Tuesday, February 15, 2011

கத்திரி பாபா


(சிறுகதை)

மெயின் ரோட்டிலிருந்து இருநூறடி தூரத்தில் தீப்பெட்டிகளை அடுக்கியது போன்ற நெரிசலான எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு உள்ளே, குறுகலான பதின்மூன்று தெருக்களைத் தாண்டி அமைந்துள்ளது கத்திரி பாபாவின் தர்ஹா. பச்சை வண்ணம் பூசிய சிறிய ஆனால் அழகிய சுண்ணாம்புக் கட்டடத்தின் முகப்பில் ”ஹஸ்ரத் மஸ்தான் ஜானே அலீ காதிரி (ரஹ்)” என்று போடப்பட்டிருக்கும் பெயருக்குரிய இறைநேசர், அழியும் உலகான இந்த துன்யாவை விட்டு அழிவற்ற உலகான மேலுலகம் சென்றபோது, அதாவது அவர் மரணித்தபோது, இந்த இடத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டு தர்ஹா கட்டும் பணியை ’ட்ரிபுள் ஃபைவ்’ முகைதீன் ராவுத்தர் தொடங்கினாராம். அப்போது இந்த இடம் வயல்களுக்கு நடுவில் ஒரு மேடாக இருந்தது என்று என் தாத்தா சேத்துப்பா ராவுத்தர் சொல்லிக் கேட்டுள்ளேன்.


எனக்குத் தெரிய என் பால்ய வயது முதல் ஜானே அலீ காதிரி அவ்லியா அவர்கள் மக்களால் ’கத்திரி பாபா’ என்றுதான் அழைக்கப் படுகிறார். கத்திரி பாபா என்னும் இந்த வினோதமான பெயர் அவர்களுக்கு எப்படி வந்தது என்னும் கேள்விக்கான விடை காணும் ஆர்வம் சில ஆண்டுகளுக்கு முன், அதாவது “மம்மி” திரைப்படம் எங்கள் ஊரில் ஓடிக் கொண்டிருந்தபோது என் மனதில் உருவானது. அதற்கான முஸ்தீபுகளில் இறங்கி நான் செய்த ஆய்வில் கிடைத்த வேறு வேறு விளக்கங்களை ஒரு நோட்டில் (ஏட்டில்) எழுதிவைத்திருக்கிறேன். சரியான விடை என்னவென்றால் ’காதிரி பாபா’ என்னும் பெயர்தான் மக்களின் திருவாய்களில் மருவி ‘கத்திரி பாபா’ ஆகிவிட்டது. என்றாலும் இந்தப் பெயர் தோன்றிய வரலாறாகக் கூறப்படும் பல சம்பவங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை என்பதால் அதை நூத்தியெட்டாவது ஆளாக உங்களிடம் சொல்வதில் எனக்கு சந்தோசம்தான்.


”1940-களில் இந்த இடம் வெறும் வயக்காடாக இருந்தது. டவுனுக்குப் போகணும்னா மாட்டுவண்டிதான். குத்தகை எடுத்து விவசாயம் செஞ்ச இருபது குடும்பங்களை விட்டா இந்தப் பக்கம் வேத்து மூஞ்சிய பாக்கவே முடியாது. ஐம்பது ஏக்கராவுக்கு முதலாளியான 555 முகைதீன் ராவுத்தர் வருசத்துக்கு நாலு தடவை வருவாரு. அருவாமீசை கண்ணையா என்ன சொல்றாரோ அதுதான் அவருக்கு லா பாய்ண்ட்டு. கேட்டுக்கிட்டுக் கிளம்பிடுவாரு. “ம்..ம்.. சரிதான்… நல்லாப் பாத்துக்க” என்று சொல்லிவிட்டு வில்வண்டியில் ஏறிவிடுவார்.” என்று வெத்திலையைக் குதப்பிக் கொண்டே சொல்லத் தொடங்கினார் ரிபாய் பெரியத்தா.


“இந்தக் கதையெல்லாம் இருக்கட்டும்த்தா, கத்திரி பாபான்னு அவ்லியாக்கு எப்பிடி பேர் வந்துச்சுன்னு சொல்லுங்க?” என்றேன்.


