிறான் என்பதை உஸ்தாத் கவனித்தார். ஒரு நாள் சில துஆக்கள் சொல்லிக் கொடுத்துவிட்டு முறையை மாற்றி ஒவ்வொருவராகக் கேட்டுக்கொண்டு வந்தார். மோஹிதின் கண்கள் ‘நிதா’வின் மேல் அவ்வப்போது பட்டுத் திரும்புவதைக் கவனித்துவிட்டார். சட்டென்று மோஹிதிடம் கேட்டார். “ம்ம்ம்.. துஆ சொல்லுங்க.” அவன் அலங்க மலங்க விழித்தான். உள்ளுக்குள் கோபம் பொங்கப் பிரம்பால் நான்கு முறை விளாசினார். அழுவான் என்று எதிர்பார்த்தார். அவன் கண்களில் மௌனமாகக் கண்ணீர் கசிய நின்றான். மறுநாள் காலை மதறஸாவில் பாடம் நடந்தபோது அவனும் இல்லை, ’நிதா’வும் இல்லை.


“சின்னப் பயலுவலோட சேர்ந்து என்னால ஓதமுடியாது. இனிமேல் நான் மதறஸாவுக்குப் போவ மாட்டேன்” என்று வீட்டில் பிடிவாதமாகச் சொல்லிவிட்டான். ‘நிதா’வும் மதறஸாவுக்கு வருவதில்லை என்றும் உஸ்தாத் அவளுக்கு வீட்டிலேயே ஓதிக் கொடுக்கிறார் என்றும் யாசர் அரஃபாத் சொல்லி அறிந்தான். கடைவீதிக்குச் செல்லும்போது, வீட்டு விஷேசங்களின் போது என்று எப்போதாவது அவளை எதார்த்தமாகப் பார்க்க முடிந்தது. தினம் தினம் தன் மனதில் பூக்கும் ரோஜாவாய் இருந்த அவளின் தரிசனம் எப்போதாவது கிடைக்கும் குறிஞ்சிப் பூவாக மாறிப்போனது. ஆனால் அவள் சூறாக்கள் ஓதுகின்ற முகமும் குரலும் அவன் ஆழ்மனதின் அடிநீரோட்டமாக இருந்தது. பாலையில் தாகத்துடன் அலையும் ஒருவன் ஆழ்கிணறு ஒன்றைக் கண்டு அதன் ஆழத்திற்குள் இறங்கிக் கைகளால் நீர் அள்ளிப் பருகுவதுபோல் அவன் தன் தனிமைப் பொழுதுகளில் ஆழ்மனதிற்குள் இறங்கி ‘நிதா’வின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பான்.


தினமும் இரவு தூங்கச் செல்லும்போது ’குல்’ சூறாக்களை ஓதிக் கைகளில் ஊதி உடம்பெல்லாம் தடவிக்கொள்ள வேண்டும் என்று மோஹிதிற்கு உஸ்தாத் சொல்லியிருந்தார். அதை அவன் வழக்கமாகச் செய்துவந்தான். தான் அவ்வாறு கட்டிலில் படுத்துப் போர்த்திக்கொண்டதும் கண்களைமூடி ஓதும்போது உண்மையில் ஓதுவது தான் அல்ல என்பதையும் தன் ஆழ்மனதில் இருந்து ‘நிதா’வே ஓதுகிறாள் என்பதையும் ஒருநாள் கண்டுகொண்டான். அவள் முகம் நீரின் ஆழத்திலிருந்து மெல்ல மேற்பரப்பிற்கு நீந்தி வரும் மீன் போல் அவன் உள்விழியின் மணியில் வந்து தோன்றும். பின் ‘குல்’ சூறாக்களை ஓதுவாள். இவ்வாறு அவளின் முகம் அவன் மனதிற்கு சூறாக்களுக்கான முகமாகவே ஆகிவிட்டது. பருவ காலங்கள் சுழன்று மாறிச் சென்றன. ஒரு வருடத்தின் வசந்தம் போனபின் காலத்தின் சுழற்சியில் மீண்டும் அது மறுவருடத்தில் வரத்தானே செய்கிறது? அவ்வாறு ‘நிதா’வின் முகத்தைக் காணும் தருணங்கள் அவன் வாழ்வில் வந்துகொண்டிருந்தன. தன் மனதின் நிலத்தில் நடப்பட்டு வேரூன்றி வளரும் அந்த சிறிய ரோஜாச் செடி ஒரு நாள் மலரும் என்றும் அப்போது அது தன் உலகையே நறுமணத்தால் நிறைக்கும் என்றும் மோஹித் உறுதியாக நம்பினான். சிப்பியின் உள்ளே விழுகின்ற ஒரு துகள் அந்தச் சிப்பியின் சுரப்பால் மூடப்பட்டு மூடப்பட்டு ஒரு முத்தாக ஆகிவிடுகிறது. ஒரு சிப்பியின் உள்ளே ஒரு முத்தே வந்து விழுமானால் அது என்னாகும்?