“குறுக்க மறுக்க பேசினா எனக்கு தாட் வராது பாத்துக்க. இண்ட்ரஸ்ட் இல்லாத பயலுவகிட்ட வாய திறக்கிறதில்லேன்னு எங்க சைக்கு கையில வாதா பண்ணீருக்கேன். அத அப்பப்ப லேசா மீறுனதுக்கே செமத்தியா வுளுந்திச்சு பாவா. அதனால உன் இண்ட்ரஸ்ட் நெஜமானதான்னு சோதிச்சுத்தான் சொல்லுவேன். பொறுமையா இல்லேன்னா அஸ்ஸலாம் அலைக்கும்னுட்டு போய்கிட்டே இருப்பேன்.” என்று கோபம் பொங்க அவர் சொன்னபோது எனக்கு லேசாக பயம் வந்ததைப் பார்த்து எனக்கே கொஞ்சம் வியப்பாக இருந்தது. அப்படீன்னா இந்த மனுசன்கிட்ட உண்மையாவே விசயம் இருக்கு. அதை எப்படியாவது தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஐந்து நிமிடத்துக்கு முன்னால் ஆர்டர் செய்த (என் வீட்டில்தான்) இஞ்சி டீயை நஸ்ரின் வந்து கொடுத்துவிட்டு என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனாள். அவர் பார்வையில் “தீவட்டிப் பய” என்று அத்தா மனதார வையும் வாழ்த்து மொழிபெயர்க்கப் பட்டிருந்தது. என்னை மாதிரி ஹிஸ்டோரியனுக்கு இதெல்லாம் மெடல் இல்லையா?


இஞ்சி டீயை இரண்டு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு ரிபாய் பெரியத்தா கண்ணை மூடிக்கொண்டார். ரசிக்கிறார்! நல்ல சகுனம்தான். அவர் மனம் பூவைப் போன்றது. தானாக மலரும்வரை காத்திருக்க வேண்டும். அரை டம்ளர் டீ காலியானதும் பெரியத்தாவின் மனம் இதழ் திறந்தது.


“ஜாவிது பையா, ரொம்ப சுக்ரியாப்பா, அருமையான ச்சாய்.” என்று சொல்லி இன்னொரு உறிஞ்சு சுவைத்துவிட்டுச் சொன்னார், “அப்படீ இருந்த காலத்துல திடீர்னு ஒருநாள் இப்ப தர்ஹா இருக்கிற இடத்துக்கு மகான் வந்து சேந்தாங்க. எப்படி வந்தாங்க எங்கிருந்து வந்தாங்கன்னு எல்லாம் யாருக்கும் தெரியாது. திடீர்னு ஒருநாள் விடியறப்ப அங்க இருந்தாங்க. பச்சை தலைப்பா, வெள்ளை அபா போட்டிருந்தாங்க. ஒரு மூட்டை. அதை மரத்தடியில வச்சிட்டு ஃபஜ்ரு தொழுவுறதுக்கு வாய்க்கால்ல ஒலு செஞ்சிக்கிட்டிருந்தாங்க. அருவா மீசை கண்ணைய்யனோட மவன் செந்தில்வேலுன்னு பேரு அப்ப. யார்னு தெரியுதா?” என்று ரிபாய் பெரியத்தா நிறுத்தினார்.


“தெரியலியே பெரியத்தா…” என்று இழுத்தேன்.


“அட என்னப்பா நீ. உன் தோஸ்து அந்த மொறட்டுப் பய.., மீட்டிங்கெல்லாம் பேசுறானே…”


“அபூதாஹிரா?”
“ஆங்… அவந்தான். அவனோட அத்தா இருந்தாரே மோதீனார் உமர் பாய், அவர பின்ன யாருன்னு நெனச்ச? நான் சொல்ற செந்தில்வேலுதான். மகான் இங்க வந்தப்ப அவரு விடலப் பையனா இருந்தாரு. அவ்லியாவ முதல்ல பாத்தது அவருதான். புதுசா ஒரு மனுசன் மூட்டை முடிச்சோட வந்து இருக்கிறத பாத்துட்டு, ஒலு செஞ்சிக்கிட்டிருந்தவர்ட்ட போய் ‘யாருய்யா நீ? இங்க என்ன பண்ற?’ன்னு கேட்டிருக்கான். அப்ப அவரு சின்னப் பையன்கிறதுனால ’அவன் இவன்’னு சொல்றேன். தப்பில்லைல?... ஒலு செஞ்சிக்கிட்டிருந்த மகான் வாய திறந்து ஒன்னுமே பேசல. அப்படியே ஒரு பார்வை. சர்வ நாடியும் புடிச்சு உலுக்குனாப்ல பய வெலவெலத்துப் போய்ட்டான். ஒரு தப்படி எடுத்துவைக்க முடியல. சிலை கணக்கா நிறுத்திப்புட்டாரு. அவன் பாத்துக்கிட்டே இருக்கான். அவரு எழுந்திருச்சுப் போய் ஒரு துணிய எடுத்துத் தரையில விரிச்சு தொழுவுறாரு. கிராஅத் செஞ்சு தொழுவுறாரு. பாஷையே புதுசா இருக்கு. ஒன்னும் புரியல. ஆனா அது ஏதோ மந்திரம்னு நெனச்சிக்கிட்டே கேக்கறான். உடம்பு மனசெல்லாம் பூந்து என்னமோ செய்யுது. சுகமாவும் இருக்கு, பயமாவும் இருக்கு, அழுகையாவும் வருது. அவ்லியா தொழுது முடிச்சு சம்மணம் போட்டு உட்காந்துகிட்டு அவன ஜாடைல ‘இங்க வாடா’ன்னு கூப்பிடுறாரு. அவனால அப்பத்தான் அசையவே முடிஞ்சுது. பக்கத்துல போனான். நெஞ்சு படபடன்னு அடிக்குது. இது மனுசந்தானான்னு பாக்குறான். அவ்லியா கண்ணுல ஒரு நூரானிய்யத். அதுல அப்படியே சொக்கிப் போயிட்டான். அவன் கைல ஒரு பேரீச்சம் பழத்த கொடுக்கிறாரு. சாப்பிடுன்னு ஜாடை காட்டுறார். வாயில போட்டு மெதுவா மெல்றான். தலைய சுத்திக் கிறுகிறுன்னு வருது. அப்படியே தள்ளாடிக்கிட்டு வீடு வந்து மல்லாந்துட்டான். தோசிப்பய காலங்காத்தால எங்க போயி சரக்கு அடிச்சிட்டு வந்தான்னு கண்ணையனுக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது. கீழ கிடந்த பயல கழுத்துத் துண்ட முறுக்கி அப்படியே தூக்குறாரு. வாசன மயக்குது. இது என்னடா இது சாராயமாட்டம் இல்லியேன்னு ஒரு யோசனை. பய மூஞ்சீல தண்ணிய வாரி அடிச்சு சுதாரிக்க வச்சுக் கேட்டா இரண்டு நிமிசம் திருதிருன்னு முழிக்கிறான். முனி கினி அடிச்சுச்சா இல்ல மோகினி புடிச்சுச்சான்னு எல்லாருக்கும் பீதி கெளம்புது. வயக்காட்டுப் பக்கம் கைய காட்டுறான். “என்னடா? என்னடா?”ன்னு கேக்குறாங்க. “அல்லாஹூ அக்பர்”னு அவ்லியா தொழுவுறப்ப சொன்ன தக்பீரைச் சொல்றான். இது என்னமோ வினோதமான பேய் பிடிச்சுக்கிச்சுன்னு எல்லாருக்கும் கவலையாப் போச்சு. வாங்கடா போய் பாப்பம்னு ஆளுகள கூட்டிக்கிட்டு கண்ணைய்யா வயக்காட்டுக்கு வந்தாரு. அவ்லியாவ பாத்து அடிக்க வந்தாங்க. முடியுமா? கௌது நாயகம் வம்சமில்லியா? பக்தாதுலேர்ந்து வந்தவங்கள்ல. ஒரு நஜர்தான். நரம்பச் சுண்டி இழுத்து நிறுத்தீரும். சுறுக்கமாச் சொல்லிப்புடுறேன். அப்படி இஸ்லாத்துல வந்தவங்கதான் நம்ம ஊரு சனமெல்லாம். அப்ப அவ்லியாவுக்கு எந்தப் பேரும் கிடையாது. கண்ணைய்யாவோட புள்ள மோதீனார் உமர் பாய்தான் அவுங்களுக்கு எடுபிடி. மகான எப்படிக் கூப்பிடுறதுன்னு சனங்க கேட்டப்ப ‘பாபா’ன்னு கூப்பிடச் சொல்லிக்குடுத்தது அவருதான். அப்பலேர்ந்து அவங்கள ‘பாபா’ன்னுதான் எல்லோரும் கூப்பிட்டாங்க.”
நீண்ட கதையைச் சொல்லி முடித்து ரிபாய் பெரியத்தா முகத்தை மேலே தூக்கி ட்யூப் லைட்டைப் பார்த்தார். கண்கள் கூசவே முகத்தைத் திருப்பித் துண்டால் கண்களைக் கசக்கிக் கொண்டார். ஆர்வமாக ஒரு கேள்வி கேட்டேன் என்பதற்காகப் பெரியத்தா இப்படி வளைச்சு வளைச்சு லாடம் அடிக்கிறாரே என்று என் மனதிற்குள் நொந்துகொண்டேன். “பெரியத்தா, மாஃப் செய்யுங்க. அவ்லியாவுக்குக் ’கத்திரி பாபா’ன்னு எப்படி பேர் வந்துச்சுன்னு சொல்லுங்களேன்” என்றேன்.