காற்றில் அடித்த ஜன்னல் பிரக்ஞையில் அறைந்ததுபோல் மோஹிதை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியது. வெளியே இருட்டியிருக்கக் கண்டான். ’எல்லோரும் சம்மதம் சொல்லிவிட்டார்கள். இன்னும் ஒரு மாதத்தில் நிக்காஹ் நடந்துவிடும். இதே அறையில் ’நிதா’ இருப்பாள். என் யுகங்களின் ஏக்கப் பொருளை, இனிய இலக்கை இறுகத் தழுவிக் கண்களை மூடிக்கொள்வேன். மீண்டும் கண்களைத் திறப்பது மறுமைநாளில்தான் என்றிருக்குமானால் அதுதான் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்று மோஹித் நினைத்துக்கொண்டான். உஸ்தாத் இது நாள் வரை தன் மீது கோபமாக இருந்திருக்கிறார் என்பதை நினைக்கவே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ’நிதா’வைத் தனக்காக பெரிய அண்ணன் அவரிடம் கேட்டபோது, “அவன் இன்னும் திருந்தவே இல்லியா? இத பாருங்க முஸ்தஃபா, அவன் ஏதோ கனவுலகத்துலயெ மெதக்குறான். இந்த புள்ள அவனுக்குச் சரிப்பட்டு வராது. மறக்குறதுதான் நல்லதுன்னு சொல்லுங்க. பின்னால வேதனைப் படக்கூடாது.” என்று சொன்னாராம். அண்ணனால் அதை நம்பவே முடியவில்லை. “அஜ்றத்தாச்சேன்னு நானும் பொறுமையாப் பேசிப்பாத்தேன். அவரு என்னமோ தான் கோடீஸ்வரன் மாதிரியும் நாம ஃபக்கீர் பயலுகங்கற மாதிரியும் பேசுறாரு. தம்பி அந்த புள்ளய மறக்குறதுதான் நமக்குக் கவுரவம்” என்று வாப்பாவிடம் சொன்னார். தன்னை மிகவும் அன்புடன் ஓத வைத்த உஸ்தாத் தன் மீது இவ்வளவு வெறுப்புக் கொள்ளும்படியாக தான் செய்த தவறு என்ன என்று எண்ணி மோஹித் சில கணங்கள் வேதனைப்பட்டான். காலத்தின் கையில் எல்லா வேதனைகளுக்கும் மருந்து உள்ளது. ‘நிதா’ இந்த வீட்டிற்கு வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்லிக்கொண்டான்.


நாற்பது நாட்கள் நகர்ந்தன. அந்த வீட்டிற்கு ‘நிதா’ வந்தாள். அம்மாவுக்கு அவளை உடனே பிடித்துப் போனது. பத்து நாட்களில் வாப்பாவும் தன் புதிய மருமகளை மெச்சத் தொடங்கினார். ஆனால் குடும்பப் பிரச்சனைகள் அலைகளைப் போன்றவை அல்லவா? ஒன்று ஓய்ந்தால் அடுத்து உடனே இன்னொன்று பாய்ந்து வரத்தானே செய்யும். அப்படி ஒரு பிரச்சனை வந்தது, மூன்று அண்ணிகளின் வடிவில். குடும்பம் நான்கானது. மோஹித் அடுத்த தெருவிற்குத் தனிக்குடித்தனம் வந்தான். குருவிக்கூடு போல் சிறியதாக இருந்த அந்த அறை அவனுக்குச் சொர்க்கமாகத் தோன்றியது. அந்த வசந்த காலத்தின் இனிமைச் சின்னமாக ‘நிதா’ ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.