“ஹஹ்ஹஹ்ஹஹ்… போரடிக்குதாக்கும். சரி, சொல்றேன். ரெண்டு வருசம் அப்படியே போச்சு. தர்ஹா இருக்கிற இடத்துல சின்னதா ஒரு கீத்துக்கொட்டாய். அதுலதான் பாபா இருந்தாங்க. 555 முகைதீன் ராவுத்தர் ஒரு தோட்டத்துல கத்திரிச் செடி போட்டிருந்தாரு. கண்ணைய்யா மேற்பார்வைலதான் அது இருந்துச்சு. என்ன காரணம்னே தெரியல, கத்திரிச் செடியெல்லாம் அப்படியே தீப்பட்டாப்ல கருகிக் கருகி விழுந்துச்சு. நாலைஞ்சு தடவை இப்படியே ஆனதும் 555 முகைதீன் ராவுத்தர் அவ்லியாக்கிட்ட வந்து ’ஏதாவது செய்யுங்க பாபா’ன்னு கேட்டுக்கிட்டாரு. அந்த எடத்த விட்டு அதுநாள் வரைக்கும் நகராத பாபா அன்னிக்குத்தான் எந்திருச்சு கத்திரித் தோட்டத்துக்கு வந்தாங்க. வாய்க்கால்ல ஒலு செஞ்சாங்க. மூனு தடவ தண்ணிய கொப்புளிச்சுக் கத்திரித் தோட்டத்துல துப்புனாங்க. அதுக்கப்புறம் பாக்கணுமே வெளச்சல. கராமத்தான நெலமாப் போச்சு அது. அதுலேர்ந்துதான் பாபாவை எல்லாரும் ’கத்திரி பாபா’ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க.”


இதைக் கேட்டதும் எனக்கு லேசாகச் சிரிப்பு வந்தது. அவ்வளவு கராமத்தான அவ்லியாவுக்கு இது ஃபிட்டிங்கான கிளைமாக்ஸாப் படல. அஜானுபாகுவான மல்யுத்த வீரன் ஒருவன் என்னைப் பார்த்துப் பத்து நிமிடங்கள் முறைத்துவிட்டு ‘வாடா டேய்’ என்று பெண் குரலில் கூப்பிட்டதைப் போல் இருந்தது. நான் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டதைப் பார்த்த ரிபாய் பெரியத்தா, “ஏன்? என்ன?” என்பதுபோல் பார்த்தார். கிளைமாக்ஸ் சொதப்பலாக இருப்பதைச் சொன்னேன். “அடப் போப்பா நீ வேற, பிஜ்ஜா சாப்புடற பயலுக்கெல்லாம் கத்திரிக் கதை சிரிப்பாத்தான் இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து சலாம் சொல்லிவிட்டு நடையைக் கட்டினார். இந்த மனுசங்ககிட்ட ஹிஸ்டரியை விட மிஸ்டரிதான் அதிகமா இருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.