ஒருநாள் மோஹித் வீட்டிலிருந்து வழக்கம்போல் கடைக்குக் கிளம்பிச் சென்றான். சமையல் கட்டில் அமர்ந்து அம்மியில் ஏதோ அரைத்துக்கொண்டிருந்த ‘நிதா’வைப் பார்த்து, “நான் கடைக்குக் கிளம்புறேன். கதவைச் சாத்திக்கப்பா. போய்ட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு, ஹாலில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தன் அன்பு மகளை ஆசையாகப் பார்த்தான். குழந்தை லேசாக உசும்பியது. “ஜு..ஜூ..ஜு” என்றான். உதட்டைப் பிதுக்கிக்கொண்டு சிணுங்கியது. அது அழுகையாக மாறும்போல் தெரிந்தது. “குட்டி அழுவுறா என்னன்னு பாரு” என்று ‘நிதா’விடம் சொல்லிக்கொண்டே வெளியேறினான். தெருவில் இறங்கி நாலைந்து வீடுகள் தள்ளிப் போயிருப்பான். மஜீத் ராவுத்தர் கொடுத்திருந்த கொள்முதல் விவரப் பேப்பரை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது ஞாபகம் வந்தது. திரும்பி வீட்டுக்கு விரைந்தான். கதவருகில் வரும்போது ‘நிதா’ தன் மகளுக்குத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. ‘குல்’ சூறாக்கள் ஓதித் தன்னை வசியம் செய்த அதே இனிமையான குரல். கேட்டுக்கொண்டே மெதுவாக வந்து கதவில் கை வைத்தான். தாழிடப்படாமல் இருந்த கதவு மெல்ல திறந்தது. அந்த இடைவெளியில் அவன் கண்ணில் பட்ட காட்சி ஒருகணம் அவன் மூச்சை நெறித்து நிறுத்திவிட்டது. சட்டென்று வெளியே ஓடினான்.


வீட்டிற்குள் வந்து படபடக்க சோஃபாவில் சாய்ந்த மகனைப் பார்த்து வாப்பா பதறிப் போனார். அம்மா அடுக்களையில் இருந்து “என் மவனுக்கு என்னாச்சு றப்பே?” என்று அலறிக்கொண்டு ஓடிவந்தார்.


”ஏன்ப்பா கடையில எதாவது தகராறா?” என்றார் வாப்பா. இல்லை என்று தலையை ஆட்டினான்.


“வீட்டுல இருந்தா வர்ற?” என்றார். ஆமாம் என்று தலையசைத்தான்.


”புள்ளெக்கு ஏதாவது?...” என்று இழுத்தார். இல்லை என்று தலை ஆடியது.


”’நிதா’வ போய் கூட்டிட்டு வாங்கம்மா” என்று அருகில் நின்றுகொண்டிருந்த மூத்த மருமகளிடம் சொன்னார். மோஹித் அவர் கையைப் பிடித்துக்கொண்டான். வேண்டாம் என்று தலை அசைந்தது. முகத்தில் வியர்த்து வழிந்துகொண்டிருந்தது. “அவ எனக்கு வேணாம் வாப்பா. தலாக் சொல்லீர்றேன். அவ எனக்கு வேணவே வேணாம்” என்று மூச்சிறைக்கச் சொன்னான். அம்மா அப்படியே வாயில் கையை வைத்துக்கொண்டு நின்றுவிட்டார். வாப்பா செல்ஃபோனில் யாருக்கோ போட்டுப் பேசினார். ஐந்து நிமிடத்தில் பெரிய அண்ணன், உஸ்தாதை அழைத்துக்கொண்டு வந்தான்.


“என்னங்க அஜ்றத்து, என் மவன் என்னமோ சொல்றான். ஒத்தக் கால்ல நின்னு ஒங்க மகள கட்டிக்கிட்டான். புள்ளயும் பொறந்திருச்சு. இப்ப தலாக் சொல்லீர்றேன் வாப்பாங்கறான். இன்னும் என்னென்ன கண்றாவியெல்லாம் இவன் கொண்டுவரப் போறானோ தெரியல” என்று வாப்பா தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்தார்.


”அவசரப் படாதீங்க ராவுத்தர். என்ன நடந்துச்சுன்னு கேப்போம்” என்றார் உஸ்தாத். அவருக்கு ஏதோ தெரிந்த கதையைக் கேட்பது போல் முகத்தில் ஒரு விலகல் தெரிந்தது. “மோஹித், இங்க பாருங்க. பதட்டப்படாதீங்க. என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க” என்றார்.


நடந்ததை மோஹித் தடுமாறித் தடுமாறிச் சொன்னான். வீட்டை விட்டுக் கடைக்குக் கிளம்பியது, திரும்பி வந்தது, கதவிடுக்கில் கண்டது எல்லாவற்றையும்.


”வீட்ல என்ன பாத்தீங்க? யாரு இருந்தா?”


“அவளும் புள்ளயும்தான்”


“சரி, உள்ளே போகவேண்டியதுதானே? தப்பா என்ன பாத்தீங்க இதுல?”


“அவ அடுப்பாங்கறையில உக்காந்து அம்மி அரச்சுக்கிட்டிருந்தா. புள்ள ஹால்ல தொட்டீல படுத்திருந்துச்சு. ஆனா அங்கிருந்தே அவ புள்ளெக்குப் பால் கொடுக்குறா. இத என் கண்ணால நான் பாத்தேன். அவ பொண்ணில்ல. பேயோ பிசாசோ என்னவோ. அவகூட என்னால ஒரு நிமிசம் இருக்க முடியாது”


மோஹிதின் கைகளும் கால்களும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவன் எதையோ பார்த்துவிட்டு மனக் குழப்பத்தில் அப்படி உளறுகிறான் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஹஜ்றத் நிதானமாகப் பேசினார்.


“அதுக்கொன்னும் கவல இல்ல மோஹித். அவ இப்ப வீட்டுல இருக்க மாட்டா. புள்ளய தூக்கிக்கிட்டுப் போயிருப்பா”


“என்னங்க அஜ்றத் சொல்றீங்க?” என்றார் வாப்பா.


“ஆமாங்க. அப்பவே நான் சொன்னேன். மறந்திடுப்பா. இந்தப் புள்ள ஒனக்கு ஒத்துவராதுன்னு. சில ரகசியங்கள் இருக்கு. அத நான் நேரம் வர்ற வரைக்கும் வெளியே சொல்லக்கூடாது. அப்படித்தான் இதுவும். ’நிதா’ மனுச இனத்த சேந்தவ இல்ல. எங்க அண்ணன் வாசிலாத்துப் பண்ணி வச்சிருந்த ஒரு ஜின்னோட மக(ள்)” என்று உஸ்தாத் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.


_____________________________________________
(குறிப்பு: இந்தக் கதையின் 'கரு'வை எனக்குச் சொன்னவர் நண்பர் மௌலவி அப்துல் லத்தீப் ரஷாதி அவர்கள்.)

இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால்.


ஃபக்கீர் – ஏழை


மதறஸா – மார்க்கக் கல்வியகம்.


உஸ்தாத் – ஆசிரியர்


அலிஃப் பே – அரபி மொழியின் ஆரம்ப எழுத்துக்கள்.


ஃகத்தம் – முடிவு, முற்றுப் பெறல்.


மவ்த் – மரணம்.


யதீம் – அனாதை.


ச்சச்சா – சிறிய தந்தை.


இமாம் – தலைவர்.