மறுநாள் மதியம் யாசீன் டீக்கடையில் அபூதாஹிரைப் பார்த்தேன். அவனுடைய வம்ச சரித்திரத்தை விசாரித்தேன். அவ்லியா என்றாலே அவனுக்கு அலர்ஜி. இதில் செந்தில்வேல் மோதீனார் ஆன கதை அவனை எப்படிக் கவரும்? உடனே மூஞ்சி சிவந்துவிட்டது. “இந்த டுபாக்கூர் அவ்லியாவ பத்தி என்கிட்ட கேளு மாப்ள சொல்றேன். இவன் பேரும் தெரியாது ஊரும் தெரியாது. எங்கிருந்தோ சுட்டுக்கிட்டு வந்த துரு புடிச்ச கத்திரிக்கோல கையில வச்சிக்கிட்டு வர்றவன் போறவனை எல்லாம் மெறட்டி காசு பறிச்ச திருட்டுப் பய இவன். கத்திரிக்கோல் திருடன்னு அந்தக் காலத்துல பார்ட்டி ரொம்ப ஃபேமஸ். அப்புறம் போலீசுல மாட்டிக்கிட்டு வேலூர்ல கம்பி எண்ணியிருக்கு. ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு ஆள் எங்க போச்சுன்னு தெரியல. யாரு கண்ணுலயும் படல. அப்புறம் ஒரு நாள் திடீர்னு தாடி கீடில்லாம் வச்சுக்கிட்டு, தாயத்து போடுறேன்னு நாலு ஆளுகள சேத்துக்கிட்டு இங்க வந்து டேறா போட்டாச்சு. மடப்பயலுவ திருட்டுப்பயன்னு பாக்காம கத்திரிக்கோல் பாபான்னு கால்ல உளுந்துட்டானுங்க. அதுதான் அப்புறம் கத்திரி பாபா ஆயிடுச்சு.” என்று பொரிந்து தள்ளிவிட்டான்.


“கத்திரி பாபா” என்ற பெயரின் பின்னணி ஆராய்ச்சியாக என் நோட்டில் இரண்டு தகவல்களையும் அன்று இரவு எழுதிவைத்தேன். வரலாற்றில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மறுநாள் முக்கியமான ஒருவரைச் சந்தித்தேன். தர்ஹாவின் முத்தவல்லியாக இருக்கும், சில்க் ஜிப்பாவில் மிகவும் ஒல்லியாக இருக்கும் அல்தாஃப் ஹுசைன் காதிரி.


தர்ஹா டிரஸ்டியின் வீட்டுக்கு நான் சென்றபோது அவர் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு பாடலை அல்லது மாடலை ரசித்துக்கொண்டிருந்தார். கரடி போல் நான் வந்து சேர்ந்தது பிடிக்காமலேயே பதில் சலாம் கூறி “வாங்க தம்பி, உட்காருங்க” என்று மர-நாற்காலியைக் காட்டினார். நான் அமர்ந்துகொண்டு விசயத்தைச் சொன்னேன்.


“நீங்க காதைக் கொடுக்குறீங்கனு நல்லா ரீல் சுத்தீருக்கானுங்க தம்பி. நல்ல வேளை என்கிட்ட வந்தீங்க. ஹக்கான விசயத்தை நான் சொல்றேன். அவ்லியாவோட லஃனத்து புடிச்சவனுங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டு அலையாதீங்க.” என்று சுறுக்கமாக ஒரு பீடிகை போட்டு முடித்தார்.


”சரிங்கஜி, நீங்க சொல்லுங்க” என்றேன்.


“அவ்லியாவோட உண்மையான பேரு ஹஸ்ரத் மஸ்தான் ஜானே அலீ காதிரி (ரஹ்)-ங்கறதுதான். அவுங்க மறைஞ்சு தர்ஹா கட்டினதுக்கப்புறமும் அதே பேருதான் இருந்திச்சு. அப்புறம் சரியா எனக்கு ஏழு வயசா இருக்கைல பாபா ஒரு கராமத் செஞ்சாங்க. அது என்னன்னா ஒவ்வொரு தர்ஹாவுலயும் வருசத்துக்கு ஒரு தடவைதான் உரூஸ் கந்தூரி நடத்துறது வழக்கம். அப்ப பாபா எங்க வாப்பா கனவுல வந்து, ‘அரே கௌஸ் பாய், உலகத்துல உள்ள எல்லா அவ்லியாக்களும் நானேதான். அதுனால எல்லா அவ்லியாக்களையும் இந்த வருசம் கண்ணியப் படுத்துற விதமா வருசம் பூரா கந்தூரி நடத்தணும்’ அப்படீன்னு சொல்லிட்டாங்க. எங்க வாப்பாதான் அப்ப முத்தவல்லி. வருசம் முச்சூடும் கந்தூரி நடத்தணும்னா அதுக்குப் பைசா ரொம்ப ஆகுமே, என்ன செய்யறதுன்னு வாப்பா ரொம்ப கவலைப்பட்டாங்க. எங்க அம்மீக்கு அவ்லியாமேல அக்கீதா ஜாஸ்தி. ’பாபா பாத்துக்குவாங்க. நீங்க கவலைப் படாம செய்யுங்க’ன்னு என் வாப்பாட்ட ஆறுதல் சொன்னாங்க. சொன்ன மாதிரியே, அந்த வருசம் பூரா மிஸ்கீன், ஃபக்கீர்சா, தர்வேஸ்னு ஒரே கூட்டம். அத்தினிப் பேருக்கும் குஸ்கா என்ன சால்னா என்ன, கந்தூரி ஜமாய்க்குது. பாபாவோட தர்பாருக்கு மினிஸ்டர்கள்லாம் வந்தாங்க. ஆற்காட்டு நவாப் வந்து சுத்தி இருந்த இடத்தையெல்லாம் வாங்கி தர்ஹாவுக்கு எழுதி வச்சாங்க. அந்த வருசம் பூரா துட்டு வந்து கொட்டிக்கிட்டே இருந்துச்சு. திடீர்னு ராத்திரி ஒருத்தர் வருவாரு, அவ்லியாவ ஜியாரத் செய்யணும்பாரு. கட்டா எடுத்து பத்தாயிரம் ரூபா கொடுத்துட்டுக் கிளம்புவாரு. ‘சாஹேப் ஆப் கோன்?’-னுன்னு கேட்டா “துர்க்கி சே ஆத்தா ஹூ(ன்)”-ன்னு சொல்லிட்டுப் போவாரு. இந்த மாதிரி வருசம் பூரா ஒரே அஜீபுதான். அப்பதான் அவ்லியாவ எல்லாரும் ‘கந்தூரி பாபா’ன்னு சொல்ல ஆரம்பிச்சது. அது அப்படியே இப்லீஸ் புடிச்சவனுங்க வாயில மாறி கத்திரி பாபா ஆயிடுச்சு.” என்று தன் பங்குக்கான வரலாற்றைச் சொல்லி முடித்தார் அல்தாஃப் ஹுசைன் காதிரி.
“தம்பீ, பாபாவோட வரலாற நீங்க புஸ்தகமா எழுதுங்க.” என்றார். நான் தலையாட்டிவிட்டுக் கிளம்பினேன். கத்திரித்தோட்ட பாபா, கத்திரிக்கோல் பாபா, கந்தூரி பாபா என்று மூன்று ஆப்ஷன்கள் என் முன் சிரித்தன. உண்மை என்னுடன் கண்ணாமூச்சி ஆடுவதாக உணர்ந்தேன். இதெல்லாம் சரிப்பட்டு வராது, பாபாவின் ரூஹானி தீட்சை பெற்றவர் என்று சொல்லப்படும் நானா சாஹிப் அவர்களைப் போய் பார்ப்பது என்று முடிவு செய்தேன். நானா சாஹிப் என்றாலே ஊருக்குள் பலருக்குப் பயம். ஜின்னுகள ஏவிவிட்டுப் பணம் பறிக்கிறவருன்னு ஒரு பேச்சு இருக்கு. “ஜின்னுகள ஏவிப் பொண்ணுகள வசியம் பண்றான்யா அந்த …….” என்று சொல்வான் நௌஷாத் அலீ. ஆனால் இந்தியா முழுவதும் இருந்து அவ்வப்போது பெரிய பெரிய கார்கள் வந்து நானே சாஹிபின் வாசலில் காத்துக்கிடப்பதை என் கண்களால் பார்த்திருக்கிறேன். ’விசயம் இல்லாத மனுசன்கிட்டயா இப்படி வந்து உளுவுறானுங்க. நல்லதோ கெட்டதோ, ஆனால் யாருகிட்டயும் இல்லாத ’ஃகாஸான’ எதுவோ ஒன்னு இவருகிட்ட இருக்கு’ என்று மனதிற்குள் நான் சொல்லிக்கொண்டதுண்டு. அன்று இரவே அவரைப் பார்க்கச் சென்றேன்.