ஷஹாதத் – சாட்சி


கிதாப் – நூல்


சூறா – திருக்குர்ஆனின் அத்தியாயம்.


ஃபஸாத் – குழப்பம்.


துஆ – பிரார்த்தனை.


’குல் ’சூறா – ‘குல்’ என்னும் சொல்லுடன் ஆரம்பிக்கும் திருக்குர்ஆன் அத்தியாயங்கள்.


நிக்காஹ் – திருமணம்.


தலாக் – விவாகரத்து.


ஜின் – சாமானிய மனிதரின் கண்களுக்கு மறைந்த ஒரு படைப்பினம்.3 comments:

 1. மிக மிக அருமையான கதை. மோகித் வீட்டுக்குத் திரும்பி வரும்போது என்னவோ நடக்கப் போகுது என்று 'சந்தேக'ப் ப‌ட்டாலும்
  (சனியனுங்க, சினிமாவில் அதத்தானே காட்டுறானுவோ), பார்த்து
  அலறியதும் புரிந்து கொண்டேன் இது மோகினி டைப் கதை என்று.

  இருந்தாலும், முடிவு சாத்தியமான ஒன்றுதானே என்று சமாதானப் படும் வரையில் அமைந்திருக்கிறது. ஜின் பெண் அழகு என்று கேள்விப்பட்டு
  'மோகித்'ததும் ஞாபக‌த்திற்கு வருது :)

  ReplyDelete
 2. ஜின் இனம் அசாத்திய வலிமை கொண்டது. அதை கைவசப்படுத்திக் கொண்டால்... என்கிற மாதிரியான கற்பனை பேச்சுக்கள் பேசியதுண்டு.. கேட்டதுண்டு.. ஆனால்..மோஹித்... பாவம்!

  சிறு குழந்தை ஒன்று முதன்முதலில் எழுதத் தொடங்கும்போது எழுத அறியாமல் கிறுக்கும் அல்லது எழுத மறுக்கும். அப்போது அதன் தாய் அதன் கையைப் பிடித்துக்கொண்டு அதன் கையில் இருக்கும் பலபத்தால் ஸ்லேட்டில் எழுதுகிறாள். குழந்தையின் கையில் இப்படி அப்படி அசைவதற்கான சுய இச்சை என்பது இம்மி அளவும் இல்லை. தாய் தன்னை எப்படியெல்லாம் அசைக்கிறாளோ அப்படியெல்லாம் அது அசைகிறது. அவள் தன்னை அசைப்பதன் இன்பத்திற்கு அது தன்னை முற்றிலும் திரைகொடுத்துச் சொக்கியிருக்கிறது. குழந்தையின் கையைப் பிடித்து எழுதும் தாய் அதன் கையில் உள்ள பலபத்தால் ஸ்லேட்டில் எழுத்துக்களை எழுதுவதுபோல் வெளிப்படையில் தெரிகிறது. ஆனால் உண்மையில் அவள் அந்த அசைவுகளைக் குழந்தையின் கையில் எழுதுகிறாள். அதன் தசையில், நரம்பில், எலும்பில், ரத்தத்தில் அந்த அசைவுகளை எழுதுகிறாள். பின்பு அவள் தன் கையை எடுத்துவிட்டாலும் அந்தக் குழந்தையின் கை அப்படித்தான் அசையும்... Nature or Nurture?

  ReplyDelete
 3. நிதாவிற்காகப் போட்டிருக்கும் படங்கள் புகைப்படங்களா, ஓவியங்களா?

  இஸ்லாத்தில் ஜின் என்பது நல்ல சக்தியா, தீய சக்தியா?

  இதனை இன்னும் வசப்படுத்துபவர்கள் இருக்கிறார்களா?


  கடைசிவரை சஸ்பென்ஸ் கெடாமல் கொண்டு சென்றது நல்ல கதை சொல்லும் யுக்திதான்.

  மோஹித் "காற்றில் ஏறி அவ்விண்ணயும் சாடுவோம் காத‌ற் பெண்கள் கடைக்கண் பார்வையில் என்று மனதுக்குள் பாடியிருப்பானோ?

  ReplyDelete