நானா சாஹிப் வீட்டில் அன்று விருந்தினர் யாருமில்லை. நான்கைந்து சீடர்கள் மட்டும் இருந்தார்கள். கைலி மட்டும் கட்ட்கிக்கொண்டு மாமிச மலைபோல் கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தார் நானா சாஹிப். யார் என்று என்னை விசாரித்தார். வந்த விசயத்தையும் சேர்த்துச் சொன்னேன். கண்களை மூடி ஏதோ ஓதினார். திடீரென்று ஓங்காரமாக “யா ஹய்யுல் கய்யூம்” என்று முழங்கினார். தீர்க்கமான பார்வையால் என்னைப் பார்த்தார்.


“தம்பீ, இது ஒன்னும் பெரிய விசயமில்ல. லைலத்துல் கத்ரு ராத்திரிக்கு என்ன செய்வீங்க?”


“பள்ளிவாசலுக்குப் போய் தொழுவேன் ஹஸ்ரத்”


“வர்ர ரம்ஜானுக்கு ஒன்னு செய்யுங்க. லைலத்துல் கத்ரு அன்னிக்கு தர்ஹா பக்கம் ஒரு ஈ காக்கா இருக்கிறதில்ல தெரியுமா? பாபா காலத்தில இருந்தே அப்படித்தான். அன்னிக்கு ராத்திரி அங்க போய் தங்குனவங்க எல்லாம் பைத்தியம் பிடிச்சு அலைஞ்சாங்க. இந்தா, இவனோட அண்ணனுக்கு அப்படித்தான் ஆச்சு” என்று தன் கையை ஒரு சீடனின் பக்கம் காட்டினார். அவன் பயத்துடன் நெளிந்தான். “அதுக்குக் காரணம் என்னன்னா முறையான தயாரிப்பு இல்லேங்குறதுதான். லைலத்துல் கத்ரு ராத்திரிக்கு அவ்லியாவோட தர்பார்ல ஜிக்கிர் மஜ்லிஸ் நடக்குது. ஜின்னுகள் கலந்துக்கிற கூட்டம் அது. முடிஞ்சா நீங்களும் கலந்துக்கங்க. உங்களுக்கு நசீப் இருந்தா ஒன்னு ரெண்டு ஜின்னுகள பாக்கலாம். கொள்ள அளகா இருப்பாங்க. பயந்தீங்கன்னா மூளை பெறண்டுரும். பாத்துக்குங்க. இதுனாலதான் பாபாவுக்கு ‘கத்ரி பாபா’ன்னு பேரு. அதை ஜனங்க வாய்ல கத்திரி பாபான்னு ஆக்கிட்டாங்க. சில உண்மைகள மறைச்சுத்தான் ஆகணும் இல்லியா?” என்றார்.
இந்த விளக்கத்தில் எனக்கு ஒரு திருப்தி வந்தது. ஏனென்றால் இதில் ஒரு சவால் இருந்தது. ரம்ஜானுக்காக இரண்டு மாதங்கள் காத்திருந்தேன். லைலத்துல் கத்ரு இரவு வந்தது. நண்பர்களிடம் சொல்லிப் பார்த்தேன். “எதுக்குடா ஒனக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்? அந்த ஃப்ராடுப்பய சொல்றான்னு கேட்டுக்கிட்டு வந்து எங்கள்ட்ட வேற சொல்ற…” என்று நொந்துகொண்டார்கள்.


அன்று இரவு வீட்டில் சொல்லிக்காமல் தர்ஹாவுக்குச் சென்றேன்.


காலை பதினோரு மணிக்கு எழுந்து குளித்துவிட்டுக் கடைவீதி பக்கம் நடந்தேன். என் ஜமா நௌஷாத்தின் வீட்டில் இருந்தது. “வாங்க மாப்ள, நைட்டு தர்ஹாவுக்குப் போயிருந்தீங்க போல? ஜின்ன கின்ன பாத்தீங்களா?” என்றான் அபூதாஹிர். “அட போங்கப்பா, எல்லாம் வெறும் கப்சா” என்று சொல்லிக்கொண்டே முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன், மனதில் பொங்கித் ததும்பும் மகிழ்ச்சி என் புன்னகை வழியே கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில்.


___________________________________________________


துன்யா – உலகம்.


அவ்லியா / ஔலியா / ஒலியுல்லா / வலியுல்லா – இறைநேசர்.


சைக்கு – ஷைக் என்பதன் மருவிய வடிவம். குருநாதர்.


வாதா – வாக்குறுதி.


சுக்ரிய்யா – ஷுக்ரிய்யா. நன்றி.


அபா – மேலங்கி


ஒலு – தொழுகை முதலிய வழிபாடுகளுக்காக முகம் கைகள் கால்கள ஆகியவற்றைக் கழுவும் முறை.


மோதீனார் (முஅத்தின்) – பள்ளிவாசலில் தொழுகைக்குப் ‘பாங்கு’ என்னும் அழைப்பு கூறுபவர்.


கிராஅத் – திருக்குர்ஆனை முறைப்படி இனிய தொனியில் ஓதுதல்.


நூரானிய்யத் – தேஜோமயம் , ஒளிமயம்.


நஜர் – பார்வை.


மாஃப் (முஆஃப்) – மன்னிப்பு.


கராமத் – இறைநேசர்களின் வழியே வெளிப்படும் அற்புதச் செயல்கள்.


ஹக் – உண்மை, சத்தியம்.


லஃனத் – சாபம்.


உரூஸ் கந்தூரி – தர்ஹாக்களில் விருந்துடன் நடக்கும் வருட வைபவம்.


அம்மீ – அம்மா.


அக்கீதா – கொள்கை, நம்பிக்கை.


ஃபக்கீர்சா – ஃபக்கீர்ஷா. துறவிகள்.


தர்வேஸ் – தர்வேஷ். நாடோடி ஞானிகள்., சூஃபிகள்.


ஜியாரத் – விசிட். விஜயம், சந்திப்பு.


அஜீபு – அதிசயம்.


இப்லீஸ் – சாத்தான்.


ரூஹானி – ஆத்மார்த்தம்.


ஜின் – அரூபமான ஒரு படைப்பினம்.


ஃகாஸ் – விசேஷம், சிறந்த.


லைலத்துல் கத்ரு – மகத்தான இரவு. ரம்ஜான் மாதத்தின் 27-ஆம் இரவு.


ஜிக்கிர் மஜ்லிஸ் – தியான சபை.


நசீப் – கொடுப்பினை, ப்ராப்தம்.


6 comments:

 1. I think "Mu-Adhdhin" leads to "Mu-Adhdhinaar" and then "Modhinaar". hope he did not hit anything/body. :)

  ReplyDelete
 2. Very Very Interesting.
  அந்தப் புன்னகையும் மகிழ்ச்சியும் எதுவரை கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது Please.

  ReplyDelete
 3. ரொம்ப பிரமிப்பா இருக்கு உங்களோட எழுத்து நடை
  கதை உண்மையா ?

  ReplyDelete
 4. இந்தக் கதை அப்படியே நடந்ததல்ல. முழுதும் கற்பனை என்றும் சொல்ல முடியாது.
  சொல்லப்போனால், கதையைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது. அது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. Beatiful narration. Thanks.

  Samy

  ReplyDelete
 6. ///இதைக் கேட்டதும் எனக்கு லேசாகச் சிரிப்பு வந்தது. அவ்வளவு கராமத்தான அவ்லியாவுக்கு இது ஃபிட்டிங்கான கிளைமாக்ஸாப் படல. அஜானுபாகுவான மல்யுத்த வீரன் ஒருவன் என்னைப் பார்த்துப் பத்து நிமிடங்கள் முறைத்துவிட்டு ‘வாடா டேய்’ என்று பெண் குரலில் கூப்பிட்டதைப் போல் இருந்தது. நான் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டதைப் பார்த்த ரிபாய் பெரியத்தா, “ஏன்? என்ன?” என்பதுபோல் பார்த்தார். கிளைமாக்ஸ் சொதப்பலாக இருப்பதைச் சொன்னேன்.//


  நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. நானும் விழுந்து விழுந்து சிரித்தேன்.

  இது போலவே அவர் அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாற்றி மாற்றிக் கதை சொல்வது எல்லா இடத்திலேயும் உள்ளது.

  ஒப்பிலா அப்பனை உப்பில்லாத அப்பனாக்கி,உப்புக்கூடப் போடத் தெரியாத‌ மார்கண்டேயரின் பெண்ணுக்கு ஒப்பிலாதவன் கைகொடுத்து மணந்து உப்பிலாமல் சாப்பிடுகிறானாம்.

  கதை என்றாலும் அந்த வெகுளித் தனத்தை நான் ரசிக்கிறேன்.நல்ல ஆக்கம்.

  ரகசியாமகச் சொல்லுங்கள். ஜின்னைப் பார்த்தீர்களா?

  ReplyDelete